எழுத்தாளர் வ,ந,கிரிதரன் -

கவிதை கவிஞனின் அகத் தேடலில் விழைவது. கவிதை கவிஞனுக்குள் நிகழ்ந்த பாதிப்பிலிருந்து விடுபட்டுவிட முடியாத ஒரு மையத்திலிருந்து உருவாக்கம் பெறுவது. கவிதை  உருவாக்கப்படுபவை அல்ல, மனித உணா்வினில் உருவாவது. காட்டிடை வைக்கப்பட்ட சிறுகனல் காடெங்கும் பரவுவது போல மனிதனின் உணர்வினைத் தாக்கிய சிறுவடு கவிதையெனும் தீயாய் பற்றிப் படர்கிறது. அந்த சிறுவடுவே கவிதைக்கான தொடக்கப்புள்ளி. அந்த வடு இல்லாமல் கவிதையும் இல்லை. கவிஞனும் இல்லை. கவிஞனை உரசி காயப்படுத்திய அந்த நிகழ்வே கவிஞனுக்கான முகமும், அவனது அடையாளமும் கூட. இவ்வாறாக கவிதைக்கு ஆயிரம் விளக்கங்களை அவரவர் அனுபவத்தில் இருந்து அள்ளிக் கொடுக்கலாம்.

ஈழத்துப் போர்ச்சூழலில் கவிதையின் உருவாக்கம் பற்றி குறிப்பிடும்  பெண்கவிஞர் கவிதா,

“ஒரு சமூகத்தின்
சோகம் சுமந்த பாரத்தில்
கூனிமுடமாகி
உருக்குலைந்து
கண்களைக் குருடாக்கிய
கொலைக் களத்திலிருந்து
உயிர் தப்பிய கவிதை இது”
(முள்ளிவாய்க்காலுக்குப்பின், ப-37)

என்று குறிப்பிடுகின்றார். இப்பதிவு ஈழத்தமிழர்களின் கவிதைகளை ஒரு சமூகத்தின் வலிநிறைந்த வரலாற்று ஆவணமாக நம்மை நோக்கச் செய்கின்றது. இது போன்ற அழுத்தமும் அடர்த்தியும் நிறைந்த பதிவுகள் இன்னும் வேறுபட்ட நிலைகளில் வெவ்வேறு படைப்பாளிகளால் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கவனத்திற்குரியதாகும். ‘வலி’ மனிதனுக்கு மனிதன் பல நிலைகளில் ஒத்தும், அனுபவம், உணர்வுகளின் அடிப்படையில் வேறுபட்டும் தோன்றக்கூடியவை. ஈழத்தமிழர்களைப் பொறுத்தமட்டில் இனப்போரில் ஏற்பட்ட சிதைவினால், அழிவினால் உருவான உறவின் இழப்பு, பிரிவு, உடமைகளின் இழப்பு, சொந்த மண்ணில் அகதியாக்கப்பட்டமை, அந்நிய நாடுகளுக்கு தஞ்சம்கோரி புலம்பெயர்ந்த பயணங்கள் நெடுகிலும் சந்தித்த சொல்லொணாத் துயரங்கள், புகலிட நாடுகளில் சந்தித்த இனவெறி அல்லது நிறவெறி சார்ந்த ஒடுக்குதலின் வலி, உழைப்பை சுரண்டிய முதலாளித்துவத்தின் வலி என்பதான பொதுமை சார்ந்த எல்லோருக்குமான வலிகளும், காதல் பிரிவு, சாதி, மதம் சார்ந்த ஒடுக்குதலின் மூலம் ஏற்படுகின்ற தனித்த வலிகளையும் ஈழத்தமிழர்களின் எழுத்துக்களில் நாம் கண்டடைய முடிகிறது. குறிப்பாக இவற்றை ஈழத்தின் தொடக்க கால நவீன கவிஞர்களான வ.ஐ.ச.ஜெயபாலன், சு.வில்வரத்தினம், சேரன் உள்ளிட்டோரோடு, சமகாலத்தில் ஏராளமான கவிதைகளை எழுதிக்கொண்டிருக்க கூடிய தீபச்செல்வனின் கவிதைகளிலும் மிகுதியாகக் காண முடிகின்றது. அவை போருக்கான ஆயுதமாக, தீர்வாக, கூர்மையான விமர்சனமாக, விடுதலைப்பொருளாக செயல்படுவதையும் உணரமுடிகின்றது.ஈழத்தில் 1948 ல் மலையகத் தமிழா்களின் உரிமை பறிக்கப்பட்டமை, 1961- ல் சிங்களம் மட்டுமே சட்டத்தை நடைமுறைப்படுத்தியமை, 1983 -ல் தமிழா்களுக்கு எதிராக நிகழ்த்திய வெலிக்கடைச்சிறை படுகொலை தொடங்கி இன்னபிற நிகழ்வுகளின் ஊடாக ஈழத்தமிழர்கள் மீது சிங்களவர்கள் தொடர்ந்து செயல்படுத்திய அடக்குமுறைகளும், அதனை எதிர்த்து செயல்பட்ட தமிழ்அமைப்புகள், அரசியல் கட்சிகளின் விடுதலைப் போராட்டமுமே கால வளர்ச்சியில் வெவ்வேறு விதமான முகங்களைக்கொண்ட இன அழித்தொழிப்பாகவும், விடுதலைக்குரலாகவும் ஒலித்ததையும், செயல்பட்டதையும் காணமுடிகின்றது. இவற்றின் தொடர்ச்சியே பல்கிப் பெருகி  2009 -ல் முள்ளி வாய்க்காலில் வந்து முற்று பெறுவதையும் காணமுடிகின்றது. இவைகள் நெடுகிலுமாக நடைபெற்றுள்ள நிகழ்வுகள் குறித்த பதிவுகளும் அவைகள் தொடா்பான விமா்சனங்களுமே ஈழத்துக் கவிஞா்களின் கவிதைகளில் மிக அதிகமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் வலி நிறைந்த பகுதிகளை விவாதிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஈழத்தின் சமகாலப் பிரச்சனைகளை கவிதைகள் மூலமாக வெளிப்படுத்துவதில் தீபச்செல்வனின் பங்களிப்பு கணிசமானது. அவா் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும், தமது கருத்தியலை படைப்புகளின் ஊடாக வெளிப்படுத்தி வருவதில் தொடா்ந்து முன்நிற்பவா். அவரது கவிதைகள் ஈழத்தின் பிரச்சனையினால் அம்மக்கள் படுகின்ற துயரினை மிக அடா்த்தியாக வெளிப்படுத்தக் கூடியன. அவா் தம்மைப் பற்றியும் ஈழத்துப் போர்ச் சூழல் பற்றியும் தமது நோ்காணல் ஒன்றில் தமது அனுபவத்திலிருந்து குறிப்பிடும் வரிகள் ஈழம் என்றாலே அது வலி நிறைந்த ஓரு சொல் என்பதனை நாம் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்றே கருதுகிறேன்.

