| 
ஒட்டாத மண்!
 ஆசி கந்தராஜா (சிட்னி)
 
 1. வீடே கோயிலாக...
 
 
  ‘ஏன் 
பிள்ளை, இவன் எதியோப்பா போறானாம்? அங்கை தானே பஞ்சம் பட்டினியாலே சனம் சாகுதெண்டு 
பேப்பரிலே போடுறாங்கள்’ என்று என் மனைவியைக் கேட்டார் அம்மா. 
 ‘அதுதான் மாமி நல்லது. அங்கைபோய் எண்டாலும் கொஞ்சம் மெலிஞ்சு வரட்டன்’ எனப் 
பதிலளித்தாள் மனைவி.
 
 எனது எடை அதிகம் என்பது என் மனைவியின் அடிமனக் கவலை. மாரடைப்புக்கு இது வழி 
வகுக்கும் எனக் குடும்ப டாக்டரும் சில
 சந்தர்ப்பங்களிலே பயமுறுத்தி இருந்தார்.
 
 எனது உடம்பு மெலிவதற்கு என் மனைவி பல நடவடிக்கைகளை முன்னெடுத்துப் பார்த்தும் 
விட்டாள். என் போக்கு அவளுக்கு
 நன்றாகவே தெரியும். இருபத்தைந்து வருட தாம்பத்திய வாழ்க்கை. ‘மனுசன் றோட்டிலே 
இறங்கி நடக்காது என விலையுயர்ந்த ‘றெட்மில்’ மெஷினையும் வாங்கி வீட்டில் வைத்தி 
ருந்தாள். அதில் நடந்து உடற்பயிற்சி செய்தால் நேரம், தூரம், வேகம் மட்டுமல்லாது 
எவ்வளவு கலோரி சக்தி எரிக்கப்பட்டிருக்கிறது என்ற கணக்கையும் துல்லியமாகச் சொல்லும் 
என்று அந்த மெஷின் பற்றிய மான்மியத்தையும் அவள் சொல்லி முடித்தாள். அவளுடைய மனம் 
கோணாதிருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நாள்கள் அதிலே மூச்சிரைக்க நடந்தும் 
ஓடியும்
 பார்த்தேன். மனைவி அருகில் நின்று வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் தன்னாலியன்ற 
ஊக்கப்படுத்தல்களை மேற்கொண்டாள். எனது ஊளைச் சதை ஓடும் வேகத்துக்கு ஏற்ப மேலும் 
கீழும் குலுங்குவதைப் பார்த்து பிள்ளைகள் சிரித்தார்கள்.
 ஐந்தில் வளையாதது ஐம்பதில் எப்படி வளையும்? ‘றெட்மில்’ பயிற்சி என் உடம்புக்கு 
ஒத்துவரவில்லை, நெஞ்சு நோகுது என்று சாக்கு போக்கு சொல்லத் துவங்கினேன். நெஞ்சுவலி 
என்றவுடன் மனைவி அரண்டுவிட்டாள். பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் றெட்மில் 
பயிற்சியின்போதுதான் மயங்கி விழுந்து உயிரைவிட்டான். இந்த சமயத்தில் அந்தச் 
சம்பவத்தின் ஞாபகமூட்டல் எனக்கு கைகொடுத்தது. இப்போது ‘றெட்மில்’ மெஷின் 
தீண்டப்படாது பழைய பத்திரிகைகள் சஞ்சிகைகள் அடுக்கி வைக்கும் களஞ்சியமாகப் 
பயன்படுகிறது. இந்த வர்த்தமானத்தினால் எரிச்சலடைந்திருந்த மனைவிக்கு நான் 
மேற்கொள்ளவிருந்த எதியோப்பிய பயணம் மிகுந்த மகிழ்ச்சியைக்
பல்கலைக்கழகப் பணி நிமிர்த்தமாக நான் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களிலே, 
எனக்குக் கிடைக்கும் பகட்டான உபசரிப்பு மனைவிக்கு தெரியாது. அதைப்பற்றி நான் 
விவரித்தால் நான் புளுகுவதாகவே நினைத்துக் கொள்வாள்.
 
 பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே ‘சொகுஸôன’ ஹோட்டல் ஒன்றை ஒழுங்கு செய்திருப்பார்கள். 
என் ‘கொலஸ்ரோல்’ நிலைமைக்கு ஆகாது எனக் காரணம் காட்டி எனக்கு வீட்டில் 
மறுக்கப்படும் வெண்ணெய், முட்டை, பேக்கன் முதலான, நான் விரும்பி உண்ணும் சகல 
உணவுவகைகளும் அங்கு தங்கு தடையின்றிக் கிடைக்கும். என் பயண அநுபவங்களை வீட்டிலே 
சொல்லும்பொழுது, உணவு விஷயங்களிலே நான் தாராளமாக நடந்த செய்தியைத் தணிக்கை 
செய்துவிடுவேன்.
 
 உடல்மெலிந்து புதிய கோலத்தில் திரும்ப வேண்டுமென விமானநிலையத்தில் வாழ்த்துச் 
சொல்லி என்னை வழியனுப்பி வைத்தாள் மனைவி.
 
 சிட்னியிலிருந்து துபாய் வரை சிங்கப்பூர் விமானம். குறை சொல்ல இடமில்லை. சொகுசான 
பறப்பு. துபாயில் ஒரு இரவு தங்கி, அடிசபாவுக்குப் பறக்கவேண்டும். மறுநாள் காலை 
துபாய் விமான நிலையத்தில் எதியோப்பியா செல்வதற்கான ரிக்கற் கௌண்டரை 
தேடிப்பிடிப்பதற்குள் காவு தீர்ந்து விட்டது. வஞ்சகம் செய்யாமல் துபாய் 
விமானநிலையத்தை மிக விசாலமாகவே கட்டியிருந்தார்கள். பாலைவனத்தில் நிலத்துக்கா 
பஞ்சம்?
 
 பொதிகள் நிறுக்கும் பெல்டில் என் பெட்டிகளை வைத்தேன். விரிவுரை நிகழ்ந்தத் தேவையான 
குறிப்புக்கள், செய்முறை உபகரணங்கள், புத்தகங்கள், விரிவுரைகள் பதிவுசெய்யப்பட்ட 
குறுந்தட்டுக்கள் என ஒரு சூட்கேஸ் நிரம்பியிருந்தது. இன்னு மொரு சூட்கேசில் எனது 
உடுப்புகள். செய்முறை உபகரணங்கள் இருந்த பெட்டியைக் காட்டி இது உடையாது பத்திரமாக 
போய் சேரவேண்டும், எனவே, அதற்கு 
‘Fragile’
 என்கிற ‘லேபல்’ ஒன்றை ஒட்டும்படி 
சொன்னேன். என்னை ஏற இறங்க பார்த்த பணியாள் ‘நீங்கள் பொதிகளை ஒப்படைக்கலாம். ஆனால் 
அவை இன்று உங்கள் விமானத்தில் வராது’ என்றான் சர்வசாதாரணமாக.
 
 ‘நாளை நான் பல்கலைக்கழகத்தில் விரிவுரை துவங்கவேண்டும். அதற்கு இவை தேவை. எனது 
ரிக்கற்றில் குறிப்பிடப்பட்ட நாற்பது
 கிலோகிராம் பொதி என்னுடன் வரவேண்டியது தானே முறை’ எனச் சட்டம் பேசினேன். நான் பேசிய 
எதையும் அவன் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. ரிக்கற்றை கிழித்து 
பாஸ்போட்டையும் போடிங்காட்டையும் என் முன்னே வைத்தான். ‘எனது பொதி என்னுடன் 
வருமல்லவா?’ எனக்கேட்டு, நான் அரச விருந்தாளி எனவும் சொன்னேன்.
 
 ‘முயன்றுபார்க்கிறேன்’ என்றவன் அடுத்த பயணியின் பொதிகளைக் கவனிக்கத் துவங்கினான்.
 
