அஞ்சலி: ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன் மறைந்தார்! - குரு அரவிந்தன் -
கலைஞரும், ஒலிபரப்பாளருமான இலங்கைத் தமிழரான விமல் சொக்கநாதன் லண்டன் நகருக்குப் புலம் பெயர்ந்திருந்தார். கொக்குவில் நகரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அங்கே நடந்த மின்சாரத் தொடர்வண்டி விபத்தொன்றில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி லண்டனில் காலமாகிவிட்டார். இலங்கை வானொலியிலும் அதன்பின் பிபிசி தமிழோசை வானொலியிலும் அறிவிப்பாளராககக் கடமையாற்றியவர், அதன்பின் ஐபிசி வானொலியிலும் பணியாற்றினார்.
நண்பர் விமல் சொக்கநாதனும் அவரது மனைவியும் இலங்கையில் சட்டக்கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு அறிமுகமாகியிருந்தனர். நான் பட்டயக்கணக்காளருக்குப் படிக்கும் போது உள்ளகக் கணக்காய்வுக்காக நான் சட்டக்கல்லூரிக்குச் செல்லும் போதெல்லாம் இவர்களைச் சந்தித்திருக்கின்றேன். பல ஜோடிகளுக்கு மத்தியில் இவர்கள் மட்டும் விசேடமாக என் கண்ணில் பட்டதற்குக் காரணம், அப்போது காதலர்களாக இருந்த இருவரும் தமிழர்களாக இருந்ததே. அங்கு சந்தித்ததில் அவர்களுடன் நட்பாகப் பழகமுடிந்தது. விமலின் மனைவி யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் எனது மனைவியின் வீட்டின் அயலவர் என்பதால் எங்கள் நட்பு மேலும் தொடர்ந்தது.