இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2010  இதழ் 125  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சினிமா!
பிரஞ்சு சினிமா
வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் மௌனகீதம்- ‘கில்லீசின் மனைவி’
- எம்.கே.முருகானந்தன் -

வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் மௌனகீதம்- ‘கில்லீசின் மனைவி’சோகத்தில் உழலும் வாழ்வுதான் இல்லத் தலைவியெனப் போற்றப்படும் பெண்களுக்கு சபிக்கப்பட்டதா? இல்லக் கடமைகள் அனைத்தும் அவள் தலையில்தானா? பிள்ளைகளைப் பெற்றெடுப்பது, அவர்களை வளர்ப்பது, சமைப்பது, துணிகள் துவைப்பது, கூட்டுவது துப்பரவு செய்வது என, என்றுமே மீளமுடியாதா சுழல் சக்கரத்தில் மாட்டியிருக்கிறாளா?
கணவனை மகிழ்ச்சிப்படுத்துவதும் அவன் விரும்பும்போது அவனோடு படுத்தெழும்புவதும் அவளது மற்றொரு கடமை என்று சொல்லலாமா? இவை யாவற்றையும் அவள் மனம் கோணமால் செய்தபோதும், கர்ப்பமாயிருக்கும் காலத்திலும் பாலூட்டும் நேரத்திலும் உறவு கொள்வதில் சிரமங்களும் தடங்கல்களும் ஏற்படும்போது என்னவாகிறது? தனது இச்சைகளைத் தணித்துக் கொள்ள வேறு பெண்ணை அவன் நாடுவது என்ன நியாயம்?

இவற்றை அவள் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதானா? தனது மனஉணர்வுகளை வெளிப்படுத்தாது, பரத்தையிடம் கணவனைச் சுமந்து சென்ற சங்ககாலப் பெண்போல அடங்கிக் கிடப்பதுதான் குடும்பப் பொறுப்புள்ள பெண்ணின் தலைவிதியா? இது போன்ற பல கேள்விகள் என் மனத்தில் எழுந்தன. கில்லீசின் மனைவி என்ற பிரஞ்சுத் திரைப்படத்தைப் பார்த்த போது ஏற்பட்டது.

நம்பிக்கைத் துரோகங்களும், துன்பங்களும் அவளைத் துரத்திய போது அவள் பொங்கி எழவில்லை. வார்த்தைகளை அள்ளி வீசவில்லை. கண்ணிர் விட்டுக் கலங்கவும் இல்லை. மாறாத புன்னகை அவள் முகத்தை எப்பொழுதும் அலங்கரித்தது. மோனா லிசாவின் புன்னகை போன்றதே எலிசாவின் புன்னகையும். மௌனமாக பொதிந்தும் ஆயிரம் அர்த்தங்களை வெளிப்படுத்தியது. அந்தப் புன்னகை ஒரு புதிராக திரைப்படம் முழுவதும் எம்முடன் பயணித்துக் கொண்டேயிருந்தது. எலிசாவாக நடிப்பவர் திறமையான நடிகையான
Emmanualle Devos ஆகும். THe Beat that my heart skipped, Read my lips, King and Queen போன்ற படங்கள் ஊடாகப் பரிச்சமானவர்.

சோகத்தில் உழலும் வாழ்வுதான் இல்லத் தலைவியெனப் போற்றப்படும் பெண்களுக்கு சபிக்கப்பட்டதா? இல்லக் கடமைகள் அனைத்தும் அவள் தலையில்தானா? பிள்ளைகளைப் பெற்றெடுப்பது, அவர்களை வளர்ப்பது, சமைப்பது, துணிகள் துவைப்பது, கூட்டுவது துப்பரவு செய்வது என, என்றுமே மீளமுடியாதா சுழல் சக்கரத்தில் மாட்டியிருக்கிறாளா?

துயரங்களை அடக்கிக் கட்டுப்படுத்தி, புன்னகை முலாம் பூசிய அவளது உளநெருக்கீடும் மனத்துயரும் ஒரு சில தடவைகள் கட்டு மீறி வெடித்துச் சிதறி வெளிப்படவே செய்கிறது. மிக நுட்பமாக அவளது உணர்வை காட்சிப்படுத்த நெறியாளர் எடுத்த யுக்தி மிகவும் வித்தியாசமானது.

