
மேற்படி மாணவர் பகுதியைத் 'தாத்தா' நடத்தினார். தாத்தா ஓய்வெடுக்கும் சமயத்தில் 'பாட்டி' நடத்தினார். அங்கத்தவர்களாகச் சேரும் மாணவர்களின் படைப்புகள் தெரிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டதுடன் , சிறுகதைப்போட்டிகளும் நடத்தப்பட்டன. அ.ந.கந்தசாமியின் மாணவர் அங்கத்துவன் இலக்கம்: 181. அப்பொழுது அவருக்கு வயது 14 (1938).
மாணவர்கள் அனுப்பும் படைப்புகளைப்பற்றி தாத்தா (அல்லது பாட்டி) தமது கருத்துகளைக் கூறுவார்கள். அனுப்பிய படைப்புகள் நல்லாயிருந்தன, அல்லது தரமாகவில்லை போன்ற தமது கருத்துகளைச் சுவையாகக் கூறி அவர்களை ஊக்குவித்தார்கள். அவற்றில் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளர்களான அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தன் போன்றோருடனெல்லாம் இளைஞர் பகுதித் 'தாத்தா' உரையாடியிருக்கின்றார்.
அ.ந.கந்தசாமி ந.கந்தசாமி என்னும் பெயரிலும், அ.செ.முருகானந்தன் எஸ்.முருகானந்தன் என்னும் பெயரிலும், வரதர் ச.வரதராஜன் என்னும் பெயரிலும் இளைஞர் பகுதியில் எழுதியுள்ளனர். எழுத்தாளர் சொக்கனும் கவிதைகள் பல எழுதியுள்ளார்.
கல்வி அனுபந்தத்தில் அ.ந.கந்தசாமியின் மூன்று சிறுகதைகள் வெளியாகியுள்ளன (நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ள இதழ்களிலிருந்து) . பின்னர் விழாவில் வெளியிட்ட மலரில் ஒரு கதை வெளியாகியுள்ளது. மொத்தம் நான்கு கதைகள் வெளியாகியுள்ளன. அத்துடன் அவற்றில் இரு சிறுகதைகள் போட்டியில் முதற் பரிசினை வென்றிருக்கின்றன. விழாவில் கட்டுரைப்போட்டியிலும் முதற் பரிசைப்பெற்றுள்ளார். அவை பற்றிய விபரங்கள் வருமாறு:
ஈழகேசரி கல்வி அனுபந்தம் 19.2.39 - சிறுகதை- பூதன் - ந.கந்தசாமி -
ஈழகேசரி - கல்வி அனுபந்தம் - சின்னான் - 29.1.39 - சிறுவர் கதைப்போட்டியில் பரிசு பெற்ற கதை. இவர் இரண்டாம் முறையாகப் பரிசு பெற்றிருக்கின்றார். -
ஈழகேசரி - கல்வி அனுபந்தம் - 18.12.38 - முதற் பரிசு பெற்ற சிறுகதை - ஏழையின் விமோசனம் -
இளைஞர் விழா மலரில் வெளியான சிறுகதை: ராணி துர்க்கா.
உசாத்துணை:
1. ஈழகேசரி கல்வி அனுபந்தம் இதழ்கள்.
