இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2010  இதழ் 123  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அறிவித்தல்!
வெளிவருகிறது 'காற்று வெளி'யின் இலக்கியப் பூக்கள் 2  (தொகுப்பு)!
வெளிவருகிறது 'காற்று வெளி'யின் இலக்கியப் பூக்கள் 2  (தொகுப்பு)!எழுத்தாளர் முல்லை அமுதன்எழுத்தாளர் முல்லை அமுதன் அவர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த மறைந்த ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய தொகுப்பான 'இலக்கியப் பூக்கள்' என்னும் நூலினைத் தனது 'காற்று வெளி' அமைப்பினூடு அண்மையில் வெளியிட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது மேலும் பல படைப்பாளிகளை உள்ளடக்கிய 'இலக்கியப் பூக்கள் 2' என்னும் நூலினை வெளியிடவுள்ளார். 'இலக்கியப் பூக்கள் 1' நூலினை வாங்குவதன் மூலம் அவரது தொடரும் முயற்சிகளுக்கு நீங்கள் உங்களது ஆதரவினை வழங்க முடியும். மேலும் 'இலக்கியப் பூக்கள் 2' ஆம் தொகுதிக்கு நீங்கள் உங்களுக்குத் தெரிந்த எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களையும் அனுப்பி வைக்கலாமென முல்லை அமுதன் அவர்கள் தெரிவிக்கின்றார். அவரது முகவரி: 34, Red Riffe Road, Plaistow, E13 0JX இது பற்றி அவர் அனுப்பி வைத்த தகவலினைக் கீழே நீங்கள் வாசிக்கலாம்.- பதிவுகள் ]

அன்புடையீர்! வணக்கம், ஈழத்து மறைந்த எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளைத் தாங்கி 'இலக்கியப்பூக்கள்' நூல் (375 பக்கங்கள்) வெளிவந்துள்ளது.தொடர்ந்து இரண்டாம் பகுதி தயாராகிறது.எனவே தங்களுக்குத் தெரிந்த எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களைத் தாங்கிய கட்டுரைகளை (4, 5 பக்கங்கள் , புகைப்படம் ) எழுதி அனுப்புங்கள். கூடவே, தங்களைப் பற்றிய தகவல்களையும், புகைப்படத்தையும் இணைத்து அனுப்புங்கள். 'இலக்கியப்பூக்கள்-1' நூலை புத்தகக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். நண்பர்களுக்கும் இத் தகவலைப் பரிமாறுவதன் மூலம் பகுதி 2 சிறப்பாக வர ஒத்துழைப்பு தரமுடியும்.

நன்றி,
முல்லைஅமுதன் (காற்றுவெளிக்காக)
mullaiamuthan_03@hotmail.co.uk
 


'இலக்கியப் பூக்கள் 1' பற்றி வெளிவந்த விமர்சனங்களிலிருந்து ......

முல்லை அமுதனின் 'இலக்கியப் பூக்கள்' ஓர் அறிமுகம்!
- பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா -


வெளிவருகிறது 'காற்று வெளி'யின் இலக்கியப் பூக்கள் 2  (தொகுப்பு)!இங்கிலாந்து தேசத்தில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்தி ஈழத்துத் தமிழ் அறிஞர்களினதும், எழுத்தாளர்களினதும் படைப்புக்களை அனைத்துலக ரீதியில் அறிமுகப் படுத்திவரும் பிரபல எழுத்தாளர் முல்லை அமுதன் அவர்கள் தொகுத்தளித்திருக்கும் இலக்கியப் பூக்கள் என்னும் நூல் சென்னை காந்தளகத்தின் தயாரிப்பில், “காற்றுவெளி” வெளியீட்டகத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கின்றது. ஈழத்தின் சிறந்த தமிழ் அறிஞர்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள், பெருமைக்குரிய பத்திரிகையாளர்கள், இணையற்ற இலக்கிய வாதிகள், வியக்க வைத்த சாதனையாளர்கள், என்றவாறு மகத்துவம் மிக்க நாற்பத்து நான்கு மனிதர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பெரும்பாலானவை அவர்களது வரலாறுகள் என்றே சொல்லலாம். இந்த நாற்பத்து நான்கு பேரையும் பற்றி முப்பத்தியிரண்டு எழத்தாளர்கள் எழுதியுள்ளார்கள். வரலாற்றில் வாழ்பவர்கள் மட்டுமன்றி அவர்களைப்பற்றி எழுதியுள்ள முப்பத்தியிரண்டு பேரில் பெரும்பாலானவர்களும் பிரபலமான எழுத்தாளர்களே.

இந்த நூலைப் படிக்கும் போது, நயம்பட எழுதப்பட்ட நல்ல சிறுகதைகளை வாசிக்கும் உணர்வு உண்டாகின்றது. சுவையான ஒரு நாவலை வாசிக்கத் தொடங்கினால் எப்படி முழுவதையும் படித்து முடிக்காமல் வைப்பதற்கு மனம் வருவதில்லையோ அதைப்போல, இந்த நூலும் உள்ளது. சிலரின் வாழ்வின் நிகழ்வுகளை அறியும்போது, எவ்வளவு மகத்தான மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள் என்ற வியப்பு ஏற்படுகின்றது. மற்றும் சில தகவல்கள் திகைப்பைத் தருகின்றன. ஓவ்வொரு கட்டுரையும் நாவலொன்றின் ஒவ்வொரு அத்தியாயத்தைப் போன்று உள்ளது என்று சொல்லலாம். அல்லது ஒரு சிறுகதைத் தொகுதியில் அடங்கியுள்ள பல சிறுகதைகளைப்போல என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லாக கட்டுரைகளும் இதயத்தைத் தொடுகின்றன. வாழ்க்கைக் குறிப்புக்களைத் தாங்கிய கட்டுரைத் தொகுதியொன்று இவ்வாறு மனதைக் கவர்வதென்பது அவ்வளவு சாதாரணமான விடயமல்ல.