அமைதியும் மென்பனியும் பூத்துக்கிடங்கும் ஒரு காலை நேரம். அவள் தனது காய்கறித் தோட்டத்தில் வேலை செய்கிறாள். வழமையான அமைதியுள்ளவளாக இன்றி அவசரமாகவும் ஒருவித முரட்டுத்தனத்துடனும் செயற்படுகிறாள். களைகளைப் பிடுங்கி அதன் வேர்களில் ஒட்டிக் கிடக்கும் மண்ணை ஆவேசமாகத் தட்டி உதறி வீசுகிறாள். காய்கறி செடிகளின் சொந்த மண்ணில் அதற்கே உரித்தான போஷாக்கை கள்ளமாக மறைந்து நின்று வேர்பரப்பி நின்று உறிஞ்சும் களைகளைத்தான் அவ்வாறு ஆவேசமாக பிடுங்கி அகற்றுகிறாள். பமற்றொரு தடவை போட்டோ பிறேம், கோப்பை ஆகியவற்றை உடைப்பதின் ஊடாகப் புலனாகிறது.

தனக்கே சொந்தமான தனது கணவன் கில்லியை, தனது சொந்த இரத்தத்தில் பிறந்த தனது சொந்தத் தங்கையே அபகரித்துக் கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாத ஒரு சாதுவான மனைவியால் அதைத்தான் செய்ய முடிந்தது. கில்லிசின் மனைவி எலிஸா பொறுப்புள்ள மனைவி. அவளது கணவன் சுரங்கத் தொழிலின் கடும் வெப்பத்தில் வேலை பார்த்தபோதும் பொறுப்புள்ளவன். தனது மனைவியில் ஆறாத அன்பு கொண்டவன். வீட்டு பணிகளிலும் அவளுக்கு உதவுபவன்.

கில்லிஸ் Clovis Cornillac தனது வேலைத்தளத்திலிருந்து இரவு திரும்பும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. வீடு திரும்பிய அவன் தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை அணைத்து, முத்தமிட்டு மெதுவாகத் துயிலெழுப்பி உறவு கொள்கிறான். உறவின் பின் ‘நான் உனக்கு வலியைத் தந்துவிட்டேனா?’ என்று கேட்குமளவிற்கு அவளில் அன்பும் அக்கறையும் கொண்டவனாயிருக்கிறான். மிகக் குறைவான வசனங்களே பேசப்படுகின்றன. பேசப்படும் ஒவ்வொன்றும் மிகவும் அத்தயாவசியமானதாகவும், கருத்தாளம் மிக்கவையாகவும் இருக்கின்றன.கில்லிஸ் Clovis Cornillac தனது வேலைத்தளத்திலிருந்து இரவு திரும்பும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. வீடு திரும்பிய அவன் தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை அணைத்து, முத்தமிட்டு மெதுவாகத் துயிலெழுப்பி உறவு கொள்கிறான். உறவின் பின் ‘நான் உனக்கு வலியைத் தந்துவிட்டேனா?’ என்று கேட்குமளவிற்கு அவளில் அன்பும் அக்கறையும் கொண்டவனாயிருக்கிறான். மிகக் குறைவான வசனங்களே பேசப்படுகின்றன. பேசப்படும் ஒவ்வொன்றும் மிகவும் அத்தயாவசியமானதாகவும், கருத்தாளம் மிக்கவையாகவும் இருக்கின்றன.

உடலுறவு இப்படத்தில் குறியீடு போல மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தப்படுகிறது. ஆனால் அவை கிளர்ச்சி ஊட்டுவதற்காக அங்கங்கள் அனைத்தையும் புட்டுக்காட்டும் காட்சிகள் அல்ல. பெரும்பாலும் முகங்களும் கைகளுமே வெளியே தெரிகின்றன. தடித்த போர்வையுள் மூடுண்டு கிடக்கும் உடல்களின் அசைவு அவ்வப்போது தெரிகிறது. மூன்று தடவைகள் வருகின்றன. அவை ஒவ்வொன்றும் அத் தம்பதிகளிடையே வௌ;வேறு நேரங்களில் நிலவும் உறவின் பரிணாமத்தை தராசுபோல அளந்து உணர்த்துபவையாக இருக்கின்றன. அன்பின் அன்னியோன்யம், நெருடல், விரிசல் ஆகியன தெளிவாக தெரிகின்றன.