2. பசுமை நினைவுகள் -இரசிகமணி கனக செந்திநாதன் (வரதரின் வெள்ளி - 1.9.72 - இதழ்)
வரலாற்றுச் சுவடுகள்: 'வெள்ளி'யில் வெளியான இரசிகமணி கனக செந்திநாதனின் 'பசுமை நினைவுகள்'

இவ்விழா பற்றிய அரியதோர் ஆவணச்சிறப்பு மிக்க கட்டுரையொன்றினை இரசிகமணி கனக செந்திநாதன் அவர்கள் வரதர் வெளியிட்ட 'வெள்ளி' சஞ்சிகையில் (செப்டம்பர் 1 , 1972) தான் எழுதிய 'பசுமை நினைவுகள்' தொடரில் 'இளமைக் கும்மாளம்' என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். எழுதியுள்ளார். அக்கட்டுரையின் பக்கங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
அவ்விழா 20.5.1939 அன்று வண்னை வைத்தீஸ்வராக் கல்லூரியில் நடைபெற்றுள்ளது. விழாவின் பிரதான அம்சங்கள் வருமாறு:
1. சுவாமி விபுலானந்தர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை, மகாலிங்கசிவம் ஆகியோர் உரையாற்றினர். மாணவர்கள் அனைவரும் பதினாறு வயதுக்குட்பட்டவர்கள். இளைஞர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதலாவது பரிசு தங்கபதக்கம். இரண்டாவது பரிசு வெள்ளிப்பதக்கம். மாணவ எழுத்தாளர்கள் இருவருக்கும் இரு பரிசுகள். சங்கீதக் கச்சேரி. திறமையான பாடசாலைக்கு வெள்ளிக்கிண்ணம். கலந்து கொள்ளும் அனைவருக்கும் மதிய போசனம். எழுத்தாளர் சோ.சிவபாதசுந்தரமே மேற்படி விழா ஈழகேசரியின் இளைஞர் சங்கத்துக்காக நடத்தப்பட வேண்டுமென்று தூண்டியவர்.
கனகசெந்திநாதன் அவர்கள் தெல்லிப்பளையிலிருந்து புகையிரதத்தில் யாழ்ப்பாணம் செல்கிறார். அவருடன் சிறுவர்களான அ.செ.முருகானந்தனும், அ.ந.கந்தசாமியும் பயணிக்கின்றனர். விழாவில் வழங்கப்பட்ட பரிசு விபரங்கள் வருமாறு:
பேச்சுப்போட்டி:
முதற் பரிசு - நாவலர் தங்கப்பதக்கம்: சி.சிவானந்தன் , மகாதேவ வித்தியாசாலை , குரும்பச்சிட்டி.
இரண்டாவது பரிசு: இராமநாதன் வெள்ளிப்பதக்கம் - ஆ.நடராசா, அத்தியார் இந்துக் கல்லூரி, நீர்வேலி.
மூன்றாவது பரிசு: புத்தகபரிசு - நா.தம்பிராசா, அரசினர் பாடசாலை, புன்னாலைக்கட்டுவன்
கட்டுரைப்போட்டி:
முதற்பரிசு: அ.ந.கந்தசாமி (மகாஜனா ஆங்கில வித்தியாசாலை, தெல்லிப்பளை. அ.ந.கந்தசாமியின் வயது 15)
இரண்டாம் பரிசு: தி.ச.வரதராசன் (சைவப்பிரகாச வித்தியாசாலை, மூளாய்)
சிறந்த பாடசாலைக்கான வெள்ளிக்கிண்ணம் - உடுவில் பெண்கள் சுவிபாஷா பாடசாலை.
ஈழகேசரி இளைஞர் சங்கம் விழாவையொட்டிக் கல்வி மலரையும் வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றிருந்த முக்கிய படைப்பாளிகளின் ஆக்கங்கள்"
அ.ந.கந்தசாமி - ராணி துர்க்கா
அ.செ.முருகானந்தன் - பாரததேவியின் பாலிய வித்தகன்
தி.ச.வரதராசன் - பிரிந்தவர் கூடினால்
கனக செந்திநாதன் - காற்றில் விழுந்த கோது
மேற்படி மலரைப்பற்றிக் குறிப்பிடும் கனக செந்திநாதன் பின்வருமாறு கூறுவார்: 'அவை எழுப்பும் பசுமை நினைவுகள்தான் எத்தனை". ஆம்! 'வெள்ளி'யின் மேற்படி 'பசுமை நினைவுகள்' எழுப்பும் பசுமை நினைவுகள்தாம் எத்தனை! எத்தனை!
தம் இளைஞர் சங்கத்தை ஊக்குவிக்க விழாவெடுத்து அவர்களைச் சிறப்பித்த 'ஈழகேசரி'யை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மேற்படி 'வெள்ளி' (1.9.1972) சஞ்சிகையை வாசிக்க: http://noolaham.net/project/174/17335/17335.pdf
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.