அயோத்தி ராமர் கோயிலும் சிந்தனைச் சிக்கலும்!
"சத்தியத்தை நாடிச் செல்பவர் தூசிக்கும் தூசியாகப் பணிவு கொள்ள வேண்டும். உலகம் தூசியைக் காலின்கீழ் வைத்து நசுக்குகிறது. ஆனால் சத்தியத்தை நாடுகிறவரே அத்தூசியும் தம்மை நசுக்கும் அளவுக்குத் தம்மைப் பணிவுள்ளவராக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் - அதற்குமுன் அல்ல- ஒளியைக் கணப்பொழுதாவது காணமுடியும். கிறிஸ்தவமும், இஸ்லாமும் கூட இதை நன்கு எடுத்துக்காட்டுகின்றன" என்று மகாத்மா காந்தி தனது சத்திய சோதனையில் கூறியுள்ளார். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் சத்தியத்தேடலே சமயங்களாக வளர்ச்சிப் பெற்றன. ஒரு மனிதன் பிறக்கும் இடத்தின் காரணமாக ஒரு சமயத்தைச் சார்ந்தவனாக ஆகிறான். அவனது சத்தியத் தேடல் அச்சமயத்தோடு தொடர்புடைய நம்பிக்கைகள் சடங்குகள் சார்ந்து செயல்படுவதைக் காணலாம். காலப்போக்கில் நம்பிக்கைகள், சடங்குகள் பொருளற்றதாக மாறும் போது பகுத்தறிவு புதிய நம்பிக்கைகளையும், சடங்குகளையும் தருகிறது என்றாலும் இதன் அடிப்படை நோக்கம் சத்திய ஒளியை அடைவதேயாகும். இயற்கை வழிபாடு, உருவ வழிபாடு, சமய வழிபாடு, சமணம், பௌத்தம், சைவம், வைணவம், இஸ்லாமியம், கிறிஸ்துவம் என்று மனிதனின் சத்தியத் தேடலில் கண்டடைந்த வழிமுறைகள் ஏராளம் . இடைக்காலத்தில் ஏற்பட்ட சமயக் காழ்ப்புணர்ச்சி மனிதனைச் சற்று விலங்கு நிலைக்குத் தள்ளியது. சமயப் பற்று சமய வெறியாக உலகம் முழுவதும் அரசியலும் அதிகாரமும் செலுத்தத் தழைப்பட்டது. தற்காலத்தில் ஜனநாயகத்தின் மலர்ச்சியும் நவீன சிந்தனைகளும் தோற்றம் பெற்றப் பிறகும் இடைக்கால சிந்தனை மரபு ஆதிக்கம் செலுத்தி வருவதை எல்லா சமயங்களிலும் காணமுடி கிறது. என்றாலும் ஜனநாயகத்தின் சுதந்திர ஒளியில் சத்தியத்தைத் தேடும் நவீன சிந்தனை மாற்றத்தை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் அயோத்தி ராமர் கோயில் சிந்தனையின் அடிப்படைகளை எண்ணி பார்க்க வேண்டும்.