சதா புன்முறுவல் மாறாத முகத்துடன் இருந்தாலும் மனதிற்குள் பொங்கியெழும் மாறுபட்ட உணர்வுகளை டிவோசின் (எலிசா) முகபாவங்கள் அற்புதமாகக் வெளிப்படுத்துகின்றன. உறவு மிக நெருக்கமாக இருந்தபோது காட்டப்படும் முதலாவது காட்சியின், அக முக நிறைவு இரண்டாவதில் இருக்கவில்லை. மூன்றாவதில் அவனது சற்று முரட்டுத்தனமான குதப்புணர்ச்சி அவளுக்கு வேதனையளித்தாலும் மாறாத புன்னகையுடன் சகிப்பது புரிகிறது.

உடல் உறவால் மட்டுமின்றி சாதாரணமாகக் கட்டியணைக்கும்போது கைகளின் நிலை, முத்தமிடும் போது உற்சாகமாக முத்தமிடுவது, அன்றி கடமைபோல ஏனோதானோ என முத்தமிடுவது, வீட்டை விட்டு வெளியேறும் போது கதவை மூடுவதில் உள்ள வேறுபாடுகள் ஊடாகவும் அவர்கள் குடும்ப உறவின் அன்னியோன்யமும் விரிசலும் எமக்கு தெளிவாகின்றன.

நாலாவது தடவை படுக்கையில் இருக்கும்போது, எலிசா அவனை அணைத்து உறவுக்கான சமிக்கையை விடுத்தபோது அவன் மறுபக்கம் திரும்பிப் படுத்துவிடுகிறான். அவளது வசீகரமும், அணைப்பும் இப்பொழுது அவனது மனத்திலில்லை. அவனது மனத்தில் இப்பொழுது வேறு யாரோ குடிபுகுந்து இருக்கிறாள் அல்லது புதியவள் பற்றிய நினைவுகளால் அலைக்கழிந்து கொண்டிருக்கிறான் என்பதுதானே காரணமாக இருக்க முடியும்.

மன உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளைத் தேடாது, நெகிழ்ச்சியான சம்பவங்கள் ஊடாக மனதில் அப்பிப் பிடிக்கச் செய்யும் வண்ணம், நுட்பமாக படத்தை நெறியாள்கை செய்திருப்பவர் Frederic Fonteyne குசநனநசiஉ குழவெநலநெ. திறமான நெறியாள்கை. 'A Pornographic affair' என்ற படத்தை நெறியாள்கை செய்திருக்கிறார் என அறிகிறேன். ஆனால் நான் பார்த்ததில்லை.

அவசியத்திற்கு அப்பால் சிறு உரையாடல்கள் கூட இல்லை. ஆனால் மௌனம் மொழியாகி எம்மோடு பேசுகிறது. உணர்வுகளில் ஊடுறுவி அலைக்கழிக்கிறது. அவளது மௌனம் பேசாப் பொருளெல்லாம் பேசுகின்றன. உண்மையில் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருப்பது எலிசா என்ற அவளது பாத்திரம். ஆனால் அதற்கு அப்பால் அப் பாத்திரம் எம் மனத்தைவிட்டு அகலாதிருப்பதற்குக் காரணம் இம்மானுவல் டிவோஸ் என்ற அந்த நடிகையின் அபாரமான நடிப்பு. அவளது நடிப்பின் வெற்றிக்கு முக்கிய பலமாக இருப்பது அவளது மர்மம் பொதிந்த புன்னகையும், விழியை மொழியாக்கிய அகன்ற விழிகளும்தான்.

கதை பிரான்சு தேசத்தின் குடியிருப்பு ஒன்றில் 1930 நடப்பதாக இருக்கிறது. 1937ல் பெல்ஜியம் நாட்டின் Madeleine Bourdouxhe எழுதிய நாவலான டுய La Femme de Gilles தழுவியது. உலக மகா யுத்தம் ஆரம்பிப்பதற்கு சற்று முந்திய காலம். திரைப்படத்தின் ஒரு கட்டத்தின் பின்னணியில், பயிற்சிக்காக நகர்ந்து செல்லும் சிறு இராணுவ அணியால் இச் செய்தி புலப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண் அவ்வாறு இருக்க முடியாது. தன்மானத்தையும் சுயகௌரவத்தையும் தாரைவார்த்து மனைவியாக நீடிக்க வேண்டும், தன்னை விட்டு தள்ளிச் செல்லும் அவனை மீட்டெடுக்க வேண்டும் என்றெல்லாம் சிந்தித்து செயற்படுவது, ஏற்க முடியாத பத்தாம் பசலிக் கொள்கையாக தெரியலாம். அவனது இன்றைய காதலியும் தனது தங்கையுமான விக்டோரியா வேறு யாருடனாவது தொடர்பு வைத்திருக்கிறாளா என்பதை அறிய அவனுக்காக வேவு பார்க்கச் செல்வதும் நம்ப முடியாத கற்பனைச் சம்பவமாக தெரியலாம்.