நூலின் கடைசி இரண்டு பக்கங்களில் அந்த நாற்பத்து நான்கு பெரியார்களதும் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்த ஆண்டுகள் அட்டவணையாகத் தரப்பட்டுள்ளன. மிகவும் பயனுள்ள தகவல். அந்த அட்டவணையை நோக்கினால் ஒரே பார்வையிலேயே காலத்தால் முந்தியவர்கள் யாவர், பிந்தியவர்கள் யாவர், சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் யாவர் என்பன போன்ற தகவல்களை அறியமுடிகின்றது. அத்துடன் அளப்பரிய ஆற்றலுடன் விளங்கி, மிகப்பெரிய சாதனையாளர்களாகத் திகழ்ந்த சிலர் மிகக் குறைந்த காலமே இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறார்கள் என்னும் வேதனை தரக்கூடிய விபரத்தையும் கணக்கிட்டுக் காணமுடிகின்றது. நாற்பத்து நான்கு சாதனையாளர்களில் ஏறத்தாழ மூன்றில் ஒருபகுதியினர் ஐம்பத்து ஆறு வருடங்களுக்கும் குறைவான காலமே வாழ்ந்துள்ளனர். அவர்களில், மு.தளையசிங்கம், அங்கையன் கயிலாசநாதன், சுபா~; சந்திரபோஸ், செ.கதிர்காமநாதன் ஆகிய நால்வரும் நாற்பது வயதிற்கும் குறைவான தமது ஆயுட்காலத்தில் தமது சாதனைகளால் ஈழத் தமிழினத்தின் இலக்கிய வரலாற்றில் காலத்தால் அழிக்கமுடியாத பக்கங்களில் இடம்பிடித்திருப்பதை எண்ணிப் பார்க்கும் போது மேலும் பல ஆண்டுகள் அவர்களுக்கு வாழக்கிடைத்திருந்தால், ஈழத்தமிழ் இலக்கியம் இன்னும் பயன்பெற்றிருக்குமே என்ற எண்ணத்தால் நம் இதயம் வலிக்கிறது. அதிலும், ஒருகாலத்தில் வீரகேசரி பிரசுரமாக வெளியிடப்பட்டு, ஈழத்தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் பெரிதும் சிலாக்கியப் படுத்தப்பட்ட, “நான் சாகமாட்டேன்” என்ற மொழிபெயர்ப்பு நாவலைத் தமிழ் உலகுக்கு அளித்த செ. கதிர்காமநாதன் அவர்கள், முப்பது ஆண்டுகள் வரையே இவ்வுலகில் வாழ்ந்தமையை அறியும்போது சில நிமிடங்கள் நாம் செயலற்றுப் போய் விடுகின்றோம்.

பிறந்த ஆண்டு அடிப்படையில் காலத்தால் முந்தியவர்களில் இருந்து கட்டுரைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் பிறந்த ஆண்டுக் கணக்கை அறிந்து கொள்ளமுடியாத நிலையில், சங்க காலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் ஈழத்துப் பூதந்தேவனார் அவர்களைப் பற்றிய கட்டுரை முதலாவதாக இடம்பெற்றுள்ளது. 1848 ஆம் ஆண்டு பிறந்த உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளை அவர்களைப்; பற்றிய கட்டுரை இரண்டாவதாக இடம்பெற்றுள்ளது. 1975 ஆம் அண்டு பிறந்த சுபாஸ் சந்திரபோஸ் பற்றி, 44 ஆவதாகக் கடைசிக் கட்டுரையாக அமைந்துள்ளது. 1942 ஆம் ஆண்டில் பிறந்து, எழுத்தாளராக மலர்ந்து, கல்விமானாகச் சிறந்து, இலங்கை நிருவாக சேவையிலே உயர்ந்து, 1972 ஆம் ஆண்டில் இவ்வுலக வாழ்வைத் துறந்து, முப்பது வயது வரையே வாழ்ந்த செ.கதிர்காமநாதன் அவர்களைப் பற்றிய கட்டுரை முப்பதாவது கட்டுரையாக அமைந்திருப்பது வியப்பைத் தருகின்றது.

“ஈழத்து முன்னோடித் தமிழ்ப் பெரும் புலவர், ஈழத்துப் பூதன்தேவனார்” என்ற கட்டுரையை மயிலங்கூடலூர் பி.நடராசன் அவர்கள் எழுதியுள்ளார்கள். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த ஈழத்துத் தமிழ் அறிஞரான இந்த ஈழத்துப் பூதன்தேவனாருடைய பாடல்கள் சங்க இலக்கியங்களிலே இடம்பெற்றுள்ளன என்ற தகவல் இந்தக் கட்டுரையிலே பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களான நற்றிணையில் இரண்டு பாடல்கள், குறுந்தொகையில் நான்கு பாடல்கள், அகநானூறில் மூன்று பாடல்கள் என்று ஆகமொத்தம் ஒன்பது பாடல்கள் இவரது புலமைக்குச் சான்றாக உள்ளன. பூதன்தேவனார், ஈழத்துப் பூதன்தேவனார், மதுரைஈழத்துப் பூதன்தேவனார் என்று மூன்று பெயர்கள் வௌ;வேறு இடங்களில் அறிஞர்களால் குறிப்பிடப்பட்டு வந்தாலும் இந்த மூன்று பெயர்களுக்கும் உரியவர் ஒருவரே என்பதையும், அவர் ஈழத்தில் தமிழ் அறிஞராக விளங்கிய பூதன்தேவனாரே என்பதையும், அவர் தமிழகம் சென்று தமிழகப் புலவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்பதையும், மதுரைத் தமிழ்ச்சங்க விழாவிலே பாண்டிய மன்னன் பசும்பூட் பாண்டியனால் “மதுரை ஈழத்துப் பூதன்தேவனார்” என்று வரவேற்று அழைக்கப்பட்டார் என்பதையும் கட்டுரை ஆசிரியர் தர்க்க முறையிலே நிறுவிப் பதிவு செய்துள்ளார்.

