ஆய்வு: வெட்டக்காடு இருளர்களின் வழிபாட்டு முறைகள்

Saturday, 27 April 2019 00:40 முனைவர். பெ.சுரேஷ், முதுமுனைவர் பட்ட ஆய்வாளர் (PDF), மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46. ஆய்வு
Print

ஆய்வு: வெட்டக்காடு இருளர்களின் வழிபாட்டு முறைகள் இருளர் ஒரு சிறிய பழங்குடி சமூகம், இருளர் மொழி தென் கிழக்கு இந்தியாவில் பேசப்படும் திராவிட மொழிக் குடும்பத்தின் ஒன்றாக கருதப்படுகிறது. இருளர் என்ற சொல்லின் தோற்றம் தெளிவாக இல்லை, இருளரின் இருண்ட தோற்றத்தை வைத்து ’இருள்’ என்ற சொல் வந்திருக்கலாம் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். இவர்கள்  இருண்ட காடுகளில் சுற்றித் திரிந்ததால் இருளர் என்று வந்திருக்கலாம். அதிலும்  நாங்கள் இருட்டில் இருந்து வந்தவர்கள் என்பதால் இருளர் என்று பெயர் பெற்றோம் என்று அவர்களே சொல்லுகின்றனர். இவ்வாய்வுக் கட்டுரை  வெட்டக்காடு இருளர் பழங்குடி மக்களின் வழிபாட்டு முறைகளைப் பற்றி விவரிக்கிறது.

கோயம்புத்தூர் மாவட்டம்  அட்சரேகையில்    10° 10' மற்றும் 11° 30’  வடக்கிலும் தீர்க்கரேகையில் 76° 40' மற்றும் 77° 30’  கிழக்கிலும் அமைந்துள்ளது. கோயம்புத்தூரில் உள்ள இருளர் பழங்குடிகள் ஆரம்ப காலங்களில் கொங்குமண்டலத்தில் குடியேறியபோது, ​​இந்த இடம் சோழர்களால் ஆளப்பட்டது. அப்போது பல்வேறு மன்னர்கள் ஆட்சிப் புரிந்தனர். இறுதியில் பிரிட்டிஷ் பேரரசு இந்த இடத்தை ஆட்சி செய்தது, அதன்பிறகு கொங்குமண்டலம் என்ற பெயர் கோயம்புத்தூர் என பெயர் மாற்றப்பட்டது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ன் படி கோவை மாவட்டத்தில் மொத்த மக்கள்தொகை 34,72,578 அதில் ஆண்கள் 17,35,362 பேரும்   மற்றும் பெண்கள்  17,37,216  பேரும் அடங்குவர். இதில் மொத்த மலைவாழ் மக்கள் 28,797 அதிலும் குறிப்பாக இருளர் பழங்குடிகள் தோராயமாக 7000 காணப்படுகின்றனர் என மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருளர் மொழி
கமில் சுவலபில் (1973) இருளர் மொழியைத் தனி மொழியாக கருதுகிறார். எஸ்.வி. சண்முகம் தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் தனி மொழியென எடுத்துரைக்கின்றார். ஆர்.பெரியாழ்வார் (1976) இருள மொழி தனித்துவம் வாய்ந்த மொழியாக தனித்து நிற்கிறது. மேலும் இது தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது என்றும் இருளர்கள் இரு மொழியாளர்கள் என்றும் தெரிவிக்கின்றார். கமில் சுவலபில் (1979) இருளர் சமூகக் கலாச்சாரம் மற்றும் கிளை மொழி அடிப்படையில் அவர்களை ஐந்து வகையாகப் பிரித்துள்ளார் அவை: மேலநாடு இருளர், வெட்டக்காடு இருளர், உராளி இருளர், கசபா இருளர் மற்றும் காடுபூஜாரி இருளர்.

