இன்று (ஏப்ரில் 24)  டேவிட் ஐயா (எஸ்.ஏ. டேவிட் ஐயா) அவர்களின் பிறந்ததினம். அவரது பிறந்த தினத்தையொட்டி  'டேவிட் ஐயா வாழ்வும் மரணமும் (1924 - 2015) ' என்னும் தலைப்பில் காணொளியொன்று உருவாகியுள்ளது. 2012இல் உருவான காணொளி. இரு பகுதிகளைக் கொண்டது. சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் (யோகன் கண்ணமுத்து) அவர்களின் அறிவுறுத்தலின்பேரில்  உருவான காணொளியை இயக்கியவர் டி. அருள் எழிலன். காணொளிக்காக டேவிட் ஐயாவை நேர்காணல் செய்தவர் எழுத்தாளர் சயந்தன்.

இது பற்றி எழுத்தாளர் சயந்தன் தனது முகநூற் பதிவில்  குறிப்பிட்டிருப்பது:

"பிரான்சில் வாழும் அசோக் யோகன் சொல்லி 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போது சென்னையில் வசித்த டேவிட் அய்யாவை முடிந்த அளவு காட்சிப்படுத்தினேன்.  அவரது நீண்ட வாழ்வை விடியோவாக பதிவு செய்தேன்.  பல்வேறு சூழல் காரணமாக அவரது பிறந்த நாளையொட்டி (ஏப்ரல் 24) இப்போது அதனை வெளியிடுகிறோம். சாலமோன் டேவிட் அருளானந்தம் என்னும் டேவிட் அய்யா ஒரு  இயக்கமாக, சிந்தனையாக, தனிமனிதனாக வரலாறாகவும் கனவாகவும் வாழ்ந்தவர்.அவர் வாழ்வும் மரணமும் ஒரு அனுபவம் ஒரு செய்தி ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றிலும் போராட்ட வரலாற்றிலும் மின்னி மறையும் மேகம் போல சில செய்திகளையும் வாழ்வையும் விட்டு சென்றிருக்கிறார். 1924-ஆம் ஆண்டு பிறந்து 2015-ஆம் ஆண்டு மறைந்த டேவிட் அய்யாவின் வாழ்க்கை எங்கிருந்து துவங்கி எப்படி முடிந்தது என்பதை ஒரு தடமாக ஆவணப்படுத்துகிறது இந்த பதிவு."

கட்டடக்கலைஞராக, நகர அமைப்பு நிபுணராக இலங்கை மற்றும் பிற நாடுகள் பலவற்றில் பணியாற்றிய டேவிட் ஐயாவை அவரை இலங்கையில் நடைபெற்ற  அகிம்சை ரீதியிலான தமிழர் விடுதலைப்போராட்டம் தன் பக்கம் ஈர்த்தது. அதே சமயம் எழுபதுகளில் அவர் காந்தியத்  தத்துவத்திலும் ஈடுபாடு காட்டினார். அதன் விளைவாக உருவானதே காந்திய அமைப்பு. அவ்விதம் ஆரம்பிக்கப்பட்ட காந்திய அமைப்பு பின்னர் இலங்கைத்  தமிழர் ஆயுதப்போராட்டத்திலுமோர் அங்கமாக மாறியது காலத்தின் கோலம்.

பின்னர் அவற்றிலிருந்தெல்லாம் ஒதுங்கித் தமிழகத்தில் வாழ்ந்து வந்தவருடனான நேர்காணலிது. டேவிட் ஐயாவே தனது இளமைக்கால வாழ்வு பற்றிக் கூறுவதால் இந்நேர்காணல் முக்கியமான நேர்காணல். ஆவணச்சிறப்பு மிக்கதொரு நேர்காணல். அதற்காக இதற்காக உழைத்த அசோக், அருள் எழிலன் மற்றும் சயந்தன் ஆகியோருக்கு நன்றி.

இந்தக் காணொளியில் டேவிட் ஐயா தனது பால்ய , பதின்மப் பருவ அனுபவங்களை, தான் எவ்விதம் கட்டடக்கலைத்துறைக்கு நுழையும் சந்தர்ப்பம் ஏற்பட்டது, அதற்கு எவ்விதம் அவரது ஓவியத்திறமை உதவியது, அதனை இனங்கண்டு உதவிய ஆளுமைகள் யார் யார், தனது ஆங்கில அறிவு வளர்ச்சிக்கு உதவிய ஆசிரியர்கள் எவர் எனப் பல்வேறு விடயங்களையும் பகிர்ந்துகொள்கின்றார்.