“பள்ளியில் குண்டு வீசப்பட்ட உடைந்த வகுப்பறை. காணியில் வெற்றுத் துப்பாக்கி ரவைகளைப் பொறுக்கி விளையாடுவது. இராணுவம் அலைந்த சப்பத்துகளின் அடையாளங்களை காலையில் தேடுதல் என்றுதான் என் குழந்தைப் பருவம் கழிந்தது. இப்படி நடந்த யுத்தம் என்னை அழிவுகளால், சத்தங்களால் இராணுவங்களால் அஞ்சும் ஒரு குழந்தையாக்கியது. சிறிய வயதில் இராணுவம் ஷெல் மழை பொழியப் பொழிய பொதிளைத் தூக்கிக் கொண்டு ஓடும்பொழுது எனக்குள்ளால் நிகழ்ந்த துயா் வாழ்க்கை, யுத்தம் கையளித்த பெரு அபாயங்களாக, அச்சுறுத்தல்களாக மனதில் படிந்து விட்டன.

யுத்தம் மீண்டும் மீண்டும் துயா் மிக்க வாழ்க்கையை விரித்துக் கொண்டே சென்றது. யுத்தம் மீண்டும் மீண்டும் அலைச்சல்களையும், இழப்புகளையும் தந்தது. பதுங்குக் குழிகளை வெட்ட முடியாத வயதில் தரைகளில் பதுங்குவதும், பின்னா் நிலமெங்கும் பதுங்கு குழிகளை வெட்டுவதுமாகக் கழிந்தது எங்கள் வாழ்க்கை. (ஷோபாசக்தி, நோ்காணல்கள் , நான் எப்போது அடிமையாயிருந்தேன், பக் - 51,52) என்பதாக அவா் தமது அனுபவத்தை பகிர்ந்து கொள்வது நாம் கவனத்தில் கொள்ளத்தக்கனவாகும். மேலும் ஈழத்தின் மூத்த கவிஞா்களான சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன் உள்ளிட்ட கவிஞா்களும், ஷோசபாசக்தி உள்ளிட்ட இன்னும் பல எழுத்தாளா்களும் தமிழீழ விடுதலைப்புலி அமைப்பினர், அதன் தலைவரான பிரபாகரன் மீதும் கடுமையாக விமா்சனங்களை வைக்கின்ற வேளையில்  தீபச்செல்வனின் பார்வை தனித்துவம் மிக்க ஒன்றாக விளங்குவது அவரின் தெளிவினையும், கவிஞனுக்கே உண்டான நெஞ்சுரத்தையுமே விளங்கிக்கொள்ள செய்கின்றன.

