கவிதை: நல்லிணக்கம் சமாதானம் நாட்டிலோங்கச் செய்திடுவோம் !

Friday, 17 May 2019 07:52 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ....... அவுஸ்திரேலியா கவிதை
Print

வெறி   கொண்டு    அலைகின்ற 
நெறி  பிறழ்ந்த  கூட்டமதால்
கறை   படியும்  காரியங்கள்
கண்  முன்னே  நடக்கிறது
பொறி புலன்கள் அவரிடத்து
அழி என்றே சொல்லுவதால்
குடி மக்கள் என்னாளும்
கதி  கலங்கிப்   போகின்றார்   !

மதம்  என்னும்  பெயராலே
மதம் ஏற்றி  நிற்கின்றார்
சினம்  என்னும் பேயதனை
சிந்தை கொள  வைக்கின்றார்
இனம் என்னும் உணர்வுதனை
இருப்பு கொள்ள வைக்குமவர்
தினம் தீங்கு செய்வதிலே
திருப்தி  உற்று  திரிகின்றார்  !

மொழியுணர்வை மத உணர்வை
இன உணர்வை அழிக்கின்றார்
பழிதீர்க்கும் வெறி உணர்வை
பாடம்  என புகட்டுகிறார்
கொன்று விட்டால் சுவர்க்கமென
கொள்கை தனை பரப்புமவர்
கொன் றெழிக்கும் பாங்கினிலே
கோர நடம் ஆடுகிறார்     !

வெறி கொண்டார் நெறிதிரும்ப
வேண்டி  நிற்போம் இறைவனிடம்
நெறி பிறழ்து போவாரை
வழி மாற்ற  முனைந்திடுவோம்
வள்ளுவனார்  ஆழ் கருத்தை
உள்ள எல்லாம் பதித்திடுவோம்
நல் இணக்கம் சமாதானம்
நாட்டில் ஓங்கச்  செய்திடுவோம்  !

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 04 June 2019 07:22