மாபெரும் தமிழ் அறிஞராக விளங்கிய, உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளை அவர்களதும், அவரின் பிள்ளைகளான பண்டிதர் ம.வே.திருஞான சம்பந்தப்பிள்ளை, குருகவி ம.வே.மகாலிங்கசிவம் ஆகியோரதும் வரலாறுகளை வாசிக்கும்போது, அவர்களது பரம்பரையில் புலவர் ம.பார்வதிநாதசிவம், அவரின் மகன் கவிஞர் ம.பா.மகாலிங்கசிவம் என்றவாறு உரையாசிரியரின் நான்காவது தலைமுறையும் தமிழ் அறிஞர்களாகத் திகழ்ந்து தமிழ்ப்பணி புரிந்து வருகின்ற பெருமை மிக்க தகவலையும் காணமுடிகின்றது. தமிழ் மக்களால் பெரும்பாலும் அறியப்பட்டவர்களும், தமிழ் எழுத்தாளர்களாலும், பேச்சாளர்களாலும் அடிக்கடி நினைவுபடுத்தப்படுபவர்களுமான சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பேரறிஞர் தவத்திரு தனிநாயகம் அடிகளார், இரசிகமணி கனக செந்திநாதன், பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா முதலியோரைப்பற்றி மட்டுமன்றி, இன்றைய தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் நன்கு அறிந்திராத தமிழ் அறிஞர்கள் சிலரைப்பற்றியும் கட்டுரைகள் இந்த நூலிலே இடம்பெற்றுள்ளன. அந்தக் கட்டுரைகளின் மூலம் அந்தத் தமிழ் அறிஞர்களின் புலமைச் சிறப்புக்களை அறியமுடிகின்றது. இவர்களைப் போல இன்னும் எத்தனையோ தமிழ் அறிஞர்கள் ஈழத்திலே வாழ்ந்திருக்கின்றார்கள், எண்ணற்ற நூல்களை எழுதியிருக்கிறார்கள், அளவற்ற தமிழ்ப்பணிகளைப் புரிந்திருக்கின்றார்கள். இதுபோன்ற நூல்களின் மூலமே அவர்களைப்பற்றியெல்லாம் ஆவணப்படுத்த முடியும், உலகுக்கு அறியத்தர முடியும்.

அவ்வாறே, புகழ்பெற்ற எழத்தாளர்களாக, பத்திரிகையாளர்களாக, கவிஞர்களாக விளங்கி இன்றும் மக்களிடையே மிகவும் பிரபல்யம் மிக்கவர்களாகத் திகழும் அ.செ.முருகானந்தன், அ.ந.கந்தசாமி, தில்லைச்சிவன், வரதர், நந்தி, சொக்கன், யாழ்வாணன், ஏ.ஜே.கனகரட்ணா, அப்பச்சி மகாலிங்கம், மு.தளையசிங்கம். பிரமிள், செ.கதிர்காமநாதன், அங்கையன் கைலாசநாதன், செ.யோகநாதன், செம்பியன் செல்வன், சிலோன் விஜேந்திரன், நாவண்ணன், ராஜசிறீகாந்தன், சி.புஸ்பராஜா, முல்லையூரான், சுபாஸ் சந்திரபோஸ் என்பவர்களைப்பற்றிய வரலாறுகளையும், தமது நினைவுகளையும் எழுத்தாளர்கள் இந்த நூலிலே கட்டுரைகளாகத் தந்திருக்கின்றார்கள். மிகப்பெரிய சட்ட அறிஞராகத் திகழ்ந்து, 1978 அம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையினுள்ளே பார்வையாளராக நுழைந்து, அமைதியாக அமர்ந்து, யாரும் எதிர்பாராத விதமாக எழுந்து. மூன்று நிமிடங்கள் ஈழத்தமிழர் பிரச்சினையை அதிரடியாக மொழிந்து உலகத் தலைவர்களையெல்லாம் வியந்து நிற்க வைத்த கிருஸ்ணா வைகுந்தவாசன் அவர்களைப்பற்றிய கட்டுரையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.

நவரச நடிப்பாற்றலில் சிறந்து விளங்கிய இளவாலை விஜயேந்திரன் அவர்கள் ஆசுகவி கல்லடி வேலப்பிள்ளை அவர்களின் பேரன் என்பதாலோ என்னவோ நினைத்தவுடன் கவி இயற்றுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தவர். தமிழகத்தில் வாழ்ந்தபோது கலையுலகத் தொடர்பினால் சிலோன் விஜயேந்திரன் என அழைக்கப்பட்டவர். நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்புப் பெற்றவர். திரைப்பட முன்னணிக் கதாநாயகர்கள் பலருடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தந்தை சைவசமயத்தவர், தாயார் கிறீஸ்தவர், மனைவி இஸ்லாமியர் என்று மும்மதங்களோடும் தன் வாழ்வை இணைத்துக்கொண்ட சிலோன் விஜயேந்திரன் சிலகாலம் இஸ்லாமிய மதத்தினைத் தழுவி இஸ்லாமியராகவும் வாழ்ந்தவர் என்ற தகவல்களைத் தருகின்றார் அவரைப்பற்றிய கட்டுரையை எழுதியிருக்கும் தமிழறிஞர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்கள்.

மிகப்பெரிய எழுத்தாளராக விளங்கிய அ.செ.முருகானந்தன் அவர்கள் பற்றி எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள் எழுதியுள்ள கட்டுரை நெஞ்சை உருக்குகின்றது. ஈழத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் அந்த மாபெரும் எழுத்தாளரை உருக்குலைய வைத்த சோகக்கதை, அந்தநிலையிலும் அவரை ஏமாற்றிய இன்னுமோர் எழுத்தாளரின் துரோகச் செயல், இறுதிக்காலத்தில் முதியோர் இல்லமொன்றில் அவர் வாழவேண்டி ஏற்பட்ட அவல நிலை என்று பல்வேறு துன்பங்களினிடையே அந்த இலக்கியவாதியின் வாழ்வு நகர்ந்திருப்பதை அந்தக்கட்டுரையின் மூலம் அறிய முடிகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மருத்துவத்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்த மருத்துவர் செ.சிவஞானசுந்தரம் அவர்கள், நந்தி என்ற பெயரில் எழத்துலகில் தன்னிகரற்று விளங்கியவர். அவரின் இலக்கிய வரலாற்றை எழுதியிருக்கிறார், ஈழத்துநால்களைப் பதிவுசெய்யும் திட்டத்தினைப் பாரிய அளவில் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் என். செல்வராஜா அவர்கள்.