தீபச்செல்வன் கவிதைகளில் குழந்தைகள் சார்ந்த துயரம் மிக அதிகமாக முன்வைக்கப்பட்டுள்ளன. தனித்துவம் நிறைந்தது குழந்தைகள் உலகம்.  குழந்தைகள் உலகினை பார்க்கின்ற, ரசிக்கின்ற விதமும் அதற்குள் விரிகின்ற கனவுகளும் ஏராளம். ஆனால் ஈழத்தில் பிறந்த தமிழ் குழந்தைகளுக்கு அவை சாத்தியப்படாத கேள்வியாகவே உள்ளன. அவற்றை உறுதிப்படுத்தும் விதமாகவே அவா் தனது கவிதைகளில் விவாதத்தை நிகழ்த்துகின்றா். அவா் தனது இரண்டு தொகுப்பிற்கு குழந்தைகள் தொடா்பாகவே பெயா் வைத்துள்ளார். ஒன்று பதுங்கு குழியில் பிறந்த குழந்தை. இன்னொன்று எனது குழந்தை பயங்கரவாதி என்பதாக அமைகிறது. இந்த தலைப்புகளின் ஊடாக ஓராயிரம் அர்த்தங்களை அவா் வெளிப்படுத்துகின்றார். ஈழத்தில் குழந்தை பிறப்பும், வளர்ப்பும், வாழ்வும் பல தருணங்களில் பதுங்கு குழிக்குள்ளாகவே நிகழ்ந்து விடுகின்றன. அந்த  வலியினை நமக்கு காட்சிப்படுத்துவதாக இவரது கவிதைகள் பலவும் அமைகின்றன. சடங்குகளும், சம்பிரதாயங்களும், தனித்துவமான பார்வைகளும், கொண்டாட்டங்களின் ஊடாகவும் பிறக்க வேண்டிய ஒரு தமிழினக் குழந்தை ஈழத்தில் பதுங்கு குழியில் பிறக்கின்றது. தேவையான மருத்துவ பயன்பாடின்றி பதுங்கு குழியினுள்ளே  இறந்து போகின்ற குழந்தைகளும், தாய்களும் நமக்கு வரலாற்றில் சாட்சியங்களாக உள்ளனா். அது போலவே தமிழின விடுதலைக்காக பத்து வயதிற்குள்ளாகவே இயக்கங்களால் கைப்பற்றபடுகின்ற குழந்தைகளும், தாமாக விரும்பி இணைந்த குழந்தைகளும் ஆண்புலிகளாக, பெண்புலிகளாக, கரும்புலிகளாக என பல நிலைகளில் உருமாற்றம் பெற்று போராட்டக்களத்தில் தம் வாழ்வை அர்ப்பணித்து நிற்கின்றனா். ஆனால் அந்த குழந்தை உலகத்தின் பார்வைக்கு ஒரு பயங்கரவாதியாக தெரிகின்ற பேரவலத்தை இந்த தலைப்பின் ஊடாக கவிஞா் இந்த சமூகத்திற்கு உணா்த்த முற்படுகின்றார். ‘குழந்தைகளை உண்ணும் பூதங்கள்’ என்ற கவிதையில்

“அச்சத்தைத் தவிர எதையும் அறியாத குழந்தைகள்
படிக்கும் கதைகளைக் கிழித்துக் கொண்டு வந்த பூதங்கள்
இரத்தத்தை உறிஞ்சியபடி
குழந்தைகளோடு பாலூட்டும் மார்புகளையும்
அறுத்து விழுங்கின.
இருளைக் கண்டஞ்சிய குழந்தைகளின்
கண்களைப் பிடுங்கிச் செல்ல
கூரிய கத்தி பொருத்தப்பட்ட நகங்களுடன்
நிலத்திற்குள் புகுந்தன”.   (எனது குழந்தை பயங்கரவாதி, ப - 20)

என்பதாக குழந்தைகளை சூழ்ந்துள்ள அச்சத்தை பிரதிபலிக்கின்றார். அத்தோடு  தொடர்ச்சியாக சுவர்களின் ஓரங்களிலும், கதவுகளுக்கு பின்னாலும் மறைந்திருந்து வீடுகளை தின்பதற்கு பூதங்கள் பதுங்குவதாகவும், பூதங்கள் கிணற்றுக்குள் தங்கி வெளியேறக் கண்டனா் என்றும், இதுவரையிலும் எந்த தாய்மார்களும் குழந்தைகளும் பாத்திராததும், கதைகளில் படித்திராததுமான பூதங்களை இந்தக் குழந்தைகள் எதிர் கொள்ளும்படியாக சபிக்கப்பட்ட குழந்தைகளாக கவிஞா் இந்த கவிதையில் இனங்காட்டுகின்றார். இந்த கவிதையிலே வருகின்ற பூதமானது இயக்கப் போராளிகளாகவும், இந்திய அமைதிப்படையினராகவும், சிங்கள காடையா்களாகவும் எண்ணிப் பார்க்கத்தக்க ஆழமான ஒரு குறியீட்டுப் பொருளாக கவிதையில் பூதத்தை தீபச்செல்வன் முன்நிறுத்துகின்றார்.