 பணி நிமிர்த்தம் அடிக்கடி நான் ஆபிரிக்க நாடுகள் உட்பட, பல்வேறு நாடுகளுக்கும் 
சென்றிருக்கிறேன் ஆனால் இந்த பயண அநுபவம் எனக்கு முற்றிலும் புதுசு. பொதிகள் வருமா 
வராதா என்ற மனக் குழப்பத்துடன் இருக்கையொன்றில் அமர்ந்தேன்.
 
 விமான கௌண்டர் வரிசையில் என் பின்னே நின்றவன் ஜேர்மன் நாட்டவன். இளைஞன். தனது 
பொதிகளைக் கையளித்த பின் என்
 அருகே வந்தமர்ந்து, ‘எதியோப்பியாவுக்கு முதல் பயணமா?’ எனக் கேட்டான்.
 
 பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டோம். ஜேர்மன் பல்கலைக்கழகங்களில் நான் 
படித்தவன் என்று அறிந்ததும் மிக
 அந்நியோன்யமாக ஜேர்மன் மொழியிலேயே உரையாடினான். மொழி எங்களை நண்பர்களாக்கியது. தான் 
ஜேர்மன் அரச உதவி வழங்கும் திட்டத்தில், எதியோப்பியாவில் தொழில் நுட்ப உதவி 
வழங்குவதாகவும், இதனால் அடிக்கடி இவ்வாறு அங்கு பறப்பதாகவும் தகவல் சொன்னான். ‘நாளை 
விரிவுரை என்று நீ சொல்லக்கேட்டேன். அப்படியென்றால் மாற்று ஏற்பாடுகளைச் செய்து 
கொள். எங்களுடைய பொதிகள் நிச்சயம் இன்றைய எமது விமானத்தில் வந்து சேராது’ என்ற 
செய்தியைச் சொல்லி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினான்.
 
 ‘ஏன் அப்படி? சர்வதேச விமான விதிகளின்படி பொதிகள் பயணிகளுடன் வரவேண்டியதுதானே முறை’ 
என்றேன் சற்று உரத்த தொனியில்! எனது ஆவேசத்தைக் கண்டு புன்முறுவல் பூத்த அவன், 
‘பதற்றப்படாதே. இந்த வழித்தடத்தில் இது சர்வசாதாரணம். விமானத்தில் பயணிகளின் 
பொதிகளுக்குப் பதிலாக துபாயில் இருந்து வணிகப் பொருள்கள் வந்துசேரும். அதிர்ஷ்டம் 
இருந்தால் நாளைக்கே எமது 
பொதிகள் வந்து சேரலாம்’ என நடைமுறை விபரம் சொன்னான்.
 
 தகவல் அறிந்து மலைத்துப்போய் மௌனமாக இருந்தேன். தனது கைப்பையிலிருந்த உல்லாசப் 
பிரயாணிகளுக்கான தகவல் கையேட்டை எடுத்து என்னிடம் தந்து, ‘அதிகம் யோசியாதே, இது 
வழமையான சங்கதிதான். பொதிகள் வரும்வரை ஊரைச் சுற்றிப்பார். பார்க்கவேண்டிய அழகான 
நாடு. மக்கள் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகுவார்கள். ஆனால் ஆழம் தெரியாமல் 
காலை விட்டு விடாதே’ எனக்
 கண்களைச் சிமிட்டினான்.
 
 அடிசபாபா விமான நிலையத்தில் இறங்கி கடவுச் சீட்டுச் சோதனைக்காக வரிசையில் நின்றோம். 
எந்த அவசரத்தையும் காட்டிக்கொள்ளாது அதிகாரிகள் நிதானமாகவே பணிபுரிந்தார்கள். 
வந்தவர்களுடன் சிரிக்கவும் பேசவும் நிறைய நேரம் எடுத்துக் கொண்டார்கள்.
 
 விமான நிலையமெங்கும் புதிய சீமெந்தின் மணம் நிறைந்திருந்தது. அந்த விமான நிலையம் 
உதவி வழங்கும் நாடுகளின் உதவியுடன் கட்டப்பட்டதாகவும், நாட்டின் தற்போதைய இயக்கம் 
பெரும்பாலும் வெளிநாட்டு உதவியிலேயே தங்கியிருப்பதாகவும் வரிசையில் நின்ற நேரத்தை 
வீணாக்காமல் எதியோப்பிய பொருளாதாரம் பற்றி ஜேர்மன் இளைஞன் குட்டிப் பிரசங்கம் 
செய்தான்.
 
