இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2007 இதழ் 86 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!
சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் அ.ந.க!
- அந்தனி ஜீவா -

அறிஞர் அ.ந.கந்தசாமி[அறிஞர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14! அதனையொட்டி ஏற்கனவே பதிவுகளில் தொடராக வெளிவந்த மேற்படி கட்டுரை இப்பொழுது யூனிகோட்டில் வெளிவருகின்றது. 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் அ.ந.க பற்றிய அந்தனி ஜீவாவின் இக்கட்டுரைத் தொடர் ஈழத்தில் தினகரன் வாரமஞ்சரியில் 12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடராகும். ] "வாலிபத்தின் வைகறையில் பள்ளி மாணவனாக யாழ்ப்பாணத்து நகரக் கல்லூரிக்கு வந்து விட்டு, மாலையில் கிராமத்தை நோக்கிப் புகைவண்டியில் செல்லுகையில் சில சமயம் தன்னந் தனியே அமர்ந்திருப்பேன். அப்பொழுது என் கண்கள் வயல் வெளிகளையும், தூரத்துத் தொடு வானத்தையும் உற்று நோக்கும்....உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் நிறைந்த காலம்.  உலகையே என் சிந்தனையால் அளந்து விட வேண்டுமென்று பேராசை கொண்ட காலம்....."

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அமரராகிவிட்ட எழுத்தாளரும், சிந்தனையாளரும், முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியுமான அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள் தன் இளமைக்கால நினைவலைகளை இவ்வாறு எழுதியுள்ளார். எழுத்தாளர்களின் இளமைக்கால நினைவலைகள் இவ்வாறாகத்தானிருக்கும்.

அமரரான அ.ந.க.வின் எழுத்துகளை மீண்டும் படிக்கும் பொழுது அந்தத் துள்ளும் தமிழும், துடிப்புள்ள நடையும் எம்மை மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன.

இலக்கியவானில் சுடர் நட்சத்திரம்...

சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகனாக, ஈழத்து இலக்கிய வானில் சுடர் நட்சத்திரமாகத் திகழ்ந்த அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள் 1968ம் ஆண்டு பெப்ரவரி 14ம் திகதி அமரரானார். ஈழத்தின் சிறந்த சிறுகதை ஆசிரியரும், பிரபல நாவலாசிரியரும் ஒப்புயர்வற்ற சிருஷ்ட்டிகர்த்தாவுமான அ.ந.கந்தசாமி அவர்களின் மறைவு கேட்டு இலக்கிய உலகமே நிலை கலங்கியது. இலக்கிய வானில் சுடர் நட்சத்திரமாக ஒளி வீசித் திகழ்ந்து கொண்டிருந்த அ.ந.கவின் மறைவு இலக்கிய உலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

முற்போக்கு - நற்போக்கு சலசலப்பிற்கிடையே அமைதியாகத் தன் இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இலக்கியத்திற்குப் பாடுபட்ட அ.ந.கந்தசாமி தனக்குப் பின் இலக்கிய விழிப்புணர்ச்சிக்காகப் பாடுபடத் தேசிய இலக்கியப் பரம்பரை ஒன்றையே உருவாக்கியுள்ளார். ஏழை பணக்கார பேதம், சாதி, சமயப் பாகுபாடு, முதலாளி - தொழிலாளி பிரச்சினை ஆகிய விவகாரங்களில் சமதர்ம சமத்துவத்தை மூலக் கருவாக வைத்து, யதார்த்த இலக்கியம் படைத்த அ.ந.கந்தசாமி மறைவுக்குப் பின் அந்த இடத்தை நிறைவு செய்யும் தகுதி உள்ளவரைக் காண்பதரிது. இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் தன்னிகரில்லாத தலைவனாக, தனிக்காட்டு ராஜாவாக
விளங்கினார்.

கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல், நாடகம், இலக்கிய விமர்சனம், வானொலி கலா விமர்சனம்,  பேச்சு,  பத்திரிகைத்துறை, மொழி
பெயர்ப்பு ஆகிய இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் எடுத்துக் காட்டக் கூடிய சாதனைகளை நிலை நாட்டியுள்ளார்
.
  'அ.ந.க' என்ற
மூன்றெழுத்து வளர்ந்து வரும் ஈழத்து இலக்கியத்தில் புதிய பரம்பரைக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காகச் சுடர் விடுமென்பதில் ஐயமில்லை.

துள்ளி விளையாடும் பள்ளிப் பருவம்....

யாழ்ப்பாணத்தில் அளவெட்டியைப் (*இது உண்மையில் தவறு. அ.ந.க. உண்மையில் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக்
கொண்டவர். அந்தனி ஜீவா அளவெட்டி என்று குறிப்பிட்டிருக்கின்றார்.  உண்மையில் அ.ந.க.வின் தந்தையாரின் அடி அளவெட்டியாகவிருந்ததால், சிறுவயதில் தனது பெற்றோரை இழந்த அ.ந.க. அளவெட்டியில் தனது பால்ய காலத்தின் சிறு பகுதியைக் கழிக்க நேர்ந்தது. அதன் விளைவாக அம்மண்ணின் மேல் கொண்ட பற்றுதலினாலும், அளவெட்டியைச் சேர்ந்த நடராஜா என்பதைக் குறிப்பதற்காகவும் தனது பெயருக்கு முன்னால் அ.ந.வைச் சேர்த்துக் கொண்டார். இவரது குடும்பத்தவர்களுக்குச் சொந்தமான, கே.கே.எஸ்.வீதியில் அமைந்திருந்த நாற்சார வீடுகளிலொன்றே ,கடையுடன் கூடியது, 'கில்னர் கொலிஜி'ற்கு முன்பாக உள்ளது) பலர் கை
மாறிப் பின்னர் பேராசியர் கைலாசபதியின் சகோதரர் ஸ்ரீபதியின் கைக்கு மாறியது. சிறு வயதில் தாய் தந்தையரை இழந்த அ.ந.க.வும் அவரது சகோதரர்களும் சிறிது காலம் கொழும்புக் கறுவாக்காட்டுப் பகுதியில் உறவினர்கள் சிலரது பாதுகாப்பில் இருந்துள்ளனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு அதன் தீர்ப்பின் அடிப்படையில் அவரது பாட்டியின் அரவணைப்பில் வளர அனுமதிக்கப் பட்டனரென அறிகின்றோம். இவரது தந்தையாரான நடராசா யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் வைத்தியராகக் கடமை புரிந்தவர். கே.கே.எஸ்.வீதியீல் ,யாழ்நகரில், பல சொத்துகளுக்கு அதிபதியாகவிருந்தவர். இவற்றில் பலவற்றை பராமரிப்பாளராகவிருந்த உறவினர்கள் சிலர் பாட்டியின் மறைவுக்குப் பின்னர் அபகரித்துச் சீரழித்து விட்டனர். இதற்கு உடந்தையாகவிருந்த பிரபலமான சட்டத்தரணியொருவர் பின்னர் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சட்டத்தரணி இது போல் பல மோசடிகளைப் புரிவதற்கு உடந்தையாகவிருந்தாரென்றும் அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டாரென்றும் கேள்வி. மன்னாரிலும் இவருக்கும் சகோதரர்களுக்கும் நிலபுலன்கள் இருந்தன. அதனை அப்படியே அதில் வசித்து வந்த முஸ்லீம்வாசியொருவரிடமே விட்டு விட்டார்கள்.
சிறுயதில் பாட்டிக்கு விகடனில் வெளிவந்த கல்கியின் 'தியாகபூமியை' வாசித்துக் காட்டுவது இவர்களது முக்கியமானதொரு பொழுது போக்கு. இவரது ஒரே தங்கையான தையல்நாயகி என்பவர் ஈழகேசரி சிறுகதைப் போட்டியொன்றில் முதற் பரிசு பெற்றதாகவும் அறியப் படுகிறது. அதன் பின் அவர் ஏதும் எழுதியதாக அறியப் படவில்லை. இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் பற்றி ஆய்வு செய்பவர்கள் இது பற்றியும் ஆய்வு செய்வது நல்லது. அ.ந.க.வும் பதினேழு வயதில் தனியாகக் கொழும்பு சென்று விட்டதாகவும் அறியப்படுகிறது.
கொழும்பில் இவரது ஆரம்பகால உற்ற நண்பனாகவிருந்தவர் சில்லையூர் செல்வராசன். இறுதிக் காலத்தில் பெரிதும் துணையாக
இருந்தவர் பிரபல தமிழ் எழுத்தாளர் செ.கணேசலிங்கன். இறுதிக் காலம் வரையில் அ.ந.கவுக்கும் அவரது குடும்பத்தவர்களுக்குமிடையில் நேரடித் தொடர்புகள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை). உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரனும் சகோதரியும். எஸ்.எஸ்.ஸி.வரை கல்வி
பயின்ற அ.ந.க. தன் சுயமுயற்சியால் ஒரு பட்டதாரியை விட அதிகம் கற்றிருந்தார். 'கண்டதும் கற்கப் பண்டிதனாவான்' என்ற ஆன்றோர் வாக்குப்படி கண்டதையெல்லாம் கற்றதால் பண்டிதர்களையும் பட்டதாரிகளையும் மிஞ்சும் அளவுக்கு அ.ந.கந்தசாமி புலமை பெற்றிருந்தார். அதனால் தான் மறுமலர்ச்சிக் குழுவுக்கே தலைமை தாங்கும் அளவுக்குத் தகுதி பெற்றிருந்தார்.  கதைகளையும், கவிதைகளையும் ,கட்டுரைகளையும் விரும்பிப் படித்தார். பழைய இலக்கியங்களையும் ஆர்வத்துடன் ஆழ்ந்து கற்றார். இளமையிலிருந்து இலக்கியத்திலிருந்து வந்த ஆர்வந்தான் மறுமலர்ச்சிக் குழுவுக்கு முன்னோடி என்றழைக்கப்படும் அளவுக்குச் சிறந்து விளங்க அவருக்குப்
பக்கத் துணையாகவிருந்தது.