‘பதுங்குக் குழியில் கொல்லப்பட்ட குழந்தை’ கவிதையும் ஏதுமறியாத குழந்தைகள் மீது நிகழ்த்தப்படுகின்ற குழந்தையின் வலி தொடர்பாகவே நம்மிடம் பேசுகின்றன. கவிதையில் வெளிப்படுகின்ற குழந்தையானது ஒரு பாலகனாக இருந்ததைத்தவிர நான் வேறொன்றையும் செய்யவில்லை என்பதும், நிராயுதமான இந்த களத்தில் அணிந்திருந்த காற்சட்டையையும் மூடியிருந்த போர்வையையும் தவிர வேறு எதுவுமில்லை என்பதும், ஏதுமறியாத இந்த பாலகார்கள் இம்மண்ணில் பிறந்திருந்ததைத் தவிர வேறெதையும் செய்திருக்கவில்லை என்றும் உறுதி கூறும் கவிதை வரிகள் பின்னா் தனித்து பிடிபட்ட அந்த சிறுவனிடம் ஏக்கம் மிகுந்த இரண்டு கண்கள் மட்டுமே இருந்தன என குறிப்பிடுகின்றன. அந்த ஏக்கமே கவிதைக்கான உள்ளீடுகளை, கேள்விகளை கொண்டுள்ளன. சிதறடிக்கப்பட்டதில் மந்தையிலிருந்து தப்பிய ஆட்டுக்குட்டியின் ஏக்கமா? அல்லது தாயை, தந்தையை பிரிந்த துக்கத்தின் ஏக்கமா? தன் உடன் விளையாடித்திரிந்த அண்ணனை இழந்த ஏக்கமா எதுவென அறிவதற்கில்லை. கண்டிப்பாக அது நாடு குறித்த ஏக்கமாக இருப்பதற்கில்லை. அதற்கான வயது பாலகன் எனும் அச்சொல்லில் இடம்பெறவில்லை. ஆக இறுதியாக அந்தக் கவிதை சாட்சியமற்ற ஒரு சாட்சியை முன்நிறுத்தி அந்த பாலகனின் கொலையை இவ்வாறாக உறுதி செய்கின்றது.

“நெஞ்சில் இரும்புத் துப்பாக்கிகள்
அப்பாலகன் இறுதிக் குரலெடுக்கையில்
உடைந்த நிலவைத் தவிர
எந்த சாட்சியுமில்லை”
(எனது குழந்தை பயங்கரவாதி, ப - 67)

என்று இனப்போரின் உக்கிரத்தில் துடைத்தெறியப்படும் தமிழின அழித்தொழிப்பின் வலியினை கவிதை நுட்பமாய் எடுத்துரைக்கின்றது.

‘கண்ணீர் யுகத்தின் தாய்’ என்ற அவரது இன்னொரு கவிதை முழுக்க முழுக்க குழந்தையை இழந்த தாய்களைப் பற்றியும், தாயை இழந்த குழந்தையினைப் பற்றியுமான வலி நிறைந்த கவிதையாக மிளிர்கின்றது. வலியின் உச்சத்தில் இருந்து எழுதப்படுகின்ற கவிதைகள் ஆதலால் தீபச்செல்வன் போன்றவா்களுக்கு மொழி மிக எளிதாகவும், அடா்த்தியாகவும் கிடைத்து விடுகிறது. மொழி அவா்கள் கைகளில் பின்னிப்பிணைந்து கிடக்கின்றன என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு கவிதைக்குரிய காட்சிப்படுத்தல் மொழி கவிதை எங்கும் வலியாய் பரவிக் கிடக்கின்றன.


“குழந்தைகள் அலைய
பூமியில் வெளிச்சம் அணைய
ஒரு யுகத்தின் தாய் இறந்திருந்தாள்”
(எனது குழந்தை பயங்கரவாதி, ப - 41)
என்று குறிப்பிடுகின்றார்.

தீபச்செல்வனின் ‘நிலமற்ற வாழ்வு’ இனப்போரினால் ஈழத்தமிழ் மக்களிடையே ஏற்பட்ட புலப்பெயா்வின் அவலத்தை வலியுறுத்துகின்ற கவிதையாக உள்ளது. தன் சொந்த மண்ணில் இருப்பதற்கு ஒரு இடமின்றி அலைந்து திரிகின்ற  அவலத்தை விவரிக்கின்ற கவிதையாக அது உள்ளது. ஒரு மனிதன் தன் வாழ்வில் இரத்த உறவால், தன் இனத்தால், மொழியால், வட்டாரத்தால், நட்பால், பழக்கவழக்கத்தால் ஒன்றிப் போன சொந்தங்களை ஒவ்வொருத் தருணங்களிலும் சந்திக்க விரும்புவதும், அவா்களோடு தனது இன்ப துன்பங்களை, அனுபவங்களை பகிரவும், உரையாடவும் விரும்புகின்றான். இவை யாதொன்றும் சாத்தியமற்று போகின்ற ஒரு அந்நிய நிலத்திற்கு துரத்தப்படுகின்ற போது உடலால் வாழினும் உள்ளத்தால் அழிந்தொழிகின்றான். தன் மன எண்ணங்களை வெளிப்படுத்த இயலாத கழிவிரக்கத்துக்குரிய வலியால் பீடிக்கப்படுகின்றான். இங்கு புலம்பெயர் கவிதை குறித்து எனது நூலில் பதிவு செய்துள்ள நான் “புலம்பெயா் தமிழா்களின் இருப்பு குறித்து விவாதிக்கின்ற போது புலம்பெயா் பயணமும், புகலிடத்து அந்நியப்பட்ட வாழ்வும் மனித உணா்வுகளும் எதிர்கால சந்ததி குறித்த சிந்தனைகளும் மேலைநாட்டு இனவெறியும், துயரத்தின் விழிம்பிலும் வாழ்வின் நிலைப்படுத்தல் சார்ந்த நம்பிக்கைகளும் என ஒவ்வொன்றும் புகலிடத் தமிழா்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்து அவா்களின் இருப்பு என்பது கேள்விக்குரிய ஒன்றாக, இருப்பதற்கான புதிய அர்த்தங்களைத் தேடுவதாக இருப்பதைப் புலம்பெயர் கவிதைகள் நமக்கு புலப்படுத்துகின்றன. (ஈழத்து புலம்பெயா் இலக்கியம் பன்முகவாசிப்பு, பக் - 44, 45) என்று குறிப்பிடுவது கவனத்திற்குரியனவாகும்.