இருளர் குல அமைப்பு
இருளர் பழங்குடியினரிடையே மொத்தம் 12 குலங்கள் காணப்படுகின்றன. அவை: குருனகே, வெள்லே, தேவனே, கொடுவே, பேராதரா, கர்ட்டிகா, அறுமூப்பு, குப்பே, குப்புலி, உப்பிலி, சம்பெ, புங்கெ ஆகிய குலங்கள் சமூக நிலைப்பாட்டின் ஒரு அங்கமாகக் கருதப்படுகிறது. இருள பழங்குடிகள் அகமண உறவுடைய பிரிவாகக் கருதப்படுகின்றனர். இது சமூக நிலைப்பாட்டின் தனிநபரின் நிலையை தீர்மானிக்கிறது. ஒவ்வொரு வம்சாவழியும் ஒவ்வொரு பிறப்பு மற்றும் திருமண விழாவில் அவர்களுக்கெனத் தனி பங்களிப்பு காணப்படுகிறது. இது ஒரு கடமையாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு வேலையும் ஒரு குறிப்பிட்ட குலத்தைச் சார்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

ஒவ்வொரு இருளர் பழங்குடி கிராமங்களுக்கு ஒரு தலைமையாள் காணப்படுகிறார் அவரை ’ஊர்மூப்பன்’ என்று அழைக்கப்படுகின்றனர். மூப்பன் என்றால் முதியவர் மற்றும் தலைவர் என்று பொருள் அவரே இறுதி அதிகாரத்துடன் கலாச்சார மற்றும் சமூகம் சார்ந்த முடிவுகள் அனைத்தையும் தீர்மானிக்கின்றார். அனைவரும் அதை ஏற்றுக் கொள்கின்றனர் அதற்கு கட்டுப்படுகின்றனர். இந்த நிலைப்பாடு பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இருளர் மக்களின் நம்பிக்கை
இருளர் 95 சதவீகிதம் இந்துக்கள் என்றாலும் அவர்களின் பாரம்பரிய இனத்தின் கூறுகள் இன்னமும் அவர்களின் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கின்றன. அவர்களில் மிகுதியானவர்கள் ஆவி உலகத்தைச் சார்ந்திருக்கும் தங்கள் பழங்குடி நம்பிக்கைகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இதில் முக்கிய நம்பிக்கையாக குலத்தெய்வம் காணப்படுகிறது. எதுவாக இருந்தாலும் குலத்தெய்வ ஆசியுடனே துவங்கப்படுகிறது. அவர்களின் மரபு வழி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாகக் காணப்படுகின்றனர். குலத்தெய்வ பூசாரிகளுக்கும் இறைவனுக்கு  முன்னோர்களுக்கும் தொடர்பு உண்டு என்றும் இருளர்களின் நம்பிக்கையாகக் காணப்படுகிறது.

இருளர்களின் குலத்தெய்வ வழிபாடு
இருளர் பழங்குடிகளில் இரு பிரிவுகள், அவர்கள் ஈஸ்வரன் பிரிவு என்றும், தர்மராஜா பிரிவு என்றும் காணப்படுகின்றனர். ஆனால் இந்தப் பிரிவுகள் சமூக பிளவுகளாகக் கருதப்படவில்லை ஆனால் அவர்களின் ஒவ்வொரு குலமும் ஒரு தெய்வத்தை முதன்மை குலத்தெய்வமாகவே வழிபடுகின்றனர். நல்லம்மன், மணியரசஅம்மன், மல்லீஸ்வரசாமி, வேட்டைக்காரன், வீரகாளியம்மன், பகவதி அம்மன்,  வீரபத்திரன் மற்றும் ராவனேஸ்வரன் போன்றவைகள்.

ஆய்வு: வெட்டக்காடு இருளர்களின் வழிபாட்டு முறைகள்
இருளர் மக்களின் வழிபாடுகள்
வெட்டக்காடு இருளர் பழங்குடி மக்களின் வழிபாடுகளில் பெருமாள் முடி வழிபாடு, வேட்டைக்காரன் வழிபாடு  மற்றும் வெள்ளிங்கிரி ஆண்டவர் வழிபாடு ஆகிய மூன்றும் இவர்களின் முக்கியமான வழிபாடுகளாகக் கருதப்படுகிறது.

பெருமாள் மூடி வழிபாடு
கோவை மாவட்டத்திலுள்ள இருளர் பழங்குடி மக்களில் ஆண்கள் மட்டும் ஒவ்வொரு வருடமும் அடர்ந்த காட்டில் உள்ள ஒரு உயர்ந்த மலையில் உள்ள தெய்வமான பெருமாளைத் தரிசிக்க நடைபயணமாக செல்கின்றனர். அந்த இடம் பெருமாள் மூடி (உயர்ந்த மலையின் உச்சி) என அழைக்கப்படுகிறது. பெருமாளை மலை முடியில் தரிசிக்க செல்வதற்காக கடுமையான விரதம் இருந்து காணிக்கை செலுத்துகின்றனர், முக்கியமான காணிக்கையாக திரிசூலம் கருதப்படுகிறது. அப்படி அவர்கள் திரிசூலத்தை கையில் ஏந்திச் சென்று காணிக்கை சாத்தினாள் அவர்களின் மனதில் நினைத்த காரியம் நிறைவேறுகிறது என முழுமையாக நம்புகின்றனர்.

ஆய்வு: வெட்டக்காடு இருளர்களின் வழிபாட்டு முறைகள்

பெருமாள் முடி செல்வதற்கு அவர்கள் அதிகாலை இருக்கும் இடத்தில் இருந்து விநாயகனை வணங்கி நடக்கத் தொடங்குகின்றனர், தொடர்ந்து 5 முதல் 6 மணி நேரம் காட்டுக்குள் நடந்து சென்று பெருமாளைத் தரிசித்து காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர், அதன்பிறகு அவர்கள் விரதத்தை முடித்துக் கொள்கின்றனர். இந்த வழிபாட்டில் வேற்று சமூக மக்களும் கலந்து கொள்கின்றனர், பெருமாள் தெய்வத்திற்கு பூஜை செய்யும் பூசாரிகள் முதல் நாளோ அல்லது விடியற்காலையிலோ மலை உச்சிக்குச் சென்று அங்கு தங்கி பூஜை ஏற்பாடுகளைச் செய்து இருளர் மக்கள் வருகைக்காக காத்திருந்து வழிபாடு நடத்துகின்றனர். இந்தப் பழக்கம் அவர்களின் முக்கியமான வழிபாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

வேட்டைக்காரன் வழிபாடு
சிவராத்திரியின் போது கவுண்டர் சமூக மக்களுடன் சேர்ந்து வேட்டைக்காரனை வழிபடுகின்றனர், அந்த விழாவில் இருளர் பழங்குடி மக்கள் முக்கிய அங்கமாகக் கருதப்படுகின்றனர், வழிபாடு முறைகள் எல்லாவற்றுக்கும் இருளர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, வழிபாட்டின்போது இருளர் மக்களின் நடனம், பாடல், இசை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஆடல் பாடலுடன் இசைக்கருவிகளை இசைத்து வேட்டைக்காரன் தெய்வம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. விழாவில் தயாரிக்கப்பட்ட உணவு இறைவனுக்குப் படைக்கப்பட்டு அடுத்ததாக இருளர் பழங்குடி மக்களுக்கு பரிமாறப்படுகிறது அவர்களுக்கு அடுத்தபடியாக தான் மற்ற சமூக மக்களுக்கு உணவுப் பரிமாறப்படுகிறது.

ஆய்வு: வெட்டக்காடு இருளர்களின் வழிபாட்டு முறைகள்

வெள்ளியங்கிரி ஆண்டவர் வழிபாடு
கோவை மாவட்டம் பூண்டியில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் புகழ்பெற்ற வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. தென்திருக்கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டு தலத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபாடு செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த வழிபாட்டு தலத்தில் மலைவாழ் மக்களின் பங்களிப்பு அதிகமாகக் காணப்படுகிறது, குறிப்பாக இருளர் மக்களின் பங்களிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் அவர்களின் முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த வழிபாட்டுத் தலத்தில் சித்ரா பவுர்ணமி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஏழு மலையைக் கடந்து சென்று அங்கிருக்கும் வெள்ளிங்கிரி ஆண்டவரைத் தரிசித்து திரும்புகிறார்கள். வெள்ளிங்கிரி மலையில் ஏழாவது மலையில் உள்ள லிங்கத்தைத் (வெள்ளிங்கிரி ஆண்டவர்) தரிசிக்க பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதியைக் கடந்து செல்ல வேண்டும். வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அத்துடன் அங்கு அடிக்கடி சுழல் காற்று, கடும் குளிர் ஆகியவை வீசும். எனவேதான் மலை ஏறிச் செல்ல பக்தர்களுக்கு மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் மட்டுமே வனத்துறையினரால் அனுமதிக்கப்படுகின்றனர்.


ஆய்வு: வெட்டக்காடு இருளர்களின் வழிபாட்டு முறைகள்

முடிவுரை
இருளர் பழங்குடி மக்களின் வழிபாட்டு முறைகள் மற்ற சமூகத்திடமிருந்து வேறுபட்டதாகவே காணப்படுகிறது, ஏனென்றால் அவர்கள் அதிகமாக வழிபாடு நடத்துவது அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து மிகத்தொலைவில், அடர்ந்த காட்டுக்குள், உயர்ந்த மலையில்  இருளர் பழங்குடி மக்களின் வழிபாட்டுத் தெய்வங்கள் காணப்படுகின்றன. அவர்கள் வழிபாட்டு முறையில் மற்ற சமூக மக்களுக்கும் இடம் தரப்படுகிறது இருப்பினும், மலைவாழ் மக்களின்  வழிபாட்டு முறைகளே பயன்படுத்தப்படுகின்றன. அவர்களுக்கென இறைவன் பற்றிய தனி பாடல், நடனம் மற்றும் இசைக்கருவிகள் இருளர் மக்களைக் கொண்டே இசைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இருளர் மக்கள் மற்ற சமூக மக்கள் வழிபாடு நடத்தும் இடங்களில் கலந்து கொண்டாலும் அவர்களுக்கென ஒவ்வொரு வருடமும் மலையைச் சார்ந்தும் காடுகளைச் சார்ந்தும் அவர்கள் வழிபாடு நடத்துகின்றனர். இப்போதுள்ள நாகரீக காலங்களில் இயற்கையிடம் இருந்து அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டாலும் காடுகள் மற்றும் மலைகளைத் தெய்வமாகவே கொண்டாடி வருகின்றனர்.

ஆய்வு: வெட்டக்காடு இருளர்களின் வழிபாட்டு முறைகள்
துணைநூல் பட்டியல்
1. அகத்தியலிங்கம் ச. (பதி) 1972. தமிழகப் பழங்குடிகள். அண்ணாமலை நகர். ஆராய்ச்சி மாணவர் வெளியீடு.
2. குணசேகரன் க. 2008. இருளர்கள் ஓர் அறிமுகம். சென்னை கிழக்கு.
3. சிவகாமி 2005. தமிழக பழங்குடியினர் நிலவுரிமை. திண்டிவனம்: பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.
4. சீனிவாசன் 1961. நமது பழங்குடிகள். சென்னை. தமிழ் புத்தகாலயம்.
5. Lewis H.Morgan,LL.D 1877 Ancient society Or Researchers in the Lines of Human Progress from savagery through Barbarism to civilization, Macmillan & company, London.
6. Census of Tamilnadu: Government of Tamilnadu publication Tamilnadu 2001.
7. Periyalvar R. 1976. Portrait of tribal life in irula folklore.
8. Kamil Zvelebil V.1973-1982. The irula Language. Wiesbaden: otto Harrassowitz. volume 3.
9. Marshall D. Sahlins 1986 Tribesman.foundation of American Anthropology Series.Englewood Cliffs,N.J.:Prentice –Hall,Ner Jersey
10. Zvelebil, Kamil, V. 1988. The Irulas of the Blue Mountains. Foreign and Comparative Studies/South Asian Series, no. 13. Syracuse, N.Y.: Maxwell School of Citizenship and Public Affairs, Syracuse University.
11. Zvelebil, Kamil, V. 1990. The Cat in Irula Culture. An Irula Creation Myth. Anthropos Institute. Bd. H 1/3. Pp. 165-170.

* கட்டுரையாளர்: முனைவர். பெ.சுரேஷ், முதுமுனைவர் பட்ட ஆய்வாளர் (PDF), மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 27 April 2019 01:06