சிறுகதை: இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்.... - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
சார்லிக்கு இன்று என் மீது கோபம். அவன் தட்டில் வைத்த எதையும் இன்று சாப்பிடவில்லை. தினமும் நான் கொடுக்கும் அந்த உலர்ந்த கொடிமுந்திரியைக்கூட தொடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதுதான் அவன் 'பேஃவரிட்'.....அதைக்கூட..... காலையில் இருந்து "உர்ர்ர்.....உர்ர்ர்" என்று ஏதோ விசித்திர சத்தம் வேறு எழுப்பிக்கொண்டேயிருந்தான்.
காலையில் எழுந்ததுமே சார்லிக்கு அருகில் சென்று "ஹலோ சார்லி" என்பேன். பதிலுக்கு "ஹலோ" என்றுவிட்டு கூட்டின் வாசலுக்கு அருகில் வந்து அமர்ந்துகொள்வான். கூட்டின் கதவுகளை அகலத் திறந்து, ஒரு தொட்டில் இருந்து மழலையை தூக்கும் தாயின் கவனத்துடன், மிகப் பவ்வியமாக சார்லியை என் விரல்கள் மூடிக்கொள்ளும். அவனின் பஞ்சுபோன்ற மிருதுவான இறகுகள் என் விரல்களுக்கு ஒரு இதமான மென்மையை அறிமுகப்படுத்தும். என் பெருவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையே உருவாகும் அந்த இடைவெளியில் அவன் தலையை வெளித்தள்ளி குறுகுறுவென தலையை பல கோணங்களில் திருப்பி ஒரு புதிய உலகைக் கண்டுகொண்ட ஒரு மாலுமியின் வியப்புமிகுந்த கண்டடைதல் அங்கு நடந்தேறும்.
என் விரல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மெதுவாய் என் கை வழி ஏறி தோளில் அமர்ந்து கொண்டு என் காதின் ஓரங்களை தன் கூரிய அலகுகளால் கவ்வி விடுவிப்பான். இந்த சீண்டல் பல நிமிடங்களுக்கு நடந்தேறும். எஜமானுக்கு வலி ஏற்படுத்தாத 'செல்லச் சீண்டல்' அது. அவனது அன்பின் அடர்த்தியின் அளவுகோல் அது.