 அவனுடைய எதிர்வுகூறலின்படி பொதிகள் வந்து சேரவில்லை. இருப்பினும் சில பொதிகள் 
அங்குள்ள பெல்டில் சுழன்று கொண்டிருந்தன. யாருடைய பொதிகள் இவையெனக் கேட்டேன்.
 
 ‘இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு வந்த பயணிகளுடையதாக இருக்கலாம்’ என்றவன் 
பிறிதொரு இடத்துக்கு என்னை அழைத்துப் போனான்.
 
 விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமாக நீண்டதொரு ஓடை. அங்கே ஆயிரத்துக்கு மேற்பட்ட 
செம்மண் புழுதிபடிந்த சூட்கேஸ்கள் நிரை நிரையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
 
 ‘உனது பொதிகளும் உனக்காக ஒருநாள் இப்படிக் காத்திருக்கும். நாளை முதல் தினம் தோறும் 
இவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்’ எனச் சர்வசாதாரணமாக எவ்வித உணர்ச்சியும் 
இன்றிக் கூறினான்.
 
 
  உள்ளூர்வாசிகள் 
தமது பொதிகள் வராததையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை. தமது கைப்பைகள் சகிதம் 
விமானநிலையத்தை விட்டு வெளியேறினார்கள். எனக்கோ எனது பொதிகள் வராதது மன 
உளைச்சலையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. ஜேர்மன் நாட்டவன் இதில் அனுபவப்பட்டவன். 
விமான நிலைய அலுவலகமொன்றுக்கு என்னை அழைத்துச் சென்றான். அங்கு அவன் அதிகம் 
பேசவில்லை. எனது ரிக்கற்றையும் பாஸ்போட்டையும் தனதுடன் சேர்த்துக் கொடுத்தான். 
சிறிது நேரம் ஊழியர்கள் தங்களுக்குள் ‘அம்காறிக்’ 
(Amharic)
 மொழியில் பேசிக்கொண்டார்கள். முடிவில் எம் இருவருக்கும் தலா நூறு அமெரிக்க டொலர்கள் 
பெறுமதியான எதியோப்பிய பணம் 
‘Birr’
 கொடுத்தார்கள். 
 என் முகபாவத்தில் எனது வினாவைப் புரிந்துகொண்டவன், பொதிகள் வரும்வரை வெளிநாட்டவர் 
களுக்கு ஏற்படும் அசௌகரியத்துக்கான நட்ட ஈடு இது. அலுவலகத்தில் வந்து கேட்டால் 
மாத்திரமே இது கிடைக்கும்’ எனப் புதுப் புது தகவல்களைச் சொல்லி ஜேர்மன் இளைஞன்
 பிரமிப்பூட்டினான்.
 
 பொதிகள் வந்து சேராததால் மூன்று நாள்கள் எனக்கு விரிவுரை இல்லை. இதனால் சர்வதேச 
அலுவல்களுக்கு பொறுப்பான
 அலுவலகத்தில் நேரத்தை போக்கினேன். அந்த அலுவலகத்துக்கு பொறுப்பான நிறைவேற்று 
அதிகாரி, ஏர்மியாஸ் அபேரா (Ermias 
Abera)
 என்ற இளைஞன், சுறுசுறுப்பாக அங்கு 
பணியாற்றினார்.
 
 வெளியுலக ஊடகங்கள் சொல்வதற்கு எதிர்மாறாக, நான் எதியோப்பியாவில் சந்தித்த அனைவரும் 
திடகாத்திரமாகவும், ‘ரென்சன்’ எதுவும் இல்லாமல் மகிழ்ச்சியாகவும் காணப்பட்டார்கள். 
சிட்னிக்கு சென்றவுடன் இதுபற்றி அம்மாவுக்கும் மனைவிக்கும் சொல்லி எதியோப்பியா 
பற்றிய அவர்களின் எண்ணத்தை மாற்ற வேண்டுமென எண்ணிக் கொண்டேன்.
 