அ.ந.க. ஆரம்பகாலத்தில் 'ஈழகேசரி' இலக்கியப் பண்ணையில் வளர்ந்தவர். சிவபாதசுந்தரம் ஈழகேசரி ஆசிரியராகவிருக்கும் பொழுதுதான் அ.ந.கந்தசாமி , அ.செ.முருகானந்தம் போன்றவர்கள் பள்ளிப் பருவத்தினராயிருந்தனர். ஈழகேசரி மாணவர் பகுதியில் நடத்திய போட்டியில் கந்தசாமி எழுதிப் பரிசில் பெற்று இலக்கியத் துறையில் நிலையான ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார்.

எழுத்துத் துறையின் ஆரம்ப காலம்...

இலக்கிய விமர்சகர்களின் கூற்றுப்படி 1930ஆம் ஆண்டளவில்தான் ஈழத்து இலக்கிய உலகில் இளைஞர் பலர் தோன்றினர். இவர்கள்
இளமைத் துடிப்பின் காரணமாக ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு எழுதினார்கள். அ.ந.கந்தசாமி இந்த இளைஞர் வரிசையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அ.ந.கந்தசாமி காலத்தில் எழுத்துலகில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்களாக அ.செ.முருகானந்தம்,  தி.சா.வரதராசன் (வரதர்), சு.இராஜநாயகம், தாழையடி சபாரத்தினம் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

இந்தக் காலத்தைத் தொடர்ந்து இளைஞர் பலர் ஒன்று கூடி 'மறுமலர்ச்சி' என்ற இலக்கிய இதழினை வெளியிட்டனர். இ·து ஈழத்து இலக்கிய வட்டத்தின் 'மணிக்கொடியாகத்' திகழ்ந்தது. இந்த மறுமலர்ச்சிக் குழுவினர் இலக்கியத்தின் எல்லாது துறைகளிலும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினர். மறுமலர்சிக்குழுவில் பிரபல்யம் பெற்ற அ.ந.கந்தசாமியை முற்போக்கு இலக்கிய வட்டம் தம் முன்னோடி என்று கூறிக்கொள்ளும் விதத்தில் பிற்காலத்தில் அவருடைய இலக்கிய வளர்ச்சி அமைந்தது.

'மணிக்கொடி' யுகத்தைத் தோற்றுவித்த சிறுகதைச் சிற்பி புதுமைப்பித்தன் தமிழக எழுத்தாளர்களின் போற்றுதலுக்கு உரியவராக விளங்குவது போல, மறுமலர்ச்சிக் குழுவைத் தோற்றுவித்த அ.ந.கந்தசாமியும் ஈழத்து எழுத்தாளர்களிடையே விளங்கினார்.

யாழ்பாணத்தில் மறுமலர்ச்சிக் குழுவின் முன்னோடியாகத் திகழ்ந்த அ.ந.கந்தசாமி கொழும்பு வந்தார். கொழும்பு வந்ததும் கொழும்பு
வாழ்க்கையின் பரபரப்பில் பங்கு கொள்ளாமல் அமைதியை விரும்பினார். சமரச சன்மார்க்க கருத்துகளில் மனதைப் பறிகொடுத்த அ.ந.க. அன்பு மார்க்கத்தில் அவாக் கொண்டார். ஆனால் வாழ்க்கைப் பிரச்சினை காரணமாக அரசாங்க உத்தியோகம் ஒன்றில் அமர்ந்து விட்டு, பின்னர் 'ஒப்ஸர்வர்' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் புரூப் ரீடராக அமர்ந்தார். அங்கும் கொஞ்சக் காலம் கடமையாற்றினார்.

தமிழகத்துப் பெரியார் ஈ.வே.ராவின் பகுத்தறிவுக் கருத்துகளில் ஈடுபாடு கொண்டார். அ.ந.க. மனித்னை மனிதனாக மதிக்க வேண்டும் என்ற கொள்கையில் அக்கறை கொண்டவர். இதனால் இடதுசாரி இயக்கங்களால் கவரப்பட்ட அ.ந.கந்தசாமி இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவரானார். மார்க்ஸிய தத்துவ நூல்களை விரும்பிப் படித்தார்.

பத்திரிகைத் துறையினை மிகவும் நேசித்த அ.ந.க. 'ஒப்ஸர்வ'ருக்குப் பிறகு 'வீரகேசரி' ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அச்சகத் தொழிலாளர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் நொந்தார். அவர்களின் நலனில் அக்கறை கொண்டார். பொதுவுடமைக் கருத்துகளில் ஊறிப்போயிருந்த அ.ந.க. அச்சகத் தொழிலாளர்களுக்காகப் போராடத் தயங்கவில்லை. அதனால் அச்சக முதலாளிகளின் வெறுப்பினைச் சம்பாதித்துக் கொண்டார். அதனால் வீரகேசரியிலிருந்து விலக்கப் பட்டார்.

தொழிலாளர் நலனில் அக்கறை....

அச்சகத் தொழிலாளர்கள் எப்பொழுதுமே அ.ந.க.வின் மேல் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். அவருடைய மரணத்தின் பின்பு கூட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் மலர் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் பிரேத ஊர்வலத்திலும் பெருந்தொகையான அச்சகத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்பு கம்யூனிஸ்ட் கட்சி முழுநேர ஊழியரானார். கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்ப் பத்திரிகையான 'தேசாபிமானி'யின் முதலாவது
ஆரம்பகால ஆசிரியர் அ.ந.கந்தசாமியே. 'தேசாபிமானி'யின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். அப்பத்திரிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், அரசியற் கட்டுரைகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன.

கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டி என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட
நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற டிராம் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற உழைத்தவர்களில் முக்கியமான ஒருவராக அ.ந.கந்தசாமி கணிக்கப் படுகின்றார். தொழிற்சங்க ஈடுபாடு கொண்ட காலங்களில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்து அமர இலக்கியங்களைச் சிருஷ்டித்துள்ளார்.

கம்யூனிஸ்ட கட்சிக்குள் நடந்த போராட்டத்தின் காரணமாக அ.ந.கந்தசாமியும் அவரைச் சார்ந்த ஏழெட்டுப் பேரும் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏறபட்டது. [இது பற்றி அ.ந.க.வே என்னிடம் தெரிவித்தார்]. அங்கிருந்து வெளியேறி 'சுதந்திரன்' பத்திரிகையில் சேர்ந்தார்.

அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த எமிலி சோலாவின் 'நாநா' பற்றிய சுதந்திரன் விளம்பரம்.தினசரிப் பத்திரிகையாக வெளிவந்த 'சுதந்திரன்' வாரப் பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியதும் அ.ந.கந்தசாமி ஆசிரியர் கடமைகள் முழுவதையும் ஏற்றார். 2000 பிரதிகள் விற்ற சுதந்திரன் 12000 பிரதிகளாக விற்பனையைப் பெருக்கிய பெருமை அவரையே சாரும். சுதந்திரனில் பணியாற்றிய காலத்தில் எமிலிஸோலாவின் 'நானா' என்ற நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டு இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து 'பண்டிதர் திருமலைராயர்' என்ற புனைபெயரில் பிரச்னைக்குரிய பல கட்டுரைகளை எழுதினார். சிலப்பதிகாரத்தைப் பற்றி அ.ந.கந்தசாமி எழுதிய கட்டுரைகள் பெரும் சர்ச்சைக்குள்ளாயின. பண்டிதர் திருமலைராயர் என்ற பெயர் இலக்கிய உலகில் அடிபடலாயிற்று. சிலப்பதிகாரத்தைப் பற்றி அ.ந.கந்தசாமி பண்டிதர் திருமலைராயர் என்ற பெயர்களில் வந்த கட்டுரைகளைத் தமிழகத்துப் பகுத்தறிவுச் சிங்கம் பெரியார் ஈ.வே.ரா அவர்கள் தனது குடியரசு பத்த்ரிகையில் மறுபிரசுரஞ் செய்ததுடன் மட்டுமல்லாது, அதைப்பற்றி ஆசிரியர் தலையங்கமும் வரைந்தார். மலேசியாப் பத்திரிகையும் அவற்றை மறுபிரசுரஞ் செய்தது.

சுதந்திரனில் ஆர்.கே.சண்முகநாதன் ஆரம்பித்த 'குயுக்தியார்' கேள்வி-பதில் பகுதியை அவர் விட்டதும், அ.ந.கந்தசாமி அதை ஏற்று 'குயுக்தியார்' மூலம் அளித்த பதில்கள் குயுக்தியாருக்கு மேலும் ஆழமான மவுசை ஏற்படுத்தின என்பதனைப் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டுள்ள பழம்பெரும் எழுத்தாளர்கள் எவரும்மறுக்க மாட்டார்கள். அ.ந.க சுதந்திரனில் பணியாற்றிய காலத்தை 'சுதந்திரனின் பொற்காலம்' என்றே வர்ணிக்கலாம்.

தகவற் பகுதி...

சுதந்திரனிலிருந்து வெளியேறிய பின்பு அரசாங்கத் தகவற் பகுதியில் மொழிபெயர்ப்பாளராக அ.ந.கந்தசாமி கடமையாற்றினார். தகவற் பகுதியிலிருந்து வெளிவந்த ஸ்ரீலங்கா பத்திரிகையில் ஆசிரியராகவும் பணியற்றியுள்ளார். தகவற் பகுதியிலிருக்கும் பொழுதுதான் மணவாழ்க்கையில் ஈடுபட்டார். கொஞ்சக்காலம் மணவாழ்வில் திளைத்த கந்தசாமி தனியாக வாழ்க்கை நடாத்தினார். அவர் தமது துணவியைப் பிரிந்து தனிமரமானாலும் தொழிலாளர் தோழர்களுடன் இரண்டறக் கலந்து இனிய பண்புடன் பழகி வந்தார். பாராளுமன்ற அமைச்சர் முதல் பாதசாரி வரை அ.ந.கவிற்கு நண்பர்களுண்டு. நண்பர்களைச் சந்தித்தால் அவருக்கு உற்சாகம் பிறந்து விடும். வீதியில் அல்லது ஹொட்டலில் 'பிளேயின் டீ'யை அருந்தியவாறு ஆயிரம் கதைகள் பேசுவார். இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதில் வல்லவர்.

தகவற்பகுதியில் 12, 13 வருட கால சேவையுடன் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றவுடன் இலக்கிய உலகை விட்டு சிலகாலம்
'அஞ்ஞாதவாசம்' பண்ணிய அ.ந.க மீண்டும் புது வேகத்துடன் இலக்கியத் துறையிலீடுபட்டார். 'டிரிபியூன்' என்ற ஆங்கிலப் பத்திரிகையில் சிலகாலம் பணியாற்றிய பின்னர் முழுநேர எழுத்தாளராக 'பேனாவை' நம்பி வாழத் தொடங்கினார்.

ஆங்கில வார இதழான டிரிபியூனில் பணியாற்றிய காலத்தில் ஆங்கிலத்தில் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியதுடன் திருக்குறளைப் பற்றிப் புத்தகம் போடுமளவிற்கு நிறையக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அ.ந.கந்தசாமியின் ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைகள் காலஞ்சென்ற அறிஞர் ஆபிகாம் கோவூர் போன்ற பகுத்தறிவுவாதிகளின் பாராட்டுதலைப் பெற்றன.

பத்திரிகைத் துறை....

வீரகேசரி, தேசாபிமானி, சுதந்திரன், ஸ்ரீலங்கா, டிரிபியூன் ஆகிய பத்திரிகைகளில் ஆசிரிய பீடங்களிலிருந்த அ.ந.கந்தசாமிக்குப் பத்திரிகைத் துறையில் நிறைய அனுபவமுண்டு. விரல்விட்டு எண்ணக் கூடிய சிறந்த பத்திரிகையாளர்களில் அ.ந.கவும் ஒருவர்.

தினசரிப் பத்திரிகை ஒன்றில் ஆசிரியராக இருப்பது கடினமான செயல்.ஆனால் அ·து அ.ந.கந்தசாமிக்குக் கை வந்த கலை. அதில் அவர் மிகச் சுலபத்தில் வெற்றியீட்டினார். 'செய்தி' போன்ற வார இதழ்கள் சிறப்பாக வெளிவந்ததற்கு அவர் வழங்கிய ஆலோசனைகளே காரணமாகும் என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.

அறிஞர் அ.ந.கந்தசாமியைக் கட்சிக் கண் கொண்டு பார்ப்பவர்களே அதிகம். இல்லாவிடில் இவரை ஆசிரியராகக் கொண்டு ஒரு சிறந்த
தினசரிப் பத்திரிகை வெளிவந்திருக்கும். ஆனால் அந்தப் பாக்கியம் அந்தப் பத்திரிகை ஸ்தாபனத்திற்கு இல்லாது போயிற்று. ஈழத்து
இலக்கிய இரசிகர்கள் செய்த புண்ணியம் அவர் எழுத்தைத் தொழிலாக மேற்கொண்டார். பத்திரிகை ஆசிரியராகப் போயிருந்தால் அந்தப் பத்திரிகையின் வெற்றியில்தான் அவரது சிந்தனையைச் செலவிட்டிருப்பாரேயொழிய 'மதமாற்றம்' போன்ற நாடகத்தையும்' 'மனக்கண்' நாவலையும் தந்திருக்க மாட்டார்.

முதல் சந்திப்பு....

பள்ளி மாணவனாக எழுத்துத் துறையின் ஆரம்ப அரிச்சுவடியை மனனம் பண்ணும் சிறுவனாக இருந்த வேளையில் அ.ந.கந்தசாமி
அவர்களைத் தகவற் பகுதியில்தான் சந்தித்தேன். அப்பொழுது 'ஷெல்' கம்பனியில் சில்லையூர் செல்வராசன் பணியாற்றினார். அ.ந.கவின் மூலமே சில்லையூர் செல்வராசனின் அறிமுகம் ஏற்பட்டது.

எனக்குக் கலையுலகில் நெளிவு சுழிவுகளை ஆரம்ப காலத்தில் அறிமுகப் படுத்திய கலைஞர் கலைதாசன் என்ற நண்பருடன் நடத்திய 'தேசபக்தன்' என்ர பத்திரிகைக்கு ஆலோசனையும் கட்டுரையும் கேட்பதற்கு அ.ந.க.வை சந்திக்கத் தகவற் பகுதிக்குச் சென்றேன்.

பிரபல எழுத்தாளரும், முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியுமான அ.ந.கந்தசாமி எப்படியிருப்பாரோ, நம்மிடம் முகம் கொடுத்துப் பேசுவாரோ அல்லது ஓரிரு வார்த்தைகளுடன் உரையாடலை முடித்துக் கொள்வாரோ என்று அஞ்சியபடி சென்றேன். ஆனால் அ.ந.க என்னை அகமும் முகமும் மலர் வரவேற்று என்னை பற்றி அதிக அக்கறையுடன் விசாரித்து, என்னுடைய ஆரம்ப இலக்கிய முயற்சிகள் பற்றிக் கேட்டு அதற்குரிய ஆலோசனைகளையும் கூறிய பின்னர் பத்திரிகைத்துறை பற்றி அவரின் சொந்த அனுபவங்களை எடுத்துக் கூறினார்.