பதினெட்டுக்கும் மேற்பட்ட புனைபெயர்களிலும். தனது சொந்தப் பெயரிலும் ஏராளமாக எழுதிக் குவித்து, ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு வளம் சேர்த்த மூதறிஞர் சொக்கன் அவர்களைப்பற்றி, கடந்த வருடம் இலண்டனில் இயற்கை எய்திய அமரர் சிவலிங்கம் சிவபாலன் எழுதியுள்ளார். சொக்கன் அவர்களைப்பற்றிய பல்வேறு அறிஞர்பெருமக்களின் விதப்புரைகளையும், கட்டுரைகளையும் பட்டியல்போட்டுத் தந்துள்ளார் கட்டுரையாளர். சொக்கன் அவர்களைப்பற்றிய அந்தப் பட்டியல் நம்மைச் சொக்கவைக்கிறது.

ஈழத்தமிழ் இலக்கியத்தை, தமிழக இலக்கியவாதிகளையும், இலக்கிய ஆர்வலர்களையும் வியப்போடு நோக்கவைக்கும் அளவுக்கு உயர்ந்த இலக்கியவாதிகளாகத் திகழ்ந்த பலரைப்பற்றிய கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அவற்றையெல்லாம், இன்றைய புகழ்பூத்த எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள். இந்த அறிமுகக் கட்டுரையில் மற்றைய பந்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களோடு மேலும், மட்டக்களப்பைச் சேர்ந்த இலக்கியமணி அன்புமணி அவர்கள், கனடாவில் வாழும் மாபெருங்கவிஞர் கந்தவனம் அவர்கள், இலக்கியவாதி வ.ந.கிரிதரன் அவர்கள், இலக்கியவாதி என்.கே.மகாலிங்கம் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் கால.சுப்பிரமணியம் அவர்கள், பிரான்சு தேசத்தில் வாழும் பிரபல எழத்தாளர் வண்ணை தெய்வம் அவர்கள், மா.கி. கிறிஸ்ரியன் அவர்கள், டென்மார்க்கில் வசிக்கும் பிரபல கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள், யேர்மனியைச் சேர்ந்த எழுத்தாளர் திருமதி.ஜெயா நடேசன் அவர்கள், கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளர் அறிஞர் இ.க. கந்தசுவாமி அவர்கள், இலங்கையிலிருந்து கவிஞர் கருணகரன் அவர்கள், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் அதிபர் இ.நடராசா அவர்கள், நாடகாசிரியர் நவாலியூர் நடேசன் அவர்கள், கோப்பாய் சிவம் அவர்கள், பரம்பரைத் தமிழ் அறிஞர் ம.பா.மகாலிங்கசிவம் அவர்கள், கல்விமான் அனு.வை.நாகராஜன் அவர்கள், தம்பு சிவசுப்பிரமணியம் அவர்கள், காசிநாதர் சிவபாலன் அவர்கள், திருமதி. ஜெயமணி கனகரெத்தினம் அவர்கள், மற்றும் பண்டிதர் வடிவேலு அவர்களின் மகள், திருமதி. இராதாதேவி சிவசுப்பிரமணியம் அவர்கள், இலண்டனில் வாழும் எழுத்தாளர்கள் மு.புஸ்பராஜன் அவர்கள், திருமதி. நவஜோதி ஜோகரட்ணம் அவர்கள், மற்றும் இந்தியாவில் வாழும் யாழ்வாணனின் மகன் கண்ணதாசன் அவர்கள் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஈழத்தமிழ் வரலாற்றின் பக்கங்களில் நிலைத்த இடம்பெறத்தக்க விபரங்களைக் கொண்டு விளங்குகின்றன. இந்த நூலில் உள்ள கட்டுரைகளில் வெறும் வரலாற்று நிகழ்வுகளை மட்டுமன்றிக் காலத்தின் போக்குக்கேற்ற கருத்துக்களையும் கட்டுரையாளர்கள் ஆங்காங்கே விதைத்துள்ளார்கள். உதாரணமாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம்.

“நாவற்குழி மண் தமிழீழத்திற்கு அளித்த மாபெரும் சொத்து பண்டிதர் சு.வே.” என்ற தலைப்பிலே, இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், 2007 ஆம் ஆண்டு உயிரிழந்த பண்டிதர் சு.வேலுப்பிள்ளை அவர்களைப் பற்றி இந்த நூலின் தொகுப்பாசிரியரான முல்லை அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில்,“தமிழர்களில் சு.வே.போன்ற பல எழுத்தாளர்களையும், புத்திஜீவிகளையும், அறிஞர்களையும் போராட்டத்தினாலும், திட்டமிட்ட மருந்துத் தட்டுப்பாடு, உணவுப் பற்றாக்குறை, வறுமை, சுகாதாரச் சீர்கேடுகள் என்பவற்றால் காலத்திற்கு முன்பே இழந்துகொண்டிருக்கின்றோம். இருக்கும் காலத்திலும் அவர்களின் வளர்ச்சிகள் ஏதோ ஒரு விதத்தில் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஏனையோர்களையும் சிந்திக்க இடமளிப்பதில்லை. தமிழர்களுக்கு இந்நிலையிலிருந்து எப்போது விடிவு கிடைக்குமோ?” என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றார். கிருஸ்ணா வைகுந்தவாசன் பற்றிய கட்டுரையில், கட்டுரையாளரான அவரது மனைவி மகேஸ்வரி வைகுந்தவாசனின் கருத்து இப்படியிருக்கின்றது:

