அஞ்சலி: எழுத்தாளர் கோவி மணிசேகரன் மறைவு! - வ.ந.கிரிதரன் -
இன்றுதான் எழுத்தாளர் கோவி மணிசேகரன் நவம்பர் 18, 2021 அன்று தனது தொண்ணூற்று ஆறாவது வயதில் முதுமை காரணமாக மறைந்த செய்தியினை அறிந்துகொண்டேன். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி. தமிழ் இலக்கிய உலகில் கோவி மணிசேகரனுக்கும் முக்கியமானதோர் இடமுண்டு. சமூக, சரித்திர நாவல்கள் பல எழுதித் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்தவர். திரைப்படத்துறையிலும் அவரது நாவல்கள் , யாகசாலை, தென்னங்கீற்று ஆகியவை வெளியாகியுள்ளன. அவற்றுக்கு அவரே திரைக்கதை, வசனமெழுதி இயக்கியுள்ளார். அதற்கு முன் அவர் இயக்குநர் கே.பாலச்சந்தரின் கீழ் உதவி இயக்குநராக இரண்டாண்டு காலம் பணிபுரிந்துமுள்ளார். பாலச்சந்தரின் 'அரங்கேற்றம்' திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பொதுவாகத் திரைப்படங்களில் உதவி இயக்குநர் என்று தனியாக ஆரம்பத்தில் போடுவதில்லை. ஆனால் பாலச்சந்தர் அப்படத்தின் ஆரம்பத்தில் உதவி இயக்குநர் கோவி மணிசேகரன் என்று தனியாகத் தன் பெயரைப் பதிவு செய்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்திருக்கின்றார். வாசித்திருக்கின்றேன். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சங்கீதத்தில் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரைப்பற்றி நினைத்ததும் பல நினைவுகள் படம் விரிக்கின்றன. என் பால்ய காலத்து வாசிப்பனுவத்தில் இவருக்கும் பங்குண்டு. கல்கியில் இவரது சிறுகதைகள் பலவற்றை வாசித்து மகிழ்ந்திருக்கின்றேன். இவரது தமிழ் என்னை மிகவும் கவர்ந்தது. ராணிமுத்துப் பிரசுரமாகவும் இவரது வரலாற்று நாவலான 'சோழநிலா' வெளியாகியுள்ளது. 'ராஜசிம்மன் காதலி'யும் ராணிமுத்துப் பிரசுரமாக வெளிவந்த விடயத்தையும், அந்நாவல் பின்னர் மணிவாசகர் பதிப்பக வெளியீடாக 'ராஜசிம்ம பல்லவன்' என்னும் பெயரில் வெளியான தகவலையும் தமிழ் வரலாற்று நாவல்களை ஆவணப்படுத்தி வரும், தஞ்சாவூரைச் சேர்ந்த சுந்தர் கிருஷ்ணன் அவர்கள் அறியத்தந்திருந்தார். அத்துடன் 'ராஜசிம்ம பல்லவன்' நூலின் பிரதியினையும் அனுப்பி உதவினார். அவருக்கு என் நன்றி.