கனடாவின் முதலாவது தமிழ் நாவல்" மண்ணின் குரல் பற்றிச் சில வார்த்தைகள். - வ.ந.கிரிதரன் -கனடாவிலிருந்து வெளிவந்த முதலாவது தமிழ் நாவல் நானறிந்தவரையில் நான் எழுதிய சிறு நாவலான 'மண்ணின் குரல்' நாவலே. இதனைப் பற்றி ஒரு பதிவுக்காகக் குறிப்பிட விரும்புகின்றேன். இந்த நாவல் பத்து அத்தியாயங்களை உள்ளடக்கிய சிறு நாவல். நாற்பது பக்கங்களைக் கொண்டது. இந்நாவலின் முதல் ஆறோ அல்லது  ஏழோ அத்தியாயங்கள் மான்ரியாலிலிருந்து 1984, 1985 காலப்பகுதியில் வெளியான 'புரட்சிப்பாதை' என்னும் கையெழுத்துச்சஞ்சிகையில் வெளியாகின. 'புரட்சிப்பாதை' என்னும் கையெழுத்துப் பத்திரிகை அக்காலத்தில் மான்ரியாலில் இயங்கிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடாக் கிளையினரின் கையெழுத்துச் சஞ்சிகையாக வெளியானது, அக்காலகட்டத்தில் கனடாவில் பல்வேறு ஈழ விடுதலைச் சார்ப்பு அமைப்புகளும் இயங்கி வந்தன. இந்தச் சஞ்சிகையை அக்காலகட்டத்தில் ஜெயந்தி, ரஞ்சன், சுந்தரி ஆகிய இளைஞர்களுடன் சேர்ந்து மேலும் சில இளைஞர்கள் நடாத்தி வந்தனர். இந்தக் கையெழுத்துப் பிரதியில் கவிதைகள் சில, கட்டுரைகள் சில மற்றும் 'மண்ணின் குரல்' என்னுமிந்தச் சிறு நாவல் ஆகியவற்றையும் எழுதியிருந்தேன். அக்காலகட்டத்தில் வெளியான எனது படைப்புகள் அனைத்தும் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை வலியுறுத்துபவையாகவே அமைந்திருந்தன. அதற்காகவே எழுதப்பட்டவை அவை. 'மண்ணின் குரல்' சிறுநாவல் முடிக்கப்பட்டு , 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான கவிதைகள், கட்டுரைகள் சிலவற்றை உள்ளடக்கி 'மண்ணின் குரல்' தொகுப்பு கனடாவில் 4.1.1987 அன்று வெளியானது. கனடாவில் றிப்ளக்ஸ் அச்சகத்தினரால் அச்சடிக்கப்பட்டு, மங்கை பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது.  எனது நாவல்களான 'மண்ணின் குரல்', 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' , மற்றும் 'கணங்களும் குணங்களும்' ஆகியவை ஒரு தொகுப்பாக 'மண்ணின் குரல்' என்னும் பெயரில் தமிழகத்தில் 1998இல் 'குமரன் பப்ளீஷர்ஸ்' நிறுவனத்தால் வெளியிப்பட்டது.  இரண்டு 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்புகள் என் படைப்புகளைத் தாங்கி வெளிவந்துள்ளன. இரண்டு தொகுப்பிலும் உள்ள பொதுவான ஒரே படைப்பு 'மண்ணின் குரல்' நாவல்தான்.

இந்த நாவல்தான் நானறிந்த வரையில் கனடாவில் நூலாக வெளிவந்த முதலாவது தமிழ் நாவல். இந்த நாவலுக்கு முன்னர் வேறெந்த நாவலாவது வெளியாகியிருந்தால் அறிந்தவர்கள் அறியத்தரவும். இந்த நூலுக்கு அட்டைப்படம் வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. ஓவியத்தைச் சிறிது நவீனத்துவபாணியில் வரைந்திருந்தார். இதனையே பின்னர் தமிழகத்தில் வெளியான 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் பயன்படுத்தியிருந்தனர்.