அவரது நட்பு எனக்கு ஏற்பட்டது அறுபதுகளில். பின் அவரின் அடுத்த காலம் வரை அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன். அவரைச் சந்திக்கும் பொழுதெல்லாம் எழுத்துலக இடர்பாடுகளையும் பத்திரிகைத்துறை அனுபவங்களையும் அடிக்கடி கூறுவார். இலங்கை
சமசமாஜக் கட்சியின் முழுநேரத் தொண்டனாக நான் பணியாற்ரிய வேளையில் தொழிற்சங்கப் பரிவில் வெளிவந்த 'ஜனசக்தி' பத்திரிகையில் நான் ஆசிரியராகப் பணியாற்றியபொழுது, பத்திரிகை அமைப்பு முறைகளைப் பற்றி அரிய ஆலோசனைகள் கூறி எனது ஒரு வழிகாட்டியாக அமைந்தார்.

ஈழத்துத் தேசிய பத்திரிகைகளில் பணியாற்றும் பலர் அ.ந.க.வுடன் தொடர்புள்ளவர்களே. தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மாத்திரமன்றி
ஆங்கில, சிங்களப் பத்திரிகையாளர்களுடனும் நல்ல தொடர்புடையவர் அ.ந.க என்பது நாடறிந்த உண்மையாகும்.

கவிதையும் கந்தசாமியும்...

கவிதையின் மூலம் இலக்கிய உலகில் காலடிச் சுவடுகளைப் பதித்த அ.ந.க. கவிதைத் துறையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் 'கவீந்திரன்' என்ற பெயரில்தான் நிறைய கவிதை எழுதினார். கவிதை இலக்கியத்தில் அதிக ஈடுபாடுள்ள அ.ந.க 'இலங்கை எழுத்தாளர் சங்க வெளியீடான' 'புதுமை இலக்கியம்' இதழில் கவிதையைப் பற்றி எழுதியுள்ளது....

"எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் முதலில் செய்யுள் தோன்றிய பின்னர் தான் வசனம் தோன்றியிருக்கிறது. தமிழ் இலக்கியம் இதற்கு விதிவிலக்கல்ல. வள்ளுவர், கம்பர், இளங்கோ வளர்த்த கவிதை தமிழின் மடியில் பிறந்ததுதான். இன்றைய வசனத் தமிழ் தென்னகத்தில் போலவே ஈழத்திலும் வசன இலக்கியத்தில் முன்னோடியாகப் பன்னெடுங்காலம் கவிதைத் தமிழ் முழங்கி வந்திருக்கிறது. வசன இலக்கியம் நேற்றுப் பிறந்த பிள்ளை. அதன் சரிதம் கைப்பிடிக்குள் அடங்கும். மிகச் சுருங்கிய சரிதம். ஆனால், இலக்கிய உலகின் அரசியாகிய கவிதைத் தேவியோ நீண்டகாலம் வாழ்ந்தவள். காவியத்தின் சரிதை காலச் சேற்றில் ஆழப் புதைந்து கிடக்கிறது. நீண்ட அதன் சரித்திரத்தை நிமிர்த்தி நிறுத்திக் கணக்கிடுவது இலகுவான காரியமல்ல. கடினமான அப்பணியை எதிர்காலத்தில் யாராவது
நிறைவேற்றுவர்.

செந்தமிழின் பொற்காலம் எனப் புகழப்படும் சங்க காலத்தில் கூட ஈழத்துக் கவிதையின் நன்மணம் கடல் கடந்து பரவிருந்தமைக்குப்
போதிய சான்றுகள் உள்ளன. தமிழ் கூறும் நல்லுகம் முழுவதிலும் நடைபெற்ற இலக்கிய முயற்சிகளின் போக்கை எடுத்து விளக்க
நற்றிணை, குறுந்தொகை,அகநாநூறு ஆகிய நூல்களில் ஈழத்துப் பூதந்தேவனார் எழுதிய அழகிய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

ஈழத்துப் பூதந்தேவனார் காலத்தைக் கடந்து நிற்கிறார். தமிழ் இலக்கியத்தின் சுவையறிந்து போலும் அவர் மேலிட்டு நீலக்கடல் அதனைப் பெரும்பாலும் உட்கொண்டு விட்டது. பெரியதொரு கவிஞர் பட்டியலில் எஞ்சியிருக்கும் ஒரு சில நூற்றுவரில் பூதந்தேவனார் ஒருவர். ஆனால் அவர் மட்டுந்தானா முன்னாளில் தமிழ்க் கவிதைச் சங்கூதிய பெருமகன்? இன்னும் பலர் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களைப் பற்றி நாம் இன்று ஒன்றும் அறிய முடியாதிருக்கிறது."

ஈழத்துத் தமிழ்க் கவிதையைப் பற்றிக் கூறிப் பெருமைப்படும் அ.ந.கந்தசாமி 'உலகப் படத்தில் சிறு புள்ளியாக விளங்கும் இலங்கையில் சிறுபான்மையினராக விளங்கும் தமிழ் பேசுவோர் கவிதையின் மீது கொண்டிருக்கும் ஆர்வமும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் ஆற்றும் தொண்டும் வியக்கக் கூடியனவாகும்" என்று அடிக்கடி கூறுவார்.

கவிதையைப் பற்றிக் கதையளப்பதுடன் நில்லாது கவிதைத் துறையில் தம் கைவண்ணத்தையும் காட்டியுள்ளார். 'எதிர்காலச் சித்தன் பாடல்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'சத்திய தரிசனம்' ஆகியவை பலரால் பாராட்டப்பட்டவை.

ஆவேச அம்மானை

1966ம் ஆண்டு ஸ்ரீலங்கா சாகித்திய மண்டபத்தில் நடத்திய 'பாவோதல்' நிகழ்ச்சியில் அ.ந.கந்தசாமி பாடிய 'கடவுள் என் சோர நாயகன்'  என்ற கவிதை பாவோதல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. அந்தக் கூட்டத்தில் குறிப்புரையாற்றிய தென்புலோலியூர் மு.கண்பதிப்பிள்ளை "ஒரு நூற்றாண்டிற்கு ஒரு தடவைதான் இதைப் போன்ற நல்ல கவிதை தோன்றும்" எனப் பாராட்டினார். பல கவிதை அரங்குகளின் தலமைப் பீடத்தை அலங்கரித்துள்ளார் அ.ந.க.

தேசபக்தன் பத்திரிகையில் 'கசையடிக் கவிராயர்' என்ற பெயரில் ஈழத்து இலக்கிய உலகில் நடைபெறும் திருகுதாளங்களையும் காசு கொடுத்து உண்மைப் படைப்பாளிகளின் படைப்புகளை வாங்கித் தம் சொந்தப் பெயரில் புத்தகமாகப் போடும் நபுஞ்சகத்தனத்தைக் கடுமையாகச் சாடினார்.

இதனால் இலக்கிய உலகில் அ.ந.கந்தசாமியைக் குறை கூறுவதைத் தொழிலாகச் சில உதிரிகள் மேற்கொண்டனர். 'கசையடிக் கவிராயர்'  என்ற பெயரில் எழுதிய கண்டனக் கவிதைகளில் கூட தன் இனத்தைச் சார்ந்த கவிஞர்களை மறந்துவிட்ட இலக்கிய விமர்சகர்களைப்
பார்த்து 'நற்கவிஞன் பீதாம்பரனை மறந்தாயோ?' என ஆத்திரக்கொண்டு ஆவேசத்துடன் அம்மானை பாடுகிறார்.

இதைப் போன்று தமிழகத்தின் புதுமை இலக்கியத்தின் விடிவெள்ளியாகிய புதுமைப் பித்தனும் இது போன்ற கவிதைகளை எழுதியுள்ளார்.  அவர் பாடியதில் ஓரிரு வரிகள் பின்வருமாறு-

'...மேல் நோக்கிக்
கொட்டாவி விட்டதெல்லாம்
கூறு தமிழ் பாட்டாச்சே!
முட்டாளே! இன்னமுமா பாட்டு?'
என்று பாடியுள்ளார்.