அவற்றை இன்று ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம். ஆயினும் இக்கதை கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன் நடக்கிறது. அத்துடன் அது பிரான்சின் ஒரு கிராமப் பகுத்pயாகவும் இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அன்றைய காலகட்டத்தில் ஒரு பெண்ணால் அவ்வாறுதான் வாழ முடிந்தது. அவளுக்கான சுதந்திரம் அந்தளவுதான் இருந்தது. அது அவர்களின் சின்ன உலகம். அதற்கு அப்பால் அவர்களது பார்வை நீண்டிருக்கவில்லை. அது பற்றிச் சிந்திக்கவும் தெரியாது. அவற்றைத் தாண்டி சாகசப் பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய துணிச்சலும் அப் பெண்களுக்கு இருக்கவில்லை.

தனக்காக தனது மகிழ்ச்சிக்காக அவள் வேவு பார்க்க முன்வரும்போது, அவள் எவ்வளவு தூரம் தன்வாழ்வை விட்டுக் கொடுக்கிறாள், தன் வாழ்வையும் உணர்வுகளையும் தியாகம் பண்ணுகிறாள் என்பதைக் கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவனாக அந்த ஆண்மகன் இருக்கிறான். சபல புத்தியும் சுயநலமனப்பாங்கும் மேலோங்கும் போது பகுத்தறிவு குழிதோண்டிப் புதையலுறுகிறது.

அவன் தன்னைவிட்டுப் பிரிந்து செல்கிறான் என்பதை உணர்ந்தவுடன் அவளுக்கு கலந்தாலோசிக்க யாரும் இருக்கவில்லை. ஆறுதல் சொல்லவும் நாதியில்லை. மற்றவர்களுக்கு பகிரங்கப்படுத்தி தனது குடும்ப கௌரவத்தை இழக்கவும் முடியாது. இந்த நிலையில் அவளுக்கு ஆலோசனை வழங்க, நெறிப்படுத்த இருந்தது ஒரே ஒரு இடம்தான். அதுதான் தேவாலயம். அங்கு பிரார்தனை செய்து மனமாற நினைக்கிறாள். சந்தடி மிகுந்த சூழலில் அவளால் முடியவில்லை. பாதிரியாரிடம் செல்கிறாள். பாவமன்னிப்பு கேட்க. தான் செய்யாத தவறுக்காக பாவமன்னிப்பு கேட்கிறாள். அபத்தமாகத் தெரிகிறதா. ஆனால் அதுதான் அவர்களின் நிஜ வாழ்வு. தட்டுத் தடுமாறி வார்த்தைகளைக் கோர்த்துப் பேசுகிறாள்.

“எனது கணவன் எனது தங்கையுடன் தொடர்பு வைத்திருக்கிறான். ஆனால்… என்னால் எதிர்த்துப் பேசவில்லை, அப்படிப் பேசினால் அவர் என்னை விட்டுப் போய்விடுவார். எனவே என்னால் எதுவுமே…”

அவளால் தொடர்ந்து பேச முடியவில்லை. எதைக் கோருவது என்ற தெளிவும் இல்லை. சற்றுத் தாமதித்து வார்த்தைகளை ஒவ்வொன்றாகச் சேகரித்து “எனக்கு உதவி வேண்டும்… என்ன செய்வதென்று தெரியவில்லை” என்கிறாள்.

பாதிரியாரை நாம் காணவில்லை. அவரது குரல் மட்டுமே கேட்கிறது. ஆனால் அது அவளது துன்பத்தைக் கேட்டு இரங்கும் குரல் அல்ல. ஆதரவு தரும் தொனியும் இல்லை. பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ளாத ஒரு ஆணின் உணர்ச்சியற்ற சடக் குரலாக ஒலிக்கிறது.

