புலவர் பார்வதிநாதசிவம் மறைவு!புலவர் பார்வதிநாதசிவம் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கோர் இழப்பே. அவரது காணொளியிலான நேர்காணலொன்றினை இணையத்தில் 'யு டியூப்' இல் கேட்டேன். அவரது காணொளி நேரகாணலில் அவர் கூறியுள்ள தகவல்கள் (குறிப்பாக ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைகள், எழுத்தாளர்கள் பற்றிய அவரது கருத்துகள்) மிகவும் பயனுள்ளவை. ஈழநாடு பற்றிய அவரது கருத்துகள் எனக்கு அன்றைய காலகட்ட நினைவுகளைத் தோற்றுவித்தன. என் எழுத்துலக வாழ்வில் ஈழநாடு சிறுவர் மலர் மிகவும் முக்கியமானது. அதில் கட்டுரைகள், கவிதைகள், குட்டிக்கதை என எனது சிறுவர் காலத்து ஆக்கங்கள் பல வெளிவந்துள்ளன. புலவர் நேர்காணலில் ஈழநாடு வாரமலரின் ஆசிரியராகவிருந்த பெருமாள் பற்றிக் கூறியிருந்தார். பெருமாள் வாரமலருக்குப் பொறுப்பாகவிருந்தபோது எனது சிறுகதைகள் , நல்லூர் ராஜதானி நகர அமைப்பு பற்றிய கட்டுரைகள், பழமையின் சின்னங்கள் பேணப்படுதல் பற்றிய கட்டுரைகள் ஆகியவற்றைப் பிரசுரித்து ஊக்கப்படுத்தினார்.  அன்றைய காலகட்டத்தில் புலவரின் கவிதைகள் போன்ற ஆக்கங்கள் பலவற்றை ஈழநாட்டில் வாசித்ததாக ஞாபகம். அவரை நான் அறிந்து கொண்டதே ஈழநாடு மூலம்தான். அமைதியாகத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்களில் புலவரும் முக்கியமானவர். அவரது மறைவினையொட்டி இணையத்தில் கிடைத்த பிற தளச் செய்திகள் சிலவற்றை, நன்றியுடன், மீள்பிரசுரம் செய்கின்றோம். அவரது படைப்புகளை இணையத்தில் காண முடியவில்லை. அவரது  படைப்புகள்  சேகரிக்கப்பட்டு,  நூலகம்  போன்ற  தளங்களில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதவசியம்.  அத்துடன் அவரது மறைவால் வாடும் அனைவரின் துயரத்திலும்  பங்குகொள்கின்றோம்.

 தமிழ்24நியூஸ்.காம்:  யாழில் தமிழ்ப்புலவர் பாரம்பரியத்தை இன்றுவரை பேணிய புலவர் ம.பார்வதிநாதசிவம் காலமானார்
 
புலவர் பார்வதிநாதசிவம் மறைவு!யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் புலவர் பாரம்பரியத்தை இன்றுவரை பேணிய புலவர் ம.பார்வதி நாதசிவத்தின் இழப்பு ஈடுசெய்யப்பட இயலாதது என யாழ்ப்பாண தமிழச் சங்கம் இரங்கல் உரையில் தெரிவித்துள்ளது. இயற்கை எய்திய தமிழ்ப்புலவர் பார்வதி நாதசிவம் 1936 ஆம் ஆண்டு மாவிட்டபுரத்தில் மரபுவழித் தமிழ் பேணும் குடும்பத்தில் பிறந்தவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டத்தை பெற்றுக்கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழங்கத்தில் கற்கும் காலத்தில் பாவேந்தர் பாரதிதாசனைத் தனது ஆதர்ச குருவாகக்கொண்டு பாவேந்தரின் பாணியில் சமூகப் பிரக்ஞையுடன் எளிமையான நடையில் சிறந்த கவிதைகளை யாத்தவர் என குறிப்பிட்டுள்ள யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் தனது வாழ்க்கைக் காலத்தில் பத்திரிகை ஆசிரியராக, செவ்விகாணும் வல்லுநராக இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துபவராக பலதரப்பட்ட தமிழியற் பணிகளை நாட்டுக்கு நல்கிய பெருமகனார் என குறிப்பிட்டுள்ளனர்.

புலவரின் பேரனார் உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளை, தந்தையார் குருகவி ம.வே.மகாலிங்கசிவம், பெரிய தந்தையார் புலவர் ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை, பண்டிதை இ.பத்மாசனி போன்ற ஆளுமைகளின் வழிகாட்டலில் பயணித்தவர் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தை இனங்காட்டும் கடைசி வேராக எம்மவரிடையே திகழ்ந்தவர் புலவர் ம.பார்வதி நாதசிவம் எங்கள் மண்ணின் தமிழியல் வளர்ச்சியில் சிறப்பான பங்களிப்புக்களை ஆற்றும் களம் இவருக்கு இயல்பாகவே இருந்து வந்துள்ளதுள்ளதாகவும் தமிழச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் தமிழப் புலவரின் இறுதிச்சடங்கு இன்று புதன்கிழமை கொக்குவில் நந்தாவில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறறது.

