| ஒட்டாத மண் 
 - ஆசி கந்தராஜா (சிட்னி) -
 
 3. மொழியே உணர்வாக.........
 
 
  எதியோப்பிய 
மலைப்பிரதேசத்தின் எரிற்றியா எல்லையில் அமைந்த கிராமம் அது! அழகான கிராமம். 
அங்குதான் எட்வேட் பிறந்து வளர்ந்தவன். இருப்பினும், படித்ததெல்லாம் கிராமத்தை 
ஒட்டிய Axum என்ற நகரத்தில். கிறீஸ்தவ மிஷனரி பாடசாலையொன்றில், சரித்திரம், 
ஆங்கிலம் ஆகிய பாடங்களை முதன்மைப் பாடங்களாகவும் பிரென்ஞ், ஜேர்மன், லற்றின் ஆகிய 
மொழிகளைத் துணைப்பாடங்களாகவும் கற்றதாகச் சொன்னான். 
 சரித்திர ரீதியாக, எதியோப்பியா அபிசீனியா (Abysinia) என்றழைக்கப்பட்டது. அண்டை 
நாடான எரிற்றியாவை இத்தாலியர் தமது குடியேற்ற நாடாக்கினர். அங்கிருந்து 
எதியோப்பியாவை இணைத்துக் கொள்ள இத்தாலி முயன்றது. இவை பற்றிய பூரண எதியோப்பிய 
வரலாற்று அறிவு அவனுக்கு இருந்ததை
 அவனுடன் பேசிய குறுகிய நேரத்தில் தெரிந்துகொண்டேன்.
 
 எரிற்றியா தனிநாடாவதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அவை அனைத்தும் இலங்கை ஈழப் 
பிரச்சனையிலும் உண்டு. எதியோப்பிய புத்திசாலி இளைஞன் ஒருவன் இதை எப்படிப் 
பார்க்கிறான் என்பதை தெரிந்து கொள்ளவே அவனிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். 
இல்லையேல் விலைமாதர்களுக்கு வாடிக்கை பிடிக்கும் ஒரு ஏஜெண்டிற்கு நான் ஆயிரம் ‘Birr’ 
பணத்தை விட்டெறிந்திருக்க மாட்டேன்.
 
 எதியோப்பியாவில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி 
Amharic. இதுவே எதியோப்பிய அரசால் 
அங்கீகரிக்கப் படட தேசிய மொழி. எரிற்றியாவில் Tigrinya 
என்கிற மொழியே பொதுவழக்கில் உண்டு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தாலிய 
ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்த எரிற்றியா, இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின், 
பிரித்தானியர்களின் நிர்வாகத்துக்குரிய நிலப் பரப்பாக்கப்பட்டது.
 
  
இலங்கையின் தமிழ்ப் பகுதிகள் எவ்வாறு 1832ம் ஆண்டு 
பிரித்தானியரின் நிர்வாக வசதிக்காக சிங்கள பகுதிகளுடன் இணைக்கப்பட்டனவோ, அவ்வாறே 
ஆட்சி வசதிக்காக 1952ம் ஆண்டு பிரித்தானியர்களால் எரிற்றியாவும் எதியோப்பியாவும் 
ஒரே நாடாக இணைக்கப்பட்டன. இது பச்சை மண்ணையும் சுட்ட மண்ணையும் இணைக்கும் விவகாரம்தான்! எரிற்றிய மக்கள் எதியோப்பிய தேசியத்தில் 
கரைந்து போகத் தயாராக இல்லை. இதனால் இனப்போர் எழுந்தது. இரண்டு பக்கமும் உயிர் 
சேதம் பெருகியது.
 
 எட்வேட் பிறந்து வளர்ந்த எரிற்றிய எல்லையோர மலைப் பிரதேசத்தில் கிளர்ச்சிக்கான 
திட்டங்கள் தீட்டப் பட்டதாக நான் ஊடகங்களில் வாசித்திருக்கிறேன். இதுபற்றி அவனிடம் 
கேட்டேன்.
 
