நிட்டின் கோக்லே, கவிஞர் ஜெயபாலன் பேட்டி, கலாநிதி அகிலன் கதிர்காமரின் கூற்று, மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றி...(1 -5) - ஜோதிகுமார் -
1
அண்மையில் வெளிவந்த நிட்டின் கோக்லேயின் பேட்டி மிகுந்த பரபரப்பை, சர்வதேச மட்டத்தில் எழுப்புவதாக அமைந்திருந்தது. பல்வேறு, மிக அர்த்தமுள்ள கேள்விகளை எழுப்பிய இப்பேட்டியானது, அண்மையில் வெளிவந்திருந்த இன்னுமொரு பேட்டியான, கவிஞர் ஜெயபாலன் அவர்களின் பேட்டிக்கு நேரெதிராக அமைந்திருந்தது, அதன் முக்கியத்துவத்தை குறித்து காட்டுவதாக அமைந்து போனது. ‘ஒன்று சேர்ந்து, கப்பலை கரையேற்றுவோம்’ அல்லது ‘ஒன்று சேர்ந்து கப்பலை காப்பாற்றுவோம்’ என்பதே கவிஞர் ஜெயபாலன் பேட்டியின் தொனிபொருளாக இருந்த போதிலும், கோக்லேயின் பேட்டியானது கப்பல் செல்ல உத்தேசித்திருக்கும் ‘திசையை’ இலை மறை காய் மறையாக காட்டி நின்றதே அதன் அடிப்படை சிறப்பு எனலாம். அதாவது ஒருபுறம் அவா – கவிஞனின் கனவு – கவிஞனின் லட்சியம். மறுபுறம், நடைமுறை யதார்த்தம்.
2
இரண்டு பேட்டிகளும், சொல்லி வைத்தாற்போல் ஜெனீவா கொண்டாட்டத்தின் இடைநடுவே வெளிவந்த போதிலும், இரண்டுமே அது குறித்து எந்த ஒரு அக்கறையும் காட்டி நில்லாது இருந்தமை பேட்டிகளின் இன்னுமொரு சிறப்பம்சம் என கருதலாம். வருடந்தோரும் வந்து போகும் சரஸ்வதி பூஜையை போல, இதுவும் கடந்த பல வருடங்களாய் வந்து போவதால் ஏற்பட்ட சலிப்பின் காரணமாகவும் இவ் அசட்டை தோன்றியிருக்க வாய்ப்புண்டு. எனினும் ஜெனீவா முன்னெடுப்புக்கான நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டு, அரங்கேற்றி கொண்டிருந்த போது ‘தினக்குரலில்’ அடுத்தடுத்து வந்த இரு செய்திகள் ஓரளவில் திகைப்பை தருவனவாக இருந்தன. ஒன்று ‘26 வருடங்களாய் போராடிய இன்னொரு தாய் (விக்னேஸ்வரன் வாகீஸ்வரி) நீதி கிடைக்காது மரணமானார்’ என்பதும் ‘மனித உரிமை பேரவை தலைவரை பீரிஸ் சந்தித்தார்’ என கூறி பீரிஸ் அவர்கள், மனித உரிமை பேரவை தலைவருடன் கைகுலுக்கி கொண்டிருக்கும் காட்சி படத்துடன் வெளிவந்தது (17.06.2022). இது, விடயங்களின் சாராம்சத்தை கூறுவதாய் அமைந்து போனது.