'தீர்த்தக்கரை' சஞ்சிகை பற்றிய நினைவுக் குறிப்பு! - எல்.ஜோதிகுமார் -
- இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் எண்பதுகளில் மலையகத்திலிருந்து வெளியான 'தீர்த்தக்கரை' சஞ்சிகைக்கும் முக்கியமானதோர் இடமுண்டு. எல்.சாந்திகுமாரை ஆசிரியராகக் கொண்டு வெளியான காலாண்டு சஞ்சிகையான 'தீர்த்தக்கரை'சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் எஸ்.நோபட், எல்.ஜோதிகுமார் , எம்.தியாகராம் ஆகியோரிருந்தனர். எஸ்.நோபட் (சூசைப்பிள்ளை நோபட்) டொமினிக், ஜீவன், கேசவன், பிரான்ஸிஸ் சேவியர் மற்றும் கோவிந்தன் என்னும் புனைபெயர்களில் தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்டவர். தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்திலும் இணைந்து போராடிப்பின் அதிலிருந்து பிரிந்து 'தீப்பொறி' அமைப்பில் இயங்கியவர். 'புதியதோர் உலகம்' நூலாசிரியர். அண்மையில் ஜோதிகுமார் அவர்களிடம் 'தீர்த்தக்கரை' சஞ்சிகை பற்றியும் எழுதுங்களேன் என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் அனுப்பிய 'தீர்த்தக்கரை' சஞ்சிகை பற்றிய குறிப்பிது. - வ.ந.கி -
அன்பின் கிரி, தீர்த்தக்கரை தொடர்பில் எழுத கூறியிருந்தீர்கள். புனித நீராடுதுறை, பாவம் கலையும் நீர்த்துறை என்று தீர்த்தக்கரைக்கு தமிழ் விளக்கம் கூறப்படுகின்றது. மேலும், புனித நீர் வைக்கப்படும் சிறு தேங்காய்த்துண்டு அகல் என்றும் கூறப்படுகின்றது. கூடவே தீர்த்தக்கரை என்பதனை பண்டைய ஒரு குருவுடன் சம்பந்தப்படுத்தி ஒரு புராண கதையும் உண்டெனவும் கதைக்கப்படுகின்றது. குறித்த குரு ஆறுகளில் வாசம் செய்யும் வரம் பெற்றவர் என்று கூறப்பட்டாலும், ஆறுகளை வணங்கும் மனிதப் பண்பை மேற்படி கதைகள் உள்ளடக்குவதாக உள்ளது என்பதில் அர்த்தம் உண்டு எனுமாப் போல் படுகின்றது. ஆனால் மேற்படி பெயரை வைக்கும் பொழுது இவை அனைத்தையும் தீர்த்தக்கரை தனது கவனத்தில் கொள்ளவில்லை என்பதை கூறுதல் வேண்டும். கடந்த கால திரைப்பட பாடல் ஒன்று கூட ராமேஸ்வரத்துக்கான புனித யாத்திரையை தீர்த்த யாத்திரை என வரையறை செய்து கொள்வதில் திருப்தியடைந்தாற் போல் இருந்தாலும் இத்தகைய ஒரு கருத்தை ஆசிரிய பீடம் ஒரு காலமும் கருதியதில்லை என்றே கூறுதல் வேண்டும்.
மாறாக இப்பெயரை தேர்வு செய்யும் போது, ஆசிரிய குழாத்தின் மனதில் பாரதியை நோக்கிய ஒரு யாத்திரையாக இது இருக்க கூடும் என்ற எண்ணப்பாடு ஒரு சிறிது அல்லது பல மட்டங்களில் இருந்தது என கூறலாம். அதாவது பாரதி எப்படி தொன்மங்களில் இருந்ததெல்லாம் உள்வாங்கி அவற்றில் பலதையும் நிராகரித்து சிலதை உள்வாங்கி தனது நவீன கால சிந்தனைகளுடன் அவற்றை இணைத்து தன் அழுத்தமான காலடிகளை கட்டுவித்தானோ - அதே அடிப்படையில் ஒரு வரலாற்று பார்வையை கட்டுவிக்கும் அவாவை வெளிப்படுத்தும் அல்லது எதிரொலிக்கும் ஒரு அவாவினை உள்ளடக்கிய பெயராகவும் - அதே வேளை பாரதியின் அழகியலை - அவ் அழகியலில் அடங்கக்கூடிய தார்ப்பரியத்தை சிலாகித்ததின் நேரடி விளைவாகவும் இப்பெயரின் தெரிவு அமைந்து போயிற்று எனலாம்.