 அபேராவின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அந்த அலுவலகமே, உதவி வழங்கும் நாடுகள் 
கொடுக்கும் நிதியை கையாள்கிறது. இதனால் அந்த அலுவலகம் ரொம்ப பிஸியாக இயங்கிக் 
கொண்டிருந்தது. அபேராவின் மேசைமேல் இருந்த தொலைபேசிகள் மாறிமாறி ஒலித்துக் 
கொண்டிருந்தன. அவற்றுள்பல பன்னாட்டு தொலைபேசி அழைப்புக்கள். அத்துடன் அடிக்கடி பலர் 
வந்து அவரிடம் ஆலோசனை கேட்டுக்
 கொண்டிருந்தார்கள்.
 
 இவ்வளவு பரபரப்புக்கு மத்தியிலும் நான் இருந்த மேசை அருகே அவ்வப்போது வந்து குசலம் 
விசாரித்ததுடன் அன்றைய இரவுச்
 சாப்பாட்டுக்கு தனது வீட்டிற்கு வரமுடியுமா எனவும் கேட்டார். எதியோப்பிய குடும்ப 
கலாசாரத்தை அறிவதில் ஆர்வம் கொண்ட நான் மறுப்புக் கூறாமல் சம்மதித்தேன்.
 
 தொடர்ந்து அபேராவுக்கு அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தன. அவரது கையெழுத்துக்காக பல 
பத்திரங்கள் காத்துக் கொண்டிருந்தன. பார்த்துக் கொண்டிருந்த எனக்கே தலை 
வெடிப்பதுபோல் இருந்தது.
 
 
  ஒருவழியாக அலுவலகம் முடிந்து வெளியே வந்தால் அடிசபாபா நகர் வீதியில் கிறீஸ்தவ 
கோவில் ஒன்றின் திருவிழா ஊர்வலம். திருசொரூபத்தை தொடர்ந்து சென்ற பெண்கள் அனைவரும் தமது பாரம்பரிய உடையான வெள்ளை நிற 
நெசவு நூல் ஆடையொன்றை உடம்பில் சேலை போல் சுற்றியிருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து 
ஆண்கள் நீண்ட வெள்ளை நிற அங்கியில் அணிவகுத்துச் சென்றது பார்க்க அழகாகவும் பக்தி 
பூர்வமாகவும் இருந்தது. எதியோப்பிய மக்களின் அன்றாட வாழ்வில் கிறிஸ்தவ கோவில்கள் 
செலுத்தும் 
பங்களிப்பு பற்றி அபேரா விளக்கமாக சொல்லிவந்தார். பயங்கர வாகன நெரிச்சலூடாக 
அபேராவின் வீட்டுக்கு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
 
 அடக்கமான வீடு. வீட்டின் வெளி விறாந்தையில் யேசுபிரானின் திருச்சொரூபம். அருகே ஒரு 
சிலுவை. வீட்டுக்குள் நுழைவதற்கு
 முன்பாக சிலுவையின்முன் மண்டியிட்டு கண்மூடிச் சில நிமிடங்கள் பிரார்த்தித்தார். 
சகல அதிகாரங்களுடன் நல்ல நிலையில் வாழ்ந்தாலும் நல்ல கடவுள் பக்தியுள்ளவர் என்று 
எண்ணிக் கொண்டேன்.
 
 தந்தையைக் கண்டதும் குழந்தைகள் ஓடோடி வந்தார்கள். மகன் தான் செய்த கணக்கை 
காண்பித்தான். மகள் ஆபிரிக்க
 ஆரம்பபாடசாலையில் தான் வரைந்த படங்களையும் அன்று நடந்த வற்றையும் ஆதியோடு அந்தமாக 
விபரித்தாள். மனைவி
 மகிழ்ச்சியுடன் எதியோப்பிய முறையில் தயாரிக்கப்படட கோப்பியும் பலகாரங்களும் எடுத்து 
வந்தார். அபேராவின் தாயார் சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்து எனக்கு வணக்கம் 
கூறினார். அபேராவும் எல்லோருடனும் கலகலப்பாக பேசி மகிழ்ச்சியாக இருந்தார். தானும் 
மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்வித்தார்.
 
