ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


ஒரு நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்வது கிராமங்களாகும். இக்கிராமங்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கும் மனிதனின் வாழ்வாதாரத்திற்கும் பெரும்பங்காற்றி வருகின்றது. அத்தகைய கிராமங்கள் மனிதனுடைய இயல்பான வாழ்வையும், வாழ்க்கையின் எதார்த்தத்தைப் பிரிதிபலிக்கின்ற காலக்கண்ணாடியாகத் திகழ்கின்றது. வாழ்க்கை நடைமுறையும், பேச்சு வழக்குகளும், பழமொழிகளும், விடுகதைகளும், வழிபாட்டு முறைகளும், நம்பிக்கைகளும் விதைப்பது கிராமங்களேயாகும். இத்தகைய கிராமத்துப் பதிவுகளைச் சர்க்கரை எனும் நாவலில் எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி; குறிப்பிட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

நாட்டுப்புறமும் இலக்கியமும்
'கிராமம்' என்பது வேளாண் தொழிலையும், கால்நடை வளர்ப்பையும் கொண்டு பொருளாதாரத்தைப் பெருக்கி வாழக்கூடிய இடமாகும். இங்கு குழுவினரோடு வாழ்வதும், உற்றார் உறவினர்களோடும், உடன் பிறந்தோர்களுடனும் என வாழ்கின்ற நிலையே கிராம வாழ்க்கையாகும். இத்தகைய கிராமம் அல்லது குழுவில் ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்று பல்வேறு நிலைகளில் இருப்பதைக் காணலாம். மேலும், இவர்கள் பல்வேறு கலை இலக்கியங்களைப் படைக்கிறார்கள் என்பதையும் கிராம மக்களின் வாயிலாக அறியலாம். இப்படிப்பட்ட கிராம மக்களின் படைப்பிலக்கியங்கள் (folklore) நாட்டுப்புற இலக்கியங்களாக உருவெடுக்கின்றன என்பதை இதன் வழி அறிந்துகொள்ள முடிகின்றது. 'folklore'  என்ற சொல் 'மக்களுடைய அல்லது நாட்டினுடைய அல்லது ஒரு இனத்தினுடைய கற்றல் மற்றும் அறிவு-சிறப்பாகப் பழங்காலத்திலிருந்து வழி வழியாக வழங்கி வருகிறது' (ஆறு.இராமநாதன், நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகள், ப.8) என்ற பொருளினைக் கொண்டது என்று கூறப்படுவதை இதன் வாயிலாக அறியலாம்.

இன்றைய கிராமப்புறங்களையே நாட்டுப்புறம் என்று அழைக்கின்றோம். இம்மக்களுடைய இலக்கியங்களை நாட்டுப்புற இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்களையும் பண்பாடுகளையும் நம்பிக்கைகளையும் இலக்கியங்களையும் ஆராயும் இயலே நாட்டுப்புறவியலாகும். ஒரு நாட்டின் வாழ்வையும் வரலாற்றையும் குறையையும் நிறையையும் தெளிவாகக் காட்டுவன நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகும். இது மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், எண்ணங்கள் ஆகியவற்றை வெளிக்காட்டும் கண்ணாடி என்பர். நாட்டுப்புற மக்களது உணர்வுகளையும் கவிதை புனையும் ஆற்றலையும் கற்பனை வளத்தையும் நாட்டுப்புறப்பாடல்களிலே காணலாம். இம்மக்களிடையே வழங்கி வரும் மரபுகள், பழக்க வழக்கங்கள் முதலியனவும் அவர்கள் கூறுகின்ற பழமொழி, புதிர், கதை, பேச்சில் இடம்பெறும் மரபுத் தொடர்கள், கடைப்பிடிக்கக்கூடிய நம்பிக்கைகள், நோன்பு முறைகள் ஆகியவற்றை நாட்டுப்புற இலக்கியம் என்றே பொருள்கொள்கிறோம். இவைகள் ஏட்டில் ஏறாவிடினும் எழுத்திலே வாராவிடினும் பாட்டிலே இடம்பெறாவிடினும் நம் நெஞ்சிலிருந்து மட்டும் நீங்காது நிற்கும் எனக் கூறுவதன் மூலம் கிராம மக்களின் எளிமையான வாழ்க்கை முறையை வெளிக்காட்டும் இலக்கியம் என்றும், அம்மக்களுடைய உணர்வுகள், கற்பனை ஆற்றலை ஏட்டில் எழுதப்பெறாமல் மனதில் எழுதப்பட்டவையாக உள்ளதைக் காணலாம்.