“உலகநாடுகளின் தலைவர்களின் செவிகளில் இது (அவரது பேச்சு) முறையாக அன்று ஏறியிருந்தால், 30 ஆண்டுகளின் பின்னர், இன்று இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாகவும். மனித உரிமை மீறல் தொடர்பாகவும், தமது கருத்தை இன்று நேர்மையாக முன்வைக்க முனையும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகளை, பயங்கரவாதிகள் எனவும், தமிழர்களிடம் கையூட்டுப் பெறுபவர்கள் எனவும் கேவலமாகவும். துணிச்சலாகவும் குற்றச் சாட்டுக்களை இலங்கை அரசத் தலைவர்கள் விடுக்கும் நிலைமை ஏற்பட்டிராது” “என் இனமே என் சனமே..என்னை உனக்குத் தெரிகிறதா” என்பன போன்ற எண்ணற்ற பாடல்களை எழுதிய கவிஞர் நாவண்ணன் அவர்களைப்பற்றிய கட்டுரையை எழுதியுள்ள மட்டுவில் ஞானக்குமாரன் ஓரிடத்தில், “ குண்டுகளை நிரப்பிக்கொண்டு களத்திலே நிற்கும் போராளிகளுக்கு அருகிலே நின்று தனது பேனாவின் தண்டுக்கு மை நிரப்பிக்கொள்ளும் ஒரு படைப்பாளி” என்று அருமையாகக் குறிப்பிடுகின்றார்.

இந்தக்கட்டுரைகளை எழுதியுள்ள முப்பத்தியிரண்டு பேரைப்பற்றிய குறிப்புக்களும் நூலின் இறுதியில் அவர்களது நிழற் படங்களுடன் தரப்பட்டுள்ளன. அந்தக் குறிப்புக்களை வாசித்தபோதுதான் இரத்தினச்சுருக்கம் என்றால் என்ன என்பதை உணரமுடிந்தது. அவ்வளவு சுருக்கமாக, அற்புதமாக ஒவ்வொருவரைப் பற்றியும் குறிப்புக்களைத் தந்திருக்கிறார் தொகுப்பாசிரியர் முல்லை அமுதன் அவர்கள். எவ்வித காய்தல். உவத்தலும் இன்றி கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. எந்தவித அரசியல். சமூக. சமய வேறுபாடுகளும் இன்றி அறிஞர்கள், சாதனையாளர்கள். எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வகையான நூல் ஒன்று வெளிவந்த பின்னர் அவரைப்பற்றி எழுதவில்லை. இவரைப்பற்றிய கட்டுரை நூலில் இடம் பெறவில்லை என்றெல்லாம் எழக்கூடிய எதிர்ப் புகைச்சல்களுக்கு இடம் ஏற்படாதவகையில் தொகுப்பாசிரியர் முல்லை அமுதன் அவர்கள் தனது, “என்னுரை” என்னும் சின்னதோர் ஒருபக்கக் குறிப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

“எதிர்பார்த்த கட்டுரைகள் பாகுபாடின்றிக் கிடைக்க வாசல் திறந்திருந்தோம்........எனினும் பாகம் இரண்டில் அவர்களின் கட்டுரைகள் வரும் என்கிற நம்பிக்கையுடன் பாகம் ஒன்று வெளிவருகிறது.” தொகுப்பாசிரியரின் அந்தக் குறிப்பு இந்த முயற்சியிலே அவர் எவ்வளவு கரிசினையோடு ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்துகின்றது.

எனவே, இன்னும் தொகுதிகள் வெளிவரும். விடுபட்டுப்போன சாதனையாளர்கள் பற்றிய விபரங்கள் அவற்றில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம். அதற்கு எழத்தாளர்கள் அவருக்குக் கைகொடுத்து உதவவேண்டும். தானாக ஒரு நூலை எழுதுவது இலகுவானது. அது ஒருவரது அறிவின்பாற்பட்ட விடயம். அதற்கான அறவும், ஆற்றலும் உள்ளவர்களால் அது முடியும். தரமாக இருந்தால் வாசகர்களால் ஏற்றுக்கொள்ளப்படும், வரலாற்றில் நிலைக்கும். ஆனால், பலரது ஆக்கங்களைத் தொகுத்து வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்களைச் சமாளிக்க வேண்டி எற்படும். இலக்கியத் தொடர்பு இல்லாதவர்களின் எதிர்ப்புக்களைக்கூட எதிர்நோக்க வேண்டிவரும். அவை எல்லாவற்றையும் தாண்டி இப்படியொரு அற்புதத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ள முல்லை அமுதன் அவர்களின் தமிழ்ப்பணி உலகத் தமிழர் வரலாற்றில் உன்னத இடத்தைப் பெறும். உலகத்தில் தமிழ் உள்ளளவும் நிலைக்கும். வாழ்க தமிழ்.

பிற்குறிப்பு:-இந்த நூலை விரித்ததுமே எதிர்பாராத இன்ப உணர்ச்சி எனக்கு எற்பட்டது. காரணம் என்னவெனில் முதலாவது கட்டுரையை எழுதியிருப்பவர் மயிலங்கூடலூர் பி.நடராசன் அவர்கள். எனது நனவிலம், கனவிலும் காலமெல்லாம் நின்று நர்த்தனம் ஆடிக்கொண்டிருக்கும் அவர் பட்டிருப்பு மத்திய மாவித்தியாலயத்திலே ஒன்பதாம் வகுப்பிலிருந்து எனக்கு உயிரினவியல் அசிரியராக வாய்த்தவர். விஞ்ஞான ஆசிரியரான அவர் என்னுள்ளிருந்த தமிழை இனம்கண்டு களம் அமைத்துக்கொடுத்தவர். வற்புறுத்தி ஊக்கம் கொடுத்தவர். எனது பதினைந்தாவது வயதிலேயே சுதந்திரன் பத்திரிகையில் நிருபராகச் சேர்த்துவிட்டவர். “உயிர்ப்பு” என்ற பாடசாலையின் சஞ்சிகையில் ஆசிரியராகப் பதவியளித்தவர். எழுத்துத் துறையில் என் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டவர். யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் அவரைக் கண்டு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகின்றது. அவரது கட்டுரையைக் கண்டதும் அவரையே கண்டதுபோல உள்ளம் களிநடம் புரிந்தது. ***