இந்த முதலாவது மண்ணின் குரல் தொகுப்பிலுள்ள மண்ணின் குரல் சிறுநாவலின் அடிப்படைக்கருத்து இதுதான்: இக்கதையின் பிரதான பாத்திரம் அநபாயன். சாதாரண இளைஞான அவன் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் எவ்விதம் இணைந்து போராடப் புறப்படுகின்றான்; எவ்விதம் சூழல்கள் அவனை அவ்வாறு போராடத் தள்ளி விடுகின்றன என்பது பற்றியதுதான் நாவலும். அவனது காதலியான சாரதாவின் அக்காவான கமலா டீச்சர் ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும் சமயம் அவ்வழியால் வந்த இலங்கை இராணுவத்தினர் சிலரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, வீதியின் ஓரத்தே தூக்கி எறியப்பட்டு விடுகின்றாள். அதனால் பாதிக்கப்பட்ட அவள் அவளது காதலான விடுதலைப் போராளியான ஈஸ்வரனுடன் இணைந்து போராடப் புறப்பட்டு விடுகின்றாள். அவ்விதம் செல்லும்போது அவள் ஒரு கடிதமொன்றினையும் எழுதி வைத்துவிட்டுச் செல்கின்றாள். அதிலவள் பின்வருமாறு எழுதியிருப்பாள்:

"தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு நான் கோழையல்ல. வாழ்வினைச் சவாலாக ஏற்கும் பக்குவம் எனக்கு , உங்கள் மகளுக்கு நிறையவேயுண்டு அப்பா. உண்மையில் என்னை அந்தச சம்பவம் பாதித்துத்தான் விட்டது. அந்தப் பாதிப்புடன் தொடர்ந்தும் அதனை அப்படியே ஜீரணித்துக்கொண்டு வாழ்வதற்கு நிச்சயம் முடியவே முடியாது. எமது சமுதாயத்தில் ஏற்கனவே பெண்கள் வெறும் பண்டமாற்றுப் பொருள்களாகத்தான் வாழ்கின்றார்கள். அத்துடன் இப்போது தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவக் காடையரின் காமுக வெறியாட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்கள். தமிழர்களின் போராட்டத்தில் பெண்களும் ஆண்களுடன் தோளுயர்த்திப் போரிட வேண்டிய தருணம் வந்து விட்டதாகக் கருதுகின்றேன். ஆமாம் அப்பா! எனது தாய் நாட்டு விடுதலைக்கான வேள்வித்தீயினில் குதிப்பதற்கு முடிவு செய்து விட்டேன். உங்கள் மகளைப் பற்றிய கவலையினை இனி விடுங்கள்.

ஈஸ்வரனை எனது வாழ்வில் கணவராக அடைந்து குடியும் குடித்தனமுமாக வாழ்வதற்கு எமது இன்றைய நிலைமை எம்மை அனுமதிக்கவில்லை.  ஆயினும் எமது மக்களின் விடுதலைக்கான போரில் அவருடன் இணைந்து போராடுவதைப் பெரும் பேறாகக் கருதுகின்றேன்.

அப்பா! உங்களைப் போன்ற ஒரு தந்தைக்கு ஏற்பட்ட நிலைமை எந்தத் தமிழனிற்கும் ஏற்படக்கூடாதென்றால்.. என்னை நீங்கள் நிச்சயம் வாழ்துவீர்களென்ற நம்பிக்கை  நிறையவேயுண்டு. "

இதன் பின்னர் அநபாயனும் கமலா டீச்சர் வழியில் செல்வதற்கு முடிவு செய்கின்றான். சாரதாவுடன் வரும் அவனது உரையாடல்கள் மூலம் அவனது எண்ணம் வெளிப்படுத்தப்படுகின்றது. உதாரணத்திற்குப் பின்வரும் உரையாடலினைக் குறிப்பிடலாம்:

"சாரதா, விடுதலைப் போரில் ஆண்கள், பெண்களுட்படக் குதிக்க வேண்டிய காலம் தவிர்க்க முடியாதபடி ஏற்பட்டு விட்டது. விடுதலைப் போராளிகளுக்கு உறுதுணையாக மக்கள் யாவருமே தங்களால் இயன்ற வகையில்  பங்களிப்புச் செய்ய வேண்டிய வேளை இது. சாரதா, உனக்கு நான் ஒன்று சொல்கிறேன். வெகு விரைவிலேயே உன் அக்காவின் வழியில் செல்வதற்கு நான் முடிவு செய்து விட்டேன்"

"ஆமாம் சாரதா, என்னைப் பொறுத்தவரையில் நானொரு சாதாரண ஆசாபாசங்களைக் கொண்ச சாதாரண மனிதனே. ஆனால் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் சிங்கள இராணுவத்தின் அடக்குமுறைக்கெதிராகப் போரிடாது போனால் நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணிற்குச் செய்ய வேண்டிய பங்களிப்பினின்றும் தவறியவனாவேன். ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பிறக்கும் மண்ணுடனானதொரு கடமை இருக்கவே செய்கிறது. அவனது வாழ்வு அம்மண்ணில் நிலவிடும் சூழ்நிலைகளினாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.  அவன் தாயின் முகத்தில் மகிழ்ச்சியினைக் காண வேண்டுமானால் தாய்க்குத் தாயான அவன் பிறந்து தவழ்ந்த மண்ணின் மகிழ்ச்சி நிலவ வேண்டும்.

