இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான 'தமிழ் மகளிர் பேரவை' புஸ்பராணி சிதம்பரி மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -
இலங்கைத் தமிழர்தம் அரசியல் வரலாற்றில் புஷ்பராணி அவர்களுக்கு முக்கிய பங்குண்டு. எழுபதுகளில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நன்கறியப்பட்ட பெயர் அவருடையது. தமிழ் மகளிர் பேரவையில் செயற்பட்ட முக்கியமானவர்களில் ஒருவர். தமிழர் உரிமைப்போராட்டத்தில் பல இன்னல்களை அனுபவித்தவர்களில் ஒருவர். அவரது போராட்ட அனுபவங்களை விபரிக்கும் 'அகாலம்' முக்கியமானதோர் ஆவணம். அவரது மறைவை முகநூல் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல். அவரது நினைவாக அவரது 'அகாலம்' நூல் பற்றி நான் எழுதியிருந்த கட்டுரையினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.
புஷ்பராணியின் 'அகாலம்: ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்' - வ.ந.கிரிதரன் -ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அதில் முன்னணியிலிருந்த பெண்களில் மயிலிட்டி புஷ்பராணி முக்கியமானவர். பின்னர் பல்வேறு அமைப்புகள் உருவாகக் காரணமாகவிருந்த ஆரம்பகாலத் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் அமைப்பான தமிழ் மகளிர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை அமைப்பிலும் (TLO) தீவிரமாக இயங்கியவர். புலோலி வங்கிக் கொள்ளையில் சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு காவற்துறையினரின் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானவர். 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்னும் நூலை எழுதிய புஷ்பராஜாவின் சகோதரி. இவரது 'அகாலம் (ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்)' என்னும் நூலை அண்மையில் வாசித்தேன். 'கருப்புப் பிரதிகள்' வெளியீடாக வெளிவந்த நூல்.
இந்நூலுக்குப் பல முக்கியத்துவங்களுள்ளன. ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் பெண் போராளிகளில் முன்னோடியான புஷ்பராணியின் அனுபவப் பதிவுகளிவை. இந்த நூல் ஏனைய இதுபோன்ற அண்மைக்காலப் பதிவுகளிலிருந்து இன்னுமொருவகையில் வேறுபடுகின்றது. ஏனைய நூல்களெல்லாம் ஆவணப்பதிவுகளென்ற வகையில் முக்கியத்துவம் பெற்றால், 'அகாலம்' ஆவணப்பதிவாக இருக்கும் அதே சமயம் இலக்கியத்தரமிக்க பிரதியாகவும் அமைந்திருப்பது இதன் சிறப்பு. இதற்கு புஷ்பராணி ஓர் எழுத்தாளராகவுமிருப்பது காரணம். தனது போராட்ட அனுபவங்களை விபரிக்கையில் அக்காலத்து மெல்லிய உணர்வுகளையெல்லாம், தன் இளமைக்காலத்து வாசிப்பு அனுபவங்களையெல்லாம் விபரித்துச் செல்கின்றார். அடுத்த முக்கியமான அம்சம் தனது அனுபவங்களை வெளிப்படையாக, குறைநிறைகளுடன் விபரிக்கின்றார். சிவகுமாரின் தாயாரான அன்னலட்சுமி அம்மையாரின் சிறப்புகளை விபரிக்கும் அதே சமயம் சிவகுமாரின் அந்திரட்டியில் அவ்வூர்த் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாக உணவு வழங்குவதையும் அதுபற்றிய அன்னலட்சுமி அம்மையாரின் மன உணர்வுகளையும் கூடவே விபரிக்கின்றார். அது போல் தமிழ் மகளிர் அமைப்பின் ஆரம்பகாலப் பெண் போராளிகளிலொருவரான அங்கயற்கண்ணி மறைந்து மறைந்து தன்னை வந்து சந்திப்பதையும் விபரிக்கின்றார். இவ்விதமாகப் பலருடனான அனுபவங்களை விபரிக்கையில் அவர்களின் குறைநிறைகளை விபரிக்கின்றார். அவர்கள்மேல் கோபம் போன்ற உணர்வுகளின்றி விபரிக்கின்றார். தமிழ், சிங்களப் பொலிசாரின் வன்முறைகளை விபரிக்கும் அதே சமயம் அவர்களது நல்ல அம்சங்களையும் குறிப்பிடுகின்றார். இவ்விதமான விபரிப்பால் இவர் கூறும் நபர்களைப் பற்றிய ஓரளவுக்கு முழுமையான பிம்பங்கள் கிடைக்கின்றன. பெண் போராளிகளாகக் கைது செய்யப்பட்ட இவரும், கல்யாணி போன்றவர்களும் விசாரணைகளில் அடைந்து சித்திரவதைகள் துயரகரமானவை. அவற்றையெல்லாம் தாங்கித் தப்பிபிழைத்த இவர்களது துணிவு மிக்க ஆளுமை வியப்பூட்டுவது.