 சிறிது நேரம் மௌனமாக இருந்தவன், தன்முன்னே மேஜையில் இருந்த கோப்பியை ஒரே மடக்கில் 
குடித்த பின்னர் பேசத்துவங்கினான். ‘எரிற்றியாவில் இருந்துகொண்டே எதியோப்பியாவை 
அடிமைப்படுத்த இத்தாலி முயன்றது. காடுகளும் தொடர்மலைகளும் நிறைந்துள்ள
 எதியோப்பியாவில் மலைவாழ்க்கைக்கு நன்கு பழக்கப்பட்ட எதியோப்பிய அரசனையும், வில்லும் 
அம்பும் ஏந்திய அவரது படையையும் வெல்ல முடியவில்லை. 1936ம் ஆண்டு தொடக்கம் 1941ம் 
ஆண்டுவரை இத்தாலிய ஆதிக்கம் எதியோப்பியாவின் சில பிரதேசங்களில் இருந்த போதிலும், 
எதியோப்பியா யாருக்கும் என்றுமே அடிமைப்பட்ட நாடாக இருந்ததில்லை. என் தந்தை 
வழிப்பாட்டனார் இத்தாலியர் களுடன் தீரமுடன் போர் புரிந்து
 மாண்டதாக என் தந்தை கூறுவார்.’
 
 இதனைக் கூறியபோது எட்வேட் பெருமிதமடைந்தான். அது நியாயமானதும் கூட!
 
 ‘உன் தந்தை இப்போதும் நீ பிறந்த கிராமத்தில்தான் இருக்கிறாரா?’ எனக் கேட்டேன்.
 
 ‘அவரும் கொல்லப்பட்டு விட்டார்,’ என்றவன் சில விநாடி மௌனத்தின்பின் மீண்டும் 
தொடர்ந்தான்.
 
 ‘இத்தாலிய ஆதிக்கத்துக்கெதிராக எதியோப்பியர்கள் தீரமுடன் போரிட்டார்கள். இங்கேதான் 
பிரித்தானியர்கள் வழமை போல தங்கள் மூக்கை நுழைத்துக் கொண்டார்கள். எதியோப்பிய 
வீரர்களுக்கு உதவுகிறேன் பேர்வழி எனக்கூறிக் கொண்டு போரில் இத்தாலியர்களை 
வெற்றிகொண்டு இரு நாடுகளையும்
 இணைத்தார்கள்’ எனக்கூறி நிறுத்தினான்.
 
 ‘அங்கேதான் பாரிய வரலாற்றுத் தவறு ஏற்பட்டது’ எனப் புத்தகங்களிலே படித்த என் 
ஞானத்தை அவிழ்க்கத் துவங்கிய பொழுது சைகை மூலம் என்னை நிறுத்தி, அவன் தொடர்ந்தான்.
 
 ‘நீங்கள் சொல்வது உண்மைதான். இத்தாலியர்களை வெளியேற்றுவதில் எதியோப்பியர்களும் 
எரிற்றியர்களும் சேர்ந்தே போரிட்டார்கள். பிரித்தானியர்களால் இரு நாடுகளும் 
இணைக்கப்பட்டபின், எதியோப்பியர்களின் ஆதிக்கம் மேலோங்க, எதியோப்பியர்களுக்கும் 
எரிற்றியர்களுக்குமிடையில் போர் எழுந்தது...’
 
 ‘இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு. இதே நிலைமை தான் எனது தாய் நாடாகிய 
ஸ்ரீலங்காவிலும் நடந்தது. என் தந்தையர் நாடான தமிழ் ஈழத்தைச் சிங்கள நாட்டுடன் 
இணைத்த ஆங்கிலேயர் சிங்கள இனத்தின் மேலாதிக்கத்திற்கு வழிவகுத்தார்கள்,’ என்றேன்.
 
 ‘உங்கள் நாட்டுப் பிரச்சனைபற்றி நான் படித்த மிஷன் பாடசாலையில் மதபோதகர் சொல்லக் 
கேள்விப்பட்டிருக்கிறேன். சிங்களம் அங்கு அரச மொழியாக்கப்பட்டது போலவே, இங்கும் 
இணைக்கப் பட்ட இரண்டு நாட்டுக்கும் எதியோப்பிய மொழியாகிய Amharic பொது மொழியாக 
பிரகடனப்படுத்தப் பட்டது.’
 
 
  ‘எதியோப்பியாவுடன் 
ஒப்பிடும்போது எரிற்றியா பரப்பளவில் மட்டுமல்ல, மக்கள் தொகையிலும் மூன்றில் ஒரு 
பகுதிக்கும் குறைவானது. எரிற்றியர்களின் மொழி, கலாசாரம் ஆகியன எதியோப்பியர் களிலும் 
பார்க்க முற்றிலும் வேறுபட்டன. செயற்கையான அரசியல் இணைப்பு ஓர் இனத்துக்கு 
இழைக்கப்படும் அநீதியல்லவா? கொதிக்கும் எண்ணைக் கொப்பரையிலிருந்து தப்புவதற்கு 
நெருப்பில் குதித்த கதை போல இத்தாலியர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு எதியோப்பியரின் ஆதிக்கத் திற்குள் 
சிக்கி எரிற்றியர்கள் விழித்தார்கள்’ என்றேன்.
 இதைச் சொல்லும் பொழுது ஈழத்தமிழர் அநுபவிக்கும் துயர்களை நினைவுபடுத்திக் கொண்டதால் 
உணர்ச்சி வசப் பட்டேன்.
 