நன்றி: http://tamil24news.com/news/?p=47891


தினமணி.காம்: தமிழறிஞர் பார்வதிநாதசிவம் மறைவு!

புலவர் பார்வதிநாதசிவம் மறைவு!யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர் பார்வதிநாதசிவம் தமது 77வது வயதில் நேற்று காலமானார். அவர் பற்றிய இரங்கல் குறிப்பினை தமிழறிஞர் மறவன்புலவு கே.சச்சிதானந்தன் அனுப்பியுள்ளார்.

அந்த இரங்கல் குறிப்பில்,

யாழ்ப்பாணத்தின் தமிழ்ப் புலமை மரபின் வாரிசுகளுள் ஒருவரான புலவர் பார்வதிநாதசிவம். தனது 77ஆவது வயதில் நேற்றுக் காலமானார். புற்றுநோயால் கடந்த சில ஆண்டுகளாகப் பாதிப்புற்றிருந்தார். கொக்குவில் நந்தாவில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் 06.03.2013 பிற்பகல் 2 மணிக்கு ஈமச் சடங்குகள் நடைபெறும்.

பெரும்புலவர் ம.க.வேற்பிள்ளையின் பெயரர் புலவர் பார்வதிநாதசிவம். சிதம்பரம் ஆறுமுகநாவலர் வித்தியாசாலையில் தமிழாசிரியராக இருந்தவர் ம.க.வேற்பிள்ளை. பின்னர் தலைமை ஆசிரியராகி ஓய்வுபெற்றார்.

1930இல் சிதம்பரத்தில் காலமானார்.

ம.க.வேற்பிள்ளையின் மாணவர்களுள் திருவாவடுதுறை ஆதீன வித்துவான் தண்டபாணி தேசிகர் முதன்மையானவர். யாழ்ப்பாணம் வந்த தண்டபாணி தேசிகர், மட்டுவிலில் சில ஆண்டுகள் தங்கி இருந்து, ம.க.வேற்பிள்ளையிடம் பாடம் கேட்டவராவார். ம.க.வேற்பிள்ளை புலோலியில் சிவபாதசுந்தரனாரின் உடன்பிறப்பான மகேசுவரியைத் திருமணம் செய்து ஐந்து ஆண்மக்களைப் பெற்றார். இந்து சாதனம் இதழின் ஆசிரியராக இருந்து உலகம் பலவிதம் நெடுந்தொடரை எழுதியவர் மூத்த மகன் ம.வே.திருஞானசம்பந்தம். நெற்றியில் திருநீறும் தலையில் குடுமியும் கையில் பொல்லுமாக அவர் யாழ்ப்பாணம் ஓட்டுமடம் வீதி, ஓடை ஓழுங்கைச் சந்திப்பு வீட்டிலிருந்து புறப்பட்டு இந்து சாதனம் அலுவலகம் வருவார். அதே நேரம் நான் அந்த வழியே பள்ளிக்குச் செல்வேன். என் தந்தையாருக்கு ம.க.வேற்பிள்ளையின் ஐந்து ஆண் மக்களும் நல்ல நண்பர்கள். அவ்வழி அவர்களுடன் நானும் பழகும் வாய்ப்புப் பெற்றேன். இவர்களுள் ம.வே.மகாலிங்கசிவம் மூன்றாமவர். மென்மையானவர். மேன்மையானவர். ம.வே.மகாலிங்கசிவத்துக்கு மகன் புலவர் பார்வதிநாதசிவம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பார்வதிநாதசிவம் கற்றபோது பாரதிதாசனை அடிக்கடி சென்று சந்திப்பார். தனது கவிதைகள் எளிமையாக அமைய இவரே காரணம் என்பார் புலவர் பார்வதிநாதசிவம். என்னை ஒத்த வயதினர். சிரித்த முகத்தினர். காற்றடித்தால் விழுந்துவிடுவாரோ என நான் அஞ்சுமளவு மெலிந்த உடல் வாகு அவருக்கு. அவரும் நானும் அன்போடு பழகினோம்.

மட்டுவிலுக்கும் மறவன்புலவுக்கும் இருந்த நெடிய தொடர்பின், இறுக்கமான பிணைப்பின், அன்புக் கொடுக்கல் வாங்கலின் பேணலாக, எங்கள் தலைமுறையில் நாங்கள் இருவரும் திளைத்தோம். அவர் ஒருபொழுதும் எவருக்கும் துன்பம் விளையாதவர். தான் காலமானேன் எனத் தெரிவித்த இன்று எனக்குத் துன்பத்தைத் தந்தார். - என்று தெரிவித்துள்ளார்.

http://dinamani.com/latest_news/article1490439.ece


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R