ஆய்வு: தொண்டைமண்டலப் பண்பாட்டுக்கூறுகளில் கூவாகம் கூத்தாண்டவர் வழிபாடு

Monday, 13 May 2019 23:51 - முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. - ஆய்வு
Print

தொண்டைமண்டலப் பகுதிகளில் ஒரு பகுதியாக விளங்கிக்கொண்டிருக்கிற விழுப்புரம் மாவட்டம் கூவாகம் எனும் சிற்றூரில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி அன்று நடைபெறும் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது என்பது உலகம் அறிந்த உண்மையாகும். அங்கு நடைபெறுகின்ற திருவிழா என்பது தமிழகத்தின் பிறபகுதிகளில் கூத்தாண்டவர் கோவில்கள் இருந்தாலும் கூவாகத்தில் நடைபெறுகின்ற திருவிழாவைப் போன்று அக் கோவில்களில் சிறப்பாக நடைபெறுவதில்லை. அத் துணைச்சிறப்பு அக்கோவிலுக்கும் அக்கோவில் திருவிழாவிற்கும் அங்கு வருகின்ற மக்களுக்கும் உண்டு என்பதை நன்கு அறிய முடியும். இதனைக் கருத்தில் கொண்டு    தொண்டைமண்டலப் பண்பாட்டுக்கூறுகளில் ஒன்றான கூவாகம் கூத்தாண்டவர் வழிபாடு குறித்துக் காணலாம்.

தமிழ் இலக்கியங்களில் திருநங்கைகள்
தமிழ் இலக்கியங்களில் மனிதசமூகத்தைப் பற்றி மிக விரிவாகப் பற்பல கருத்தியல் கோட்பாடுகளில் பேசப்பட்டுள்ளன. அவைகள் எந்தெந்த வகைகளில் பேசப்பட்டாலும் மானுடம் உயிர்பெற்று தெளிந்த ஞானத்தோடும் தெளிந்த அறிவோடும் புகழ்பெற்றுச் சிறப்பாக வாழவேண்டும் எனும் நோக்கத்தில் படைக்கப்பட்ட இலக்கியங்களாகும். இலக்கியங்களில் ஓரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு உயிர்கள் வரையில் இயல்பாகவே இடம்பெற்று இருக்கும் வகையில் அதன் சூழல்கள், காலநிலைகள், இடங்கள் அமைந்திருக்கும். சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரையில் மானுடச்சமூகத்தின் ஆண்பால், பெண்பால் உணர்வுகளை மிகுதியாக எடுத்துக்கூறி வந்தபோதிலும் ஆண்பாலாக இருந்து பெண்பாலாக மாற்றமடைந்த திருநங்கைகளின் உணர்வுகளைப் பற்றியும் சில இடங்களில் மிகத்தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவ்விலக்கியங்களில் திருநங்கைகளின் பின்னணியைப் பற்றிய தெளிவான பதிவுகள் காணப்படுகின்றன. அவை தொல்காப்பியம், சங்க இலக்கிய நூலாகிய அகநானூறு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகிய திருக்குறள், நாலடியார், நீதிநெறி விளக்கம், முதுமொழிக்காஞ்சி, சூடாமணி, உரிச்சொல் நிகண்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, நீலகேசி, பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்யபிரபந்தம், பட்டினத்தார் பாடல்கள், திருமந்திரம், குமரேச சதகம், விவேக சிந்தாமணி, கம்ப இராமாயணம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன. புதுக்கவிதை நூல்களாகிய கண்ணதாசன் கவிதைகள், வைரமுத்து கவிதைகள், நா. காமராசன் கவிதைகள் போன்றோரின் கவிதைகளிலும் இன்னும் பிற புதுக்கவிதை நூலாசிரியர்களின் கவிதைகளிலும் திருநங்கைகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.  இதனைப் பின்வரும் இலக்கியச்சான்றுகள் வழி காணலாம்:

தொல்காப்பியர் உயர்திணையில் பெண்மைப் பண்பைக் குறிக்கும் ஆண்மை திரிந்த பெயர்ச்சொல்லும் தெய்வம் கடவுளர்களைக் குறிக்கும் பெயர்ச்சொல்லும் இவை என்று தம்பொருள் உணர்த்தும் முடிவுபெறாது; உயர்திணையில் அதற்கான பால் பாகுபாடு மாறுபட்டு வழங்கும் தன்மை உடையதாம். ஆண்பால், பெண்பால் என இரு பாலினங்களை அடையாளம் கண்டாலும் மூன்றாவது பாலினமான ஆணும் அல்லாது பெண்ணும் அல்லாது உள்ள மனிதர்களை மாற்றத்திற்குரிய பெயராகக் (திருநங்கையராக) கருதவேண்டும் என்பதை,

பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும்
இவ் என அறியும் அந்தம் தமக்கு இலவே
உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும்
(தொல்.கிளவி.487)

என்ற நூற்பாவால் அறியமுடிகிறது. மேலும், ஆண்மை திரிந்த பெயர் நிலைக்கிளவி என்பது ஆண்மை கெட்ட திருநங்கையைக் குறிக்கும். எனவே, இச்சொல் ஆண்மைத்தன்மை அறியும் சொல்லுடன் சேர்ந்து வருவதற்கு இடமில்லை. பெண்பால் சொல் அல்லது பலர்பால் சொல்லுடனேயே சேர்த்துச் சொல்லப்படும். திருநங்கை வந்தான் என்று வழங்குதல் இல்லை. திருநங்கை வந்தாள் என்றோ வந்தார் என்றோதான் சொல்லப்படும் என்பதை,

ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவி
ஆண்மை அறிசொற்கு ஆகு இடன் இன்றே
(தொல்.கிளவி.495)

என்ற நூற்பா வழி அறியமுடிகிறது. தொல்பழங்காலத்தில் இருந்தே ஆண், பெண் பெயர்களுக்கு நிகராகப் பாலினம் மாற்றம் அடைந்த மனிதர்களுக்குப் பெயர்கள் வழங்கப்பட்டுவந்துள்ளன.

திருவள்ளுவர் முயற்சி இல்லாதவன் செய்யும் உதவி, பேடி தன் கையில் வாள் எடுத்து ஆளும் தன்மையைப் போல் கெடும் என்று கூறுகிறார். இதனை,

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும் (குறள்.614)

என்ற குறளால் அறியமுடிகிறது. அவையில் அச்சம் கொள்ளுபவன் படித்தநூல் பகைவர் நடுவே பெண் தன்மை உடையவன் கையில் பிடித்த கூர்மையான வாளை ஒக்கும் என்பதை,

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சும் அவன்கற்ற நூல் (குறள்.727)

என்ற குறளால் காணப்படுகின்றது. இது திருநங்கையரைப் பற்றிய பதிவாகும். ஒருவர் முற்பிறப்பில் தமக்குள்ள செல்வம் முதலிய வன்மை காரணமாக அயலார் மனைவியிடம் சென்றவர் இப்பிறப்பில் திருநங்கைத்தன்மை கொண்டவராய்க் கூத்தாடி வயிறு பிழைப்பர் என்பதை,

செம்மையொன்று இன்றிச் சிறியார் இனத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மிரீஇ – உம்மை
வலியால் பிறர்மனைமேல் சென்றாரே இம்மை
அலியாகி ஆடிஉண் பார் (நாலடி.85)

என்ற பாடலால் அறியமுடிகிறது. ஒருவனுக்கு நுட்பமான அறிவு இல்லாததே வறுமையாகும்; அந்த நுட்பமான அறிவுடைமையே மிகப் பெருஞ்செல்வமாகும். பெண் தன்மையை விரும்பி ஆண்தன்மை குறைந்த திருநங்கையும் கண்கள் விரும்பத்தக்க அழகிய அணிகலன்களைப் பூண்டுகொள்ளல் உண்டன்றோ. அதைப் போன்றதே அறிவற்றவர் செல்வம் உடையவராய் இருந்து மகிழ்தலாகும் என்பதை,

நுண்ணுணர் வின்மை வறுமை அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி அணியாளோ
கண்ணவாத் தக்க கலம் (நாலடி.251)

என்ற பாடலால் அறியமுடிகிறது. பெண் உடையும் அணிகலன்களும் அணிந்த திருநங்கையை மருதநிலத்தில் வாழும் சிறுவர்கள் எருமை மாட்டின்மீது ஏறி வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதை,

என்எனப் படுகொல் – நல்மகிழ்ப்
பேடிப்பெண்கொண்டு ஆடுகை கடுப்ப (அகம்.206:1-2)

என்ற அகநானூற்றுப் பாடலால் அறியமுடிகிறது. ஆண் மக்களால் விரும்பப்படும் அழகிய பெண்களிடத்தில் திருநங்கையால் இன்பம் துய்க்க முடியாது. அதுபோல் கல்வி என்பது தக்கவரிடம் இருந்தால் மட்டுமே பயன்படும். திருநங்கை போன்ற தகுதி இல்லாதவரிடம் அக்கல்வி சென்றால் அவர்களால் இன்பம் பெற முடியாது என்பதை,

போக்குஅறு கல்வி புலம்மிக்கார்பால் அன்றி
மீக்கொள் நகையினாவாய்ச் சேரா – தாங்கு அணங்கு
ஆண் ஆவாம் பெண்மை உடைத்து எனினும் பெண்நலம்
பேடு கொள்ளப்படுகிறது இல் (நீதிநெறி விளக்கம்.23)

என்ற பாடல் வழி அறியமுடிகிறது. ஒருவன் இடமும் காலமும் அறியாது மிகுந்த வீரம் காட்டுவது என்பது திருநங்கையை ஒக்கும் என்பதை,

கழி தறுகண்மை பேடியிற் றுவ்வாது (முதுமொழிக்காஞ்சி. 2: 4 - 2)

என்ற பாடல் வரியால் காணப்படுகிறது. மருள் என்ற சொல் திருநங்கையரைக் குறிக்கும் சொல் என்பதை,

குறளொடு செவிடு மூங்கை கூன்மருள் குருடு மாரே
உறு முறுப்பில்லா பிண்டம் ஓதிய எண்மெய்யெச்சம்
(சூடாமணி நிகண்டு . நூ.97)

என்ற பாடல் வழி அறியப்படுகிறது. மேலும், திருநங்கையரைப் பேடு என்ற சொல்லால் அழைக்கப்படுவதை,

குறள் செவிடு மூங்கை முடங்கூன் குருடு
துறுபிண்டம் பேடுடனே யெச்சமுறுமெட்டாம்
(உரிச்சொல் நிகண்டு.270)

என்ற பாடல் வரிகளால் அறியமுடிகின்றன. சிலப்பதிகாரத்தில் வாணன் பேர்ஊராகிய சோ என்னும் நகரத்தில் சென்று நீண்ட நிலத்தை அளந்தோனாகிய நீலநிற வண்ணன் குடம் கொண்டு ஆடிய குடக்கூத்தும் தன் ஆண்மையை மறைத்துக் கொண்டு பெண்மைக் கோலத்தில் மன்மதன் ஆடிய பேடி ஆடலும் என்ற நிகழ்வு,

வாணன் பேர்ஊர் மறுகிடை நடந்து
நீள் நிலம் அளந்தோன் ஆடிய குடமும்
ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி ஆடலும் (சிலப்பதிகாரம்.6:54 - 57)

என்ற பாடல் அடிகளால் காணப்படுகின்றன. மேலும், வேண்மாள் திங்களின் அழகினைக் காணுமாறு வந்து கொண்டிருந்த போது வண்ணமும் சுண்ணப்பொடியும் மலர்கள் நிறைந்த மலர்களையும் பெண் தன்மை மிக்க திருநங்கைகள் வைத்துக் கொண்டிருந்தனர் என்பதை, 

வண்ணமும் சுண்ணமும் மலர்ப்பூம் பிணையலும்
பெண் அணிப் பேடியர் ஏந்தினர் ஒரு சார்
(சிலப்பதிகாரம்.28: 59 - 60)

என்ற பாடல் வரிகளால் காணப்படுகின்றன. சுரிந்த மோவாயும் கரிய நிறமுடைய கூந்தலும் செவ்வரி படர்ந்த செழுமையான கயல் போன்ற நீண்ட கண்களையும் விரிந்த வெண்மையான முல்லை நிறப்பற்களும் பவளம் போன்ற உதடுகளும் சூடகம் என்னும் அழகிய வளைகள் அசைந்தாடும் மூங்கில் போன்ற தோள்களும் வளருகின்ற இளமுலைகளும் மாந்தளிர் போன்ற மேனியும் நுண்ணிய இடையும் பாடகம் அணிந்த சிறிய பாதங்களையும் உடைய ஆரியத் திருநங்கைகளைப் பற்றிய குறிப்பு,

சுருளிடு தாடி மருள்படு பூங்குழல்
அரிபரந் தொழுகிய செழுங்கய னெடுங்கண்
விரிவெண் டோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச்
சூடக வரிவளை யாடமைப் பணைத் தோள்
வளர்இள வனமுலைத் தளர்இயல் மின்இடைப்
பாடகச் சீறடி ஆரியப் பேடி யோடு
(சிலப்பதிகாரம்.27:185 -186)

என்ற பாடலடிகளில் காணப்பட்டுள்ளன. பாவை போன்ற மணிமேகலையை ஆண்கள் கண்டால் இவளைவிட்டுப் போய்விடுவார்களா? தம் மனத்தை இவளிடம் போகவிட்டுத் தளராமல் இருப்பாரானால் அவர்கள் திருநங்கையர்களாகத்தான் இருப்பார்கள் என்பதை,

ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்
(மணிமேகலை.3:24 - 25)

என்ற மணிமேகலை பாடல் வரிகள் மூலம் அறியலாம். மேலும்,

சுரியல் தாடி மருள்படு பூங்குழல்
பவளச் செவ்வாய்த் தவள வாள்நகை
ஒள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக்
கருங்கொடிப் புருவத்து மருங்கு வளைபிறை நுதல்
காந்தளஞ் செங்கை ஏந்திள வனமுலை
அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்
இகந்த வட்டுடை எழுதுவரிக் கோலத்து
வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி
நீள்நிலம் அளந்தான் மகன்முன் ஆடிய
பேடிக் கோலத்துப் பேடுகாண்கு நரும்
வம்பமாக்கள் கம்பலை மூதூர்ச்
சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்
மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி
(மணிமேகலை.3:120-129)

என்ற பாடல் வரிகள் காட்டுகின்றன. சுருண்டு விளங்கும் தாடியைப் போன்ற அழகியகூந்தலும் பவளம்போலும் சிவந்தவாயும் ஒளிதிகழும் வெண்பற்களும் செவ்வரிபடர்ந்த கண்களும் வெண்சங்குகளால் ஆன காதணியும் கரிய கொடிபோலும் புருவமும் இருபக்கத்திலும் வளைந்து தோன்றும் பிறைச்சந்திரனை ஒத்த நெற்றியும் காந்தள்மலர் போலும் சிவந்த விரல்களும் இளமை மேவும் மார்பகங்களும் அகன்ற அல்குலும் நுண்ணிய இடையும் முழங்காலளவு விளங்கும் வட்டமான துகிலும் தோளிலும் மார்பிலும் தொய்யில் எழுதப்பெற்ற வண்ணமும் கொண்டு வாணாசுரனின் நகரில் நின்ற திருமாலின் மகனான மன்மதன் அன்று ஆடிய பேடிக்கோலத்தைக் கொண்டு விளங்குவோர் ஆடும் பேடு என்னும் கூத்தினைக் கண்டு வீதியிடையே பரவிமகிழ்ந்தார்கள். தன் ஆண்மையை மறைத்துக் கொண்டு பெண்மைக் கோலத்தில் மன்மதன் ஆடியது பேடி ஆடல் என்பதைச் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களின் பாடல் வரிகள்மூலம் அறியமுடிகிறது. இதில் ஒரு திருநங்கையானவள் எப்படி இருப்பாள் என்பது உணர்த்திக்காட்டப்பட்டிருக்கிறது. இதன்மூலம் திருமாலின் மகன் மன்மதன் பேடு கோலத்தைக் கொண்டு பேடு எனும் கூத்தினை ஆடியுள்ளான் என்பதை அறியமுடிகிறது. அவன் ஆடியதைப் போன்றே பலரும் பேடு என்னும் கூத்தினை ஆடியுள்ளனர் என்ற வரலாற்றுப்பதிவும் இதில் காணப்படுகிறது. இதனுடைய எச்சமாகவே பிற இலக்கியங்களில் திருநங்கையர்களின் பதிவுகள் காணப்படுவதாக எண்ணலாம். இதனுடைய வளர்ச்சி தமிழர்களின் இறைவழிபாட்டில் கலந்திருக்கலாம் என எண்ண இடமுண்டு. மணிமேகலையின் உரையாசிரியர் கொ.மா. கோதண்டம் ஆண்மை நீங்கிய பெண்மைக்கோல அரவான் நிலை என்று உரைகூறியிருக்கிறார் (2010:36). பண்டைய இலக்கியங்களில் இத்தகைய பதிவுகள் இருக்கின்ற காரணத்தினால் அதனுடைய வளர்ச்சியாக இத்தகைய வழிபாடுகள் தோன்றியிருக்கலாம். தொண்டைமண்டலத்தின் தலைமையிடமாக விளங்கிய காஞ்சிபுரம் பல்சமய வளர்ச்சிக்கும் தலைமையிடமாக விளங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அருச்சுனன்
வடமொழிக்காப்பிய இலக்கியமான மகாபாரதத்தில் அருச்சுனன் திருநங்கையர் போன்று வேடம் அணிந்து ஓராண்டு தலைமறைவாக வாழ்ந்து வந்தான் என்ற குறிப்புபையும் அவனுடைய குடும்ப வரலாற்றையும் பின்வருமாறு சுருக்கமாக அறியலாம்: பாண்டு அரசனின் ஐந்துமக்களுள் மூன்றாம் மகன் அருச்சுனனாவான். தீராதநோய் பற்றியிருந்த காரணத்தினாலும் முனிவர் ஒருவரின் சாபத்தினாலும் மாத்திரி, குந்தி என்று இரண்டுமனைவியர் இருந்தபொழுதிலும் பாண்டு மக்கட்பேறு இல்லாதவனாக இருந்தான். ஆகவே, குந்தி தன்கணவர் பாண்டுவின் இசைவுடன் துருவாசமுனிவர் அருளினால் பெற்ற மந்திரத்தினால் தருமராசன், வாயுதேவன், இந்திரன் ஆகிய தேவர்களை வழிபட்டு அவர்கள் வழியாக முறையே தருமபுத்திரன், பீமன், அருச்சுனன் என்னும் மூன்று மக்களைப் பெற்றாள். பின்னர்த் தன் கணவனின் மற்றொரு மனைவியாகிய மாத்திரிக்குத் துருவாசமுனிவர் அருளிய மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்து அசுவினி தேவர்கள் (இரட்டைத்தேவதைகள்) வழியாக நகுலன், சகாதேவன் என்னும் இரண்டு மக்களை அவள் பெறுமாறு செய்தாள். இவர்கள் ஐவருமே பாண்டு புத்திரர்கள் அல்லது பாண்டுவின் பிள்ளைகள் (பஞ்சபாண்டவர்கள்) என்று சொல்லப்படுகிறார்கள். ஐவர்களுள் நடுமகனாக இருப்பவன் அருச்சுனன் ஆவான். ஆகவே, அவனை மத்தியமகன் அல்லது நடுமகன் என்றும் குறிப்பிடுவர். அவன் இந்திரதேவன் மூலமாகக் குந்திக்குப் பிறந்தவன். அருச்சுனன் என்ற சொல்லிற்கு வெண்மை, தூய்மை என்பது பொருளாகும். அருச்சுனன் தன் எண்ணங் களிலும் செய்கைகளிலும் தூய்மையாக இருந்தமையால், அவன் அருச்சுனன் என்று அழைக்கப் படுகிறான். இந்திரனுடைய மகன் என்பதால் ஐந்திரி என்றும் குந்தியின் மகன் என்பதனால் குந்தேயன் என்றும் பாண்டு அரசனின் மகன் என்று பொதுவாகச் சொல்லப்படுவதினால் பாண்டவன் என்றும் குறிப்பிடப்படுகிறான். குந்திக்குப் பிருதா என்று மற்றொருபெயரும் உள்ளது. ஆகவே, பிருதாவின் மகன் ஆதலினால் பார்த்தன் என்றும் அழைக்கப்படுகிறான். இவன் அழகிய உடலமைப்புடன் கூடியவன்; நேர்மையானவன்; தன்மானமுள்ளவன்; தாராளமனப்பான்மையுடன் கூடியவன்; வில்வித்தையில் மிகவும் தேர்ச்சிபெற்றவன்; அம்பு எய்துவதில் இவனுக்கு நிகர் ஒருவரும் இல்லை; இடக்கையினாலும் அம்புஎய்துவதில் மிகத் திறமைபெற்றவன்; துரோணரிடம் வில்வித்தை பயின்று மிகச்சிறந்த மாணவன் என்று புகழ்பெற்றவன்; துரோணரின் அன்பிற்குப் பாத்திரமானவன். இவன் அம்பு எய்வதில் தன்னிடமுள்ள தேர்ச்சியின்மூலம் துருபதன்நாட்டு அரசன் வைத்த பணயத்தில் வெற்றிபெற்று அவன் மகள் திரெளபதியை அடைந்தும் தாயின்சொற்படி தன் நான்கு உடன்பிறந்தாரோடு அவளை மணந்தான். தமையனான தருமபுத்திரன், தாய் குந்தி இவர்களின் சொற்களுக்குக் கட்டுப்பட்டுக் கெளரவர்களாகிய துரியோதனன், அவன் உடன்பிறந்தோர் ஆகியோரால் இழைக்கப்பட்ட பல இன்னல்களையும் பொறுத்துக் கொண்டிருந்தான். இவன் பாண்டவர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஒரு கட்டுப்பாட்டின்படி திரெளபதியுடன் வாழ்ந்துவருகையில் அறியாமல் அக்கட்டுப்பாட்டை மீறியதன் காரணத்தால் அருச்சுனன் புனிதயாத்திரை (தீர்த்தயாத்திரை) செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது; புனிதயாத்திரை செய்தபொழுது பரசுராமரிடமும் வில்வித்தையைப் பயின்றான்; பயணத்தின்பொழுது உலூபி என்ற நாகக்கன்னிகையை மணந்து அவள் வாயிலாக ஐராவத்து (அரவான்) என்ற மகனையும் மணிபுரநாட்டு அரசகுமாரி சித்திராங்கதாவை மணந்து அவள் வாயிலாகப் பப்புருவாகன் என்ற மகனையும் பெற்றான். பிறகு துவாரகையை அடைந்து கண்ணனின் அறிவுரையாலும் உதவியாலும் பலராமரின் விருப்பத்திற்கு மாறாக அவர் உடன்பிறந்த சுபத்திரையை மணம் செய்துகொண்டான்; அவள் மூலம் அபிமன்யு என்னும் ஆற்றல்மிக்க மகனைப் பெற்றான். மகாபாரதப்போரில் தன் மகன் அபிமன்யு கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த சயத்தரதனை மறுநாள் சூரியன் மறைவதற்கு முன் கொல்வேன் என்று சூளுரைத்துத் தன் தேரோட்டியாக விளங்கிய கண்ணனின் உதவியினால் அதனை நிறைவேற்றினான்; தேவர்களுக்குப் பகைவனாக இருந்த நிவாத கவசர்கள் என்ற அசுரர்களுடன் தனிமையில் போராடி அவர்களை வென்று தேவர்களால் பெருமைப்படுத்தப் பெற்றான்; காண்டவ வனத்தை எரிப்பதற்கு அக்கினி தேவனுக்கு உதவி புரிந்தமையினால் அக்கினிதேவன் காண்டீபம் என்ற பெயருடைய மிகச் சிறந்த வில்லைப் பரிசாக அளித்தான்.

அவன் சூதாட்டத்தில் கெளரவர்கள் செய்த சூழ்ச்சிகளினால் நாட்டைத்துறந்து தன் உடன்பிறந்தார், திரெளபதி ஆகியோருடன் 12 ஆண்டுக்காலம் காட்டிலும் ஓராண்டு மறைவாக (அஞ்ஞாதவாசம்) விராடநாட்டிலும் வசித்து வந்தான்; காட்டில் வாழ்ந்தபொழுது தங்களுக்குப் பல வகைகளிலும் இன்னல்செய்து தங்களை நாட்டைவிட்டுத் துரத்திய கெளரவர்களுடன் போர்புரிவதற்காகத்   தெய்வீகப்படைக் கலங்களைப் பெற இமயமலைக்குச் சென்று கடுந்தவம்புரிந்தான். சிவபெருமான் வேடன் உருவம் தாங்கி அருச்சுனனின் வீரத்தைச் சோதித்தார். ஆற்றல்மிக்க பாசுபதாத்திரம் என்னும் ஆயுதத்தைச் சிவன் அருச்சுனனுக்கு அருளித்தார். நான்கு திசைப்பாலகர்களான இந்திரன், இமயன், வருணன், குபேரன் ஆகியோர் படைக்கலங்களை அருச்சுனனுக்குப் பரிசாக அளித்தனர். அவன் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் விராடநாட்டில் ஒருவரும் அறியா தவாறு மறைவாக ஓராண்டு வாழ்ந்தபொழுது பிருகன்னளை என்ற பெயரில் திருநங்கை உருக்கொண்டு அந்நாட்டு அரசகுமாரி உத்திரைக்கு நாட்டிய ஆசிரியனாகவும் பாடல் ஆசிரியனாகவும் இருந்தான்; துரியோதனன் விராடநாட்டுப் பசுக்கூட்டத்தைக் கவர்ந்து அந்நாட்டுடன் போர்தொடுத்தபோது, விராடநாட்டு அரசகுமாரன் உத்தரகுமாரனைத் தேரில் வைத்துக்கொண்டு மயானத்தில் பாதுகாப்புடன் வைத்திருந்த தன் காண்டீபத்தை எடுத்துக்கொண்டு போர்க்களத்தில் துரியோதனனை வென்று பசுக்கூட்டத்தை மீட்டான். அப்போது அவனுக்குப் போர்க்களத்தில் தன் மகன் அபிமன்யுடன் எதிர்த்துப்போர்புரிய வேண்டிய இக்கட்டானநிலை ஏற்பட்டது. அவ்வமயம் அருச்சுனன் பிரகன்னளை ஆனந்தன்ஜோதி மகன் சுந்தர் வெங்கடேசனிடத்தின் வேடத்தில் இருந்தமையினால் அபிமன்யுவால் தன் தந்தையை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

மகாபாரதப்போரில் அருச்சுனனின் பங்கு மிக மிகச் சிறந்ததாகும். அருச்சுனன் பகவத்கீதையின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்தவன். அவன் அப்போரில் கண்ணனைத் தன் தேரோட்டியாக இருக்குமாறு வேண்டினான். முதல்நாள் போர்தொடங்குமுன் அவன் பகைவர்களாக இருக்கிற தன் உறவினர்களையும் துரோணர் முதலான ஆசிரியர்களையும் பார்த்து மனக்கலக்கம் அடைந்தபொழுது, கண்ணன் வேதசாரத்தையும் ஆன்மாவின்  தத்துவங்களையும் சத்திரியனின் கடமைகளையும் எடுத்துக்கூறிப் போர்புரியத் தூண்டினான். அவன் போரில் மிகச்சிறந்த வீரர்களான வீடுமர், கர்ணன், சயத்திரதன் போன்றவர்களையும் கெளரவர்கள் பலரையும் கொன்றான். மகாபாரதப்போரில் பாண்டவர்கள் வெற்றியடைந்த பிறகு தருமர் அத்தினாபுரத்தை ஆண்டு கொண்டிருந்த பொழுது அசுவமேத வேள்வி செய்தார். அவ்வமயம் அருச்சுனன் பாதுகாப்பில் வேள்விக்குதிரை அனுப்பப்பெற்றது. அவன் அக்குதிரையைப் பின்பற்றிப் பல நாடுகளுக்குச் சென்று, பல அரசர்களுடன் போர்புரிந்து அவர்களை வென்றான்; மணிபுரநாட்டை அடைந்தபொழுது தன் மகனான பப்புருவாகனனுடன் போர்புரிய வேண்டியநிலை ஏற்பட்டது; அப்போரில்  தன் மகனாலேயே கொல்லப்பட்டான். அவன் உலூபி எனும் தன் மனைவியின் மந்திர ஆற்றலால் மீண்டும் உயிர்பெற்றான்; பாரதநாடு முழுவதும் சுற்றிவிட்டுப் பேரோடும் புகழோடும் அத்தினாபுரத்திற்குத் திரும்பியவுடன் அசுவமேத வேள்வி முடிக்கப்பட்டது. பின்னர், அவன் யாதவர்களின் கலகத்தின்பொழுது கண்ணனால் துவாரகைக்கு அழைக்கப்பட்டான்; வாசுதேவன், கண்ணன் ஆகியோரின் முடிவுக்காலத்தில், அவர்களுக்கு ஈமச்சடங்குகளைச் செய்தான். பின்னர் அபிமன்யுவின் மகனாகிய பரீட்சித்திற்கு முடிசூட்டித் தன் உடன் பிறந்தார்களுடன் அருச்சுனன் சுவர்க்கலோகம் அடைந்தான் (பாலுசாமி,2009:769-771).

அரவானின் பிறப்பு
அருச்சுனன், தருமனுடன் திரெளபதி தனிமையில் இருக்கையில் அவர்களைப் பார்த்துவிட்டதால், அக்குற்றம் நீங்கும் பொருட்டுத் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டு சென்றான். அவன் தன்னுடைய அரசு வேடத்தைக் கலைத்துத் தீர்த்த யாத்திரைக்கேற்ற எளியவேடம் புனைந்து தவவொழுக்கம் மிக்க அந்தணர்களுடன் புறப்பட்டுக் கங்கையில் வந்து நீராடினான். அப்பொழுது அங்கே நாகலோகத்துப் பெண்கள் நீராடும்பொருட்டு அவனுக்கு எதிரில் வந்தனர். அந்நாகலோகக் கன்னியர்களுள் உலுப்பி என்ற பெயருடைய நாககன்னிகையின் பேரழகைக் கண்டு அவள்மீது அருச்சுனன் காதல் கொண்டான். பின்பு அவள் சென்ற பிலத்தின் வழியாக அவன் அவளைப் பின்பற்றிச்சென்று நாகலோகத்தில் அவளை மணந்து கொண்டான்; அவளுடன் அங்கு சிலநாட்கள் தங்கி இன்பம் நுகர்ந்து மகிழ்ச்சியுடன் இருந்தான். அப்பொழுது உலுப்பிக்கு அரவான் என்ற மகன் பிறந்தான். அவன் சிலகாலம் மகனுடன் மகிழ்ச்சியாக அங்கிருந்துவிட்டு, பின்பு அங்கிருந்து பிலத்தின் வழியாக வெளியே வந்து கங்கையில் நீராடிக் கிழக்கு நோக்கி செல்லலுற்றான் (சின்னப்பன்,2006:102). 

கூவாகம் கூத்தாண்டவர் வழிபாடு
திருநங்கையாக உருமாறி வேடம் கொண்டு வாழ்ந்துவந்த அருச்சுனனும் திருமாலின் மகன் என்று சொல்லப்படுகின்ற மன்மதனும் அரவானின் திருமண ஆசையை நிறைவேற்றிய திருமாலும்    திருநங்கையர்களாக வேடம் அணிந்து வாழ்ந்து வந்ததையும் வேடம்கொண்டு கூத்தாடியதையும் திருநங்கையாகவே மாறியதையும் வரலாற்றுப்பதிவுகள் காட்டுகின்றன. இவர்கள் மூன்றுபேரும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு உடையவர்களாகவும் இரத்த உறவு கொண்டவர்களாகவும் காணப்படுகிறார்கள். மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களில் இவர்களுடைய பெயர்கள் காணப்பட்டுள்ளன. அருச்சுனனுடைய மகன் அரவானுடைய வரலாற்றில் திருமால் பெண்ணுருவமாக மாறிய வரலாற்றுப்பதிவுகள் காணப்படுகின்றன. தொண்டைமண்டலப் பண்பாட்டுக் கூறுகளில் வடநாட்டுப் பண்பாட்டுக்கூறுகள் சில பயின்று வந்துள்ளன. இப்பண்பாடுகள் ஒன்றோடுன்று கலந்த படிநிலைகளில் காணமுடிகின்றன.

கூவாகம் எனும் சிற்றூர் சென்னையிலிருந்து 200 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தச் சிற்றூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டைக்கு அருகில் உள்ளது. சிலநூறு மக்களே வசிக்கும் இந்தச் சின்னஞ்சிறு சிற்றூரில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழாவின்போது மட்டும் இலச்சக்கணக்கான மக்கள் கூடிவிடுகின்றனர். இந்தியாவில் எல்லாப் பகுதியிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான திருநங்கைகள் இந்த விழாவில் பங்கு கொள்கின்றனர். நாங்கள் செல்லும் ஒரே கோவில் கூத்தாண்டவர் கோவில். நாங்கள் வழிபடும் ஒரே தெய்வம் கூத்தாண்டவர். நாங்கள் கொண்டாடும் ஒரே திருவிழா கூத்தாண்டவர் திருவிழா என்று உரிமையோடும் பெருமையோடும் திருநங்கைகள் சொல்லிக்கொள்கிறார்கள்.  அருச்சுனன் மகனான அரவான் என்பவன்தான் இங்கு கூத் தாண்டவராக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். அரவானை வெறும் கடவுளாக மட்டும் கருதாமல் தங்களின் மானசீக கணவனாகவே திருநங்கைகள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.  “சித்ரா பவுர்ணமி விழா வரப்போகுது, நம்ம புருசனைப் பார்க்கப் போகனும்” என்று திருநங்கைகள் தங்கள்  இனத்தாரிடையே சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் வீட்டில் நடக்கும் ஒரு விழாவாகவே அதை பார்க்கிறார்கள். இந்துக்கள், கிறித்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் எனப் பல்வேறு மதங்களைக் கடந்து  இனம், மதம், மொழி, சாதி என்று பல்வேறு வகைபட்ட திருநங்கைகள் உள்ளனர்.  ஆனாலும் அவர்கள் சாதி, மதம் வேறுபாடுகள் கருதாமல் கூத்தாண்டவரை வழி படுகிறார்கள். கூத்தாண்டவரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கிறது என்ற ஒரே நம்பிக்கைதான் இதற்குக் காரணமாகும். திருநங்கைகள் மற்றும் கூவாகம் பகுதிவாழ் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றுகலந்த நிலையில் நிற்கிறார் கூத் தாண்டவர். இந்தியாவின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் வரும் திருநங்கைகளை ஒன்றிணைக்கும் திருவிழாவாகச் சித்ரா பவுர்ணமியன்று நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழா அமைந்துள்ளது.

அவர்கள் தங்கள் தோழிகளைச் சந்தித்தல், உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுதல், நலம்விசாரித்தல் போன்ற முறைகளுக்கு ஏற்றதொரு களமாகவும் இந்தக் கூத்தாண்டவர் திருவிழா விளங்குகிறது என்பதுதான் ஒட்டுமொத்த திருநங்கைகளின் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். பொதுவாக நகர்ப்புறங்களில் திருநங்கைகள் மீது வீசப்படும் கேலிப்பார்வைகள், கிண்டல்கள், சீண்டல்கள் போன்றவை கூவாகமக்களிடையே இல்லை என்பது கவனிக்கப்படவேண்டிய செய்தியாகும். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சீதா என்கின்ற திருநங்கை கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாகக் கூவாகம் திருவிழாவிற்கு வருகிறேன்; மற்றவர்களைப் போல் இல்லாமல் இந்த ஊர்மக்கள் எப்போதும் எங்களிடத்தில் அன்பாகப் பழகுவார்கள்; முன்பெல்லாம் கூத்தாண்டவர் திருவிழாவிற்கு வருவதென்றால் விழுப்புரத்தில் இறங்கி வண்டி கட்டிக் கொண்டு செல்வோம்; கோவிலில் வில்லிபாரதக்கதையைப் படிப்பார்கள்; மனசுக்கு இனிமையாகவும் இதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்கின்றார். இந்திய திருநங்கைகள் தங்களின் புனிதத்தலமாகக் கருதிவரும் கூவாகம், தற்பொழுது அயல் நாட்டுத் திருநங்கைகளின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் திருநங்கைகள் தங்களுக்கென்று ஒரு திருத்தலம் அமைந்திருப்பதைப் பெருமையாகக் கருதுகின்றனர். கடந்த இருபது முப்பது வருடங்களாகத் திருநங்கைகளின் கோவிலாக இந்தக் கோவில் பிரபலப்படுத்தப்பட்டாலும் பொதுமக்களின் வழிபாட்டுக்குரிய கோவிலாகத்தான் காலங்காலமாக இது விளங்குகிறது (பாலு விஜயன், சக்திவேல்,2007:9-11).

ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூடுகின்ற ஊராக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூவாகம் திகழ்கிறது. சித்திரைமாத திருவிழாவின்போது கடைக்கண்ணிகள் எனச் சிறப்பிக்கப்படும் தெருக்கள் சமூகத்தில் கிண்டல் கேலிக்குப் பலியாகின்ற திருநங்கைகளின் புண்ணியபூமி. ஒன்பது என இழி பொருளில் சுட்டப்படுகின்றவர்கள் மனம்விட்டுப்பேசுகின்ற தாய்மடியாகும். மொத்தத்தில் ஓர் ஆன்மீகத்தலம் பெயர்ப்பலகை இல்லாமல் காணப்படுகிறது. கூவாகச்சிற்றூர் சிறப்பாகப்பேசப்படுவதற்குக் காரணம் அங்குள்ள அரவான் கோவில் மட்டும்தான். இக்கோவில் நானூறு - ஐநூறு ஆண்டுகள் பழமையுடையது என இச்சிற்றூர் மக்கள் கூறுகின்றனர். கோவிலைப்பற்றிப் பேசும்போதே, அவர்கள் குரலில் பக்தியும் பரவசமும் பெருமையும் ததும்பிவழிகிறது. அழகிய மோகினியாக வடிவம் கொண்டார் கிருஷ்ணபரமாத்மா. அந்த அழகிய வடிவத்திற்குக் கணவனாகும் பாக்கியம் பெற்றார் கூத்தாண்டவர். அந்தக் கூத்தாண்டவரின் அருள்பெற வருகைதரும் பக்தர்களை வருக வருக என்று வரவேற்பதுபோல இருகரம் குவித்து வணங்கியபடி நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார் ஆஞ்சநேயர். ஐநூறு ஆண்டுகாலப் பழமை உடையது என்பதை மெய்ப்பிக்கும்படியாக இக்கோவில் அமைப்பு உள்ளது. சிறுதெய்வக்கோவில் வடிவில் கட்டப்பட்டுள்ள இக்கோவில் ஆகமமுறையில் அமைக்கப் படவில்லை. கருவறையில் ஊஞ்சல் ஒன்றில் அரவானின் சிரசு வைக்கப்பட்டுள்ளது. ஊஞ்சலில் வைக்கப்பட்டுள்ளதால் அரவானின் சிரசு மெல்ல ஆடிக்கொண்டே இருக்கிறது. கார்த்திகைமாதம் நாட்டுக்கார்த்திகையன்று சபரிமலைக்குச் செல்கின்ற பக்தர்கள் கூத்தாண்டவருக்குத் திருவிழா நடத்துகின்றனர். அன்று ஐந்துமணிக்கு வழிபாடு நடை பெறுகிறது. பன்னிரெண்டு மணிக்குச் சாமியின் சிரசு ஊர்வலம் வருகிறது. பொதுமக்கள் கார்த்திகை தீபமேற்றி கூத்தாண்டவரை வழிபடுகின்றனர். தைமாதத்தில் மாட்டுப்பொங்கலன்றும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் பச்சரிசியும் பிற பொருள்களும் கோவிலுக்கு எடுத்துச்சென்று பொங்கல் வைக்கின்றனர். கூத்தாண்டவரைக் குலதெய்வமாகக் கொண்ட விவசாயக்குடும்பத்தினர் இந்த விழாவைச் சிறப்பாக நடத்துகின்றனர். அதேபோன்று பங்குனி உத்திரத்தன்றும் சிறப்புப்பூசைகள் நடத்தப்படுகின்றன. அரவானின் சிரசு ஊர்வலமும் நடத்தப்படுகிறது. இக்கோவிலில் நடத்தப்படும் விழாக்களில் மணிமகுடமாகத்திகழ்வது சித்திரைமாதம் நடைபெறும் விழாவேயாகும். பதினெட்டு நாள்கள் இந்த விழா கோலாகலமாக நடைபெறுகிறது. குலவழிபாடாக இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொங்கல் வைத்தும் பொதுமக்களுக்கு அன்னதானம் அளித்தும் வருகின்றனர். சுமார் ஆயிரம்பேருக்கு மாதாமாதம் அன்னதானம் இங்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரும் பான்மையான கோவில்களில் பொங்கல் வைத்தல், தீபமேற்றுதல், அன்னதானம் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளைப் போன்றே இக்கோவில் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

கருவறையிலிருக்கும் அரவானின் உயிரைக் கலசத்துக்கு மாற்றும் ஒரு வினோதமான சடங்கு கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் மட்டுமே நிகழக்கூடிய ஒன்றாகும். காலை ஒன்பது மணிக்கு பாரதச்சொற்பொழிவு நடத்தப்படுகிறது. அரவானின் களப்பலிபாரதம் சொல்லி முடிந்தவுடன் கோவிலில் பூசை தொடங்குகிறது. பூசாரியானவர் தீபாரதனை செய்து கலத்தில் அரவானின் உயிரைப்பெறுகிறார்; உயிர்ப்புப்பெற்ற கலசத்தைச் சாமிப்பாட்டால் மறைத்துக்கட்டி மலர்மாலை சார்த்தி ஊஞ்சலில் வைக்கின்றனர். அவர்கள் சிரசிலிருந்து கலசத்துக்கு உயிரை மாற்றும் சடங்கினை “பாலாயணம் செய்தல்” என்ற ழைக்கின்றனர். சுவாமியின் உயிரைக்கலசத்தில் பிடித்ததும் அரவான் பலியாகிவிட்டதாகக் கருதப்படுகிறது. இறந்தவரின் உடலை எடுத்துச்சென்றவுடன் வீட்டைக் கழுவிவிடுதல் போலவே சிற்றூர்மக்கள் தங்கள் வீட்டினைச் சாணத்தால் மெழுகித் தூய்மை செய்கின்றனர்; உயிரை மீண்டும் அரவான் சிரசுக்கு ஏற்றும் நிகழ்ச்சியை ‘சுவாமிக்குக் கண் திறத்தல்’ என்கின்றனர். இந்த நிகழ்ச்சி புதன்கிழமை காலை மூன்று மணிக்கு தர்மராசக் கோவிலில் நடைபெறுகிறது.  இது சுமார் ஐநூறு ஆண்டுகளாக் கடைப்பிடிக்கப்படும் நிகழ்வாகும்.

சந்திரகிரி என்ற நாட்டை ஓர் அரசன் ஆண்டுவந்தான். அந்த நாட்டுக்கு உட்பட்டபகுதியில் வெள்ளையருக்குச் சொந்தமான இருபது ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தை மாணிக்கம் என்பவர் பராமரித்து வந்தார். அவர் ஒரு நாள் இரவில் தன்னந்தனியாகக் கம்பங்காட்டைக் காவல் காத்துவந்தபோது, பாரதக்கதையைப் பாடிக்கொண்டிருந்தார். அப்போது யாரோ எதிரில் அமர்ந்துகொண்டு பாரதக்கதையைக் கேட்பதுபோல ஆமாம் என்ற ஒரு குரல் கேட்டது. அவர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு மீண்டும் பாரத்தக் கதையைப்பாடினார். மீண்டும் அதே குரல் ஆமாம் என்று எதிர்பாட்டு பாடியது. அவர் ஊர்ப்பொதுமக்களை அழைத்துக் கொண்டுவந்து மறுநாள் இரவு பாரதக்கதையைப் பாடியபொழுதும் ஆமாம் என்ற ஒரு குரல் வந்தது. அவர்கள் ஆமாம் என்ற  குரல் வந்த  திசையை நோக்கிச் சென்றபோது, ஏரிக்கரை ஓரமாகக் காளிகோவில் பக்கத்தில் புதரொன்றில் அதிசயக்குரல் வருவதை அனைவரும் உணர்ந்தனர். அப்புதரில் மரத்தினால் செய்யப்பட்ட தலைப்பகுதி சிலை ஒன்று மட்டுமே காணப்பட்டது. அப்போது ஒருவர் டெய் நாந்தாண்டா கூத்தாண்டவர் பேசுறேன் என்று சாமியாடினார். என்னைக் கொண்டுபோய் கூவாகம் சிற்றூரில் வைத்து எனக்கு ஒரு கோவில் எழுப்பவேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை சித்ரா பெளர்ணமி அன்று எனக்குத் திருவிழா எடுக்கவேண்டும். என்னுடைய பரிபூரண ஆசி என்றைக்கும் உங்களுக்கு உண்டு என்று கூத்தாண்டவர் சாமியாடி வாயிலாகப் பேசினார்.  அவர்கள் கூத்தாண்டவர் சிலையைக் கூவாகம் சிற்றூருக்குக் கொண்டு வந்தனர்; கூரைக்கோவில் அமைத்தனர். அன்றை யிலிருந்து தங்கள் குலதெய்வமாகவே கூத்தாண்டவரை வழிபடத் தொடங்கினர் கூவாக மக்கள். கூத்தாண்டவர் கோவிலைக் கிளியூர் கணக்குப்பிள்ளை, கல்பரதேசி சுவாமிகள் ஆகிய இருவரும் கட்டியுள்ளனர்.
கிருஷ்ணபகவான் பதினெட்டுநாள் பாரதப்போரில் கெளரவர்களுக்குச் சாதகமாக இருந்த வெற்றியைப் பாண்டவர்களுக்குச் சாதகமாக மாற்றினார். அருச்சுனன் மகன் அரவான் துரியோதனனுக்குத் தன் உயிரைக்கொடுக்கக் (களப்பலியாக) கொடுத்த தன்வாக்கை மாற்றிப் பாண்டவர்களுக்குத் தன் உயிரைக்கொடுக்க (களப்பலியாக) முன்வந்தான். அப்போது அரவானின் திருமண ஆசையை நிறைவேற்ற அரவான் களப்பலி (நரபலி) ஆவதற்கு முதல்நாள், அரவானின் திருமண ஆசையைத் திருமால் பெண்வடிவமாக உருவெடுத்து நிறைவேற்றினார். மறுநாள் அரவான் பாண்டவர்களுக்காக அமாவாசை நாளன்று தன் உயிரை நரபலியாகக் கொடுத்து வெற்றியைத் தேடித்தந்தான். இருமுறை அசுரர்களை வெல்வதற்காக மோகினி அவதாரம் எடுத்த திருமால் மூன்றாம்முறையாக அரவானின் ஆசையை நிறை வேற்றுவதற்காக மோகினியாகமாறி அவனைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களது முதல் இரவுகழிந்த மறுநாள் காலையில் அரவான் காளிக்குக் களப்பலி கொடுக்கப்பட்டான்.  கிருஷ்ணர் வெள்ளைச்சேலை உடுத்தி விதவைக்கோலம் பூண்டார். அவர் நெற்றிப்பொட்டை அழித்தும் கைவளையல்களை உடைத்தும் இறந்துபோன தன் ஒருநாள் கணவனுக்காகத் துக்கம் கொண்டாடினார். பலி கொடுக்கப்பட்டாலும் அரவானின் சிரசு மட்டும் உயிரோடு இருந்தது. அதனையறிந்த கிருஷ்ணர் அரவானின் சிரசை சரபங்க நதியில் விடச்சொல்லி கருடனுக்குக் கட்டளையிட்டார். சரபங்க நதியில் விடப்பட்ட அரவானின் சிரசானது திருப்பதி வழியாகத் திருக்கோவிலூர் பெண்ணை நதியை வந்தடைந்தது. சந்திரகிரிநாட்டுக்கு வடதிசையில் உள்ள சங்கம் புதரில் அந்த சிரசு ஒதுங்கியது. சந்திரகிரியை ஆண்டுவந்த மன்னனுக்குப் பல வருடங்களாகக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது, கிருஷ்ணரின் அருளினால் சரபங்க நதிக்கரையோரமாக அம்மன் கோவிலுக்கு முன்பாக இருந்த யாரும் உரிமைக்கோராத ஒரு குழந்தையை எடுத்து வளர்த்து, அந்நதிக்கரையில் இருந்தகாரணத்தினால் அக்குழந்தைக்கு சரபாலன் என்று பெயரிட்டு வளர்த்துவந்தார்.

ஒருநாள் வேற்றுநாட்டு மன்னனும் கூத்தாசூரன் என்பவனும் சேர்ந்து சந்திரகிரி நாட்டைக்கைப்பற்றினர். மன்னன் காட்டிற்குச் சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்தபோது, பதினாறுவயதை எட்டிய சரபாலன் வேற்றுநாட்டு மன்னர்களைத் தோற்கடித்து மீண்டும் அந்நாட்டைத் தன் தந்தையிடமே ஒப்படைத்தார். அவன் ஒருநாள் தன் பெற்றோரைத் தான் குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்குச் சூரியன் மறைவதற்கு முன்பாக என்னை வந்துபாருங்கள் என்றான். அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது அவர்களின் மகனாகிய சரபாலனைக் காணவில்லை; அந்தப் பகுதியை நன்றாக உற்றுப்பார்த்தவர்களை அதிரச்செய்தது அந்தக் காட்சி; சரபாலனின் தலைப்பகுதி மட்டுமே அந்த இடத்தில் இருந்தது; உடல் பகுதியைக் காணவில்லை; ஆசை ஆசையாக வளர்த்த தன்மகன் இப்படியொரு நிலையில் இருப்பதைக் கண்டு எந்தப் பெற்றோர்தான் பொறுத்துக் கொள்வார்கள்; மனம்கலங்கிக் கதறியழுதார்கள். சரபாலன் வருடந்தோறும் சித்ரா பவுர்ணமியன்று கூத்தாசூரனோடு போர்புரிந்த என் உருவத்தைத் தேரலங்காரத்தில் காணலாம்; சித்ரா பவுர்ணமியைத் தவிர மற்ற நாள்களில் என் சிரசை (தலையை) மட்டும்தான் பார்க்கமுடியும் என்று சொல்லிவிட்டு மறைந்தான். கூவாகச் சிற்றூர்மக்கள் சந்திரகிரி அரசன் காலத்தில் அறுபட்ட சிரசு வடிவில் மறைந்ததும் மாணிக்கம் கம்பங்காட்டில் பாடிய பாரதத்துக்கு ஆமாம் என்று குரல் கொடுத்ததும் ஒரே சிரசுதான் (தலைதான்); அதே சிரசுதான் இப்போது கூவாகத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறது என்கின்றனர். இந்த ஊர்மக்கள் அருள்கடலாகிய கூத்தாண்டவருக்கு விழா எடுப்பதையே வாழ்வின் கடமையாகக் கொண்டுள்ளனர் (பாலு விஜயன், சக்திவேல், 2007:11-46).

கூவாகம் சித்ரா பவுர்ணமி விழா வழிபாட்டுமுறை
கூவாகம்சிற்றூரில் இருவீட்டார் திருமணநிகழ்ச்சி நடை பெறுகிறது. வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், இனிப்புவகைகள், பூ ஆகிய பொருட்கள் உள்ள தாம்பளத் தட்டுக்களை மாப்பிளைவீட்டாரும் பெண்வீட்டாரும் பரிமாறிக் கொள்கின்றனர். இங்கு கூடியிருக்கும் ஊர்ப் பொதுமக்களுக்கெல்லாம் வெற்றிலைத் தாம்பூலம் வழங்கப் படுகிறது. அரவான் கல்யாண நிகழ்ச்சியில் பெண்கேட்கும் நிகழ்ச்சிநடைபெறுகிறது. பறையிசைக்கும் இனத்தாரிடையே நான்கு குழுக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குழுக்களிலிருந்தும் ஒரு ஆண்டுக்கு ஒருவர் சாத்துக்காரராகத் தேர்ந் தெடுக்கப்படுகிறார்.  நினைவிருக்கட்டும் இந்த ஆண்டு சாத்துமுறை உங்களுடையது என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே அவர்களுக்கு நினைவூட்டப்படுகிறது.  ‘சாத்துக்காரர்’ என்பது தாலி கட்டிக்கொள்பவர் என்று பொருள். அந்த வருடச்சாத்துக்காரருக்கு மூன்றாம் பிறை அன்று சாமிக்குப் பூபோடும் வழக்கம் ஒன்றும் இருந்துள்ளது. நான்கு குழுக்களின் தலைவர்களின் பெயர்களும் துண்டுச்சீட்டுகளில் எழுதப்பட்டுச் சுருட்டி வைக்கப்படுகிறது. அர்ச்சகர் அவற்றைக் கூத்தாண்டவர் முன் குலுக்கிப்போட்டு அதில் ஒரு சீட்டை எடுக்கிறார். அதில் யார் பெயர் வருகிறதோ அவர்களே சாத்துக்கட்டிக்கொள்வதற்கு நியமிக்கப்படுவர். இவர் எத்தனை ஆண்டுகள் வேண்டுமென்றாலும் சாத்துக்கட்டலாம். ஆனால் அவரது மனைவி இறந்துவிட்டால் சாத்துக்கட்டக்கூடாது என்பது ஐதீகம். சாத்துக்கட்டிக்கொள்பவரும் அவரது மனைவியும் ஒழுக்கமுடையவர்களாக இருக்கவேண்டும் என்ற விதி இங்கு கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வெற்றிலை, பாக்கு மாற்றிய எட்டாம் நாள்முதல் சாத்துக்காரனின் மனைவி விரதம் மேற்கொள்கிறார்; ஒருவேளை உணவுதான் சாப்பிடுகிறார்; சாமிக்கு வெண்பொங்கல் படைத்து நாள்தோறும் வழிபாடுசெய்கிறார். சாத்துக்காரரின் மனைவி விரதம் மேற்கொள்வதற்குத் தேவையான மளிகைப்பொருட்கள் மற்றும் வழிபாட்டுப்பொருள்களைச் சாத்துமுறை உள்ளவர்கள் கொடுக்கின்றனர். இந்தவகையில் அவர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வரையிலும் செலவாகும் என்று கூறுகின்றனர். சாத்துக்காரரின் மனைவி விரதம் தொடங்கும் முதல்நாளன்று மூன்றுபடி அரிசிச்சோறு வடித்து, மூன்று வாழை இலைகளில் வைத்துப்படைத்து தீபாராதனைக் காட்டி வழிபடுகின்றனர். அப்போது பறையிசை முழக்கப்படுகிறது. சாத்துக்காரர் இருவர், சாத்துக்காரரின் மனைவி ஆகிய மூவரும் வழிபாடு முடிந்தவுடன் படையல் சோற்றைப்பிசைந்து அருகேயிருக்கும் பொது மக்களுக்கு அளிக்கின்றனர். இதனை  ‘குருசாதம்’ என்கின்றனர்.

சாத்துக்காரர் மனைவிக்கென்று சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இறப்பு நிகழ்ந்த எந்த வீட்டுக்கும் இவர்கள் சென்று வரக்கூடாது. இவரின் உடன்பிறந்தோர் இறந்து விட்டாலும்கூட அந்த இடத்துக்கு இவர்கள் செல்லக்கூடாது. பூப்பெய்திய பெண்கள் சாத்துக்காரர் மனைவியைப் பார்க்கமாட்டார்கள். விரதம் மேற்கொள்ளும் பதினாறு நாட்களுக்கும் இவர்கள் கோவிலுக்குச் சென்று சாமியைப்பார்ப்பதில்லை; விழாமுடியும் நாளான தர்மர் பட்டாபிசேகம் அன்றுதான் சாமிபார்க்கச்செல்வர்; பெரும்பாலும் இவர்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை; அப்படியே வெளியே வந்தாலும் தலையில் முக்காடு போட்டபடி முகத்தை மூடிக்கொண்டுதான் வெளியே வருகிறார்கள். இவர்கள் வாழும் தெருவில் சண்டை சச்சரவு கூச்சல் குழப்பம் இருக்கக்கூடாது. சித்திரைமாதம் பதினாறாம்நாள் புதன்கிழமை மாலை நான்கு மணிக்குத் தெய்வநாயகம் செட்டியார் தோப்பு என்கிற இடத்தில் தாலிகட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சாத்துக்காரர் ஒருவருக்குத் தாலி அணிவிக்கப்படும் நிகழ்ச்சி  ‘காப்புக்கட்டுதல்’ என்று அழைக்கப்படுகிறது. சாத்துக்காரப்பெண் காலையிலேயே அழைத்து வரப்படுகிறார். மாலைவரை அங்கேயே அந்தப் பெண் தங்கியிருக்க வேண்டும். சாத்துக்காரர் மாலை நான்கு மணிக்கு அந்த இடத்துக்கு வந்துசேர்ந்துவிடுவார்.  அந்த இடத்திற்குப் பூசாரிகளும் வந்துவிடுகின்றனர். தலைமைப்பூசாரி முதலில் செட்டியார் தோப்பில் தாலி கட்டிக்கொள்கிறார். வில்வமரக்குச்சி, அத்திமரம், வன்னிமரம் ஆகிய குச்சிகளால் பூப்பந்தல் அமைக்கப்படுகிறது. இது திருமணப்பந்தலாகக் கருதப்படுகிறது. அங்கே இரு சோடிகளுக்குத் திருமணம் நடக்கிறது. ஆதிதிராவிட சாத்துக்காரர் மணப்பெண்ணாகவும் வன்னியர் இனத்தைச் சார்ந்த ஒருவர் மாப்பிள்ளையாகவும் அந்தப் பந்தலில் இருப்பர். அதேபோலத் தலைமைப்பூசாரி மணப்பெண்ணாகவும் நந்தவேலியைச் சேர்ந்தவர் மாப்பிள்ளையாகவும் வீற்றிருப்பார்கள். தாலிகட்டும் சடங்கு முடிந்த பின்னர் அனைவருக்கும் வெற்றிலை தாம்பூலம் கொடுக்கப்படுகிறது. பஞ்சாமிர்தமும் வழங்கப்படுகிறது. அதன்பிறகு    ‘பாலிவிடுதல்’ என்றோர் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவதானியங்களை ஒன்றாகச் சேர்த்து கூவாகம் சிற்றூரைச் சுற்றியுள்ள பல்வேறு சிற்றூரைச்சேர்ந்த 25 பெரியவர்கள் பாலிவிடுவார்கள். அதனைத் தாலிகட்டிக்கொண்ட சாத்துக்காரப்பெண் தண்ணீர் ஊற்றிப்பாதுகாக்க வேண்டும். பாலி எந்தத் திசையில் செழுமையாக முளைத்திருக்கிறதோ அந்தத் திசையில் அந்த ஆண்டு விளைச்சல் நன்றாக இருக்கும் என்பது நம்மிக்கையாகும்.   

பாலிவிடுதல் நிகழ்ச்சி முடிந்ததும் செட்டியார் தோப்பில் பாரதம் தொடங்குகிறது. அதன்பின்னர் அவர்கள் தாலி தரித்துக்கொண்டவர்களை மேளதாளத்துடன் கூவாகம் வீதிகளின்வழியே ஊர்வலமாக அழைத்து வருகின்றனர். தாலிதரித்துக்கொண்ட தலைமைப்பூசாரி விழாக்குழுவின் தலைவர் ஆவார். விழாக்குழுவிலுள்ள மற்ற பூசாரிகளுக்கு இவரே காப்புக்கட்டுகிறார். சுவாமியின் பூசைக்குத் தேவையான பொருட்களை இவரே நாள்தோறும் வாங்கி வருதல் வேண்டும். சித்திரை பதினாறாம் நாளன்று கோவில் வளாகத்தில் ஆதிதிராவிட இனத்தவர் பொங்கல் வைக்கின்றனர். அவர்கள் செட்டியார் தோப்பில் தாலிகட்டும் நிகழ்வு முடிந்தவுடன் மேளதாள முழக்கத்துடன் புது அடுப்பு மூட்டி பொங்கல் வைக்கின்றனர்.  வேண்டுதல் உள்ளவர்கள் மட்டும் சேவல், ஆடு ஆகியவற்றைப் பலியிடுவதுண்டு. அன்றிரவு அரவானின் சிரசு ஊர்வலம் விடியவிடிய நடைபெறுகிறது. கரகம் செய்வதற்குத் தேவையான புதுப்பானை, கலசம் உள்ளிட்ட பொருட்கள் குளத்தில் கழுவித்தூய்மை செய்யப்படுகின்றன. பின்னர் வேப்பிலை, மல்லிகைப்பூக்கள் கொண்டு கரகம் அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர் அந்த அழகிய கரகத்துக்குத் தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சை, ஊதுபத்தி, வெற்றிலை, பாக்கு வைத்துப்படைத்து தீபாராதனைக் காட்டப்படுகிறது. அதன்பின்னர் அவர்கள் வேப்பிலை கரகத்தை மேளதாள முழக்கத்துடன் மரியம்மன் கோவிலுக்கு எடுத்துச் செல்கின்றனர். அங்கே மாரியம்மனுக்கு வாழை இலை படையல் போட்டு பூசை செய்யப்படுகிறது. இந்த வேப்பிலை கரகத்தைச் சுமப்பவர் ஒரு சலவைத்தொழிலாளியாக இருக்கவேண்டும் என்பது மரபு. மாரியம்மனின் தாய்வீடு சலவைத்தொழில் புரியும் ஏகாளியின் வீடாகும். இந்த இனத்தில் மூத்தவரான ஒருவரே கரகம் சுமப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் ஏகாளியானவர் திருக்குளத்தில் குளித்துத் தலைமூழுகி ஈரத்துணியுடன் வருவார். அவருக்குப் புதுவேட்டி உடுத்தி, உடம்பு முழுவதும் திருநாமங்கள் வரையப்படுகின்றன. வேட்டியில் மஞ்சள் தெளிக்கப்படுகிறது. இடுப்பைச்சுற்றிலும் வேப்பிலை செருகப்படுகிறது. அதன்பிறகு மேளதாள முழக்கத்துடன் முக்கிய ஊர்ப்பெரியோர்கள் ஏழை முதல் பணக்காரர் வரையில் வேறுபாடுயில்லாமல் அனைத்துச்சாதி மக்களும் நாட்டார், தர்மகர்த்தாக்கள், அர்ச்சகர்கள் சேர்ந்து கரகத்தினை ஏகாளியின் தலைமீது வைக்கின்றனர். வேப்பிலை கரகமானது கூவாகச் சிற்றூர் தெருக்கள் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது. கரகம் சுமப்பவர்மீது கூத்தாண்டவர் குடிகொண்டிருப்பதாகவே பக்தர்கள் நம்புகின்றனர். ஆகவே, அவர்கள் கரகம் தங்கள் வீட்டு முன்பாக வரும்போது ஏகாளியின் பாதங்களுக்குத் தண்ணீர் ஊற்றி மஞ்சள்பூசுகின்றனர்; எங்கள் வீடு எல்லா வளமும் பெற்றுநலமாக இருக்கவேண்டும்; அதற்கு மாரியம்மாதாயே நீதான் வழிகாட்டவேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு கரகம் சுமப்பவரின் காலில் விழுந்து வணங்குகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் தீபாராதனை முடிந்தவுடன் பெண்கள் கூழ்ப்பானை சுமந்துகொண்டு கரகத்தினைப் பின்தொடர்ந்து ஊர்வலமாக வருகின்றனர். கரகம் மாரியம்மன் கோவிலை வந்தடைந்ததும் கூழ்ப்பானைகளைச் சுமந்து வந்த பெண்கள் கோவிலை மூன்றுமுறை வலம்வந்து மாரியம்மன் சிலைக்கு முன்பாகக் கூழ்ப்பானைகளை இறக்கி வைக்கின்றனர்; தீபாராதனை செய்து படைத்த பின்னர் பொதுமக்களுக்கு அந்தக் கூழ் வழங்கப்படுகிறது. இவ்விழா மாரியம்மன் வழிபாட்டோடு தொடர்புடைய ஒரு வழிபாடாகக் காணப்படுகிறது.

ஏகாளியின் வீடே மாரியம்மனுக்குத் தாய்வீடு என்பதால் தாய்வீட்டுச்சீதனத்தைக் கொண்டு செல்லும் ஒப்பனை மாரியம்மன் சிலைக்குச் செய்யப்படுகிறது. கூழ்வார்த்தல் நாளன்று ஏகாளியின் குடும்பத்தார் பச்சரிசி, தேங்காய், சீப்பு, குங்குமச்சிமிழ், வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வாங்கிவருகின்றனர். அப்பொருள்கள் அம்மனின் மடியில் வைத்துக்கட்டப்படுகிறது. இந்தச் சடங்குக்கு ‘மடிப்பாளையம் கட்டுதல்’ என்று பெயராகும். அன்றிரவு எட்டுமணியளவில் ஊர்ப்பெரியோர்கள், தர்மகத்தா, கோவில் அர்ச்சகர்கள் ஆகியோரும் ஊர்ப்பொதுமக்களும் மாரியம்மன் சிலையின் முன்பாகக் கூடுகின்றனர். ஒரு மூட்டை பச்சரிசி கொண்டு சமைக்கப்பட்ட சோறு மாரியம்மன் சிலையின் முன்பாக வெள்ளை வேட்டியில் குவியலாகப் படைக்கப்படுகிறது. பூசாரிகள் வீட்டிலிருந்து இந்தச் சோறு கொண்டு வரப்படுகிறது. கருவாட்டுக்குழம்பு, கொழுக்கட்டை போன்றவையும் வேட்டியில் வைக்கப்படுகிறது. அகல்விளக்கு, மாவிளக்கு ஏற்றப்பட்டு அம்மன் வழிபாடு நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு அந்தப் படையல் சோறு வழங்கப்படுகிறது. இந்தச் சடங்குக்கு ‘கும்பப்பாளையம் படைத்தல்’ என்று பெயராகும். தமிழகத் திருமண விழாக்களில் தாலி கட்டுவதற்கு முன்பு அரசாணிக்கால் நடுவது ஐதீகமாகும். கூத்தாண்டவர் கோவில் விழாவில் தாலிதரிப்பதற்கு முன்பாக வெள்ளிக்கால் நடும் புதுமையான வழக்கமொன்று உள்ளது. மூங்கில் கம்பு ஒன்றுக்கு மஞ்சள்பூசி பூமாலை சார்த்தி மாஇலை கட்டுகின்றனர். அந்தக் கம்புக்குத் தீபாராதனை காட்டப்படுகிறது. அவர்கள் மேளதாள இசையுடன் அந்தக் கம்பினைப் பந்தலடிக்கு எடுத்துச்செல்கின்றனர். அங்கே தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் படைத்துப் பூசை செய்யப்படுகிறது. அவர்கள் அங்கே ஒரு குழி தோண்டுகின்றனர்; ஒரு மஞ்சள் துணியில் கொஞ்சம் வெள்ளியை வைத்து முடிந்து அந்தக் குழியில் இறக்குகின்றனர்; அதன்பின்னர் அந்தக் குழியில் வெள்ளிக்காலினை நடுகின்றனர்; வெல்லம் கலந்த பச்சரிசியை அங்குள்ள அனைவருக்கும் வழங்கிவிட்டுக் கோவிலுக்குத் திரும்புகின்றனர் (பாலு விஜயன்,சக்திவேல்,2007:47-54).

திருமணநிகழ்வு
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் கூடிடும் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் தங்களது மானசீகக் கணவனை மனதில் நினைத்தபடியே திருமாங்கல்யம் அணிந்து கொள்கின்றனர்; திருமாங்கல்யத்தைப் பூசாரியின் கரங்களாலோ அல்லது வேறு எவருடைய கரங்களாலோ அணிந்துகொள்கின்றனர். இந்தக் கோவிலில் பொதுமக்களும் தாலி அணிந்து கொள்கிறார்கள். ஆனால், இங்கு திருநங்கைகள் தாலி அணிந்துகொள்வதே சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.  ‘கிருஷ்ணபகவான் அரவானுக்காக ஒருநாள் மட்டுமே தாலி அணிந்து அறுத்தார்; நாங்களோ அரவானுக்காகத் தொடர்ந்து தாலி அணிந்து அறுத்துவருகிறோம்’. என்று திருநங்கைகள் பெருமையோடு சொல்லிக்கொள்கிறார்கள். திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்வதற்காகத் தாம்பூலத்தட்டை ஏந்தியிருக்கிறார்கள். அதில் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம், ஊதுவத்தி, மஞ்சள், குங்குமம், மஞ்சள்கயிறு, முல்லைப்பூ ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. கோவிலில் உள்ள அர்த்தமண்டபத்தில் பூசாரி நின்றுகொண்டிருப்பார். அவரிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து தாம்பூலத்தட்டை அளிக்கின்றனர். அந்தத் தட்டைப்பெற்றுக்கொண்ட பூசாரி அதிலுள்ள தேங்காயை எடுத்துக் கூத்தாண்டவருக்கு உடைக்கிறார்; அதன்பிறகு சூடம் ஏற்றி தீபாராதனை காட்டுகிறார்; மாங்கல்யம் எடுத்து அணிவிக்கிறார்; பக்தரின் வலது கையிலும் மஞ்சள் கயிறு அணிவிக்கிறார்; முல்லைப்பூ மாலையைக் கழுத்திலும் கையிலும் அணிவிக்கிறார். பூசாரியின் கைகளால் திருநீறு பெற்றுக்கொண்டு அவர்கள் கூத்தாண்டவரை மனதார வேண்டுகின்றனர். சித்திரைப் பெருவிழாவுக்கு வருகைதரும் திருநங்கைகள் செவ்வாய்க்கிழமை தாலிதரித்துப் புதன்கிழமை தாலி அறுக்கிறார்கள்; செவ்வாய்க்கிழமை இரவுமுழுவதும் கும்மியடித்து ஆடுகின்றனர். கூவாகத்தில் மட்டுமில்லாமல் சிதம்பரத்திலுள்ள கொத்தடை, புதுவைக்கு அருகில் உள்ள பிள்ளையார்குப்பம் ஆகிய ஊர்களிலும் கூத்தாண்டவர் கோவில்கள் உள்ளன. அந்தக் கோவில்களுக்கும் குறைந்த அளவு எண்ணிக்கையுள்ள திருநங்கைகள் சென்று வழிபடுவதுண்டு. தங்களைக் கண்ணனின் வழிவந்தோர் எனக் கருதும் திருநங்கைகள், தாலி அணிந்துகொண்ட அந்த நாளில் புதுமணப்பெண் முதலிரவின்போது பால் பழத்தோடு செல்வதுபோல அரவான் சிலைக்கருகே செல்கின்றனர். இது புதுவை பிள்ளையார் குப்பத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.

ஒரு நாள் கணவனாக மட்டும் கூத்தாண்டவரை திருநங்கைகள் கருதவில்லை. அவர்களிடத்தில் உயிருள்ள வரையிலும் அவனையே கணவனாகக் கருதும் போக்குக் காணப்படுகிறது. திருநங்கைகள் ‘என் கணவன் கூத்தாண்டவர் சத்தியமாகச் சொல்றேண்டி’ என்று சொல்வது மேற்சொன்ன கருத்தினை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. திருநங்கைகள் ‘என் புருஷன் எங்கே இருக்கார் கல்லாய் இருக்கார்; கட்டையாக இருக்கார்; கூவாகத்திலே இருக்கார்’ என்றும் பேசிக்கொள்வார்கள். பொதுவாகத் திருவிழாக்கள் என்றாலே மக்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக இருக்கும் அல்லது மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால் கூத்தாண்டவர் கோவில் விழாவில் பங்கேற்கும் திருநங்கைகள் மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொள்வதில்லை. அவர்கள் அரவானைத் தங்கள் உள்ளத்தில் வைத்துக்கொண்டாடும் செய்தி சிறப்புக்குரியதாகும். அரவான் சிலைக்கு முன்பாகத் தாலி அணிந்துகொள்வது ஏதோ ஒரு பொம்மைக்கல்யாணம் போலக் கருதாமல் உண் மைக்கல்யாணம் போலவே கருதுவதுதான் திருநங்கைகளின் தனிச்சிறப்பாகும் (பாலு விஜயன், சக்திவேல்,2007:55-58).

திருநங்கைகளின் தாலி எடுக்கும் (அறுக்கும்) நிகழ்வு
முதல் நாள் இரவில் அரவானுக்கு முன்பாகத் தாலி கட்டிக்கொண்டு கும்மியடித்துக்கொண்டு பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக இருந்தவர்கள் அடுத்தநாளே ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு மறுநாளே தாலியை அறுத்துவிட வேண்டிய கட்டாயமாகும். அவர்கள் வாழ்க்கையின் இருபக்கங்களையும் அடுத்தடுத்த நாள்களிலேயே சந்தித்து விடுகிறார்கள். திருநங்கைகள் தாலி அறுக்கும் சடங்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான் என்றாலும் அதனை உண்மையான நிகழ்வாகவே கருதுகிறார்கள். ஓரங்க நாடகம் போலவே ஆண்டுதோறும் இந்தச் சடங்கு நடத்தப்பட்டாலும் திருநங்கைகளின் அழுகை பொய்யில்லை.  அரவானை மானசீகமாகத் திருமணம் செய்துகொண்ட இவர்கள், அரவான் களப்பலி கொடுக்கப்பட்டதும் ஒருவர் தோள்மீது ஒருவர் கைபோட்டபடி கூடி அழும் காட்சி பார்ப்பவர்களையெல்லாம் கண்கலங்க வைத்துவிடுகிறது.

திருநங்கைகளின் இரவுக்களியாட்டம் முற்றுப்பெற்ற மறுநாள் அரவான் களப்பலிக்குப் புறப்படுகிறான். அந்த இடம் ‘அமுதகளம்’ எனப் பெயர்பெறும். அந்த அமுதகளம் கொண்டு செல்லப்படும் அரவானைப் பின்தொடர்ந்து ஆடிப்பாடி ஒப்பாரி வைத்துக் கொண்டு திருநங்கைகள் செல்கின்றனர். அப்பாடல்களில் அவர்கள் ஆண்டு முழுவதும் சந்தித்த சோதனைகள், வேதனைகள், ஏக்கங்கள், அவமானங்கள் அனைத்தும் வெடித்துக்கிளம்பி கண்ணீராக வழிகிறது. இதனைப் பின்வரும் பாடலடிகள் காட்டுகின்றன.

மதுர கோட்ட வீதியிலே
மன்னர் தானும் போகையிலே
அட வளரும் நானும் போகையிலே
கோயில் வாசல்தாண்டி போகையிலே - கருங்
கூந்தல் அவுந்திட பாத்தீங்களா – கருங்
கூந்தல் அவுந்திட பாத்தீங்களா
அம்பது லட்சமும் தாலிகட்டி
ஒன்பது லட்சம் தாலிகட்டி
வச்சி படைக்காத நம்ம கூத்தாண்டவர்
வடக்கே போறார் பாருங்கடி
(பாலு விஜயன்,சக்திவேல்,2007:64).

திருநங்கைகளின் துயரங்களை வெளியேற்றும் நாளாக அரவான் களப்பலி நாள் அமைந்துவிடுகிறது. அமுதகளம் கொண்டு செல்லப்படும் அரவான் தேரானது பிரிக்கப்படுகிறது. தலைசாய்ந்த நிலையில் அரவான் தேர் கிடக்கிறது. அப்போது அரவான் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தன் கணவன் இறந்துவிட்டதை எண்ணி திருநங்கைகள் ஒப்பாரி வைக்கிறார்கள். பந்தலடியின் கீழ் ஒருவரின் தோளில் இன்னொருவர் கைப்போட்டபடி பல குழுக்களாக அமர்ந்து கொண்டு அழுகிறார்கள். அவர்கள் தங்கள் தலையிலிருந்த பூக்களைப் பிய்த்து எறிகிறார்கள்; நெற்றியில் உள்ள பொட்டினை அழித்துவிட்டு வளையல்களை உடைத்து அழுகின்ற காட்சி பார்ப்பவர்களின் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது என்பதைப் பின்வரும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

காகிதப் பூவுன்னு கண்மூடிப் போனீரோ – என்ராசாவே
வாடாமல்லின்னு பேசாமல் போனீரோ – நானும்
அப்பனுக்கு வேப்பங்காய்
அண்ணனுக்கு எட்டிக்காய்
ஊருக்கு திருஷ்டிக்காய்
ஒனக்குக் கூட வேப்பங்காய்
(பாலு விஜயன், சக்திவேல், 2007: 67).

குழந்தையைப் பெற்ற தாய்க்குத் தாலாட்டும் கணவனை இழந்தப் பெண்ணுக்கு ஒப்பாரியும் தானாக வரும் என்பது பழமொழியாகும். இப்பழமொழி திருநங்கைகளின் வாழ்க்கையில் இடம்பெற்றிருப்பது உண்மையின் வெளிப்பாடாக இங்குக் காணப்படுகிறது. திருநங்கைகள் சித்திரைப் பெளர்ணமியன்று அரை பவுனுக்குக் குறையாத தங்கத்தாலி அணிந்து கொள்கின்றனர்; மறுநாள் தாலி அறுப்பு சடங்குக்குப் பிறகு அந்தத் தாலிகளை அரவான் உண்டியலுக்குள் அப்படியே போட்டுவிடுகின்றனர். தாலிகள் மட்டுமின்றி வெள்ளிக்காசு மாலைகளையும் தங்களது ஆண்டவனுக்கு அணிவித்து மகிழ்கின்றனர்; தங்கம் வெள்ளி மட்டுமில்லாமல் தாங்கள் கொண்டுவரும் காசுகளையும் சுண்டல் கொழுக்கட்டைகளைச் சூறைவிடுற மாதிரி இறைக்கிறார்கள். திருநங்கைகள் தேர் வடப்புறம் பாதையில் திரும்பும்போது ஒப்பாரி வைத்து அழுகின்றனர்; தாங்கள் அணிந்திருந்த பளப்பளப்பான ஆடை, மின்னும் ஆபரணங்களைக் கழற்றிவிட்டு வெள்ளைப்புடவை உடுத்தி விதவைக்கோலம் கொள்கின்றனர். சாமி அழிகளம் செல்வதால் சாமியின்முகம் வாடியிருப்பதாகத் திருநங்கைகள் கூறுகின்றனர். திருவிழா பந்தலடியில்தான் தொடங்கியது. ஆகவே, அதே இடத்தில் ஆலமரத்தின் அடியில் புதன்கிழமை பகல் 12 மணிக்குத் தேர் நிற்கிறது; பாரதச்சொற்பொழிவு நடத்தப்பட்டுப் பலிசாதம் படைக்கப்படுகிறது. தேர் உருக்குலைந்த அரவானோடு பகல் பதினொரு மணியளவில் பந்தலடிப்பக்கம் போகிறது. அங்கே உள்ள வெள்ளிக்கால் கம்பத்தின் அருகில் ஒரு பூசாரி நின்றுகொண்டிருப்பார். ஒவ்வொரு திருநங்கையும் அவர் முன்னால் போய் நிற்க, பூசாரி திருநங்கைகளின் தாலிகளை அறுத்து எறிகிறார்; பொட்டுகளை அழித்துவிடுகிறார். அவர்கள் விதவைக்கோலத்தோடு வீட்டுக்குச் செல்லக்கூடாது என்பது முறையாகும். ஆகவே, திருநங்கைகள் மறுநாள் வியாழக்கிழமை கோவிலில் மீண்டும் தாலி அணிந்துகொண்டு தங்கள் இருப்பிடத்துக்குச் செல்கின்றனர் (பாலு விஜயன், சக்திவேல்,2007:68-69).

திரெளபதியம்மன் கோவில்களில் அரவானின் வழிபாடு
மகாபாரதக்கதையொட்டி எழுந்த வழிபாடுகளில் மிக முக்கியமான வழிபாடு திரெளபதியம்மன் வழிபாடாகும். இது ஏழை எளிய மக்களின் வழிபாடாக நாடெங்கும் பரவியுள்ளது. அரவான் அர்ச்சுனனின் மகன் என்பதனால் திரெளபதி அரவான் தாயாவாள். ஆகவே, திரெளபதியம்மன் கோவில்களில் அரவானின் வழிபாடு நடக்கும்; அரவானின் களப்பலி நிகழ்ச்சியும் சுருக்கமாகக் கூறப்படுகிறது.

துரியோதனன் அமாவசை நாளன்று அரவானைக் களப்பலி கொடுக்க சகாதேவனிடத்தில் நாள்குறிக்கச் செல்கின்றான். சகாதேவன் எட்டிலே கேதுவும் செவ்வாயும் திட்டமாய் அரவானுக்கு இருக்குதே; ஜாதகப்படி முப்பத்திரண்டு அங்கலட்சணமும் உடைய அரவான் ஆயுதத்தாலே இறப்பான் என்பது உறுதியாகும்; என்மனம் உருகுதே என்று நாளையும் காலத்தையும் குறிக்கிறான். இதனைப் பின்வரும் பாடலடிகள் காட்டுகின்றன:

வெட்டியே காளிக்குப் பலி கிட்டிட
இது தருணமாகுதே மனம் உருகுதே
(பாலு விஜயன்,சக்திவேல்,2007:73).                                                                                                                                                                                                                                                                                                                               
துரியோதனன் அரவானிடத்தில் உன்னுடைய உயிர் காளிதேவிக்கு நரபலியாக்க வேண்டும் என்று கேட்பதைப் பின்வரும் பாடலடிகள் புலப்படுத்துகின்றன:

சந்தனுக்கு ஜெயித்திடவே வேண்டுமடா
இரவுமதி ஒன்றாத அமாவாசை நாளில்
அங்க குறைவில்லாத நரனைக் கண்டு பலிகொடு என்று
வேறு உலகில் எனக்கு எங்கும் கிடைக்காததால்
விருப்பமுடன் உன்னைக் கோரி வந்தேனடா கண்ணே
(பாலு விஜயன்,சக்திவேல்,2007:75).

நீங்கள் சொல்லும் நாளிலும் காலத்திலும் எனக்கு உயிர் இருந்தால் நான் களப்பலிக்கு வரத்தயராக இருக்கிறேன் என்று அரவான் துரியோதனனிடம் கூறுவதும் திருமண ஆசைகாட்டி கண்ணன் அரவானைத் தன்பக்கம் இழுப்பதும் களப்பலி செல்வதற்காக அரவான் தன் அன்னையாகிய திரெளபதியிடம் அனுமதிகேட்பதுமான நிகழ்வுகள் கோவில்களில் கதையாகவும் நாடகமாகவும் கூறப்படுகின்றன. இதனைப் பின்வரும் பாடலடிகள் உணர்த்துகின்றன:

போய் வா என்று சொல்ல
பொங்குதே துயரம் மீறி
நாய் நரி கழுகு தின்ன
பெற்றேனடா பாலா உன்னை
(பாலு விஜயன், சக்திவேல், 2007: 76).

கூத்தாண்டவரை போற்றும் கூவாகச்சிற்றூர் மக்கள்
கூவாகம் சிற்றூர் மக்களின் வீடுகளில் திருமணம், காதணிவிழா, பிறந்தநாள் விழா போன்ற விழாக்கள் நடந்தால் முதல் அழைப்பிதழ், வெற்றிலை, பாக்குடன் கூத்தாண்டவருக்கே வைக்கிறார்கள்; அதன்பிறகே மற்ற உறவுக்காரர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கிறார்கள்; அந்த அளவுக்குத் தங்கள் குடும்பங்களில் ஒருவராகவும் தலைவராகவும் கூத்தாண்டவரை ஏற்றுக்கொண்டுள்ளனர்; இக்கோவிலில் மாவிளக்குப்போட்டு வழிபடுவதே பொதுமக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. குழந்தை இல்லாதவர்கள் ‘கூத்தாண்டவா என் வயிற்றில் ஒரு குழந்தை கொடு’ என்று வேண்டிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு அந்த ஆண்டவர் அருளால் குழந்தை பிறந்துவிட்டால் கூத்தாண்டவர் பெயர் சூட்டப்படுகின்றது. ஆண் குழந்தையாக இருந்தால் கூத்தர் என்றும் பெண் குழந்தையாக இருந்தால் கூத்தாயி, கூத்தம்மா என்றும் பெயர்கள் சூட்டப்படுகின்றன. குடும்பத்துக்கு நல்லது நடக்கவேண்டும்; தீராத நோய்கள் தீரவேண்டும்; கடன்தொல்லையின்றி வாழவேண்டும்; குழந்தை பாக்கியம் வேண்டும்; பில்லி, சூன்யம் போன்ற பகைகள் ஓடவேண்டும்; இதற்காக எங்கள் குலதெய்வமாகிய கூத்தாண்டவரை வேண்டிக்கொண்டு தாலி அணிந்துகொள்வோம் என்கின்றனர் இவ்வூர் பொதுமக்கள். கூவாகம் பகுதி வாழ்மக்களின் வாழ்வியலோடு இக்கூத்தாண்டவர் இரண்டற கலந்துவிட்டிருக்கின்றார்.

கூவாகத்தில் உள்ள பந்தலடி பகுதியின் பின்பக்கம் கூவாகம் ஏரி என்றழைக்கப்படும் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரிகரையில் இரண்டு கற்சிலைகள் உள்ளன. இவற்றில் ஒன்று பல்லவர் காலத்துக்கு முற்பட்டதாகும். இச்சிலைகள் 1200 ஆண்டுகளுக்கு முந்தையதாகவும் பழமையதாகவும் கருதப்படுகின்றன. வேறு ஒரு சிலை நின்றநிலையில் காளிபோன்ற அமைப்பில் இதன் கால்பகுதியில் போர்வீரன் ஒரு கையால் தன் தலைமுடியைப் பிடித்தபடியும் மறுகையில் கூரிய வாள் ஒன்றையும் கொண்டிருக்கிறான். அப்பகுதிமக்கள் இதனைத் திருநங்கை என்கின்றனர். அரவான் காளிக்குப் பலி கொடுக்கத் தன் அவயங்களைத் தானே கொய்ததாகக் கூடக் கதை கூறுவர். அதை நினைவு கூறும்வகையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வலப்புறத்தில் ஒரு வீரன் அமர்ந்தநிலையில் இருப்பதைப் போன்று வடிவமைக்கப் பட்டுள்ளது. இது 8-ஆம் நாள் போரில் அரவானுடன் போர்செய்த அலம்புசனை நினைவுகூர்கிறது. கூவாகம் திருவிழாவுக்கு இறுதி இரண்டு நாள்கள் மட்டுமே திருநங்கைகள் வருகை தருகின்றனர். ஆனால், அதற்கு முன்பு 11 நாள்களாக ஊர்மக்கள் நடத்தும் திருவிழா அது நடைபெறுகிறது. கூவாகம் சிற்றூரில் உள்ள எல்லாத்தெருக்கள் வழியாகவும் அரவான் ஊர்வலம் நடைபெறுகிறது.

 

திருநங்கைகள் பந்தலடியில் தாலி அறுத்த பின்பு பெரும்பாலானோர் வெள்ளைப்புடவையிலேயேதான் ஊர் திரும்புகின்றனர். இவர்கள் தத்தம் ஊர் திரும்பியவுடன் இவர்களைப் பிற திருநங்கைகள் ஆரத்தி எடுத்து வீட்டுனுள் அழைக்கின்றனர். இவர்கள் கிட்டத்தட்ட 3 நாள் வரையிலும் வெள்ளைப் புடவையிலேயேதான் இருப்பர்; கண்ணாடி பார்ப்பது, மாமிசம் உண்பது போன்றவற்றைத் தவிர்ப்பர்; வெறும் தரையில்தான் படுத்து உறங்குவர்; 3-ஆம் நாள் மதியம் பலவகையான மாமிச உணவுகள் குறிப்பாகக் கோழி, ஆட்டுக்கறி, மீன்குழம்பு போன்ற உணவுப்பொருட்களுடன் மதுபானம், சுருட்டு இவைகளை வைத்து 3 இலை போட்டு நடுவீட்டு முற்றத்தில் பூசைசெய்வர். இந்தப் பூசையில் வெள்ளைப்புடவை அணிந்த திருநங்கையின் குரு ஒரு வண்ணப்புடவை, தாலிக்கயிறு போன்றவற்றைக் கொண்டுவந்து வைப்பார். பூசைமுடிந்ததும் குருவானவர் முதலில் குங்குமத்தைத் திருநங்கையின் நெற்றியில் இடுவார்; இதைத்தொடர்ந்து பூசையில் உள்ள தாலிக்கயிற்றையும் கழுத்தில் கட்டிவிடுவார்; புதிய வண்ணப்புடவையை அணியச்சொல்வார். அவர்கள் இந்த நிகழ்வு ‘அரவான் மறுபூசை சடங்கு’ என்பர்; அதாவது கிருஷ்ணர் மீண்டும் தன்பழைய உருவை அடைவதைப்போன்று கருதுவர்.

கூவாகம் தவிர திண்டிவனத்திலுள்ள கோலியனூர், வில்லியனூர்; பாண்டிச்சேரியிலுள்ள பிள்ளையார்குப்பம்; மடுகரை, கடலூரிலுள்ள தேவனாம்பட்டினம், சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் பின்பகுதியில் உள்ள திருவேட்களம் போன்ற இடங்களில் அரவானுக்குக் கோவில்கள் உள்ளன. இங்கு அரவான் வழிபாடு கொண்டாடப்படுகிறது. இவற்றில் பிள்ளையார்குப்பம், மடுகரை; சிதம்பரத்தில் உள்ள திருவேட்களம் பகுதிகளில் வைகாசிப் பெளர்ணமியன்று இந்த வழிபாடு நடைபெறுகிறது. இப்பகுதிகல் திரெளபதியம்மன் வழிபாட்டோடு இணைந்த வழிபாடாகவே அரவான் வழிபாடு இருக்கிறது. இப்பகுதிமக்கள் திரெளபதியம்மன் திருவிழா சமயத்தில் அரவான் களப்பலி நிகழ்வையும் நினைவுகூர்ந்து விழாவாகக் கொண்டாடுகின்றனர். இதுதவிர கோயம்புத்தூர் மாவட்டத்தில் துடியலூர், சிங்கநல்லூர், குறிச்சி, காட்டாம்பட்டி போன்ற பகுதிகளிலும் அரவான் வழிபாடு உள்ளது. துடியலூர் பகுதி மக்கள் வாக்குத் தவறாத வாய்மையாளன் அரவான் என்ற பெயரில் அரவான் கதையைப் பாடலாகப் படிக்கின்றனர். மதுரையில் செளராஷ்டிரா சமயத்தினர் வழிபடும் திரெளபதி கோவில்கள் உள்ள தெற்கு மாசிவீதி, தெற்கு மாரட் வீதி போன்ற பகுதிகளில் அரவான் வழிபாடு உள்ளது. இந்த கோவில்களிலும் கூடத் திரெளபதியம்மன் வழிபாடுடன் இணைந்த வழிபாடாகவே அரவான் வழிபாடு காணப்படுகிறது. குறிப்பாகத் தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோவிலினுள் பெரிய அளவில் அரவான் சிலை காணப்படுகிறது. ஆகவே, இந்த அரவான் வழிபாடு ஓரினம் சார்ந்த வழிபாடாக இல்லாமல் தமிழகம் முழுமைக்குமான ஒன்றுபட்ட வழிபாடாக இருக்கிறது என்று கூறினாலும் அங்கெல்லாம் சிறிய அளவில் நடைபெறக்கூடிய ஒரு விழாவாகக் காணப்படுகிறது. கூவாகத்தில் நடைபெறுகின்ற விழா மட்டுமே ஒரு தனித்துவம் வாய்ந்த பண்பாட்டு நிகழ்வாகக் காணமுடிகிறது. அது தொண்டைமண்டலத்திற்குரிய ஒரு பண்பாட்டுக்கூறாகக் காணப்படுகிறது. கூவாகத்தில் ஒரு முக்கியச்செய்தி அரவான் களப்பலி நடப்பதற்காக அரவான்தேரைப் பந்தலடிக்குக் கொண்டு சென்றபின்னர் அவர்கள் அருகிலுள்ள செட்டியார் தோப்பில் அதை நிறுத்தி விடுகின்றனர்; எப்போது மழைவந்து தேரை நனைக்கிறதோ அதன்பின்னரே தேரைக் கோவிலுக்குக் கொண்டு செல்கின்றனர். இதற்குக் காரணமாகக் கூறப்படுவது பந்தலடி ஒரு இடுகாடு போன்றது. அரவான் களப்பலிக்குப் பின் தேர் தீட்டுப்பட்டுவிட்டது. அதனால் அந்தத் தீட்டைக் கழிக்கும் பொருட்டு வருணபகவானே மழையாக மாறி பொழிந்து தீட்டைக் கழிப்பார் என்பது மக்களின் நம்பிக்கையாகும். இந்த அரவான் களப்பலிக்குப் பின்பு இரண்டு மாதங்களுக்குள் கட்டாயம் மழை வரும். அதன்பின்னரே மக்கள் தேரைப் பழையபடி கோவிலுக்கு எடுத்துச்செல்கிறார்கள் (பாலு விசயன்,சக்திவேல்,2007:97-120).

அரவான் பிறப்பைப் பற்றியும் கூவாகம் கூத்தாண்டவர் வழிபாடு குறித்தும் பின்வரும் பாடலடிகள் மூலம் மிக விரிவாக அறியலாம்:

சந்திரகுலத்தில் பிறந்த எங்கள்
கூத்தாண்ட தேவா
கூத்தப்ப தேவா
தஞ்சம் என்று உனைப் பணிந்தோம்
வருக லாகாதா வருக லாகாதா
அஸ்தினாபுரத்தையாண்ட அர்சுனன் பாலா
அஸ்தினாபுரத்தையாண்ட எங்கள் அர்சுனன் பாலா
அம்மணி நாகக்கன்னிகை
பெத்த என் அருமைச் சீலா
கொக்குப் பறக்க
நல்ல கொழுமை சித்தாட
மெய்பறக்க
கோட்ட கொத்துமை
விதியொருக்க
கோசாலத்தைப் பாருங்கடி
இந்தக்
கோசாலத்தைப் பாருங்கடி
அரிமனத் தேர்விளங்கும்
அன்புள்ள தேவ
அரிமனத் தேர்விளங்கும்
அன்புள்ள தேவ
அவன் இருக்கும் புகழ் இலங்கும்
கூத்தாண்ட தேவ
அவன் இருக்கும் புகழ் இலங்கிடும்
கூத்தாண்ட தேவ
அவன் இருக்கும் புகழ் இலங்கிடும்
கூத்தாண்ட தேவ
சந்திரக்குலத்தில் பிறந்த எங்கள்
கூத்தப்ப தேவ கூத்தப்ப தேவ
தஞ்சம் என்று உனைப் பணிந்தோம்
வருக லாகாதா வரம் தருக லாகாதா
பெண்ணாக வந்த கிருஷ்ணனையே மாலையிட்டவா
பெண்ணாக வந்த
கிருஷ்ணனையே மாலையிட்டவா
பொன்னான சிரசை போர்க்களத்தில்
பலிதுறந்தீக
பொன்னான சிரசை போர்க்களத்தில்
பலிதுறந்தீக
பொன்னான சிரசை
போர்க்களத்தில் பலி துறந்தீக
என நாதி எண்ணிப் பாடுகின்றோம்
மனம் இரங்காதா
ஏழை நாங்க செய்த குறை
ஏத்த லாகாதா
சந்திரக்குலத்தில் பிறந்த எங்கள்
கூத்தாண்ட தேவா கூத்தப்பா தேவா
தஞ்சம் என்று உனைப் பணிந்தோம்
வருக லாகாதா வரம் தருக லாகாதா
கூவாகம் எனும் நகர்தன்னில் குடிகொண்ட ஐயா
கூவாகம் எனும் நகர்தன்னில் குடிகொண்ட ஐயா
கோடானு கோடி ஜனங்கள் வந்து ஓதிப் பணிந்திட
கோடானு கோடி ஜனங்கள் வந்து ஓதிப் பணிந்திட
குற்றங்கள் என்ன செய்திருந்தாலும்
கொண்டு பொறுப்பீங்க
உங்களை ஓதிப் பணியும் கோடி ஜனத்தையும்
காத்து ரட்சிப்பீக
உங்களை ஓதிப் பணியும் கோடி ஜனத்தையும்
காத்து ரட்சிப்பீக
சந்திரக்குலத்தில் பிறந்த எங்கள்
கூத்தப்ப தேவ கூத்தப்ப தேவ
தஞ்சம் என்று உனைப் பணிந்தோம்
வருக லாகாதா வரம் தருக லாகாதா
கும்மியடி கும்மியடி
கூவாகம்தானே கும்மியடி
கூவாகம்தானே கும்மியடி
நம்மை நாடும் கிருஷ்ணசுவாமியை
நாடி கும்மியடிங்கடி
நாகக்கன்னிகை பெற்றெடுத்த
நம்மை நல்ல பேர சொல்லு
நாம எல்லோரும் கூடிக்கொண்டு
நடந்த அந்த சேசனம் கொட்டுங்கம்மா
கூவாகம் பெண்ணே கூவாகம் பெண்ணே
அந்தக் கூத்தாண்டவர்கிட்ட
கூவாகம் கொத்தகிட்ட
எல்லையிலே நம்ம
கோவில் விளங்குவது பாருங்கம்மா
சித்திரை மாசப் பருவத்துல எங்கள் செல்லக்
கூத்தாண்டவர் அழகுபண்ணி சிங்காரமான
வனந்தன்னிலே ஜெனம் சிந்திக் கிடக்குது பாருங்கம்மா
எங்கள் கூத்தாண்டவர் தொன்னூறு மாலையும்
அணிந்திருக்குது பாரும்மா     அணிந்திருக்குது பாரும்மா
வெள்ளித் தேரிலே மேலே ஏறிக்கொண்டு
வெண்கலத் தூண்போல நின்றுகொண்டு
அந்த அரவான் வருவதைப் பாருங்கம்மா
மெட்ராஸ் மால கூத்தாண்டவருக்குக்
குலுங்கி வருவதைப் பாருங்கம்மா
ஈரோட்டு மால வருகுதம்மா வருகுதம்மா
ஈரஞ்சொரிஞ்சு
வருகுதம்மா
கூத்தாண்டவர் களப்பலிக்குப்
போறதப் பாருங்கம்மா
ஒன்பது லட்சம் தாலிகட்டி
வெச்சு படுக்காத மெல்ல
கூத்த ஐயனும் வடக்கே போறார்
களப்பலிக்கே பொம்பள தாலிகட்டி
அறுத்திடும் பூலோகந் தன்னிலே வையகந் தன்னிலே
அரவாணிகள் தாலிகட்டி அறுத்திடும்
ஐயந்திருநாளைப் பாருங்கம்மா
கொக்குப் பறக்கக் கொடி பறக்க
அக்காளும் தங்கையும்
வர்றாங்க தேரின் சக்கரத்த பாக்க
எத்தனை கற்பூரம் வண்டிகளா வந்தாலும்
உனக்கில்ல எனக்கில்ல என்றாலும்
அரவான் இறந்த ஐயந்திருநாளைப் பாருங்க
பஞ்சபாண்டவர் கத எங்க கூத்தாண்டவர்
வடக்கே போறார் களப்பலிக்கே
(பாலு விசயன், சக்திவேல், 2007: 97 - 120). 
(தேசியநாட்டுப்புறவியல் உதவிமையம்).

தொண்டைமண்டலப் பகுதிகளில் சமயக் கோட்பாடுகளாகிய சைவம், வைணவம், சமணம், பெளத்தம், ஆசிவகம் போன்ற சமயங்களின் பண்பாட்டுக்கூறுகளின் பதிவுகள் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் இன்றும் சமணசமயக் கோட்பாடுகளும் பண்பாடுகளும் வழிபாடுகளும் தமிழர்களிடத்தில் பயின்று வருகின்றன. இப்பண்பாட்டு எச்சங்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரையில் காணப்பட்டுள்ளன என்பதை இங்குக் கண்டுணரலாம். கொற்றவை வழிபாடு என்பதும் நடுகல் வழிபாடு என்பதும் தொல்தமிழகத்தின் மிகப் பழமையான வழிபாட்டுமுறைகளாகும். இவ்வழிபாட்டு முறைகளின் எச்சங்களாகக் கூவாகம் ஏரியில் உள்ள சிற்பங்கள் அமைந்திருக்கலாம் எனக் கருதலாம். தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கூத்தாண்டவர் வழிபாடு  திரெளபதி அம்மன் வழிபாட்டுடன் சிறிய அளவில் காணப்பட்டாலும் அவைகள் தனித்துவம் வாய்ந்த வழிபாடாகக் காணப்படவில்லை. விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடைபெறுகின்ற கூவாகம் கூத்தாண்டவர் வழிபாடு மட்டும்தான் தனித்துவம் வாய்ந்தாகவும் பண்பாட்டுச் சிறப்புப் பெற்றதாகவும் தொண்டைமண்டலப் பகுதிக்கே உரிய பண்பாட்டுக்கூறாகவும் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பண்டைய இலக்கியங்களில் இவ்வகையான எச்சங்கள் வேறு வகையாகக் காணப்பட்டாலும் அவைகள் வளர்ச்சிபெற்றுப் புதியவடிவத்தில் இறையியல் வழிபாட்டில் கலந்து வந்துள்ளதாகவும் கருதலாம். கூவாகம் பகுதி மக்கள் தங்களுடைய குலதெய்வமாகவே கூத்தாண்டவரை ஆண்டாண்டுகாலமாக வழிபட்டுவருகின்றனர். மகாபாரத கதையில் இடம்பெற்றுள்ள திருமால் மோகினி அவதாரம், அரவான் களப்பலி நிகழ்வு ஆகிய நிகழ்வுகளின் காரணமாகவும் அப்புராணக் கதையோடு தொடர்புடைய கூவாகம் கூத்தாண்டவர் வழிபாடும் இருக்கின்றன. இதன்காரணமாக அண்மைக்காலத்தில் திருநங்கைகள் தங்களுடைய வாழ்க்கையோடு தொடர்புடைய கதையாக இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் கூவாகம் கூத்தாண்டவர் வழிபாட்டைத் தங்களுடைய வழிபாடாகவே கருதுகிறார்கள். எனவேதான் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் வழிபாட்டிற்கு வருகை தருகிறார்கள்; கூத்தாண்டவரை மனதார வழிபடுகிறார்கள். மேற்கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் தொண்டைமண்டலப் பகுதியில் இருக்கின்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலும் கூவாகம் வருகின்ற திருநங்கைகளும் கூவாகம் மக்களின் வழிபாடும் தொண்டைமண்டலத்திற்கு உரிய பண்பாட்டுக்கூறாகச் சிறப்புப் பெற்றுள்ளது என்பது காணப்பட்டுள்ளது.

தொண்டைமண்டலப் பண்பாட்டுக்கூறுகளில் கூவாகம் கூத்தாண்டவர்    வழிபாடு எனும் தலைப்பில் இப்பகுதியில் சிறப்பாக இடம்பெற்றுள்ள இவ்வழிபாட்டு முறைகளைப் பற்றியும் வழிபாட்டுக் கடவுளைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இங்கு உள்ள இவ்வழிபாடு சமயக்கலப்பாலும் கடவுள் கலப்பாலும் வழிபாட்டுக்கலப்பாலும் மொழிக்கலப்பாலும்  பண்பாட்டுக் கலப்பாலும்  மாற்றமடைந்து காணப்பட்டுள்ளது. இப்பகுதியில் பன்னெடுங்காலமாகவே கூத்தாண்டவர் வழிபாடு காணப்பட்டுள்ளது. பொதுவாகக் கூத்தாண்டவர் வழிபாடு என்பது தமிழகத்திற்கே உரிய வழிபாட்டு முறையாகும். கூத்தாண்டவர் என்பது பொதுவாக நடராசப்பெருமானையே குறிக்கும். இந்த நடராசப்பெருமானைத்தான் சிவபெருமானாக மக்கள் வழிபட்டு வருகின்றனர். இவ்வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடாகும். தொண்டைமண்டலப் பகுதியில் கி.பி.6-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்  மொழி, இனம், சமயம், கடவுள், பண்பாடு, இலக்கியம், இலக்கணம், வழக்காறுகள் எனப் பலவற்றில் மாபெறும் மாற்றங்கள் ஏற்பட்டதின் விளைவுகள் இம்மாற்றங்களுக்கான காரணங்கள் ஆகும். அங்கு இயற்கையாகவே தமிழ்மரபுக்கு உட்பட்ட வழிபாட்டுமுறையும் கூத்தாண்டவர் என்று சொல்லப்படுகின்ற நடராசப்பெருமான் வழிபாட்டு முறையும் இருந்துள்ளது. மேற்கூறிய காரணங்களால் இவ்வழிபாட்டு முறையும் வழிபாட்டுக் கடவுளும் மாற்றமடைந்து  இங்குக் காணப்பட்டுள்ளது. இருப்பினும் இப்பகுதியில் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வழிபாட்டு முறையினைப் பற்றியும் வழிபாட்டுக் கடவுளைப் பற்றியும் இதில் விளக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்களில் திருநங்கைகள், அருச்சுனன் பற்றிய குறிப்பு, அரவானின் பிறப்பு, கூவாகம் கூத்தாண்டவர் வழிபாடு, கூவாகம் சித்ரா பவுர்ணமி விழா வழிபாட்டுமுறை, திருமணநிகழ்வு, திருநங்கைகளின் தாலி எடுக்கும் (அறுக்கும்) நிகழ்வு, திரெளபதியம்மன் கோவில்களில் அரவானின் வழிபாடு, கூத்தாண்டவரை போற்றும் கூவாகச்சிற்றூர் மக்கள் போன்றவைகள் இதில் விளக்கப்பட்டுள்ளது.

துணைநூல் பட்டியல்
ஆரூர்தாஸ்., 2008, திருக்குறள் அகராதி மூலமும் சொல்லாக்கமும், சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
இராமசுப்பிரமணியம், வ.த., 2008, தொல்காப்பியம் சொல்லதிகாரம் மூலமும் விளக்கவுரையும், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
இராமசுப்பிரமணியம், வ.த., 2008, தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் விளக்கவுரையும், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
இராமசுப்பிரமணியம், வ.த., 2010, மணிமேகலை மூலமும் உரையும், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
கருணாநிதி,ந., 2008, தொல்காப்பியம், சென்னை: வசந்தா பதிப்பகம்.
கெளமாரீஸ்வரி, எஸ்., 2008, முதுமொழிக்காஞ்சி மூலமும் உரையும், சென்னை சாரதா பதிப்பகம்.
சாந்தி சாதனா., 2005, காங்கேயன் செய்த உரிச்சொல் நிகண்டு, சென்னை: சாந்தி சாதனா.
சின்னப்பன், கு., 2006, அரவாணிகள் வாழ்வியலும் கூத்தாண்டவர் திருவிழாவும், புதுச்சேரி: வழிகாட்டி.
சுப்பிரமணியன், ச.வே., 2004, சிலப்பதிகாரம், சென்னை: கங்கை புத்தகநிலையம்.
சுப்பிரமணியன், ச.வே., 2006, சங்க இலக்கியம் (முழுவதும்), சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
சுப்பிரமணியன், ச.வே., 2009, அகநானூறு, சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
பாலசுந்தரம்பிள்ளை, தி.சு., 1999, நாலடியார், சென்னை: கழக வெளியீடு.
பாலு விஜயன், சக்திவேல்., 2007, கூவாகம் கூத்தாண்டவர், சென்னை: வரம் பதிப்பகம்.
பாலுசாமி, நா., 2009, வாழ்வியற் களஞ்சியம் தொகுதி ஆறு, தஞ்சாவூர்:  தமிழ்ப்பல்கலைக்கழகம்.
பாலுசாமி, நா., 2009, வாழ்வியற் களஞ்சியம் தொகுதி இரண்டு, தஞ்சாவூர்: தமிழ்ப்பல்கலைக்கழகம்.
பாலுசாமி, நா., 2009, வாழ்வியற் களஞ்சியம் தொகுதி எட்டு, தஞ்சாவூர்:  தமிழ்ப்பல்கலைக்கழகம்.
பாலுசாமி, நா., 2009, வாழ்வியற் களஞ்சியம் தொகுதி ஏழு, தஞ்சாவூர்: தமிழ்ப்பல்கலைக்கழகம்.
பாலுசாமி, நா., 2009, வாழ்வியற் களஞ்சியம் தொகுதி ஐந்து, தஞ்சாவூர்:  தமிழ்ப்பல்கலைக்கழகம்.
பாலுசாமி, நா., 2009, வாழ்வியற் களஞ்சியம் தொகுதி ஒன்பது, தஞ்சாவூர்: தமிழ்ப்  பல்கலைக்கழகம்.
பாலுசாமி, நா., 2009, வாழ்வியற் களஞ்சியம் தொகுதி ஒன்று, தஞ்சாவூர்: தமிழ்ப்  பல்கலைக்கழகம்.
பாலுசாமி, நா., 2009, வாழ்வியற் களஞ்சியம் தொகுதி நான்கு, தஞ்சாவூர்:  தமிழ்ப்பல்கலைக்கழகம்.
பாலுசாமி, நா., 2009, வாழ்வியற் களஞ்சியம் தொகுதி பத்து, தஞ்சாவூர்:  தமிழ்ப்பல்கலைக்கழகம்.
மகாதேவனார், அ., 2008, குமரகுருபரர் பாடிய நீதிநெறி விளக்கம் மூலமும் விருத்தி உரையும், சென்னை: மீனாகோபால் பதிப்பகம்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 14 May 2019 00:15