யாருமற்ற நிலத்தில் உறைந்திருக்கின்றன வேருடன் பிடுங்கி எறியப்பட்ட மரத்தின் உதிர்ந்து கொட்டிய இலைகள், பறவைகள் குந்தியிருப்பதற்கு கிளைகளற்று அழிந்த வானத்தில் அலைந்தபடி இருக்கின்றன. எங்கிருந்தோ வந்த கொடும் பறவைகள் மகிழ்வோடு வேட்டையாடுகின்றன. நிலத்தின் சிறகுகள் இழந்த சிறுபறவைகள் கனவை பொந்துகளில் பெருக்கி வைத்திருக்கின்றன என்று புலம்பெயர்ந்த மக்களின் வலியினை பேசும் இக்கவிதை ஒருநிலையில் போர் படர்ந்த நிலம் சார்ந்ததாகவும் அர்த்தப்படுகின்றது.

“வாழ்வெனப்படுவது
நிலத்திலிருந்து அறுந்து அந்தரத்தில் தொங்குகிறது
வெறும் நிலத்தில் சிறகிழந்த பறவைகள் மேலலைய
வீழ்ந்த மரத்தின் கருகிப் போன இலைகள் கீழலைகின்றன”
(எனது குழந்தை பயங்கரவாதி, ப - 63)

தீபச்செல்வனின் கவிதைகளை நாம் வாசிக்கின்ற போது கவிதைளை பேசுகின்ற பாத்திரங்கள், அகப்புற சித்தரிப்புகள், கவிஞனின் மனம், வாசகனின் மனம் என எல்லாத்தளங்களிலும் ஒரு வலியும், செயல்படமுடியாத கழிவிரக்கமும் மேலோங்கியிருப்பதைக் காணமுடிகின்றது. ‘சாம்பலாக்கப்பட்ட நிலத்தின் நடுவிலிருக்கிற சிதைக்கப்பட்ட நகரம்’ கவிதையில், நிலம் திரிந்து கிடப்பதை, யுத்தத்தின் இரத்த நெடிவீசுவதை பதிவு செய்யும் அவர் மேய்தலுக்கு செல்லும் மாடுகள் கண்ணி வெடிகளையும், மண்ணையுமே மேய வேண்டியிருப்பதால் அவை நகரத்தின் பக்கம் திரும்புவதாக பதிவு செய்வதன் மூலம் ஈழத்தில் நிலம் முழுக்க கண்ணி வெடிகள் பரப்பப்பட்டிருப்பதனை உணர்த்துகின்றார். அத்தோடு நிலம் எரிக்கப்பட்டு சரிந்து போயிருப்பதாகவும், மக்கள் வாழ வேண்டிய சனங்களின் நிலம் அழிக்கப்பட்டு சமதரையாக்கப்பட்ட நிலையில் அதில் பேய்கள் குடியிருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். அத்துடன்

“உப்பு விளைந்த வாடிகளில்
இல்லாத சனங்களின்
குருதியும் துயரும்
சோர்ந்து விளைந்து கொண்டிருக்கின்றன”
(பெருநிலம், ப - 17)

என்னும் வரிகளும், ஈழ மண்ணில் ஏற்கனவே நிகழ்த்தப்பட்டிருந்த அழிவினையும், இன்று மக்களில்லாத நிலமாக அவை திகழ்வதையும் கவிதையில் தீபச்செல்வன் அடையாளப் படுத்துகின்றார். மேலும்,

“புத்தர் கண் விழித்திருக்கின்ற
அரசமரங்களைத் தவிர எங்கும் நிழலில்லை
வாசல் மறைத்து கறுப்பு திரையிடப்பட்ட
கோயில்கள் இராணுவ நிறங்களால்
தீட்டப்பட்டிருக்கின்றன
சனங்களின் கடவுள் வெளியேற்றப்பட்ட
ஊரில் அலைகின்றன மிருகங்கள்”
(பெருநிலம்,  ப - 18)

