கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் தமிழ் அறிஞர் ஜி.யு.போப்புக்குச் சிலை!

அஞ்சலி: செக் நாவலாசிரியர் மிலன் குந்தேரா மறைவு! புத்தகத்தின் வெற்றி என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக உண்டாவதில்லை! – எழுத்தாளர் மிலன் குந்தேரா - நேர்காணல்: ஜோர்டன் எல்கிராப்லி, தமிழில்: ராம் முரளி

நவீன உலக இலக்கியத்தில் முக்கியமானதோர் இலக்கிய ஆளுமையான செக் நாவலாசிரியரான மிலன் குந்தேரா தனது 94ஆவது வயதில் காலமான தகவலை இணையத்தின் மூலம் அறிந்தேன். அவரது இழப்புக்கான் ஆழ்ந்த இரங்கலைப் பதிவுகள் செலுத்துகின்றது. இவரது இவரது இருப்பின் தாங்க முடியாத மென் தன்மை (The Unbearable Lightness of Being) இவர் எழுதிய நாவல்களில் மிகவும் புகழ்ப்பெற்ற நாவல். இதுவே இவரது மிகச்சிறந்த நாவலாகவும் கருதப்படுகின்றது. இந்நாவலைப்பற்றித் தனது வலைப்பூவில் எழுத்தாளர் ஜெயமோகன் 'மிலான் குந்தரே எழுதிய புனைவுகளில் ஆகவும் சிறந்ததாக The Unbearable Lightness Of Being நாவலை விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த நாவலின் முதல் இரண்டு பக்கங்களின் எந்தப் புள்ளியில் இருந்து அந்த நாவல் அவரில் தொடங்கியது என்பதை எழுதிவிடுகிறார். அதில் நீட்சே வருகிறார். Parmenides வருகிறார். இன்னும் சில தத்துவவாதிகள் வருகிறார்கள். அவர்களது கருத்துக்களை எல்லாம் குறிப்பிட்டுச் சொல்லும் குந்தரே, தனக்குள்ள கேள்விகளையும் முன் வைத்து அவர்களை மறுதலிக்கவும் முயல்கிறார். அதில் இருந்து தனக்கான தேடலை முன்னகர்த்துகிறார். அப்படியாகத்தான் இந்த நாவல் உருக்கொள்கிறது' என்று கூறுவது கவனத்துக்குரியது.
இத்தருணத்தில் எழுத்தாளர் ராம் முரளியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நேர்காணலைப் 'பதிவுகள்' நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கிறது. இந்நேர்காணல் அவரது கலை, இலக்கிய மற்றும் அரசியல் சிந்தனைகளை வெளிப்படுத்துவதால் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்.காம் -
நேர்காணல் ஒன்று: புத்தகத்தின் வெற்றி என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக உண்டாவதில்லை! – எழுத்தாளர் மிலன் குந்தேரா - நேர்காணல்: ஜோர்டன் எல்கிராப்லி, தமிழில்: ராம் முரளி
நம் காலத்தின் மகத்தான படைப்பிலக்கியவாதிகளில் ஒருவர் மிலன் குந்தேரா. பத்து நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, கவிதைகள், கட்டுரைகள் என இவரது இலக்கிய உலக பங்களிப்பு பரந்து விரிந்தது. எனினும், நாவல் எழுத்தையே பெரும்பாலும் தமக்குரிய கலை வெளிப்பாட்டு தேர்வாக கொண்டிருக்கிறார். இலக்கியத்தின் ஒரு அங்கம் என்றில்லாமல், நாவல் எழுத்தே தனியொரு கலை என்பது இவரது கருத்து. தற்போது 90 வயதை கடந்துவிட்ட நிலையில், அவரது படைப்புகள் வெளிவருவது தோய்ந்துவிட்டது. 2014ம் வருடத்தில் வெளியான The festival of insignificance என்பதே கடைசியாக வெளிவந்த இவரது நாவலாகும்.
செக் குடியரசின் புரூனோ நகரில் 1929ல் பிறந்தவர் என்றாலும் 1975ல் இருந்து பிரான்ஸிலேயே வாழ்ந்து வருகிறார். 1993க்கு பிறகு, பிரெஞ்சு மொழியிலேயே தமது புனைவெழுத்துக்களை எழுதி வருகிறார். இளம் பருவத்தில் கம்யூனிஸ இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். ஆனால், செக் குடியரசின் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, அவ்வியக்கத்துடனான தமது உறவுகளை முறித்துக்கொண்டார். விளைவாக, இவரது படைப்புகள் செக் குடியரசில் தடை செய்யப்பட்டன; குடியுரிமையும் ரத்துசெய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, பிரான்ஸுக்கான இவரது இடப்பெயர்வு நிகழ்ந்தது. பலமுறை நோபல் பரிசுக்கான பரிந்துரைகளில் இவரது பெயர் பரிசீலனை செய்யப்படிருக்கிறது என்றொரு வழக்குப் புழக்கத்தில் இருக்கிறது. எனினும், தமது நிலைபாடுகள், செக் குடியரசில் இருந்து வெளியேறியது, சோஷியலிஸ அரசுடனான அவரது சிக்கல் மிகுந்த உறவு போன்றவற்றால், குந்தேராவுக்கு நோபல் பரிசு கிடைப்பது சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது.
”புலம்பெயர்த் தமிழர்களின் இணையத் தமிழ்ப் பங்களிப்பு” - முனைவர் செ சு நா சந்திரசேகரன், தமிழ்ப் பேராசிரியர், வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி.
”உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து வரும், கணிப்பொறியில் வல்லமை பெற்ற தமிழர்கள் தமிழைக் கணிப்பொறி மற்றும் இணையப் பயன்பாட்டில் கொண்டு செல்ல முயன்றனர். அம்முயற்சியின் விளைவே இன்று, இணையப் பயன்பாட்டில் தமிழ், தலைசிறந்து வளர்கிறது. தமிழில் இணையதளங்கள் உருவாகப் பிறிதொரு காரணமும் முக்கியமாகும். 1983 க்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் கலவரத்தால் தமிழர்கள் உலகம் முழுக்க புலம்பெயர வேண்டிய தேவை ஏற்பட்டது. அது போன்று தமிழகத் தமிழர்களின் பணியின் பொருட்டு அயல் நாடுகளுக்குச் சென்றனர். இவ்வாறு சென்ற தமிழர்கள் தாய் நாட்டுடன் தொடர்பு கொள்ளவும், பிற நாடுகளில் வாழும் தமிழர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும், இணையத்தைப் பயன்படுத்தினார். இதில் தங்களை ஒன்றிணைக்கத் தமிழ் வளர்ச்சியில் கவனம் செலுத்தினர்” என்று இலங்கைத் தமிழர்களின் இணையப் பங்களிப்புக் குறித்துத் தமிழ் விகாஸ் பீடியா கூறுகின்றது. இது மிகச் சரியான கூற்றும், வரலாற்றுச் செய்தியும் ஆகும்.
இலங்கைத் தமிழர்கள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து சென்ற நாளிலிருந்து மொழியில் ஏற்பட்டு வரும் இலக்கிய முன்னேற்றம் மிகக் கூர்மையாகக் கவனிக்கப்பட வேண்டியதும், பதிவு செய்யப்பட வேண்டியதுமான விடயமாகும். இப்பின்னணியில் தான் தமிழ், இணையத்தில் வளர்ந்தது என்று திட்டவட்டமாகக் கூறலாம். வேறு காரணிகள் இருப்பின் இக்காரணமே மிகுத்திருக்கும் எனலாம். அந்தளவிற்கு இலங்கைத் தமிழர்கள் இணையத்தின் மூலம் தமிழை மேம்படுத்தி உள்ளனர்.
அகநானூற்றில் வரலாற்றுச் செய்திகள் - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை சுழற்சி -2, குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
கடந்த கால நிகழ்வுகளின் பதிவு வரலாறாகும். எட்டுத்தொகை நூலான அகநானூற்றின் வழி அக்கால மக்களின் வரலாற்றினையும் சமுதாய வாழ்வியலையும் நாகரிகப் பண்பினையும் அறிய முடிகிறது. மேலும் மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. மூவேந்தர்கள் பற்றிக் காணலாகும் செய்தியினை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மூவேந்தர் மரபு
தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே மூவேந்தர் ஆட்சி அமைப்பு நிலை பெற்றுவிட்டதை,
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு (தொல்.பொருள். 384)
என்னும் கூற்றால் அறியலாம். மூவேந்தரைக் குறிப்பிடும் தொல்காப்பியர் சேர, சோழ, பாண்டியர் எனக் குறிப்பிடாமல் அவர் தம் மாலையினைப்
போந்தே வேம்பே ஆரென வரூஉம்
மாபெருந் தாணையர் மலைந்த பூவும் (தொல்.பொருள்.63)
எனக் கூறுகின்றார்.
மாலைக்கு உரிமையுடைய சேர,சோழ, பாண்டியர் என உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. அகநானூறும் சேர, சோழ, பாண்டியரை மூவர் எனப் பின்வருமாறு குறிப்பிடுகின்றன. தமிழ் செழு மூவர் (அகம்.31:14) இதில் மூவர் என்று சேர, சோழ, பாண்டியரே குறிக்க வந்துள்ளது தெளிவாகின்றது.
பயனுள்ள மீள்பிரசுரம்: பாவண்ணன் – தொடர்ச்சியின் சுவடுகள் – ஶ்ரீதர் நாராயணன் –

