பொ.ஐங்கரநேசன்புல்லுக்குளத்தையும் அதனை ஒட்டிய நிலப்பரப்பையும் தென் இலங்கை நபர் ஒருவருக்குச் சுற்றுலா விடுதி அமைப்பதற்கென நீண்டகாலக் குத்தகைக்கு விடும் முயற்சிகள் திரைமறையில் இடம்பெற்று வருவதாகச் சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையின் முழு விபரம் வருமாறு: யாழ்.நகரின் மத்தியில் அமைந்திருக்கும் புல்லுக்குளத்தை உல்லாசப் படகுச் சவாரிக்குப் பயன்படுத்தும் திட்டத்தை உள்ளடக்கி, உல்லாச விடுதி ஒன்றை புல்லுக்குளத்தை ஒட்டிய நிலப்பரப்பில் நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது, யாழ்.நகரை அழகுபடுத்தவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும் உதவும் ஓர் அபிவிருத்தித் திட்டமாகவே தோற்றம் காட்டும். ஆனால், இதன் பின்னணி கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உரியதாகவே உள்ளது. உத்தேச இத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ள புல்லுக்குளமும், அதனை ஒட்டி மணிக்கூட்டுக் கோபுரப் பக்கமாக அமைந்திருக்கும் நிலப்பரப்பும் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமானது.

இதனை, ஏற்கனவே முறிகண்டிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உல்லாசவிடுதி ஒன்றை அமைத்திருக்கும் தென் இலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவருக்கே முப்பத்து மூன்று வருட காலக் குத்தகைக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கசிந்துள்ளன. யாழ்.குடாநாட்டின் பழமை வாய்ந்த குளங்களில் ஒன்றான புல்லுக்குளத்தைத் தூர் வார வேண்டும் என்பதிலோ, அல்லது அதனைச் சூழற் சமநிலை குலையாத வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், குடாநாட்டு மக்களின் பொதுச் சொத்தான நீரில்லம் ஒன்றைத் தனியொருவர் இலாபம் ஈட்டுவதற்காகத் தாரை வார்ப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. அதுவும், யாழ்.குடாநாடு எதிர்காலத்தில் நன்னீர்ப் பற்றாக் குறைவை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாக நீரியல் நிபுணர்கள் எச்சரித்திருக்கும் நிலையில், பொதுக் குளம் ஒன்றைத் தனியாரின் நிர்வகிப்பின் கீழ் மிக நீண்ட காலக் குத்தகைக்கு விடுவது அனுகூலமானதல்ல. இது ஒரு சூழல் அநீதி. இதனை அனுமதிப்பது, வருங்காலத்தில் எமது வேறு நீர்த் தேக்கங்களும் வற்றாத கிணறுகளும் நீர் வியாபாரிகளிடம் பறிபோவதற்கான தவறான ஒரு முன்னுதாரணம் ஆகிவிடும். மேலும், மாநகர சபைக்குச் சொந்தமான நிலத்தை வெளிப்படையான, முறையான கேள்வி கோரல் இல்லாமல் திரைமறைவு ஒப்பந்தங்களின் அடிப்படையில் தனியார் ஒருவருக்குக் கையளிப்பதென்பதும் வலுவான கண்டனத்துக்கு உரியது. மாநகர சபையாலோ, அல்லது பொது அமைப்புகளாலோ ஒரு திட்டத்தை முன்னெடுக்க இயலாத நிலையில், அதனைத் தனியார் துறையிடம் கையளிக்க நேரின் தெரிவில் பிரதேச வாசிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இதுவே உலகப் பொதுவான சமூக நீதி. இவற்றையெல்லாம் புறந்தள்ளி வைத்துவிட்டுப் புல்லுக்குளத்தையும் அதனை அண்டிய நிலப்பரப்பையும் தாரை வார்க்க முயலும் சூழல் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.

புல்லுக்குளம் ........

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.