அத்தியாயம் மூன்று!

இடைவேளை விட்டுத் தொடங்கிய காட்சியிலே, கண்ணுக்குத் தெரிந்தது ஆஸ்பத்திரி வார்டு. பார்வையின் கோணத்தை அங்குமிங்கும் ஓடவிட்டேன். சந்தேகமே இல்லை. திருநெல்வேலி “மேட்டுத் திடல்” (ஹைகிரவுண்ட்) அரசு மருத்துவ மனையேதான்.இரண்டு நாட்கள் சுயநினைவின்றிக் கிடந்ததை எதிரே சுவரில் தொங்கிக்கொண்டிருந்த காலண்டர் உறுதிப்படுத்தியது. உடலெங்கும் காயங்கள். முக்கியமாக வலது காலைச் சுற்றி ஏகப்பட்ட பாண்டேஜ் துணி, பந்துபோல திரட்டிச் சுற்றப்பட்டிருந்தது. தலைமாட்டில் கண்ணீருடன் அம்மா. வெறுப்புக்காட்டும் முகத்தோடு அக்கா. அவளின் கைத்தடியாக அருகே அத்தான். அக்கா, அத்தான் இருவருக்கும் காயங்களும், கட்டுக்களும் இருந்தபோதிலும் என்னளவுக்கு இல்லை. கண்களை அகலத் திறந்து எல்லோரையும் பார்த்தபோது, அக்காளின் சுடுகணைகள் திருப்பள்ளியெழுச்சி ஆகின.

“பொம்பளைங்க எப்பவுமே சொய அறிவோட நடந்துக்கணும்….. வண்டிய ஓட்டுறத்துக்கு ஸ்டேரிங்கைப் புடிச்சா தெருவைப் பாப்பாளா….  எங்களையெல்லாம் கைலாசம் அனுப்பப் பாத்திட்டியேடி….”

வேதனையின் மத்தியிலும் பலமாகச் சிரித்துவிட்டேன் நான். எனக்குள்ளே பேச நினைத்தது தவறுதலாக வார்த்தையாக வந்துவிட்டது.

“சொய அறிவு….. அப்பிடீன்னா என்னது அக்கா….”

“கொழுப்பைப் பாரு…. உனக்குச் சிரிப்புவேற வருதோ….. நான் எவ்வளவு சீரியசா பேசிட்டிருக்கேன்…..” கொதித்தாள் அவள்.

அம்மா குறுக்கிட்டாக. அவுக பார்வை அக்காமீது பதிய, வார்த்தைகள் மெதுவாகவும் அதேவேளை கூர்மையாகவும் வெளிவந்தன.

“ஏண்டி மூதி….. நீ பேசிறது உனக்கே நல்லாயிருக்காடி….. பனையால விழுந்து கெடந்தவனை மாடு ஏறி மிதிச்சிச்சாம்…. கொஞ்சமாச்சும் ஈவு இரக்கம் இல்லாமைப் பேசிறியே பாவி…. அவளுக்கு இந்த நெலமை ஆகிட்டேன்னு நான் எம்புட்டு வேதனைப்பட்டுக்கிட்டிருக்கேன்….. நீ கொஞ்சமாச்சும் ரத்தபாசமே இல்லாமெ இப்பிடியெல்லாம் பேசிறியே பாவி….. சாதாரணமா ஒரு நோயாளிய பாக்க வர்ரவங்ககூட, நோயாளி மனசுக்கு ஆறுதல் தர்ரமாதிரி, நாலு ஆறுதல் வார்த்தை சொல்லிப்புட்டுப் போவாங்க….. நீயெல்லாம் எதுக்குடி வந்தே…..”

அம்மாவைத் தொடர்ந்து, எனக்குள்ளே குறு குறுத்தது.

“வயசுவந்த பொண்ணைப் பக்கத்தில வெச்சுக்கிட்டு நீங்க வசந்த மாளிகை நடிக்கலாமா…..”

