அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள்! அமரர் எஸ்.அகத்தியர் அ.ந.கந்தசாமியின்'நாயினுங் கடையர்' அவர் காலப் படைப்பாளி அ.செ.முருகானந்தனின் 'காளி முத்துவின் பிரஜா உரிமை'படித்ததுண்டா? அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள். தோட்டக்காட்டார் என்ற மலையகத் தொழிலாளர்களுக்காகஇருவரின் பேனா முனைகள் எமது காலத்திற்கு முன்பே போர் முனைகளாயின. இரு கதைகளும் சான்று."போர்க்குணம் மிக்க எழுத்தாளன் தான் உண்மையான இலக்கியவாதி" என டால்ஸ்டாய்யும் கார்க்கியும் சொன்னதின்அர்த்தம்- அந்தப் போர்க்குணம் மிக்க எழுத்து அ.ந.க., அ.செ.முவிடம் அக்காலமே வெளிப்பட்டது. இருவரையும்மனிதாபிமானம் மிக்கோர் என்பேன். ஒரு படைப்பாளியின் சிருஷ்டிகளைப் படியாமல் மேலெழுந்தவாரியாக'ஆகா ஊகூ' என்று இலக்கியத்தை மலட்டுத்தனமாக்கும் கேடுகெட்ட நிலை இன்னும் விட்டபாடில்லை. படியாமலேவிமரிசிக்கும் 'மேதைகளு'ம் உண்டு. ஓர் சமயம் ஓர் இலக்கிய ஆர்வலர் நான் எதிர்பாராத ஒரு கேளிவியைத்தூக்கிப் போட்டார் - "சில விமர்சகர்கள் மேடையில் பேசினாலும் பத்திரிகையில் எழுதினாலும் புத்த்கம்வெளியிட்டாலும் கனதியாக - பல்வகை உத்திகளில் ஓயாமல் எழுதுகிற அ.ந.கந்தசாமியையோ உங்களையோஏன் குறிப்பிடுவதில்லை". "குருடர்கள் யானை பார்த்த கதை தெரியும் தானே?" என்று திருப்பிக் கேட்டேன். ஒரு வகையில் பார்த்தால் எழுதிகிறவனுக்கு விளம்பரம் ஆபத்துத் தான். விளம்பர ஓடுகாலித்தனம் இலக்கியக்காரனுக்குவிழுக்காடு என்பதை இன்னும் நம்பாத - புரியாத கலை இலக்கிய 'மேதாவி'கள் நம் மத்தியில் செப்பமாக இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியிருப்பதும் நல்லதுதான். கம்பு எடுத்தால் அடியெடுத்து ஓடாமல்விழுந்து படுக்கிற மாடுகளும் உண்டு தானே. 'ஐரோப்பியக் கனவான்' போன்ற அநகவின் தோற்றம், நடையுடைபாவனை, எளிமை மனங்கொண்ட தமிழ் இலக்கியக்காரரை அவர்பால் அண்டவிடாது என்று என்னால் தவறாகக்கணிக்கப் பட்டதால் சொற்ப காலம் நான் எட்டியே இருந்தேன். சொல்லப் போனால் தவறான் கணிப்பும் ஆய்வும்அவர் மனசின் தவறுகளை உணர்த்த உதவுகிறதுதான். 1947லிருந்து 1952 வரை அநக என்மட்டில் பேசிக் கொள்ளப்படுகிறவராகமட்டுமே திகழ்ந்தமை, 'ஐரோப்பியக் கனவான்' மாதிரியான அவர் பிம்பம்தான். பழைய யாழ்ப்பாணத்தைப்பெயர்த்து வந்து, 'இது தான் நவீன கலாசாரம்' என்று சொல்லியிருக்கக் கூடாதா? பேய்த்தனமாக அவர்அதையும் செய்யவில்லை. பிரான்ஸ் இலகியகர்த்தா எமிலி சோலாவின் நாவலை அநகதமிழில் மொழிபெயர்த்துச் 'சுதந்திரன்' வார இதழில் படித்தபோது எழுந்த மேலுணர்வு அவர்பால் காந்திற்று.எமிலிசோலாவின் 'திரேசா' நாவலில் எப்பவோ மனம் பறி கொடுத்திருந்தேன். ஆறுமுக நாவலரின்கலப்புத் தமிழுரை நடை நமக்கெல்லாம் ஐதீற்வரம் போடுகிறது. நாவலர் சமூகத்தைப் பிசகாக வழி நடத்தியவர்தான்.எனினும் 'தவறான வழியில் இன்பத்திற்குப் பதில் துன்பமே விளையும்' என்னுமவர் தம் ஒரு கருத்தியலைஎமிலி சோலாவின் 'திரேசா' நாவலில் படித்து வியந்த காலம் அது. 