நூல் அறிமுகம்: பாரதியார் - பன்முகங்கள், பல்கோணங்கள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் கட்டுரைகள்

Sunday, 01 October 2017 16:44 - லதா ராமகிருஷ்ணன் - லதா ராமகிருஷ்ணன் பக்கம்
Print

நூல் அறிமுகம்: பாரதியார் - பன்முகங்கள், பல்கோணங்கள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் கட்டுரைகள்நூல்: பாரதியார் - பன்முகங்கள், பல்கோணங்கள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் கட்டுரைகள்
தொகுப்பாக்கம்: லதா ராமகிருஷ்ணன்
(வெளியீடு : அநாமிகா ஆல்ஃபபெட்ஸ். பக்கங்கள் : 200. விலை: ரூ.150

ஏன் இந்த நூல்? பாரதியாரைப் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இனியும்  வெளிவரும்.அத்தனை அகல்விரிவும்பல்பரிமாணமும் கொண்டவை பாரதி யின்  கவித்துவம். பாரதி ஒருவரேயென்றாலும் அவரை வாசிப்பவர்கள் அனேகம். எனவே பல  வாசிப்புப்பிரதிகளும் சாத்தியம். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பாரதியை புதிதாக அறிமுகம் செய்துவைக்க வேண்டிய தேவையிருக்கிறது. பாரதியை அணுகுபவர்களில் நுனிப்புல் மேய்கிறவர்களுண்டு; நாவன்மையை வெளிப்படுத்துவதற்காகப் பயன்படுத்திக்கொள்பவர்கள் உண்டு. ஆய்வுநோக்கில் மட்டுமே அணுகுபவர்கள் உண்டு. வாழ்வனுபவமாக அவரை வாசித்து உள்வாங்கிக்கொள்பவர்கள் உண்டு. டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் நான்காம் வகை. பாரதியாரின் ஏராளமான கவிதைகள் அவருக்கு மனப்பாடம். பேச்சின் நடுவே, மனதிற்குப் பிடித்த வரிகளை வெகு இயல்பாகநினைவுகூர்வார்; மேற்கோள்காட்டுவார். வாய்விட்டு அவற்றைஉரக்கச் சொல்லிக்காட்டுவார். அவர் குரல் தழுதழுத்து கண்ணில்நீர் துளிர்ப்பதைப் பார்த்திருக்கிறேன்.

பாரதியை வாழ்நெறியாக வரித்துக்கொண்டவராய் எத்தரப்பு மனிதர்களையும் உரிய மரியாதையோடு சமமாக நடத்துவார்.குறிப்பாக, எழுத்தாளர்களை, அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக எந்தப் பணியில் இருப்பினும், படைப்பாளியாய் மட்டுமேபார்த்து அன்போடும் தோழமையோடும் நடத்துவார். திறந்த மனதோடு பிரதிகளையும் மனிதர்களையும் அணுகுபவர்.எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் என்ற வள்ளுவன் வாக்கின்படி, யார் சொல்லால், செயலால், படைப்பால் என்ன நல்லது,செறிவானது செய்தாலும் மனதாரப் பாராட்டுவார். அவர் மொழிபெயர்த்துள்ள படைப்புகள் - ஜெயகாந்தன் எழுத்தாக்கங்கள், பாரதியினுடைய கவிதைகளின் ஆங்கிலமொழிபெயர்ப்பு நவீன தமிழ்க்கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு, CODE NAME GOD என்ற உலகப்புகழ் பெற்ற நூலின் மிகச்செறிவான தமிழ்மொழியாக்கம் - கடவுளின் கையெழுத்து -- ஆன்மிகம் - அறிவியலின் சந்திப்புப் புள்ளிகளைத் தொட்டுக் காட்டும்படைப்பு, சிந்தனை  ஒன்றுடையாள் என்ற அரிய தமிழ் – சமஸ்கிருத இணைவரிகள் இடம்பெற் றிருக்கும் நூல் –குறிப்பிடத்தக்கவை. கே. எஸ்.சுப்பிரமணியத்தின் சமூகம்-இலக்கியம் – ஆளுமைகள் தொடர்பான கட்டுரைகள் அடங்கியதொகுதிகளும் குறிப்பிடத்தக்கவை.

பாரதியாரின் பல்பரிமாணங்களைப் பற்றி டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியன் விரிவாக எழுதியுள்ள கட்டுரைகளை அவருடையகட்டுரைத் தொகுப்புகள் சிலவற்றில் படிக்கக் கிடைத்தபோது இவையனைத்தும் ஒரே தொகுப்பாக வெளிவந்தால்நன்றாயிருக்குமே என்று தோன்றியது. அப்படி ஒரு தொகுப்பைக் கொண்டு வர அவரிடம் அனுமதி கோரிய போது, வெவ்வேறு தருணங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள்என்பதால் சில கருத்துகள் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டி ருக்குமே என்று தயங்கினார். பரவாயில்லை, ஒருவிதத்தில் அவைபாரதியின் சில முக்கிய அம்சங்களை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமையும் என்று சொல்லி ஒப்புதல் பெற்றேன். அனுமதியளித்த டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் அவர்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றி.

பாரதியார் கவிதைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக் கிறார் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். அவற்றில்சிலவற்றை பாரதியின் மூல கவிதைகளோடு இந்தத் தொகுப்பில் இடம்பெறச் செய்திருப்பது நிறைவளிக்கிறது. இந்த நூலின் முகப்பு அட்டைக்கு பரீக்க்ஷா ஞாநி அவர்களின் பாரதி கோட்டோவியத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிகேட்டபோது ‘உள்ளது உள்ளபடி’ வெளியிடுங்கள் என்ற வேண்டுகோளுடன் அனுமதி அளித்தார்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it