‘உலகு கிளர்ந்தென்ன உருகெழு வங்கம்’ என்று மருதன் இளநாகனாரின் பாடல் (பாலைத்திணையில்) ஒன்று இருக்கிறது. ஒட்டுமொத்த உலகும் கிளர்ந்து எழுந்து ஒரு கப்பலில் ஏறிக் கொண்டது போன்றதொரு சித்திரம். விவிலியத்தில் வரும் நோவாவின் கப்பல் போல. உண்மையில் அப்படியொன்று சாத்தியமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் பார்க்கும் விஷயங்கள், சம்பவங்களை எல்லாவற்றையும் எழுத்தில் ஏற்றி பெரும் படைப்புலகை நிர்மாணிக்கும் சக்தி படைப்பாளிக்கு உண்டு. அதை பாய்விரித்தோடும் கப்பல் போல வாசக பரப்பிடையே தொடர்ந்து எழுதிச் செல்லும் திறன் ஓர் எழுத்தாளனுக்கான வசீகரம். வெறும் குறுகுறுப்போடு கடந்து போகும் வாசிப்பு சுவாரசியத்திற்காக எழுதப்படாமல், ஒரு தொடர்ச்சியின் சுவடுகளை பதிவு செய்யும் அக்கறையோடு எழுதப்படுவதுதான் பாவண்ணனின் எழுத்துலகம். ஒரு காலத்தின் தொடர்ச்சியை, ஒரு கலாச்சாரத்தின் தொடர்ச்சியை, ஒரு தலைமுறையின் தொடர்ச்சியை, மொழியின் தொடர்ச்சியை ஆரவாரமில்லாத நடையில் பதிந்து கொண்டு போகிறார் பாவண்ணன். ஐந்தாறு வருடங்கள் முன்னர் சிங்கப்பூரிலோ வேறெங்கோ ஒரு தமிழர் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தது. அப்போது ஒரு பத்திரிகை ஆசிரியர் ‘இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சார்பா பாவண்ணன் இடம்பெற்றிருக்க வேண்டும். அவரொரு மொழித் தூதுவர்’ என்று தனிப்பேச்சில் குறிப்பிட்டார். முற்றிலும் உண்மை. பாவண்ணன் என்னும் பாஸ்கர், இளவயதில் பணிநிமித்தமாக கர்நாடகத்திற்கு புலம்பெயர வேண்டியிருந்தது. அதன் பிறகு கன்னடம் கற்றுக்கொண்டு, பெருமுயற்ச்சியுடன் பல கன்னட ஆக்கங்களை, நாவல்களை, தலித் எழுத்துகளை, நவீன இலக்கிய முயற்சிகளை, கவிதைத் தொகுதிகளை, தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார். கிரீஷ் கர்னாட் மற்றும் ஹெச் எஸ் சிவப்பிரகாஷ் போன்றோரின் பல நாடகங்களும் தமிழில் வாசிக்கக் கிடைத்தற்கு பாவண்ணன் முக்கியக் காரணம்.
எழுத்தாளர் பாவண்ணனின் இயல் விருது ஏற்புரையும் 'பதிவுக'ளில் வெளியான அவரது நெடுங்கதை 'போர்க்கள'மும்! - பாவண்ணன் -

(தமிழ் இலக்கியத் தோட்டம் (கனடா) சார்பாக டொரோண்டோ நகரில் 04.06.2023 அன்று 2022 ஆம் ஆண்டுக்குரிய வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது எழுத்தாளர் பாவண்ணனுக்கும், எழுத்தாளர் முருகபூபதிக்கும் வழங்கப்பட்டன. அவ்விருதைப் பெற்றுக்கொண்டு பாவண்ணன் ஆற்றிய ஏற்புரையின் எழுத்துவடிவம். பாவண்ணனின் வலைப்பூவில் வெளியானது. அவ்வுரையுடன் பதிவுகள் இணைய இதழில் அன்று அவர் எழுதிய போர்க்களம் நெடுங்கதையும் இங்கு மீள்பிரசுரமாகின்றன - பதிவுகள்.காம் -)
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் இந்த மாபெரும் இலக்கிய விழாவுக்கு வந்திருக்கும் இலக்கிய ஆளுமைகளே. பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் விருதாளர்களே. உலகின் பலவேறு பகுதிகளிலிருந்து வந்து அரங்கில் நிறைந்திருக்கும் நல்லிதயங்களே. அன்பார்ந்த நண்பர்களே. நம் அனைவரையும் இந்த இடத்தில் ஒன்றிணைத்து இந்த மாபெரும் நிகழ்ச்சியின் சூத்திரதாரியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மூத்த படைப்பாளியான அ.முத்துலிங்கம் அவர்களே. உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.
இயல் விருது பெறுகிறவனாக உங்கள் முன்னால் நின்றிருக்கும் இத்தருணத்தில் உங்களோடு ஒருசில சொற்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 1982இல் நான் என்னுடைய முதல் சிறுகதையை எழுதினேன். துன்பத்தை ஒரு பாரமாக நினைத்து நினைத்து நெஞ்சில் சுமந்தபடி செல்வதைவிட, அந்த பாரத்தை எழுதி எழுதி கரைத்துவிட்டுச் செல்வது நல்லது என்னும் மக்சீம் கோர்க்கியின் சொல் எனக்கு மிகப்பெரிய ஆதர்சமாக இருந்த காலகட்டம் அது. ஒவ்வொரு நாளும் எதையாவது எழுதிக்கொண்டே இருந்தேன். வாகனத்துக்கு எரிபொருளை நிரப்புவதுபோல, எழுத்து எனக்குள் எனக்குத் தேவையான உற்சாகத்தை நிரப்பியது.
அஞ்சலி: எழுத்தாளர் கலைவாதி கலீல் மறைந்தார்!

