- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -பொதுவாகக் காலக் கணிப்பு என்பது அற்றைவாழ் சமுதாயப் போக்கை, நிகழ்வுகளை ஒட்டி நிருணயம் செய்யப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டு என்பது அக்காலச் சூழல், நிகழ்வுகளை ஒட்டி முக்கூறு பெற்றதாகத் தோற்றம் தருகிறது. முதற்பகுதி அந்நியர் ஆதிக்கத்தின் தாக்கத்தால் உருவான விடுதலை உணர்வுக்கான வேட்கையின் எழுச்சிக்காலம், இடைப்பகுதி வேட்கையின் தாகம் தணிவு பெறாத நிலை பிற்பகுதியோ புதிய சூழல், அறிவியல் கண்டுபிடிப்புக்களால் உருவான பல்வேறு வகையான போராட்டத்தின் உச்சகாலம். இக்கால இடைவெளியில் உருவான கண்ணதாசன் கவிதைகளுள் காணப்படும் பக்தி தொடர்பானவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

கண்ணதாசன்
இவரின் வாழ்வமைப்பு என்பது ஒரே சீருடைத்தாகக் காணப்படவில்லை. காலச் சூழலுக்கும், தன் சூழலுக்கும் ஒப்ப இவரின் கவிதைகள் கருத்தாக்கம் பெற்றுள்ளன. நாத்திகவாதியாக, ஆத்திகவாதியாக இருவேறுபட்ட முரண்பட்ட நிலைகள் இவரில் காணப்படுகின்றன. இறுதி நிலைக்கவிதைகள் கடவுள் நம்பிக்கையில் உறுதிகொண்ட போக்கில் அமைந்து சிறக்கின்றன. இக்காலச் சூழலில் எழுந்த ஸ்ரீவெங்கடேச சுப்ரபாரதம், ஸ்ரீவெங்கடேச ஸ்தோத்திரம், ஸ்ரீவெங்கடேச ப்ரபத்தி ஆகிய மூன்று கவிதை நூல்களும் ஆய்வுக்குட்படுகின்றன.

பாடுபொருள்
கவிஞனின் படைப்புகளில் அவன் வாழ்கின்ற காலத்தின் தாக்கம், சுயவாழ்வின் நிகழ்வுகள் ஆங்காங்கு அவனையறியாமல் பிரதிபலிக்கும். கண்ணதாசன் கவிதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆயினும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மூன்று கவிதைகளிலும் இவரின் சமகாலத்தாக்கம் என்பது காணப்படவில்லை. ஒரு நூல் எத்தகைய பொருட் சிறப்பு மிக்கதாக இருந்தாலும் வீடுபேறு அடைவதற்குரிய சமய உணர்வினைப் பெற்றதாக இல்லாவிட்டால் அந்நூல் ஒரு சிறந்த நூலாக மதிக்கப்படாது.  இதனை,

“அறம் பொருளின்பம் வீட்டைதல் நாற்பயனே”1

என்பதனால் உணரலாம்.  மக்கள் வாழ்வின் குறிக்கோள் வீடுபேறு அடைவதாகும்.  அவ்வீடுபேற்றினை அடைவதற்கு அடிப்படையாக அமைவது சமய உணர்வாகும்.  இச்சமய உணர்வினை,

“சமயம் என்பது மனிதனுக்கும், மனித நிலைக்கும் மேற்பட்டதாக உள்ள ஆற்றலுக்கும் உள்ள தொடர்புகள் பற்றிக் கூறுவது.  சமயம் என்பதே புலன் உணர்வுக்கு அப்பாற்பட்ட பரம்பொருளின்பால் மனிதனுக்குள்ள நம்பிக்கைதான்”2 என்பர்.

 

முழுமையான கருத்தொருமிப்பு, இறைச் சிந்தனை தொடர்பான தன்நிலை, சரணாகதித்துவம் ஆகியனவே கவிதைகளை ஆட்கொண்டுள்ளன. கண்ணனிடம் கொண்ட ஈடுபாட்டில் அவனுக்கே தன்னை, தன் எழுத்துக்களை அர்பணித்த நிலை,

1.    இறைவன் பெருமை
2.    பக்தியில் தன்நிலை
3.    பக்தியில் சமுதாயம்

என்று முப்பரிமாணங்களோடு பிற சிந்தைக் கலப்பில்லாத நிலையில் பாடற் கருத்துக்கள் ஏற்றம் பெறுகின்றன.

இறைவன் பெருமை
வெங்கடேசப் பெருமானின் தோற்றம், அவன் அருள் செய்யும் திறம், வணக்கத்திற்குரிய உயர்வு ஆகியன இறைவனின் பெருமைகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

வெங்கடேசப் பெருமாள்,
“உலகயாளும் உத்தமத் தலைவன்”        
“உலகைப் படைத்த உன்னதத் தலைவன்” 3

இவன் தனக்குத் தானே நிகரானவன். அவனுடைய திருவடி மட்டுமே இனிமையுடையது, அதற்கு நிகர் எதுவுமே இல்லை என்பதை,

“இனியவையன்றோ இனியநின் திருவடி
ஈடேதையா இணையேதையா
வலக்கால் தனக்கு இடக்கால் ஈடு
ஒன்றுக்கொன்றே உவமைகள் அன்றோ
............................... திருவடி சரணம்” 4

என்ற வரிகளில் உணர்த்துகின்றார்.

பிற கடவுள்களினும் உயர்ந்தவன்
ஸ்ரீவெங்கடேசுப்ரபத்தியில் வெங்கடேசனே சிறந்தவன், உயர்ந்தவன் ஈடு இணையற்றவன் என்றெல்லாம் சரணாகதி நிலையில் பாடியவர், சுப்ரபாதத்தில் பிற கடவுளர்களைவிட திருமாலே உயர்ந்தவர் என்பதைப் புலப்படுத்தியுள்ளார். சுப்ரபாதத்தின் 16-ஆம் பாடலில், சிவன், பிரம்மாவுடன் இந்திரன், சூரியன், யமன், வருணன், வாயு அனைவரும் சென்னியிலே கரம் வைத்துச் சேவித்துத் தாள் பணிந்து நின்றதாக உரைக்கின்றார். சேவித்தவர் என்பதோடு அல்லாமல் அவர்களை அடிமைகள் என்றும், படைக்கின்ற பிரம்மாவும், தேவர்களும் சனந்தனரும், முனிவர்களும் தம் கோவில் அருகில் வாடி ஏங்கி நிற்பதாகவும் பாடுகின்றார். வெங்கடேச ஸ்தோத்திரத்தின் 20 - ஆம் பாடலில், அவன் அருளை, தண்ணளியை அவனின் சிறப்புக்களாக உரைக்கின்றார். நாடாதாரையும் நாடும் பிறரையும் கேட்காமல் கேட்டுச் சரண்தரும் பாடாண் திணையென்றும் 7-ஆம் பாடலில், இராவண இருட்டை நீக்கிய கதிரோன் என்றும் ஊர்காக்கும் வைதீக உத்தமர்களெல்லாம்  உனக்காக நிற்கின்றார் அபிஷேகம் செய்ய என்றும் சிறப்புப்படுத்தி உரைக்கின்றார்.

பக்தியின் தன்நிலை
இறைவன் எல்லோருக்கும் அருள்பவன். அதனால், இறைவன் தோய்வில், தான் ஏழையாய் இருந்தாலும் கூட பிறருக்கு ஒப்பத் தனக்கும் அருள்பவன் என்பதைக் கனிந்த குணத்தன், காட்சிக்கு எளியனாம் வெங்கடேசன்,

“ஏழை எளியவன் என்தலைமீதும் காளிநகத்தின் கரும்படம் மீதும்
வாழ வொண்ணாதவன் மனங்களின்மீதும் வடவேங்கடத்து  மாமலைமீதும்
ஒப்பரும் வேத உபநிஷத் மீதும் உள்ளம் நிலைத்த உத்தமர் மனத்தும்
ஒரே நேரத்தில் உன்னடி வைத்தாய் அந்தத்திருவடி அடைக்கிறேன்”5

என்றும், எத்துயர் வந்தாலும் நீயே தஞ்சம் என்பதை,
“பந்தாடும் கிரகங்கள் பாய்ந்தாலும் என்ன
பள்ளியுளபெருமான் நின் பாதத்தில் விழுவோம்” 6

என்ற வரிகளிலும் உரைத்ததோடு நிற்கவில்லை. வெங்கடேச ஸ்தோத்திரத்தில், தன் வாழ்நாளை வீணாக்கிய நிலையை உணர்ந்து அப்படியே அதனை இறைவனிடம் உரைக்கின்றார். தன்னைப் பொறுத்து அருளும்படி வேண்டுவதை,

“எல்லை கடந்தேன் எதையும் மறந்தேன்
தொல்லை இழைத்தேன் துயரம் விளைத்தேன்...........
தாளாதாயினும் தமியனைப் பொறுப்பீர்”  7

என்றும் நான் அறியாதவன், அறிவி;ல்லாதவன் அதனால் என்னை அனைத்துக் காத்து நீயே அருள் செய்ய வேண்டும் என்றும் தஞ்சமடைகிறார். அடுத்து, நீயே சரணம் என்றும் சரணாகதி அடைகிறார். பூசைக்குரிய புவன ராமா நீயே சரணம் அருள்புரிவாய் பல வழிகடந்த பக்தன், எனவே, பல நாள் செய்த பலனளிப்பாய் நீ என்று படிநிலைப்படுத்தி சரணாகதி அடைகின்றார். மனிதர்களுக்கு என்றல்லாது அனைத்து உயிர்களுக்கும் அருள்பாலிப்பவன் என்பதையும் உணர்த்த முயல்கின்றார்.

சமுதாயம்
தான் வாழும் சமுதாயம் இப்படிப்பட்டது என்று நேரடியாக உரைக்கவில்லை. ஆயின் நல்லது செய்தோர் நல்லுலகு அடைவர் என்பதைக் கூறும்வழி அல்லது செய்வோர் நிலை உணர்த்தப்படுகிறது. தவிர நல்லதும் அல்லதும் கலந்ததுதான் சமுதாயம் என்பதும் உணர்த்தப்படுகிறது. இவை இரண்டையும் விடுத்து இறையன்பில் தோய்ந்தவர் இவ்வுலக வாழ்வையே விரும்புவர். இங்கிருந்தால்தான் அவர்களால் இறைநிலையை உணர இயலும், அதுவே வாழ்வின் பெரும்பயன் என்பதை ஒரே பாடலில்,

“உயர்கர்மம் செய்தவர்கள் சொர்க்கத்தை நாடி
உயரத்தில் செல்கின்றார் உயிரை இழந்தோடி
உயராகச் செல்கின்ற உத்தமர்கள் கீழே
உன் கோவில் விமானத்தைப் பார்க்கின்றார் கோடி
அயராமல் பூமியிலே மறுபடியும் பிறக்க
ஆசையுடன் நினைக்கின்றார் ஆனந்தம் கூடி
மயல் நீக்கும் திருமலையோய் தவசுப்ரபாதம்
மானிடர்கள் வேண்டுகின்றோம் நற்காலையாக”8

என்றுணர்த்துகின்றார்.

முடிவுரை
கடவுள் நம்பிக்கையில் உறுதி கொண்ட கண்ணதாசன் அவர்கள் தன்னுடைய ஆன்மீகக் கருத்துக்களை ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதத்தில் பதிவு செய்துள்ளதை இக்கட்டுரை உணர்த்துகிறது. இறைச்சிந்தனை தொடர்பான தன்னிலை, கருத்தொருமிப்பு, சரணாகதி தத்துவம்,  இறைவனின் பெருமை, பக்தியில் தன்னிலை, பக்தியில் சமுதாயம் போன்றவைகளைக் கலப்பின்றி முப்பரிமாணங்களோடு இயற்றியுள்ளார். தேவர்களையும் முனிவர்களையும் அருள் நிலையில் காட்டியுள்ளார். தான் வாழும் சமுதாயம் இவ்வாறு இருக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் விருப்பமாக இக்கட்டுரையில் புலப்படுத்தப்படுகிறது.

அடிக்குறிப்புகள்
பவணந்திமுனிவர், நன்னூல், (காண்டிகை உரை), வைமு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் கம்பெனி, சென்னை, 1969., - 10.
தர்மராஜ். ஆ.கி., மனிதனும் சமயமும், கிறித்தவ இலக்கியக் கழகம், சென்னை, 1970., ப - 9.
ஸ்ரீ வெங்கடேச ப்ரகதி(பா.1,2) கங்கை புத்தகாலயம், சென்னை -17, 2005- ப.41
மேலது - ப.47
மேலது - ப.46
கண்ணதாசன், ஸ்ரீ வெங்கடேச ஸுப்ரபாதம், கங்கை புத்தகாலயம், சென்னை -17, 2005,- ப.28
கண்ணதாசன், ஸ்ரீ வெங்கடேச ஸ்தோத்திரம், கங்கை புத்தகாலயம், சென்னை -17, 2005    - ப.36
கண்ணதாசன், ஸ்ரீ வெங்கடேச ஸுப்ரபாதம், கங்கை புத்தகாலயம், சென்னை -17, 2005     - ப.25

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.