ஆய்வுக் கட்டுரை படிப்போமா?வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று வாழ ஒரு சமூகமானது நல்ல குடும்ப வாழ்க்கை உடையதாக இருக்க வேண்டும். அதற்கு முக்கியமான கருவியாக இருப்பவர்கள் பெண்கள். ஒருவன் பிறர் மதிக்கும் வகையில் பெருமையுடன் வாழ்ந்து மகத்தான சிறந்த குணங்களை உடையவனாக இருக்க வேண்டும். அத்தகைய உயர்ந்த குணங்களை உடையவனாக ஒருவனை உருவாக்குவது அவனுடைய மனைவியாகிய பெண் என்பவள் ஆவாள். பெண் வாழ்வின் உயர்ந்த இன்பத்தை வழங்குவதை அடிப்படை இலட்சியமாகத் மேற்கொள்கிறாள்.மனை என்ற சொல் ஆழமுடையது மனை என்பதற்கு வீடு மனைவி இல் இல்வாழ்க்கை அறம் ஒழுக்கம் என பலப்பொருள்களை கூறுகிறது சங்க இலக்கியம் மனை சமூகத்தின் அச்சாணியாக அமைந்திருக்கிறது அன்பே மனையின் அடிப்படை என கூறிய சங்க இலக்கியம் அன்புக்குரியவள் பெண் என்பதை அழுத்தமாக விளக்குகிறது.

அன்புதான் பெண்ணின் முழுவடிவம் என்பார் அண்ணல் காந்தியடிகள். பெண்ணின் பெருமையே அன்பில் அடங்கி வாழ்வதுதான் எனத் திருவிக கூறுவார். இத்தகைய பெரியோர்கள் எல்லாம் சிறப்பாகப்பெண்மையைப் பற்றி சிந்தித்து கூறுவதற்கு அன்போடு வழி திறந்து வைத்தவைச் சங்க இலக்கியங்கள் ஆகும். இத்தகைய பெண்ணியத்தின் மாண்புகளைச் சொல்லுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் பொருண்மையாக. அமைகின்றது.

மனையும் மனைவியும்
சங்க இலக்கியங்கள் சங்க மருவிய இலக்கியங்களில் உணர்த்துகின்ற வாக்கிலிருந்து மனைவியின் சிறப்பு சிறப்புக்குரிய பெண்ணின்பெருமை தெளிவாகிறது. மங்கலம் என்ப மனைமாட்சி என்று திருக்குறள் கூறுகின்றது. சிறப்புக்குரிய பெண்ணின் பெருமை இதன்வழி தெளிவாகிறது. மனைவியின் சிறப்பு வடிவமே மனை இயலாக வளர்ந்து வடிவெடுத்துள்ளது வாழ்க்கையின் குறிக்கோள்கள் குறிக்கோள்களை வகுப்பது இல்வாழ்க்கை ஆகும். வையத்துள் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கைக்கானக் கல்வியை அளிக்கும் முதலிடம் மனையாகும் .மனையும் மனைவியும்மக்களின் சாதனைகளும் தான் நாட்டின் முன்னேற்றத்தை அளக்கும் அளவுகோல்கள். அமைதி நிறைந்த சூழ்நிலையாகும். வாழ்க்கை முறையினை அமைத்துக் கொடுக்கும் பள்ளிதான் மனையாகும்.

டும்பமும் வாழ்வும்
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்று பாவேந்தர் பாட்டிசைத்தவகையில் மனையில் முதன்மை நிலையில் விளங்குபவள் இல்லத் தலைவி. பெண்களே குடும்பம் நல் மனையாக உருவாவதற்கு காரணமாகத் திகழ்கின்றனர்.

குடும்பத்தில் வாழ்கின்றோம் என்ற உணர்வு ஏற்படும் பொழுது ஒரு கட்டுப்பாடும் மற்றவர்களுக்காக வாழுகின்றோம் என்கின்ற எண்ணமும் உருவாகின்றது. இந்த எண்ணத்தை உருவாக்கும் பெரும் பணியில் மனைத் தலைவி தலைமை ஏற்கின்றாள். எனவே தான் தலைவியின் கீழ் மனை கடமைகள் மிகச்சிறப்பாக மலர்கின்றன.

மழலை வளர்ப்பு
பெண்களின் கடமைகளில் மிக முதன்மையானதாகக் கூறப்படுவது குழந்தை வளர்ப்பு. எதிர்காலத்தில் குழந்தையைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்கானப்பொறுப்பு முதலாவதாகத்தாய்க்கு தான் ஏற்படுகின்றது. இது இவள் கருத்தரித்த உடனே அமைகின்றது என்கிறார் லூயிறு சாப்ரிஸ்கி என்ற குழந்தை இயல் அறிஞர். குழந்தைப்பேறு இல்லாத மனை விளக்கம் பெறாத இருண்ட மனை யாகவே கருதப்படும். எவ்வகை செல்வங்களும் சிறப்புகளும் இருப்பினும் குழந்தை செல்வத்தையே இலக்கியங்கள் சிறப்பாகப் போற்றுகின்றன இதனை

"இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப
செருநறும் விழையும் வெயிந்தீர் காட்சிச்
சிறுவர்ப்பயந்த செம்மலோர்"

(கோசிகன் கண்ணனார்.அகநானூறு. பாடல் எண். 66)

என்கிறது அகநானூறு. இவ்விலக்கியதின் வழி குழந்தைச் செல்வத்தின் மேன்மையை நாம் அறிய முடிகிறது. இத்தகைய மேன்மையை உணர்ந்தவள் பெண் எனவே தான் பெண் குழந்தையை வளர்ப்பதில் சிறந்தவளாக அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வருகின்றாள் .

விருந்தோம்பல்
விருந்தோம்பல் என்பது தமிழர் உணவு இயலின் உயிர்நாடி விருந்து என்றால் புதுமை என்று பொருள். விருந்தினர் என்றால் புதியவர்கள் எனக்கொள்ளலாம். வறுமை உற்றவர்கள் தன்னிலையிலிருந்து வறுமை பட்டவர்கள் ஊர்விட்டு ஊர் வந்தவர்கள் இயலாதோர் போன்ற வரும் விருந்தினர்களே. இத்தகையோர் வீட்டின் புறத்தே இருக்க சாவா நிலை தரும் அமிர்தமே கிடைத்தாலும் தனியாக உண்ணாது விருந்தோம்பி உண்ணும் சிறப்புடைய காலம் சங்க காலம் .இதனை

"உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே "
(கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.புறநானூறு. (பாடல்.எண்.182)

என புறநானூறு சுட்டிக்காட்டுகிறது.

இதனையே திருக்குறள்

"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று "
(திருக்குறள்திருக்குறள். எண். 82)

என்று கூறுகின்றது. இத்தகைய சிறப்புக்குரிய விருந்து இல்லறத்தில் மனையாள் இருந்து செய்ய எல்லோருடைய மனதிலும் அமிழ்தாய் மனக்கின்றது.

இல்லறம் அல்லது நல்லறம் இல்லை என்று சொல்வார்கள் சான்றோர்கள் அத்தகைய இல்லறம் இனிது விளங்க அந்த இல்லறத்தில் இருக்கக்கூடிய இல்லவள் மாண்பு உடையவளாக இருந்தால் அது நல்லறமாக விளங்கும் என்பது இதன்வழி நாம் அறிய முடிகின்றது

சங்ககால மனையறம்
சங்ககால மகளிர் மனையறம் சிறக்க மாண்புடன் வாழ்ந்தனர். அவர்களுடைய சிந்தனைகள் மறுக்கப் படாமல் குடும்பத்தினரால் மதிப்புக்குரிய கருத்துகளாகப்போற்றப்பட்டன. இரவில் விருந்தினர் வந்தாலும் மனமகிழ்ச்சியுடன் விருந்தளித்து வந்த செய்தி அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என்ற நற்றிணையில் அறியலாம். கணவன் மனைவியால் அறிமுகப்படுத்தப் படுவான் ஆயினும் சற்று நாணம் கொண்டவள் ஆயினும் அதனையே பெரும் பேராகக்கருதுகிறாள். இதனைக் குறுந்தொகை

"அமிழ்து பொதி செந்நா அஞ்ச வந்த
வார்ந்து இலங்கு வை அயிற்றும் சீர்மொழி
பெறுகதில் அம்ம யானே அறிவைப் பெற்றங்கு
அறிகதில் அம்ம இம்வூரே மறுகில்
நல்லோன் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே"
(தொல்கபிலர்.குறுந்தொகை.எண்.14)

என்று கூறுவது சான்று ஆதாரமாக அமைகின்றது. இது மட்டுமல்லாது பரிசளிக்கும் உரிமையை மகளிர் பெற்று இருந்தனர் என்பதனை சாத்தனாரின் பாடல் வரிகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது இதனைப் புறநானூற்றில்

"கிழவன் சேட் புலம்படரின் இழை அணிந்து
பொன்தலை மடப்பிடி பரிலாகப்
பெண்டீரும் தம் பதம் கொடுக்கும்"
(பெருந்தலைச் சாத்தனார். புறம். பாடல் எண்.151,3,6)

என்ற வரிகளால் ஆய்ந்து உணரலாம்.

போர்க்களம் புகுதல் பெண்களுக்கு முறையல்ல எனினும் போர்க்களம் போவதற்கு ஆண்களை உருவாக்குதல் பண்டைத் தமிழ் மகளிரின் பண்பாகக் கருதப்பட்டது. போர்க்களத்தில் தன் மகன் புறமுதுகிட்டு ஓடினான் என்பதைவிட வீரமரணம் எய்தினான் என்பதனையே பெருமையாகக் கருதும் தாய்மார்களைப் பல்வேறு பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. சங்க இலக்கியத்தில்

"நரம்பு எழுத்து உலறிய நிரம் பாடுமண்தோள்
மூளிரி மருங்கின் முதியோன் சிறுவன்
படை அழிந்து மாறி என்று பலர்கூற
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனே"
(காக்கைபாடினியார் நச்செள்ளையார். புறம். பாடல் எண்.278)

என்ற புறப்பாடல் சான்றாக அமைகின்றது.

அன்னை ஓங்கிய சிறு கோலுக்கு அஞ்சி பாலுண்ட மகன் போர்க்களத்தில் மார்பில் தைத்த வேலை முன்னமே கண்டு இருப்பின் மேலும் ஒரு யானையைச் சாய்த்து இருப்பேன் என்று இறக்கும் தருவாயில் வீரம் பேசியதைக் கண்டு மகிழ்ந்த வீரமகளிரைப் புறம் 310 காணலாம். சிலப்பதிகாரத்தில் கண்ணகி நீதி கேட்டு பாண்டியன் அவைக்கு வந்த செய்தி அக்காலத்தில் நிலவிய பெண்ணுரியை நமக்குத் தெளிவுறுத்துகிறது. கணிகை குலத்தில் பிறந்த மாதவி சமூகத்தில் தன் இனத்தின் மீது திணிக்கப் பட்டிருந்த கீழ்த் த்தொழிலை விட்டு விலகி துறவரம் பூண்ட துணிவு அவளது பெண்ணுரிமை போற்றுவதற்கு சான்றாகும்.

பெண்மையின் வளர்ச்சியில் நம் பங்கு
அனைவரும் பெண்களின் சிறப்பை உயர்வை மகத்துவத்தை உணர செய்ய ஊர்தோறும் குழுவாகச் செயல்பட வேண்டும் .பல நூல் கல்வியும் நுணுகி ஆராயும் திறனும் செயல்முறை பயிற்சியும் பெண்களுக்குத் தேவை மாதர் நலப்பிரிவு என்ற அமைப்பின் வழி குழந்தை வளர்ப்புக் குழந்தைக் கல்வி பற்றிய அறிவைப் பெண்களுக்கு மேலும் அளிக்க வேண்டும். பன்முகத் திறமைகள் வெளிப்படும் அமைப்பில் பெண்களுக்கு என தனித்தனியாகப்பள்ளிகளும் கல்லூரிகளும் நாடுமுழுவதும் அமைக்க அரசு முன்வர வேண்டும் .

சட்டப் பாதுகாப்பை நடைமுறைப்படுத்த அரசுகள் ஆர்வம் காட்டவேண்டும் தொண்டு நிறுவனத்தால் செயல்படுவது செயல்படுத்துவதற்கும் ஊக்கமளிக்க வேண்டும். வீட்டை காத்து நாட்டுக்கு உழைத்து செயல்படும் மகளிர் சேவையை அனைவர் உள்ளத்திலும் பதிய வைக்கவேண்டும் பெண்மை மென்மை என்பதால் அடக்கி ஆளுதல் கூடாது. அடிமைப்படுத்தவும் கூடாது கருணை உள்ளம் கொண்டிருப்பதால் பெண்கள் மீது ஆண் ஆதிக்கம் மேலோங்க செய்தல் கூடாது விருந்தோம்பலுக்குப் பொருளுக்கும் பெண்கள் என்ற கருத்துடையவர்க்குப் பெண்மையின் மென்மையை உணர்த்த வேண்டும்.

சம உரிமை பங்களிப்பு ஏற்கும் தன்மை போன்றவற்றை ஆண்வர்க்கம் ஏற்கவேண்டும் அலட்சியப்படுத்துதல் கூடாது. இன்று பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து உள்ளதை மறுக்க இயலாது ஆகவே பெண்ணியம் போற்றுவோம் பெருமைதனை உணர்த்துவோம் எண்ணியே சாற்றுவோம் எழில் பெறவே வாழ்ந்திடுவோம்.

உறுதிப்பாடு
பெண் தன்னுடைய எண்ணம் செயல் முதலான ஒவ்வொன்றிலும் உறுதிப்பாட்டுடன் இருப்பாராயின் அப்பெண்ணை காட்டிலும் மேம்பட்ட ஒன்று உலகில் இல்லை என்பதனை திருவள்ளுவரின் திருவாக்கால் அறியலாம். "பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெண்ணும்

திண்மையுண் டாகப் பெறின்" (திருவள்ளுவர். திருக்குறள்.குறள் எண்.54) என்கின்ற இந்த திருக்குறளோடு இவ்வுலகில் அரியது ஒன்று உண்டு என்றால் அது பெண்தான் என்று கூறிய மகாத்மாவின் கூற்றும் ஒப்புநோக்க கூடியதாகும்.

கல்வி
சங்ககாலத்தில் ஆணுக்கு நிகராகப்பெண்களும் கல்வி பெற்று அறிவு உடையவர்களாய் அழகு தமிழ் மண்ணை அலங்கரித்தனர் . பின் பெண் கல்வி மறுக்கப்பட்டதன் விளைவாக தனிமனித வாழ்வு குடும்ப வாழ்வு நாட்டின் வளர்ச்சியும் சிதைந்து போயின. பின்னர்பாரதி பாவேந்தர் ஆகிய இருபெரும் கவிகளும் பெண்களுக்கு கல்வி அளிக்கப்படும் போது அவர்களால் எத்தகைய செயலையும் செம்மையுற செய்யமுடியும் என்று பறைசாற்றுவது காணமுடிகின்றது.பெண்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றால் ஒழிய நாம் தொலைத்த அடையாளங்களை மீட்டெடுக்க முடியாது என்று எனக் கருதிய பாரதி பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாடல் அடிகளை கூறிப் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தினார். மேலும் பாரதி பெண் கல்வி என்ற தலைப்பில் தான் பேசிய முதல் சொற்பொழிவில் ஆணும் பெண்ணும் சமம் பெண்ணுக்குக் கல்வி புகட்ட வேண்டும் என்ற உணர்வோடு பேசினார் . பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் கல்வி கற்க வேண்டும் பெண்கள் கல்வி கற்று முன்னேற்றத்திற்கு வராதவரை ஆண்கள் பெண்களைச் சரிசமமாக நடத்த மாட்டார்கள் . ஆண்களை விட பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் எழுத்து பேச்சு நடப்பு இவை அனைத்தும் மண்ணோடு மண்ணாகப்போக வேண்டும் பெண்கள் அச்சமின்றியும் அளப்பரிய பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் எனவும் பாரதி பாடினார். புதுமையும் புரட்சியும் மனதில் கொண்ட பெண்கள் மாதர றங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வோம்மடி பாரதிப்புதுமைப் பெண்களை தங்கள் வாயிலாகவே சொல்ல வைத்தார். நியாயமான நெறிகளைப் பின்பற்றி புரட்சி வாழ்வைப் புதுமை வாழ்வினைப் பெண்கள் கடைபிடிக்க வேண்டும் என்ற கருத்தினையும் வலியுறுத்தியுள்ளார் பாரதி .

