நதியில் நகரும் பயணம் 11: கோலோன் (Cologne) - நடேசன் -
- கோலோன் நகரின் எந்த பகுதியில் நாம் நின்று பார்த்தாலும் தெரிவது
கோலோன் கதீற்றலின் கோபுரங்கள் -
கோலோன், ஜெர்மனியின் முக்கிய நகரமாகவும், எங்கள் படகு தரிக்கும் இறுதி ஜெர்மன் நகராகவும் இருந்தது. நாங்கள் படகை விட்டு இறங்கியபோது மழை பிடித்துக்கொண்டது . குடையுடனே எங்கள் நடை இருந்தது.
சிறு வயதிலிருந்தபோது எனக்கு அடிக்கடி காய்ச்சல் வரும் என்பதால் எங்கள் வீட்டில் எப்பொழுதும் ஒடிக்கொலோன் இருக்கும். தலையிடித்தால் துணியில் ஒடிக்கொலோன் தேய்த்து இரண்டு பக்க நெற்றியிலும் அம்மா வைப்பார். அதேபோல் இருமல் , நெஞ்சில் சளி வந்தால் நெஞ்சில் துணி நனைத்துப் பூசுவது வழக்கம் . பிற்காலத்தில் சட்டை கொலரில் எனது நண்பர்கள் ஒடிக்கொலோன் போடுவதை கண்டிருந்தேன் . அல்ககோலுடன் சில தைலங்கள் கொண்டது இந்த ஒடிக்கலோன் . பிற்காலத்தில் பல முக்கிய வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்பட்டு வணிக்பொருளாகி, ஆரம்பத்தில் ஐரோப்பாவில் கொள்ளை நோய்யைக் (Bubonic plaque) குணப்படுத்த இதைக் குடித்தார்கள் என அறிந்தேன் . இப்படியாக வீடெங்கும் இருக்கும் ஒடிக்கொலோனை ஆரம்பத்தில் உருவாக்கிய இடம் ரைன் நதிக்கரையில் உள்ள கோலோன் நகரம் .
கோலோன் நகரில் இறங்கியதும் நதியின் மேல் உள்ள பாலத்தில் அடிக்கடி ரெயில் செல்வது தெரிந்தது. ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேலாக ரயில்கள் இந்தப் பாலத்தில் செல்லும் என்றார்கள். என்னைக் கவர்ந்த முக்கிய இடமாக நகரின் மத்தியில, அக்கால ரோமர்களால் போடப்பட்ட கற்பாதை இருந்தது. அந்த ஒரு பகுதியை இன்னமும் பாதுகாத்து வருகிறார்கள். இந்த நகரம் 2000 வருடங்கள் வரலாறு (AD 50) கொண்டது. ரோமர்கள் மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து ஐரோப்பாவின் பல பகுதிகளையும் இப்படியான கற்பாதைளால் ஒன்றாக இணைத்திருந்தார்கள்.