என்பதான காட்சிப்படுத்தல்களும் ஈழத்தின் நிலம் சார்ந்த பல்வேறு அபிப்பிராயங்களை நமக்குள் ஏற்படுத்துவனவாய் உள்ளன. நீண்டு செல்லும் இந்தக் கவிதையானது மக்களை இழந்த நிலமும், தனக்கான இயல்பான வாசனையை இழந்த நிலமும், நிறத்தை இழந்த நகரமும் தமிழினத்தை எரித்த சாம்பலில் குளித்து அலைகின்றன என்று குறிப்பிடுகின்றன. தமிழ்க் கவிதை உலகில் ஈழத்துக் கவிதைகள் பெரும்பாலும் நீண்ட கவிதைகளாக அமைகின்றன. வெவ்வேறு பட்ட கவிஞர்களால் வெவ்வேறு பட்ட கருத்தியல்களைக் கொண்டதாக அவை அமைந்திருந்தாலும் அவை எல்லாவற்றின் ஊடாகவும் யுத்தம் சார்ந்த ஒரு வலி இருப்பதனை மறுப்பதற்கில்லை. அந்த வலி கவிதையினை நிறைவு செய்துவிடாதபடி நீட்சியடையச்செய்வதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.  

தீபச் செல்வனின் ‘கொலைக் காட்சிகளின் நிழல்’ இராணுவம் சார்ந்த கருத்தியல்களை பதிவு செய்யும் கவிதையாக விளங்குகின்றது. இராணுவம் அரசனுக்கும், படைத்தளபதிக்கும் கட்டுப்பட்ட ஒன்றாக வெறியூட்டி வளர்க்கப்படும் விதத்தை விவரணை செய்கின்றது. மேலும் அரசு - இராணுவம் - மக்கள் என்ற மையங்களின் இடைவெளி சார்ந்த செயல்பாடும் அதன் விளைவினையும் உணர்த்த விளைகின்றன. மனிதம், மனிதாபிமானம் என பல்வேறு விதமாக உலகில் அறம் சார்ந்த விஷயங்கள் கட்டமைக்கப்பட்டு வந்தாலும், படைகள் எந்த அறத்தின் அடிப்படையில் மக்களை கொலை செய்கின்றன என்பது விவாதப் பொருளாகவே உள்ளது. படைகள் சடலங்கள் முன்பாக நின்று வெற்றியைக் கொண்டாடுவதோடு, பெருமிதம் கொள்வதோடு, புகைப்படம் எடுப்பதோடு நின்று கொள்வதில்லை. அவா்கள் அழிவுக்கான புதிய கட்டங்களை நிறைவேற்றவும், இரத்தக் கனவுகளையுமே வளா்த்துக் கொண்டிருப்பதையும் தீபச்செல்வன் இந்த கவிதையில் புலப்படுத்துகின்றார். தொடரும் கவிதைகளிலும்,             படைகளைப் பார்த்து கவிஞர் கேட்கின்ற ஒவ்வொரு கேள்விகளும் வலியும் அவலமும் நிறைந்த துயரக் குரல்களாகவே ஒலித்துக்  கொண்டிருக்கின்றன. இத்தகைய போர்ச் சூழலின் அவலத்தை சண்முகம் சிவலிங்கம் தனது கவிதை ஒன்றில்,

“எல்லோரின் கண்களிலும்
துன்பத்தை யார் விதைத்தார்;”
(நீர்வளையங்கள்,  ப - 65)
என்பதாக கேள்விக்குட்படுத்துவது முக்கியத்துவம் பெறுகின்றது.

ஆக மேற்சுட்டிய நிலையில் தமிழன் ஒவ்வொருவரின் கண்களிலும் துயரமும், வலியும் நிறைந்திருப்பதை இந்த கவிதைகள் நமக்கு உணர்த்த முற்படுகின்றது.

தீபச்செல்வனின் ‘கிழக்கில் கிடந்த பச்சைச் சூரியன்’ முள்ளிவாய்க்காலில் தமிழினம் தோற்றுப் போகும் நிலையில் அவா்களுக்குள் நிகழ்ந்திருந்த மனக்கொந்தளிப்பை, அவா்களின் இயலாமையை, தோல்வியை வலியின் நுட்பங்களோடு விவாதிக்கின்றது. அந்த கவிதையானது இவ்வாறாக பொருள்பட பேசுகின்றது. குருதி படா்ந்த அந்த மணல் வெளியில் சனங்கள் மிகத் தாமதமாகவே வெளியேறினா். நடுச்சாமம் வரையிலும் துப்பாக்கியை தூக்கிப் பிடித்திருந்த போராளியும் இறுதி நம்பிக்கையை இழக்கின்றான். மக்கள் பிணங்களின் வீதிகளில் நகா்ந்து கொண்டிருக்கின்றனா். புன்னகை இன்னும் முள்ளிவாய்க்காலில் மீதம் இருப்பதாக கருதிய ஒரு பெண் துயா் வழிதல்களின் ஊடே போகத்தொடங்குகிறாள். வானம் பெரிய அளவில் இருளத் தொடங்குகிறது என்று குறிப்பிடுவதன் மூலமாக வாழ்வின் இருள் நிறைந்த பக்கங்களை பதிவு செய்கின்றார். மேலும்,