'நானா' நாவல் சுதந்திரனில்அநக விரும்பியபடி வரவில்லை. அவர் கொதிப்படைகிறார் என்று அறிந்தேன். ஆங்கில வார இதழ் 'ரிபியூன்','வீரகேசரி', 'சுதந்திரன்' பத்திரிகைகளில் இருந்தபோதும் 'தேசாபிமானி', 'ரிபியூன்' இரண்டிலுமேசுதந்திரமாக எழுதினார். அநக பற்றி அறிந்ததெல்லாம், 'அவர் ஆற்றலை முற்றாக வெளிப்படுத்தும்சாதனம் வெளியே இருக்கவில்லை' என்று பின்னாளில் அவருடன் கொண்ட நெருக்கம் எனக்கு நிரூபித்தது.அவர் வேகத்திற்கு அக்காலம் வானொலியும் சரியாக ஈடு கொடுக்கவில்லை. 'இலக்கியக்காரன் புளுகுணிச்சித்தன்' என்று மிதவாதி நினைப்பதால் கனதியான எழுத்தும் புலுமாசாகத் தோன்றுகிறது என்ற ஆத்திரம்அவருக்கும் இருந்தது. மனம், வாக்கு, காயம், சிந்தனை, செயல் - காற்றாடி போல்சுழன்றடிக்கும் காரிய தீரர். சகல் துறைகளையும் இலக்கியத்திற் பரி சோதித்து விடுகிற அவர் வேகம்என் துரித கதிக்குச் சாணை தீட்டிற்று. சாக்கடைகளிலும், கோபுர வாசல்களிலும் அவர் பாதங்கள் பதிந்தன.இலக்கியம் அவரிடம் இயக்கமாக இருந்தது. கொழும்புக் கோட்டை மணிகூண்டுக் கோபுர முன்றல் நடைபாதையில்செ.கணேசலிங்கன் சகிதம் முதன் முதலில் கண்டேன். என் கற்பனையில் உருவகித்த மனிதராகத் தோன்றவில்லை.கூரிய கண் மின்னி என் உள்ளத்தில் ஆழ்ந்து காந்தி எழுந்த கிளர்வுப் பொறி சதிரமடங்கச் சிலிர்த்தது.'இவர் தான் ஏ.என்.கே' என்று செ.க அறிமுகம் படுத்தியபின், என்னை அறிமுகம் செய்து வைத்த பாணியைஅவரும் ஏற்றதாக இல்லை என்பதை அவர் சொற்கள் வெளிப்படுத்தின. "எங்களுக்கு வெளியாலயும் அடிபடுகிற பெயராச்சே" என்றுசெ.கவைப் பார்த்து அ.ந.க கூறியவிதம் அப்படியாகவிருந்தது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தையேஅநக 'எங்கள்' என்று குறிப்பிட்டார். கொடுத்த கைலாகு க்ஷணவேலை வாஞ்சையுள் அமுங்கிக் கிடந்தது. மார்க்சிச அறிஞர் கே.ராமனாதன், கே.கணேஷ், அ.ந.கந்தசாமி,பி.ராமநாதன், எச்.எம்.பி.முஹிதீன்,கே.டானியல்,என்.கே.ரகுநாதன்,க.கைலாசபதி,கா.சிவத்தம்பி,இளங்கீரன்,ஜீவா, பசுபதி என்று இமுஎசவுள் பரந்த இறுக்கம் என்னளவிலும் கட்சி -சித்தாந்தம்-இலக்கியம்என்றும் போயிற்று. அ.ந.க, பி.ராமநாதன்,பிரேம்ஜி, எச்.எம்.பி.முஹிதீன் நாளடைவில் எனக்குநெருக்கமாயினர். இலக்கிய வளர்ச்சிக்கான விமர்சனப் பார்வை அ.ந.க.வில்தான் அதிகம் ஊற்றெடுத்துநின்றது. மார்க்ஸியம், மதம், சங்கீதம்,உளவியல்,செக்ஸ்,வரலாறு,மானிடவியல், விஞ்ஞானம், சமூகவியல், இலக்கியம், கணிதம், மருத்துவம், என்று அவர் படியாத நூல்களில்லை.நூல்களை அவர் உயிர் போல் நேசித்தார். அவருடனான தோழமையானது சர்ச்சை, தர்க்கம், வேக இயக்கம்,விவாதம் என்றாகியது. சில விவாதங்கள் விடியும்வரை நீண்டதுண்டு. அவர் மேடை அலங்காரச் சொற்பொழிவாளர்அல்லர். கருத்தினை ஆழ அகல விரிவாக்கி விளக்கும் பேரறிஞர் சாகரம் என்று அவர் உரை விரிந்துநின்றது. அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள்- 2...உள்ளே அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள்- 3...உள்ளே நன்றி: தினகரன் ஆகஸ்ட் 18, 1991 [ அ.ந.க.வின் நினைவு தினம் பெப்ருவரி14. அதனையொட்டிய நினைவுக் கட்டுரை ]
|