சிலம்பு மடல் - 25
பூவின் புலம்பல்! புயலாய் எழுதல்!
மதுரை: ஆய்ச்சியர் குரவை, துன்பமாலை, ஊர்சூழ்வரி:
- நாக. இளங்கோவன் -
இடைச்சி மாதரி வீட்டில், உறையிட்ட
பால் உறையவில்லை; உருகவைத்த வெண்ணெய் உருகவில்லை; ஆடுகள் சோர்ந்து
கிடக்கின்றன; எருதுகளின் கண்களில் கண்ணீர்! பசுக்கள் நடுக்கத்துடன்
கதறுகின்றன! அவைகளின் கழுத்து மணிகள் அறுந்து வீழ்கின்றன!
துயற்குறிகளாய் தெரிந்தது மாதரிக்கு; பதறுகிறாள்! என்னவென்று
புரியவில்லை!
"குடப்பால் உறையா; குவிஇமில் ஏற்றின்
மடக்கண்நீர் சோரும்; வருவதுஒன்று. உண்டு
உறிநிறு வெண்ணெய் உருகா உருகும்
மறி,தெறித்து ஆடா; வருவதுஒன்று உண்டு
நான்முலை ஆயம் நடுங்குபு நின்றுஇரங்கும்
மான்மணி வீழும்; வருவதுஒன்று உண்டு;"
தன் ஆடுமாடுகளுக்கு என்ன துயரமோ ? அவை அறிந்தவை என்னவோ? என்று
கலங்குகிறாள் மாதரி; அவளின் மக்களும்தான்! அவைகளை மகிழ்விக்கும்
கூத்தை ஆடிப்பாட மகளையும் மற்ற மகளிரையும் அழைக்கிறாள்!
"மனம் மயங்காதே, மண்ணின் மாதர்க்கு
அணியாகிய கண்ணகியும் தான்காண
ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன்
தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில்
வேல்நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுதும் யாம்,
என்றாள், கறவை கன்றுதுயர் நீங்குக எனவே!"
இடையர் குலத்துக் கடவுளாக சொல்லப்படுபவன் கண்ணன்;துயற்குறிகளாகக்
கருதப்பட்ட மாடு கன்றுகளின் துயர் நீங்க, உற்சாகம் பெற, கண்ணன் தன்
இளம்பருவத்தில் நப்பின்னையோடு ஆடிய குரவைக் கூத்தை ஆடுகின்றனர் மாதரி
சார்ந்த மகளிர் ஏழ்வர்;
சில ஆண்டுகளுக்கு முன்னர், திரைப்படத்தின் பாடல்களைக் கேட்டால் பசு
அதிகம் பால் கறக்கிறது என்று ஒரு செய்தி வெளியானது; அது
சோதிக்கப்பட்டது என்றும் ஒரு செய்தி சொன்னது; ஒரு வேளை அது உண்மை
என்றால் மாடு கன்றுகளுக்கு இடையர் குல மகளிர் குரைவையாடி
மகிழ்வூட்டும் நிகழ்ச்சி, மாட்டுப் பொங்கலின் போது ஏற்படுத்தப்படும்
ஒலிகள் மற்றும் மாடு கன்றுகளைப் போற்றுதல் போன்றவை அக்கால்நடைகளின்
உணர்ச்சிகளில் தாக்கம் ஏற்படுத்து பவையாக இருக்கக் கூடும்!
"நாராயணா என்னா நா என்ன நாவே?"
என்ற கேள்வியோடு குரவைக் கூத்து நிறைவு பெற, துயர்களை நாராயணனிடம்
விட்டுவிட்டு மாதரி நீராடப் போகிறாள்!
ஓடி வருகிறாள் ஒரு மங்கை! கோவலத்துயர் அறிந்தவள் அவள்!
கண்ணகியைக் கண்டு துயரைச் சொல்ல முடியாமல் தடுமாறுகிறாள்!
"....ஓர் ஊர்அரவம் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள்;
அவள்தான்,
சொல்ஆடாள் சொல்ஆடாள் நின்றாள்!
தன்னைப்பார்த்து ஒரு நங்கை நாஅசைக்கா துயர முகம் தாங்கி நிற்கிறாள்
என்றால், வெளிப் போன தன் கணவனுக்கு தீங்கு நேர்ந்திருக்குமோ என்று
பதறுகிறாள் கண்ணகி! அந்நங்கையாலும் உடன் சொல்லஇயலவில்லை!
"எல்லாவோ!
காதலன் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்...
நண்பகல் போதே நடுக்குநோய் கைம்மிகும்...
தஞ்சமோ தோழீ! தலைவன் வரக்காணேன்
வஞ்சமோ உண்டு மயங்கும் என்நெஞ்சன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும் என்நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்னது எவன்வாழி யோதோழீ!"
கண்ணகி: தோழீ! கணவன் வரக் காண்கிலேன் நடுக்குற்றேன்; அயலார் கூறியது
உளவோ? உரைப்பாய்!
தோழி: 'அரசியின் அழகு மிக்க சிலம்பொன்றைக் கவர்ந்த கள்வன் கோவலன்
என்று.....'
கண்ணகி: 'என்று......?'
தோழி: 'ஊர்க்காவலர் கோவலனைக் கொலை செய்யக் கருதினர்.....!'
"அரைசுஉறை கோயில் அணிஆர் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே-
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே-
குரைகழல் மாக்கள் கொலை குறித்தனரே!
எனக்கேட்டு, அதிர்ந்தாள், அழுதாள், விழுந்தாள் கண்ணகி."
துயர்ச்செய்தியை முடிவாய்ச் சொல்லாமல் சற்று இழுத்தே சொன்னாள் தோழி!
இருப்பினும் "சாகவில்லை" என்று, தோழி கூறவில்லை!
அவளின் முகக்குறிகள் கோவலன் மாண்டுவிட்டதை, கண்ணகிக்குப்
புரியவைத்துவிட்டது! கண்கள் குளமானது!
கண்ணனைய கணவரே! நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? என்று குமுறினாள்
கண்ணகி!
"பொங்கி எழுந்தாள், விழுந்தாள்..
செங்கண் சிவப்ப அழுதாள்;தன் கேள்வனை
'எங்கணாஅ' என்னா இனைந்துஏங்கி மாழ்குவாள்;
தான் தந்த சிலம்பைக் கொண்டு சென்ற கோவலன் கள்வனென்று கொலையுறுவதா?
அதிர்கிறாள்!
அவளுக்கும் அந்தப் பொற்கொல்லனுக்கும் மட்டுமே தெரியும் அச்சிலம்பு
அரசியுடையது அல்ல என்று!
அவளின் நெஞ்சத்து மன்றம் பாண்டியனைப் பழித்தது.
