| ஒட்டாத மண்! 
 - ஆசி கந்தராஜா (சிட்னி) -
 
 4. உணர்வுகளே உறவாக...
 
 
  தொலைபேசி 
மணி அடித்தது! சிட்னியிலிருந்து வரும் அழைப்பென வரவேற்பு பெண்மணி தொலைபேசியில் 
சிணுங்கினாள். நலம் விசாரிக்க, மனைவி அடிசபாபாவுக்கு அழைத்திருந்தாள். வீட்டுப் 
புதினங்களைச் சொல்லியபின், கொழுப்பு பண்டங்களைத் தவிர்க்கும்படி ஆலோசனை கூறி, ‘தொந்தி குறைந்திருக்கிறதா?’ என மறக்காது கேட்டாள். ‘கால் சட்டை 
இப்போது லூசாக இருக்கிறது. வரும்போது தொந்தி குறைத்து அழகனாக வருவேன்’ என ‘ஐஸ்’ 
வைத்து பேசினேன். ‘எங்களுக்கு அழகு வேண்டாம். உடம்பு குறைத்து சகதேசியாய் இருந்தால் 
போதும்’ எனச் சொல்லி தொலைபேசியைத் துண்டித்தாள். எட்வேட் நாலு மணிக்கு முன்னரே 
ஆஜராகி, வரவேற்பறையில் காத்திருந்தான்.
 
 எது எப்படி இருந்தாலும், எதியோப்பியாவில் சில மணித்தியாலங்கள் மாத்திரம் பழகிய 
ஒருவனுடன், இரவு உணவு விடுதிக்கு செல்வது உகந்ததல்ல. இதனால் பல்கலைக்கழக வாகனத்தை 
மாலை நாலு மணிக்கு ஹோட்டலுக்கு கொண்டு வரும்படி சாரதிக்குச் சொல்லியிருந்தேன். 
சாரதி அதிகம் ஆங்கிலம் பேசமாட்டான். இருப்பினும் அவன் வருவது பாதுகாப்பானது 
என்றெண்ணி சகல, விடையங்களையும் மாணவ மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் அவனுக்கு 
விளக்கமாகச் சொல்லியிருந்தேன்.
 
 கேளிக்கை விடுதிகள் இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் களைகட்டும். நாம் புறப்பட 
ஆயத்தமானதோ மாலை நான்கு மணிக்கு. இடைப்பட்ட நேரத்தில் என்ன செய்யலாம் என்பதையிட்டு 
சாரதியும் எட்வேட்டும் சலந்தாலோசித்து, மலைப்பிர தேசத்துக்கு போகலாமென்றார்கள். 
சாரதிவரும் தைரியத்தில் நானும் அவர்களுடைய பிரேரிப்புக்குச் சம்மதித்தேன்.
 
 வாகனம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. வன இலாகாவின் முகாமையில் ஒழுங்கு 
முறைப்படி வளர்க்கப்பட்ட பைன் மரங்களும், இயற்கைக் காடுகளுமாக மலைமுழுவதும் பச்சைப் 
பசேலென்ற கண்கொள்ளாக் காட்சி! இடையிடையே கோப்பிச்செடிகளும் வாழைத்தோட்டங்களும் 
வனவிவசாயத்துக்குச் (Agro-forestry) சாட்சிகளாக அமைந்திருந்தன.
 
 மலைப்பாதையோரம் எதியோப்பிய இளைஞர்கள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். 
அவர்களின் வலுவான நீண்ட கால்களும், வளைந்து கொடுக்கும் மெல்லிய உடல்வாகும், 
மலைப்பிரதேச ஓட்டப் பயிற்சிகளும் மரதன் ஓட்டத்தில் அவர்கள் உலகளவிலே சாதனைபுரியக் 
காரணமாய் அமைந்தி ருக்கலாம். உண்மைதான்! இவர்கள் அந்நாட்டுக்குப் பெருமை தேடித் 
தருபவர்கள். இதனால் இவர்கள் அங்கு மண்ணின் மைந்தர்களாக நாட்டுக்கு பெருமை 
தேடித்தரும் கதாநாயகர்களாக வலம் வந்தார்கள்.
 