 ‘இவ்வளவு வேலைப் பளுவுக்கு மத்தியிலும் வீட்டில் உற்சாகமாய் இருக்கிறீர்களே? எப்படி 
இது சாத்தியமாகிறது’ எனக் கதையோடு கதையாக கேட்டேன்.
 
 ‘நான் வீட்டிற்குள் நுழைவதற்குமுன்பு சிலுவையின் முன் கண்மூடி பிரார்த்தனை செய்தது 
என்னை ஒரு உண்மையான கிறிஸ்தவனாக காட்டியிருக்கும். ஆனால் அதற்குமேல் இன்னுமொரு 
விஷயமும் உண்டு. எனது மனதை ஒரு நிலைப்படுத்தி கவலை, ரென்ஷன் எல்லாவற்றையும் அப்போது 
சிலுவலையில் அறைந்துவிட்டு வந்துவிடுவேன். அலுவலக ரென்ஷனை வீட்டுக்கு 
கொண்டுவருவதால் வீண் பிரச்சனைதான். வீட்டில் யாரும் இயல்பாகப் பழகமாட்டார்கள். 
வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.’
 
 ‘எதியோப்பியர்கள் வாழ்க்கையை மிகவும் இலகுவாக எடுத்துக்கொள்வார்கள். வீடு என்பது 
சந்தோசமான இருக்கவேண்டிய இடம் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். எமது நாட்டில் 
வறுமை பஞ்சம், வியாதி என பல பிரச்சனைகள் இருக்கலாம். இருப்பினும் உள்ளவற்றுடன் 
திருப்திப் பட்டு மகிழ்ச்சியாக வாழும் கலையில், நாம் வல்லவர்கள்’ என்றார் அபேரா.
 
 உண்மைதான். எதியோப்பியாவில் பஞ்சம் பட்டினி என்பதற்கு அப்பால் நாம் 
கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கின்றன.
 நம்மவர்களுள் எத்தனை பேர் நல்ல ‘மூட்’டில் வீடு திரும்புகிறோம்? 
‘Home, Sweet Home’ (வீடு இனிமையான வீடு) என்கிற நிறைவினை வீட்டுக்குக் கொண்டு 
வந்து சேர்க்கும் குடும்பங்கள் அரிதாகவே எனக்குத் தோன்றுகின்றது.
 
 அபேராவின் வீட்டில் இருந்து எனது ஹோட்டல் அறைக்கு திரும்பும்போது சில எண்ணங்கள் 
என்னை மொய்த்துக் கொண்டன. புலம்பெயர்ந்த நாடுகள் பலவற்றிலே வாழும் இந்துக்கள், 
வரவேற்பறையில் அலங்காரத்துக்காக பெரிய குத்துவிளக்குகளை வைத்திருக்கிறார்கள். 
இந்துக்கள் என்பதற்கான ஓர் அடையாளமாகவும் அந்தப் பெரிய குத்துவிளக்குகள் 
பயன்படுகின்றன. எதியோப்பியாவில் வாழும் அபேராவைப்போல, நாமும் வீடு திரும்பும் 
பொழுது, அந்தக் குத்து விளக்கு களுக்கு முன்னால் தரித்து நின்று, எங்கள் அலுவலக 
‘டென்ஷன்’ அனைத்தையும் வாசலிலேயே விட்டுவிட்டு, இனிய குடும்ப மணத்தை மட்டும் 
வீட்டுக்குள் கொண்டு 
வந்தால் என்ன? எதியோப்பியாவில் இருந்து திரும்பிவந்த பறப்பிலே ஒரு சபதம் எடுத்துக் 
கொண்டேன். வீட்டில் இனி மனைவி பிள்ளைகளுடன் சத்தம் போடக் கூடாதென்று!
 
 [தொடரும்]
 a.kantharajah@uws.edu.au
 
 |