ஆய்வு: 'மானவர்மன்' வரலாற்று நாவலில் தமிழர் உணர்வு (6)

Tuesday, 08 October 2019 06:19 - முனைவர் வ.கோபாலகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் - ஆய்வு
Print

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


நாவல் படைப்பதற்கென்று தனிப்பட்ட மரபு முறைகளை இலக்கிய உலகம் வகுத்தமைத்துள்ளது. வரலாற்று நாவலைப் படைக்கும்போது மொழிக்குரிய பற்றுணர்வும்  தேவைப்படுகின்றது. அதாவது இலக்கிய பெயர்கள், இலக்கிய வசன நடை அமைப்பு, அகம் மற்றும் புறம் குறித்த செய்திகள் ஆகியவற்றைக் கொண்டு வரலாற்று நாவலை பெரும்பாலான படைப்பாசிரியர்கள் படைக்கின்றனர். அதேபோல மானவர்மன் என்னும் இவ்வரலாற்று நாவலிலும் ஒற்றுமை, வெற்றி பெறுதல், எதிரியைக் கண்டு அஞ்சாது எதிர்த்து நின்றல் முதலான தமிழர்களின் உணர்வு குறித்த செய்திகளை ஆசிரியர் உதயணன் அமைத்துள்ள விதத்தைக் கண்டறிந்து கூறுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழர் உணர்வு

மனித இனம் மொழிவுணர்வு கொண்டவையாகத் திகழ வேண்டும் எனப் பல்வேறுபட்ட அறிஞர்கள் தங்கள் எண்ணத்தில் ஒரே போல எடுத்துக்கூறி நின்றதைக் கண்டுணர்ந்துள்ளோம். அவ்வாறு இருப்பதனால்தான் தத்தம் படைப்புகளில் கூட தமிழர் என்ற உணர்வு மேலோங்கி நிற்கின்றது. இன்றைய காலத்தில் மட்டுமல்லாமல் அன்றைய காலத்திலிருந்தே இந்நிலை தொடர்கிறது. கவிஞர்கள், கதையாசிரியர்கள் என அனைவரும் ஒரே பாதையில் பயணிக்கின்றனர். இத்தன்மையைப் பற்றி, 'தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவற்கோர் குணம் உண்டு, அமிழ்தம் அவனுடைய வழியாகும், அன்பே அவனுடைய மொழியாகும்' (நாமக்கல் வெ.இராமலிங்கம், நாமக்கல் கவிஞர் கவிதைகள், ப.71) மேலும், 'தமிழுக்கு அமுதென்று பேர்-அந்தத் தமிழ் எங்கள் உயிர்' (கல்பனாதாசன், பாரதிதாசன் பாடல்கள், ப.85) என்று கவிதைகளின் பாடியிருப்பதற்கேற்ற வகையில் படைப்பாளிகளும் திகழ்கின்றனர்.

ஒற்றுமை உணர்வு

உதயணன், மானவர்மன் (வரலாற்று நாவல்)

நாவலில் ஒற்றுமை, வெற்றி பெறுதல், எதிரியைக் கண்டு அஞ்சாது எதிர்த்து நின்றல் முதலான தமிழர்களின் உணர்வு மிகச் சிறப்பாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. இந்நாவலில் தமிழர்களின் தலைச்சிறந்த தலைவனாகத் திகழ்பவன் பொத்தகுட்டன் என்பவனாவான். இவன் தமிழர்களிடம் ஒற்றுமை உணர்வு மிக அவசியம் என்னும் கருத்தினை தமிழ் மக்களிடம் எடுத்துக் கூறுவதை நாவலில் காணமுடிகிறது. இதனை, 'அதைத் தானே இன்னும் செய்து கொண்டிருக்கிறோம் நீங்களெல்லாம் வேற்றுமையை மறந்துவிட்டீர்கள் என்பது உண்மையானால் இதோ முன்னாலே அமர்ந்திருக்கும் ஐவர் தலைக்கிரீடங்களை அணிந்திருக்கிறார்களே அது ஏன்? அவர்களுக்குத் தாங்கள் தலைவர்கள் என்ற நினைப்பு இருக்கிறது என்று தானே பொருள்? ஐந்து பேரைத் தவிர மற்றவர்கள் தலைவர்கள் அல்ல என்பது தானே அர்த்தம்? இதுதான் ஒற்றுமையா? இனத்தால்,  பழக்கவழக்கங்களால் மாறுபட்டுக் கிடந்தாலும் மொழியாய் நாம் ஒன்றுபட வேண்டும். நாம் தமிழர் என்ற உணர்வு மட்டுமே நம்மிடம் இருத்தல் வேண்டும்' (உதயணன், மானவர்மன், பக்.3-4) என்று தன்னுடைய தமிழ் வீரர்களிடம் கூறுவதைக் காணும்போது ஒற்றுமையுணர்வு கொண்டவர்களாகத் தமிழன் திகழவேண்டும் என்னும் மேலான உணர்வை பொத்தகுட்டன் தன் வீரர்களுக்கு அறிவுறுத்துவதைக் கதையில் காண்கிறோம்.

பொத்தகுட்டன் அவ்வாறு கூறியதற்கு தமிழர்களும் பதிலுரைக் கூறுகின்றனர். அவர்களின் பதிலானது தமிழர்கள் மேலானவர்கள் எனும் கருத்தை வலியுறுத்திக் கூறுவதைக் காணமுடிகிறது. இதை, 'அதையடுத்து அந்த ஐவரும் தங்களது மகுடங்களைக் கழற்றிப் பொத்தகுட்டன் காலடியில் வைத்து, ஐயா, இப்போதாவது எங்கள் ஒற்றுமையை நம்புங்கள். நாங்கள் அனைவரும் சமம். எங்களுக்கு நீங்கள் மட்டுமே தலைவர். தமிழர் உயர்வுக்காக நிமிர்ந்து நிற்பதே எங்கள் லட்சியம். உங்கள் ஆணைக்குக் கட்டுப்படுகிறோம்.' (உதயணன், மானவர்மன், ப.4) எனக் கூறுவதையும் கதையின் வழிகண்டு உணரலாம். ஆகவே, தமிழன் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற நோக்கில் செயல்படுகின்றனர் எனும் கருத்தை நாவல் வலியுறுத்திச் செல்கிறது.
தன்னம்பிக்கையை இழக்காதவன்

நாவலில் பொத்தகுட்டன் என்பவன் தலைவனாக இருந்தாலும் அட்டதிட்டன் என்பவனைக் கொண்டே சிங்களர்களை விரட்டவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவன். தமிழர்கள் இலங்கையை அடைய எவ்வாறெல்லாம் பாடுபட்டனர் என்பதனை அட்டதிட்டன் மனதில் உரமாக விதைக்கிறான். இந்த உரமே மாபெரும் சக்தியாக அவனுள் வளர்கிறது. இக்கருத்தானது நாவலில், 'நல்ல கேள்வியைத்தான் கேட்டாய் அட்டதிட்டா. நான் மட்டுமல்ல என் மூதாதையர்கள் பலரும் முயன்று தோற்றவர்கள் தான். அதற்குக் காரணம் அனைவருமே தனி மனிதர்களாக முயன்றதுதான். சிங்களர் என்பது தனி ஒரு சிங்கமல்ல போராடி வெற்றி கொள்வதற்கு. அது சிங்கங்களும், சிறுத்தைகளும், ஓநாய்களும் நரிகளும் சேர்ந்த ஒரு காட்டைப் போன்றது. கோட்டை கொத்தளங்களையும் படைகளையும் பாதுகாப்பு அரண்களையும் கொண்டவர்கள் அவர்கள்.' (உதயணன், மானவர்மன், ப.36) என்று சிங்களர்களின் வலிமையைப் பற்றி பொத்தகுட்டன் அட்டதிட்டனிடம் கூறுகிறான். மேலும், 'அவர்களை எதிர் கொள்ள ஓர் ஆள் முயன்றால் போதாது. ஓர் அணி திரள வேண்டும். அது பேரணியாக இருக்கமுடியும் அப்போதுதான் அவர்களை அசைக்க முடியும். இதை நீ நன்றாக நினைவில் வைத்துக்கொள் மகனே என்னைப் போல் நீயம் தனி மனிதனாகப் போராடி வீணாகப் போய்விடக்கூடாது. நாம் உயிர்த்தியாகம் செய்கிறோம் என்றால் அது சிங்களவரை அழித்துவிட்டு நடக்கவேண்டும். இதை மறந்து விடாதே' (உதயணன், மானவர்மன், ப.36) என்று தன்னம்பிக்கையை ஒருபோதும் நாம் இழக்கக்கூடாது என்னும் கருத்தை அட்டதிட்டனுக்கு வலியுறுத்திக் கூறுவதையும் கதையின் வாயிலாக உணரலாம்.

தமிழர் எண்ணம்
இலங்கை எனும் தமிழ் மண்ணிற்கு அயல் நாட்டிலிருந்து வந்தவனை அன்றைய காலம்தொட்டு தமிழன் விரட்ட எண்ணி உள்ளான். இதனைக் குறித்து, 'இலங்கை நமது தாய் நாடு. தாய்நாட்டை அதன் மைந்தர்கள் ஆளவேண்டுமே தவிர எங்கிருந்தோ வந்தவர்களெல்லாம் ஆளக்கூடாது. இங்கேயே பிறந்து தமிழர்களாக இங்கேயே வாழ்ந்து இங்கேயே நாம் பிராணிகளைப்போல மடிந்து கொண்டிருக்க, எங்கிருந்தோ வந்த அயலார்கள் அமர்ந்து கொண்டு நம்மை அடிமைகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது உங்களுக்கெல்லாம் சம்மதமா?' (உதயணன், மானவர்மன், ப.10) என்று தமிழ் வீரர்களிடம் பொத்தகுட்டன் வீர உணர்ச்சியைத் தட்டி எழுப்பிவிடுகிறான். இந்தளவிற்கு வரலாற்றுக் காலந்தொட்டு தமிழர் சிங்களர் இடையே போர் நிகழ்ந்தாலும் இன்று வரை வெற்றி பெற முடியவில்லை. அதே போல தமிழன் இலங்கை மண்ணில் எப்பொழுது வெற்றி பெறுகிறானோ அப்பொழுதுதான் திருநாள் என்று வலியுறுத்துவதை, 'இந்தநாடு சிங்களர்களிடமிருந்து என்றைக்கு விடுதலை பெறுகிறதோ அன்றைக்குத்தான் நமக்குத் திருநாள். அதுவரை நீ எந்த நாளையும் திருநாளாகக் கொண்டாடக்கூடாது.' (உதயணன், மானவர்மன், ப.35) என்பதை மானவர்மன் நாவலில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

வெற்றி உணர்ச்சி
சிங்கள எதிரிகளுக்குப் பேருருவமாகவும் தீப்பொறியாகவும் தமிழன் செயல்பட வேண்டும் என்பதையும், 'அட்டதிட்டா! உன்னை இருண்டு கிடக்கும் உதய சூரியனாகக் கருதுகிறேன். உதய சூரியனான உன்னை மேகங்கள் மறைக்கலாம். நீ சோர்ந்து விடக்கூடாது. மேகங்களைக் கண்டு கதிரவன் கலங்குவதில்லை, அதுபோல நீ ஆரம்பத் தோல்விகளை மேகங்களாகக் கருதி கதிரவனைப் போல ஒளிப்பிழம்பாக நிற்க வேண்டும். உனது கதிர்கள் சிங்கள வரை எரிக்கும் வரை ஓயக்கூடாது. செய்வாயா?' (உதயணன், மானவர்மன், ப.37) என்று மிகச்; சிறந்த உத்வேகத்தையும் சீரிய உணர்வையும் தருகிற வகையில் தமிழன் தமிழனுக்கே உணர்ச்சியை ஊட்டுவதை நாவலில் தெளிவாகக் காணலாம்.

பொத்தக்குட்டன் அட்டதிட்டனுக்கு வீரத்தை ஒரு முறைக்கு இருமுறை ஊட்டி ஊட்டி மிகப் பெரிய வீரனாக மாற்றிவிட்டான். இதன் பயனாக அட்டதிட்டனும் இலங்கையைச் சேர்ந்த சிங்கள அரசனுக்குரிய அனுராதபுர கோட்டையைக் கைப்பற்றி விடுகிறான். அவ்வாறு கைப்பற்றியதனால் அவனை தமிழினமே கொண்டாடுவதைக் கதையில் தௌ;ளத் தெளிவாகக் காண்கிறோம். இதனைப் பற்றி, 'குடிமக்களே! இந்நாள் தமிழருக்கே திருநாள். நமது மண்னை நமது இனமே ஆளும் உரிமையைப் பெற்ற அரியநாள். அரியணையில் அமர்ந்துள்ள அட்டதிட்டன் தட்டோபதிஸ்ஸன் என்ற பட்டப் பெயரோடு தமிழ் மன்னனாகவும் உதய சூரியனாகவும் இருந்து ஒளி வீசுவான். வாழ்க தமிழ். வாழ்க தமிழ் ஈழம் என்று கூறி மலர்களைத் தூவினான் பொத்தகுட்டன்.' (உதயணன், மானவர்மன், ப.71) என்ற கூற்றின் மூலம் மேற்கண்ட கருத்தினை தெளிவாகப் பொருத்தி காணலாம்.

எதிரியை எதிர்க்கும் ஆற்றல்
தமிழர்களின் பரம்பரை எதிரியாக விளங்கும் சிங்களனான மானவர்மனை நேரில் கண்டபோது பொத்தகுட்டனுக்கு சொல்ல முடியாத தமிழின உணர்வு பீறிட்டு எழுவதையும் கதையில் அந்தந்த இ;டங்களில் காண்கிறோம். இத்தகைய தன்மையினைப் பற்றி, 'தர்மத்தைப் பற்றி பேசுவதற்குச் சிங்களருக்குத் தகுதியில்லை மானவர்மா. உன் தந்தை கஸ்ஸிபன் என்ன செய்தான் தெரியுமா? சிங்களத்தில் தமிழர்களின் இருப்பது பிடிக்காமல் தினந்தோறும் ஒரு தமிழனைக் கொல்ல சிங்களர்களுக்கு உத்தரவிட்டான். அந்தக் கொலைகளுக்கு விசாரணைகளோ தண்டனைகளோ கிடையாது என்று அறிவித்தான். அதையடுத்து அப்பாவித் தமிழர்களைச் சிங்களர்கள் கேள்வி முறையின்றிக் கொன்று குவித்தார்கள். இது எந்த தர்மத்தைச் சேர்ந்தது மானவர்மா? நானும் உன் தந்தையைப் போல பழிக்குப்பழி வாங்க எண்ணியிருந்தால் அட்டதிட்டனை அரியணையில் அமர்த்திய கையோடு இந்தப் பதினான்கு ஆண்டுகளில் சிங்களர் இனத்தைப் பூண்டோடு அழித்திருப்பேன். அப்படிச் செய்யவில்லை. மக்கள் எப்போதுமே எதிரிகள் அல்லர். பகைமை என்பது மன்னர்களுக்கிடையேதான். அந்த வகையில் என் எதிரி சிங்கள ராஜவம்சம் தான். அதில் இருந்த எல்லோரும் என் முயற்சி இல்லாமலேயே அழிந்து விட்டார்கள். தப்பியது நீ மட்டும் தான். இத்தனை ஆண்டுகளாகக் கண்ணில் படாமல் இருந்த நீ நேற்று எனது ஆட்களின் கண்களில் பட்டாய். அவர்கள் கோட்டை விட்டுவிட்டார்கள். நானோ கோட்டைவிட்ட இடத்தை ஆராய்ந்தேன். மலைக்குகையைக் கண்டேன். அது இங்கே வழிகாட்டியது. வந்தேன் மானவர்மா. நீ ராஜகுமாரன். உன்னைக் கட்டிப்போட்டு கொலை செய்ய நான் கருதவில்லை. என்னோடு போரிடு. போரில் உன்னைக் கொன்று விட்டு இங்கேயே எரித்துச் சாம்பலை இந்த மலையில் தூவுகிறேன் என்று கூறிய பொத்தகுட்டன் வாளை உருவினான்.' (உதயணன், மானவர்மன், ப.88) இச்செய்தியைக் காணும்போது தமிழனுக்குள் ஊறி இருந்த வெறிதனத்தைப் பொத்த குட்டனிடம் காணமுடிகிறது. காரணம் சிங்களன் தமிழனை மிக வெறித்தனத்தோடு கொன்றான். அதற்கு எந்தவொரு விசாரணையும் கிடையாது. இதனைக் கண்ட தமிழர்கள் தங்களுக்கென்ற தனிநாடு வேண்டும் என்று அப்போதிருந்தே போராடினர். அப்போராட்டத்தின் விளைவே இத்தகு வீர உரையாகும் என்பதை மேற்கண்ட கூற்று உணர்த்தி நிற்கிறது.

மானவர்மன் வரலாற்று நாவலின் மூலமாக ஒற்றுமை உணர்வு, தன்னம்பிக்கையை இழக்காதவன் தமிழன், தமிழர் எண்ணம், வெற்றி உணர்ச்சி, எதிரியைக் கண்டு அஞ்சாது எதிர்த்து நின்றல் முதலான கூறுகள் தமிழர் உணர்வுகளாகக் கொண்டு படைத்திருக்கும் ஆசிரியரின் உத்தி தாய்மொழிக்குரிய பற்றுணர்வை புலப்படுத்தும் பாங்கில் அமைந்திருப்பதைக் கட்டுரை வாயிலாக மிகத் தெளிவாக அறியலாம்.

துணைநின்ற நூல்கள்
1. நாமக்கல் கவிஞர் கவிதைகள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை-17.
2. கல்பனாதாசன், பாரதிதாசன் பாடல்கள், பாவை பிரிண்டர்ஸ் (பி) லிமிடெட், சென்னை-14.
3. உதயணன், மானவர்மன் (வரலாற்று நாவல்), சீதை பதிப்பகம், சென்னை-98

*கட்டுரையாளர்: முனைவர் வ.கோபாலகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர்-635130

அனுப்பியவர்: முனைவர் வே.மணிகண்டன் - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 08 October 2019 06:40