 ‘நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். எரிற்றியர்களால் மொழித்திணிப்பை ஏற்றுக்கொள்ள 
முடியவில்லை. எரிற்றிய மக்கள் Amharic மொழியைப் பேசவும் பயிலவும் மறுத்தார்கள். 
இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட கிளர்ச்சியில் 1993ம் ஆண்டு ‘எரிற்றிய மக்கள் விடுதலை 
இயக்கம்’ எரிற்றியாவை
 தன்னிச்சையாகத் தனிநாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டது...’
 
 ‘அந்த வரலாற்றைக் கொஞ்சம் விபரமாகச் சொல்லேன்’ என ஆவலுடன் கேட்டேன்.
 
 ‘1974ஆம் ஆண்டில் எதியோப்பியாவில் சோவியத் சார்புடைய கம்மியூனிச சித்தாந்தத்திற்கு 
ஆதரவானவர்களுடைய கையோங்கி, இராணுவப் புரட்சி மூலம் சோவியத் யூனியனுக்கு விசுவாசம் 
தெரிவித்த இராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
 
 ‘உலகின் பழமைவாய்ந்த கிறிஸ்தவ மதத்தை ஏற்றிருந்த எதியோப்பிய மக்களால், கம்யூனிச 
சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இதனால் ‘எதியோப்பிய மக்கள் புரட்சிகர 
இயக்கம்’ எதியோப்பியாவில் தோன்றியது. எதிரிக்கு எதிரி நண்பன் அல்லவா? எரிற்றிய 
விடுதலைக்குப் போராடிய
 ‘எரிற்றிய மக்கள் விடுதலை இயக்கத்துடன்’ கம்யூனிச இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட 
ஆரம்பிக்கப்பட்ட ‘எதியோப்பிய மக்கள் புரட்சிகர இயக்கம்’ சேர்ந்து கொண்டது...’
 
 இந்த இடத்தில் எட்வேட் ஒரு முத்தாய்ப்பு வைத்தான். ஏன் பேச்சை நிறுத்தி எழுந்தான் 
என்பது விளங்க வில்லை. சிரித்தவாறே சங்கடத்துடன் சிறுநீர் கழித்து வருவதாகக் கூறி 
சென்றான்.
 
 எதியோப்பிய மக்கள் விடுதலை இயக்கம் போன்றே இலங்கையிலும், ஜே. வி. பி என்கிற மக்கள் 
விடுதலை முன்னணி, சிங்கள விடுதலைக்கென்று ஆரம்பிக்கப்பட்டு தற்போது இனவாத சக்தியாக 
வளர்ந்திருப்பதை நினைவுபடுத்திக் கொண்டேன்.
 
 எட்வேட் ஒரு சிகரெட்டை பற்ற வைத்த வண்ணம் மீண்டும் என்முன்பாக வந்தமர்ந்தான்.
 
 ‘இரண்டு இயக்கங்களும் சோவியத் சார்புடைய இராணுவ ஆட்சிக்கு எதிராக போர் 
புரிந்தார்கள். மிகுதியைச் சொல்லு...’ என விட்ட இடத்தை நினைவுபடுத்தி அடி எடுத்துக் 
கொடுத்தேன்.
 
 ‘சோவியத் சார்பு இராணுவ ஆட்சி, சர்வதேச முதலாளித் துவத்துக்குத் தோதுப்படவில்லை. 
முதலாளித் துவ நாடுகள், இரண்டு விடுதலை அமைப்புகளும் இணைந்து போராடுவதை 
சாத்தியப்படுத்துவதில் வெற்றி பெற்றன. இதனால் சோவியத் சார்பு ஆட்சி வீழ்ந்தது. இந்த 
போராட்டத்தின் தொடர்ச்சியாக
 எரிற்றியர்கள் 1993ம் ஆண்டு எரிற்றியாவை தனிநாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள்’ 
என்றான். அந்த நிகழ்ச்சி களை அசைபோடுபவனைப் போல் எட்வேட் மௌனம் சாதித் தான்.
 