பாரதியின் பாடல்களில் புரட்சியும் விழிப்புணர்வும் பெரும்பாலானப் பாடல்கள் அமைந்திருந்தன. அதுவும் குறிப்பாகப் பெண்களின் சுதந்திரம் உரிமைகள் கல்வி அவர்களது வாழ்வில் முன்னேற்றம் அச்சமின்மை விழிப்புணர்வுப் போன்றவற்றை குறித்த பாரதியின் சிந்தனைப் புரட்சிகரமானது என்பதில் ஐயமில்லை. ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ் வையம் தழைக்குமாம் ஒரு நாட்டில் ஆணும் பெண்ணும் சமமானவர்களாக மதிக்கப்பட வேண்டும். அப்படி யிருந்தால் அறிவில் சிறந்து இவ்வுலகம் வெற்றியடையும் என்ற பாரதியின் வாக்கினை ஏற்று பெண்மையை போற்றுவோம்.


அடிக்குறிப்பு

கோசிகன் கண்ணனார்.அகநானூறு. பாடல் எண் :66
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.புறநானூறு. பாடல் எண் :182

திருவள்ளுவர்.திருக்குறள். குறள் எண் :82
தொல்கபிலர். குறுந்தொகை.பாடல் எண் :14
பெருந்தலைச்சாத்தனார்.

புறநானூறு.பாடல் எண் :151

6.காக்கைபாடினியார் நச்செள்ளையார். புறநானூறு. பாடல் எண் :278

துணை நூல்கள்

1.அகநானூறு (மூலமும்-உரையும்) - (முதல் தொகுதி)
வர்த்தமானன் பதிப்பகம்
ஏ ஆர் ஆர் காம்ப்ளக்ஸ்
தியாகராய நகர்
சென்னை - 600017
ஆண்டு - 1999.


2. புறநானூறு (மூலமும் உரையும் - (முதல் தொகுதி)
வர்த்தமானன் பதிப்பகம்
ஏ ஆர் ஆர் காம்ப்ளக்ஸ்
தியாகராய நகர்
சென்னை - 600017
ஆண்டு - 1999.

3.புறநானூறு (மூலமும் உரையும் - இரண்டாம் தொகுதி)
வர்த்தமானன் பதிப்பகம்
ஏ ஆர் ஆர் காம்ப்ளக்ஸ்
தியாகராய நகர்
சென்னை - 600017
ஆண்டு -1 999.

4.குறுந்தொகை (மூலமும்உரையும்)
வர்த்தமானன் பதிப்பகம்
ஏ ஆர் ஆர் காம்ப்ளக்ஸ்
தியாகராய நகர்
சென்னை -600017
ஆண்டு - 1999.

5. திருக்குறள். திருநெல்வேலி தென்னிந்திய
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் .
154,டி.டிகே சாலை
சென்னை -600018
ஆண்டு - 2000.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.