இலைமறை காயாக இருந்து சாதனைகள் படைத்தவர் அ.ந.கந்தசாமி அவர்கள்! - த.சிவபாலு -
அ.ந.கந்தசாமி அவர்கள் ஈழத்தின் அவர் காலத்தில் வெளிவந்த பல்வேறு பத்திரிகைகளில் தனது இலக்கிய ஆக்கங்களைப் பதிவிட்டுள்ளதன் மூலம் அவரை அறியாதவர்கள் இல்லை எனும் அளவிற்குப் பிரபலமடைந்திருந்தார். முற்போக்கு இலக்கியச் செய்தி இதழாக அவ்வேளை வெளிவந்த மொஸ்கோ சார்பு பத்திரிகையான ‘தேசாபிமானி’யில் அவரது படைப்புக்கள் வெளிவந்தன. அத்தோடு அப்பத்திரிகையின் ஆசிரிய பிடத்திலும் பணியாற்றியிருந்தார் என்பதனையும் அறியமுடிகின்றது.
1946ஆம் ஆண்டளவில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் வாரப் பத்திரிகையான ‘தேசாபிமானி’யின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி, பின்னர் முறையே சுதந்திரன், வீரகேசரி, ஸ்ரீலங்கா ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழுக்களிலும் கடமையாற்றினார். எவ்வாறு இருந்தாலும் இவர் தாம் பணிபுரிந்த அந்தப் பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தபோதிலும், தனது கொள்கைப் போக்கை – பொதுவுடமைச் சேவையை – கைவிட்டிலர். ஒவ்வொரு பத்திரிகைகளிலும் அவர் பணியாற்றியபோது ஒரு பரபரப்பு தென்பட்டது. தேசாபிமானி – மூலம் நாட்டின் சீர்கேடு, பொருளாதாரச் சீர்கேடு, சுரண்டல், சாதி ஒழிப்பு என்பனவற்றை ஒழிக்கப்பாடுபட்டார். சுதந்திரன் மூலம் நாட்டின் கலை, கலாச்சாரம், இலக்கியம் என்பனவற்றை வளர்க்க முயன்றார். பத்திரிகைகள் ஏதுவாக இருந்தாலும் அப்பத்திரிகை வாயிலாக நம் கொள்கைகளுக்கு முரசம் கட்டினார். தேசாபிமானி இனத்தின் விடுதலை பற்றி அதிகம் கருத்தூன்றிக் கவனிக்காத காரணமோ என்னவோ, அவர் அப்பத்திரிகையைக் கைவிட்டு சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் பீடமேறினார் என்பதற்கு அவருள் தீச்சுவாலையாப் பதிந்த அவர் காலத்து இன விடுதலை வேட்கை என்றுதான் கொள்ளமுடிகின்றது. அதனால்தான் எப்பொழுதுமே தம்முள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டுக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், தமிழரசுக் கட்சியிலும் இவரால் பணியாற்ற முடிந்தது போலும். அத்தோடு கம்யூனிஸச் சித்தாந்த அடிப்படையில் சியோனிச வாதம் என்னும் ஒன்று தலைவிரித்தாடி பூர்சுவாக்களாக மொஸ்க்கோ சார்புப் பொதுவுடமைக் கட்சி பற்றிய விமர்சனங்கள் இவர் காலத்தில் எழுந்திருந்ததும், சிங்கள இனவாத்தைக் கண்டிக்காததும் பக்கச் சார்பற்று நடக்காததும் சிங்கள ஆதிக்கம் மொஸ்போ சார்பு போக்கில் காணப்பட்டதும் இவர் தேசாபிமானியின் ஆசிரிய பீடத்தில் இருந்து விலக் காரணமாயிருந்திருக்கலாம்.