 ‘‘Bikila Abebe 
ஒருகாலத்தில் இப்படித்தான் ஓட்டப் பயிற்சி பெற்றிருப்பார்’’ என்றேன்.
 
 சாரதியும் எட்வேட்டும் பெருமை பொங்க என்னைப் பார்த்தார்கள்.
 
 
  ‘ஒலிம்பிக் 
போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது ஆபிரிக்கர், எதியோப்பியாவைச் சேர்ந்த Bikila 
Abebe . 1960, 1964ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டுமுறை தங்கப் பதக்கங்களை 
வென்றெடுத்தார். அத்துடன், 1960ம் ஆண்டு மரதன் ஓட்டப்போட்டியில் உலக சாதனையை (World 
record) நிலைநாட்டியவர். அவரையிட்டு நீங்கள் உண்மையாகவே பெருமைப் படலாம்’ என எனது 
பொது அறிவை இடமறிந்து அவிழ்த்துவிட்டேன்.
 
 ஒரு நாட்டுக்கு போகமுன் அந்நாட்டைப் பற்றிய தகவல்களை இணையத்தளம் மூலம் அறிந்து 
கொள்வது என் வழக்கம். அது அந்நாட்டு மக்களோடு நெருங்கிப் பழகுவதற்கு பெரிதும் உதவி 
யிருக்கிறது. அது இன்றும் கைகொடுத்தது.
 
 Bikila Abebe 1973ம் ஆண்டு தனது 41வது வயதில் காலமான போதும், அவரைத் தொடர்ந்து 
Gezahegnena Abera மரதன் ஓட்டப் போட்டியில் சாதனைபுரிந்தார். இப்போது சகோதரர்களான 
Kenenisa Bekela மற்றும் Tarku Bekela ஆகிய இருவரும் எதியோப்பியாவுக்கு பெருமை 
தேடித் தருகிறார்கள். என்ற விபரத்தை சாரதி சொன்னவிதம், நம் நாட்டில் கிரிக்கட் 
வீரர்கள் பற்றி நாம் சுவாரஸ்யமாகப் பேசும்
 பாங்கில் இருந்தது.
 
 மலையும் பள்ளத்தாக்கும் மலையில் இருந்து பள்ளத்தில் விழுந்தோடும் நீர்வீழ்ச்சியும் 
அமைந்த, ரம்மியமான அந்த இடத்தை உள்ளடக்கிய எதியோப்பியா, வறுமையால் வாடும் நாடென்பது 
நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும்.
 
 அழகிய சூழலிலே அமைந்திருந்தது அந்த உணவு விடுதி. களிமண்ணாலும் புற்களாலும் 
எதியோப்பிய கைவண்ணத்தில் உருவான கொட்டகை. உள்ளே மெருகு செய்யப்பட்ட மரக்குற்றிகளால் 
இருக்கைகள் செய்திருந்தார்கள். வாடிக்கையாளர்களின் வசதி குறையாதவாறு, இயற்கை வளங் 
களைப் பயன்படுத்தி உட்பகுதியை அழகுபடுத்தியிருந்தார்கள். இவ்வாறு எதியோப்பிய 
கலாசாரம் நெய்யப்பட்டிருந்த அந்த விடுதியிலே, பாரம்பரிய மான உணவு பரிமாறப் 
படுகிறது.
 
 உணவு விடுதி நிரம்பி வழிந்தது. எதியோப்பிய மேல்தட்டு வர்க்கத்தினரும், வெளிநாட்டு 
உல்லாசி களும் பெருமளவிலே காணப்பட்டனர். மார்பின் பெரும்பகுதி வெளியே துருத்திக் 
கொண்டிருக்கும்படி உடையணிந்த அழகிய இளம்பெண்கள் பரிசாரிகர்களாக வலம் வருவது 
அழகுக்கு அழகு சேர்த்தது.
 
 எதியோப்பிய Amharic மொழியில் வணக்கம் கூறியவாறு அழகான பெண் ஒருத்தி எம்முன்னே, 
சமைக்காத பச்சை வெள் ளாட்டு
 இறைச்சித் துண்டுகளை தட்டில் வைத்தாள். நாம் இருந்த மேசையில் சிறியதும் பெரியதுமான 
கூரிய கத்திகள் குடுவையொன்றில் இருந்தன. உப்பு, மிளகாய் மஞ்சள் பொடி கொண்ட சிறு 
கிண்ணங்களைப் பிறிதொரு பணிப்பெண் மேசையில் அடுக்கினாள். இந்திய பெண்ணின் சாயலை ஒத்த 
அழகிய எதியோப்பிய இளம் பெண் ஒருத்தி மஞ்சள் நிற திரவமொன்றை பெரியதொரு குடுவையில் 
கொண்டுவந்து எம்முடன் அமர்ந்து கொண்டாள். அவளது கூந்தல் இந்தியப் பெண்களினது போல் 
நீண்டு வளர்ந்திருந்தது. ஆபிரிக்க
 அராபிய கலவையில் உருவானது அவளது உருவச்சாயல். இப்படியான பல பெண்கள் எதியோப்பியாவில் 
வாழ்கிறார்கள்.
 உண்மையிலேயே எதியோப்பிய பெண்களைப்போல அழகானவர்களை நான் வேறெந்த ஆபிரிக்க 
நாடுகளிலும் பார்த்ததில்லை. இரத்தக் கலப்புகளின் ஒத்திசைவில் உருவானதே அந்த அபூர்வ 
அழகு.
 
 தனது வெண்பற்கள் வெளியே தெரிய புன்சிரிப்பை உதிர்த்தவாறு மஞ்சள் நிற திரவத்தை 
கிளாசில் ஊற்றி, எமக்கு பரிமாறினாள்.
 ‘இது என்ன திரவம்?’ எனக் கேட்டேன்.
 
 ‘இது ஒருவகை மது. இதை இங்கு பங்த் என அழைப்பார்கள். காட்டில் இருந்து கிடைக்கும் 
ஒருவகை தேனைப் புளிக்க வைத்து
 இக்கள்ளைத் தயாரிப்பார்கள். இதுதான் எமது பாரம்பரிய பியர். உடம்புக்கு நல்லது,’ என 
அர்த்தம் தொனிக்கக் கண்சிமிட்டிக் கூறினான் சாரதி.
 
 எட்வேட் அதிகம் பேசவில்லை. கூரியகத்தியால் பச்சை இறைச்சியை வெட்டி மிளகாய்தூள் 
உப்பு கலவையில் ஒத்தி எடுத்து சாப்பிடுவதிலே குறியாக இருந்தான்.
 
 இதேபோல ஒரு துண்டை வெட்டி ‘சுவைத்துப்பார்’ என சாரதி என்னிடம் தந்தான். பச்சை 
இறைச்சி ‘சளசள’ வென இருந்ததேயன்றி அருவருப்பாக இருக்கவில்லை. இதேபோல யப்பானில் 
பச்சை மீன் துண்டுகளை மகி(Magi) சோஸில் தொட்டு, கடற் சாதாளையுடன் 
சாப்பிட்டிருக்கிறேன். இப்படியான நேரங்களில் ஜேர்மனியில் எனக்கு இரசாயனம் கற்பித்த 
ஜேர்மன் பேராசிரியர், தனது விரிவுரைகளில் சொல்வது ஞாபகம் வரும். ‘All organic 
matters are edible’ என்பதுதான் அவர் சித்தாந்தம்!
 
 உண்மைதான்! இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது உணவு பற்றாக்குறையினால் ஜேர்மனியில் 
பூனைகளை கொன்று தின்றதாக பேராசிரியர் கூறுவார். முயல் சாப்பிடும் நாம் பூனை 
சாப்பிடக்கூடாதா? பூனையும் முயலும் ஒரே குடும்ப விலங்குகள் அல்லவா? வன்னியிலே 
உடும்பு இறைச்சியின் ருசியை எவ்வளவு சிலாகிக்கின்றோம். அவுஸ்திரேலியாவின் வடமாநில 
பிரதேசத்தில், இன்றும் முதலை இறைச்சி உணவு விடுதிகளில் கிடைக்கும். உடும்புக்கும் 
முதலைக்கும் என்ன வித்தியாசம்?
 
 பச்சை இறைச்சி எனக்கு தோதுப்படவில்லை என்பதை உணர்ந்த டேவிட் ண்ய்ஞ்ங்ழ்ஹ என 
அழைக்கப்படும் ஒருவகை உணவை
 கொண்டுவரும்படி பரிசாரகப் பெண்ணிடம் சொன்னான்.
 
 சுளகு போன்றதொரு பெரிய தட்டில் தோசை கொண்டு வந்தாள் பணிப்பெண். நாம் வீட்டில் 
தயாரிக்கும், தோசையை விட ஐந்து மடங்கு பெரியது. நம்மூர் தோசையைச்சுற்றி சட்னி, 
சாம்பார், சம்பல் போன்றன வைப்போமே, அதுபோலப் பல கறிகள் வைத்திருந்தார்கள். அதில் 
ஒன்று நம்மூர் பருப்புக்கறி. மற்றய கறிகளுக்கும் மசாலாபோன்ற வாசனைத் திரவியங்கள் 
சேர்த்திருந்தார்கள். எனக்குப் பரிமாறப்பட்ட உணவு பற்றி அதனைக் கொண்டு வந்த 
பணிப்பெண்ணிடம் கேட்டேன்.
 
 “Taff எனப்படும் எதியோப்பிய பூர்வீக (Native) தானியத்தின் மாவைப் புளிக்க வைத்து; 
தோசை போல் வார்த்து ஆவியில் அவிப்பார்கள்’
 என விளக்கினாள். நம்மவர்கள் போல தோசைக் கல்லிலே வார்த்துச் சுடுவதில்லை. 
தோற்றத்தில் நம்மூர் தோசை. சுவையில் இட்லி. இத்தகைய உணவு புதுமையாகப் பட்டது. நான் 
எட்வேட்டைப் பார்த்தேன்.
 
 ‘இத்தயாரிப்பு முறை இந்தியத் தொடர்புகளினால் நம் முன்னோர்கள் அறிந்திருத்தலும் 
சாத்தியம். இதுதான் நமது பாரம்பரிய உணவு. உங்களுக்குச் சோறுபோல’ என எட்வேட் தன் 
அனுமானங் களையும் சேர்த்துக் கூறினான்.
 
 எதியோப்பிய சுதேசிய வாத்தியம் முழங்க, ஆட்டம் துவங்கியது. பெண்கள் தமது தோள்களையும் 
மார்பையும் குலுக்கி ஆடுவது
 அவர்களது ஆட்டங்களில் ஒருவகை. இதைப் பார்க்கவென உல்லாசிகள் கூடுவதாக சாரதி 
சொன்னான். ஒவ்வொரு விடுதியிலும் வெள்ளை நிற பருத்தி நூலாடை அணிந்த, நடன மாதர்கள் 
இருப்பார்கள். மார்பகங்கள் குலுங்குவது துல்லியமாகத் தெரியும்படி அவர்களது உடை 
வடிவமைக்கப்பட்டிருந்தது. நடனப்பெண்கள் உல்லாசிகள் முன் மார்பைக் குலுக்கி 
ஆடினார்கள். ஓர் உல்லாசி பணத்தாளை அவளது ரவிக்கைக்குள் செருகியதும், அடுத்தவரின் 
முன் சென்றாள். இவ்வாறு பணம் சேர்ப்பது பிச்சை எடுப்பது போன்றதல்ல எனத் தோன்றியது. 
அவர்களின் அழகுக்கான அஞ்சலி என்று விளங்கிக் கொண் டேன். நமது கோடம்பாக்கத்துச் 
சினிமாக்காரர்கள் சிலர் இந்த நடனத்தைப் பார்த்திருக்கக்கூடும் என்ற எண்ணம் எனக்கு 
இயல்பாகவே எழுந்தது.
 
 நேரம் நள்ளிரவை நெருங்க, பெண்களால் உணவு விடுதி நிரம்பிவழிந்தது. தொடர்ந்தும் 
இருப்பது உசிதமல்ல என உணர்ந்து
 ஹோட்டலுக்கு திரும்பினோம்.
 
 அடுத்த நாள் காலை நான் பல்கலைக்கழகம் சென்றதும், பாரம்பரிய உணவுவிடுதிக்கு 
சென்றதும், பச்சை இறைச்சி உண்டதும் பல்கலைக்கழகத்தினருக்குத் தெரிந்திருந்தது 
என்பதை அறிந்து கொண்டேன். வாகனச் சாரதி ஓட்டைவாயன் என்பது அப்பொழுதுதான் உறைத்தது.
 
 எதியோப்பிய பேராசிரியர் கடிந்து கொண்டார்! அங்குள்ள பச்சை இறைச்சியில் 
நாடாப்புழுக்களின் முட்டைகள் இருக்கக்கூடும் எனச்
 சொல்லி தயாராக வாங்கி வைத்திருந்த மாத்திரைகளைத் தந்தார். வயிற்றுவலி 
ஏற்படக்கூடும், எனவே தவறாமல் மருந்து
 எடுக்கும்படியும், எதியோப்பியர்கள் இதற்கு பழக்கப்பட்டவர்கள் என்றும் இப்படிப்பட்ட 
இடங்களை இனி தவிக்கும்படியும் அவர் நீண்டதோர் அறிவுரை வழங்கினார்.
 
 பாம்பு தின்னும் ஊருக்கு போனால் நடுமுறி நமக்கு என எங்கள் ஊர் தம்பித்துரை அண்ணர் 
சொல்லுவார். பூனகரி பக்கம் போய் உடும்பு இறைச்சியும் முயல் இறைச்சியும் சுவைத்த 
வரலாற்றை சுவைபட அவர் சொல்லும்போது அவருக்கு வீணீரும் விழும். வன்னிப்பகுதியின் 
இறைச்சிச் சுவை அலாதி யானது. மான் - மரை இறைச்சி வகைகளையுஞ் சேர்த்துக் 
கொள்ளவேண்டும். அது வேறு விஷயம். ஆனால் போகுமிடங்களில் பச்சையாக சாப்பிடுவதில் 
வில்லங்கங்கத்திலே மாட்டிக் கொள்ளும் அபாயம் உண்டு. அபாயங்களை எதிர்கொள்வதுதான் 
வாழ்க்கை என்கிற தத்துவம் இதற்குப் பொருந்துமோ என நான் சித்தித்ததும் உண்டு.
 
 
 5. வரலாறே பாடமாக...
 
 நான் பயணித்த விமானம் சிட்னியை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.
 
 நான் உடல் மெலிந்து திரும்பிக் கொண்டிருக்கிறேனா? இந்தக் கவலையை நான் என் 
மனைவியிடம் விட்டுவிட்டேன்.
 
 என் மனமோ நான் பிறந்த நாடாகிய இலங்கைக்கும் எதியோப் பியாவுக்கும் இடையே தறிபடும் 
பாடனைத்தும் பட்டுக் கொண்டிருந்தது. சமீபத்தில் என் பால்ய நண்பன் பாலன் எனக்கொரு 
கடிதமெழுதியிருந்தான். என் கிராமத்தில் நான் அரிவரி படித்த பாடசாலையில், கிராம 
மக்கள் அனைவரையும் ஒன்று கூடுமாறு ஸ்ரீலங்கா இராணுவம் பணித்ததாகவும், விசாரணையின் 
பின் தன் இரு பிள்ளைகளும் காரணமின்றி கைது செய்யப்பட்டு, கூட்டிச் 
செல்லப்பட்டதாகவும் எழுதியிருந்தான்.
 
 பாலன் தன் கடின உழைப்பினால் யாழ்ப்பாண மண்ணை வளப்படுத்தும் கமக்காரன். அவனது 
பிள்ளைகளும் அவனுடன்
 விவசாயத்திலேயே ஈடுபட்டிருந்தனர். எனக்குத் தெரிந்த வரையில், அவர்கள் மண்ணுக்கு 
வியர்வை சிந்தும் பாட்டாளிகள். நாட்டுக்கு
 இரத்தம் சிந்தும் எந்த இயக்கத்துடனும் ஒட்டோ உறவோ வைத்துக் கொள்ளாத அப்பாவிகள்.
 
 ஏன் இந்த அவலம்...?
 
 எதியோப்பிய அநுபவங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்த இலக்கிய 
வேளையிலே, அதன் வரலாறு குறித்து அழுத்தம் கொடுத்தமைக்கு ஒரு காரணம் உண்டு.
 
 ஆபிரிக்க, ஆசிய, அமெரிக்கக் கண்டங்களிலே குடியேற்ற நாடுகளை நிறுவி, தமது நாட்டின் 
பொருள் வசதிகளைப் பெருக்கிக் கொண்ட,
 ஐரோப்பிய நாடுகள் செய்த அடாவடித் தனங்களினாலும், குளறுபடிகளினாலும் முன்னைய 
குடியேற்ற நாடுகளிலே நிலவும் சோகங்களுக்கு எதியோப்பியா ஓர் ஆய்வுகூட 
எடுத்துக்காட்டு!
 
 இந்த சோகங்களுக்கும் இலங்கையில் தீர்க்கப்படாத இனப்பிரச்சினை என்கிற நீடிக்கும் 
சோகத்திற்கும் ஓர் ஒருமைப்பாடு இருப்பதை நீங்கள் உணருவீர்கள்.
 
 போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது யாழ்ப்பாண இராச்சியம், கண்டி இராச்சியம், 
கோட்டை இராச்சியம் என சுயாதீனமான மூன்று நாடுகளை உள்ளடக்கிய ஒரு தீவாகவே இலங்கை 
விளங்கியது.
 
 போத்துக்கேயர், முதலிலே இலங்கையின் கோட்டை இராச்சியத்தையும், பின்னர் யாழ்ப்பாண 
இராச்சியத்தையும் தமது ஆளுகையின் கீழ்க் கொண்டு வந்தனர். இரண்டு வேறு நாடுகளை ஆட்சி 
செய்வதான நினைவுடனேயே அவர்கள் அவற்றை ஆண்டார்கள். அவர்களைத் தொடர்ந்து ஆட்சி பீடம் 
ஏறிய ஒல்லாந்தரும் சிங்கள நாடு வேறு, தமிழ்நாடு வேறு என்கிற நிலைப்பாட்டினைப் 
பேணியே ஆட்சி செய்தனர்.
 
 நாடுகளை இணைத்தும் பிரித்தும் தீராத உபத்திரவங்களை உருவாக்கிச் சென்றதிலே 
பிரித்தானியர்கள் சூரர்கள்.
 ஐரோப்பாவிலே நடைபெற்ற நெப்போலியன் போர்களின் காரணமாக 1798இல், பிரித்தானியர் 
இலங்கையின் ஒல்லாந்தர் ஆட்சி நிலவிய பகுதிகளைத் தமது ஆட்சியின்கீழ்க் கொண்டு 
வந்தனர். நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டத்தும், பிரித்தானியர் உலக வரைபடத்தை 
மாற்றியமைத்தனர். இதனால் இலங்கையில் ஒல்லாந்தருடைய ஆட்சி நிலவிய பகுதிகள் 
பிரித்தானியக் குடியேற்ற நாடாக மாறியது. மூன்று நூற்றாண்டுகளாக தீவுக்குள் தீவாக 
சுதந்தரம் அநுபவித்த கண்டி இராச்சியத்தையும் 1815இல் கைப்பற்றினர். இதனால் 
முழுத்தீவும் பிரித்தானியரின் ஆட்சி வியாபிக்கலாயிற்று.
 
 1832ஆம் ஆண்டில் பிரித்தானியர், தமது சுரண்டலையும் ஆதாயத்தையும் விஸ்தரிப்பதற்காக 
நிர்வாகச் சீர்திருத்தத்தினைப் புகுத்தினர். மத்திய மலைநாட்டிலே பெருந்தோட்டப் 
பயிர்ச் செய்கையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இலங்கையின் பாரம்பரிய 
எல்லைகளைப் புறக்கணித்து, புதிய மாகாணங்களை உருவாக்கினர். பாரம்பரியத் தமிழர் 
பிரதேசம் என்கிற கோட்பாடு பற்றி அவர்கள் அக்கறைப்படவில்லை. தமது ஆட்சியின் 
நீட்சியும், ஆதாயமான சுரண்டலும் என்பனவற்றுக்கு அப்பாற்பட ஆங்கிலேயர் எதைப் 
பற்றியும்
 அக்கறைப்படவில்லை.
 
 இதன் விளைவாகத்தான் இன்று ‘பங்ழ்ழ்ண்ற்ர்ழ்ண்ஹப் ண்ய்ற்ங்ஞ்ழ்ண்ற்ஹ் ஹய்க் 
நர்ஸ்ங்ழ்ங்ண்ஞ்ய்ற்ஹ்’ என்று கிளிப்பிள்ளைப் பாடஞ் சொல்லி, அடுத்தடுத்து ஆட்சி 
பீடத்தில் அமர்ந்த ஸ்ரீலங்காவின் சிங்கள அரசுகள் ‘தமிழர் தாயகம்’ என்கிற 
கோட்பாட்டினை மறுதலிக்கின்றன.
 
 ஆனால், சுதந்திரத்திற்காக நாட்டினை இருகூறாக்க அனுமதித்த இந்திய ஆட்சியாளர், 
பின்னர் பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசம் என்கிற தனிநாடு தோன்றுவதற்குத் துணைநின்ற 
ஆட்சியாளர், முதலாவது அதியுத்தம ஜனாதிபதியாகத் தமிழர் சங்காரத்தில் ஈடுபட்ட 
ஜெயவர்த்தனாவின் சர்வாதிகாரத்திற்கு எதிராக தமிழ்ப் போராட்டக் குழுக்களுக்குக் 
கொம்புசீவி வளர்த்த ஆட்சியாளர், இன்று ‘பிரிக்க இயலாத இறைமையுள்ள ஸ்ரீலங்கா’ என்று 
புதிய கீதை போதிக்க முனைவது அறியாமை. இந்தக் கிளிப்பிள்ளை மந்திரத்தை உச்சரிக்கும் 
இந்திய நாட்டின் வெளியுறவுக் கொள்கை வகுப்போர், எதியோப்பியாவின் வரலாற்றினை 
அசைபோட்டுப் பார்த்தல் நன்றென எனக்குத் தோன்றுகின்றது.
 
 சிட்னி நோக்கிய பறப்பிலே வேறு தோதான பொழுதுபோக்கு எனக்கு வாய்க்கவும் இல்லை.
 
 எதியோப்பியாவுக்கு வரலாற்று ரீதியாகப் பல சிறப்புகள் உண்டு. உலகின் மிகத் தொன்மையான 
தேசிய இனங்களுள் எதியோப்பியரும் இடம் பெறுவர். ஜனத்தொகையில் ஆபிரிக்காவின் 
இரண்டாவது நாடாகும். நான்காம் நூற்றாண்டிலேயே அங்கு கிறிஸ்தவ மதம் பரவிற்று.
 உலகின் இரண்டாவது கிறிஸ்தவ நாடு என்கிற பெருமையும் அதற்கு உண்டு.
 
