- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -இவர் பாஞ்சால நாட்டரசன் யாகசேனனின் மகள் பாஞ்சாலி எனவும் குறிக்கப்படுவாள்; இவளைப் பஞ்ச கன்னியரில் ஒருத்தி என்றும் கூறுவர்; அகலிகை, திரெளபதி, சீதை, தாரை, மண்டோதரி என்பவர்கள் பஞ்ச கன்னியர்களாகக் கூறப்படுகிறார்கள். இவள் யாகசேனன் வளர்த்த வேள்வித் தீயினில் தோன்றியவள். இவள் முற்பிறப்பில் நளாயினி என்னும் பெயர் உடையவளாக இருந்து மெளத்கல்ய முனிவரைக் கணவராகப் பெற்றிருந்தாள். அவர் மெளத்கல்ய முனிவர் நளாயினியின் கற்புடைமையைச் சோதித்தறிய விருப்பம் கொண்டார். குட்ட வியாதி கொண்டவர் போல் நடந்தும் நளாயினியின் கற்புடைமையைக் கண்ட முனிவர் மனம் மகிழ்ந்து உனக்கு வேண்டியது என்ன? என்று கேட்க, அவள் நின் நீங்காத அன்பே வேண்டும் என்று கேட்டாள். நளாயினி இப்பிறப்பு முடிந்து இறந்தாள். பின் இந்திரசேனை என்னும் பெயருடன் மறு பிறப்பை அடைந்து மெளத்கல்ய முனிவரையே சார்ந்தாள். அவர் இல்வாழ்வைத் துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். எனவே, இந்திரைசேனையின் கருத்திற்கு இணங்காமல் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யும்படி கூறினார் சிவபெருமான். சிவபெருமான் இவள் முன் தோன்றி அருள் செய்தபோது, ‘எனக்குக் கணவனைத் தருவீராக’ என்று ஐந்து முறை வேண்டினாள். இவர் முற்பிறப்பில் இவள் தன் கணவனின் ஐந்து வடிவங்களோடு இன்பம் நுகர்ந்தமையைக் கருத்தில் கொண்டு அவ்வாறே ஆகுக என்றார்; சிவபெருமானால் பிலத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திரர்கள் ஐவரையும் பார்த்து ‘நீவிர் இந்திர சேனைக்குக் கணவர் ஆகுங்கள்’ என்றார். அவ்வாறே அந்த ஐவரும் நிலவுலகத்தில் பாண்டவர்களாகப் பிறந்து திரெளபதியைத் திருமணம் செய்தார்கள் என்று ஒரு புராதனக்கதை கூறப்படுகிறது. இக்கதை முற்பிறப்புடன் தொடர்புபடுத்திக் கூறப்படுவதாகும்.

யாகசேனன் நடத்திய சுயம்வரத்தில் அர்ச்சுனனால் வெற்றிபெற்றுக் கொண்டுவரப்பட்ட திரெளபதி குந்தியின் கட்டளைப்படி ஐவரையும் மணக்க வேண்டியவளானாள். அப்போது வியாசர் திரெளபதியின் முற்பிறப்பை யாகசேனனிடம் எடுத்துச்சொல்லி இத்திருமணத்தை நடத்துக என்றார். தெளமிய முனிவர் தருமனுக்கு முறைப்படி திருமணச்சடங்குகளை நடத்திப் பின் முறைப்படி மற்றைய நால்வருக்கும் திருமணம் நடந்தது. பாண்டவர்கள் செய்த இராசசூய வேள்விக்கு வந்திருந்த துரியோதனனை இவள் இகழ்ந்து நகைத்தற்காக அவன் சினங்கொண்டான். துரியோதனன் பாண்டவர்களைச் சூதாட்டத்திற்கு அழைத்து அவர்களின் நாடு நகரங்களை இழக்கச் செய்து அடிமைப்படுத்தினான். அவன் திரெளபதியைத் தன்தொடையின்மீது அமரச்சொல்லியும் தன்னைக் கணவராக ஏற்றுக்கொள்ளும்படியும் துன்புறுத்தினான். திரெளபதி மறுத்ததால், அவன் துச்சாதனனை ஏவி அவளது துகிலை உரியச் சொன்னான். கிருட்டிணன் அருள்பெற்றுத் துகில் வளரப்பெற்றாள். மறுபடியும் சூதாடி அடிமையிலிருந்து விடுபட்டுச் சபதங்கள் பல செய்து அவள் பாண்டவருடன் வனவாசம் சென்றாள்.

