எம். பௌசரைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட 'தோழர் வேலு சிந்தனையும் செயலும்' எனும் இந்நூல் , எம்மிடையே வாழ்ந்த உன்னதமான மனிதனின் வாழ்நாட் போராட்டங்களையும், பல கருத்தியல்களையும் மையப்படுத்தி வெளி வந்திருக்கின்றது. ‘சமூகம் இயல்’ பதிப்பகத்தின் வெளியீடான இந்நூலில் பதினைந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்திலும் மேற்குலக நாடுகளிலும் அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் அவர் பற்றிய அனுபவங்களையும் அவரது அரசியல் சமூகச் செயற்பாடுகளையும் எழுதியுள்ளனர்.

‘’இழப்பதற்கு என்னிடம் உயிரைத் தவிர ஒன்றுமில்லை. ஆனால் போராடுவதற்கு ஒரு இலட்சியம் இருக்கிறது.’’எனும் சேகுவரா கூற்றுக்கு அமைய வாழ் நாள் முழுவதும் மக்களுக்காகத் தன் சிந்தனையையும் செயலையும் அர்ப்பணித்தவர் வேலு. இலண்டனில் முன்னோடி முற்போக்கு வட்டத்தின் செயற்பாடுகளில் இடப் பெறுகின்ற அரசியல் கருத்துநிலைகள், இலக்கியப் போக்குகள், நூல் குறித்த உரையாடல்கள், ஒடுக்குமுறைக்கு எதிரான வெளிப்பாடுகள் என்பவற்றில் வேலுவின் பங்களிப்பு காத்திரமாக இருந்ததென பௌசர் தன் பதிப்புரையில் குறிப்பிடுகின்றார். வேலு இயல்பில் மார்க்சிய லெனினிய கொள்கையாளர்; பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளைத் தெளிவாக உள்வாங்கியவர்; மாவோயிஸ்ட் இயக்கத் தொடர்பும் இந்திய கம்யூனிஸ்ட் (மக்கள் யுத்தக் குழு) பின்புலமும் தொடர்ச்சியான வாசிப்பு அனுபவங்களும் சிந்தனை ஆளுமையும் இவருக்கு மேலும் வலுச் சேர்த்தன.

லண்ட ன் – தமிழ் மொழிச் செயற்பாட்டகம் அமைப்பின் ஆரம்ப ஸ்தாபக உறுப்பினராகிய இவர், அமைப்புத் தொடர்ச்சியாக இயங்குவதற்கு சிறந்த ஆலோசகராக விளங்கி வந்துள்ளார். வடிவேலு என்பது இயற்பெயர் எனினும் தோழர் என்றால் அது வேலு தானென இலண்டன் இலக்கியச் சமூகத்தால் அன்பாக அறியப்பட்டார். ஆனாலும் இந்திய அரச வன்முறையாளர்களின் சித்திரவதைகளினாலும் கொலைகளாலும் கொல்லப்பட்ட தன் தோழர்களான எல் அப்பு, பாலன், சீராளன் ஆகியோரின் பெயர்களில் உள்ள எழுத்துக்களை சேர்த்துத் தன் பெயரைப் பூபாளன் என மாற்றியிருந்தார். இது அவர், தன் தோழர்களுக்குக் கொடுத்த மதிப்பாகவும் அன்பாகவும் கருதப்படுகின்றது.

தமிழக மின்சார வாரிய கணக்கெடுப்பாளராக பணியாற்றி வந்த இவர், தர்மபுரி மாவட்ட சிஐடியு ந ட த்திய போராட்டங்களில் இணைந்து செயற்பட்டிருக்கின்றார். இதுதவிர முற்போக்கு இளைஞர் அணி, முற்போக்கு மாணவர் சங்கம், புரட்சி பண்பாட்டு இயக்கம், ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம் ஆகியவற்றிலும் முனைப்புடன் தன் பங்களிப்பைச் செய்திருக்கின்றார். 1987 ஆம் ஆண்டு தொடக்கம் 1989 ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் அரச வன்முறைக்கு எதிரான போராட்டத்தின் தீவிர செயற்பாட்டாளராக விளங்கிய காரணத்தால், குண்டு வைத்திருந்தாரென, இவர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு நான்கு வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கும் தன் சக தோழர்களின் உரிமைக்காக்க குரல் கொடுத்து வந்ததுடன் அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உதவிகள் பல செய்து வந்திருக்கின்றார். பல ஆக்கபூர்வமான தீர்மானங்கள் ஏடுப்பதற்கு ஒரு போராளியாக முன்னோடியாக சக தோழர்களால் அறியப்பட்டிருந்தார். அவ்வகையில் பின்வரும் செயற்பாடுகள் இவரால் முன்னெடுக்கப்பட்டன என வரையறுத்துக் கொள்ளலாம்.

    கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்த்து நடந்த சைக்கிள் பேரணியைத் தொடக்கி வைத்தார்.

    மக்கள் யுத்தக் கட்சியை ஏம். எம். கோதண்டராமன் சந்தர்ப்ப அரசியலுக்கேற்ப தவறான வழிக்குக் கொண்டு செல்ல முனைந்த போது அதனை எதிர்த்து நின்றார்.

    உழைக்கும் ஏழை மக்களுக்காகப் போராடியமைக்காக தடா சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டதுடன் நான்கு வருடச் சிறைத்தண்டனையையும் பெற்று க்யூ பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

    குஜராத் முஸ்லீம் கொலை வழக்கை ஆராய்வதற்காகத் தோழர் அஜிதா தலைமையில் பெண் அமைப்பு அங்கு செல்ல, அவர்களுக்கு ஆதரவாக இருந்தார்.