சாரதா 'எந்த மண்ணில் அநீதியும் அக்கிரமும் தாண்டவமாடுகிறதோ, எந்த மண்ணில் பொய்மை மலிந்து கிடக்கின்றதோ, எந்த மண்ணில் போற்றிட வேண்டிய பெண்மை புழுதியிலே புரண்டு கிடக்கிறதோ, அம்மண்ணில் அமைதியும், இன்பமும் நிலவுவதில்லை. குடும்ப உறவுகள் குலைந்து விடுகின்றன. அம்மண்ணின்  மைந்தர்களின் விழிப்பினாலேயே , விடுதலைப் போரினாலேயே அங்கு நீதி நிலை நிறுத்தப்படுகின்றது.' என்று எனக்குப் பிடித்த பிரபல நாவலாசிரியர் நந்தி தேவன் புனிதப் பயணம் என்ற நாவலில் கூறியிருப்பதுதான் எத்துணை உண்மையானது."

[ இந்த நாவல் எழுதப்பட்ட காலகட்டத்தில் இருந்த என் மனநிலையினை மேலுள்ள எழுத்து பிரதிபலிக்கும். கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து படைக்கப்பட்ட நாவலிது. மேலுள்ள பந்தியில் வரும் 'அம்மண்ணின்  மைந்தர்களின்' என்னும் சொற்களுக்குப் பதிலாக அம்மண்ணின் மக்களினாலேயே என்னும் சொற்களையே பாவித்திருக்க வேண்டும். மைந்தர்கள் என்பது பெண்களை ஒதுக்கி விடுவதால் மேலுள்ள பதம் சரியானதல்ல. அதுபோல் மனிதன், கற்பழிப்பு போன்ற சொற்கள் நாவலில் வந்திருந்தால், அவையும் அடுத்த பதிப்பினில் களையப்பட வேண்டியவை.  ]

விடுதலைப் போராளியும் , கமலா டீச்சரின் காதலனுமான ஈஸ்வரன் சாமியார் வேடத்தில் சுற்றித்திரிகின்றான். அவ்விதமான சமயமொன்றில் அநபாயனுடனும் அவனுக்குத் தொடர்பு ஏற்படுகின்றது. ஈஸ்வரன் அநபாயனை அரசியல் மயப்படுத்துகின்றான். இறுதியில் ஒரு நாள் அவனுடன் அநபாயன் போராட்டத்தில் இணைந்து விடுகின்றான். அவர்களுக்கிடையில் நடைபெறும் உரையாடல்கள் சில வருமாறு:

"ஆகா, அந்தியின் சிவப்பிலும் ஒரு தத்துவமே தெரிகிறது. "

சிந்தனையினின்றும் நீங்கியவனாக அநபாயன் திரும்பினான். எதிரில் சாமியார் நின்றிருந்தார்.

"இரவு என்னும் கொடுங்கோலன் பகலைக் குத்திக் குதறியதன் விளைவோ இந்தச் சிவப்பு.."

என்றபடி அருகிலமர்ந்த சாமியாரையே நோக்கினான் அநபாயன்.

"இவ்வுலகில் வாழ்வே ஒரு போராட்டம்தான். ஒவ்வொரு உயிருமே தனது வாழ்விற்காகப் போராடிக் கொண்டுதானிருக்கிறது. போராட்டமென்பது இயற்கையில் இயல்பாக நியதியாகவே உள்ளது."

மேலும் தொடர்ந்தார்:

"இயற்கையின் முரண்பாடுகளும், போராட்டங்களுமே வரலாற்றை வழி நடாத்திச் செல்கின்றன. ஆதியில் மனிதனின் அகவுலகோ இருண்டு கிடந்தது. அறியாமை அங்கே குடிகொண்டிருந்தது. அவன் தன் அறியாமையின் விளைவாக புற உலகில் நிலவிய முரண்பாடுகளைப் பிழையாகக் கையாண்டதன் விளைவோ... பிரச்சினைகளைச் சிக்கலாக்கியது.  அவனது அறிவு வளர வளர, முரண்பாடுகளை அவன் கையாண்ட விதம், பழைய முரண்பாடுகள் இருந்த இடத்தில்  புதிய முரண்பாடுகளைக் குடியமர்த்தின. இத்தகைய புதிய முரண்பாடுகளை அவன் தீர்க்கையில் மேலும் சில முரண்பாடுகள் உருவாகின.."