இலக்கியப்பூக்கள்
- ரஸஞானி


வெளிவருகிறது 'காற்று வெளி'யின் இலக்கியப் பூக்கள் 2  (தொகுப்பு)!இங்கிலாந்தில் வருடாந்தம் ஈழத்து தமிழ் நூல்களின் கண்காட்சியை நடத்திவருபவரும் காற்றுவெளி என்னும் சஞ்சிகையை வெளியிடுபவருமான முல்லை அமுதன், தமிழ் உலகம் நன்றி கூறத்தக்க சிறந்த பணியொன்றை செய்துள்ளார். 370 பக்கங்களில் 44 மறைந்த ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அறிஞர்களைப்பற்றிய விரிவான கட்டுரைகள் கொண்ட தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார். சென்னை காந்தளகம் பதிப்பித்துள்ள இலக்கியப்பூக்கள் என்ற நூலையே முல்லை அமுதன் தொகுத்துள்ளார். மறைந்தவர்களைப் பற்றிய ஆக்கங்களைத்தொகுக்கும்பொழுது ஏற்படும் சிரமங்கள் பல. குறிப்பாக அந்த அமரர்களின் ஒளிப்படங்களை தேடி எடுப்பதும் பொருத்தமானவர்களுடன் தொடர்புகொண்டு ஆக்கங்களைப்பெறுவதும் சிரமசாத்தியம்தான். முல்லை அமுதனின் உழைப்பு பெருமதியானது. அது வீண்போகவில்லை.

ஈழத்து பூதந்தேவனார், ம.க.வேற்பிள்ளை, சிவபாதசுந்தரனார், திருஞானசம்பந்தப்பிள்ளை, மகாலிங்கசிவம், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, தனிநாயக அடிகள், புலவர் ஞானப்பிரகாசம், புலவர் தேவசகாயம்பிள்ளை, கனக செந்திநாதன், பஞ்சாட்சர சர்மா, வ.இராசையா, பண்டிதர் வடிவேல், கிருஷ்ணா வைகுந்தவாசன், சிவ.விவேகானந்த முதலியார், சு.வேலுப்பிள்ளை, அ.செ.முருகானந்தன், அ.ந.கந்தசாமி, வரதர், நந்தி, தில்லைச்சிவன், சொக்கன், புலவர் மிக்கேல்பிள்ளை, பேராசிரியர் கைலாசபதி, யாழ்வாணன், ஏ.ஜே.கனகரட்ணா, அப்பச்சி மகாலிங்கம், மு.தளையசிங்கம், பிரமிள், செ.கதிர்காமநாதன், அங்கையன் கைலாசநாதன், செ.யோகநாதன், செம்பியன் செல்வன், பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா, சிலோன் விஜயேந்திரன், நாவண்ணன், ராஜஸ்ரீகாந்தன், சு.வில்வரத்தினம், சி.புஸ்பராஜா, சிவலிங்கம் சிவபாலன், கணபதி கணேசன், முல்லையூரான், குமார் மூர்த்தி, எஸ்போஸ் ஆகிய 44 அமரர்களின் பல முகங்களை நாம் இந்த நூலில் தரிசிக்கலாம். பலமும் பலவீனமும் கொண்ட மனிதர்கள் படைப்பாளிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் சாதனைகளும் சாதுரியங்களும் வாசகர்களுக்கு தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் தூண்டுகிறது.

தந்தை செல்வாவை காங்கேசன்துறையில் எதிர்த்துப்போட்டியிட்ட வைகுந்தவாசன் பின்னாளில் ஐ.நா. சபையில் மின்னலெனத்தோன்றி முழங்கியதையும் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சந்தேகநபராக சிறைசென்று மீண்ட சிலோன் விஜயேந்திரனின் நடிப்புலக பக்கங்களையும், அற்பாயுளில் மறைந்துபோன இலக்கியவாதிகளையும் காலை ஆகாரமாக இடியப்பமும் வடையும் சுண்டலும் அடையும் ஒரேநேரத்தில் ரசித்து சுவைத்து உண்டு இனிப்பையே தனது தீராத நேயாக்கிக்கொண்ட (நீரிழிவு) செம்பியன் செல்வனின் சுவாரஸ்யமான வாழ்வையும் இன்னும் சிலரின் வலிகளையும் ஏமாற்றங்களையும் சொல்கிறது இந்த ஆவணம்.

அவர்களின் ஆற்றல் ஆளுமை வாசகர்களை நிச்சயம் வியக்கவைக்கும். விந்தையான இந்த மனிதர்களின் வாழ்வில்தான் எத்தனை சோதனைகள்? சில பக்கங்களை படித்து முடித்ததும் அவர்களின் அந்த வாழ்விலிருந்து வெளியே வருவதற்கு சற்று நேரமாகிறது.

இலக்கியப்பூக்களில் இடம்பெற்றிருக்கும் சிலரை பல எழுத்தாளர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். இந்த நூல் வாசகர்களுக்காக மாத்திரம் தொகுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. எழுத்தாளர்களும் அறிந்துகொள்ளவேண்டிய பல அரிய தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

தொகுப்பாசிரியர் முல்லையமுதன் தமது என்னுரையின் இறுதியில் இப்படிக்குறிப்பிடுகிறார்:- சக எழுத்தாளர்களை நேசிக்கின்ற பக்குவம் யாருக்கும் வந்ததாகத்தெரியவில்லை. வரலாறுகளைத் தேடுகின்ற தேடுதல் முயற்சியும் அரிதாகியே வருகின்றது. ஒரு சிலர் முனைப்புடன் செயல்பட்டு வந்தாலும் போதியதாக இல்லை. எனினும் தேடுவோம். தமிழால் இணைவோம்.