காணோளியின் பகுதி இரண்டில் அவர் காந்தியம் எவ்விதம் அவரை ஆட்கொண்டது என்பது பற்றி விரிவாக விபரிக்கின்றார். அக்காணொளியில் அவர் தான் எவ்விதம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் சேர்ந்தியங்க வேண்டி வந்தது என்பது பற்றி, சந்ததியார் பற்றி, இயக்க மோதல்கள் பற்றி, சித்திரா அச்சகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சுந்தரம் பற்றியெல்லாம் விபரிக்கின்றார். சுந்தரத்தின் பெயர் அவருக்கு உடனடியாக நினைவுக்கு வரவில்லை. நேர்காணல் கண்ட சயந்தனுக்குச் சுந்தரம் பற்றித் தெரியவில்லையென்று நினைக்கின்றேன். அதனால் டேவிட் ஐயா சுந்தரத்தின் பெயரை நினைவுக்குக் கொண்டு வர முயற்சி செய்தபோது இவரால் சுந்தரத்தின் பெயரைக் கூற முடியாமல் போய்விட்டது. சுந்தரத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் சுந்தரம் தத்துவம், ஆயுதப் போராட்டம் இரண்டிலும் மிகுந்த அனுபவம், அறிவு மிக்கவர் என்று குறிப்பிடுகின்றார். சந்ததியார் பற்றிக் குறிப்பிடுகையில் சந்ததியார் கம்யூனிசம், முதலாளித்துவம், காந்தியம் பற்றி நன்கு அறிந்தவர் என்று குறிப்பிடுகின்றார். இவ்விதம் பல முக்கியமான விபரங்களை உள்ளடக்கியுள்ளது இரண்டாவது காணொளி. அத்துடன் வெலிக்கடைச் சிறைச்சாலை அனுபவம், வெலிக்கடைப்படுகொலை அனுபவம் , நான்காம் மாடி அனுபவம் எனத் தனது அனுபவங்களையும் விபரிக்கின்றார் டேவிட் ஐயா. மேலும் இக்காணொளியில் மருத்துவர் இராசரத்தினம் எவ்விதம் படுகொலை செய்யப்பட்டார் என்பதையும் விபரிக்கின்றார். அத்துடன் எவ்விதம் முஸ்லிம் கொமாண்டர் ஒருவர் (அவ்விதம்தான் டேவிட் ஐயா கருதுகின்றார்) தம்மைக் காப்பாற்றினார் என்பதையும் விபரிக்கின்றார்.

இவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்ளும் சமயம் அவரது இருப்பு தமிழகத்தில் முதுமையில், தனிமையில் கழிந்து கொண்டிருக்கின்றது. எப்படியோ இருந்திருக்க வேண்டியவரை இருப்பு இறுதியில் இந்நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. தனது உழைப்பையெல்லாம் தான் நம்பியதற்காக வழங்கியவர் அவர். அவரைப்பற்றி எண்ணும்போதெல்லாம் அவர் எவ்வளவு கனவுகளுடன் நாவலர் பண்ணையை வாங்கியிருப்பார் என்று நான் எண்ணுவதுண்டு. அவரை வைத்து நாவலொன்றும் எழுத வேண்டுமென்றும் நான் அவ்வேளைகளில் நினைப்பதுண்டு.

டேவிட்  ஐயா பற்றிய விரிவானதொரு நூல் உருவாகவேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. அவரது இளமைக்காலம், கட்டடக்கலைஞராக, நகர அமைப்பு வல்லுநராகப் பணிபுரிந்த காலம், ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் பங்களித்த காலம், இறுதியில் அவரது இறுதிக்காலம் எனப் பல்வேறு பிரிவுகளில் அவரது வாழ்க்கை விரிவாக ஆராயப்பட வேண்டும். ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதற்கு இது போன்ற முயற்சிகள் ஆரோக்கியமாக உதவும். ஏற்கனவே எழுத்தாளர் பெளசரும் டேவிட் ஐயாவின் மறைவினையொட்டி அவரைப்பற்றி, காந்தியம் அமைப்பு பற்றியொரு சிறியதொரு தொகுப்பு நூலை வெளியிட்டிருந்தார். எதிர்காலத்தில் மேலும் பல விரிவான நூல்கள் வெளிவரும். வெளிவர வேண்டும்.

இலங்கைத் தமிழர் வரலாற்றில் டேவிட் ஐயா முக்கிய ஆளுமைகளில் ஒருவர். எந்நாளும் நினைவு கூரப்பட வேண்டியவர்களிலொருவர்.

டேவிட் ஐயா வாழ்வும் மரணமும் பகுதி ஒன்று : https://www.youtube.com/watch?v=ESCHW48Gi0M
 
டேவிட் ஐயா வாழ்வும் மரணமும் பகுதி இரண்டு: https://www.youtube.com/watch?v=5RJL-tA_w6M
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.