இலக்கிய மலடர்

கசையடிக் கவிராயர் பெயரில் அ.ந.க எழுதிய பாடல்கள் இலக்கிய மலடர்களுக்குச் சாட்டையடிகளாக விழுந்தன. எழுத்தாளர் தேசிய
கீதத்தை எழுதிய பெருமை இவரையே சாரும். அந்தக் கவிதை இலங்கை முற்போக்குச் எழுத்தாளர் சங்கத்தின் அகில இலங்கை
எழுத்தாளர் மாநாட்டின்போது வெளியிடப்பெற்ற 'புதுமை இலக்கியம்' சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளது. அந்தக் கவிதையை 'கவீந்திரன்'  என்ற பெயரில் அ.ந.க எழுதியுள்ளார். புதுமை இலக்கியம் மலர்களில் இதே கவிதை தொடர்ந்து எழுதப் படுகிறது. அந்த எழுத்தாளர் கீதத்தின் சில வரிகளை இங்கு குறிப்பிடுவது சிறப்பாகும்.

'எழுத்தெனும் சங்கம்
ஒலித்திடுகின்றது
உழுத்திடும் உலகம்
ஒழிந்திடவே'

- சங்கு முழங்குது என முழங்கும் அ.ந.க

'சுரண்டல் மிகுந்தது
சூழ்ச்சி நிறைந்தது
இருண்ட இச்சமுதாயம்!
வறண்டு கிடந்திடும்
மக்களின் துன்ப,
வதைகள் ஒழித்திடுவோம்.!...'

புது அமைப்பும் நிறுவிடுவோம் எனச் சுரண்டலும் சூழ்ச்சியும் நிறைந்த இச்சமூக அமைப்பைப் பேனா முனை கொண்டு ஒழித்துப் புது அமைப்பை அமைக்க அறைகூவி அழைத்திடும் கவிஞர் தமிழ் இலக்கியத்தின் மூத்த பரம்பரையைச் சேர்ந்த கம்பன்,வள்ளுவனை
இனங்கண்டு இப்படிக் கூறுகிறார்.

'கம்பன் - வள்ளுவன்
காளமேகம் வழி
வந்தவர் நாமன்றோ...?
கீரன் ஒளவை
இளங்கோ பெற்ற
கீர்த்தி நமதன்றோ?
நாவலன் - பாரதி
சோமசுந்தரன்
நமது இனமன்றோ?-இஅவர்
யாவரும் காட்டும்
வழியே நமது
இலக்கிய நல்வழியாம்! அவ
வழியே சென்று
ஒளிசேர் தமிழை
விழி போற் காத்திடுவோம்'

காவிய மன்னர்களின் பெருமையைச் செப்பிய அ.ந.க மீண்டும் பாடுகிறார்.

'...  வானவில் வர்ணம் ஏழு
வளைவதைக் கண்டிடுவீர்.
கானகத்தில் கனிகள் ஆயிரம்
காற்றில் அசைவதைப் போல்
பூங்காவனத்தில் ஆயிரம் ஆயிரம்
பூக்கள் மலர்வதைப் போல்
புத்தம் புதிய கருத்துகள் ஆயிரம்
நித்தம் பெருகவென..'

எனக் கூறும் அ.ந.கந்தசாமி 'நமக்குத் தொழில் கவிதை. நாட்டிற்குழைத்தல். இமைப் பொழுதும் சோராதிருத்தல்' என்று ஞாபகப் படுத்துகிறார்.

அ.ந.கந்தசாமியின் கனவு பொய்த்து விடவில்லை. அவர் வாழ்ந்த காலத்திலே அது நனவாகிக் கொண்டிருந்தது. எத்தனை எத்தனை கவிஞர்கள் தோன்றி நித்தம் நித்தம் ஆயிரம் கவிதைகள் படைத்தவண்ணம் இருக்கிறார்கள். தமிழ் நாட்டுக் கவிஞர்களைக் கூட விஞ்சும் அளவுக்குக் கவிதை வானில் உலா வருகிறார்கள். பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதைகள் வளர்ச்சிக்கு ஈழத்தவர்களே சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர் எனத் தமிழகப் படைப்பாளிகளே பாராட்டுகின்றனர்.

[* ஈழத்தில் தீண்டாமைப் பேய் தாழ்த்தப்பட்ட குடிமகனொருவனை வில்லூன்றி மயானத்தில் பலி கொண்டபொழுது அதனை முதன்
முறையாகக் கண்டித்து 'வில்லூன்றி மயானம்' கவிதை படைத்தவர் அ.ந.க. என்பதையும் இத்தருணத்தில் நினைவு கூருவது பொருத்தமானதே. வீரகேசரியில் 'வெண்பா எழுவது எப்படி?' என்றொரு தொடரினையும் அ.ந.க எழுதியுள்ளதாக அறிகின்றோம். ]

சிறுகதைத் துறையில்....

வளர்ந்து வரும் சிறுகதைத்துறைக்கு வலுவூட்டும் சிறுகதைகளை அ.ந.கந்தசாமி சிருஷ்டித்துள்ளார். 'நாயினும் கடையர்', 'இரத்த உறவு'  போன்ற சிறந்த படைப்புகளைத் தந்துள்ளார். மலை நாட்டுத் தொழிலாளர்களைப் பின்னணி வைத்து எழுதப்பட்ட 'நாயினும் கடையர்'  அ.ந.க. எழுதிய சிறுகதைகளில் அமர சிருஷ்டியாகத் திகழ்கிறது. தொழிலாளர்களைக் கருப்பொருளாக வைத்து கதை படைத்தவர்களுக்கு அ.ந.க முன்னோடியாகக் விளங்குகின்றார். தமிழ் நாட்டில் தொழிலாளியாக வாழ்ந்து , இலக்கியகர்த்தாவாக மாறிய விந்தன், தொழிலாளர்களின் இன்பதுன்பங்களை, வர்க்க பேதங்களை, அது தோற்றுவிக்கும் வறுமை நிலையைக் கண்டித்தார். அதன் அடியுண்மையை எடுத்துக் காட்டி யதார்த்தபூர்வமான கலை வடிவத்தை இலக்கிய வழக்கினுள் மீண்டும் புகுத்தினார். தொழிலாளியாக வாழ்ந்த அவரது சொந்த அனுபவமே, அவரது கதைகளுக்கு உயிரூட்டிற்று என்று விமர்சகர்கள் கூறுவது போல் தொழிற்சங்கவாதியாகச் சிலகாலம் இருந்த அ.ந.க. தோட்டத் தொழிலாளர்களுடன் இரண்டறக் கலந்து அவர்களின் துன்ப, துயர்களை உணர்ந்ததால், தோட்டத் துரைமார்களின் அதிகாரங்களை நேரில் கண்டதால் அவைகளைத் தமது சிறுகதைகளில் தத்ரூபமாகச் சிருஷ்ட்டித்தார் என்றே
கூறவேண்டும்.

அ.ந.கந்தசாமியைப் பற்றி இலக்கிய விமர்சகரான கலாநிதி கா.சிவத்தம்பி குறிப்பிடும்பொழுது 'அ.ந.கந்தசாமியின் கதைகளோ
வன்மையாகச் சமூகத்தைத் தாக்குபவை. சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வை நன்கு புலப்படுத்துவதில் சமர்த்தர் இவர். 'இரத்த உறவு'  முக்கிய கதைகளில் ஒன்று' [ நூல்: 'தமிழ் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்' ] என்கின்றார்.

சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான அ.ந.கந்தசாமி தமிழ் நாட்டுச் சிறந்த எழுத்தாளர்களின் வரிசையில் வைத்துக் கணிக்கப் பெற்றார். அ.ந.க. எழுதிய சிறுகதைகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அவைகள் தரத்தில் உயர்ந்து நிற்கின்றன. மார்க்ஸிய அரசியல் இலக்கியக் கொள்கைகலைத் தழுவிப் புதிய உலகைப் ப்டைக்க வேண்டும் என்ர நோக்கத்தில் எழுதியிருக்கும் சிறுகதைகள் என்றும் அழியாத படைப்புகள். அவைகள் அச்சில் வெளிவருமானால் புதிய தலைமுறையினர் அவற்றைப் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

நாவல் துறை

அ.ந.க.வின் 'மனக்கண்' நாவல்"முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடியாக கந்தசாமி விளங்குகிறார். அவர் தமது முழுச் சக்தியையும் ஒருங்கு கூட்டி நாவல் காவியம் இயற்ற வேண்டும். அப்பொழுதுதான் அவர் பெயர் நிலைத்து நிற்கும்" என்று "ஈழத்து இலக்கிய வளர்ச்சி' என்ற நூலில் கனக செந்திநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கியத்தின் எல்லாத்துறைகளிலும் தன் பெயரை நிலைபெறச் செய்த் அ.ந.கந்தசாமி நாவ்ல் துறையிலும் 'மனக்கண்' நாவ்ல் மூலம் தன் முத்திரையைப் பதித்து விட்டுத் தான் சென்றுள்ளார். 'மனக்கண்' நாவல் தினகரன் வாரமஞ்சரியில் தொடராக வெளிவந்தபொழுது ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஆவலுடன் விரும்பிப் படித்து வந்தார்கள். இவர்கள் தமிழ் நாட்டுச் சஞ்சிகைகளில் வெளிவந்த தொடர்கதைகளை விரும்பிப் படித்தவர்கள். ஈழத்து எழுத்தாளர்களின் கதைகளின் பக்கம் கூட தலை வைத்துப் படுக்காதவர்கள் கூட 'மனக்கண்' நாவலைத் தொடர்ந்து விரும்பிப் படித்து வந்தார்கள்.