 ‘இந்தப் பிரிவினைப் பிரகடனத்திற்குப் பின்னர் அமைதி நிலவியதா?’ எனக் கொக்கி போட்டு 
அவனை மீண்டும் சம்பாஷனைக்குள் இழுத்தேன். ‘அதுதான் இல்லை. 1998ம் ஆண்டு மீண்டும் 
எதியோப்பிய எரிற்றிய எல்லைப்பிரச்சினை துவங்கியது. அந்த கிளர்ச்சியில் தான் என் 
தந்தை படுகொலை செய்யப்பட்டார். எரிற்றிய எல்லையில், எதியோப்பியாவுக்குள் 
எரிற்றியர்கள் கணிசமான அளவில் வாழ்ந்தார்கள். அவர்கள் அனைவரும் இரவோடு இரவாக உடுத்த 
உடுப்புடன் எரிற்றியாவுக்கு துரத்தப்பட்டார்கள். அவர்களுள் என் காதலியும் ஒருத்தி. 
அவளை இன்றும் நான் மனப்பூர்வமாகக்
 காதலிக்கிறேன். அவளை இனிப்பார்ப்பது சாத்தியமாகுமென நான் நினைக்கவில்லை...’ என்றான் 
பரிதாபமாக.
 
 ‘உன் தாயார் எங்கிருக்கிறார்? உனக்கு சகோதரர்கள் இல்லையா?’
 
 ஏனைய உறவுகளை நினைவுபடுத்தல், காதலியை மறப்பதற்கான வடிகாலாய் அமைதல் கூடுமென்கிற 
எண்ணத்தினாலுங் கேட்டேன். இப்பொழுது அதை மீள நினைத்துப் பார்க்கையில் விடுப்புக் 
கேட்கும் ‘யாழ்ப்பாணம்’ என்னுள் வாழ்வதாகவுந் தோன்றுகின்றது.
 
 ‘தொழில் நிமிர்த்தம் என் தாய் எரிற்றியாவில் இருந்து எதியோப்பியாவின் எல்லையோரம் 
உள்ள Axum 
நகரத்துக்கு குடிபெயர்ந்ததாக அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் ஒரு 
மருத்துவத் தாதி. என் தந்தை இத்தாலியில் பயிற்சி பெற்ற பிரபல மருத்துவர். என் 
தந்தையின் தாதியாகப் பணிபுரிந்த போது இருவரும் காதலித்து மணம்முடித்துக் 
கொண்டார்களாம்!
 
 இந்தத் தகவல்களை கூறியபின், எட்வேட் தன் இரு கைகளாலும் முகத்தை பொத்தியவாறு மௌனமாக 
இருந்தான். பின்னர் மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து தன்னைச் சுதாகரித்துக் 
கொண்டான்.
 
 அவன் கதை தொடர்ந்தது.
 
 ‘கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ உதவிபுரிந்ததாக குற்றம் சாட்டி, சோவியத் சார்பு 
எதியோப்பிய இராணுவம், என் தந்தையை சிறையில் அடைத்தது. பல மாதங்களின் பின்னர் அவர் 
அங்கேயே கொல்லப்பட்டதாகத் தகவல் வந்தது.
 
 ‘தந்தையை கொலை செய்த ஆத்திரத்தில் எனது தாய் எரிற்றிய மக்கள் விடுதலை 
இயக்கத்துக்குத் தாதியாக பணி புரிந்திருக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் ஓர் இரவு 
இராணுவம் என் தாயையும், அவருடன் வசித்த அனைவரையும் அவர்களுடைய வீட்டிலேயே சுட்டுக் 
கொன்றது.
 ‘நான் மிஷனரி பாடசாலையில் விடுதியில் தங்கியிருந்ததால் தப்பிப் பிழைத்தேன். 
அதன்பின் எங்கெல்லாமோ சுற்றித் திரிந்து இப்போது அடிசபாபாவில் வாழ்கிறேன். நான் 
படிக்க வேண்டும் அதற்கு பணம் வேண்டும். அதற்காகத்தான் இந்தத் தொழில் 
ஈடுபட்டுள்ளேன்’ என்றவன் சிகரெட்டை வெறுப்புடன்
 நூர்த்து எறிந்தான்.
 
 அந்த நேரத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் நாமிருந்த கோப்பிக் கடைக்குள் நுழைந்து 
எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு பிரசுரத்தை விநியோகித்தார்கள். உணவு விடுதிகள், 
கேளிக்கை நிலையங்கள் எனப் பொது இடங்களில் அடிக்கடி இவர்கள் இத்தகைய பிரசாரங்களில் 
ஈடுபடுவார்கள். இதற்கு ஐக்கிய நாடுகள் சபை உலகவங்கியூடாக பெருந்தொகை பணத்தைச் செலவு 
செய்கிறது. இருப்பினும் எயிட்ஸ் நோய் எதியோப்பிய
 சௌக்கியத்துக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது.
 
