http://www.globaltamilnews.net
20.02.2011
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான
பார்வதியம்மாள் மறைவு!
தமிழிழ
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான
வேலுப்பிள்ளை(பார்வதிபிள்ளை) பார்வதியம்மாள் தனது 81 ஆவது வயதில் இன்று
ஞாயிற்றுக்கிழமை காலை 6.20 மணியளவில் வல்வெட்டித்துறை ஆதார
வைத்தியசாலையில் காலமாகியுள்ளதாக முன்னா நாடாளுமன்ற உறுப்பினர்
சிவாஜீலிங்கம் தெரிவித்துள்ளார். இதனை வைத்தியசாலையின் பணிப்பாளர்
வைத்தியகலாநிதி மயிலேறும் பெருமாளும் உறுதிப்படுத்த உள்ளார். நீண்ட
காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் பார்வதியம்மாள் யாழ்
வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே
உயிரிழந்துள்ளார். இவரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான தகவல்கள் பின்னர்
அறிவிக்கப்படும் என அங்கிருக்கும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்
சிவாஜீலிங்கம் தெரிவித்தார்.
கடந்த பத்து வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர்
மலேசியாவில் சிலமாதங்கள் சிகிச்சை பெற்றுவந்தார் தொடர்ச்சியாக அங்கு
சிகிச்சை பெறுவதில் இருந்த நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக தனது மேல்
சிகிச்சைக்காக இந்தியா சென்ற அவரை இந்திய அரசு சிகிச்சைக்கு அனுமதி
மறுத்து சென்ற விமானத்திலேயே மலேசியாவிற்கு திருப்பியனுப்பியது.
பின்னர் இந்திய அரசு அவருக்கு நிபந்தனையின் அடிப்படையிலே
கிகிச்சையளிக்க முன்வந்த போதில் அவரது குடும்பத்தினர் அதற்கு
உடன்படாமையாலும் அவரை ஓர் அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும்
விரும்பவில்லை. இதனால், பார்வதி அம்மாள், அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்
துறைக்குச் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரின் உடல் நிலை
மோசமடைந்ததையடுத்து அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
![தனது கணவர், மகன், மருமகள் மற்றும் பேரனுடன் பார்வதியம்மாள்.](images/praba-family.jpg)
அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சற்று உடல்
நலம் தேறிய அவர் மீண்டும் வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கே
மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை
அளிக்கப்பட்டுவந்தது. கடந்த சில வாரங்களாக முற்றகவே தனது சுயநினைவை
இழந்த அவர் இன்று இயற்கை மரணத்தை தழுவினார். இவரது இறுதி வணக்க
நிகழ்வுகளும் இறுதிக் கிரியைகளும் எதிர்வரும் செவ்வாய்கிழமை தீருவில்
மயானத்தில் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்:
http://www.globaltamilnews.net |