கடந்த கால நிகழ்வுகளின் பதிவு வரலாறாகும். எட்டுத்தொகை நூலான அகநானூற்றின் வழி அக்கால மக்களின் வரலாற்றினையும் சமுதாய வாழ்வியலையும் நாகரிகப் பண்பினையும் அறிய முடிகிறது. மேலும்  மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. மூவேந்தர்கள் பற்றிக் காணலாகும் செய்தியினை எடுத்துரைப்பதே  இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

மூவேந்தர் மரபு

    தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே மூவேந்தர் ஆட்சி அமைப்பு நிலை பெற்றுவிட்டதை,

வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு  (தொல்.பொருள். 384)

 என்னும் கூற்றால் அறியலாம். மூவேந்தரைக் குறிப்பிடும் தொல்காப்பியர் சேர, சோழ, பாண்டியர் எனக் குறிப்பிடாமல் அவர் தம் மாலையினைப்

போந்தே வேம்பே ஆரென வரூஉம்
மாபெருந் தாணையர் மலைந்த பூவும் (தொல்.பொருள்.63)

எனக் கூறுகின்றார்.

மாலைக்கு உரிமையுடைய சேர,சோழ, பாண்டியர் என உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. அகநானூறும் சேர, சோழ, பாண்டியரை மூவர் எனப் பின்வருமாறு குறிப்பிடுகின்றன. தமிழ் செழு மூவர் (அகம்.31:14) இதில் மூவர் என்று சேர, சோழ, பாண்டியரே குறிக்க வந்துள்ளது தெளிவாகின்றது.

சேரர்

வேந்தர் குடிபெருமையைச் சுட்டுவதற்கு  அவரின் குலப்பழமையை இறைமையோடு குவித்து வழங்குவது மரபாக இருந்திருக்கின்றது. சோழரை ஆரிய மரபினர் என்றும் சந்திர மரபினர் என்றும் இலக்கியங்கள் இயம்புகின்றன.

அன்னி

அன்னி குறுக்கைப் பறந்தலை,திதியன்
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி (அகம். 45:9-10)

அன்னி என்பான் குறுங்கையின் கண்ணுள்ள போர்க்களத்தில் திதியன் என்பனாது புன்னைமரத்தின் பெரிய அடியை வெட்டி வீழ்த்தித் துண்டுகளாகிய பொழுது அவன் புகழைப் பாடி பரவிய கூத்தர் இன்னிசை முழக்கம் செய்தனர் என்ற குறிப்பு அகநானூற்றில் காணப்படுகிறது.

பிட்டன்

ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்ந்த (அகம். 77:16-17)

மேற்கண்ட  வரியின் வழி, சேரனின் படைத்தலைவனும், வளைந்த வில்லினைத் தன் பெரிய கையிற் கொண்டவனும், தள்ளினது களிப்பினை மிக விருப்பவமுமான பிட்டன் மன்னன் என்பவன், அடுத்த வேல் பகைவர்களுக்கு துன்பத்தைத் தரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நசையின் வாழ்நர்க்கு நன்கலம் கரக்கும்
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன் (அகம்: 14:11-12)

பிட்டன் என்பான் பழியற்ற போரில் வல்ல சேரனின் படைத்தலைவன் பரிசில் பெறும் வேட்கையுடன் வாழ்விற்குச் சிறந்த அணிகலன்கள் மிகுதியாகக் கொடுப்பவன். வெற்றிக்கும் தப்பாத வாட்படையும், வீரத்திற்கும் வெற்றிக்கும் கட்டப்பட்ட கழலினையும்  உடையவன் அவனது குதிரைமாலை மேகம் தவழ்கின்ற உயர்ந்த சிகரத்தையுடையது.

 சோழன் – பெரும்பூட் சென்னி

இவனைப் பற்றிய செய்தி அகநானூற்றில் ஒரு பாடலில் இடம்பெற்றுள்ளது.

……………..  ……….    திண்தேர்க்
 கணையன் அகப்படக் கழுமலம்  தந்த
பிணையன் கண்ணிப் பெரும்பூட்  சென்னி  (அகம்.4:12-14)

என்ற அகநானூற்றுப் பாடலில் குடவாயிற் கீரத்தனர், மலர்மாலைத் தலையில் சூடிய பெரும் பூட்சென்னி என்னும் சோழமன்னன், சேரனுக்கு உரிய கழுமலம் என்னும் ஊரை முற்றுகையிட்டு அதன் பகுதிகளை அழித்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிள்ளிவளவன்

வளம்கெழு சோழர் விளங்கு படைநெறி
நிலங்களை வெஃகிய பொலம் பூண் கிள்ளி  (அகம். 205:9-10)

என அகநானூற்றில் நக்கீரர் என்னும் புலவர், கோசமுடைய படைகளைக் கொன்று நூழிலாட்டி, அவருடைய நிலத்தைக் கைக்கொள்ள விரும்பினான் கிள்ளி வளவன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தித்தன்

பரணர் என்னும் புலவர்,

மழைவளம் தருஉம் மாவண் தித்தன்
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்  (அகம்: 6:4-5)

உறையூரில் இருந்து ஆட்சி புரிந்து வருபவன் சோழ மன்னன் தித்தன் இவனுடைய நாட்டின் மழை வளம் மிகுந்திருப்பதனால் நெல்வளம் மிகுந்து காணப்படும் என்று கூறியுள்ளார்.