கேட்க முடியவில்லை. என்ன செய்வது….?

வயதின் தாக்கத்தினாலும், இளமையின் வேகத்தினாலும், வடிகாலை நோக்கி வடிந்தோட்த் துடித்துக்கொண்டிருக்கும் சிற்றாறின் குறுக்கே, பேரருவியின் நீரைக் கொட்டிவிடலாமா…..?

உள்ளமோ இன்னுமின்னும் ஊமைப் பாஷையைத் தனக்குள்ளே பேசிக்கொண்டிருந்தது. எனினும், அக்காளின் குணம் தெரியாததொன்றல்ல. “பிக்னிக்” போகும்போது, தன் கணவனுடன் மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவளோ அல்லது அதனையே இயல்பாகக் கொண்டவளோ எவளுமே தங்களது பிரயாணத்தின்போது, தம்மோடு வேறு யார் வருவதையும் நிச்சயமாக விரும்பவே மாட்டார்கள்.

ஆனால், அக்காளோ என்னை வலிந்தே அழைத்ததைப்பற்றிச் சிந்தித்தபோது, கன்னிப்பெண்ணான எனது இளமை உணர்வுகளைத் தூண்டிவிட்டு, வேடிக்கை பார்க்கவோ, அல்லது என்னிடமிருந்து வெளிப்படும் வேதனைகள், பெருமூச்சுக்கள், தவிப்புகள் ஆகியவற்றால் ஏற்படும் செயல்த் தடுமாற்றத்தை சாக்காக வைத்துக் கண்டிப்பதிலும், தண்டிப்பதிலும் தனக்கொரு பெருமையென நினைக்கவோ, அதன்மூலம் என்னை நாளுக்கு நாள் வேதனக்குள்ளாக்கி மனநலத்தைப் பாதிப்பிற்கு உள்ளாக்கும் செல்லாக் காசாக்கி, தன் மனத்துக்குள் உள்ள “சொத்து பற்றிய” திட்டங்களைச் செயல்படுத்தவோ……..

மொத்தத்தில், ஏதோ ஒரு தீய நோக்கு அவளை முழுமையாக ஆட்கொண்டுவிட்டதை என்னால் நன்கு புரிய முடிந்தது.

அவள் எதிர்பாராத தற்காலிக முடிவுகளும் ஓரளவுக்கு அவளுக்கு சாதகமாக அமைந்திருக்கலாம்.

“ஆப்பசிட் லைட்”டில் எடுக்கப்பட்ட புகைப்படம்போல, ஓர் உருவம் மட்டும் என் கண் முன்னே மறைமுக எதிரியாகத் தெரிகிறது. “அவுட் லைன்” னை மட்டும் வைத்துக்கொண்டு, உள்ளேயுள்ள “டீட்டேல்ஸ்” சை தேடினேன்.

அவை பலவித அனுமானங்களாகவும், அதேவேளை அறிவுக் குழப்பங்களாகவும் எனக்குத் தெரிந்தன.

ஏற்கனவே என்னிடமிருந்து வந்த சிரிப்பும், அம்மாவின் சூடான ஏச்சும், அக்காளுக்கு ஆவேசத்தை மூட்டின. பேச்சிலே சிறிது தொனியை ஏற்றினாள்.

“சிரிக்கிறியா…. சிரி….. நல்லா சிரிடீ…… விசயம் தெரியாமெ சிரிக்கிறே….. காலம் பூராவும் இனிக் கண்ணீர் வடிக்கப்போறதால இப்பவே சிரிச்சிடு…..”

அக்காளின் விஷவார்த்தைகள் என்னை விறைப்பாக்கின. முகத்திலிருந்த சிரிப்பு ரேகைகள் மெல்ல மறையத் தொடங்கின. புதிதாகப் பார்ப்பதுபோல அக்காளைப் பார்த்தேன்.

“அக்கா…. இம்புட்டு நேரமும் நீ பேசினே….. நான் ஊமையாட்டம் பேசாமெக் கிடந்தேன்…. இப்ப நான் பேசிறத நீ நல்லாக் கேட்டுக்க….. அழகில உன்னயவிட நான் ஒண்ணும் கொறைஞ்சவ இல்ல…. எங்கப்பா இருந்த காலத்திலயும் சரி, எறந்ததுக்கு அப்புறமும் சரி, என்னய யாருமே கட்டுப்படுத்தி வெச்சது கெடையாது….. அதே டயிம்ல நானும் கட்டாக் காலியாக திரிஞ்சதும் கெடையாது….. நம்ம குடும்பமானம் காப்பாத்தப் படணும்….. அப்பா பேரு கெட்டுப்போயிடக் கூடாது….. அத்தான் கவுரவம் போயிடக் கூடாதுன்னுதான், நான் என் மனசு போற பாதைக்கெல்லாம் குறுக்கெ மதிலைப் போட்டு வெச்சேன்…. அதை நீங்க மதிக்கத் தவறிட்டீங்க…. ஒங்க சொயநலத்துக்காக என்னய பொறக்கணிச்சு, எனக்கு செய்யவேண்டிய கடமைய செய்யாமெ காலத்தைக் கடத்திறீங்க….. பரவாயில்ல….. இண்ணிக்கு இல்லேன்னாலும் நாளைக்கு என்காலு கொணமாகத்தான் போகுது….. அதுக்கு அப்புறமா நான் யாரையுமே எதிர்பாக்கப் போறதில்ல…. எனக்கிண்ணு ஒரு வாழ்க்கைய அமைச்சிக்க என்னால முடியும்….. ஏன்னா நான் ஒண்ணும் சின்னப்பொண்ணு இல்ல…. மேஜரான பொண்ணு…..”

நான் பேசி முடிப்பதற்குள் “ஓ….” என்று அலறினாங்க அம்மா.

“ஐய்யோ தெய்வமே…..” என்றபடி தலையில் அடித்துக் கொண்டாங்க.

ஆனால், அக்காளோ பலமான நகைச்சுவைக் கதையைக் கேட்டதுபோல குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். அவள் முகத்திலே ஒரு வெ(ற்)றிக் களிப்பு.

ஒரே நேரத்தில், இரண்டு மாறுபட்ட சம்பவங்களைக் காணும்போது குழப்பமாக இருந்தது.

அக்காளின் பார்வையிலே ஏளனம் பரவிக்கிடந்தது.

“என்னடி சொன்னே…. ஓம்புட்டு வாழ்க்கைய நீயே அமைச்சிக்கப் போறியா….? நல்லாக் கேட்டுக்க லூசு….. இனி ஒன்னய நம்ம வீட்டு சமையல்காரப் பயல்கூட கட்டிக்க மாட்டான்….. ஏன்னா ஒனக்கு ஆப்பரேசன் பண்ணி, ஒன்னோட வலதுகால் முட்டுக்கு கீழ அறுத்து எடுத்து ஒண்ணரை நாளாச்சு…..”

பெரியதொரு பாறாங்கல்லு விழுந்ததுபோல தலை வலித்தது. இரண்டு கைகளாலும் பலமாக அழுத்திக்கொண்டேன்.

அம்மா அலறியதன் காரணம் இப்போதுதான் தெளிவாகத் தெரிந்தது. கண்கள் இருண்டுகொண்டு வந்தன.

டாக்டரின் சத்தம் மட்டும் தெளிவாகக் கேட்டது.

“எல்லாரும் வெளிய போங்க….. ஒரு பேசண்டைப் பாக்கிறமாதிரியா நடந்துக்கிறீங்க….. கொலையே பண்ணிட்டுத்தான் போவீங்க போல இருக்கு….. நர்ஸ்…. இவுங்களை வெளிய அனுப்புங்க…..”

(தொடரும்)