எம்ஜிஆர் வேறு திமுக வேறு அல்ல என்னும் வகையில் தன் திரைப்படங்களில் திமுகவுக்காக எம்ஜிஆர் பிர்ச்சாரம் செய்து வ்ந்தார். திமுகவின் சின்னமான உதயசூரியன், அதன் கொடி வர்ணங்களை மிகவும் திறமையாக அவர் தன் படங்களில் உள்ளடக்கியதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் திமுகவை எடுத்துச் சென்றார். தவிர அவரது வசீகரம் மிக்க ஆளுமை, திரைப்படக்கதாபாத்திரத்தின் ஆளுமைப்பண்பு, அவரது ஈகைச் செயற்பாடுகள், ஆரோக்கியமான கருத்துகளை விதைக்கும் பாடல்கள், இவை தவிர தமிழர் வரலாற்றுடன் , கலைகளுடன் பின்னிப் பிணைந்திருக்கும் காதல், வீரம், அறம் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அவரது திரைப்படங்கள் இவையெல்லாம் எம்ஜிரை மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்தன.
இவ்வாறானதொரு நிலையில் எம்ஜிஆர் சுடப்பட்டபோது மக்கள் அதிர்ச்சி அடைந்ததைப்போல், எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலக்கப்பட்டபோதும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஏனென்றால் மக்களைப்பொறுத்தவரையில் எம்ஜிஆர் வேறு திமுக வேறு அல்ல. எம்ஜிஆரை விலக்கியதானது அவருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என்றே மக்கள் கருதினார்கள். அதனால் எம்ஜிஆர் மீது அநுதாபம் பொங்கியெழுந்தது. அந்த அநுதாபமும், அவர் மீதான தனிப்பட்ட விருப்பமும் இணையவே அவருக்கு வெற்றி இலகுவானது. அவர் இருந்தவரை மக்கள் அவரையே ஆட்சிக்கட்டில் இருத்தினார்கள்.
ஆனால் விஜ்ய் எம்ஜிஆர் அல்லர். அவரது நற்பணி மனறங்கள் மூலம் அவர் மக்கள் மத்தியில் , பல வருடங்களாக இயங்கி வந்திருக்கின்றார் அது ஆரோக்கியமான விடயம். மக்களின் விருப்பத்துக்குரிய வசீகரம் மிக்க நடிகர். ஆனால் அவரது திரைப்படங்கள் வன்முறை மிக்கவை. ஆக்ரோசமும், அடிதடியும், இரத்தக் கொட்டும் வன்முறைக்காட்சிகளும் நிறைந்தவை. எம்ஜிஆரின் ஆரோக்கியமான கருத்துகளை அதிகமாக உள்ளடக்கிய திரைப்படங்கள் அல்ல அவர் நடித்த திரைப்படங்கள்.
தற்போது விஜய்யிற்கு வரும் கூட்டத்துக்கு முக்கிய காரணங்கள்: அவரது நடிப்பால் கவரப்பட்ட இரசிகர்களின் ஆர்வம். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு வசீகரம் மிக்க அரசியல் ஆளுமைகளைக் கொண்டவர்கள் அற்ற எதிர்க்கட்சிகள். திமுகவில் கனிமொழி, ஸ்டாலின், உதயநிதி என்று வசீகர ஆளுமைகள் இருக்கின்றார்கள். இவற்றின் காரணமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் ஒரு ஆர்வத்தை, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்த ஆர்வத்தின் காரணமாகக் கூடிய, கூடும் கூட்டமே விஜய்யிற்கு வரும் கூட்டமும்.
அண்மையில் முகநூலில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அவர் அரசியல்வாதியல்லர். அதில் அவர் விஜய்யின் தமிழர் வெற்றிக் கழகத்துக்கா, திமுகவுக்கா உங்கள் வாக்கு என்று கேட்டிருந்தார் . பெரும்பாலானவர்கள் திமுகவே தங்கள் தேர்வு என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
தற்போதுள்ள அரசியலில் சூழலில் எவ்வளவுதான் நாம் தமிழர் சீமானும், ஏனைய அரசியல்வாதிகளும் திமுகமீது சேற்றை வாரி இறைத்தாலும், எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தபோது அவருக்கு அநீதி இழைத்ததாகக் கருதப்பட்ட கலைஞர் தலைமையிலான திமுகமேல் மக்களுக்கிருந்த ஆத்திரம் போல் தற்போது ஸ்டாலின் தலைமையிலான் திமுக மேல் மக்களுக்கில்லை. உண்மையில் ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் பெண்களுக்கான சமூக நலத்திட்டங்கள் காரணமாகப் பெண்கள் மத்தியில் அதற்கு நிறையவே செல்வாக்குண்டு. கட்டணமற்ற பஸ் போக்குவரத்து, மாதாந்த கொடுப்பனவு முக்கியமானவை. பீகாரில் நடந்த ராகுலின் பாதயாத்திரையில் கலந்து கொண்டமை, வெளிநாடுகள் சென்று தமிழக்துக்கான முதலீடுகளை ஊக்குவிப்பது இவையெல்லாம் ஸ்டாலினின் அரசியலுக்கு வலு சேர்ப்பவை.
அடுததது சமநீதி, சமத்துவம், பகுத்தறிவு , மதச்சார்பினை இவையெல்லாம் தமிழ மக்கள் மீது ஊறிக்கிடக்கும் அரசியல் சுலோகங்கள். இவற்றை மீறித் தமிழகத்தில் அரசியல் தலையெடுக்கும் சூழல் இன்னும் கனியவில்லை. த.வெ.க வெற்றி பெற்றால் , அதுவே பல வருடங்களுக்குப் பின்னர் திராவிடம் என்னும் பெயர் அல்லாது வெற்றியடைந்த கட்சியாக வரலாற்றில் கால் பதிக்கும். ஆனால் அதற்கான சாத்தியமில்லை என்பதே என் கணிப்பு. எப்பொழுதெல்லாம் எதிர்கட்சிகள் பிளவுண்டிருக்கின்றனவோ அப்பொழுதெல்லாம் திமுக மிகவும் இலகுவாக வெற்றிக்கனியைத் தட்டிச் சென்றிருக்கின்றது. அதிமுக, தவெக, நாம் தமிழர் , மதிமுக , பாமக என்று எதிர்க்கட்சிகள் பிளவுண்டு , எதிர்வரும் தேர்தலில் திமுகவை எதிர்த்துப் போட்டியிட்டால் மிகவும் எளிதாகத் திமுக ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும். அதே சமயம் எதிர்கட்சிகள் மத்தியில் உள்ள வசீகர ஆளுமை காரணமாக நடிகர் விஜய்யின் தவெக எதிர்க்கட்சியாக உ ருவெடுக்கும் சாத்தியங்கள் உள்ளன. அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிரிந்திருந்தபோது நடந்த தேர்தலில் திமுக வெற்றிக்கனியைத் தட்டியது. ஜெயலலிதா அணி எதிர்கக்ட்சியாக உருவானது. அது போல நடிகர் விஜய்யிற்கும் நடைபெறுவதற்கான சாத்தியங்களே அதிகம்.
அதிமுக பிளவுகள் நீங்கி ஒன்றிணைந்து , கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால், அதிமுக , தவெக என்று எதர்க்கட்சிகள் தொடர்ந்தும் பிரிந்திருக்கும் சூழலே இருக்கும். அந்நிலையிலும் சாதகம் திமுகவுக்குத்தான். தவெக, , அதிமுக கூட்டணி அனைத்தும் ஓரணியில் இணைந்து திமுகவை எதிர்த்தால் மட்டுமே , திமுகவை ஆட்சிக்கட்டிலிருந்து அகற்ற முடியும். அதற்கான சாத்தியங்கள் மிகவும் அரிதே.