| 
ஒட்டாத மண்!
 ஆசி கந்தராஜா (சிட்னி)
 
 2. சாலைகளே சாட்சியாக...
 
 
  அன்று 
சனிக்கிழமை. அயலிலுள்ள அராபிய நாடுகள் போலல்லாமல், எதியோப்பியாவின் சனிக்கிழமையும் 
விடுமுறை நாளாகும். காலை உணவை முடித்ததும், சற்றே உலாத்த வேண்டும் போல தோன்றியது. 
வீதிக்கு வந்தேன். அது எதியோப்பியாவையும் கென்யாவையும் இணைக்கும் நீண்ட நெடுஞ்சாலை! 
உலக வங்கியின் உதவித் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட்டதாகவும் சாலையின் தூரம், 
ஆரம்பித்த - நிறைவு செய்த தேதிகள், செலவு செய்த தொகை ஆகிய சகல விபரங்களும் தாங்கிய 
விளம்பர பலகையொன்று சாலையோரம் வைக்கப்பட்டிருந்தது. 
எதியோப்பியாவின் நெடுஞ்சாலைகளிலும் வீதிகளிலும் 
இப்படியான விளம்பரப் பலகைகளையும், எயிட்ஸ் விழிப்புணர்வு தட்டிகைகளையும், உதவி 
வழங்கும் உலக நிறுவனங்கள், தங்கள் பெயர் களுடன் சென்னை நகரில் அரசியல் தலைவர்களின் 
டிஜிற்றல் பனர்கள் வைப்பது போன்ற மோஸ்தரில் அடுத்தடுத்து வைத்திருந்தார்கள். 
எதியோப்பியா வறிய நாடு என்றும், பிறநாடுகளின் தயாளத்திலே அது வாழ்கின்றது என்றும் 
அவை மறைமுகமாக முரசறைகின்றனவோ என நான் நினைத்த சந்தர்ப்பங்களும் உண்டு. 
நான் தங்கியிருந்த ஹோட்டல், நெடுஞ்சாலையைக் கடக்கும் 
குறுக்கு வீதியில், அந்தக் குறுக்கு வீதியையே முகப்பாகக் கொண்டு அமைந்திருந்தது. 
நெடுஞ்சாலையில் யப்பானியிலிருந்து இறக்கு மதியான ஆடம்பர வாகனங்கள் அதிவேகமாக ஓடிக் 
கொண்டிருந்தன. 
 
பாதசாரிகள் சர்வசாதாரணமாகக் குறுக்கும் நெடுக்குமாக 
நெடுஞ்சாலையைக் கடந்தார்கள். சந்தியை ஒட்டிய ஓடையில் அழுக்குத்துணிகளுடன் 
ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்த எதியோப்பிய குழந்தைகளை வேடிக்கை பார்த்துக் 
கொண்டு நின்றேன். 
திடீரென ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை துரத்த அது 
நெடுஞ்சாலைக்கு குறுக்காக ஓடியது. சாலையில் வந்த பாரலொறி குழந்தையைக் காப்பாற்ற 
நினைத்து பக்கவாட்டுக்கு திரும்பியதில் எதிரே வந்த மினிபஸ்ஸýடன் நேருக்கு நேர் 
மோதியது. மினிபஸ்ஸில் வந்த பயணிகள் பஸ்ஸþக்குள் நசுங்கிக் கிடந்தார்கள். ‘மரண ஓலம்’ 
என்ற சொல்லின் அர்த்தத்தை அந்த நேரத்தில் அந்த இடத்திலேதான் நான் பூரணமாக 
உணர்ந்துகொண்டேன். 
விபத்துக்குள்ளான பார லொறியில் சோளம் மா ஏற்றி 
வந்திருந்தார்கள். சோளம் மாச்சாக்குகள் வெளியே தூக்கி எறியப்பட்டு வீதியில் சோளம் 
மா கொட்டிக்கிடந்தது. மனித ரத்தம் ஆங்காங்கே சோளம் மாவை நனைத்துச் சகதியாக்கியது. 
கூட்டம் கூடி விட்டது. கூட்டத்தின் மத்தியிலே ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளும் நின்று 
வேடிக்கை பார்த்தார்கள். 
இடிபாடுகளுக்கிடையே நசுங்கிக் கிடந்தவர் களை வெளியே 
இழுத்துப்போடும் பணியில் நானும் ஈடுபட்டேன். லொறிச் சாரதி நொருங்கிக்கிடந்த 
லொறியின் முன்புறத்தில் முனகிக் கொண்டி ருந்தான். 
அவனை வெளியே இழுத்தெடுப்பதில் வெள்ளைக்காரன் ஒருவன் 
முயன்று கொண்டிருந்தான். 
‘உன் கைகளில் காயம் ஏற்படுத்திக் கொள்ளாதே இங்கு ஓடும் 
குருதியில் ‘எயிட்ஸ்’ கிருமிகள் இருக்கக்கூடும்’ என்று எச்சரித்தவாறே அவனது துணைவி 
அவனுக்கு உதவிக் கொண்டிருந்தாள். 
இந்த அமளிக்குள்ளும் கொட்டிக் கிடந்த சோளம் மாவை 
அள்ளுவதில் சிலர் அவசரம் காட்டினார்கள். இரத்தம் தோய்ந்த மாவை தவிர்த்து 
அள்ளினாலும் அவர்கள் அள்ளி அடைத்த பைகளில் மனித ரத்தம் திட்டுத்திட்டாகப் 
படிந்திருந்தது. வயிற்றுப் பசி மனிதநேயத்தை வென்றுவிடும் என எங்கோ வாசித்தது 
அப்பொழுது என் நினைவில் சிறகடித்தது. 
எதியோப்பியாவின் வறுமை பற்றிய பிரசாரம் அதிகமே! 
அங்குள்ளவர்கள் எலும்பும் தோலுமாக காட்சி யளிப்பதாக பிரசார சாதனங்கள் அவல் 
மெல்லுகின்றன. அங்கிருந்து நான் மெலிந்து திரும்புவேன் என்ற என் மனைவியின் 
நம்பிக்கை, இத்தகைய பிரசாரங்களிலே வேரூன்றியதுதான். 
 