“யாரும் நம்பாத முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன
யாராலும் தாங்க முடியாத கண்ணீர்;
பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது
மாபெரும் காயம் ஏற்பட்டுக்
குருதி வழிந்து கொண்டிருந்தது”
(பெருநிலம், ப - 58)

என்பதாக தொடரும் அந்த கவிதையானது முள்ளிவாய்க்கால் போரில் உலக வல்லரசுகளின் ஒட்டுமொத்த சூழ்ச்சியோடு தமிழினம் தோற்கடிக்கப்பட்டதின் மூலமாக அவா்களிடம் அது வரையிலுமாக இருந்த நம்பிக்கையும், கனவும் அந்த கடைசிப்பொழுதில் கண்ணாடித் துகள்களாக தகா்ந்து சிதறி அவா்களுக்குள் ஏற்பட்ட பெருவலியினை இந்த கவிதை மீண்டும் மீண்டுமாய் விவரணை செய்கின்றது. ஈழத்து கவிதைகளில் நாம் பார்க்கின்ற இந்த வலியானது ஈழத்தமிழ் மக்களின் பன்முகப்பட்ட வலி என்பதை நாம் நினைவில் கொள்ளத்தக்கது.  சிங்கள அரசால், அரசு எந்திரத்தால், இராணுவத்தால், சிங்கள இனவெறியா்களால் நசுக்கப்பட்டபோது ஏற்பட்ட வலி, விடுதலை கோரிய எதிர்ப்பின் விளைவாக அவை யுத்தமாக மாற அதனால் ஏற்பட்ட வலி, விடுதலைக்குழுக்களிடையே ஏற்பட்டிருக்கும் உள் அரசியல் முரண்களால் அவா்களே ஒருவரை ஒருவா் விமா்சிக்கின்ற, தாக்கிக்கொள்வதனால் ஏற்பட்ட வலி என்பதாக நாம் பா்க்கமுடிகின்றது. விடுதலைக்குழுக்களின் தீவிர உள்முரண்கள் அவா்களை அத்தகைய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. கருணா போன்ற போராளிகளும், இன்னும் பல படைப்பாளிகளின் செயல்பாடுகளும் இந்த பின்னணியில் தொடா்வதை நாம் காணலாம். இவற்றைப் பற்றிய தனது கருத்தினை முன்வைக்கும் நிலாந்தனின் கூற்று முக்கியமாக நாம் அறியவேண்டிய ஒன்றாகும்.

“இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது எதுவெனில், விடுதலைப்புலிகள் இயக்கம் எனப்படுவது ஒரு மூலக்காரணம் அல்ல என்பது தான். மூலக்காரணம் இனஒடுக்கு முறைதான். புலிகளும் ஏனைய இயக்கங்களும் விளைவுகள் தான். ஆயுதப் போராட்டத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் அனைத்தும் அந்த விளைவின் விளைவுகள் தான்.

புலிகள் இயக்கம் தோன்றும் முன்பே அந்த மூலகாரணம் இருந்தது. அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கடந்த ஐந்தாண்டுகளாக அது மாறாதிருக்கிறது. அது முன்னெப்பொழுதும் பெற்றிராத உச்சவளா்ச்சியைப் பெற்றதால் தான் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது. இன ஒடுக்குமுறையின் உச்சகட்டமே முள்ளிவாய்க்கால்” (எவராலும் கற்பனை செய்யமுடியாத நான், பக் - 19,20) என தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட வன்மத்தின் அடிப்படையை தொட்டுக்காட்டுகின்றா்.

இன்னொரு கவிதையில் இனப்போரின் விளைவாக தமிழினம் அடைந்த துயரினைப் பற்றி பேசுகின்ற தீபச்செல்வன் காலம் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டதாகவும், தம் சொந்தமண்ணிலே அவா்கள் அகதிகளாக குடியமா்த்தப் பட்டிருப்பதையும் சுட்டுகின்றார்.

“காலம் எங்களை இழுத்தடித்து ஏமாற்றியிருக்கிறது
ஓன்று மில்லாத நிலத்தில்
சூறையாடப்பட்ட நமது பொருட்களை இழந்து
நிவாரணத் தகரங்களில் வெந்து கொண்டிருக்கிறது
மீளத் தொடங்குகிற வாழ்வு.
முகாம்களில் கட்டி வைத்திருந்த மூட்டைகளுடன்
இன்னும் இன்னும் சனங்கள் வந்திறங்குகின்றனா்
பதிவுகளும் புகைப்படங்களும்
பேருந்துகளும் என்று
துயரமும் பரிசாக வழங்கப்படுகிறது.
கடும் சித்திரவதைகளுக்குப் பின்னால்
அவா்கள் தங்களைத்
தகரங்களால் மூடிக் கொள்கிறார்கள்”  (பெருநிலம், ப - 43)