வனவாசத்தின் இறுதியாண்டில் மறைந்து வாழ்வதற்காக விராடநாட்டினைப் பாண்டவர்கள் அடைந்தனர். விராடன் மனைவி சுதேட்டிணைக்கு வண்ணமகளாக விரதசாரிணி என்ற பெயரில் திரெளபதி மறைந்து வாழ்ந்தாள். கீசகன் என்பவன் இவளை அடைய முற்பட்டபோது வீமன் (பீமன்) அவனை வதம்செய்து கொன்றான். பாண்டவர்கள் வெளிப்பட்டுத் தங்கள் உரிமைகளுக்காகப் பாரதப்போரில் ஈடுபட்டுத் துரியோதனனை அழித்தனர். அவன் அழிவிற்குப் பின்னரே தன்னுடைய அவிழ்ந்த கூந்தலைத் திரெளபதி முடிந்து கொண்டாள். திரெளபதிக்கும் பாண்டவர்களுக்கும் தோன்றிய குழந்தைகள் உபபாண்டவர்கள் எனக் குறிக்கப்பட்டனர். தருமனுக்குப் பிரதிவிந்தனும் பீமனுக்குச் சுருதசோமனும் அர்ச்சுனனுக்குச் சுருதகீர்த்தியும் நகுலனுக்குச் சதாநீகனும் சகாதேவனுக்கு சுருதசேனனும் பிறந்தனர். பாரதப்போரின் முடிவில் உபபாண்டவர்களைப் பாண்டவர்கள் எனத் தவறுதலாகக் கருதி அசுவத்தாமன் கொன்றான். திரெளபதியைத் திரெளபதியம்மன் என்ற பெயரில் கருநாடகத்திலும் தமிழ்நாட்டிலும் தெய்வமாக வணங் கப்படுகிறாள். கும்பகோணத்தில் உள்ள திரெளபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் சிலையும் அரவான் சிலையும் இருக்கின்றன. சில இடங்களில் விழாவின் போது தீமிதித்தல் முக்கிய நிகழ்ச்சியாக இடம்பெறுகிறது (பாலுசாமி, 2009: 607 – 608).

போர்க்களத்தில் ஒருநாள் பாண்டவர்களுக்கும் கண்ணனுக்கும் திரெளபதி உணவினைப் பரிமாறிக் கொண்டிருந்தாள். கண்ணன் சைகைமூலம் பாண்டவர்களைக் காக்கும்படி வேண்டினார். திரெளபதியும் கண்ணன் இலையிலே நீர்வார்த்துச் சைகை மூலமாகக் கண்ணனிடம் அதை ஒப்புக்கொண்டாள். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அருச்சுனன் அன்றிரவு கண்ணனிடம் சைகை மூலம் நீங்களும் திரெளபதியும் என்ன பேசிக் கொண்டீர்கள்? என்று கேட்டான். இப்பாரதப்போரில் பாண்டவர்களாகிய உங்கள் ஐவருக்கும் உயிர்ப்பிச்சை கேட்டேன் என்று அவன் பதிலுரைத்தான். அப்பொழுது அருச்சுனன் உயிர்ப்பிச்சையினைக் கொடுக்கத் திரெளபதிக்கு என்ன சிறப்பு இருக்கிறது? இறைவனாக நீங்கள் இருக்க அவளிடம் கேட்பது வியப்பாக உள்ளது? என்றான். உடனே கண்ணன், அவள் யார் என்பதைப் போர்க்களத்தில் சென்றுபார் என்று கூறினார். அதன்படி அருச்சுனன் போர்க்களத்திற்குச் சென்று