சமுதாயத்தில் ஏற்படக்கூடிய தவறுகளுக்கு நாட்டின் அரசன்தான் முதலில்
பதில் சொல்லவேண்டும்!
பாண்டியன் செய்த தவறினால் பறிகொடுத்தேன் என்கணவனை; 'அறக்கடவுள் என்ற
அறிவற்றோய்!' நீயும் இருக்கிறாயா? நான் அவலம் கொண்டு அழிந்துபோவேன்
என்று நினைத்தாயா ? மாட்டேன்! என்று பாண்டியனையும் அறக்கடவுளையும்
பழித்தாள்; சூளுரைத்தாள்!
காப்பியத்தில் தென்றலாய்க் குளிர்ந்தவள் ஈங்கு தீமை கண்டு தீயாய்க்
கொதிக்கிறாள்!
முற்பிறப்பின் பாவம் என்று யார் வேண்டுமானாலும் சொல்லிக்
கொள்ளட்டும்!
முன்வினை என்று எண்ணி கண்ணீர் மட்டும் சிந்தி மாரடித்து ஒப்பாரி
அழுது அடங்கிப் போகவில்லை!
கணவனே போய்விட்டான்; இனி என்ன என்று பின்னால் நின்றாள் இல்லை!
அறக்கடவுளையும் 'அறிவற்றோய்' என்று அதட்டி தீமையை எதிர்த்து
சூளுரைத்ததால் அவள் பெண்குலத்தின் திலகம் ஆகிறாள்!
"மன்னவன் தவறுஇழைப்ப
அன்பனை இழந்தேன்யான்; அவலம் கொண்டு அழிவலோ?
மன்னவன் தவறுஇழைப்ப
அறன்என்னும் மடவோய்! யான் அவலம் கொண்டு அழிவலோ?
தென்னவன் தவறுஇழைப்ப
இம்மையும் இசைஒரீஇ இனைந்துஏங்கி அழிவலோ?"
போற்றா ஒழுக்கம் புரிந்தவன் கோவலன் ஆயினும் மாற்றா உள்ளம் படைத்த
மனவுறுதி மங்கை நல்லாள் கண்ணகிக்கு!
காதலெனும் நட்பால் நடந்துவந்தவள்! அன்பால் அவனைக் கரைத்தவள்!
நெஞ்சத்தின் நேர்மை பொங்கி, வஞ்சத்தை வீழ்த்திட உறுதி பூண்டது!
அருகில் உள்ள அனைவரும் அவளின் நிலை கண்டு வருந்த, அறத்தினையும்,
பாண்டியனையும் பழித்த கண்ணகி, கதிரவனையும் கேள்வி கேட்டாள்!
"காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன்?"
எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை! இவள் நிலை கண்டு வருந்தி,
சுற்றி நின்ற மக்கட் கூட்டத்திலிருந்து இருக்கவேண்டும்! அந்தக்குரல்
கூறிய செய்தி "உன் கணவன் கள்வனல்ல; கள்வன் என்று கூறிய இவ்வூர்
நெருப்பிற்கு உணவாகும் என்று!"
அநியாயங்களைப் பார்த்து 'நாசமாகப் போகட்டும் இந்த ஊர்' என்று
சொல்வதைப் போல!
ஒரு ஊரினையே அழிந்து போகச் சொல்லவேண்டுமானால் அந்த ஊரில் பேதமையும்
குறைகளும் நிறைந்து இருக்கவேண்டும்!
"கள்வனோ அல்லன் கருங்கயல்கண் மாதராய்!
ஒள்எரி உண்ணும்இவ் வூர் என்றது ஒருகுரல்"
அதற்குமேலும் அங்கு நின்றாள் இல்லை! மற்றொரு சிலம்பைக் கையில்
எடுத்தாள்; நடந்தாள் மதுரை மாநகருக்குள்;
அச்சிலம்பை அனைவரிடமும் காட்டி, நகருள் மகளிர் நோக்கி விளக்கம்
சொல்லி நியாயம் கேட்டாள்;
'விலைமிக்க என் கால் சிலம்பை விலை கொடுக்காமல் கைப்பற்றிக் கொண்டு
என் கணவனையும் கொலை செய்தான் பாண்டியன்' என்றாள்!
பாண்டியன் நீதி தவறினான் என்று மட்டும் கண்ணகி முதலில் பொங்கி
எழவில்லை! பாண்டியன் தன் சிலம்பை திருடிவிட்டான் என்றும்
அய்யப்படுகிறாள்! குற்றஞ்சொல்கிறாள்!!
ஏனெனில் அவளுக்கும் அந்தப் பொற்கொல்லனுக்கும் மட்டுமே தெரியும்
அச்சிலம்பு அரசியுடையது அல்ல என்று!
"பட்டேன் படாத துயரம், படுகாலை
உற்றேன் உறாதது உறுவனே ஈதுஒன்று;
கள்வனோ அல்லன் கணவன் என் கால்சிலம்பு
கொள்ளும் விலைபொருட்டால் கொன்றாரே ஈதுஒன்று!..."
ஆணுக்காகட்டும் பெண்ணுக்காகட்டும் அன்பர் செத்து விடும்போது
வாழ்க்கையும் முடிந்துதான் போகிறது;
நேர்மையான நெஞ்சம், மாறா உள்ளம் படைத்த உறுதியான நெஞ்சம்;
காதலன் பால் அன்பு மழை பொழிந்து அவன்மேல் பூங்கொடியாய்ப் படர்ந்தவள்;
மதுரையம்பதியென்ற அறியா நாட்டில்
அநீதியால் விழைந்த அன்பின் சாவால்,
துக்கம் பெருகி,
உள்ளம் உலர்ந்து,
வண்ணச் சீறடி வன்மை கொள்ள,
அரற்றிப் புலம்பிப் புயலாய் மாறி,
தெருவெங்கும் தன்கதை கூறி,
இனியாள் விழியோ இமையாதாகி,
இமையா விழிகள் ஆறாய் பெய்ய,
அறவோன் அவனையும் அதட்டி,
அரசன் தனையும் பழித்து,
செம்பொன் சிலம்பொன்றைக் கையில் ஏந்தி,
சூளுரைத்து,
போர் தொடுக்க, சீறிச் சினந்து நடந்து வரும்
பெண்ணரசி கண்ணகியைக்
கண்ட மதுரை மக்கள் மயங்கினர்;
உணர்ந்தனர் உள்ளத்தால் உயர்ந்தவள் என்று!
கணவன் இறந்தமைக்காகப் புலம்பியும், அவன் அநீதியால் இறந்தமைக்காகச்
சீறிச் சினந்து வந்தவள் கண்டு தெய்வமோ என்று அஞ்சினர்!
பெருமை மிக்க பாண்டியநாடு நீதி தவறிவிட்டதோ? இது ஏனோ என்று
வருந்தினர்.