 எதியோப்பியாவின் வடக்கு அயல்நாடான எரிற்றியாவை இத்தாலி தன்னுடைய குடியேற்ற நாடாக 
மாற்றிக் கொண்டது. அங்கிருந்தவாறு முúஸôலினியின் காலத்தில், இரண்டாவது உலக மகா 
யுத்தத்தின்போது, ஐந்து ஆண்டுகள், எதியோப்பியா இத்தாலியின் குடியேற்ற நாடாக 
மாற்றப்பட்டிருந்தது.
 
 
  
இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் பிரித்தானியர் 
நடத்திய சர்வதேச ராஜதந்திர நடவடிக்கைகளினால், எரிற்றிய மக்களுடைய வரலாறும் சுதந்திரமும் காவு கொடுக்கப்பட்டது. இத்தாலியைத் தண்டிப்பதான எண்ணத்தில் 
எரிற்றியா எதியோப்பியாவுடன்
 இணைக்கப்பட்டு, அந்த இணைக்கப்பட்ட நாட்டுக்கு Haile 
Selassie மன்னராகப் பிரகடனப் படுத்தப்பட்டார். 
ஏகாதிபத்திய நாடுகளின்
 கால்பந்தாகச் சிறிய நாடுகளின் சுதந்திரம் உதைக்கப்பட்டது என்பதற்கு இதைப் 
பார்க்கிலும் சிறந்த உதாரணம் வேண்டுமா?
 
 1974ம் ஆண்டு Marxist Leninist கொள்கை கொண்ட இராணுவ புரட்சி மூலம், மன்னராட்சி 
முடிவுக்கு கொண்டு வரப்பட்டு கொம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நிறுவப்பட்டது. கம்யூனிஸ்ட் 
ஆட்சியைக் குலைக்கவேண்டும் என்கிற ஏகாதிபத்தியங்கள் புது வியூகங்கள் வகுத்தன. இதன் 
சங்கிலித் தொடர்பான நிகழ்ச்சிகளினால் 1993ஆம் ஆண்டு மே மாதம் எரிற்றியா 
சுதந்திரநாடாகப் பிரகடனமாயிற்று. இதன் மூலம்
 பிரித்தானிய ராஜதந்திரம் செய்த பிழைகள் நேர் செய்யப்பட்டது.
 
 பிரித்தானியருடைய இராஜதந்திரக் குளறுபடிகளினாலேதான் இலங்கையின் தமிழர் தாயகம் 
சிங்களரின் இனத்துவ ஏகாதிபத்தியத்திற்குத் தாரை வார்க்கப்பட்டது.
 
 பாலனைப் போன்ற கமக்காரன், தன் மண்ணை வளப்படுத்துவதையே தன் உழைப்பாகவும் 
வாழ்க்கையாகவும் கருதும் விவசாயி, தன் குடும்பத்துடன் நிம்மதியாக வாழும் காலம் 
மீண்டும் இலங்கையின் தமிழ்ப் பகுதிகளுக்கு வருமா? அவனது பிள்ளைகள் இராணுவக் 
கெடுபிடிகளிலும், தடுப்புக் காவல்களிலிருந்தும் விடுபட்டு எப்பொழுது சுதந்திரக் 
காற்றைச் சுவாசிப்பார்கள்?
 
 இந்த எண்ணங்களினால் என் மனம் கனத்தது. சிட்னி நோக்கிய விமானத்தின் பறப்புத் 
தொடர்ந்தது.
 
 [தொடரும்]
 a.kantharajah@uws.edu.au 
ஒட்டாத மண்! - ஆசி கந்தராஜா (சிட்னி) -3. மொழியே உணர்வாக..............உள்ளே
 ஒட்டாத மண்!  2- 
              
              ஆசி கந்தராஜா (சிட்னி) 
2. சாலைகளே சாட்சியாக.........உள்ளே
 ஒட்டாத மண்_ 1: 
              வீடே கோயிலாக...உள்ளே
 |