- எழுத்தாளர் கலைவாதி கலீல் மறைந்த செய்தியினை இணையத்தின் வாயிலாக அறிந்து கொண்டேன். அவரது மறைவால் ஆழ்ந்த துயரில் மூழ்கிக்கிடக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். கலைவாதி கலீல் பன்முகத்திறமை மிக்க இலக்கியவாதி. இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு மன்னாரிலிருந்துத் திடமாகக் கால்பதித்தவர். என் பால்ய பருவத்திலிருந்தே இவரது பெயரை ஏதாவதொரு சஞ்சிகை, அல்லது பத்திரிகையில் அவதானித்தே வந்துள்ளேன் திக்குவல்லை, கமால், சாரணாகையூம், கலைவாதி கலீல், ஜவாத் மரைக்கார், எம்.ஏ.நுஃமான், பாலமுனை பாறுக், அன்பு ஜவகர்ஷா அடிக்கடி பல்வேறு அச்சூடகங்களில் தென்படும் பெயர்கள். எழுத்தாளர் எம்.எஸ்.எம்.ஸாகிர் கலைவாதி கலீல் பற்றி நல்லதோர் அறிமுகக் கட்டுரையினை அவரது பவளவிழாவின்போது எழுதியிருக்கின்றார். 17.10.2018 அன்று 'நியூஸ் பிளஸ்' இணையத்தளத்தில் வெளியான அக்கட்டுரையினைப் 'பதிவுகள்' இங்கு அஞ்சலிக் கட்டுரையாக மீள்பிரசுரம் செய்கின்றது. அத்துடன் எண்ணிம நூலகமான 'நூலகம்'தளத்திலுள்ள அவரது சிறுகதைத்தொகுப்பான 'ஒரு வெள்ளி ரூபாய்'க்கான இணைப்பினையும் பகிர்ந்துகொள்கின்றது. இணைப்பு - https://noolaham.net/project/06/544/544.pdf -
பவளவிழாவில் கலைவாதி - எம்.எஸ்.எம்.ஸாகிர் -
தமிழ் பிழைகள் எங்கு ஏற்பட்டாலும் அதனை தட்டிக்கேட்பவர். குற்றங்களுக்கு குரல் கொடுப்பவர். பாராட்டப்பட வேண்டியவர்களை ஏணி கொடுத்து உயர்த்தி விடுபவர். எதிரியாக இருந்தாலும் தோள் கொடுத்து தூக்கிவிடுபவர். எள்ளளவும் கோபம் எடுக்காதவர்.இப்படி அவரைப் பற்றி வர்ணித்துக் கொண்டே போகலாம். இவர் யாரென்று யோசிக்கிறீர்களா?அவர்தான் நவமணிப் பத்திரிகையில் ஜலதரங்கம் மற்றும் இலக்கியச் சோலை என்பவற்றை தயாரித்து தொகுத்தளிக்கும் பல்கலைவேந்தன் கலைவாதி கலீல். மதாறுமுகைதீன் மீரா உம்மா தம்பதிகளின் மகனாக முஹம்மது கலீல் எனும் கலைவாதி கலீல் 1943 ஒக்டோபர் 13 ஆம் திகதி புதன்கிழமை மன்னாரில் பிறந்தார்.
கவிஞர் வைரமுத்துவின் நீரியல் சிந்தனை - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி, சென்னை- 42. -
முன்னுரை
நீரால் தழைக்கும் நிலம், பிள்ளைப் பேரால் தழைக்கும் குலம். இயற்கை வரப்பிரதாசம் நீர் ஆகும். மனிதனின் முயற்சியின்றி அமைந்தவை இயற்கை நீர்நிலை. முயற்சியால் அமைந்தவை செயற்கை நீர்நிலை. உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது நீர். நம் உடலில் நீரே மிகுதியாக உள்ளது. உடலில் நீர்ச்சத்து நீங்கிவிடின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்பதை உணரலாம்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
என்பார் வள்ளுவர். மழையின் மாற்று வடிவங்களே அருவி, ஆறு, ஓடை, கடல், ஏரி, குளம், இன்னபிற. ஐம்பெரும் பூதங்களுள் ஒன்று நீர். இறை வழிபாட்டிற்கு நீர் மிகவும் முக்கியமானதாகும். மங்கல நிகழ்ச்சியாயினும், அமங்கல நிகழ்ச்சியாயினும் அவற்றிற்கு முதல் தேவையாகக் கருதப்படுகிறது நீர். நீரின் தத்துவத்தில் அமைந்த ஆலயம் திருவானைக்கால் ஆகும்.
நீரின் ஏற்பட்ட வளர்ச்சி
நீரின் வளத்தினாலே ஆற்றங்கரையோரங்களில் சிறந்த நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக நகரங்கள் திகழ்கின்றன. ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிக வளர்ச்சி சிந்துநதியில் வளர்ந்தது. நைல் நதியில் எகிப்து நாகரீகம் தழைத்து ஓங்கியது. எல்லா உயிர்களுக்கும் ஊட்டமளிப்பது நீர்தான்.
நீரின் சிறப்பு
நீரில்லாவிடில் வாழ்வில்லை. நீரின்றி அமையாது உலகம் என்பது வான்மறைந்த தந்த வள்ளுவர் கூற்று. அத்தகைய நீரின் சிறப்பாக காவியம் பேசுவது அரசர் முன்னின்று நடத்திய விழா நீர் விழாவாகும். நீர் விழாவின் போது கொடுங்குற்றம் செய்தவர்கள் கூட மன்னிக்கப்பட்டனர். மக்கள் பாவங்களைக் கழுவும் ஆற்றல் நீருக்கு இருப்பதாக நம்பிய நிலையும் காவியத்தில் இடம்பெறக் காண்கிறோம். ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்கின்றது நல்வழி.
அப்பூதிகள் திருநாவுக்கரசு பெயரால் தண்ணீர்ப்பந்தல் அமைத்து நீரறம் செய்து வந்ததைப் பெரியபுராணத்தால் அறிகின்றோம். இறந்தவர்களுக்கு நதியில் நீர்க்கடன் செய்தல் மரபு. நீர்க்கடன் செய்தாலே வீடுபேறடைய முடியும்.
பகுப்புமுறைத் திறனாய்வினடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள்
- எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்திய உலகளாவிய திறனாய்வுப் போட்டி - 2023இல் முதற்பரிசு பெற்ற கட்டுரை. -
குரு அரவிந்தன் அவர்கள் சமகாலத்து புலமை பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் இலக்கிய படைப்புக்களில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் என்பதோடு பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர். இவர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டிருப்பினும் தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார். 'அணையா தீபம்' என்ற சிறுகதையுடன் ஈழநாடு வார மலரில் எழுத்துலகில் புகுந்த இவர் சிறுகதை, கட்டுரை, நாவல், ஒலிப்புத்தகம், மேடை நாடகம், திரைக்கதை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கி தமிழ் இலக்கிய உலகை அலங்கரித்து வருகிறார். அறிவியல் சார்ந்த படைப்புக்களையும் தந்துள்ளதோடு பல விருதுகளையும் வென்று குவித்த ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் ஆவார்.
குரு அரவிந்தன் அவர்களினுடைய சிறுகதை ஒன்றை முதன் முதலில் சிறுகதைகளுக்காக திறக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுமம் ஒன்றிலேயே காணக் கிடைத்தது. அன்றிலிருந்து குரு அரவிந்தன் அவர்களுடைய சிஷ்யாய் அவருடைய சிறுகதைகளை தேடித் தேடி வாசிப்பதில் நேரத்தை செலவிட்டேன். அவர் கதையை தொடங்கியிருக்கும் பாங்கும் அதன் முடிவில் வைத்திருக்கும் எதிர்பாரா திருப்பமும் என்னை மிகவும் ஈர்த்தது. அனேகமான கதைகள் மிகவும் சுவாரஷ்யமாகவும் விறுவிறுப்புடனும் நகர்த்திச் செல்லப்பட்டிருப்பதைக் கண்டு சில நேரங்களில் ஆசிரியரின் கதைகளில் வரும் கதாபாத்திரமாகவே என்னை நான் மாற்ற முயற்சித்திருக்கிறேன். அந்தளவுக்கு அவரின் படைப்புக்கள் எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தின என்பதை மறுதலிக்க முடியாது. குரு அரவிந்தன் அவர்களினுடைய 'அப்பாவின் கண்ணம்மா' சிறுகதையானது என்னை மிகவும் ஈர்த்த ஒரு படைப்பாகும்.
அந்த வகையில் நான் எழுத விழைந்த இக்கட்டுரையின் பிரதான நோக்கம் குரு அரவிந்தன் அவர்களினுடைய படைப்புக்களை பகுப்புமுறை அடிப்படையில் அலசுவதாகும். அதற்காக நான் சிறுகதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறேன். குரு அரவிந்தன் அவர்களினுடைய தமிழ்ப் புலமையை பகுப்பாய்வு செய்வதில் எவ்வித நியாயமுமில்லை. ஏனெனில் அதில் தவறுகளை காணவே முடியாத அளவுக்கு அவரின் கற்பனை மற்றும் சொல்லாடல் திறன் பரந்து விரிந்து இருப்பதாகும். இருந்தாலும் ஒவ்வொரு கதையின் மூலமும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் யதார்த்த மற்றும் கற்பனை விடயங்களை ஒரு ரசிகையாய் தானும் கற்றுக் கொள்ள முனைவதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சிங்களக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு: 'நீ கூறுகிறாய் இறந்துவிட்டாயாம் நீ' - வானா நானா கீனா -
42 சிங்களக் கவிஞர்களின் கவிதைகளை எழுத்தாளர் இப்னு அஸுமத் மொழிபெயர்த்துள்ளார். பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளியான கவிதைகள். வலம்புரி கவிதா வட்டத்தின் வகவம் பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட போர்ச்சூழலில் மரணித்த அனைத்து இன மக்களுக்கும் நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. நூலுக்குக் கவிஞர் மேமன்கவி சிறப்பானதோர் அணிந்துரையினை வழங்கியுள்ளார்.
ஜெயகாந்தன் நினைவாக....... - வானா நானா கீனா -

