ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் கண்டு எல்லோரும் பிரமித்துக்கிடக்கின்றார்கள். தமிழகத்து மக்கள் எல்லோரும் 'தலைவர்' படமென்று குடும்பம் குடும்பமாகச் செல்கின்றார்களாம்.எனக்கு இம்மக்களின் உளவியலைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
 
ஜெயிலர் படத்தில் தேவையற்ற விதத்தில் வன்முறைக் காட்சிகள் அமைந்துள்ளன. உதாரணத்துக்கு ஒன்று. திரைப்படத்தின் ஆரம்பத்தில் ரஜனிகாந் தன் மகனைக்கொன்று விட்டதாகக் கருதி மூவரை கொலை செய்து விடுகின்றார். ஒருவரைக் கொன்று சாக்கில் தூக்கி வந்து யோகிபாபுவுடன் சேர்ந்து பாலமொன்றிலிருந்து தூக்கி எறிந்து விட்டு இயல்பாக, ஏதோ வெற்றிகரமான காரியத்தைச் செய்து விட்டதைப்போல் செல்கின்றார்கள்.
 
பின்னர் இறுதியில் அதே ரஜனிகாந்த் உயிரோடிருக்கும் தன் மகனை அவனது குற்றங்களுக்காகப் பொலிசில் சரண்டையச் சொல்கின்றார். அவன் மறுக்கின்றான். அவருக்கெதிராகத் திரும்புகின்றான். விளைவு அவனையும் போட்டுத் தள்ளுகின்றார்.  ஏற்கனவே அவன் இறந்து விட்டதாகக் கருதி மூவரைப் போட்டுத்தள்ளிய கொலைக்குற்றவாளி, தன் உயிரைக் காப்பதற்காகத் தன் மகனையே போட்டுத்தள்ளுகின்றார். தலைவரின் இரசிகர்கள் சொல்கின்றார்கள் 'படத்தின் முடிவு சுப்பர். எதிர்பார்க்கவே முடியாது. சூப்பர்' இது எப்படி இருக்கு?
இவ்விதமான காட்சிகளைக் கொண்ட திரைப்படத்தை எவ்விதம் மக்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று பார்க்கின்றார்கள்! எனக்குத் தமிழ் மக்களின் உளவியலைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
 
இதே சமயம் எம்ஜிஆரின் திரைப்படங்களை ஒரு கணம் நினைத்துப்பார்க்கின்றேன். பல படங்களில் முடிவில் கதாநாயகனும், வில்லனும் சமாதானமாகப் போவார்கள். வில்லன் மனந்திருந்தி விடுவான். படத்தில் எங்குமே இரத்தம் வடியும் காட்சிகள் பெரிதாக இருக்காது. சில சமயங்களில் வில்லனின் தாக்குதலில் கன்னத்தில் இலேசாகக் கீறி இரத்தம் வரும். அதைத்தொட்டுப் பார்த்து விட்டு ஆக்ரோசமாக எதிர்த்தாக்குதல் செய்வார் எம்ஜிஆர். அவ்வளவுதான். ஆனால் சண்டைக் காட்சிகள், வாள் வீச்சுக்கள், சிலம்பக் காட்சிகள் அலுக்காத வகையில் எடுக்கப்பட்டிருக்கும்.
 
இத்திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள தேவையற்ற, காரணமற்ற வன்முறைக் காட்சிகள் இல்லாவிட்டாலும் படம் நிச்சயமாக வெற்றிபெற்றிருக்கும். அக்காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். இறுதியில் அவரே மகனைச் சட்டத்தின் முன் நிறுத்துவதாகக் கதையை அமைத்திருக்கலாம். இக்காட்சிகளை, கதை அமைப்பை எவ்விதம் ரஜனி அனுமதித்தார் என்பது வியப்புக்குரியது.