எதியோப்பியாவில் நான் தங்கியிருந்த காலத்தில், 
கிராமங்கள் உட்படப் பரவலாகவே நான் பிரயாணம் செய்திருக்கிறேன்.தொடர்பு சாதனங்கள் விளம்பரப்படுத்தும், எலும்பும் தோலுமாக, பட்டினியால் மரித்துக் 
கொண்டிருக்கும் மனிதர் களை எதியோப்பியாவின் என் சொந்த அனுபவத்தில் நான் கண்டதில்லை. 
வளர்முக நாடுகளில் நிலவக்கூடிய, வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மனிதர்கள் 
எதியோப்பியா விலும் வாழ்கிறார்கள். அவ்வளவே!
 
அம்புலன்ஸýம் பொலீசும் வந்ததும் அசுர கெதியில் பாதை 
சீராக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த கூட்டமும் கலையத் துவங்கியது. 
‘ஹலோ சேர்! என்னை ஞாபகம் இருக்கிறதா?’ எனக் கேட்டவாறே 
கூட்டத்தில் நின்ற எதியோப்பிய இளைஞன் ஒருவன் புன்னகைத்தான். கண்ணியமாக உடையணிந்து, 
அவன் சரளமாக ஆங்கிலம் பேசினான். வேறு மொழிகளும் தெரியும் என்பதைக் காட்ட ஜேர்மன், 
இத்தாலி மொழிகளிலும் ஆங்கிலத்தில் கூறிய கருத்தைப் பேசிக் காட்டினான். 
‘நான்தான் நேற்று இரவு உங்களுக்கு ஹோட்டலில் உணவு 
பரிமாறினேன். நான் எட்வேட். என்னைத் தெரியவில்லையா? எட்வேட் மெக்கோனன் (உக்ஜ்ஹழ்க் 
ஙங்ந்ர்ய்ய்ங்ய்)’ எனத் தன் முழுப்பெயரையும் சொன்னான். 
 நான் 
தங்கியிருந்த ஹோட்டலில் உணவு பரிமாறுபவர்கள் அனைவரும் பெண்கள். இவன் பொய் 
பேசுகிறான் என்று தெரிந்தும் அவனைப் பார்த்து புன்னகைத்தேன். இவனைப் போன்றவர்கள் 
ஏமாற்றுக்காரர்கள். இவர்களிடம் நான் மிகவும் அவதானமாக இருப்பேன். இருப்பினும் அவனது 
மொழிப்புலமையும், பல்வேறு மொழிகளைப் பேசிய லாவகமும் அவனைக் கவனிக்க வைத்தன. 
எனது புன்னகையை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, வெகு 
இயல்பாக எதியோப்பிய கலாசாரம் பற்றி என்னுடன் ஆங்கிலத்தில் பேசினான். கறுப்பை மூடி, 
லேசாக வெள்ளைநிறம் பூசினால் கலவை நிறம் ஒன்று தோன்றுமே. அத்தகைய ஒரு அரிதான 
நிறத்தில் அவன் அழகாகத் தோன்றினான்.உண்மைதான்; எதியோப்பியர்கள் மிக அழகானவர்கள். ஆபிரிக்க, அராபிய, இந்திய சங்கமத்தில் 
பல்வேறு மனித சாயல்களை அங்கு காணலாம். எடுப்பான மூக்கும், தொந்தி இல்லாத இறுக்கமான 
நெடிய உடல்வாகும் ஒருவகைக் கவர்ச்சியை ஏற்படுத்தும். இதன் காரணமாகத்தான் குழந்தைகள் 
இல்லாத பல ஐரோப்பிய தம்பதிகள் எதியோப்பிய குழந்தைகளைத் தத்தெடுக்க 
முன்வருகிறார்களா? இந்த தத்தெடுப்பு சம்பிரதாயத்துக்காக ஐரோப்பியத் தம்பதிகள் பலர் 
நான் தங்கிய ஹோட்டலிலேயே தங்கியிருந்தார்கள்.
 