'மனக்கண்' என்ற நாவல் தொடர்கதையாக வெளிவந்ததால் அதன் இலக்கியத்தரத்தை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது. தொடர்கதை மூலம் வாராவாரம் வாசகர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் அ.ந.க. 'மனக்கண்' என்ற நாவலை எழுதவில்லை. யதார்த்தமாக இருக்க வேண்டும் என்ற நோக்குடன் எழுதினார். 'மனக்கண்' நாவல் இலக்கியத்திற்குக் கிடைத்த அரிய பொக்கிஷம்.

தினகரனில் அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல் தொடர்கதையாக வெளிவந்து முடிந்த வாரம். அடுத்தவாரம் நாவலாசிரியரின் குறிப்புரை வெளிவரும் என்று குறிப்பிடப்பாடிருந்தது. என்ன குறிப்புரை எழுதப் போகின்றாரோ என்று எண்ணியவாறு அ.ந.கந்தசாமியைப் பார்க்கப் போயிருந்தேன். அப்பொழுது வாராவாரம் அ.ந.க.வைச் சந்தித்து இலக்கிய உரையாடல் நடத்துவது வழக்கம்.

அ.ந.கந்தசாமி எழுதிக் கொண்டிருந்தார். மேல்நாட்டு நாவலாசிரியர்களைப் போலத் தினசரி எழுத வேண்டும் என்ற பழக்கத்தை அவர் வைத்துக் கொண்டிருந்தார். அ.ந.க. தாம் எழுதியதை எனக்கு வாசித்துக் காட்டினார். அது 'மனக்கண்' நாவலின் குறிப்புரை. அந்தக் குறிப்புரையில் குறிப்பிடப்பட்டிருந்த சில ஆங்கில நாவலாசிரியர்களின் கருத்துகளைச் சுட்டிக் காட்டினார். அ.ந.கந்தசாமி நிறையப் படிக்கிறார். நிறைய எழுதுகிறார் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டேன். அப்பொழுது நான் அவரிடம் தெரிவித்தேன், "இலக்கியதின் எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டுள்ள அ.ந.கந்தசாமி நாவல் துறையில் கவனத்தைச் செலுத்தத் தவறிவிட்டார் என்று இலக்கிய விமர்சகர் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் அத்துறையில் 'மனக்கண்' மூலம் பெரும் சாதனையை நிலை நாட்டி விட்டீர்களே" என்றேன்.

"இனிமேல் தான் நான் நாவல் துறையில் அதிக அக்கறை காட்டப் போகின்றேன்" எனக் குறிப்பிட்டார். மலையகத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்சிகலை வைத்து 'களனி வெள்ளம்' என்ற நாவலை எழுதிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார் (மேற்படி 'களனி வெள்ளம்' நாவலின் கையெழுத்துப் பிரதி எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், 1983 யூலைக் கலவரத்தில் எரிந்து போனதாகவும் அறிகின்றோம் - ஆசிரியர்). 'களனி வெள்ளத்திற்கு' முன்னால் கால வெள்ளம் அவரை அடித்துச் சென்று விட்டது.  'நாவல் துறையில் காட்டப்போகும் அதே அக்கறையை உங்கள் உடல் நிலை பற்றியும் காட்டுங்கள்' என்றேன். கடும் நோயின் பாதிப்புக்கிடையில் அ.ந.க கணிசமான அளவு எழுதியது வியப்புக்குரியது.

அ.ந.க இன்னும் ஓரிரு ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால் 'மனக்கண்' நாவலிலும் பார்க்க, சிறந்த நாவல்களை நமக்குத் தந்திருப்பார். ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றி எழுதும் எந்த விமர்சகரும் அ.ந.க.வை மறந்துவிட முடியாது. அந்த அளவுக்கு ஒரே ஒரு நாவலின் மூலம் தன் ஆளுமையைக் காட்டிச் சென்றுள்ளார். கம்பனுக்கு ஒரு காவியத்தைப் போல், வள்ளுவனுக்கு ஒரு திருக்குறளைப் போல, அ.ந.கந்தசாமிக்கு ஒரு 'மனக்கண்' என்றே துணிந்து கூறலாம்.


நாடகத்துறை....

அ.ந.க.வின் 'மதமாற்றம்' கொழும்பில் பலமுறை மேடையேற்றப் பட்டுள்ளது. நாடகத்தைப் பாரக்க வந்திருந்த பார்வையாளர்களில் சிலர். அரஙகேறிய காலத்தில் பலத்த வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்திய நாடகமிது. ஈழத்து நாடக வரலாற்றில் முக்கியமானதொரு நாடகமிது.நாவல் துறையில் மாத்திரமின்றி நாடகத் துறையிலும் அ.ந.க.வின் விசேட கவனம் சென்றது. வீழ்ச்சியுற்றுக் கிடக்கும் நாடகத்துறையில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று நினைத்தார். 'மதமாற்றம்' என்ற நல்லதொரு நாடகத்தை தந்தார். 'மதமாற்றம்'  நாடகத்தைப் போல் அந்தக் காலகட்டத்தில் ஈழத்து நாடக மேடையைப் பாதித்தது வேறு எந்த நாடகமும் இல்லை எனலாம். கொழும்பில் தற்போது அரங்கேற்றப்படும் சில நாடகங்களைப் பார்க்கும் பொழுது பார்வையாளர்கள் 'ஆகா' எனக் கைதட்டிச் சிரிப்பதைக் காண்கின்றோம். நாடகத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்ததும் எதுவும் மனதில் தங்கும்படியாக இல்லை. இப்படிப்பட்ட போலி இரசிகத்தன்மையை வளர்க்கும் நாடகங்களில் மாறுபட்டு நின்றது 'மதமாற்றம்'.

பேராசிரியர் கைலாசபதி அவர்கள் 'ஒப்சேவர்' ஆங்கிலப் பத்திரிகையில் தமிழ் நாடகங்களைப் பற்றி எழுதியபொழுது 'இதுவே தமிழில் எழுதப்பட்ட நாடகங்களில் ஆகச் சிறந்த நாடகம்' எனக் குறிப்பிட்டார். ஆமை வேகத்தில் இயங்கிய ஈழத்துத் தமிழ் நாடகமேடை அ.ந.க. 'மதமாற்றம்' ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக சிறிது துரித வேகத்தில் இயங்க ஆரம்பித்தது என்பது நாடக அபிமானிகள் ஒத்துக் கொண்ட உண்மையாகும்.