பார்த்தான். அங்கு ஆகாய உருவமாகப் பெரிய காளி வடிவம் கொண்ட ஒருத்தி அனைத்து உடல்களையும் விழுங்கிக்கொண்டிருந்தாள். இதனைக் கண்டு அருச்சுனன் பயந்து கண்ணனிடம் வந்து கண்ணா அங்கு பெரிய உருவமாகிய காளி அல்லவா இருக்கிறாள். அவள் யார்? என்று கேட்க, அதற்குக் கண்ணன் உன் மனைவியான திரெளபதியே நடக்கும் பாரதப்போரில் அனைத்து உயிர்களையும் அழித்து விழுங்கக் கூடியவள். அவளிடம்தான் உங்கள் ஐவரின் உயிரையும் காக்கும்படிக் கேட்டேன். திரெளபதியும் எனக்குக் கண்ணால் சைகை காட்டி நீர்வார்த்து உங்கள் ஐவரின் உயிருக்கும் உத்தரவாதம் அளித்தாள் என்றார். மேலும் அவர் அருச்சுனனிடம் திரெளபதி அதர்மத்தை அழிக்கக்கூடிய சக்தியாகும். அதனால் அவதார நோக்கில் நான் வரும்பொழுது அக்கினியில் இவளும் பிறந்து வளர்ந்தாள் எனக் கூறி அமைதிப்படுத்தினான். ஆகவே, திரெளபதி பாரதப்போரில் பகலில் சாந்தமுடன் இருந்து இரவில் பாரதப்போருக்குக் காரணமானவர்களை உயிர்ப்பலி வாங்கும் காளியாகிறாள் என்ற நம்பிக்கையும் மக்களிடம் நிலவி வருகிறது (ஜெயவாணிஸ்ரீ,2002:17). தமிழ்நாட்டில் திரெளபதி தெய்வமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையினைக் காணமுடிகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே திரெளபதியம்மன் வழிபாடு காணப்படுகிறது. பாரதக்கதையை விழாவாக நடத்திக்காட்டும் இந்த விழாவில் முதன்மையாக இருப்பது திரெளபதியே. இதற்குத் திரெளபதி கற்புத்தெய்வம் என்பது மட்டும் காரணம் அல்ல. அதாவது கற்புத்தெய்வம் என்பதற்காகத் திரெளபதி வழிபடு கடவுள் நிலையை அடையவில்லை. இந்த வழிபாட்டில் மாரியம்மன் போன்ற தெய்வமாகவே திரெளபதியின் தெய்வத் தன்மை வடிவமைக்கப்பட்டுள்ளது. வடதமிழகப்பகுதியில் வழிபடப்படும் மற்ற பெருந்தெய்வ வழிபாட்டில் உள்ள சடங்குகளும் முறைகளுமே திரெளபதி வழிபாட்டிலும் பின் பற்றப்படுகிறது. இதையெல்லாம் தொகுத்துப்பார்க்கும்போது கதைக்காகவோ கதையில் திரெளபதி பாத்திரம் பெற்றுள்ள ஏற்றமான நிலைக்காகவோ இந்த வழிபாட்டில் திரெளபதி தெய்வமாக்கப்படவில்லை. இங்குள்ள பெருந்தெய்வ வழிபாடே பாரதக்கதையில் பொருத்தமான திரெளபதியை வழிபாடு தெய்வமாக மாற்றுவதற்குக் காரணமாக அமைந்துவிட்டது எனக் கருதலாம் என்கிறார் இரா.சீனிவாசன் (பி.மஞ்சுளா, 2011: 04 – 05).