இவ்விடத்தில்  அநபாயன் இடை மறித்தான். "ஐயா , முரண்பாடுகள் முரண்பாடுகள்  என்கின்றீர்களே.  அதென்ன முரண்பாடு. எவை எவற்றிற்கிடையிலெல்லாம் முரண்பாடு. விளக்கிவீர்களா?'

இதற்குச் சற்று நேரம் அமைதியாகவிருந்து விட்டுச் சாமியார் தொடர்ந்தார்:

" தம்பி, மனிதனின் அகவுலகை எடுத்துக்கொள்வோம். அவன் மனதில் நல்ல உணர்வுகளுமுள்ளன. அதே சமயம் கெட்ட உணர்வுகளுமுள்ளன. இவையிரண்டும் முரண்பட்ட உணர்வுகளல்லவா? இவைதாம் அகவுலக முரண்பாடுகள்.  இம்முரண்பாடுகளை எவ்வகையில் கையாளுகின்றானென்பதில்தான் அவன் வாழ்வு ஒன்றில் சிறக்கிறது அல்லது சிறுக்கிறது. "

இவ்விதமாகத் தொடரும் உரையாடலில் சாமியார் சமுதாயத்தில் நிலவும் வர்க்க ரீதியிலான, சாதி ரீதியிலான, இனம், மதம், மொழி ரீதியிலான  சமுதாய முரண்பாடுகளை விளக்கிச் செல்வார்.  இவ்வுரையாடல்கள் இந்நாவலின் நோக்கத்தினை வெளிப்படுத்துவன என்பதாலிங்கு குறிப்பிடுகின்றேன்.

அச்சமயத்தில் எதிர்பாராதவிதமாக இராணுவத்தினர் எதிர்ப்படுகின்றார்கள். துவக்குகளுடன் அவர்களை நோக்கி வரும் அவர்களை ஈஸ்வரன் தனது தோற் 'பைக்கு'ள் மறைத்து வைத்திருந்த 'சப் மெஷின் கன்' மூலம் தாக்கி அழிக்கின்றார். அத்துடன் அநபாயனும் அவருடன் இணைந்து போராடச் சென்று விடுகின்றான்.

மேலுள்ள 'மண்ணின் குரல்' தொகுப்பிலுள்ள இரண்டு கட்டுரைகள்:

1. பாரதி கண்ட சமுதாயமும், தமிழீழமும். ஈழத்தமிழர்களின் உண்மையான விடுதலை தேசிய விடுதலையுடன் வர்க்க விடுதலையும் சேர்ந்தால் மட்டுமே பூரணமாகும் என்பதை வலியுறுத்தும் சிறு கட்டுரை.

2. விடுதலைப் போரும் பெண்களும் - பெண்கள் விடுதலையும் பாரதியும். இதுவும் தேசிய மற்றும் வர்க்க விடுதலையினை வலியுறுத்தும் சிறு கட்டுரை.

இத்தொகுப்பில் 'மாற்றமும் ஏற்றமும்', 'அர்த்தமுண்டே', 'விடிவிற்காய்', 'புல்லின் கதை இது', 'ஒரு காதலிக்கு', 'மண்ணின் மைந்தர்கள்', 'புதுமைப் பெண்', மற்றும் 'பொங்கட்டும் பொங்கட்டும்' ஆகிய கவிதைகளுமுள்ளன. அனைத்துமே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டதினை மையமாகக் கொண்டவை.

இந்தத் தொகுப்பிலுள்ள 'மண்ணின் குரல்' கனடாவின் முதற் தமிழ் நாவல் என்பதைப் பதிவு செய்வதற்காகவே இந்தப் பதிவினைப் பதிவு செய்கின்றேன். இந்த நாவல் ஒரு கருத்தினை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறு நாவல். ஈழத்தமிழ் மக்களுக்கெதிராக இனக்கலவரங்கள், படையினரின் கொடிய அடக்குமுறைகள் ஆகியன கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில், கிளர்ந்தெழுந்த தமிழர்களின் விடுதலைப் போராட்ட உணர்வுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். அதே சமயம் கனடாவிலிருந்து வெளியான முதலாவது நாவலென்று முக்கியத்துவமும் இதற்குண்டு.

இச்சிறுநாவலை நூலகம் தளத்திலுள்ள 'மண்ணின் குரல்' என்னும் எனது நாவல்களின் தொகுப்பிலும் வாசிக்க முடியும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.