இலக்கியப்பூக்கள் பிரதிகளுக்கு:-
Mullai Amuthan
34. RED RIFFE ROAD.
PLAISTOW - LONDON - E 13 OJX
நன்றி: உதயம்

***********************

மீள்பிரசுரம்: தமிழ்விசை.காம்
முல்லை அமுதனின் காற்றுவெளி வெளியீடாக இலக்கியப் பூக்கள்! - கவிஞர் மா.கி. கிறிஸ்ரியன் -

வெளிவருகிறது 'காற்று வெளி'யின் இலக்கியப் பூக்கள் 2  (தொகுப்பு)!இலக்கியப் பூக்களின் ஆழம் பொதுமையில் நிற்கின்றது. படைப்பாளியின் ஒற்றுமைக்கு அறைகூவல் விடுகின்றது. காலமென்னும் கடலில்க் கட்டப்பட்டிருக்கும் கலங்கரை தீபம். நமக்குத் தெரிந்ததையும், தெரியாததையும் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. சமுதாய பொருளியல் அரசியல் கண்ணோட்டஙகளோடு கூடிய மக்கள் இலக்கியங்களைப் படைத்த படைப்பிலக்கியக் களத்தில் மேலோராக விளங்கி வெற்றி பெற்ற அமரர்களாகியவர்களைப் பற்றிய கட்டுரைகள், இன்றிருக்கும் படைப்பாளிகள் படைத்து ‘இலக்கியப் பூக்கள்’ வழங்குகின்றது.

சமுதாய ஈடுபாட்டுடன் மண்ணையும், மக்களையும் நேசித்து வாழ்ந்த‌ தலைமுறை வாழ்வுக்கு வழி காட்டியவர்கள் வாழ்த்துக்களுக்கு
உரியவர்கள்! வணங்கத்தக்கவர்கள்!! இதன் அடிப்படையில்த்தான் முருகையன் ஒரு கட்டுரையில் சொன்னார், ‘படைப்பாளிகள் கடவுளர்
என்று’. சமுதாய மாற்றத்திற்கும், மாறுதல்களுக்கும், கலை இலக்கியக் களம், இலக்கிய வடிவங்களைத் தந்த தளத்தை தரிசித்து நின்று
பிரபல்யம் பெற்ற முன்னோடிகளை, இலக்கிய கர்த்தாக்களை, ‘இலக்கியப் பூக்கள்’ விளம்பி நிற்கின்றது.

உண்மையான ஈடுபாட்டோடு ஈழத்தில் வாழ்ந்த உண்மையை வரவேற்றுள்ளதை இந்த நூலில் மதிப்பிடவும் முயன்றுள்ளேன். இக்கால கட்டத்திற்குத் தேவையான புதிய அணுகுதலோடு வெளிவந்துள்ளதும் பாராட்டத் தக்கனவாகும். செம்மையான அச்சுப் பதிப்பும், அழகும் நிறைந்துள்ள முகப்புத் தெறிப்பும், கட்டுரையாளர்களின் சாயல்ப் படங்களும் மிகப்பெரும் கவருதலை கச்சிதமாக கையாண்டுள்ளமை பாராட்டுக்குரியது.

‘காற்றுவெளி வெளியீடாக’ காந்தளகம் பதிப்பகத்தால் வெளிவந்துள்ளது. இந்த ‘இலக்கிலப் பூக்கள்’ பற்றிய திறனாய்வு செய்ய வேண்டியவர்கள் கட்டாயம் அதனை மேற்கொள்ள வேண்டும். தங்களுக்குச் சரியெனப் பட்டதை ஒளிவு மறைவின்றி தயங்காமல் கூறும் அறிவைக் கூறவேண்டும். இம்மேலோர் பற்றிய கட்டுரைகளை எழுதியவர்கள் சமகாலத்தோரே! இவற்றின் வளர்ச்சிக் கூற்றில் இனத்தின் எதிர்காலம், சுற்றாடல், கருத்தாடல், நாளைய நடையியல், தெறிப்புகள் கவனமாக கவனிக்கப்பட்ட படைப்பையும், படைப்பாளியையும், பார்வைக்குட்படுத்தப்பட்டு பதியப்பட்டுள்ளது. இந்த வகையிலும் முல்லை அமுதனைப் பாராட்டவேண்டும்.

உரையால், எழுத்தால், உயர் நோக்கால் தமிழ்ச் சமூகத்திற்கு முக்கியமாக இளைஞர்களுக்கு வழிகாடடிகளாக விளங்குபவர்கள், தெளிந்த நோக்குடைய எழுத்தாளர்களால் சிறந்தமைந்துள்ள இந்த ‘இலக்கியப் பூக்கள்’ முன்மாதிரியாகத் திகழ்கின்றது. முன்னோடி மேலோர்கள் பற்றிய கட்டுரை நல்ல நிலையில் உயிரோட்டம் உள்ள நடையும், வாசகர்களைத் தன்பால் ஈர்க்கின்ற வகையில்த் துலங்குகின்றது. தொகுப்பாசிரியர் முல்லைஅமுதனையும் இந்த இடத்தில்ப் பாராட்ட வேண்டியுள்ளது.

இவர் எழுத்துக்களும், தமிழ் நூல்க்காப்பக முயற்சியும், தமிழ் கூறும் நல்லுலகிற்கும், தலைமுறை தலைமுறைக்கும் தேடலுக்குரியனவாகும். 1980களில் கவிதைகளுடன் 12 நூல்களை எமக்களித்துள்ளார். பிரித்தானியாவுக்குப் புலம் பெயர்ந்த பின்னர் இவர் மூச்சான பேச்சும் எழுத்தும் பேணிக்காக்கப்பட வேண்டிய நூல்களை ஆவணப்படுத்துவதில் உள்ள ஈடுபாடும் கவனத்தில்க் கொள்ளத்தக்கனவாகும்.

இவரது நினைத்தவுடன் வெளிவரும் ‘காற்றுவெளி சஞ்சிகை’ தமிழர் வாழும் இடங்களெங்கும் தவழ்ந்து கொண்டிருக்கின்றது. இதன்கண் கலையிலக்கியப் பங்களிப்பு அளப்பரியதாகவே திகழ்கிறது. ‘இலக்கியப் பூக்கள்’ அடக்கியுள்ளவற்றைப்போல் பல நூல்கள் வந்துள்ளது. அந்த நூல்கள்பற்றிக் கருத்துச் சொல்லவேண்டும் என்று நான் நினைக்கிறேன். என் நினைப்பிற்கு இக்கட்டுரை இடந்தராது என்பதால் அந்த நினைப்பை அறுத்துக்கொள்கிறேன். இந்தக் கட்டுரையில் பொறுப்பற்ற முறையில் சுருக்கமாக சொல்வது அறிவுமல்ல, விமர்சனமுமல்ல, பாராட்டுக்குரிய மேலோரான முன்னோடிகள் பற்றி இனிப்பார்ப்போம்.

இக்கால கட்டத்தில் புலத்திலோர் மத்தியில் புதிதான தேடல் நோக்கு முகுள்வதைக் காணலாம். பலர் இலக்கியப் பூக்கள் போன்ற நூல்களைக் கையாண்டுள்ளார்கள். கலை இலக்கிய நாடகங்கள், சினிமா, நாட்டியம், ஓவியம், சிற்பம் போன்றவற்றிற்கு ஆற்றிய பணிகளை மறந்து போகாதவண்ணம், மறைந்துவிடாத வகையில் ஆடுவணப்படுத்தலுக்கு ஏற்றவகையில் ஈடுபட்டு வருவதையும் காண்கின்றோம். இவர்கள் எல்லாம் இணைத்துப் பிணைப்பது ஒன்றே ஒன்றுதான்.

அந்தப் பெரும் பேறான ‘மானிட நேயத்தை’ மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு தலைமுறைக்கு அப்பாலும் செல்ல வேண்டும் என்பதற்காக ஆறாவது விரலைப் பயன்படுத்தி பங்களிப்பைக் காத்திரமாக இக்காலகட்டத்தில்ச் செய்கின்றனர். தமிழீழ மக்கள் படும் துன்ப துயரங்கள், சாவுகள், அவலங்களுக்குள்ளும் சாதிக்கின்றனர். ‘இலக்கியப் பூக்கள்’ நூலில் இடம்பெற்றுள்ளவர்கள் மனிதனுக்கு தங்கள் பணியைச் செய்தவர்கள். மனிதனுக்கு அப்பாலும் எப்பாலும் ஒன்றுமில்லை! மனிதனுக்காகவே தங்கள் வாழ்நாளை, இலக்கியப் பங்களிப்பை ஆற்றியவர்கள்.

அத்தகைய நாற்பத்தி நான்கு இலக்கிய வாதிகளை இன்நூலில்க் காண்கின்றோம். இந்த அமர எழுத்தாளர்கள் அதன் முன்னோடித் தமிழ்ப்பெரும் புலவர் ஈழத்தின் கண் பூதந்தேவனார் சங்கநூலில் இடங்கொண்ட பாடல்களால் ஈழத்திற்குப் புகழ்சேர்த்த அந்தப் பெரும் புலவரோடு தொடங்கி, நாப்பத்தி நான்காவது கட்டுரை அவர்கள் அவனைச் சுட்டுக் கொண்டார்கள் என்ற கட்டுரையுடன், அடுத்த இரண்டாவது பகுதிக்குக் காத்திருக்க வைத்துள்ளார் முல்லைஅமுதன்.

‘இலக்கியப் பூக்கள்’ முன்னூற்று ஏழுபத்தொரு பக்கங்களைக் கொண்டு பக்குவமான தகவல்ப் பரப்புதலைக் கச்சிதமாக உள்ளடக்கியுள்ளது. வார்த்தைகள் பூப்போன்றன. அவற்றைத் தொடுக்கும் விதத்தில்த் தொடுத்தால் மதிப்புப்பெறும். அந்த நூலைப் பார்க்கும் வாசகர்கள், விமர்சகர்கள் அடுத்த பாகத்தை எதிர்பார்ப்பார்கள். அத்தகைய ஆர்வத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது.

முதற்பகுதி நாற்பத்தி நான்கு கட்டுரைகளை எழுதியவர்களின் நிழற்படங்களோடு அவர்கள் பற்றிய சிறு குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது. எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் விரிந்து, பரந்த வாழ்க்கைக்குரிய சகல அம்சங்களையும் உள்ளடக்கிய உயர்ந்த கண்ணோட்டத்துடன் இக்கட்டுரைகள் விளங்குகின்றது. சார்பு நிலைகொண்டு நிகழ்ந்த நிகழ்வுகளை கைக்கொள்ளாமல், தொகுப்பாசிரியர் கையாண்டுள்ளார். இதுபோன்ற நூல்களின் உள்ளடக்க முயற்சிக்குப் பதிலாக வெளிவேசக் கவர்ச்சி, சுயனலச் சுண்டுதல், தன்னலப்போக்கும், புகழாதிக்கம் செலுத்தி வெளிவந்தன எனக்கொள்ள அண்மையில் வெளிவந்த நூல்கள் உண்டு.

சந்தர்ப்பவாத வெளிவேசமிட்ட பாசாங்காகவே அவற்றறை நான் கவனித்திருந்தேன். இவற்றையெல்லாம் நீக்கும் சாலச்சிறப்பு நூலாக இலக்கியப் பூக்கள் வந்துள்ளதைக் காணலாம். இவ்வாறான அறிவார்ந்த பதிவாக்கல்த் துறையில் நம்மவரின் நாட்டம் அதிகம் செல்வதும், விரித்தி அடைவதும் கண்டு நம்மவர் பாராட்டுக்களைத் தந்து மதிப்பர்.

நூலினைப் பெற்றுக் கொள்ள .....
இலக்கியப் பூக்கள் (ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு)
371 பக்கங்கள்
£10 (தபாற் செலவு தனித்து) பெற்றுக்கொள்ளளாம்.
தொடர்புகட்கு
:R Mahendran
34, Red Riffe Road , Plaistow, E13 0JX
Email: mullaiamuthan_03@hotmail.co.uk


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்