அ.ந.க.வின் 'மதமாற்றம்'...'மதமாற்றம்' முதன் முதலில் அரங்கேற்றப்பட்டதும் அதைப் பற்றிய காரசாரமான விவாதங்களும், விமர்சனங்களும் இலக்கிய உலகில் பெரும பரபரப்பை ஏற்படுத்தின. சில விமர்சகர்கள் அ.ந.க. முற்போக்குவாதி என்ற காரணத்தினால், அவரை வைத்தே நாடகத்தை எடை போட்டு, நடுநிலை நின்று உண்மை கூறாது 'மதமாற்றத்'தைக் குறை கூறினார்கள். 'மதமாற்றத்'தைப் பிரசாரபலத்தினால் பிரபலப்படுத்த முனைகிறார்கள் என ஒரு விமர்சகர் நாடகத்தைப் பார்க்காமலே விமர்சனம் பண்ணினார். ஆனால் கண்டனத்திற்கு எல்லாம் கலங்காத கந்தசாமி 'மதமாற்றம்' தலை சிறந்த நாடகம் என்பதை நிரூபித்தார். [அ.ந.க.வே 'மதமாற்றம்' பற்றியதொரு விமர்சனக் கட்டுரையினை எழுதியுள்ளார். இது யூலை 3, 1967இல் வெளிவந்த 'செய்தி'ப் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை 'பதிவுகள்' இதழிலும் வெளியானது.- ஆசிரியர்]

எதிர்காலத்தில் ஈழத்து நாடகத்தைப் பற்றி விமர்சகர்கள் விமர்சிக்கும் பொழுது அ.ந.க.வின் மதமாற்றத்தை மைல்கல்லாக வைத்துத் தான் கணக்கிடுவார்கள். நாடகத்தை ஆங்கில அறிஞர் பெர்னாட்ஷாவின் நாடகங்களோடு ஒப்பிடலாம் என்று சில இலக்கிய விமர்சகர்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர். 'அமரவாழ்வு' என்ற இன்னொரு நாடகத்தையும் அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. [தாஜ்மகால் உதயம் பற்றிய 'கடைசி ஆசை' என்றொரு குறு நாடகத்தையும் அ.ந.க. எழுதியுள்ளார். - ஆசிரியர்] 'மனக்கண்' நாவலை நாடகமாக எழுதித் தருவதாக என்னிடம் குறிப்பிட்டார். அவரது ஆசையை நாடகக் கலைஞர்களாவது நிறைவேற்றுவார்களா? [அ.ந.க.வின் நெருங்கிய நண்பரான சில்லையூர் செல்வராஜன் அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலை வானொலி நாடகமாக வழங்கியதை மறந்து விட்டீர்களா? -
ஆசிரியர்]

இலக்கிய விமர்சனம்

இலக்கிய விமர்சனத் துறையில் 'தேசிய இலக்கியம்' என்ற கருத்தைப் பற்றி அந்த இயக்கம் ஈழத்தில் வலுவடைந்த காலத்தில் அ.ந.கந்தசாமி பல அரிய கட்டுரைகள் எழுதியுள்ளார். அத்துடன் 'சிலப்பதிகாரம்', 'திருக்குறள்', 'எமிலிஸோலா' போன்ற பரபரப்பான கட்டுரைகள் எழுதினார்.

அறிவுலகவாதியான அ.ந.கந்தசாமி எழுதும் கட்டுரைகள் புதுமை நோக்குடன் இருக்கும். சிலப்பதிகாரத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் பண்டிதர் முதல் பட்டதாரிவரை பெரும்பாலோரிடையே பெரும் சர்ச்சைக்குள்ளாகின. 'தினகரன்' வாரமஞ்சரியில் வெளிவந்த 'நான் விரும்பும் நாவலாசிரியர்' என்ற கட்டுரைத் தொடரில் எமிலிஸோலாவைப் பற்றி அ.ந.கந்தசாமி எழுதிய கட்டுரை திறனாய்வு மிக்க கட்டுரை என்று எல்லோருடைய பாராட்டையும் பெற்றதுடன் எமிலிஸோலாவைப் படம் பிடித்துக் காட்டியது.

தகவற் பகுதியினரால் வெளியிடப் பெற்ற 'ஸ்ரீலங்கா' சஞ்சிகையிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சரித்திர நிகழ்ச்சிகளையும் நிலைக்களனாகக் கொண்ட கதைகள் எழுதியுள்ளார். வானொலியில் மேல் நாட்டு நாடக ஆசிரியர்களைப் பற்றிச் செய்த விமர்சனங்கள் தினகரனில் தொடராக வெளிவந்த பொழுது நாடகத்துறையிலீடுபட்டவர்கள் அதனை விரும்பிப் படித்தார்கள். ஹென்றிக் ஹிப்சனின் அமர நாடகமான 'பொம்மை வீடு' (The Doll House) நாடகத்தைத் தழுவிப் 'பெண்பாவை' என்ற பெயர் (நாடகத்திற்குத் தமிழ் வடிவம் கொடுத்தவர் தேவன் - யாழ்ப்பாணம்) கொடுக்கப்பட்டது. வானொலியில் இப்ஸனின் பொம்மை வீட்டைப் பற்றி அறிஞர் அ.ந.கந்தசாமி
செய்த நாடக விமர்சனம் 'பெண்பாவை'யைப் பார்த்த நாடக அபிமானிகளுக்கு இப்ஸனின் 'பொம்மை வீட்டை'ச் சரியாக இனம் கண்டு கொள்ள உதவியது.

அறிஞர் அ.ந.கந்தசாமி இலக்கிய விமர்சனத்துடன் நில்லாது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவர் மகாகவி பாரதியாரின் ஞானகுருவாகிய யாழ்ப்பாணத்துச் சாமியார் யார் என்பதை ஆராய்ந்து பாரதியாரின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சாமியார் அல்வாயூர் அருளம்பல தேசிகர் என்ற உண்மையை நிலைநாட்டினார். அருளம்பல தேசிகர் பற்றிய விரிவான நூல் எழுதுவதற்குரிய குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார். மகாகவி பாரதியாருக்கு 'பாரதி' பட்டம் கொடுத்த இலங்கையர் யார் என்பதை மரணமடைவதற்குச் சில மாதங்களுக்கு முன்னால் ஆராய்ந்து கொண்டிருந்தார். உலகப் பேரழகி கிளியோபறாவைப் பற்றிப் பல ஆங்கில நூல்களை ஆராய்ந்து அரியதொரு கட்டுரையை 'ராதா' வார இதழில் வரைந்தார். ஆறுமுக நாவலரைப் பற்றி விரிவானதொரு நூல் எழுதப் போவதாகக் குறிப்பிட்டதுடன் அவ்வப்போது பல நாளிதழ்களில் எழுதிய கட்டுரைகளையும் ஒழுங்காகச் சேகரித்து வைத்திருந்தார்.

மேல்நாட்டு எழுத்தாளர் ஓ ஹென்றியின் சிறுகதை உத்திகளையும், திருப்பங்களையும் பாராட்டும் அ.ந.க. அவற்றை இளம் எழுத்தாளர்கள் படித்துப் பயனடைய வேண்டும் என்று அவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டார். அ.ந.க. அறிஞர் பெர்னாட்ஷா முதல் பேரறிஞர் பெட்ரண்ட் ரஸ்ஸல் வரை அறிந்து வைத்திருந்தார். பெட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத அராபிய உறவுகள்' என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை 'இன்ஸான்' வார இதழில் தொடர்ந்து எழுதினார். எப்பொழுதும் தன் எழுத்துக்களால் பிறர் பயன் அடைய வேண்டும் என்று விரும்பும்
அ.ந.கந்தசாமி 'வெற்றியின் இரகசியங்கள்' என்ற தத்துவ நூல் ஒன்றினையும் எழுதியுள்ளார். இது தமிழகத்தில் பாரி நிலையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இ·து எல்லா வகையிலும் சிறந்து வாழ்க்கையைப் படிப்பிக்கும் நூலாகும். [இதே பாரி நிலையத்தினர் பின்னர் வெளியிட்ட அகிலனின் நூலொன்றிற்கும் 'வெற்றியின் இரகசியங்கள் என்னும் பெயரினை வைத்துள்ளதானது நேர்மையற்ற வெட்கங்கெட்ட செயலாகும். - ஆசிரியர் -]

சீர்திருத்தத் துறை

அ.ந.கந்தசாமி இலக்கியத் துறையோடு நிற்காது சமுதாயச் சீர்திருத்தத்துறைகளிலும் பகுத்தறிவுச் சிந்தனையைப் பரப்புவதிலும் நெடுங்காலமாக ஈடுபட்டு வந்தார். சுயமரியாதைக் கருத்துகளால் கவரப்பட்ட கந்தசாமி, சுயமரியாதை இயக்கத்தின் தலைவருமாயிருந்தார். இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்கும்பொழுது தமிழ் எழுத்தாளர்களிடையே அ.ந.கந்தசாமி பன்முகங்கொண்ட விஸ்வரூபனாகக் காட்சியளித்தார். இவரின் திறமையையும் இலக்கிய ஆளுமையையும் மதித்த பேராசிரியர் கைலாசபதி தனது 'ஓப்பியல் இலக்கியம்' என்ற நூலை அ.ந.கந்தசாமி அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார்.

அ.ந.க.வெற்றியின் இரகசியம்!

இலக்கிய உலகில் ஈடு இணையற்ற ஜாம்பவானாக அ.ந.க திகழ்வதற்குக் காரணமென்ன? புதுமைச் சமுதாயத்தைக் காணத் துடித்த புதுமையாளனாக விளங்கினார். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காகக் போராடினார். அந்தத் தொழிலாளர் வர்க்கத்துடன் தனனை இணைத்துக் கொண்டார். தான் படைக்கும் இலக்கியத்தைக் கூட அந்தக் கண்ணோட்டத்துடன் தான் படைத்தார்.