“இறைவனால் உனக்கு அளிக்கபட்ட சோதனை அது. இறைவனுக்கு எதிராக எதுவும் செய்வதைத் தவிர்த்துக் கொள்.” என்று சொல்லிய அவர் தொடர்ந்து “உனக்கான தண்டனையைப் பொறுத்தவரை நீ பத்துத் தடவைகள் ஜெபம் செய்வாயாக” என நிறைவு செய்கிறார்.

அவள் செய்த பாவத்திற்குத் தண்டனை ஜபம். அதன் மூலம் நிலமை மாறிவிடும் என்று சொல்கிறார் என்றே நாம் புரிந்த கொள்ள வெண்டியிருக்கிறது. பெண்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாத ஒரு ஆண்தானே அந்தப் பாதிரியாரும். அவருக்கும் தேர்வு இல்லை. தான் கற்றதை, தனக்குப் போதிக்கப்பட்டதை, புத்தகத்தில் உள்ளதைச் சொல்லிப் போகிறார்.

ஆனால் அவள் செய்த பாவம் என்ன என்று அவளுக்கும் புரியவில்லை. எங்களுக்கும் தெளிவில்லை.

அதன் பின் அவள் மனதைத் திடமாக்கிக் கொள்கிறாள். இயலாமை மேவ, அந்த வாழ்வுக்குள் சங்கமிக்க முயல்கிறாள். தான், தனது உணர்வு, தன்மானம் இவற்றையெல்லாம் மூட்டையாகக் கட்டி முதுகில் போட்டுவிடுகிறாள். எலிசாவாக என்றுமே அவள் வாழ முடியாது. அப்படி வாழ்வதற்கான சாத்தியம் எந்த ஒரு பெண்ணுக்கும் அந்தச் சமூகத்தில் கிடையாது. அவள் எலிசா அல்ல. அவளுக்கென்று எந்தவொரு தனி அடையாளமும் கிடையாது. அவள் கில்லீசின் மனைவி. அவ்வளவுதான். அதைத்தானே படத்தின் பெயரும் சொல்கிறது.

முடிவு இன்னும் சோகமானது. அதைச் சொல்வதற்கான வார்த்தைகளைக் கோர்க்க முடியாது மனது சோர்ந்து தவிக்கிறது. படம் முடிந்த பின்னும் BMICH இன் தியேட்டரிலிருந்து எழ முடியவில்லை. கனத்த மனது கதிரைக்குள் முடங்கிக் கிடந்து சிந்தனையில் ஆழ்ந்து கொண்டிருக்கவே தூண்டியது. பிரஞ்சுத் தூதுவராலயம் சார்பில் நடந்த Bonjur Cinema திரைப்பட விழாவில் பார்த்த படம். நல்ல படத்தைக் காட்சிப்படுத்திய அவர்களுக்கு நன்றி.

அந்த முடிவுக் காட்சி துயரம் மிகுந்ததாக இருந்தபோதும் கலைநேர்த்தியில் மிகவும் அற்புதமாக இருந்தது. மிக வித்தியாசமான கோணத்தில் படமாக்கியுள்ளார்.

தோய்த்த துணிகள் உலருவதற்காக மாடிவீட்டில் கட்டப்பட்ட கொடிகள். கள்ளம் கபடமற்ற வெள்ளை மனம் போன்று அதில் அவள் விரித்த துணிகள். தேவதைகளின் சிறகுகள் போல காற்றில் அவை அசைந்தாடும் லாவண்யம். திறந்து கிடக்கும் ஜன்னல். அதற்கு அப்பால் எல்லையற்று விரிந்து கிடக்கும் நீலவானம். தேவ லோகத்திற்கான பயணத்திற்கு வா வா என அழைப்பது போலிருந்தது.

துயர் சுமந்த அந்தப் பெண்ணின் மௌன மொழியிலான மர்மப் புன்னகையின் புதிர் எங்களையும் சூழ்ந்து கொள்கிறது. இலங்கையில் திடையிடப்பட்டதாகத் தெரியவில்லை. டிவிடியில் கிடைத்தால் உங்களுக்கும் பார்க்கக் கிடைக்கும்.

Dr.M.K.Muruganandan
Family Physician
visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html


kathirmuruga@hotmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்