ஆய்வு: பள்ளு இலக்கியத்தில் உழவு - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி, சென்னை- 42 -
முன்னுரை
பள்ளு இலக்கியங்கள் உழவியற் செய்திகளைச் சிறப்புறக் கூறும் இலக்கியம் பள்ளு இலக்கியங்கள். இத்தகைய இலக்கியங்களில் இன்றைய அறிவியலுக்குப் பொருந்தும் வகையில் உழவியற் செய்திகள் பல சுவைபெற விளக்கப்பட்டுள்ளன. பள்ளா் வயல்களில் உழவுத் தொழில்கள் செய்து வாழ்பவர். பண்ணைக்காரனான நில உடைமையாளனிடம் வயல் வேலை செய்து வருபவர். உழவுத் தொழிலில் ஒவ்வொரு கட்டத்திலும் செய்யப்படும் சடங்குகளுக்குப் பள்ளர்களே அதிகாரிகளாக உள்ளனர். வயலில் உழுவதற்கு முதன்முதலாக பூட்டுவதற்குமுன், மழை பெய்வதிலிருந்து, வயல்களில் விளைந்து அறுவடையாகும் நெல்லை அளப்பது வரைவுள்ள ஒவ்வொரு நிகழ்வும் பள்ளர்களைச் சுற்றியே அமைகின்றன.
உழவு
உழவுப்பணி பருவமழையை நம்பி நடந்தது. பருவமழை பொழிந்ததும் உழவுப்பணிகள் தொடங்கின. உழவுத் தொடங்கும் முன்னர் நன் நிமித்தம் பார்த்துத் தொடங்கினர். இதனை,
சத்தமி புதன்சோதி தைதுலக் கரணம்
தவறாத சுபயோகந் தருபஞ் சாங்கம்
மெத்தநன் றெனப்பார்த்து மேலான வேதியர்கள்
மிக்கதுலா முகிழ்திதம் விதித்தார் இன்று
(புலியூர்க்கேசிகன், முக்கூடற் பள்ளு, பா-113)