சிறுவர் இலக்கியம்- பதிவுகளின் சிறுவர் இலக்கியம்: இப்பகுதியில் சிறுவர் இலக்கியப்படைப்புகள் வெளியாகும். உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள். சிறுவர் இலக்கியத்தைப்பிரதிபலுக்கும் கதை, கவிதை, கட்டுரைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. - பதிவுகள் -


எழுத்தாளர்  பத்மா இளங்கோவன்

எனது குட்டித் தோழனே
என்ன பெரிய யோசனை
கண்ணை உருட்டிப் பார்க்கிறாய்
காதைப் பக்கம் அசைக்கிறாய்.

சத்தம் ஏதும் கேட்டதோ
சுற்றி எங்கும் அமைதியோ
வானம் வெளித்துப் போனதோ
வீதியில் வாகனம் இல்லையோ.

உலகம் எங்கும் கொரோனாவாம்
உயிரைக் கொல்லும் பெருநோயாம்
வேகமாய்ப் பரவிக் கொள்கிறதாம்
வெளியே சென்றால் தொற்றிடுமாம்.

வீட்டில் யாவரும் இருந்தாலே
விரைவில் நோயும் போய்விடுமாம்
கூடி எங்கும் திரிந்தாலே
கொடிய கொரோனா பெருகிடுமாம்.

வெளியே எங்கு சென்றாலும்
வீடு திரும்பி வந்தவுடன்
கைகளைக் கழுவ வேண்டுமாம்
கால் முகம் கழுவவேண்டுமாம்.

இப்படி என்றும் வாழ்ந்தாலே
எப்படி நோய்கள் வந்துவிடும்
சுத்தம் சுகத்தைத் தருமென்றே
சொல்லித் தந்தனர் பெரியோரே.

முகத்தில் கவசம் அணியாமல்
மக்கள் செல்லக் கூடாதாம்
கைக்கும் கவசம் அணிந்தாலே
காத்திட முடியும் எங்களையாம்.

சின்னப் பூனைக் குட்டியாரே
சொல்வது உனக்குப் புரிகிறதா
எழுந்து வருவாய் விளையாட
எங்கள் வீட்டுத் தோட்டத்தில்.

மகிழ்வாய் ஓடி வந்திடுவாய்
மரத்தில் ஏறிக் குதித்திடுவாய்
பதுங்கிப் பூச்சிகள் பிடித்திடுவாய்
பார்த்து நானும் ரசித்திடுவேன்.

நோயைக் கண்டு மனம்வாடி
நாங்கள் சோரக் கூடாது
எதிர்த்து நின்று போராடி
அழிப்போம் இந்தக் கொரோனாவை.

கிருமியை எதிர்க்கும் சக்தியினை
குழந்தைகள் நாமும் பெற்றிடவே
சத்து நிறைந்த உணவுகளை
சுவைத்து நாளும் உண்போமே.

பள்ளி சென்று நாங்களும்
பாடம் படிக்க வேண்டுமே
மீண்டும் பழைய வாழ்க்கையை
மனமும் காணத் துடிக்குதே.

கொரோனா ஓடிப் போய்விட்டால்
கூடி நாங்கள் மகிழ்ந்திடலாம்
அம்மா அப்பா எல்லோரும்
ஒன்றாய் வெளியே சென்றிடலாம்.

சின்னத் தோழா எம்முடனே
சேர்ந்து நீயும் வந்திட்டால்
துள்ளிக் குதித்து விளையாடி
தூரத் துயரை விரட்டிடலாம்.!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.