இன்றைய காலத்தில் கிராம மக்களும் மாற்றத்தோடு வாழ எண்ணுகிறார்கள். இதனாலே அவர்களுடைய பாரம்பரியம் பண்பாட்டுச் சூழல் ஆகியவை மாறிவிடும் என்கிற அச்சம் நமக்குண்டு. இதனைக் கருத்தில் கொண்டுதான் புதின ஆசிரியர்; நாட்டுப்புறக் கூறுகளை நாவலில் பதிவு செய்திருக்கிறார் என்பதை இவ்விடத்திலே உறுதியாக எண்ணத்தோன்றுகிறது. அதனால்தான் இக்கால இலக்கியங்கள் பன்முகத் தன்மைக் கொண்டு இயங்குவதாக நம் கண்ணுக்குப் புலப்படுகின்றன.

ஆகவே, நாட்டுப்புற இலக்கியங்கள் கிராமங்களில் முகிழ்த்தவை என்றும், மனித சமூகம் தோன்றிய அன்றே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றியது என்றும் கிராம மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் பழமையான எண்ணங்கள் ஆகியவற்றை உணர்த்தும் காலக்கண்ணாடி என்றும், ஏட்டில் இல்லையென்றாலும் மனதில் நிற்பவை என்றும், எதிர்கால சமுதாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் தன்மை உடையது என்பதையும் மேற்கண்ட கூற்றுகளின் வாயிலாக அறிகிறோம். இவற்றின் அடிப்படையில் கிராமத்துச் சாயலை அடையாளப்படுத்தும் நோக்கில் சர்க்கரை என்ற புதினத்தை ஆசிரியர் படைத்திருக்கின்றார். இப்புதினத்தில் பழமொழி, நம்பிக்கைகள், நாட்டுப்புற மருத்துவம் முதலான நாட்டுபுறக் கூறுகளை நாவலாசிரியர் பதிவு செய்துள்ளார். இதனை நோக்கும்போது இப்புதினம் கிராமத்து நிகழ்வுகளையும், கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறையினையும் எடுத்தியம்புவதை அறிந்துகொள்ளமுடிகிறது.

பழமொழிகள்
அனுபவமே சிறந்த ஆசான் என்று கூறுவர். அந்த அனுபவத்தின் முதிர்ந்த கனியே பழமொழி ஆகும். பழமொழி என்பது பழங்காலத்திலிருந்தே மக்கள் மனதில் வாழ்ந்து வருபவை என்பதைப் பழமொழியிலுள்ள மொழி என்னும் சொல் உறுதிப்படுத்துகின்றது. சமுதாயத்தின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுக் கூறுகளையும் விளக்கும் சான்றாகவும் பழமொழிகள் திகழ்கின்றன என்று குறிப்பிடுவதிலிருந்து பழமொழியின் சிறப்பை அறிகின்றோம். இந்நாவலில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பழமொழிகள் பயின்று வருகின்றன. சுவை, விலங்கினம், பறவையினம், பொருட்கள், காய்கள், உணவும் உடையும் எனப் பலவிதங்களில் பழமொழிகள் அமைந்துள்ளன.

சுவை
சுவை குறித்த பழமொழியாக, 'காரமில்லா சாறுசட்டி நிறைய, யூகமில்லாத புள்ளைக ஊட்டு நெறையாங்கற மாதிரி.' (கு.சின்னப்பபாரதி, சர்க்கரை, ப.33) என்று அமைவதன் மூலம் சுவையில்லாத வாழ்க்கை ஏழை மக்களின் வாழ்க்கை என்பதை அறியலாம்.

விலங்கினம்
விலங்கினங்களைக் குறித்து, 'ஓநாய் புகுந்த ஆட்டுப் பட்டியை ஊக்காலிப்பயலால் குடும்பமே அழிந்துவிட்டதாகவும்' (கு.சின்னப்பபாரதி, சர்க்கரை, ப.39) என்பதும், 'வேட்ட நாய்க்கு மொசலக் கண்டா வேகம், மொசலுக்கு வேட்ட நாயக்கண்டா பயம்' (கு.சின்னப்பபாரதி, சர்க்கரை, ப.146) என்னும் பழமொழிகளைக் காணும்போது விலங்கினங்களை மட்டுமே பயன்படுத்தி சொல்லியிருப்பதைக் காணலாம். இதில் ஓநாய், ஆடு, நாய், முயல் போன்ற விலங்கினங்கள் இப்பழமொழிகளில் பயின்று வருவதைக் தெளிவாகக் காணலாம்.

பறவையினம்
பறவையினங்களைக் குறித்த பழமொழிகளாக, 'காக்கா மாதிரி கண்மூடற நேரத்திலெ சாப்பிட்டு முடுச்சிட்டீங்களே' (கு.சின்னப்பபாரதி, சர்க்கரை, ப.52) என்றும், 'பனிக்காலத்துக் கோழி மாதிரி எப்பொழுதும் பூமியெ கிளறிக்கொண்டிருந்தா வாழ்க்கையை எப்டி புரிஞ்சுக்கிறது?' (கு.சின்னப்பபாரதி, சர்க்கரை, ப.53) என்ற பழமொழிகள் பறவையினங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இவற்றில் காக்கையும், கோழியும் இடம்பெற்றுள்ளது.

பொருட்கள்
பொருட்கள் குறித்த பழமொழியும் கதையில் இடம்பெறுகிறது. அம்மி, உரல் போன்ற பொருட்கள் பயின்று வருவதைக் காணலாம். இதை, 'அம்மியிலே குத்தினா என்ன, ஆட்டொரலிலே குத்தினா என்ன, அரிசி நெல்லாகாச் சரி' (கு.சின்னப்பபாரதி, சர்க்கரை, ப.96) என்று அமைந்திருப்பதைக் காண்கிறோம். மேற்கண்ட பழமொழியினைப் போலவே, உடையும் உணவும், 'பட்டுன்னாலும், பஞ்சுன்னு சொல்லணும், பாலுன்னாலும் கூழுன்னு சொல்லணும்' (கு.சின்னப்பபாரதி, சர்க்கரை, ப.62) என்னும் பழமொழியில் பட்டும் பஞ்சும், பாலும் கூழும் என்று இரண்டு விதமாகச் சொல்லப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். இவ்வாறாகப் புதினத்தில் பழமொழியைப் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.

நம்பிக்கை
இப்புதினத்தில் நம்பிக்கைகள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. இதில் கிராம மக்கள் பழமை மாறாமல் நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய நம்பிக்கையைக் குறித்து, 'நிலத்துக்காரன் முன்னேர் ஓட்டினான். உழப் புறப்படும் பொழுதே முன்னர் மாடு நீர்பாய்ச்சலில் புறப்பட்டது. அது ஒரு நல்ல சகுணமாம். அப்படியான அதிர்ஷ;டம் ஒவ்வொருவருக்கும் கிட்ட வேண்டுமென்று விவசாயிகள் தாபத்தோடு எதிர்பார்த்திருப்பார்கள். அந்த அதிர்ஷடம் அவனுக்கு வாய்த்திருக்கிறது.' (கு.சின்னப்பபாரதி, சர்க்கரை, ப.59) என்னும் செய்தியில் உழவிற்குச் செல்ல தயாராகும் மாடு முதலில் நீர்க்குடிக்க இழுத்துச் சென்றால் அது நல்ல முடிவின் அறிகுறி என்று கிராமத்து மக்கள் நம்புகின்றனர். மேலும், 'ஒரு குடியானவெ தன்னோட வசதியை வெளிச்சம் போட்டுக்கிட்டான்னா லட்சுமி ஓடிப்போயி மூதேவி வந்துடும்பாங்க. பெருமையும் பீத்தலும் கொண்டவங்ககிட்டெ லட்சுமி ரொம்பநாளு குடியிருக்க மாட்டாளம்.' (கு.சின்னப்பபாரதி, சர்க்கரை, ப.62) என்னும் நம்பிக்கையில் பணக்காரன் ஒருவன் தன் வசதியை வெளிக்காட்ட முயன்றால் விரைவிலேயே அவனுடைய செல்வம் அழிந்துவிடும் எனும் நம்பிக்கை கிராமப்புறங்களில் உண்டு என்பதை சர்க்கரைப் புதினம் வெளிப்படுத்தி நிற்பதையும் காண்கிறோம்.

மருத்துவம்
ஒவ்வொரு மனித சமுதாயமும் தனக்கென ஒரு மருத்துவ அமைப்பு முறையைக் கொண்டுள்ளது. நோயும் மருத்துவமும் மனித இனப் பண்பாட்டு வரலாற்றில் பிரிக்க முடியாதவையாகும். நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுபுற மருத்துவம் என்பர். அதாவது 'தமிழக கிராமப் புறங்களில் நாட்டு வைத்தியம், கை வைத்தியம், பாட்டி வைத்தியம், மூலிகை வைத்தியம் என்றெல்லாம் கூறுவர். மிகப் பழமையான மருத்துவ முறை என்று ஆயர்வேத மருத்துவ முறையைக் குறிப்பிடுவர். நாட்டுப்புற மருத்துவம் அதர்வன வேத காலத்திலேயே நடைமுறையில் இருந்தது. அறிவியல் நாகரிக, இயந்திர வளர்ச்சி பெற்ற இக்காலத்திலும் கூட, கிராமப் புறங்களில் நாட்டுப்புற மருத்துவ முறை வழக்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது' (டாக்டர் சு. சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, ப.264) இதனையே இப்புதினம் கொண்டுள்ளது. அரிதினும் அரிதான கிராமத்து மருத்துவ முறைகள் இப்புதினத்தில் ஐந்திடங்களில் கையாளப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

கதையில் வீரன் என்பவன் கட்டிட வேலை செய்யும்போது காலில் புண்பட்டபோது மிகுந்த வேதனையடைந்தான். இதற்கு கந்தசாமி என்பவனின் மனைவி லட்சுமி என்பவள் நாட்டுப்புற மருத்துவம் ஒன்றை கையாளுகின்றாள். இதனை, 'இதுதா காயத்துக்கு ஏழைகளுக்கு கண்கண்ட மருந்து. இதெ காயத்துக்கு ஊத்தி வாழை மரத்துப்பாலெ துணியிலெ நனைச்சு கட்டிட்டோம்னா புண்ணு ஆறித்தா கட்டு நீங்கும். சீயோ, புண்ணோ ஒண்ணுமே ஏற்படாது. என்று கூறியபடி வாசலில் புழக்கடையில் இருந்த வாழைக்கன்றை வெட்டி வடிந்த பாலை வெள்ளைத் துணியால் நனைத்து எடுத்து வந்து காயத்துக்குக் கட்டுக் கட்டினாள்.' (கு.சின்னப்பபாரதி, சர்க்கரை, ப.145) என்ற செயலின் மூலம் நாட்டுப்புற மருத்துவத்தைப் பற்றி தெளிவாக அறியலாம்.

படைப்பிலக்கியங்கள் ஒவ்வொன்றும் ஓர் இனத்தை அடையாளப்படுத்தி நிற்பதோடு மட்டுமல்லாமல் அதனுடைய முன்னேற்றதையும் அழிவினையும்கூட தன்னுள் அடக்கிவைத்திருக்கின்றன. இவ்வகையில்தான் தற்கால படைப்பிலக்கியங்கள் அமைகின்றன. இக்கருத்திற்கு எடுத்துக்காட்டாக சர்க்கரை எனும் நாவலில் உள்ள கிராமத்துப் பதிவுகளைக் காண்கின்றோம். இந்நாவல் கிராமத்து மக்களுடைய பண்பாட்டை பிரதிபலித்து நின்றாலும், அம்மக்களுடைய வாழ்வாதாரம் பிற்காலத்தில் நகரத்தை நோக்கி நகரும் என்பதையும் நாவலாசிரியர் வெளிப்படுத்தாமலில்லை எனும் எதிர்காலச் சிந்தனையை விதைத்துச் செல்வதை கட்டுரைவாயிலாக அறியலாம்.

துணைநின்ற நூல்கள்
1. ஆறு.இராமநாதன், நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
2. டாக்டர் சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
3. கு.சின்னப்ப பாரதி, சர்க்கரை, நியு செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை.

*கட்டுரையாளர்: - முனைவர் த.லஷ்மி, துறைத்தலைவர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர்-635130 -