விக்ரமாதித்யன் கவிதைகள் - சித்திரவீதிக்காரன் -
கவிஞர் விக்கிரமாதித்யனின் பிறந்ததினம் செப்டெம்பர் 25.
சத்தியத்தையே
எழுதுகிறேன்
அலுத்துப்
போய்விட்டது எல்லாமும்
சலிப்படையச்
செய்கிறார்கள் எல்லோரும்
எனினும்
வாழ்ந்து கொண்டும்
எழுதிக் கொண்டும்தான்
இருக்கிறேன் இன்னமும்.
– விக்ரமாதித்யன் நம்பி -
ஒன்ன நினைச்சுப் பார்க்கும் போது கவிதை அருவி மாதிரி கொட்டுது அதை எழுதணும் உட்கார்ந்தா எழுத்துதான் வரமாட்டேங்குது என குணா கமல் அபிராமியிடம் சொல்லிக் கொண்டிருப்பார். அதுபோலத்தான் நிறைய விசயங்களை எழுதணும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதையெல்லாம் உடனே எழுத முடியாது. அதற்கும் ஒரு வல்லமை வேண்டும்.
கவிதைகள் என்றாலே பாரதியைத்தான் எனக்குத் தெரியும் பள்ளிநாட்களில். மற்றபடி கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம். படிப்பெல்லாம் முடித்த பிறகு ஒரு சமயம் நூலகத்தில் விக்ரமாதித்யன் கவிதைகள் நூலைப் பார்த்த போது அட்டைப் படத்தில் தாடியோடிருந்த விக்ரமாதித்யன் முகம் மிகவும் ஈர்த்தது. அந்த கவிதை நூலைத் திறந்து கொஞ்சம் வாசிக்க ஆரம்பித்தேன். மிகவும் பிடித்துப் போனது. வீட்டிற்கு எடுத்து வந்து பலமுறை வாசித்தபின் எனக்கு மிகவும் பிடித்த இருபதிற்கும் மேற்பட்ட கவிதைகளை ஒரு நோட்டில் எழுதி வைத்தேன். எனக்கு சோர்வேற்படும் போதெல்லாம் அதையெடுத்து வாசிப்பேன். அந்தளவிற்கு விக்ரமாதித்யனின் இரசிகனாகிவிட்டேன். அதில் எனக்கு மிகவும் பிடித்த மனதிற்கு நெருக்கமான சில கவிதைகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு முன் விக்ரமாதித்யன் கவிதை குறித்து ச.தமிழ்ச்செல்வன் எழுதியதையும் வாசித்துப் பாருங்கள்.