தொடர் நாவல்: நவீன விக்கிரமாதித்தன் (21) - பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்! கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்! - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் இருபத்தியொன்று: பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்! கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்!
தொலைகாட்சியில் காட்டுயிர்கள் பற்றிய ஆவணக்காணொளியொன்று ஓடிக்கொண்டிருந்தது. மிருகங்கள் ஒன்றையொன்று கொன்று தின்று இருப்பில் தப்பிப் பிழைக்கும் கொடூர காட்சிகளை உள்ளடக்கும் காணொளி.
"என்ன கண்ணா, அப்படியென்ன டிவியிலை போய்க்கொண்டிருக்கு நீ ஆர்வமாய்ப் பார்க்கிறதுக்கு" என்று கூறியபடி வந்தாள் மனோரஞ்சிதம். வந்தவள் அருகில் நெருங்கி அணைத்தாள்.
"காட்டுயிர்களைப் பற்றிய காணொளியொன்று கண்ணம்மா. தப்பிப்பிழைத்தலுக்காக உயிர்கள் ஒன்றையொன்று கொன்று தின்பதை விபரிக்கும் காணொளி. பார்ப்பதற்குக் கொடூரமான காட்சிகளைக்கொண்டது. நீ தாங்க மாட்டாய். பேசாமல் போய்விடு கண்ணம்மா" என்றேன்.
"கண்ணா, நான் இது போன்ற பல 'டொக்குமென்ரி'களைப் பார்த்திருக்கின்றேன். என்னால் இவற்றைத் தாங்கிக்கொள்ள முடியும். கொடூரமானவைதாம். ஆனால் இருப்பு இப்படித்தானே இருக்கிறது கண்ணா"
"கண்ணம்மா, நீ கூறுவதும் சரிதான். எனக்கு இதனைப் பார்க்கையில் பாரதியின் கவிதை வரிகள் சில நினைவுக்கு வருகின்றன."
"என்ன வரிகள் கண்ணா?"
"கண்ணம்மா, அவரின் விநாயகர் நான்மணி மாலை என்னும் கவிதையில் நினைவில் நிற்கும்படியான , ஆழ்ந்த பொருளுடைய பல வரிகளுள்ளன. அவரது புகழ்பெற்ற வரிகளான ' நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்வ் இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்.' என்னும் வரிகள் இக்கவிதையில்தான் வருகின்றன. இக்கவிதையில் வரும் மேலும் சில வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை கண்ணம்மா."
"என்ன வரிகள் கண்ணா?"
"கண்ணம்மா, அவை இவைதாம்:
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்.
மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவுமென் வினையா விடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புட நிணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானாகா சத்து நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ்
சாவு நீக்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க என்பேன்! இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுள மிரங்கி
'அங்ஙனே யாகுக' என்பாய், ஐயனே! "
" கண்ணா, நானும் இவ்வரிகளை வாசித்திருக்கின்றேன். "