'கோட்டா கோ' எதிர்ப்பலைகளும் , இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடிகளும்! - ஜோதிகுமார் -
இலங்கையின் எதிர்ப்பலைகள், ஒன்று, ஜனநாயக ஏற்பாட்டினை நோக்கி அசையக்கூடும் - அல்லது பாசிசத்தை நோக்கி நகர கூடும் என்பது கலாநிதி அகிலன் கதிர்காமரின் கணிப்பானது. (பௌசர் Zoom Meeting)). இருந்தும் இந்தக்கூற்றானது பிரதமர் ரணில் பதவி ஏற்பதன் முன்னர் வெளிவந்தது, என்பதும் குறிக்கத்தக்கது. இவ் எதிர்ப்பலையானது 1971, 1989இன் எழுச்சிகள் போல் தனித்து இயங்காது, ஒரு சமூக தளத்தை அரவணைப்பதாகவும், ஓர் தேசத்தின் கோபத்தை எதிரொலிப்பதாகவும் இருந்தது-இருக்கின்றது. (இவற்றில், வடக்கு மக்கள் எந்தளவில் இணைய முற்பட்டனர் என்பது தனித்து வாதிடப்பட வேண்டிய விடயமேயாகும்). தமிழ் மக்கள் இதில் இணைய வேண்டும் என்று ஒருபுறத்தில் சுமந்திரன், கலாநிதி அகிலன் போன்றோர் அபிப்பிராயப்பட்டாலும், புலம்பெயர் அரசியலின் நிலைப்பாடு என்பது, துருவமயமாக்கலை தொடர்ந்தும் தக்கவைத்தல், என்ற அரசியலை, மையமாக வைத்தே இயங்குவதாய் அமைந்திருந்தது. இது புலம்பெயர் அரசியலுக்கு மாத்திரமல்லாமல் இலங்கையின் ஆதிக்க சக்திகளுக்கும், கூடவே, மேற்கின் நலன்களுக்கும் மகிழ்ச்சி ஊட்டும் விடயம்தான் என்பதில் ஐயமில்லை. வடக்கு மக்களை தனிமைபடுத்தும் இந்நிகழ்ச்சி நிரலானது கடந்த காலங்களிலும், (தேர்தல் உட்பட) நடந்தேறியுள்ளது என்பதும் அவற்றுக்கு பல்வேறு வல்லரசுகளின் பின்னணி உண்டு என்பதெல்லாம் பிறிதான விடயங்களே. ஆனால், எதிர்ப்பலைகளானது மேலே கூறப்பட்டது போல, ராணுவமயமாக்கலுக்கும் அடித்தளம் அமைக்க கூடும் என்பதும், அதற்கான சமிஞ்சைகள் மிக தெளிவான முறையில் இலங்கை அரசியலில் ஏற்கனவே வெளிவரத் தொடங்கி இருந்தன என்பதும் முக்கியமான விடயங்களாகும்.