எழுத்தாளர் ஜெயகாந்தனின் நினைவு தினம் ஏப்ரில் 8. என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத இலக்கிய ஆளுமை. அறுபதுகள், எழுபதுகள் ஜெயகாந்தனின் எழுத்துலகப் பொற்காலம். உண்மையில் வெகுசன இதழ்களான விகடன், கல்கி, தினமணிக்கதிர் ஆகியவை அவருக்குக் களமமைத்துக்கொடுத்தன என்பது வியப்புக்குரியது. விகடனில் அவரது 'ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்' தொடராக வெளியானது. அத்துடன் அவரது மிகவும் புகழ்பெற்ற நாவலான 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' கோபுலுவின் உயிர்த்துடிப்பான சித்திரங்களுடன் தொடராக வெளியானது. கோபுலுவின் ஓவியங்களுடன் அந்நாவலைப் படிப்பது அற்புதமானதோர் வாசிப்பனுபவம். நாவலின் பாத்திரங்களை உள்வாங்கி, அவற்றின் உளவியலை உள் வாங்கி மிகவும் சிறப்பாக அவ்வோவியங்களைப் படைத்திருப்பார் கோபுலு.
அஞ்சலிக்குறிப்பு: மொழிபெயர்ப்பாளர் தேவாவின் மறைவு! ஈடு செய்யப்படவேண்டிய இழப்பு!! - முருகபூபதி -

கடந்த நான்காண்டுகாலமாக ( 2019 – 2022 ) தொடர்ந்தும் அஞ்சலிக் குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தேன். மீண்டும் இந்த ஆண்டு ( 2023 ) முதல் இந்தவேலையை தொடக்கிவைத்துவிட்டுச் சென்றுவிட்டார் மொழிபெயர்ப்பாளர் தேவா. இவரது இயற்பெயர் திருச்செல்வம் தேவதாஸ். சந்திப்பதற்கு நான் பெரிதும் விரும்பியிருந்த ஒருவர்தான் தேவா. இவருடன் உரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விட்டதே என்ற சோகம் மனதை வாட்டுகிறது. இவரது சிறந்த மொழிபெயர்ப்பில் வெளியான இரண்டு நூல்களை படித்து, எனது வாசிப்பு அனுபவத்தை ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். முதலாவது உகண்டாவைச் சேர்ந்த சைனா கெய்ரெற்சி எழுதிய தன்வரலாற்றுச் சித்திரிப்பான குழந்தைப்போராளி என்ற நாவல். மற்றது இலங்கையைச் சேர்ந்த கடற்படைத் தளபதி அஜித்போயாகொட எழுதிய சிறை அனுபவங்களான நீண்ட காத்திருப்பு. இரண்டு நூல்களுமே போரின் அனுபவங்களை பேசியவை.
தேவா , இவற்றை ஆங்கில மூலத்திலிருந்து அவற்றின் உயிர் சிதையாமல் தமிழுக்கு வரவாக்கியிருந்தார். இவை தவிர, அம்பரயா, அனோனிமா, என்பெயர் விக்டோரியா முதலானவற்றையும் தமிழுக்குத் தந்தவர்.
தேவாவின் மொழி ஆளுமை விதந்து பேசப்படவேண்டியது. பெரும்பாலான மொழிபெயர்ப்பு நூல்கள், படிக்கும்போது அயர்ச்சியை தந்துவிடும். ஆனால், தேவாவின் மொழிபெயர்ப்புகள் தொடர்ந்தும் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டிக்கொண்டிருக்கும். அவர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்திருப்பவர். அதனால் அவருக்கு பிரெஞ், டொச் மொழிகளும் நன்கு தெரிந்திருக்கிறது. அம்மொழிகளிலிருந்தே நேரடியாக தமிழுக்கு மொழிபெயர்க்கும் ஆற்றலும் பெற்றிருந்ததாக அறிய முடிகிறது.
மன்னார் விடத்தல்தீவை பிறப்பிடமாகவும் தலைமன்னாரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தேவா, சுவிட்சர்லாந்திலும் சிறிது காலம் வாழ்ந்திருக்கிறார். மீண்டும் தாயகம் திரும்பிய பின்னரும் இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டவர். இம்மாதம் 26 ஆம் திகதி தேவாவின் இறுதி நிகழ்வுகள் தலைமன்னாரில் நடந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேவா மொழிபெயர்த்த நூல்களை கருப்பு பிரதிகள், வடலி, பூபாளம் முதலான பதிப்பகங்கள் வெளியிட்டன. தேவாவின் மொழிபெயர்ப்பில் நான் படித்த குழந்தைப்போராளி நூல் பற்றிய எனது வாசிப்பு அனுபவ பதிவுக்கு, “ சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த குழந்தைப் போராளிகளின் மௌனத்தை உடைக்கும் புதினம் ! வழி தவறிச்சென்ற ஒரு ஆட்டுக்குட்டியின் கதை ! “ எனத்தலைப்பிட்டிருந்தேன்.
அஞ்சலி - தேவா: மண்ணையும் ,மக்களையும் தலையிலும், மனத்திலும் சுமந்த நாடோடி! - தில்லை -

தேவா! சற்றும் எதிர்பாராத மரணம் உன்னுடையது. நிகழ்ந்திருக்க கூடாத மரணம் என்று நினைவுகளின் சுவர்களில் தலையடித்து கதறுகிறது மனம். எந்தத் தேசத்தில் வாழ்ந்தாலும் தாய் மண்ணை அளவுக்கதிகமாகவே நேசித்தாய். அந்த மண்ணிலேயே நான் கலக்கப்பட வேண்டும் என விடப்பிடியாக நின்றாய். உனது இலட்சியமாகவே அது இருந்தது. இலட்சியத்தை நீ அடைந்தாய். உனது மக்களையும், உனது மண்ணையும் தலையிலும், மனத்திலும் சுமந்தபடி அலைந்த நாடோடி நீ. எந்தச் சொகுசுகளையும் உனக்காக விரும்பியவனில்லை. அப்படி வாழும் மக்களை ஆதரித்தவனுமில்லை.
அஞ்சலி: எழுத்தாளர் தேவா மறைவு! - பதிவுகள்.காம் -