கடும் நோயின் பாதிப்புக்குள்ளாகிய அ.ந.கந்தசாமி அதைப் பற்றியே கவலைப் படவில்லை. சிறூவயதிலிருந்தே 'எக்ஸிமா' என்ற நோய்க்கு ஆளாகிய அவர், அந்த நோயைக் குணப்படுத்துவதற்குப் பல முயற்சிகள் செய்து தோல்வி கண்டு, தமிழ் நாட்டில் வேலூர் வைத்தியசாலையில் சில காலம் தங்கியிருந்து சுகப்படுத்த முடியாமல் மற்றும் பல்வேறு வைத்தியங்கள் செய்தும் சில புதிய நோய்களின் பாதிப்புக்கு ஆளானார். ஆனால் மனத் தைரியத்தை மட்டும் விடவில்லை.

வாழவேண்டும், வாழ்ந்து கொண்டு பேனா முனை கொண்டு பெரும் போராட்டம் நடத்த வேண்டும் என்ற வர்க்க உணர்வின் காரணமாக நம்பிக்கை இழக்காமல் ஊசிகளாலும் மருந்துக் குளிகைககளாலும் உயிர் பெற்று வாழ்ந்து கொண்டு, அவர் எழுத்துலகில் பல சாதனைகளை நிலை நாட்டியது வியப்பிலும் வியப்புக்குரியதாகும்.

அ.ந.க. 'வெற்றியின் இரகசியம்'

அ.ந.க.வின் 'வெற்றியின் இரகசியங்கள்'..அ.ந.கந்தசாமி அவரது 'வெற்றியின் இராக்சியங்கள்' என்ற நூலில் 'உங்களுக்கு இருக்கக் கூடிய நோய்களைப் பற்றி எண்ணுவதில் நேரத்தை செலவிட வேண்டாம். ஏனெனில் உங்களிடம் உண்மையான நோய்கள் இல்லாவிட்டால் அவைகள் உங்கள் எண்ணத்தின் சக்தியால் தோன்றி விடக்கூடும்' என்ற எமில் கூ அவர்களின் கருத்தை எமக்கு எடுத்துச் சொல்கிறார். இது போன்ற அரிய கருத்துகளைத் தேடிப் படித்ததால் தான் தனது நோயைப் பற்றிச் சிந்திக்காமல் தன்னால் முடிந்த அளவு சாதித்தார். தன்னைப் போல் மற்றவர்களும் இலட்சியத்துடன் வாழ வேண்டும் எனக் கருதியே 'வெற்றியின் இரகசியங்கள்' என்ற நூலையும் தந்தார்.

சரித்திர நாயகன்!

'எழுதுகோல் தெய்வம்- இந்த எழுத்தும் தெய்வம் என்ற் அப்பாட்டுகொரு புலவன் பாரதியின் வாக்குப் படி எழுத்தைத் தெய்வமாகப் போற்றி வந்தார் அ.ந.க. அந்த இலக்கியத்தின் சரித்திர நாயகனாக, அறிவுலக மேதையாகத் திகழ்ந்த அ.ந.கந்தசாமி 'புதுமை இலக்கியம்'  என்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட மாத ஏட்டில் 'நான் ஏன் எழுதுகிறேன்?' என்ற தலைப்பில் தான் எழுத ஆரம்பித்த கால சூழ்நிலையைப் படம் பிடித்துக் காட்டினார். அதில் சில வரிகளைக் கீழே தருகிறேன்:

"..இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும்,கண்ணீரும்,  கம்பலையுமாக நாம் வாழும் உலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும் , செல்வத்துக்கும் நடக்கும் போரும், உயர்ந்த சாதியாருக்கும், தாழ்ந்த சாதியாருக்கும் நடக்கும் போரும், அசுர சக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. போர்களினால் வாழ்வே ஒரு சோக கீதமாகி விட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழித்து விட முடியுமோ
அவ்வளவு விரைவில் ஒழித்து விட வேண்டும். அதன் பின் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதனைப் பூக்க வைக்கும் பெரும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டுமென்ற கருத்தைப் புகழ் பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்."

இவ்வாறு கூறியது மாத்திரமின்றி அ.ந.கந்தசாமி சமுதாயச் சுரண்டலை ஒழிக்க , சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வு போன்ற கொடுமைகளைப் பேனா முனைகொண்டு சாடினார். அவரின் கனவை நனவாக்க அவரைச் சார்ந்த அணியினர் இயக்கமாக இயங்கினார்கள்.

அ.ந.கந்தசாமியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட எமக்கு அவரின்பாடையைப் பார்த்தபொழுது புதுமைப் பித்தனின் பாடலொன்றுதான் நினைவிற்கு வந்தது. இதை அருகிருந்த எழுத்தாள நண்பரிடம் தெரிவித்தேன்.

"பாரதிக்குப் பின் பிறந்தார்.
பாடை கட்ட வைச்சிட்டார்.
ஆரதட்டிச் சொல்வார்.
அவரிஷ்ட பாரதனே!"

இந் நான்கு வரிகளையும் கேட்ட நண்பர் அ.ந.க.வின் இடத்தை நிரப்ப நீண்ட காலம் பிடிக்கும் என்றார். சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகனாக அ.ந.க. என்ற அந்த ஆளுமைமிக்க படைப்பாளி திகழ்கிறார் என்ற உண்மையை யாரும் மறக்க முடியாது.

 


அ.ந.க.வின் 'மதமாற்றம்' மேடையேறிய காலகட்டத்தில் இலங்கைப் பத்திரிகை, சஞ்சிகைகளில் அது பற்றித் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துகள் சில:

'
மதமாற்றம்' தமிழ் நாடகத்துறையில் புதியதொரு திருப்பம். - 'தினகர'னில் த.ச.

ஈழத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய 'மதமாற்றம்' புரட்சிகரமான கதாம்சத்தைக் கொண்ட ஒரு சிறந்த நாடகம். மனித பலவீனங்களை,  மூட நம்பிக்கைகளைக் கிண்டல் செய்து குத்திக் காட்டுகையில் சிரிப்புடன் சிந்தனையையும் கிளறிவிடும் வகையில் கதை மிக நுணுக்கமாகப் பின்னப்பட்டிருக்கிறது. - 'வீரகேசரியில்' எஸ்.எஸ்.

திரு.கந்தசாமியை எவ்வித தயக்கமுமின்றி அவரது நாடகப் புலனுக்காக மெச்சுகிறேன். கடைசிக் காட்சிக்கு முன்னைய காட்சி ஒரு இப்சன் அல்லது ஒரு ஷாவின் வாத விவாத நாடகக் காட்சியை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. கடைசிக் காட்சியில் மிகச்சிறந்த நாடகப் பண்புகள் அமைந்துள்ளன. - 'டெய்லி மிரரில்' அர்ஜுனா.

கதையைக் கட்டி எழுப்பி நடாத்திச் செல்லும் விதத்தில் ஆசிரியரின் கலை நுணுக்கமும் சாதுரியமும் பளிச்சிடுகின்றன. ஒன்றின் மீதொன்றாக முறுகி இறுகும் கட்டங்கள் சுவைஞர்களைப் பிணித்து வசப்படுத்துவதுடன் அமையாது மதச்சார்பு பற்றிய உளவியல் அடிப்படைகளைக் குறிப்பாக உணர்த்திச் செல்லுகின்றன. - 'வசந்தத்தில்' கவிஞர் முருகையன்.

இலங்கையில் பல மேடை நாடகங்களைப் பார்த்துள்ளேன். ஆயினும் 'மதமாற்றம்' என்ற இந்நாடகம் என்னுள் ஏற்படுத்திய மதிப்பை வேறு எந்த நாடகமும் ஏற்படுத்தவில்லை. மேடை நாடகக் காட்சிகளை அமைக்கும் திறமையை அவர் எங்கு பெற்றார் என்று தெரியவில்லை.... கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந்நாடகத்தில் சாடி இருப்பது இந்நாடகத்தின் தனிச்சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை. பார்வையாளர் எம்மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப் பார்ப்பர். அதன் பின்புலத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தனை மூலம் அறிவர். - நூல் சிறப்புரையில் எழுத்தாளர் செ.கணேசலிங்கன்.


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner