ஆய்வு: சிலப்பதிகாரத்தில் பத்தினி வழிபாடு (12)

Saturday, 12 October 2019 00:53 - செ.மனோகரன், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, RKM விவேகானந்தா கல்லூரி, மயிலாப்பூர், சென்னை - 600 004 ஆய்வு
Print

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்ளூ ஊழ்வினை உருத்து-வந்து தன் பயனை ஊட்டும்ளூ உரைசால் பத்தினியை உயர்ந்தோர் போற்றுவர். இவை மூன்றும் சிலப்பதிகாரம் உணர்த்தும் பாவிகம் அல்லது உள்ளுறை என்கிறது சிலப்பதிகாரப் பதிகம்.பதிகம் கூறிய பாவிகப் பொருள்கள் மூன்றனுள் எஞ்சி நிற்கும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துதலே காப்பியத்தின் பாடுபொருள் என்பது தெளிவாகின்றது.

பத்தினித் தெய்வம்:
காட்சி, கால்கோள், நீர்ப்படை முதலிய முறைகள்ளூ வீரனுக்கு நடுகல் நடுதற்குரியவை, அவற்றை ஒரு பெண்மணிக்குத் தெய்வத் திருவுரு அமைப்பதற்குப் பயன்படுத்திப் பத்தினி வணக்கத்தைத் தமிழ்நாட்டில் காவியம் மூலம் தோற்றுவித்தவர் இளங்கேர் கோயில் மூலம் தோற்றுவித்தவன் சேரன் செங்குட்டுவன். பத்தினி வழிபாடு காப்பியத்தின் பாடுபொருளா எனக்  காணுதல் வேண்டும். கண்ணகி தெய்வ நிலையை நோக்கி வளர்ந்து செல்லுகின்றவள் என்பதைக் காப்பியத் தொடக்கத்திலேயே குறிப்பாகக் காப்பியப் புலவர் காட்டுகின்றார்.

'போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும்
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர் மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ'
(மங்கல வாழ்த்து : 1-26-29)


மங்கல வாழ்த்து முதல் வரந்தரு காதை வரை கண்ணகியைப் பத்தினி தெய்வமாக்கிக் காட்டுதலே இளங்கோவின் உட்கோளாகும் . அதனால், 'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்' என்பதே சிலம்பின் உயிரோட்டம் எனலாம்.
கண்ணகியைத் திருமகளோடும் அருந்ததியோடும் ஒப்பிட்டுப் பேசுவதும்,'மாதரார் தொழுது ஏத்துவதும்' பத்தினி வழிபாட்டை உட்கொண்டேயாகும். 'கண்ணகியை முற்கூறினார். பத்தினியை ஏத்துதல் உட்கோளாகலான்' என்பர் அடியார்க்கு நல்லார்.
கண்ணகி தெய்வநிலை அடையப் போவதை முன்னதாகவே அறிந்த சாலினி, தெய்வ ஆவேசமுற்றுக் கண்ணகியை நோக்கி,

'இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய
திருமா மணி ... ... ...
(வேட்டுவ வரி : 12-47-50)


எனப் போற்றுகின்றாள். இப்பகுதிக்கு உரை வரையும் அரும்பத உரையாசிரியர் கண்ணகியைத் துர்க்கையாகவே விளக்குகின்றார்.

அருக்க பரமேட்டியை அன்றி வேறு எவரையும் தெய்வம் என்று ஏற்றுக் கொள்ளாத கவுந்தி அடிகள், கண்ணகியையும் கோவலனையும் இடைக்குல மடந்தையாகிய மாதரியிடம் அடைக்கப்படுத்தும்போது கண்ணகியைத் தெய்வம் என்றே பாராட்டுகின்றார்.

'கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்'
(அடைக்கலக் காதை: 15-143-144)


மதுரை மக்களும் சினத்தோடு மதுரைத் தெருக்களில் வலம் வரும் கண்ணகியைக் கண்டு 'செம்பொற் சிலம்பு ஏந்திய தெய்வம்' ஒன்று வந்திருப்பதாக எண்ணுகின்றனர்.

பாண்டியன் அவையில் வழக்குரைக்கச் சென்ற கண்ணகியைப் பார்த்த வாயில் காவலன் கொற்றவை, காளி முதலிய தெய்வங்களின் வடிவமாகவே கண்ணகியைக் காண்கின்றான்,

'அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள்ளூ
அறுவர்க்கு இளைய நங்கைளூ இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்குளூ சூர்உடைக்
கானகம் உகந்த காளிளூ தாருகன்
பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள '
(வழக்குரை காதை: 20:34-40)


மதுராபதித் தெய்வம், கண்ணகியின் முன்னர் வந்து பேசுவதற்கு அஞ்சினவளாக கண்ணகியின் பின்னால் தொடர்ந்து வந்து கண்ணகியிடம் அவள் பழம்பிறப்பை எடுத்துக் கூறி அழல் வீடு பெறுகின்றது,

'வாரொலி கூந்தல் ! நின் மணமகன் தன்னை
ஈரேழ் நாள்அகத்து எல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவிற் காண்டல் இல்என
மதுரைமா தெய்வம் மாபத் தினிக்கு
விதிமுறை சொல்லி அழல்வீடு கொண்டது'
(கட்டுரை காதை : 23-173-178)


பூத்த வேங்கையின் நிழலிலே நின்றுகொண்டிருந்த கண்ணகி, மதுராபதித் தெய்வம் உரைத்தவாறு, பதினான்காம் நாள் தன் கணவனுடன் வானவூர்தியில் ஏறி, வானகம் செல்கின்றாள். குன்றக் குரவர் இக்காட்சியைக் கண்முன்னர்க் கண்டு வியந்து, கண்ணகியைத் தம் குடிக்குரிய தெய்வமாக ஏற்றுக்கொண்டு, அவளுக்கு விழா எடுத்து, குரவைக் கூத்து அயர்கின்றனர்,

(குன்றக் குரவை: 24 ஆம் காதை) கண்ணகியின் வரலாற்றைக் குன்றக் குரவர்களால் அறிந்த  இளங்கோ,

..... .... .... நம் அகல் நாடு அடைந்த இப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்'
(காட்சிக் காதை : 25-113-114)


எனச் செங்குட்டுவனை வற்புறுத்துகின்றான்.

செங்குட்டுவன் வடநாட்டின் மீது படையெடுத்துச் சென்று, தமிழ் மன்னர்களை இகழ்ந்த கனக விசயர்களைத் தோற்கடித்து, இமயத்தில் பத்தினிக்கல் எடுத்து, அதனைக் கங்கையில் நீராட்டி, வடிவமைத்து வஞ்சி மாநகரிலே பத்தினிக் கோட்டத்தை நிறுவுகின்றான்.

காப்பியத்தின் இறுதியில் பத்தினித் தெய்வம் செங்குட்டுவனுக்குக் காட்சியளிக்கின்றதுளூ பாண்டியனை வாழ்த்துகின்றதுளூ வஞ்சி மாநகரப் பெண்களைத் தன்னோடு விளையாட வருமாறு அழைக்கின்றதுளூ இறுதியில் செங்குட்டுவன் 'நீடுழி வாழ்க' என்று வாழ்த்துகின்றது.

செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் வகுத்து, பத்தினியின் நித்திய நைமித்திக வழிபாடுகளுக்கு வேண்டிய படிப்புறம் அளித்து, தேவியை மும்முறை வலம் வந்து, வணங்கி நிற்கின்றான். செங்குட்டுவன் எடுத்த பத்தினிக் கோட்ட விழாவில் கலந்து கொண்ட கடல்சூழ் இலங்கைக் கயவாகு உள்ளிட்ட மன்னர்கள் தாங்கள் எடுக்கவிருக்கும் பத்தினிக் கோட்டத்திலும் வந்து வீற்றிருக்க வேண்டுமென்று வணக்கத்துடன் பத்தினியை வேண்டுகின்றனர். அவர்களுக்கு அவ்வாறே செய்வதாகக் கண்ணகி வரம் அருளுகின்றாள்.

(வரம் தரு காதை : 30) தமிழ்ப் பெண்ணொருத்தி தன் கற்புத் திறத்தால் பார் தொழுது ஏத்தும் பத்தினியாக உருமாற்றம் (அநவழடஅழசிhயளளை) பெறுவதையே காப்பியப் புலவன் பாடுபொருளாக வகுத்துக்கொண்டான் என்பது தெளிவாகின்றது.
இளங்கோவடிகள் ஆதி முதல் அந்தம் வரை கண்ணகியைத் தெய்வப் பிறவியாகவே கருதுகிறார். புகார் காண்டத்துப் பன்னிரண்டாண்டு அகவையாள் கண்ணகி போதில் ஆர் திருவினளாகவும், புகழுடை வடிவினளாகவும், தீதிலா அருந்ததியன்ன கற்பினளாகவும் தெய்வத்திரு மகளாகவுமே இளங்கோவால் வருணிக்கப்படுகிறாள். காப்பியத்தின் தொடக்கத்தில் கணவனோடு காட்சியளிப்பவள், காப்பியத்தின் இறுதியிலும் கணவனுடனேயே வானகம் புக்கதாகக் காட்டப்படுகிறாள். இவ்விரு நிலையிலும் அவளைக் காண்போர் தெய்வ உருவாகவே காண்கின்றனர். இடைப்பட்ட மதுரைக் காண்டத்திலோ, எயினர் குலப்பெண் சாலினி என்பாள் இவளது தெய்வத் தன்மையைக் கண்டு போற்றுகிறாள்.

கவுந்தியடிகளோ, கண்ணகியையன்றி வேறு தெய்வமே இந்நீணிலத்தில் இல்லையென்று முடிவு செய்து விடுகிறார். அமைதியான சூழலில் திருமகளாய்த் தோன்றுபவள் அடங்காச் சினம் கொண்ட  நிலையில் கொற்றவைத் தெய்வமாகவே காட்சியளிக்கிறாள் என்பது மதுரை மக்களின் கூற்றிலிருந்தும், பாண்டியனது வாயிற்காப்போன் கூற்றினின்றும் பெறப்படுகின்றன. எனவே, கண்ணகியின் தோற்றமும் இயல்பும் தெய்வத்தன்மை பொருந்தியதாகவே இருந்து உடன் இருந்தோர்க்கெல்லாம் ஒரு வழிபாட்டுணர்வைத் தோற்றுவித்தது என்பது விளங்குகிறது.

உரையிட்ட இப்பாட்டுடைச் செய்யுளின் கருப்பொருள், உரைசால் பத்தினியாம் கண்ணகியை முத்தமிழ் நிலமும் தெய்வமாக்கி ஏற்றிப் போற்றிய செய்தியே ஆகும். கண்ணகி பத்தினித் தெய்வமாயினாள்;; சேர நாட்டில் மட்டுமின்றி இலங்கை உட்பட பிற நாடுகளிலும் கண்ணகிக்குக் கோயில் அமைத்து வழிபட்டனர். பெண்கள் கண்ணகி வழிபாட்டை மேற்கொண்டனர்.

கண்ணகியின் ஆற்றல் அவள் மதுரையை எரித்தபோது வெளிப்பட்டது. அவள் ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமையன்று மதுரையைத் தீக்கிரையாக்கினாள்.1 தமிழ்நாட்டுப் பெண்கள் அதனால் தான் வெள்ளிக்கிழமையைத் தமக்குகந்த நாளாகக் கொண்டனர் என்பர். ஊர்தோறும் உள்ள மாரியம்மன் கோயில்கள் கண்ணகி வழிபாட்டில் தோன்றியவை. ஒரு முலையிழந்த திருமா பத்தினியாதலால் மார்பு தெரியாமல் தலைவரை உருவம் வைத்து வழிபட்டனர் எனக் கூறுவர். மாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தில் விழா கொண்டாடுவதும், விழாவில் சிலம்பைக் கையில் ஏந்தி ஆடுவதும், கண்ணகியே காலப் போக்கில் மாரியாக மாறிவிட்டாள் என்பதை நிறுவும், திரௌபதை அம்மன் கோயிலில் நடைபெறும் தீ மிதிக்கும் திருவிழாவும் கண்ணகி மதுரையை எரித்ததை நினைவு கொள்ளும் விழா என்பது சிலர் கருத்து. 

இந்துக்களின் காளியும், துர்க்கையும் தாய்வழிச் சமுதாயத்தின் அடிப்படையில் அமைந்த மதச் சின்னங்களே ஆவர். கிறித்துவர்களின் மேரி, மகாயான பவுத்தர்களின் தாரா, ஜைனர்களின் சக்ரேஸ்வரி எல்லோருமே புராதன அன்னையின் அடையாளச் சின்னங்களே ஆவர். 2 என்பர் ராகுல் சாங்கிருத்தியாயன்.

சங்ககால வீழ்ச்சிக்குப் பிறகு, தமிழகத்திலே ஏற்பட்ட சமூக, அரசியல் பண்பாட்டுச் சீர்குலைவுகளின் போது, மீண்டும் தமிழர் தம் இன அடையாளங்களை ஒருமைப் படுத்தி வளர்த்தெடுக்கும் ஒரு முயற்சிக்கு ஓர் அரசியலுக்குச் சிலம்பு எனும் காப்பியப் பனுவல் ஒரு குறிப்பானாக நிற்கிறது. 3 என்பது தி.சு.நடராசன் கருத்து.

கண்ணகி வழிபாட்டை இலங்கை மக்கள் பத்தினி வழிபாடு என்பர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வோர் ஊரிலும் கண்ணகிக்குக் கோயில்கள் இருந்தன. அங்கெல்லாம் கூளுத்திப் பாடல்கள், கொழும்புப் பாடல்கள், வசந்தன் கவிகள், உடுக்குச் சிந்துப் பாடல்கள் எனப் பாடப்பட்டன. கண்ணகி பற்றிக் கதையாகவும், கதைப் பாடலாகவும், கூத்தாகவும் வழங்கியவற்றைத் தாயம்மாள் அறவாணன் (கண்ணகி மண்ணில் 2003) பதிவு செய்துள்ளார்.

கண்ணகி வழிபாடு பெயரளவில் மாற்றம் பெற்று செயலளவில் ஒன்றுபட்டுத் தமிழகத்தில் மாரியம்மனாக, வட்டபுரியம்மனாக, ரேணுகையாக, திரௌபதியாக, கேரளத்தில் பகவதியாக, கர்நாடகத்தில் மங்கல தேவியாக, இலங்கையில் கண்ணகியாக, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மாரியாக நடத்தப்பட்டு வருகின்றது என்ற ஆய்வில் ம.பொ.சி.யின் பங்கு இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

'தேசத்திலுள்ள பல்வேறு பிரிவினை ஒன்றுபடுத்திக் காட்டுவதுதான் தேசியமென்றால், அந்தத் தேசியத்தைப் பாடிய முதற் கவிஞர் இளங்கோவடிகளேயாவார்.' 4 என்பர் ம.பொ.சிவஞானம்,இதன் மூலம் தாய் தெய்வ வழிபாட்டிற்கு அடிகோலியவர் இளங்கோவடிகளே என்பது 'பத்தினி வழிபாட்டின்' மூலம் நிரூபணமாகிறது.

அடிக்குறிப்பு :
1. சமயம் தந்த காப்பியத் தமிழ் - பூவண்ணன், பக்கம்-37
2. விஞ்ஞான லோகாயதவாதம் - ராகுல் சாங்கிருத்தியாயன், பக்-54
3. தமிழின் அடையாளம் - தி.சு.நடராசன் - பக் -31,32
4. சிலப்பதிகார ஆய்வுரை - ம.பொ.சி, பிப்ரவரி 1979, பக்-8

பார்வை நூல்கள்:
*சிலப்பதிகார ஆய்வுரை - ம.பொ.சிவஞானம், பிப்ரவரி 1979
*சிலப்பதிகாரம் - முனைவர்.ச.வே.சுப்பிரமணியன், மார்ச் - 1998
*சமயம் தந்த காப்பியத் தமிழ் - பூவண்ணன், டிசம்பர் - 1992
*தெய்வக் கற்பினள் - பேரா.இரா.மணிமேகலை-2003
*சிலம்புவழிச் சிந்தனைகள் - சரளா. ராசகோபாலன்-டிசம்பர்-1989

* கட்டுரையாளர்: செ.மனோகரன், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, RKM விவேகானந்தா கல்லூரி, மயிலாப்பூர், சென்னை - 600 004

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 12 October 2019 01:03