சிலர் கோவலன் இறந்து கிடந்த இடத்தைக் காட்டினர் கண்ணகிக்கு!;
"களையாத துன்பம் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்தது; இது என் கொல்?
..தென்னவன் கொற்றம் சிதைந்தது; இது என்கொல்?
..தண்குடை வெம்மை விளைத்தது; இது என்கொல்?
செம்பொன் சிலம்புஒன்று கைஏந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்தது; இது என்கொல்?
ஐஅரி உண்கண் அழுதுஏங்கி அரற்றுவாள்
தெய்வம் உற்றாள் போலும் தகையள்; இது என்கொல்?
என்பன சொல்லி இனைந்துஏங்கி அரற்றவும்
மன்பழி தூற்றும் குடியதே மாமதுரைக்
கம்பலை மாக்கள் கணவனைத் தாம்காட்ட........"
சிலம்பு மடல் - 26 வழக்காடலும்!
வஞ்சினமும்!!
மதுரை: ஊர்சூழ் வரி, வழக்குரை காதை:
கணவனைக் கட்டித்தழுவி கையில் சிலம்பைக் கொடுத்தனுப்பி கண் நிறைய
பார்த்தனுப்பிய கண்ணகியின் கண்கள், கணவனின் வெட்டுண்டு கிடந்த உடலில்
உறைந்து போனது!
கணவனின் பூமாலையில் ஓர் பூவை உருவி தன் தலையின் கருமயிரில் சூடிக்
கொண்டு கைகூப்பி அனுப்பி வைத்தவள், அதன்பின் குருதிச் சேற்றில்
தலையில்லா உடலாய்க் குளிர்ந்து போய்க் கிடந்த கோவலனின் மார்பை தன்
மார்பில் தேக்கி வைத்து கண்ணீர் சிந்தினாள்!
'கட்டிய கணவனின் துன்பம் பொறுத்துக் கொள்ள பெண்னால் இயலுமா ? கடவுளே
உனக்கு கண்ணில்லையா ?' என்று, இயலா நிலையின் கண்ணீர் கொப்பளிக்க,
புலம்புகிறாள்!
"பெண்டிரும் உண்டுகொல் ? பெண்டிரும் உண்டுகொல் ?
கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல் ? பெண்டிரும் உண்டுகொல் ?
தெய்வம் உண்டுகொல் ? தெய்வம் உண்டுகொல் ?
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வம் உண்டுகொல் ? தெய்வம் உண்டுகொல் ?
என்ற இவை சொல்லி அழுவாள் கணவன்தன்
பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக் கொள்ள..."
இணைந்திருந்த நெஞ்சங்கள் இரண்டும் பிரிவின் துயரத்தைப் பகிர்ந்து
கொண்டிருக்கவேண்டும்.
உலகமே எனைக் கள்வனென்று கூறினும் உனக்குத் தெரியும் கண்ணகி, நான்
கள்வனல்ல என்று! என்று கோவலன் நெஞ்சம் அவளின் நெஞ்சத்திடம் நீதி
கேட்டிருக்க வேண்டும்!
உனைச் சேர்ந்து, வாழாத வாழ்வையெல்லாம் வாழ வந்தபோது என் கழுத்தை
அறுத்து விட்டார்களேஎ......!, என் செய்வேன் என்று அவன் நெஞ்சம்
அழுதிருக்க வேண்டும்!
காதலன் தவறு செய்யவில்லை! வாழத்துடித்த காதலனின் தலையைக் கொய்தவன்
அரசன்! தலையைக் கொய்தவன் சிலம்பையும் பறித்துக் கொண்டான்! அவன்
கழுத்தரிந்த களிமகனையும், கொல்லக் கயவனையும் கண்ணகி அறியாள்!
இறந்த கணவனைக் கடைசியாக மெய்தழுவிக் கொண்டிருந்தவளின் சோகம் சினமாக
வலுவெடுக்க, கண்ணகியின் நெஞ்சத்து நீதிமன்றம், காதலனுடன் தானும்
சாவதைத் தள்ளிப்போட்டது!
அப்படிச் செத்தால் கோவலன் கள்வனென்றே ஆகிப் போவானே என்று
நினைக்கையில் சினம் கடுஞ்சினமாக மாறியது!
காதலன் பிரிந்த பின்னர் வாழ நினைக்கவில்லை! அப்படி சாக நினைத்த
போதும் பழி நீக்கிட வேண்டிய கடமை சுமையாய் சேர்ந்து கொள்ள கடுஞ்சினம்
செஞ்சினமாய் மாற
"காய்சினம் தணிந்துஅன்றிக் கணவனைக் கைகூடேன்"
என்றாள்; எழுந்தாள்! சூளுரைத்தாள்!
நின்றாள்; நினைந்தாள்!
நெடுங்கயல் கண் நீர் துடையாச் சென்றாள்;
பாண்டியன் அரன்மனை வாயில் முன்!
கொடுஞ்சினம் கொண்டு பாண்டியனைக் காண கண்ணகி செல்ல, தான் கண்ட
தீக்கனாவைப் பாண்டியனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் கோப்பெருந்தேவி
கலக்கத்துடன்.
கண்ணகி: வாயிற்காப்போனே! வாயிற்காப்போனே........!
வாயிற்காப்போன் திரும்பிப் பார்க்கிறான்; கூப்பிட்ட குரலின்
அதிர்வைக் கண்டு சற்று திகைக்கிறான்!
அறிவு முற்றுமாய் அகன்று போய், அறம் என்ற உள்ளம் அற்றுப் போன அரச
நீதி தவறிய மன்னனின் வாயிற்காப்போனே......!
எடுத்த எடுப்பில் நாடாளும் மன்னனை எறும்பின் கீழாய் ஆக்கி சொல்லால்
அடிக்கும் சினம் சுமந்த கண்ணகியைக் கண்டு நடுக்குற்றான் வாயிலோன்!
செம்பொன் சிலம்பொன்றை ஏந்தியவளாய், கணவனை இழந்த ஒருத்தி வாயிலில்
நிற்கிறாள்...! என்று மன்னனிடம் சென்று சொல்வாய்! சொல்வாய்!
"வாயி லோயே! வாயி லோயே!
அறிவு அறை போகிய பொறிஅறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே!
இணைஅரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாள்என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே!
ஆணையிட்டுச் சொன்னவளின் அகங்கண்டு திகைத்து அரசன்முன் ஓடிச் சென்றான்
வாயிற்காப்போன்!
"வாழி எம் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி!
செழிய வாழி! தென்னவ வாழி!
பழியொடு படராப் பஞ்சவ வாழி......"
வணங்கிவிட்டுச் சொன்னான் வாயிலோன்;
மன்னவா!,
கொற்றவை போல் நிற்கிறாள்! ஆனால் கொற்றவை அல்ல! கோலமோ காளி! ஆனால்
காளியும் அல்ல!
பெரும்பகையோடு வந்திருக்கிறாள் வாயில்முன்னொருத்தி! கையில் ஒரு
சிலம்பேந்தி நிற்கிறாள்!
கலக்கம் தரும் கடுஞ்சினம் கொண்டாள்!
கணவனை இழந்தவளாம்!
அழைத்து வா என்றான் அரசன்! அழைத்து வந்தான் வாயிலோன் கண்ணகியைக்
காவலன் முன்!
"வருக மற்றுஅவள் தருக ஈங்குஎன,
வாயில் வந்து கோயில் காட்டக்
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி-
கண்ணீர் பெருக வந்து நிற்கும் இளங்கொடியே, "நீ யார் ?"; கேட்டவன்
மன்னன்!
"நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோநீ மடக்கொடி யோய்என; "
அகன்று உயர்ந்த அரச மண்டபம்; பொன்னும் மணியும் பதித்த தூண்கள்.
உயர்ந்த மேடை; அரியாசனம் ஆங்கு!
கவரி வீசும் காற்றின் சுகத்திலே அரசியோடு அரசனும் ஆங்கு!
அவர்க்குக் கீழே அமைச்சர்கள் வரிசை!
சுற்றி நிற்கும் பட்டுக் கட்டிய பணிவிடைக் கூட்டம்!
கண்ணகியின்
கலைந்து கிடக்கும் நீண்ட நெடுமயிர்கள்!
விரிந்து வெறித்த பார்வை!
ஆறு பொங்கும் கண்கள்!
புழுதி படிந்த உடைகள்!
உயிரற்ற கூடாய்த் தெரியும் உடல்!
சுற்றியிருந்த அத்தனைக் கண்களும் அவளின் மேல்! ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு பார்வை!
ஆனால் சிறுதுரும்பாய்த் தெரிந்தனர் அத்தனை பேரும் அவளுக்கு!
நிமிர்ந்து பார்த்தாள்! நெஞ்சத்து உறுதி அகலாமல்; கண்ணகியின் வெறித்த
கண்கள் வெறித்தபடியே நிலைத்து நின்றன மன்னனின் கண்களில்!
நிலைத்த பார்வையின் திண்மை கண்டு மண்டபம் முழுவதும் அமைதியானது!
'அறிவிலா மன்னா!' - விளித்தாள் மன்னனை!
நாடாளும் மன்னவன் இடத்திலே அவன் முன் நின்று அவனை விளித்த அந்த
வார்த்தைகள் பாண்டியனை மருளச் செய்தது!
கூடல் வேந்தன் கூடு போன்றவன் ஆயினன்! சுற்றியிருந்தோரையும் கலங்கச்
செய்தது!
உன்னிடம் கூற வேண்டியது உளது; அதற்கு முன் யாரெனக் கேட்டாய்;
கூறுவேன் கேள்!
பறக்கும் புறாவிற்கு இட்ட துன்பத்திற்காக புறாவிற்கும் நீதி
வழங்கினான் சிபி என்ற அரசன்!
கண்ணீருடன் பசு ஒன்று ஆராய்ச்சி மணி ஒலிக்க, அதன் குறை அறிந்தான்
மனுநீதிச் சோழன்!
அதன் கன்றைக் கொன்ற அவன் மகனை அதேத் தேர்க்காலில் இட்டுக் கொன்றான்
அச்சோழன்.
மனித இனமற்ற பறவைக்கும், பசுவுக்கும் அரசநெறி கொண்டு நீதி வழங்கிய
நெறிதவறா அரசர்கள் ஆண்ட புகார் நகரம் என் ஊர்....!
பழியில்லாப் பெருஞ்செல்வ வணிகக் குடியிலே பிறந்த மாசாத்துவான் மகனான
கோவலனை மணந்து,
அவனுடன் செல்வம் தேடி உன் நாடு வந்து,
என் காற்சிலம்பை விற்க வந்தபோது,
உன்னால் கொலை செய்யப்பட்டானேஎ கோவலன்ன்...
அவன் மனைவி நான்! கண்ணகி என் பெயர்!
சொல்லி முடித்த அவளின் கண்களில் நீர் மட்டும் இன்னும் வற்றவில்லை!
"தேரா மன்னா! செப்புவது உடையேன்
எள்அறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்
வாயில் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்;
பெரும்பெயர்ப் புகார் என்பதியே; -
அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினைதுரப்பச்
சூழ்கழல் மன்னாநின்நகர்ப் புகுந்துஈங்கு
என்கால் சிலம்புபகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பதுஎன் பெயரே........"
கள்வனைக் கொன்றேன்; குறை கூறி நிற்கிறாளே இவள்! சிந்தித்தான்
பாண்டியன்;
கள்வனைக் கொல்வது தானே அரச நீதி! எடுத்துரைத்தான் வேந்தன்.
"கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று
வெள்வேல் கொற்றம் காண்என..."
எடுத்துரைத்த வேந்தனை சொல்லால் அறைந்தாள் அணங்கு! 'நல்திறம் கொண்டு
ஆராயாக் கொற்கை வேந்தேஎ...!' என் கால் சிலம்பு, மாணிக்கப் பரல்களைக்
கொண்டது!
சினத்துடன் சற்று இகழ்ச்சி அவள் உதடுகளில்!
"நல்திறம் படராக் கொற்கை வேந்தே!
என்கால் பொன்சிலம்பு மணிஉடை அரியே..."
இப்பொழுது ஆராய்கிறான் மன்னன்!
அம்மை சொன்னது அறிந்தோம்! எம் அரசியின் சிலம்பது முத்துப் பரல்கள்
உடைத்தது.
கொண்டுவா என்றான் அரசியின் சிலம்புகளை! அவையில் வைத்தான்;
"தேமொழி! உரைத்தது செவ்வை நன்மொழி
யாம் உடைச் சிலம்பு முத்துஉடை அரியே;
'தருக' எனத் தந்து, தான் முன் வைப்ப!
முத்தென்று சொன்னான்! முத்தைக் காட்டினான்!
பிரிதொன்றைப் பார்த்தான் மாணிக்கம் கண்டான்!
மாணிக்கத்தைக் காட்டென்று சொன்னான் கண்ணகியிடம்!
ஒற்றைச் சிலம்பை பெருவாழ்வு வாழ கணவனிடம் கொடுத்து மற்றைச் சிலம்பை
தன் செல்வக் குடி சிறப்பின் நினைவாய் வைத்திருந்த கண்ணகி, காதலன்
கள்வனல்ல என்ற சான்று பகர புறப்படும்போது கழற்றிக் கையில் பிடித்த
அச் சிலம்பை அடித்தாள் மண்மேல்! உடைந்து தெறித்தன மாணிக்கப் பரல்கள்;
அவை முழுதும்!
மன்னனின் சிந்தனையை செயலாக்கிய உதட்டிலும் ஒன்று!
நீதி தவறிய அரசனே! பார் இந்த மாணிக்கப் பரல்களை! என்றாள்
வெறுப்புடன்;
உடைத்த மாத்திரம் உண்மையை ஓங்கச் செய்துவிட்ட நேர்மையின் ஆணவம் அவள்
குரலில்!
ஒரு சிலம்பால் ஒப்பற்ற காதலன் உயிரை சாவுக்கு அனுப்பிவிட்ட ஏமாற்றப்
பார்வை!
ஆறுதல் கொள்ளாத இதயத்தின் குமுறல் நெஞ்சை ஏற்றி இறக்கிக்
கொண்டிருந்தது.
மருண்டான் பாண்டியன் மாணிக்கம் கண்டு; உணர்ந்தான் உண்மை இணை
அதுவென்று!
நடந்து முடிந்த செயல்கள் ஓர் நொடியில் சிந்தையில் தோன்றி மறைய
நடுங்கிப் போனான். சிந்தித்தான்!
பிழைசெய்தேனே நான்! என் காவல் பிழை போனதே!
மதியின் வாழும் மனித வாழ்க்கையில்
மந்திரம் மயங்கி மதி இழந்தேனே!
மந்திரப் பித்தத்தால் என் மதி மயங்குங்கால்
என் மக்களின் மதி என்னவோ ?
அறிவால் ஆராயாமல் மந்திரம் கேட்டு
கோழையாகிப் போனேனே யான்!
வடிவேல் எறிந்த வான் பகை பொறாது
ப•றுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடுங்கோள் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வழி வந்தவன் நான்!
மலையையும் கடலையும் பகையையும் ஆண்ட
கல்வியும் செல்வமும் வீரமும்,
மந்திரம் என்ற சிறு நரிமுன் தோற்றுப் போனதே!
பாண்டியநாடு மடமையில் மூழ்க விட்டேனே!
பாண்டியநாட்டில் மடமை வளர விட்டேனே!
என் வெண்கொற்றக் குடை தாழ்ந்து போனதே!
என் செங்கோல் கொடுங்கோல் ஆனதே!
அறமும் நெறியும் அகன்று போனதே!
என் வாழ்வு முடியட்டும்!
மனிதருள் ஒருவர் தனியொருவராக வந்து
இன்னமும் நீதிகேட்க முடியும் பாண்டியநாட்டில்!
ஆதலின் பாண்டிய நாட்டில் மடமை அழிந்து
நல்அறமும் திறமும் வளரட்டும்!
உயிர்வாழேன் நான்; கெடுக என் ஆயுள்!
என்றனன் மன்னன்; மயங்கி வீழ்ந்தான் மண்மேல்! பாண்டியன் உயிர்
பிரிந்தது!
உலகின் இயற்கை (ஊழ்) மதியின் மாறுபட்டு பித்தம் கொண்டபோது, நீதி
தோற்ற முதற்காலை வாழ்வைப் பிரிந்து வழிவிட்டான் வளத்துக்கு பாண்டிய
நெடுஞ்செழிய மன்னன்!
"தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் ? யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்!என
மன்னவன் மயங்கி வீழ்ந் தனனே...."
காதல் வாழ்க்கை கண்ணகிக்கு மட்டுமா சொந்தம் ? அன்பு அவளுக்கு மட்டுமா
சொந்தம்? காதலனுடன் அருமந்த நட்பு அவளுக்கு மட்டுமா வாய்த்தது?
குலைந்தனள்! நடுங்கினள்!; கோப்பெருந்தேவி.
என் இதயத்தின் மன்னவன் போன பின் யான் வாழ்வேனா? யான் வாழ்ந்துதான்
என்ன? எங்கே கணவனைக் காண்பேன் நான்? தேம்பினாள் பாண்டிமாதேவி!
தவறை உணர்ந்த உடன் உயிர் விட்ட என் காதலனுக்குத் துணை செல்வேன் யான்!
கோவலக் கொலைப்பழியை ஏற்று உயிர் விட்ட என் மன்னவனின் இதயத்தில் இடம்
பெற்ற நானும் வாழேன்!
என் சிலம்பை எவரோ பறிக்க,
உயிர்விட்டான் கண்ணகியின் கணவன்!
கண்ணகி சிலம்பை காவலன் பறிக்க
உயிர்விட்டான் என் கணவன்!
அறம் பிழைக்கப் பழியை
ஏற்றுக் கொண்டான் என் கணவன்!
என் சிலம்பால் நேர்ந்த பிரிவிற்கு
ஆறுதல் சொல்ல அவனொடு சேர்வேன்!
என்று கோப்பெருந்தேவி நினைத்திருக்க வேண்டும்!
வீழ்ந்தனள் பாண்டியன் மேலே! மாண்டனள் தேவி!
உயிர்..!
யார் சொன்னார் கைகளில் இல்லை என்று ?
வாழ வேண்டியபோது வாழ்ந்தும், வீழ நினைத்த போது காற்றைப் பிடுங்கி
விட்டாற்போல் உயிரைத் தூக்கி எறிந்த இந்த மனித சக்தி ஒழுக்கம்
நிறைந்தது! நேரிட்ட வாழ்வையும் மனஉறுதியையும் கொண்டது!
கற்பென்ற இந்த மனத்தின் உறுதி கோப்பெருந்தேவிக்கு மட்டுமல்ல வழுவிய
போது உயிர் விலகிய பாண்டியனுக்கும் தான்!
மென்மையாள் கண்ணகி, கணவன் துயர் அறிந்து
வன்மையாள் ஆகி தன் மனத்
திண்மையால் வென்றாள் மன்னனை!
சில வினாடிகளுக்குள் அரசனை வென்றாள்! அரச மன்றத்தை வென்றாள்! நீதியை
வென்றாள்!
இறந்து கிடந்த பாண்டியனையும் பாண்டிமாதேவியையும் நின்று நிலைத்துப்
பார்த்தாள் கண்ணகி!
பாண்டியன் மேல் பிணமாய் பாண்டிமாதேவி!
சாவிலே ஒன்று சேர்ந்து விட்ட அவர்களின் காதல் வாழ்க்கை கண்ணகியையும்
ஆட்கொண்டிருக்க வேண்டும்.
'மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்!....
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி!....'
என்று, அவளில் இதயத்தில், கோவலன் தன்னைப் போற்றியதெல்லாம் அன்பு
மழையாய்ப் பொழிந்து கொண்டேயிருந்தது!
இனி அவளின் காதோடு காதாக அவன் பேசுவானா? காதலில்லா வாழ்க்கை
உயிரில்லா உடலல்லவா ? மனிதவாழ்வின் மையமே அதுதானே! மையம் இல்லாது எது
வாழும் மண்ணில்!
அதுதானே உணர்வின் உந்து சக்தி! உறவின் பாலம்!
அந்த பாலம் அறுந்துபோனதை சிறிதும் பொறுத்தாள் இல்லை!
பாண்டியன் உயிர் விலகியும்
அவன் தேவி உயிர் விலக்கியும்
அவள் சினம் எள்ளளவும் குறையவில்லை!
மாறாக, திடமாகச் சொன்னாள்!
தீங்கு செய்த பாண்டியனின் மனைவியே, 'கடுமையானதீங்கிற்கு
ஆளாகியிருக்கும் நான் இனிச் செய்யப் போவதையும் காண்பாய்!'
என்று மேலும் கடிந்து, அனைவரும் நடுநடுங்க, வஞ்சினச் சீற்றத்துடன்
அரசவையில் களிநடம் புரிந்த கண்ணகி அரன்மனை நீங்கினாள்!
"அல்லவை செய்தார்க்கு அறம்கூற்றம் ஆம்என்னும்
பல்லவையோர் சொல்லும் பழுதுஅன்றே-பொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் தேவி!
கடுவினையேன் செய்வதூஉம் காண்."
சிலம்பு மடல் - 27 மதுரை அழிதல்!
மானமும் கற்பும்!! மதுரை: வஞ்சின மாலை, அழற்படு காதை, கட்டுரை காதை:
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்" என்ற வள்ளுவத்தைக் கண்ணகியாள் கற்றிருந்தாள்
போலும்!
அரண்மனை நீங்கும்போது, பாண்டியன் மேல் பிணமாய்ப் பதிந்து கிடந்த அவன்
தேவியிடம் கண்ணகி பேசினாள்!
'யான் உலகம் அறியாதவள்! ஆயினும் முற்பகலில் ஒருவர்க்கு செய்த கேடு
பிற்பகலில் தமக்கே வரும் என்பதை மட்டும் அறிந்தவள்! அதுவே உங்கள்
முடிவுக்கு காரணமும்!
"கோவேந்தன் தேவி! கொடுவினை யாட்டியேன்
யாவும் தெரியா இயல்பினேன் ஆயினும்,
முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் காண்குறூஉம் பெற்றியகாண்:"
புகழுடைத்த புகார் நகர் பல கற்புடை மகளிரால் சிறப்புற்றிருக்க யானும்
அங்கு தோன்றியவள்தான்!
யானும் ஒரு கற்புடைப் பெண் என்பது உண்மையானால் என் கணவனோடு சேர்ந்து
இப்போதே இறக்க மாட்டேன்! மன்னனொடு மதுரையையும் அழிப்பேன். என் ஆற்றலை
நீ காண்பாய்!
"பட்டாங்கு யானும்ஓர் பத்தினியே ஆமாகில்
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்!என்
பட்டிமையும் காண்குறுவாய் நீ....... "
சிறிதும் குறையா சீற்றத்துடன் சொன்னாள் கண்ணகி!'
சிலம்பிடம் தோற்ற மதுரை மன்னன் மாண்டது கேட்டு மதுரை மக்கள்
நிலைகுலைந்தனர்.
நீதியை நாட்டிவிட்டு மதுரை வீதிகளில் வலம் வந்தாள் கண்ணகி!
சிலம்பால் வென்றவளைப் பார்த்தவர் பாதி! அவளைப் பற்றிக் கேட்டவர்
மீதி!
வீதியெங்கும் அழுது புலம்பினாள் கண்ணகி வஞ்சினம் சிறிதும் மாறாமலே!
மதுரைநகர்ப் பெண்டிரே, ஆடவரே, வானத்து தேவரே, தவம் செய் முனிவரே!
'என் அன்புக்கினிய கணவனின் அநீதியான மரணம் அறிவீர்! மன்னன்
மதியிழந்து எனக்கிட்ட அநீதியைக் காண்பீர்! குற்றமிழைக்கா என் கணவனைக்
கொடுங்கோல் கொன்று போட கொடுஞ்சினம் கொண்டேன் யான்!'
கொடுஞ்சினம் கொண்டேன் யான்,
கொதிக்கும் நெஞ்சத்தின் குமுறல்களாலே!
மன்னன் மாண்டும், மன்னவன் தேவி மாண்டும் குறையாக் குமுறலால் மதிபோன
மன்னவன் வளர்த்த மாநகர் மீதும் சினமுற்றேன்!
மதிமயங்கிய இம்மண்தானே என் கணவனைக் கொன்றது!? இம்மண்மேல் கொள்ளும்
கோபம் குற்றம் ஆகாது!
கோவலனுடன் வாழ்ந்த காதலும் கற்பும் நட்பும், அவளின் இதயத்தை
அனலாக்கிக் கொண்டேயிருக்க அனலின் வெம்மை தாங்கமாட்டாது அணைத்தாள் தன்
இதயத்தை வலக்கரத்தால்!
காதலன் மாதவியுடன் ஓடிப்போனபோது துடித்த தன் இதயத்தைத் தடவிக்
கொடுத்து அமைதிப்படுத்திய மென்கரத்தால் அவன் மாண்டபோது அமைதிப்படுத்த
இயலவில்லை!
மாறாக மென்கரம் வன்கரமாகியது!
பொறுத்துக் கொள்ள இயலா இதயத்தின் அனலைப் போக்க நினைத்தது!
இதயத்தை மூடி அதன் மேல் ஏறி அமர்ந்திருந்த இடமுலையின் பாதியை அவளின்
வலக்கரம் பற்றித் திருகிக் கிள்ளி எடுத்தது!
கிள்ளி எடுத்த பாதி முலையொடு மதுரையை மூன்று முறை சுற்றி விட்டாள்!
கொல்லன் உலைக்களத்துத் துருத்தி போலச் சுடு மூச்சுவிட்டாள்: சுழன்று
திரிந்தாள் வீதிகளில்!
அவளின் நெஞ்சத்து அனல், மீதி முலையில் இருந்து குருதியாய் வடிந்து
கொண்டேயிருந்தது!
"நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்
வானக் கடவுளரும் மாதவரும் கேட்டீமின்:
யான்அமர் காதலன் தன்னைத் தவறுஇழைத்த
கோநகர் சீறினேன் குற்றம்இலேன் யான்என்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்!"
பார்த்தவர் விழிகள் பார்த்தபடி பயந்திருக்க, பிய்த்த முலையும் தன்
வலக்கையை சுட்டதோ என்னவோ தூக்கி எறிந்தாள் அதனை!
கண்ணகிக்கு நேர்ந்த கொடுமையையும், அவளின் சீற்றத்தையும் கண்ட மதுரை
மக்களின் கண்களில் மாநகர் வானில் மெல்ல மெல்லத் தோன்றிய
கரும்புகையும் சில நாழி தெரியவில்லை!
கரும்புகையின் மேலேறி செந்நா திறந்தபோது கண்டனர் மாந்தர், மதுரை
மாநகர் சூழ்ந்த பெருந்தீயினை!
தீயின் வெம்மை தாங்காமல் மதுரை வாழ்ந்த தெய்வங்களும் பூதங்களும் கூட
திகைத்து மதுரையை விட்டு வெளியேற மக்களில் பலர் மாண்டனர்! பலர்
வெளிப்போய் மீண்டனர்!
மதுரையைக் காத்து நிற்கும் மதுராபதி தெய்வமும் வெம்மை தாங்க
முடியாமல் கண்ணகி என்ற வீரபத்தினியின் முன் வர அஞ்சி
அவளின் பின்னாள் சென்று நின்றது!
"ஆர்அஞர் உற்ற வீரபத்தி னிமுன்
கொந்துஅழல் வெம்மைக் கூர்எரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுரா பதிஎன்.
ஒருமுலை குறைந்த திருமா பத்தினி
அலமரு திருமுகத்து ஆயிழை நங்கைதன்
முன்னிலை ஈயாள், பின்னிலைத் தோன்றிக்
கேட்டிசின் வாழி நங்கை! என் குறைஎன...."
வீ£ரபத்தினியின் முதுகில் மறைந்து அவளைத் தொடர்ந்த மதுராபதி தெய்வம்,
'மாபத்தினியே, ஆடித்திங்கள் கிருட்டிண பக்கத்து அட்டமியும்,
கார்த்திகையின் குறையும் சேர்ந்த வெள்ளிக்கிழமையன்று, மதுரை எரியும்
மன்னனும் மாள்வான் என்று யாம் அறிவோம்! என்று காரணங்கள் பல கூறி
கண்ணகியை அமைதிப் படுத்தமுயன்றது!'.
"ஆடித் திங்கள் பேர்இருள் பக்கத்து
அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்எரி உண்ண
உரைசால் மதுரையோடு அரைசுகெடு உறும்எனும்
உரையும் உண்டே நிறைதொடி யோயே!..."
மதுரையை மெல்ல மெல்ல விழுங்கிவிட்டு பெருநாசம் செய்த தீயும் அவியத்
தொடங்கியது!
இம்மதுரை மாநகருக்கு கணவனுடன் கீழ்த்திசையில் நுழைந்த கண்ணகி, கணவனை
இழந்து, கொற்றவை கோயில் வாயிலில் தன் கைவளையல்களை
உடைத்தெறிந்துவிட்டு மதுரையின் மேல்திசை வழியே வெளியேறினாள்!
கோவலன் மாண்டபின்னர், கோவலனையும் அநீதியையும் மட்டும்தான் நினைத்தாள்
அன்றி, புகாரில் தன் சுற்றத்தை, நல்லோர், பெரியோர் யாரையும்
நினைக்கவில்லை!
வாழ்வு வெறுமையாகிவிட பார்வையும் வெறித்ததாகி, காதலிலும்
நேர்மையிலும் தான் கொண்ட கற்பென்ற மனவுறுதியால் தனியொருத்தியாக ஒரு
மன்னனையே வென்றுவிட்டு, மடைமை பூத்துக் குலுங்கிய மாநகரை
வென்றுவிட்டு, கல் எது முள் எது மேடு எது பள்ளம் எது என்று எதையும்
அறியாதவளாய் கோவலனை மட்டுமே நினைத்து அழுதவளாய் பதினான்கு நாட்களாய்
நடந்து கொண்டிருந்தவள் கோவலன் பால் கொண்ட நட்பாலும் காதலாலும்
பிடித்து வைத்திருந்த தன் கடைசி மூச்சை விட்டாள், திருச்செங்குன்றம்
என்ற மலைக்குன்றில்!
"எழுநாள் இரட்டி எல்லை சென்றபின்
தொழுநாள் இதுஎனத் தோன்ற வாழ்த்திப்
பீடுகெழு நங்கை பெரும்பெயர் ஏத்தி
வாடா மாமலர் மாரி பெய்துஆங்கு
அமரர்க்கு அரசன் தமர்வந்து ஏத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு
வானஊர்தி ஏறினாள் மாதோ
கான்அமர் புரிகுழல் கண்ணகி தான்என்."
சிறிய காலடிகளை மண்மகளும் கண்டிராத செல்வ மகள், புகார் பிறந்த
செல்வச்சீமான் மாநாய்கன் மகள், வாழ்க்கை தேடி வறியோளாய் மதுரை போன
மகள், கணவனை ஆங்கு தொலைத்துவிட்டு, தொலைத்தவர்களை சீறிக்
குறைத்துவிட்டு, காடு கழனி எங்கும் அலைந்து அழுது புலம்பி மதுரை
நீங்கி சேரநாடு சேர்ந்து, திருச்செங்குன்றின் மீதேறி பூத்திருந்த
புங்கை மர நிழலில் தேம்பி விட்டு அமைதியடைந்தாள்!
கற்பின் உறுதியால் பெண்டிர் "பெய்யெனப் பெய்யும் மழை" என்று வள்ளுவர்
உரைத்தது பெண்டிர் கற்பென்ற மன உறுதியால் "செல்லெனச் செல்லும் உயிர்"
என்பதைச் சுட்டுவதற்குத்தானோ?
உடல் என்பது வானம்! உயிர் என்பது மேகம்!
மேகம் ஓடும் வானம் போல், இயக்கத்தில் மனிதர் வாழ்வும்!
மழை பொழிந்ததும் வானம் மேகமற்று உயிரில்லா உடலாகிப் போகிறது!
மனவுறுதி கொண்ட மகளிர் பெய்யெனச் சொன்னால் தம் உடலென்ற
வானத்திலிருந்து உயிரென்ற மேகம் மழையாய் உதிர்ந்துவிடுகிறது!
கோப்பெருந்தேவியின் மரணமும் அப்படியே! மன்னவன் மாண்டதும் தான் வாழ
விரும்பாள்!
செல் எனச் சொன்னதும் சென்றது அவள் உயிர்! காதல் தீய்ந்த போது
இதயத்தின் இயக்கத்தை தம் சொல்லால் நிறுத்தி விடுகிற இந்த மனவுறுதி
என்ற கற்பு தமிழ் நிலத்தின் சிறப்பு.
கோப்பெருந்தேவி பாண்டியன் மேல் கொண்ட காதல் உயர்ந்தது; மாதவி கோவலன்
மேல் கொண்ட காதலும் உயர்ந்தது! அந்த காதலும் தமிழ் நிலத்தின்
சிறப்பு!
