வாணி ஜெயராம் : ஏழு ஸ்வரங்களுக்குள் ஒரு வாணி! - - பி.ஜி.எஸ். மணியன் -
- பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் மறைந்த செய்தியினை இணையச் செய்திகள் மூலம் அறிந்தோம். அவரது இழப்பு கலை, உலகிற்குப் பேரிழப்பு என்பது மிகையான கூற்றல்ல. ஆழ்ந்த இரங்கலைப் 'பதிவுகள்' தெரிவித்துக்கொள்கின்றது. அவரது நினைவாக அவரைப்பற்றி 'இந்துதமிழ்' இணையத் தளத்தில் முன்னர் வெளியான கட்டுரையினை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் - வாணி ஜெயராம் - https://www.youtube.com/watch?v=2xVFBKSxMP0
புகழ்பெற்ற பழைய திரைப்படங்களை மீண்டும் வெளியிடும்போது, அந்தப் படத்தில் ‘ஹிட்டடித்த’ பாடல்களின் பட்டியலை அச்சிட்டு.. ‘இனிய பாடல்கள் நிறைந்த படம்’ என்று விளம்பரப்படுத்துவார்கள்.
ஆச்சரியகரமாக.. 1974-ம் வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆன ‘தீர்க்க சுமங்கலி’ படத்தின் சுவரொட்டியில், படம் வெளிவரும் முன்பே பிரபலமாகியிருந்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’ என்ற பாடலின் முதல் வரியைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார்கள். அப்படி விளம்பரம் செய்யத் தூண்டிய குரல், அன்று துளிர்விட்டிருந்த புதிய பாடகியான வாணி ஜெயராமினுடையது.
இந்தப் படத்துக்கு முன்பே 1973-ம் வருடம் வெளிவந்த ‘வீட்டுக்கு வந்த மருமகள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ ஆகிய இரு படங்களில் வாணி ஜெயராம் பாடி இருந்தாலும் அவரது குரலை இல்லம் தோறும் கொண்டு சேர்த்த பெருமை ‘தீர்க்க சுமங்கலி’க்குக் கிடைத்தது.
1945 - நவம்பர் 30-ம் தேதி வேலூரில் ‘கலைவாணி’ என்கிற வாணி ஜெயராம் பிறந்தார். இசைப் பரிச்சயமும் பக்தியும் மிக்க தமிழ்க் குடும்பம் அவருடையது. கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்னாடக இசையைப் பயின்றுவந்த சிறுமி வாணிக்கு சிலோன் வானொலியில் ஒலிபரப்பான லதா மங்கேஷ்கர், முகம்மது ரபி, மன்னா டே ஆகியோரது பாடல்களைக் கேட்கக் கேட்கத் தானும் திரைப்படங்களில் பாடவேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது.