ஆய்வு: சங்கத்தமிழரின் வேட்டைத் தொழில்

Tuesday, 04 June 2019 07:46 - சி. யுவராஜ், - முனைவர்பட்ட ஆய்வாளர் , பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி –24.- ஆய்வு
Print

   - சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 -சங்க இலக்கியத்தில்  சங்க தமிழரின் வாழ்வயிலைக் காட்டும் கண்ணாடி. சங்கத் தமிழர்  இயற்கையோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தனர். மனிதன் விலங்கோடு விலங்காக வாழ்ந்த காலத்தில் விலங்கைத் தாக்கி வீழ்த்தி வாழ முற்பட்ட நிலையில் வேட்டைத் தொழில் தோன்றியிருக்க இடமுண்டு. அன்று தொடங்கி இந்தத் தொழில் காலந்தோறும் வளர்ந்து தற்காலத்தில் ஒரு கலையாகப் போற்றப்படுகின்றது. காலமாற்றத்தால் இக்கலை இன்று வீரத்தின் அடையாளமாகக் கருதப்படுவதும் சுட்டத்தக்கது. சங்க காலத்தில் ஐந்நிலமக்களும் வேட்டைத் தொழிலில் ஈடுபட்டன என்று அறிய முடிகின்றது. உணவு தேடுதல், பொருளீட்டல் என்ற அடிப்படைகளில் வேட்டைகள் நிகழ்ந்தன. வேட்டைத் தொழிலில் வேட்டையாடப்படும் பொருளாகவும், வேட்டையாடுவதற்கு உதவியாகவும் விலங்குகள் இருந்தன என்று இக்கட்டுரை வாயிலாக வெளிக்கொணர முற்படுப்படுகின்றது.

வேட்டையாட ஆராய்தல்
வேட்டைக்குச் செல்பவர் குறித்த விலங்குகளைத் தேர்ந்தெடுத்து வேட்டையாடுவர். குறவர்கள் இரவுநேரத்தில் விலங்குகளை ஆராய்ந்து தேடித் திரிந்ததை,
தேஎம் மருளும் அமையம் ஆயினும்
இறாஅ வன்சிலையர் மாதேர்பு கொட்கும்
குறவரும் மருளும் குன்றத்துப் படினே        (மலைபடு:273-275)

என்னும் மலைபடுகடாம் அடிகளின் மூலமாக பெரும் கௌசிகனார் விளக்கின்றார். இதனைப் போலவே நற்றிணை அடிகளில் வருவதை,

களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென     (நற்.389:4-5)

குறிஞ்சிநிலத் தலைவன் விலங்கின் வேட்டை மேற்சென்றதை காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் புலவர் நற்றிணை அடிகளின் வழியாக விளக்கின்றார். இதன் வழி சங்ககால மக்கள் விலங்குகளை ஆராய்ந்து வேட்டையாடியமை புலப்படும்.

யானை வேட்டை

யானையைக் கோட்டின் பயன்கருதி வேட்டையாடியுள்ளனர். குறிஞ்சிநில வேட்டுவன் வெண்கடம்ப மரத்தின் பின்நின்று களிற்றின் மார்பில் அம்பைச் செலுத்திக் கொன்றனன். பிறகு அதனின்று எடுத்து வந்த வெண்கோட்டைப் புல்லால் வேய்ந்த குடிசையில் புலால் நாற்றம் வீச ஊன்றியதை,

இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன்
விரிமலர் மராஅம் பொருந்தி கோல்தெரிந்து
வரி நுதல் யானை அருநிறத்து அழுத்தி
இகல்அடு முன்பின் வெண்கோடு கொண்டுதன்
புல்வேய் குரம்பை புலர ஊன்றி         (அகம்.172:6-10)

என்னும் அகநானூற்றுப்பாடலடிகள் மூலமாக மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் கூறுகின்றார். குறிஞ்சிநிலத்தில் புலியுடன் போர் செய்த யானை புண்பட்டுக் கிடந்ததை,

புலியொடு பொருத புண் கூர் யானை
நற்கோடு நயந்த அன்புஇல் கானவர்        (நற்.65:5-6)

அதன் தந்தத்தை எடுக்கக் கருதிய வேடர்கள் அதன்மீது மீண்டும் அம்பெய்து துன்பப்படுத்தினர் என்பதை நற்றிணை பாடலடிகளின் மூலமாக கபிலர் வாயிலாகக் கூறுகின்றார். அவ் யானை இறந்தபின் அதனின்று தந்தத்தைக் கவர்ந்தனர். பாலைநில மறச்சாதியினர் தம் வில்லைக் கொண்டு வழிப் போக்கர்களைத் துன்புறுத்தியதை,

கொடுஞ்சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடும் கண் யானைக் கானம் நீந்தி
இறப்பர் கொல்..                (குறுந்.331:3-5)

காட்டிலுள்ள யானைகனைக் கொன்று தந்தங்களையும் கைப்பற்றினர் என்பதை குறுந்தொகைப் பாடலடிகளின் மூலமாக வாடாப்பிரபந்தனர் புலவரின் அறியமுடிகிறது.

 

புலி வேட்டை
சங்க மக்கள் புலிகளை அதன் தோலுக்காகவும், பற்களைத் தாலியாகச் செய்து அணிவதற்கும் வேட்டையாடியுள்ளனர். மலைநாட்டவர் பாறைகள் செறிந்த குன்றுகளில் குகைக்ளைக் கண்டு அவற்றின் வாயிலில் கற்பலகையால் கதவமைத்து உள்ளே ஆடுகளைக் கட்டுவர். புலிகள் அதனுட் புகுந்து ஆடுகளைத் தாக்கும்பொழுது வாயிற் கதவாகிய கற்பலகை விரைவாக மூடிக்கொள்ளும், இப்பொறிவழிப் புலியை வேட்டையாடியதை,

இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய
பெருங்கல் லாடரும் போன்மென விரும்பி   (புறம்.19:5-6)

என்னும் புறநானூற்றுப்பாடலடிகளின் மூலமாக விளக்கப்படுகின்றது.

சிறுவர் மார்பில் அணியும் ஓர் அணிகலன் புலிப்பல் தாலியாகும். இத்தாலியானது வீரர்கள், புலியை வேட்டையாடி அதன் தோலைப் பெற்றதோடு தம் வீரத்தின் நினைவாக, அதன் பல்லைப் பிடிங்கித் தம் குழந்தைகளுக்குக் கழுத்தில் அணிவித்ததாகும்.30 புலிப்பல் கோர்த்த தாலியை அணிந்த சிறுவர்களை,

புலிப்பல் கோர்த்த புலம்புமணித் தாலி     (அகம்.7:18)
புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறாஅர்         (புறம்.374:9)

என்ற பாடலடிகள் சுட்டுக்கின்றன. மேற்சுட்டிய செய்திகளின் வழி புலி வேட்டையாடப்பட்டமையும், அதன் பற்களைச் சிறுவர்கள் தாலியாக அணிந்தமையும் புலப்படும்.
கானவர் தினைப்புனத்தில் மேயும் கேழலைப் பிடிக்க இயந்திரம் அமைத்து வைத்திருந்தனர். அந்த இயந்திரப் பொறியில் புலி சென்று சிக்கிக் கொண்டதை நற்றிணை விளக்குவதை,

இரும்புலி கொண்மார் நிறுத்த வலையுளோர்
ஏதில் குறுநரி பட்டற்றாற்           (கலித்.65:24-25)

என்ற கலித்தொகைப்பாடலடிகள் மூலமாக கபிலர் உணர்த்துகின்றார். இதனைப்போன்று, பரதவர் மீன்பிடிக்கும் பொருட்டு விரித்து வலையில் நீர்நாய் அகப்பட்டுக் கொண்டது. பரதவர் அதனையும் பிடித்தனர். இவ்வாறு ஒரு விலங்கை வேட்டையாட வேண்டி வைத்த பொறியில் மற்றொரு விலங்கு அகப்பட்டுக்கொண்ட நிலையில் அவ்விலங்குகளையும் வேட்டையாடியுள்ளனர்.
மான் வேட்டை
வேட்டுவச் சிறுவர்கள் நெய்தல் நிலத்தில் மரங்களின் மேலேறி நின்று மான் வேட்டையாடியதை,

மரன்மேற் கொண்டு மான்கணந் தகைமார்
வெந்திறல் இளையவர் வேட்டெழுந் தாங்கு (நற்.111:4-5)

என்னும் நற்றிணை அடிகள் புலப்படுத்துகின்றன.

வலை மான் மழைக் கண் குறுமகள்      (நற்.190:8)

புன்கண் மடமா னேர்படத் தன்னையர்
சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்தி (குறுங்.272:4-5)

புன்கண் கொண்ட திரி மருப்பு
மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து
நெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாது     (அகம்.371:5-7)

வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல
(கலித்.120:11)

குறிஞ்சி நிலத்தில், மான்களை வலைவிரித்துப் பிடித்தும் புதருக்குள் இருக்கும் இணைமான்களைக் கற்களை வீசி அகற்றியும் வேட்டையாடியுள்ளனர். பாலைநில மறவர்கள் மானை அம்பெய்து கொன்றனர். நெய்தல்நில வேடர் வெள்ளத்தில் அகப்பட்டுக் கரையேற முடியாமல் தவித்த மானை அம்பெய்து கொன்றிருக்கின்றனர். கடமான்கனை வேட்டையாட, அம்மானை நீண்ட நேரம் அலைக்கழிப்புச் செய்வர். இதனால் வேடனும், நாயும் களைப்படைந்தமையை பரணர் குறிப்பிடுவர்.
சங்க மக்கள் மானை, அதன் தோல், இறைச்சி. கொம்பு போன்றவற்றிற்காக வேட்டையாடியுள்ளனர். மான்வேட்டைக்குத் தடையேதும் விதிக்கப்பட்டதற்கானக் குறிப்புகள் இல்லை. ஆனால் தற்காலத்தில் மான்களை வேட்டையாடுவது தடைச்செய்யப்பட்டிருப்பது மீறியவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

குரங்கு வேட்டை
பழுத்த பழ மரங்களை நாடிக் குரங்குகள் செல்வதுண்டு. இக்குரங்குகள் பழங்களைப் பழங்களைப் பறித்துத் தின்றது போக மீதியைச் சேதப்படுத்தும் இயல்புடையவை. பழுத்த பலாவைக் காத்துக் கொண்டிருந்த குறிஞ்சிநில வேடன் சோர்வுற்ற நேரம் பார்த்து அ10ண்குரங்கு அப்பழத்தைக் கவர்ந்தது. இதனைக் கண்ணுற்ற வேடன் குரங்குகளைப் பிடிக்க மரந்தோறும் வலையை மாட்டி வைத்ததை,

கலைகை தொட்ட கமழ்களைப் பெரும்பழம்
காவன் மறந்த கானவன் ஞாங்கர்க்
கடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும்
குன்ற நாட தகுமோ பைஞ்சுனை        (குறுந்.342:1-4)

என்ற குறுந்தொகைப்பாடலடிகளின் வாயிலாக மதுரைக் கணக்காயனார் விளக்குகின்றார். பழம் கவர வரும் குரங்குகளை அம்பெய்தும் தாக்குவர். 24 குரங்குகள் பலாப்பழங்களைச் சேதப்படுத்தியதன் காரணமாக அதனை வேட்டையாடியுள்ளனர். குறிஞ்சிநிலத்தில் மட்டும் குரங்குகள் வேட்டையாடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டைத் தொழிலில் நாய்

தொடக்கக்கால மனிதன் தான் உயிர் வாழ்வதற்கும், தன் உயிரைக் காப்பதற்கும் விலங்குகளைப் பயன்படுத்தியுள்ளான். உயிர் வாழ உணவு இன்றியமையாதது. எனவே விலங்குகளை வேட்டையாடி உணவாக உட்கொண்டுள்ளான்.     வேட்டைத் தொழிலுக்கு நாய் மிகவும் பயன்பட்டுள்ளது. வேட்டையாளர்கள் நாயின் உதவியுடன் பிற விலங்குகளை வேட்டையாடினர். வடுகர் சினம் மிக்க நாய்களை வைத்திருந்ததை.

கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர்      (அகம்.107:11)

என்ற அகநானூறு அடியின் மூலமாக காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் விளக்குகின்றார். வேட்டுவர்கள் நாய்களுடன் பல மலைகளையும் கடந்து வேட்டைக்குச் சென்றதை,

முருகுமுரண் கொள்ளும் தேம்பாய் கண்ணிப்        
பரியல் நாயொடு பன்மலைப் படரும்
வேட்டுவற் பெறலொ டமைந்தனை         (அகம்.28:6-8)

என்று பாண்டியன் அறிவுடைநம்பி அடிகளின் வாயிலாகக் குறிப்பிடுவர்.

வீட்டுக் காவலில் நாய்
வீட்டைக் காவல் காக்க நாய்கள் பெரிதும் உதவியதை,

தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர்
வாட்முன் வேலிச் சூழ் மிளைப் படப்பை
கொடு நுகம் தழீஇய புதவின் செந்நிலை
நெடு நுதி வயக்கழு நிரைத்த வாயில்     (பெரும்பாண்.125-129)

வேட்டை முடித்து வந்த எயினர். நாய்களைத் தம் வீட்டுக் காவலுக்காகச் சங்கிலியால் கட்டிவைத்தனர் என்பதை பெரும்பாணாற்றுப்படை வழியாக கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுகின்றார். இங்ஙனம் வீட்டில் காவலுக்காக வைக்கப்பட்ட நாய், தலைவியைச் சந்திக்கத் தலைவன் வருகின்றபொழுது உறங்காமல் குரைத்தலைச் செய்திருக்கின்றது.     பிச்சை எடுப்பவர்கள் நாய்கள் இல்லாத வீடுகளில் சென்று நெய் கலந்த செந்நெல்சோற்று உருண்டையைப் பிச்சையாகப் பெற்று உண்டதை,

அ10சி றெருவி னாயில் வியன்கடைச்
செந்நெ லமலை வெண்மை வெள்ளிழு
தோரிற் பிச்சை யார மாந்தி             (குறுந்.277:1-3)

கடற்கரை ஓரங்களில் சுறாமீன்கள் நீரைப் பீய்ச்சியடிப்பது இயல்பு என்பதை ஓரில் பிச்சையார் குறிப்பிடுகின்றார். அந்நீர் இல்லத்தின் கண் உள்ள வாயிற்கதவுகளில் மோதியதால் வாயிலில் உள்ள நாய்கள் நடுங்கின.    வீட்டில் உள்ள நாய்கள் தன்னை வளர்ப்பவர்களுடன் மிகவும் அன்பாக நடந்து கொள்ளும் என்பதை,

வன் கைக் கானவன் வெஞ்சிலை வணக்கி
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட
வேட்டு வலம்படுத்த உவகையன் காட்ட
நடு கால் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே         (நற்.285:3-8)

குறிஞ்சிநில வேட்டுவன் தான் வேட்டையாடிய முட்பன்றி இறைச்சியுடன் குடிசையில் நுழைந்தபொழுது அவ்வீட்டு நாய்கள் அவனது கால்களைப் பற்றிக் கொண்டு விளையாடியமையால் புலவர் மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் வாயிலாக அறிந்து கொள்முடிகின்றது. இவற்றால் வேடுவர்களின் வேட்டைத் தொழிலிலும், வீட்டுக் காவலிலும் நாய்கள் பயன்பட்டமை புலனாகும்.

சங்ககால மக்கள் நீர்நாய், புலி, மான், யானை முதலிய விலங்குகளை வேட்டையாடியுள்ளனர். இவ்விலங்குகளைக் கைப்பற்ற நாய் உறுதுணையாக இருந்தது. வில், அம்பு, குறுந்தடி. கற்பொறி, முதலியன பிற கருவிகளைக் கொண்டும் வேட்டையாடியுள்ளனார். சங்க இலக்கியத்தில் புலவர்களின் பாடலடிகளை மூலமாக விலங்கினம் வேட்டையடி விதத்தை இக்கட்டுரை வாயிலாக வெளிக்கொணர்தை முற்பட்டுள்ளது.


குறிப்புகள்:
1.  வேங்கடசாமி நாட்டாh.;ந.மு.            -  அகநானூறு  வேங்கடாசலம் பிள்ளை.ரா.            சைவசித்தாந்த நூற்பதிப்பக்கழகம்     சென்னை -18. ஆண்டு: 1944
2. சிவசுப்பிரமணியன்.வே.                 -  அகநானூறு   உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
சென்னை-90. ஆண்டு: 1990
3. சாமி.பி.எல்.                     -   சங்கஇலக்கியத்தில் செடி,கொடி விளக்கம்
கழக வெளியீடு   சென்னை- 18. ஆண்டு: 1967

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

* கட்டுரையாளர்: - சி. யுவராஜ்,   - முனைவர்பட்ட ஆய்வாளர் ,   பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி –24.-

Last Updated on Tuesday, 04 June 2019 07:51