 ‘இன்று 
சனிக்கிழமை; விடுமுறைதானே? கேளிக்கைகள் நிறைந்த உல்லாசக் கிளப்புகள் இங்கு நிறையவே 
இருக்கின்றன. எதியோப்பிய நடனமும் உண்டு. மார்பை குலுக்கி ஆடும் எதியோப்பிய நடனம், 
மிகவும் பிரபல்யமானது. போவோமா?’ எனக்கேட்டு, எட்வேட் தன் தொழிலில் சிரத்தையாக 
இருந்தான். இவனைப் போன்றவர்கள், இரவு விடுதிகளாலும், கேளிக்கை விடுதிகளாலும் 
வாடிக்கையாளர்களை அழைத்து வருவதற்கெனக் கொமிஷன் அடிப்படையில் ஏஜண்டுகளாக 
அமர்த்தப்பட்டிருப்பவர்கள். இந்த ஏஜெண்டுகள் நாம் கொஞ்சம் அசமந்தமாக இருந்தாலும் 
ஏமாற்றக்கூடியவர்கள் என்பதையும், அவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுவதுதான் 
தற்பாதுகாப்புக்கான சூத்திரம் என்பதையும் நான் அறிந்திருந்தேன். ஆனாலும், 
இவர்களிடம் மிக அவதானமாக நடந்து கொண்டால் நிறையவே தகவல்களையும் புதினங்களையும் 
‘அள்ளிக்’ கொள்ளலாம் என்பதை விமான நிலையத்தில் அறிமுகமான ஜேர்மன்காரன் 
சொல்லியிருந்தான். 
எட்வேட் தன் தொழிலுக்கு புதியவன் என்பதை அவனுடன் பேசிய 
கொஞ்ச நேரத்திலேயே புரிந்து கொண்டேன். ‘கற்றுக்குட்டியான அவனிடம் நான் 
தொலையமாட்டேன்’ என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. 
‘கோப்பி குடிப்போம் வா!’ என அவனை அழைத்தேன். அவனுக்கு 
மகிழ்ச்சி. அருகில் இருந்த கோப்பிக்கடை ஒன்றைக் கண்டுபிடித்தோம். அதற்குள் 
நுழைந்தோம். 
எதியோப்பியாவின் மலைப்பகுதிகளிலே நிறைய கோப்பிச் 
செடிகள் பயிரிடப்படுகின்றன. அங்கு விளையும் கோப்பி பற்றி எதியோப்பியர்கள் 
பெருமையாகப் பேசிக் கொள்வார்கள்.‘எதியோப்பிய ஸ்பெஷல் கோப்பி’ என்ற விளம்பரங்களுடன் வீதியோரம் பல கடைகள் வியாபாரம் 
செய்கின்றன. கண் அசைவால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் எதியோப்பிய அழகிகள் 
இங்கும் தமது வாடிக்கையாளர்களுக்காக காத்திருப்பார்கள்.
 
காலை வேளைகளிலே கோப்பிக்கடையில் கூட்டம் அதிகம் 
இருப்பதில்லை. கோப்பிக்கடையின் மூலை யொன்றில் நாங்கள் வசதியாக அமர்ந்துகொண்டோம். 
அவனுடன் கேளிக்கை விடுதி யொன்றுக்கு நான் செல்லாத ஏமாற்றம் அவன் முகத்தில் 
தெரிந்தது. அன்றைய அவன் சீவியம், அவனுக்கு கிடைக்கும் கொமிஷனில் தான் தங்கியுள்ளது. 
என்னிடம் எந்தவித பிரயோசனமும் இல்லை என்றெண்ணி, என்னைக் கழற்றிவிட எத்தனித்தான். 
ஆயிரம் ‘ஆண்ழ்ழ்’ (எதியோப்பிய பணம்) எடுத்து, ‘இதை 
வைத்துக் கொள்’ எனக் கூறினேன். 
‘சேர்!’ என ஏதோ சொல்ல அவதிப்பட்டான். வார்த்தைகள் அவன் 
தொண்டையில் அடைத்துக் கொண்டன. ஒருவகைத் திணறல். அவனுடைய செயலுக்கான காரணம் எனக்கு 
புரிந்தது. அவனுக்கு நான் கொடுத்த பணம் அவனது ஒருவார ஊதியம். டொலரிலே செலவு செய்து 
பழகிய எனக்கு அது பெரிய தொகையல்ல.‘உண்மையாகவே இந்தப் பணம் எனக்கா? கேளிக்கை விடுதிக்கும் வரமாட்டேன் என்கிறீர்களே?’ 
என ஒருவித சந்தேகத்துடன் ராகம் இழுத்தான்.
 
‘உனக்குத்தான். உன்னுடன் சாவகாசமாகப் பேசவேண்டும். 
எடுத்துக்கொள்’ என்றேன். 
நன்றியுடன் என்னைப்பார்த்து ‘சலாம்’ வைத்தபோது 
அக்கண்களிலே சுரந்து நின்ற கண்ணீரை நான் அவதானிக்க தவறவில்லை.
 [தொடரும்]
 a.kantharajah@uws.edu.au
 
ஒட்டாத மண்_ 1: 
              வீடே கோயிலாக...உள்ளே |