நொச்சி வேள்த்தித்தன் உறந்தைக்
கல்முதிர் புறங்காட் டன்ன  (அகம்: 226:13-14)

என்ற அகநானூற்றுப்பாடலில் தன்னுடைய தலைநகரால் உறையூரில் உள்ள காட்டில் கற்கள் மிகுந்துள்ள காவற்காடு போன்று காணப்படும் என்று இவனைப் பற்றிக் குறிப்பிடப்படுள்ளது.

பாண்டியர்

சேர, சோழ வேந்தரின் தலைநகாங்களை விட பாண்டியரின் மதுரையும், கொற்கையும் சிறக்கப் பேசப்படுகின்றன. பாண்டிய நாட்டு பேரூர்களில் மதுரையைப் போல் கொற்கையும், சிறப்புற்று விளங்கியது.
இக்கொற்கைப் பட்டினத்தே இலக்கியங்கள் பலவாறு சிறப்பித்துள்ளன. அறம் பிறபுது பாண்டியர் கொற்கையைக் காத்து வந்தனர். என்பதை,

மறப்போர் பாண்டியர் அறதிற்காக்கும்
கொற்கை  (அகம்: 27:8-9)

என அகநானூறு புகழ்வதால் அறியலாம். அகநானூற்றில்  பாண்டியர்கள் மாறன், தென்னவன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பசும்பூண் வழுதி

இவணைப் பற்றிய செய்திகள் நற்றிணையில் (358) ஒரு பாடலும், அகநானூற்றில் ஒரு பாடலும் இடம் பெற்றுள்ளது. மதுரை மருதன் இளநாகனார் என்னும் புலவர்.

……………………..   …………… என்னார்
ஒருபுறம் கண்ட தாள்தோய் தடக்கை
வெல்போர் வழுதி  (அகம்.312:10-12)

பகைவர் தனக்கு அஞ்சி ஓடும்போது அவருடைய முதுகைப் பார்த்த முழங்காலைத் திண்டுகின்ற பெரியகையினையும், அப்பகைவரைத் தோற்கடிக்கும் வல்லமை கொண்ட போர்த்தொழிலையும் உடையவன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பசும்பூண் பாண்டியன்

பரணர் என்னும் புலவர், வில்கொழுத்தானைப் பசும் பூண் பாண்டியன், தன் வெற்றியை கொண்டாடும் பொருட்டு, தன்னுடைய கொடிகளை உயர்த்திப்பிடித்தான் என்ற  செய்தியினைக் குறிப்பிட்டுள்ளார்.

…………………… பொருநர்
செல்சமம் கடந்த செல்லா நல்லிசை
விசும்பினர் வெண்குடைப் பசும்பூண் பாண்டியர்
பாடுபெறு சிறப்பின் கூடல்அன்ன  (அகம். 213:10-13)

என்ற அகநானூறு பாடலில் வெண்கொற்கள் கொடையினையும், அணிகலன்களையும் கொண்ட பசும்பூண் பாண்டியன் மதுரை நகரில் இருந்து ஆட்சி புரிந்தான்.

வாடாப் பூவின் கொங்கர் ஒட்டி
நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன்  (அகம். 251:4-5)

என்ற பாடலில் நக்கீரர், பொற்பூவினை அணிந்து தன்னோடு போர் செய்ய வந்த கொங்கர்களை புறம்காட்டச் செய்து நாடு பலவற்றைக் கைப்பற்றிக் கொண்டான். பசும்பூண் பாண்டியர் என்ற பாண்டிய மன்னணை குறிப்பிட்டுள்ளார்.

பாண்டியன் நெடுஞ்செழியன்

பரணர் என்னும் புலவர்,
………….. …………….. ……. மண் தார்
மையணி யானை மறப்போர்ச் செழியன்
பொய்யா விழவின் கூடற்பறந்தலை  (அகம்.116:12-14)

மலந்த பூமாலையும் கைக்கொண்டு அழகு செய்த பானையையும் மிகுந்த போர்த் தன்மையினை தன் தொழிலாகக் கொண்டவன் பாண்டியன் நெடுசெழியன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முடிவுரை

பரணர் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் மிகுந்து காணப்படுகிறது. அகநானூற்றுப் பாடல்களில் மூவேந்தர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. பழந்தமிழ்ப் புலவர்களும், மூவேந்தர்களுக்கு நிகரான இடத்தை வழங்கியிருக்கும் நிலையை மேற்குறிப்பிட்ட செய்திகளின் வழி அறியமுடிகிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.