எழுத்தாளர் தேவா சுவிஸ்ஸில் வசித்து வந்தவர். இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கைக்குச் சென்றவர். தமிழ் இலக்கியத்துக்கு இவரது மொழி பெயர்ப்புகள் வளம் சேர்த்தன. ‘குழந்தைப் போராளி’, ‘அனோனிமா’, ‘அம்பரய’ (உசுல. பி. விஜய சூரிய ஆங்கிலத்தில் எழுதிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு; வடலி பதிப்பகம் வெளியிட்டிருந்தது) போன்றவை இவர் மொழிபெயர்ப்பில் வெளியான நூல்கள். எழுத்தாளர் தேவா மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது மறைவு பற்றி எழுத்தாளர் மன்னார் அமுதன் தனது முகநூற் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்:
"மன்னார் மாவட்டத்தின் மூத்த இலக்கியச் செயற்பாட்டாளரும் இலக்கிய மொழிபெயர்ப்பாளருமான மன்னார் விடத்தல்தீவை பிறப்பிடமாகவும் தலைமன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட 'அனோனிமா' தேவா காலமானார். அம்பரய, என் பெயர் விக்டோரியா, அனொனிமா, குழந்தைப் போராளி முதலிய சிறந்த மொழி பெயர்ப்புகளைத் தந்த படைப்பாளி. நாளை , மார்ச் 26 2023, மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிவரை பூதவுடலை அவரின் தலைமன்னார் வீட்டில் பார்வையிடமுடியும். 3.00 மணிக்கு நல்லடக்கம் இடம்பெறும்."
எழுத்தாளர் தேவாவின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம்.
முற்றுப் பெறாத உரையாடல்கள்: இறைவன் உங்கள் தோற்றங்களை பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்! ஈஸ்ட்ஹாம் இல் நடைபெற்ற மாஜிதாவின் 'பர்தா' நாவல் வெளியீட்டு நிகழ்வு தொடர்பாக ----- - வாசன் (ஐக்கிய இராச்சியம்) -

நேற்று ஈஸ்ட்ஹாம் Trinity Centre இல் மாஜிதாவின் 'பர்தா' நாவல் வெளியீட்டு, விமர்சன நிகழ்வொன்று ஏற்பாடாகி இருந்தது. எனது வேலைப் பளு காரணமாக கடந்த பெருந்தொற்றுக்குப் பின்பான காலகட்டத்தில் நிகழ்ந்த நேரடி நிகழ்வொன்றிலும் நான் பங்கு பற்றியது கிடையாது. ஆனால் இப்போது இதுவரை காலமும் நான் பார்த்து வந்த வேலையை இழந்து ஒரு வேலையில்லாப் பரதேசியாக வாழ்கின்ற காரணத்தினால் எந்த வித அசைகரியமும் இன்றி இந்நிகழ்விற்கு போய் வர முடிந்திருந்தது.
மாஜிதாவின் 'பர்தா' என்னும் இந்த நாவல் வெளி வந்து பல வாரங்கள். கடந்து விட்டுள்ளது. ஆயினும் அதன் பரபரப்பு இன்னும் அடங்கயிருக்கவில்லை என்பதும் அது அடங்க இன்னும் பல வருடங்கள் ஆகும் என்பதும் நேற்றைய சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது.. இங்கு எமக்கு அதன் பரபரப்போ அது ஏற்படுத்தும் சர்ச்சைகளோ முக்கியமில்லை. ஆனால் இந்நாவல் 'பர்தா' என்னும் ஒரு ஆடை மூலம் ஒரு சமூகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள ஒரு கொடிய அடக்குமுறையையும் அந்த அடக்குமுறையினைப் பிரயோகிப்பதற்காக பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளையும் நிர்ப்பந்தங்களையும் அழுத்தங்களையும் பேசி, அதற்கு எதிராக தனது வலிமையான குரலை எழுப்பி நிற்கின்றது எனபதும், இனி வருங்காலங்களில் தொடர்ச்சியாக நெறிபடுத்தப் பட வேண்டிய உரையாடல்களுக்கு ஒரு ஆரம்பப் புள்ளியாக விளங்குகின்றது என்பதுவுமே எமக்கு முக்கியமான விடயநக்கலாகப் படுகின்றன.
பேராசிரியர் எஸ். பசுபதி அவர்களின் பிரிவுத்துயர் பகிர்வு. - குரு அரவிந்தன். -

பேராசிரியர் பசுபதி அவர்களை கனடாவில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அமைதியான, சிரித்த முகத்தோடு எல்லோரோடும் அன்பாகப் பழக்ககூடிய ஆழ்ந்த இலக்கிய அறிவு கொண்ட மனிதராக அவரை என்னால் இனம் காணமுடிந்தது. அதன்பின் அவரை அடிக்கடி ரொறன்ரோ தமிழ் சங்கத்தில் சந்திப்பதுண்டு, அவரது உரைகளையும் கேட்டிருக்கின்றேன். அதுமட்டுமல்ல, அவரோடு ஒருநாள் உரையாடியபோது, அவர் தன்னை எனது வாசகன் என்று சொல்லி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்திருந்தார்.
ரொறன்ரோவில் நடந்த ஒரு நிகழ்வில், சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன் அவர்கள் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த எனது குறுநாவலான ‘நீர்மூழ்கி’ பற்றிக் குறிப்பிட்டு, அதன் மூலம் ஆயிரக்கணக்கான வாசகர்களை உருவாக்கியிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார். சிற்றுண்டி நேரத்தின் போது இவர் என்னிடம் நேரே வந்து கைகொடுத்து தன்னை அறிமுகப்படுத்தி, நீங்கள் தான் அந்தக் கதையின் ஆசிரியர் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன். விகடன் பவழவிழா ஆண்டு மலரில் உங்கள் ‘விகடனும் நானும்’ என்ற கட்டுரையை வாசித்திருந்தேன், அதன்பின் தான் ஆர்வம் காரணமாக இந்த நீர்மூழ்கிக் கதையை வாசித்தேன் என்றார். கதையின் முக்கியமான இடங்களை அப்படியே எடுத்துச் சொன்னார். 2001 ஆம் ஆண்டு விகடனில் வெளிவந்த கதையை எப்படி நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன்.
எழுத்தாளர் அ.ந.கந்தசாமி நினைவாக..