மடைமையில் மூழ்கிய காரணத்தால் நீதி வழுவியதுணர்ந்து, "கெடுக என்
ஆயுள்" என்றதும் உயிர் பிரிந்த பாண்டிய மாமன்னனின் நேர்மையும்
தூய்மையும் தமிழ் நிலத்தின் சிறப்பு!
கோவலனுடன் காதல் தொழுகை! அவன் மேல் அநீதியான பழி! காதற்கணவன்
கொல்லப்பட்டபோது காதலாலும் நட்பாலும் அலைமோதுகிறாள்! ஆயினும் தன்
உயிரைச் 'செல்லனச் சொல்லவில்லை'!
காதலன் மேல் வீழ்ந்த பழிதுடைக்க கடமை ஏற்கிறாள்! அக்கடமையை நிறைவேற்ற
வீரம் கொள்கிறாள்! வீரமும் நேர்மையும் நிறைந்த சொல்லால் அடிக்கிறாள்
அரசை! மன்னவன் மண்டபத்தில் நீதியைக் காக்கிறாள்! வெல்கிறாள்!
நீதி வழுவியதன் காரணத்தால் வெட்கிப் போகிறான் பாண்டியன்! தன்
உயிரையும் விடுகிறான்!
நெஞ்சின் அனல் அடங்காத நிலையிலே மதுரையையே, தன் கணவன் மாண்டு கிடந்த
மண்ணையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தாள்! மடமை நிறைந்த அந்த மண்
மீது சீற்றத்துடன்!
மன்னனை இழந்த அரசு உடனே பதட்டத்துக்கும் கலகத்துக்கும் உள்ளாகும்
என்பது இந்நாளும் நாம் காணும் தமிழ் நில நிலையாகும்!
மக்களிடையே ஏற்பட்ட பதட்டத்தினாலோ, அப்பதட்டத்தினால் ஏற்பட்ட
கவனக்குறைவினாலோ எங்கோ ஏற்பட்ட தீ, ஆடி மாதக் (முதுவேனில் காலம்)
காற்றினால் மதுரைக்குப் பேரழிவைச் செய்திருக்க வேண்டும். அல்லது
கலகக்காரர்கள் நாட்டிற்கு தீவைத்திருக்க வேண்டும். மக்களின் கவனம்
எங்கோ இருக்க, இரண்டில் ஒன்று நடந்திருக்க வேண்டும்.
கோவலன் மாண்ட மண்ணும் தீக்கு இரையானதை அறிந்ததும், அதில் தன் கணவனின்
உடலும் கரைந்து போயிருக்கும் என்று அறிந்ததும், தன் கை வளையல்களை
உடைத்து எறிந்து விட்டு மதுரையை விட்டு வெளிப்போகிறாள் கண்ணகி!
மென்மை, பெண்மை, பொறுமை, நேர்மை, காதல், வீரம், அறிவு, கடமை,
சீற்றம், ஈகை, அன்பு, பண்பு, மானம் என்ற அனைத்துக் குணங்களையும்
ஒருங்கே கொண்ட வீரபத்தினி கண்ணகியார் தமிழ் மகளிர் திலகமாய் ஆகிறார்!
அம்மையை வழிகாட்டியாய்க் கொள்ள தெய்வமாகவும் ஆக்கினர் மக்கள்!
கண்ணகி மனஉறுதி கொண்ட கற்புடைய பெண் மட்டுமல்ல! கற்புக்கு
அரசியாகிறாள்! இதுவும் தமிழ் நிலத்தின் சிறப்பு!
போருக்குச் சென்ற மகன் புறங்காட்டி வந்தானோ என்று அய்யம் கொண்டு,
அவனுக்குப் பாலூட்டிய மாரை அறுத்தெறிய முனைந்தாள் வீரத்தமிழத்தி!
மகவுக்கு தானூட்டும் பாலமுதில் வீரத்தை ஊட்டி வளர்த்தனர் தமிழ்ப்
பெண்கள். அந்த வீரமும் தமிழ் நிலத்தின் சிறப்பு!.
தமிழின் சிறப்பு நெஞ்சில் வாழ்கிறது! ஏற்பட்ட இன்னல்கள் நெஞ்சின்
கனலாக மாறும்போது மாரடித்து அழுகின்றது! கனல் மாரையும் பிய்த்து
வெளிவருகிறது!
அந்நாளிலே,நீதிவழுவியதுணர்ந்து, தொடர்ந்து மானம் இழந்து வாழ ஒருப்படா
பாண்டியனின் மனவுறுதியால் 'செல்லெனச் சென்றது அவனுயிர்'.
பகையின் கையில் சிக்கி மானமிழந்து சாவதற்கு ஒருப்படா தமிழர் "கெடுக
என் ஆயுள்" என்று நஞ்சை விருந்தாய் உண்ண 'செல்லெனச் செல்லுதுயிர்'.
அந்த மானமும் தமிழ் நிலத்தின் சிறப்பு!
அந்நாளிலே, நீதி வழுவிய போது சினந்து எழுந்ததனால் சிறப்புற்றாள்
கண்ணகி! நீதிவழுவிய அரசன் தமிழனாக, மானமறவனாக, நெறியுடையவனாக
இருந்ததால் ஓர்நொடியில் அவனை வென்றாள்!
நீதிவழுவிய நெறியற்ற அரசிடம் இருந்து மானம் காக்க, தம்மினம் காக்க,
நிலம் காக்க, நீதிகாக்க, கல்வியை மறந்து, காதலை மறந்து காடுகளிலும்
மலைகளிலும், கற்பென்ற மனவுறுதி கொண்டு தொடர்ந்து போராடி இண்ணுயிர்
துறக்கும் அத்துனை மகளிரும் கண்ணகிகளே!
ஈராயிரம் ஆண்டுகளாய் அணையா விளக்காய் தமிழர் சிந்தையில் வாழும்
கண்ணகியே உன்னை வணங்குகிறேன்!
உன்னை மட்டுமல்ல உன்னைப் போல உறுதி கொண்டு தமிழ் நிலம் காக்கும்
கண்ணகியர் யாவரையும் வணங்குகிறேன்!
காதலும், வீரமும், பண்பும், மானமும் கொண்ட கண்ணகியர் வாழும்வரை
தமிழ்நிலங்கள் வாழும்! தமிழ்நிலங்கள் வாழும்வரை கண்ணகியர் வாழ்வர்!
"வடஆரியர் படைகடந்து
தென்தமிழ்நாடு ஒருங்குகாணப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியனொடு ஒரு பரிசா
நோக்கிக் கிடந்த
மதுரைக் காண்டம் முற்றிற்று."
nelango5@gmail.com
கடந்தவை...உள்ளே |