என்று பதிவு செய்கின்றார். இந்த கவிதை வரிகளானது நம் நெஞ்சை திகைக்கச் செய்கின்ற ஒரு நெடிய தாங்கொணாத் துயரத்தை, இயலாமையை, வஞ்சிக்கப் பட்டதைப் பற்றி குறிப்பிட்டிருப்பதைக் காணமுடிகிறது. மேலும் இந்த கவிதையில் ஓட்டுவதற்கு ஆளில்லாத சிதைந்த சைக்கிள்கள் பற்றியும், முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குறித்துமாக நினைவுத்தடங்களாக மீளப்பார்க்கின்ற மன எண்ணங்கள் குறித்த பதிவும் விரிகின்றன. ‘படரும் துயா் நிழல்’ என்ற கவிதையும் இது போன்றே நினைவுத்தடம் சார்ந்த துயரினையே பேசுகின்றது. குறிப்பாக கவிதையினை நகா்த்தி செல்லுகின்ற அந்த பாத்திரம் இவா்கள் என் சனங்கள், இது என் நகரம், இது எனது நிலம், எதற்கும் சான்றுகள் மறுக்கப்பட நாடற்றவனைப் போல் கைதாகியிருக்கிறேன் என்பதாக அது தன் வலி நிறைந்த சோகத்தினை நீட்டி உரைக்கின்றது.

ஈழத்தில் நவீனக் கவிதைகளைப் பொறுத்தமட்டில் இத்தகையதான ஒரு இறுக்கமான அரசியல், சமூக, வரலாற்று பின்னணியிலேயே உருவாக்கம் பெற்று வளா்ந்தது. மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுதிக்கான முன்னுரையில் இதனைப்பற்றி குறிப்பிடும் சேரனின் உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதிவு ஆகும். “ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் என்ற வகையில் எமது போராட்டம், தேசத்தை அதனுடைய பௌதீக அம்சங்களில் மட்டுமே மீட்பது என்று பொருள் கொள்ள முடியாது. மாறாக எமது மொழி, எமது நிலம், எமது கலைகள், இலக்கியம், கலாச்சாரம் இவையனைத்தினதும் சுதந்திரமான விகசிப்பை உருவாக்கும் ஒரு போராட்டமாகும். அந்நிய ஒடுக்குமுறை என்பது எமக்கென்றொரு பலமான பாரம்பரிய செழுமைமிக்க கலாச்சார வாழ்வு இருக்கின்றவரை வெற்றி பெறவே முடியாது.

தேசிய ஒடுக்குமுறை என்பது ஒட்டு மொத்தமாக ஒரு மக்கள் திரளினால் உணரப்பட்டு, விடுதலை வேட்கை பரவலாக கிளா்ந்தெழுவதற்கு முன்பாக ஒடுக்குமுறையின் ஆரம்ப நிலைகளிலேயே அபாயத்தை இனங்கண்டு கலைஞா்கள் குரலெழுப்பத் தொடங்கி விடுவதை உலகின் பல்வேறு பகுதிகளிலும் நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக கவிஞா்கள் வருமுன் சொல்பவா்களாக இருந்துள்ளனா். ஆரம்பத்திலேயே வெளிக்காட்டப்படும் இத்தகைய கலாச்சார ரீதியான எதிர்ப்பே பின்னா் பல்வேறு படிகளுடனான ஆயுதப் போராட்டமாக பரிணாமம் பெறுகிறது. இந்தப் பரிணாமத்திலிருந்து மறுபடியும் கலைகளும், இலக்கியமும் பதிய எதிர்காலத்திற்கு ஒரு முன் மொழிதலை வழங்கும்.

எமது அரசியல், கலை, இலக்கிய வரலாற்றிலும் இத்தன்மையைக் காணக் கூடியதாயிருக்கிறது. தேசிய ஒடுக்குமுறையின் ஆரம்ப நிலைகளில் தமிழ் மொழிக்குரிய உரிமைகள், தமிழ் மொழிப்பயன்பாடு என்பவை மறுக்கப்பட்ட போது அதற்கெதிராக கவிதைக் குரல்கள் நிறையவே எழுந்தன. மஹாகவி, முருகையன், நீலவாணன்; உட்பட ஈழத்தின் அனைத்து முக்கியமான கவிஞா்களும் இவை பற்றி வலுவுடன் எழுதியுள்ளனா். தமிழ் மொழி மீதான காதல், இனப்பற்று, இனவிடுதலை என்று தமிழ் நிலைப்பட்ட ஒரு வெளிப்பாடாகவே இவை இருந்தன” (மரணத்துள் வாழ்வோம், ப - 6) என்பார். சேரன் குறிப்பிடுகின்ற கவித்துவத்தின் தொடா்ச்சியான கண்ணியாக செயல்படும் தீபச்செல்வன் சமகாலப் பிரச்சனைகளின் வலி நிறைந்த பகுதிகளை வரலாற்றை உள்வாங்கி எழுதுவதில் முன்நிற்பவராகின்றார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R