- எழுத்தாளர் அ.ந.கந்தசாமி நினைவு தினம் பெப்ருவரி 14. இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளிலொருவர். கவிஞர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், நாடகாசிரியர், கலை, இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் என அவரது கலையுலக, சமூக, அரசியற் பங்களிப்பு பரந்தது. விதந்தோடத்தக்கது. நினைவு கூர்வோம். - பதிவுகள்.காம் -
1. நான் ஏன் எழுதுகிறேன்? - அறிஞர் அ.ந.கந்தசாமி -
அப்பொழுது எனக்குப் பதினேழு வயது நடந்து கொண்டிருந்தது. உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும், துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்துவிட வேண்டுமென்று பேராசைகொண்ட காலம். காண்பதெல்லாம் புதுமையாகவும், அழகாகவும், வாழ்க்கை ஒரு வானவில் போலவும் தோன்றிய காலம். மின்னலோடு உரையாடவும், தென்றலோடு விளையாடவும் தெரிந்திருந்த காலம். மின்னல் என் உள்ளத்தே பேசியது. இதயத்தின் அடியில் நனவிலி உள்ளத்தில் புகுந்து கவிதை அசைவுகளை ஏற்படுத்தியது. பலநாள் உருவற்று அசைந்த இக்கவிதா உணர்ச்சி ஒருநாள் பூரணத்துவம் பெற்று உருக்கொண்டது. எழுத்தில் வடித்தேன். "சிந்தனையும் மின்னொளியும்" என்ற தலைப்பில் இலங்கையின் ஓப்புயர்வற்ற இலக்கிய ஏடாக அன்று விளங்கிய 'ஈழகேசரி'யில் வெளிவந்தது. இக்கவிதை ஒரு காரியாலயத்தில் மேசை முன்னுட்கார்ந்து என்னால் எழுதப்பட்டதல்ல. இயற்கையோடொன்றிய என் மனதில் தானே பிறந்த கவிக்குழதை இது. எனினும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இலக்கிய சித்தாந்தங்கள் பலவற்றை ஆராய்ந்து நான் என்ம்னதில் ஏற்றுக் கொண்ட அதே கருத்துகளின் சாயலை இக்கவிதையில் என்னால் இன்று காண முடிகிறது.
மனோதத்துவ அறிஞர் மனதை நனவிலி மனம், நனவு மனம் என்று இரு கூறுகளாகப் பிரிக்கின்றனர். ஆங்கிலத்தில் இவற்றை முறையே Sub Conscious Mind, Conscious Mind என்று குறிப்பார்கள். "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற கேள்விக்கு நனவு மனத்திடம் பதில்பெற முடியாது. ஏனெனில் நனவு மனத்தைவிட சக்திவாய்ந்தது நனவிலி மனம் என்பதே மன இயல் அறிந்தவர் முடிவு. கவிதை பெரும்பாலும் நனவிலி மனதில் உருவாகி நனவு மனத்தின் வழியாகப் பிரவாகிக்கும் ஒன்றாகும். பின்னால் நான் ஏற்றுக்கொண்ட கருத்துகள் இக்கவிதையை எழுதிய நாளில் என் நனவிலி மனதில் துளிர்த்திருந்தவை தாம் என்பதையே இக்கவிதையில் நான் வலியுறுத்தும் தத்துவங்கள் இன்று எனக்குணர்த்துகின்றன.
பேராசிரியர் கோபன் மகாதேவாவின் ஆக்கங்கள் சில!
- ஜனவரி 14 அன்று இலண்டனில் பேராசிரியர் கோபாலப்பிள்ளை மகாதேவா (கோபன் மகாதேவன்) மறைந்த செய்தியினை அவரது குடும்பத்தினர் பேராசிரியரின் முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்கள். அவரது இழப்பால் ஆழ்ந்த துயரிலிருக்கும் அனைவர்தம் துயரில் 'பதிவுக'ளும் பங்குகொள்கின்றது. 'பதிவுகள்' இணைய இதழின் ஆலோசகர்களில் ஒருவராகவிருந்தார். கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தபோதும் தொடர்ந்தும் புத்துண்ர்ச்சியுடன் முகநூலில் இயங்கிக்கொண்டிருந்தவர் பேராசிரியர். அவரது ஆக்கங்கள் பல, கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என, பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை அவர் நினைவாகப் பகிர்ந்துகொள்கின்றோம். - ஆசிரியர், பதிவுகள்.காம் -

1. உனக்காக என் இதயத்திலிருந்தொரு கவிதை!
- மறைந்த அவரது மனைவி வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா நினைவாகப் பேராசிரியர் கோபன் மகாதேவா எழுதிய கவிதை. -
நித்திரையே வாராத நீள் இரவின் நதியினில் நீந்துகிறேன்.
பத்தரை மாற்றவள் எனப் பல் மக்கள் புகழ்ந்து சொன்ன
பத்தினியாள் பிரிந்துசென்று வாரம் ஏழு ஆகுது இன்று.
எத்தனையோ எண்ணங்கள் எனது நுனி மனக் குகையில்
நத்தைகள்போல் நெளிந்து நித்திரையை அரித்து உண்டு
புத்தியையும் புண் ஆக்கிச் செல்லும் வேகமும் அடக்கிச்
சத்தியமும் சபலமும் சாக்கடையின் சேறையும் கலந்து
மெத்தையிலே நீரூற்றாய் மேனி தனைக் குளிப்பாட்டி
எத்தையுமே நிரல் போட்டு எத்தனிக்கும் அதை நிறுத்தி
முத்துமுத்தாய் முன்னாளில் கவி புனைந்த என் மனசைக்
குத்திக் குடைவதனால் குழப்பத்துக்கு உருக்கொடுத்து
கத்திக் கதற வைத்துப் பல கலவரங்கள் உண்டு செய்து
சத்தம் இல்லா இரவினிலே சலசலப்பால் நிறை குலைத்து
செத்து ஒழிந்த நாட்களுக்கு நான் செல்லாமல் முன் போக
உத்தி ஒன்றும் தோன்றாது உருளுகிறேன் தீச்சுடரில்
பேராசிரியர் கோபன் மகாதேவன் மறைவு!
- ஜனவரி 14 அன்று இலண்டனில் பேராசிரியர் கோபாலப்பிள்ளை மகாதேவா (கோபன் மகாதேவன்) மறைந்த செய்தியினை அவரது குடும்பத்தினர் பேராசிரியரின் முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்கள். அவரது இழப்பால் ஆழ்ந்த துயரிலிருக்கும் அனைவர்தம் துயரில் 'பதிவுக'ளும் பங்குகொள்கின்றது. 'பதிவுகள்' இணைய இதழின் ஆலோசகர்களில் ஒருவராகவிருந்தார். கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தபோதும் தொடர்ந்தும் புத்துண்ர்ச்சியுடன் முகநூலில் இயங்கிக்கொண்டிருந்தவர் பேராசிரியர். அவரது ஆக்கங்கள் பல, கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என, பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவற்றையும், அவரைப்பற்றி ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் ஞானசேகரன் எழுதி ஞானம் சஞ்சிகையில் வெளியான அறிமுகக் கட்டுரையினையும் பகிர்ந்துகொள்கின்றோம். - - ஆசிரியர், பதிவுகள்.காம் -

(பதிவுகள்.காம்) பேரறிஞர் பேராசிரியர் கோபன் மகாதேவா
- தி. ஞானசேகரன், பிரதம ஆசிரியர், 'ஞானம்' சஞ்சிகை-
பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களை முதன்முதலில் அவரது இலக்கியப் படைப்புக்கள் மூலமே அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஞானம் சஞ்சிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அவரைச் சிறந்த படைப்பாளியாக எனக்கு அறிமுகப் படுத்தியிருந்தன. சென்ற 10-10-2015 அன்று டென்மார்க்கில் இடம்பெற்ற ஏழு சங்கங்கள் இணைந்து நடத்திய கலைவிழாவில் பிரதம அதிதியாக நானும் எனது மனைவியும் அங்கு சென்றபோது, பேராசிரியரும் அவ்விழாவிலே சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்ள வந்திருந்தார். அவ்வேளையிலேதான், 1974ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது அனைத்துலகத் தமிராய்ச்சி மகாநாட்டின் பிரதம செயலாளராகச் செயலாற்றிய கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவாதான் அவர் என்பதும், அவரே தொடர்ந்து தற்போது கோபன் மகாதேவா என்ற பெயரில் பிரபல்யமாகி பல்துறைச் செயற்பாடுகளிலும் இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்டு இயங்கிவருகிறார்; என்பதும் தெரியவந்தது.
யாழ்ப்பாணத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்த முடியாது என்றும் கொழும்பிலேதான் அது நடத்தப்பட வேண்டும் என்றும் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மந்திரிசபையில் தீர்மானித்திருந்த வேளையில் கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவா சிறிதும் தளராமல் தனது திறமையைப் பயன்படுத்தி சிறிமா அம்மையாருடன் வாதாடி யாழ்நகரிலேயே அந்த மாநாட்டை நடத்த அனுமதிபெற்றவர் என்பதும் என் நினைவில் வந்தது.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருதுகள் – 2022 - தகவல்: முருகபூபதி -