 எட்வேட் துண்டுபிரசுரத்தை வாங்கவில்லை. வேண்டாம் என தலை அசைவின் மூலம் 
தெரிவித்தான். அதிதீவிர பிரசாரத் தினால் ஏற்பட்ட சலிப்பாகக்கூட இருக்கலாம்.
 
 ‘நீ ஒரு வைத்திய பரம்பரையில் பிறந்து வளர்ந்தவன். ‘எயிட்ஸ்’ இங்கு பாரிய பிரச்சனை 
என்பது உனக்குத் தெரியும். இருப்பினும் கேளிக்கை விடுதிக்கு ஆட்களைக் கூட்டிச் 
செல்வது தவறாக தெரிய வில்லையா?’ அவனுடைய செயலுக்கு அர்த்தம் தேட விழைந்ததினால் 
இவ்வாறு கேட்டேன். ‘தவறுதான். எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் கனவு, 
சரித்திரபாடத்தில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று ஒரு பேராசிரியராக வேண்டுமென்பதே. 
அதற்குப் பணம் வேண்டும். முன்பின் தெரியாத, எனக்கென யாருமற்ற இந்த அடிசபாபா 
நகரத்திலே, அன்றாடம் உயிர் வாழ்வதே ஒரு போராட்டமாக உள்ளது. போரின் தாக்கத்தினால் 
நல்லொழுக்க விதிகள் செத்துவிடுகின்றன...’
 
 ‘உனக்குத்தான் பல மொழிகள் தெரிகிறதே. இந்தத் தகைமையை வைத்து நல்ல வேலை என்று தேடிக் 
கொள்ள முடியாதா?’
 
 ‘நண்ழ், நீங்கள் வாழும் உலகம் வேறு; ஆபிரிக்கா வேறு. இங்கு வேலை எடுப்பதானால் 
‘சிபார்சு’ வேண்டும். யாராவது பிணை நிற்கவேண்டும். முன்பின் தெரியாத இந்த நகரத்தில் 
எனக்கு பிணை கொடுக்க யார் வருவார்கள்? நான் பார்ப்பது நியாயமான தொழிலல்ல என்பது 
எனக்கு நன்றாகவே தெரியும்.
 இருப்பினும் எனக்கு வேறு வழி தெரியவில்லை.
 
 மதியம் தாண்டிவிட்டது என்பதை சடுதியாக உணர்ந்தேன். பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் 
என்னை மதிய உணவுக்கு அழைத்திருந்தார். எதியோப்பியாவுக்கு வந்த நாள்முதல், 
மேற்கத்திய உணவுவகைகளையும், மேல்நாட்டுப் பாணியில் தயாரிக்கப்பட்ட ஒரு சில 
எதியோப்பிய உணவுகளையும் மாத்திரம் சுவைத்திருந்தேன்.
 
 
  சம்பிரதாயமான அசல் எதியோப்பிய உணவு உண்பதற்கும், 
அவர்களுடன் ஒருவனாய் பழகுவதற்கும் நான் மிகவும் விரும்பினேன். பல்கலைக்கழகத்தினர் 
தனியோர் உலகில் வாழப் பழகிக் கொண்ட வர்கள். அது புத்தஜீவித உலகம் என அவர்கள் கற்பனை 
செய்து வைத்திருக்கும் உலகம். அவர்கள் எதியோப்பியாவின் மறுபக்க வாழ்க்கை ஒன்று 
இல்லாததுபோல நடித்தார்கள். எட்வேட் பேசிய பல விஷயங்கள் உண்மையானவை என்பதை அவன் உடல்மொழியும் கண்களும் சொல்லின. எனவே, அந்த மறுபக்கத்தைத் 
தரிசிப்பதற்கு எட்வேட்டின் துணையை நாடலாம் எனத்
 தோன்றியது.
 
 ‘இன்று இரவு என்னை எதியோப்பிய உணவு வகைகள் தரும் ஒரு விடுதிக்குக் கூட்டிச் 
செல்வாயா?’ எனக் கேட்டேன். அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ‘நாலுமணிக்கு உங்கள் 
ஹோட்டல் வாசலில் காத்திருப்பேன்’ என உறுதி தந்து விடை பெற்றான்.
 
 [தொடரும்]
 a.kantharajah@uws.edu.au 
ஒட்டாத மண்_ 1: 
              வீடே கோயிலாக...உள்ளேஒட்டாத மண்!  - 
              
              ஆசி கந்தராஜா (சிட்னி) 
2. சாலைகளே சாட்சியாக.........உள்ளே
 |