    தடா சிறைக் கைதிகளைக் குடும்ப உறுப்பினர்கள் தவிர அனைவரும் வந்து பார்க்க அனுமதி கேட்டு அதில் வெற்றியடைந்தார். இன்று இந்த அனுமதி கிடைப்பதற்கு இவரும் இவரது தோழர்களுமே காரணமாக இருந்தனர்.

    அரசியல் கைதிகளை விலங்கு மாட்டாமல் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமெனப் போராடி பல அடி உதைகளுக்குப் பின் அந்த நடைமுறையைச் சிறைச்சாலைகளுக்குக் கொண்டு வரக் காரணமாக இருந்தார்.

    சிறை அடக்கு முறைகளை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தி, போராட்டமே வாழ்வின் விதி என்பதை நிரூபித்தார்.

    சிறைச்சாலையில் இருந்து விடுதலைப்புலிப் போராளிகள் தப்புவதற்கு உதவியதற்காக, இவரும் இவரது தோழர்களும் சிறையதிகாரிகளால் தாக்கப்பட்டனர்.

    இந்தியாவில் போராடும் உழைக்கும் வர்க்கத்துக்கும் சர்வதேச முற்போக்கு அமைப்புகளுக்கும் பாலமாக விளங்கினார்.

‘’இந்திய அரசின் முகத்திரையைக் கிழித்த தோழர் வேலுவின் வழக்கு எனும் கட்டுரையில் , இவர் தலைமறைவு வாழ இலண்டனுக்கு எவ்வாறு வந்தாரென்பதனையும் இவரைத் திருப்பி இந்தியாவுக்கு நாடு க ட த்துமாறு இந்திய அரசு பிரித்தானிய அரசிடம் கேட்டபோது நடைபெற்ற வழக்குகள் பற்றியும் விபரித்திருக்கின்றது. அரசியல் தஞ்சம் கோரி பிரித்தானியா வந்த போது இவருக்கு அகதி அந்தஸ்து கொடுக்கப்பட் டது. பின்னர் இந்திய அரசின் வேண்டுகோளுக்கேற்ப INTERPOL தங்களது இணையத் தளத்தில் இவரது புகைப்ப ட த்தைப் போட்டு தேடப்படும் குற்றவாளியாக்கியது. இதனால் பிரித்தானியாவில் 2013 இல் கைது செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளில் இவர் மீது வழக்குகள் போடப்பட்டன. நான்கு வழக்குகள் இவருக்கு எதிரான தீர்ப்பாக இருந்த போது, ஐந்தாவது வழக்கு இவருக்குச் சாதகமாக இருந்தமையால் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் இவர் தொடர்ந்து, உலக நாடுகளில் நடைபெறும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிரான செயற்பாடுகளை , உண்மையான ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்ததுடன் போராட்டங்களிலும் தன்னை இணைத்துக் கொண்டார்.

’’ வெற்று சுலோகங்களை உச்சாடனம் செய்யும் போலி புத்திஜீவிகளின் கூடாரத்தில் இருந்து அவர் வெகுதொலைவில் நிற்பவர்’’ என மு. நித்தியானந்தனும், ‘’அவர் வறட்டுத்தனமான அரசியல் சூத்திரங்களுக்குள் சிக்குப்பட்ட மூடுண்ட மனிதரல்ல’’ என சோபாசக்தியும், ‘’ அரசியலின் முக்கியத்துவத்தை அதன் அவசியத்தை அதன் தாற்பரியத்தை உணர்ந்து வாழ்ந்தவர்.’’ என தேசம் ஜெயபாலனும் ’’ அரசியல் முதிர்ச்சியும் உறுதியான கருத்தியல் அடித்தளமும் கொண்டவர்.’’ என பஞ்சுமிட்டாய் பிரபுவும் குறிப்பிடுகின்றனர்.

மகேஷ் இராமநாதன் தன்னுடைய கட்டுரையில் பின்வரும் சம்பவமொன்றை வேலுவின் கூற்றா கக் கூறுவது மிகவும் நெருடலைத் தருகின்றது.

‘’ கிருக்ஷ்ணா நான் வேலை செய்யும் நிறுவனத்துக்கு கிரானைட் கற்கள் வந்து இறங்கின. அவை பழைய தமிழ் செய்தித்தாள் காகிதங்களால் சுற்றப்பட்டிருந்தன. அவை சேலம், தருமபுரி மாவட்ட செய்தித்தாள்கள். என் மண்ணின் மலைகள் இந்த கான்க்ரீட் காடுகளின் ஆடம்பர பந்தாக்களுக்காக வெட்டிக் கடத்தப்படுகின்றன என நினைத்த அந்த நொடியில் நான் வெடித்து அழுதேன்.’’ தொடர்ந்து தாம் இருவரும் அழுததாக மகேக்ஷ் எழுதுகின்றார். அத்துடன் மர்க்சிம் கார்க்கியின் தாயையும் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாளின் கதைகளையும் கேள்விப்பட்டிருக்கின்றோம். அவற்றுக்குக் குறைந்ததல்ல பூபாளனின் தாயின் வாழ்க்கையென்று கூறுகின்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் மனிதமுகமாக விளங்கிய தோழர் வேலுவை பாவலரேறு பெருஞ்சித்திரனார் , ’’அரிமா’’ என வர்ணித்துள்ளாரென கணகுறிஞ்சி குறிப்பிடுவது முற்றிலும் உண்மையாகும். மானுட அறத்தின் இன்னொரு வடிவமாக வாழ்ந்த வேலுவின் எழுத்துகளும் வாழ்வும் இன்னும் பதியப்பட வேண்டுமென்பதே அனைவரது விருப்பாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.