'தமிழ் இலக்கியத்தோட்ட'த்தின் 2022ஆம் ஆண்டுக்கான இயல்விருதுகள் எழுத்தாளர் பாவண்ணனுக்கும், எழுத்தாளர் லெ.முருகபூபதிக்கும் வழங்கப்படுகின்றன. இத்தகவலைப் பதிவுகளுடன் பகிர்ந்துகொண்டவர் எழுத்தாளர் முருகபூபதி. விருதுகள் பெரும் இருவரையும் பதிவுகள் வாழ்த்துகின்றது. - பதிவுகள்.காம் -
வழக்கமாக வருடாவருடம் வழங்கப்படும் இயல்விருது கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022 இல் இரண்டு இயல் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை 2023 யூன் மாதம் கனடா ரொறொன்ரோவில் வழங்கப்படும்.
லெட்சுமணன் முருகபூபதி
தமிழ் இலக்கியத் தோட்டம், 2022 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதை, கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் இலங்கையில் பிறந்த படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி அவர்களுக்கு வழங்குகிறது. 1972 இல் எழுத்தாளராக அறிமுகமான இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. வீரகேசரி பத்திரிகை ஆசிரிய பீடத்தில் இவர் பணியாற்றியபோது சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில் உலக இளைஞர் – மாணவர் விழாவில் கலந்து கொண்டார்.
1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த இவர், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, பேட்டி, பயண இலக்கியம் என எழுதி வெளியிட்டு வருகிறார். அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடத்துவதில் முன்னின்று உழைத்துவரும் இவர், 2011 இல் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம அமைப்பாளராக செயல்பட்டார்.
அவுஸ்திரேலியாவில் 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், 2004 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் ஆகியனவற்றின் ஆரம்ப உறுப்பினருமாவார். இலங்கையில் வடமேல் மாகாணத்தில் நீர்கொழும்பில் 13 யூலை 1951 இல் பிறந்த முருகபூபதி , விவேகானந்த வித்தியாலயத்தில் ( தற்போது விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ) தமது ஆரம்ப கல்வியை தொடங்கி பின்னர், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும், ( தற்போது கனகரத்தினம் மத்திய கல்லூரி ) நீர்கொழும்பு அல்கிலால் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.
அஞ்சலி. எழுத்தாளர் லெனின் மதிவானம் மறைவு! - பதிவுகள்.காம் -
எழுத்தாளர் , கல்விமான், மார்க்சியவாதி என அறியப்பட்ட லெனின் மதிவானம் மலையகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர். அவரின் மறைவுச் செய்தி அதிர்ச்சி தருமொன்று. 2013, 2014 ஆண்டுகளில் பதிவுளில் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களைப் பதிவுகளின் நிகழ்வுகள் பகுதிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அதன் பின்னர் அவரைப் பெரிதும் பொதுவெளியில் காணவில்லை. ஏன் ஒதுங்கிப்போனார் என்பதை இப்பொழுதுதான் அறிய முடிகின்றது. உடல் நிலை சீரற்றுப் போன காரணத்தினாலேயே அவர் ஒதுங்கி விட்டார் என்பதை வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இழப்பால் பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர்கள், நண்பர்கள் , கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவர்தம் துயரில் பதிவுகளும் இணைந்து கொள்கின்றது.
இத்தருணத்தில் அவர் பதிவுகள் இணைய இதழில் எழுதிய ஸி. வி. வேலுப்பிள்ளை நூற்றாண்டு நிறைவு நினைவு ஒரு முன்னோட்டம்! ' , 'பிரேம்ஜி வகுத்த தனிப்பாதை! ' ஆகிய கட்டுரைகளை மிள்பிரசுரம் செய்வதுடன், அவர் பதிவுகள் இணைய இதழின் நிகழ்வுகள் பகுதிக்கு அனுப்பிய தகவல்கள் சிலவற்றையும் பகிர்ந்துகொள்கின்றோம்.
ஸி. வி. வேலுப்பிள்ளை நூற்றாண்டு நிறைவு நினைவு ஒரு முன்னோட்டம்! - லெனின் மதிவானம் -
செப்டம்பர் பதினான்காம் திகதி ஸி.வி வேலுப்பிள்ளை நூற்றாண்டாகும். அவர் மலையக இலக்கியத்தின் தலைமகனாக விளங்கியவர். அவரது நூற்றாண்டை எதிர்நோக்கியிருக்கின்ற இவ்வேளையிலே அவர் பொறுத்த காத்திரமான ஆய்வுகள், மதிப்பீடுகள், விவரணங்கள், செய்திகள், நினைவுக் குறிப்புகள் என்பன வெளிவரவில்லையாயினும் சில குறிப்பிடத்தக்க எழுத்துக்கள் பிரசுரமாகியிருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கவையாகும். அவ்வாறு குறிப்பிடத்தக்கவற்றுள் பெரும்பாலானவை முற்போக்கு மார்க்ஸியர்களால் எழுதப்பட்டவையாகும். இர.சிவலிங்கம், மு.நித்தியானந்தன், சாரல் நாடன், தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, ஓ.ஏ. இராமையா, லெனின் மதிவானம், சுப்பையா இராஜசேகர், மல்லியப்புசந்தி திலகர் முதலானோரின் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுள் சாரல் நாடனின் 'சி.வி. சில சிந்தனைகள' என்ற நூலே ஸி.வி பற்றிய தேடலுக்கு காத்திரமான அடித்தளத்தை வழங்கியது. இவ்வெழுத்துக்களிடையே தத்துவார்த்த வேறுபாடுகள் இருப்பினும் ஸி.வி.யின் ஆளுமை பண்முகப்பாட்டை வெவ்வேறு விதங்களில் வெளிக்கொணர்பவையாக அமைந்திருக்கின்றன.
மலையகத் தலைவர்களை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் “மலையக அரசியல் தலைவர்களும் தளபதிகளும் எனும் சி.வி.வேலுப்பிள்ளையின் நூல். - சு.முரளிதரன் -

மிகப்பெரும் வியப்பையையும் விந்தையையும் ஏற்படுத்தும் விதமாகவும் மலையகத்தில் வேர் விட்டு வளரும் சிவியியலுக்கு (சி.வி. வேலுப்பிள்ளை) ஆழ்ந்த கனதியை ஏற்படுத்தம் விதமாகவும் 'மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்' எனும் சி.வி. வேலுப்பிள்ளையின் கட்டுரைகளை தாங்கிய நூல் சென்னை தாய் வெளியீடாக திரு மு. நித்தியானந்தன் மற்றும் திரு எச். எச். விக்கிரமசிங்க அவர்களின் பெரும் முயற்சியினால் வாசகர் கைகளுக்குக் கிட்டியுள்ளது.
பேராசிரியர் சோ. சந்திரசேகரனுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட இந்த நூலுக்குள் நுழையும் மலையகம் குறித்ததேடல் முயற்சியில் மலையக வரலாற்றின் விட்டுப்போன பக்கங்களை தேடுபவர்களும் அல்லது இதுவரைக் கிடைத்த ஆதாரங்களை வைத்து சிந்திப்பவர்களும் தமக்குள் தாமே சிலிர்த்துப் போகும் வண்ணம் மலையகம் சார்ந்த ஆளுமைகளைத் தனது சொல்லோவியங்களால் தகவல்களாலும் முன் அனுமானங்களாலும் நாம் காணாத ஒரு மலையக வரலாற்றை சி.வி படைத்துள்ளார் எனலாம்.
கவிஞர் விக்கிரமாதித்யன் பற்றியொரு குறிப்பு! - ஊர்க்குருவி -

முகநூற் பதிவொன்றில் திரு.கந்தசாமி ஆர் (Kandasamy R) அவர்கள் பின்வருமாறு எழுதியிருந்தார்:
"நீயா நானாவில் மன உளைச்சல் பற்றிப் பேசியதில் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் மகன் சொன்ன விஷயங்கள் நெஞ்சை உறுத்தியது. 'எங்க அப்பா மாதிரி நான் ஆகிடக் கூடாது. அதனாலதான் இலக்கியத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு சராசரி மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காரணம் எங்கப்பா வாழ்க்கையில ஜெயிக்கல. உங்கப்பா மாதிரி நீ வந்துடக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லி சொல்லி என்னை வளர்த்தாங்க' என்று சொன்னபோது அளவிடமுடியாத அளவுக்கு வருத்தம் ஏற்பட்டது."
பேரரசும் பெருந்தத்துவமும்! - கலாநிதி க.கைலாசபதி -
-
'பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் ' நூலிலிருந்து -
தென்னிந்தியாவிலே சோழப் பேரரசு தோன்றிய காலம், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலப் பகுதியாகும். கிருஷ்ணா நதிக்குத் தெற்கே உள்ள நிலப்பகதிகள் யாவும் முதன் முறையாக வலுவுள்ள தமிழ்ப் பேரரசொன்றின் கீழ் அமைந்து சிறப்புமிக்க மாவட்டங்களாக ஒரு குடைக் கீழ் ஆளப்பட்டன. சோழப் பேரரசின் புகழ் உச்ச நிலையில் பட்டொளி வீசிய போது கங்கையும் கடாரமும் கலிங்கமும் இலங்கையும் அதன் அடிபணிந்து நின்றன. அராபியரும் žனரும் அதன் வாணிபச் சிறப்பிற் பங்கு கொண்டிருந்தனர் இத்தகைய சிறப்புமிக்க காலப்பகுதியிலேதான் தமிழகத்திலே "சைவ சித்தாந்தம்" என்னும் பெருந்தத்துவம் சாத்திர வடிவம் பெற்றது. சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. அவற்றுள் தலையாயது எனக் கொள்ளப்படும் சிவஞானபோதம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலே எழுந்தது. மெய்கண்டார் காலம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டென்பது யாவரும் ஒப்பமுடிந்த உண்மை1. திருவுந்தியர், திருக்களிற்றுப் படியார் என்னும் இரண்டனைத் தவிர, ஏனைய சித்தாந்த சாத்திர நூல்கள் பதினொன்றும் சிவஞான போதத்தின் வழி வந்தனவே. எனவே தென்னகத்திலே சைவ சித்தாந்தத்தின் முறையான வரலாறு ஒருவிதத்தில் இங்குதான் தொடங்குகிறது எனக் கொள்ளலாம்.2 பேரரசு ஒன்று நிலவிய காலத்திலே பெருந்தத்துவம் ஒன்றும் வடிவம் பெற்றவை குறிப்பிடத்தக்கவை உண்மையாகும்.
பல்லவர் காலத்திலே பொங்கிப் பிரவகித்த பக்தி இயக்கமானது ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களைத் தோற்றுவித்தது. ஆனால் திருவுந்தியாரோடு தோத்திர முறைமை நீங்கிச் சாத்திர முறைமை தோன்றுகின்றது.3 திருவுந்தியாரை முழுமையான சாத்திர நூலெனக் கொள்ளுதல் முடியாது. திருக்களிற்றுப் படியார் உந்தியாரினும் அதிகமாகச் சாத்திரப் பண்பு அமையப் பெற்றது. சிவஞான போதமே முழுமையான சாத்திரப் பெருநூலாகம். எனவே இவற்றுள் ஒருவிதமான வளர்ச்சியை நாம் காணலாம். தத்துவத் துறையில் இவ்வகையான வளர்ச்சி நிகழ்ந்து கொண்டிருந்த பொழுது சமய நிறுவனங்களும் உருமாறிக் கொண்டிருந்தன. இதுபற்றிப் பேராசிரியர் நீல கண்ட சாத்திரியார் மேல்வருமாறு கூறியுள்ளார்.
"......மத்திய கால இந்து சமயம் தென்னிந்தியாவிற்கு அளித்த இருபெருங் கொடைகள் கோயிலும் மடமும் ஆகும். சோழரின் ஆட்சிக்காலப் பகுதியிலேயே இவ்விரு நிறுவனங்களும் மெல்ல மெல்ல வளர்ந்து சூழ்நிலைக்கேற்க மாற்றுமடைந்துள்ள; இவை பொதுமக்களின் கற்பனையைக் கவர்ந்தன; பணக்காரரின் ஆதரவைப் பெற்றன. இக்கவனமும் ஆதரவும் கிடைக்கவும், இந்நிறுவனங்கள் பௌத்த விகாரைகளையும், சமணப்பள்ளிகளையும் மிஞ்சியெழுந்து, உறுதியான நிலைமையை அடைந்தன; இன்றுவரை இந்த உயர்நிலையை அவை பெற்றுவந்துள்ளன; சியாலயன் மரபுச்சோழர் ஆட்சியிலே தென்னிந்தியாவிற் சைவசமயத்தின் பொற்காலம் தொடங்குகிறது எனக் கூறுலாம்."4
தெளிவத்தை ஜோசப் : தமிழ் இலக்கியப் பெருஞ் சுடர் அணைந்தது! - மு.நித்தியானந்தன் -

பிரதேசங்கள், நாடுகள் என்ற எல்லையைத்தாண்டி தமிழின் ஈடிணையற்ற எழுத்தாளராக அங்கீகாரம் பெற்ற தெளிவத்தை ஜோசப் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய வானில் கருந்திரையைப் போர்த்தியிருக்கிறது. தெளிவத்தை என்ற தோட்டத்துப்பெயரைத் தன் பெயரோடு இணைத்து, தமிழ் இலக்கிய உலகில் அவர் அடைந்த வெற்றிச் சாதனைக்காக மலையகம் பெருமிதம் கொள்கிறது.மலையக மக்களது வாழ்வின் துயர்க்கோலங்களை, சுரண்டலின் அகோரத்தை, அவலப்பட்டுப்போன சமூகக்கூட்டத்தின் கதையை அழியாத கல்வெட்டாய் தமிழ் இலக்கிய உலகில் பொறித்துவைத்துவிட்டுப்போன பெருமகன் தெளிவத்தை ஜோசப்பிற்காக இன்று தமிழ் இலக்கிய உலகம் கண்ணீர் சிந்தி நிற்கிறது. மலையக இலக்கியம் என்ற பச்சை மண்ணில் தெளிவத்தை ஜோசப்பின் தசைநார்கள் நெய்யப்பட்டிருக்கின்றன என்று சொன்னால் அது சரியாய் இருக்கும். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கிய உலகின் தனி சாம்ராட்டாக உலாவந்த இலக்கியத்தலைமகன் இன்றில்லை எனும் செய்தி நம் நெஞ்சில் துயர அலைகளை எழுப்பி நிற்கிறது.
தமிழ் இலக்கியப்பரப்பில் ஒரு தமிழ்ச் சமூகம் எந்த அளவு துயரங்களை, அடிமைவாழ்வின் கூறுகளைக் கொண்டியங்கியது என்பதை ஜோசப் அவர்களைப்போல கலாநேர்த்தியுடன் சித்திரித்த பெரும் எழுத்தாளன் யாருமில்லை. மனித ஜீவிகளாகவே கருதப்படாத ஒரு சனக்கூட்டத்தின் தீனக்குரலை தீவிர மூர்ச்சனையோடு எழுத்தியக்கத்தில் பதிவு செய்த பெரும் இலக்கிய வியக்தி அவர்.மலையக சமுதாயத்தின் நிதர்சனத்தை, அதன் வெம்மையின் தவிப்பை, சிறுமையின் இழிவை, சுரண்டலின் சூக்குமத்தை, இனவாதத்தின் நச்சுக்கொடுக்குகளை, உணர்வுகளின் இடத்தை தந்திரமும் வக்கிரமும் அபகரித்து விட்ட அவலத்தை தனது கதைகளிலே அவர் மீட்டியிருக்கிறார்.சிறுமை கண்டு பொங்கிய கலகக்காரனின் எழுத்துகளாக அவரது கதைகள் சிறப்புப்பெறுகின்றன. மனிதன் சிறுமைப்படுத்தப்பட்ட கொடுமையை அவரைப்போல எழுத்திலே சித்திரித்தவர்கள் யாருமில்லை.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