சங்க இலக்கியச் செய்யுட்களைப் பாரதக்கதையோடு தொடர்புபடுத்தும் முறைமை 
சங்க இலக்கியங்களில் பாரதக்கதை நிகழ்வுகள் இடம்பெற்றிருப்பதாகச் சான்றோர் பெருமக்கள் கருதுகிறார்கள். அவ்விலக்கியங்களில் இடம்பெற்றுள்ள கதைகள் உண்மையான நிகழ்வுகளா? அல்லது உரையாசிரியர்கள் எழுதிய கட்டுக்கதைகளா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியது தமிழ்ச்சமூகத்தின் கடமையாகும். தமிழ் இலக்கியங்களுக்கு முதன்முதல் உரை எழுதப்புகுந்தோர் தங்களுடைய எண்ணத்திற்கு ஏற்றாற்போல் உரை எழுதி இருக்கிறார்கள். பின்னாளில் உரை எழுதப்புகுந்தோரும் ஆய்வுரைகளைப் படிக்கமாலும் பின்பற்றாமலும் ஆய்வு நோக்கில் உரை எழுதாமல் முன்னோர் எழுதி வைத்த உரையே சிறந்த உரை என்று எண்ணி எழுதிவைத்துள்ளனர். அவ்வுரைகளில் பல மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அவைகளில் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகைகளில் பலவும் ஏற்றுக்கொள்ள முடியாத வகைகளில் சிலவும் உள்ளன. பல வரலாற்றுக் குறிப்புக்கள் மயக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன. அவைகளை எல்லாம் போக்குகின்ற கடமை ஆய்வாளர்களுக்கு உண்டு. அவைகளில் சில கூறுகளை ஆய்வாளர்கள் களைந்தாலே அது ஆய்வுலகிற்கு அவர்கள் ஆற்றும் சிறந்த பணியாக விளங்கும். தொண்டைமண்டலப் பகுதிகளில் நடைபெறும் திரெளபதியம்மன் வழிபாடு குறித்துச் சிறிய அளவில் இங்கு ஆய்வு நிகழ்த்தப்பெற்றாலும் அவற்றினுடைய உள்கட்டமைப்பு, வெளிக்கட்டமைப்பு, தோற்றம், வளர்ச்சி, வழிபாட்டுத்தன்மைகள், அவ்வழிபாடு தமிழகம் வந்த வரலாறு, அதனுடைய நோக்கம், அதனுடைய போக்கு, அதனுடைய எண்ணம் போன்ற கூறுகளை உற்று நோக்க வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் மாரியம்மன் வழிபாடு பின்பற்றப்பட்டுள்ளது. மாரியம்மன் வழிபாடு குறித்துப் பல ஆய்வாளர்கள் ஆய்வுகள் நிகழ்த்தியுள்ளனர். தொன்மையான தமிழகத்தின் முக்கிய வழிபாடாக விளங்கிய மாரியம்மன் வழிபாடு கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரையில் ஆட்சிசெய்த பல்லவர் ஆட்சிக்காலத்தில் மாரியம்மன் வழிபாட்டோடு இணைத்துத் திரெளபதியம்மன் வழிபாடும் கொண்டாடப்படுகிறது. இது தமிழகத்தின் ஆட்சிமாற்றத்தின் போது ஏற்பட்ட வழிபாட்டு முறையாகும். அவ்வழிபாட்டு முறைகள் தமிழகத்தில் குறிப்பாகத் தொண்டைமண்டலப் பகுதிகளில் இடம்பெற்றுத் திகழ்ந்தன.

சங்க இலக்கியங்களில் பஞ்சபாண்டவர்கள் மற்றும் துரியோதனனாதியர் பற்றிய குறிப்புகள் காணப்படுவதாகச் சான்றோர் பெருமக்கள் கருதுகின்றனர். அவர்கள் அதற்கு ஏற்றாற்போல் சங்க இலக்கியப்பாடல்களைச் சான்று காட்டுகின்றார்கள். அவர்கள் சான்று காட்டும் பாடல்கள் அவர்களைப் பற்றியது தானா? அவர்கள் கருதுவது உண்மையிலேயே அத்தினாபுரத்தை அரசாண்ட பஞ்சபாண்டவர்களா? துரியோதனனாதியரா? சங்க இலக்கியக் காலக்கட்டத்திற்கும் வியாசர் எழுதிய பாரதக் காலக் கட்டத்திற்கும் தொடர்பு உள்ளதா? என்று எண்ணிப்பார்க்க வேண்டியது ஓர் ஆய்வாளருடைய கடமையாகும். சங்க இலக்கியங்களில் அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நூல்களிலும் காப்பிய இலக்கியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை போன்ற நூல்களிலும் சைவ, வைணவ இலக்கியங்களான பன்னிரு திருமுறை, நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் ஆகிய நூல்களிலும் பாரதக் குறிப்புகள் காணப்படுகின்றன. பக்தி இலக்கியக் காலமாகிய கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தோன்றிய பல நூல்களில் பாரதக் குறிப்புகள் இறையியல் நோக்கில் காட்டப்பட்டுள்ளது. தமிழ்மொழி இலக்கியங்களில் இறையியல் நோக்கில் வடமொழிப் பண்பாட்டு நூல்களின் தொடர்கள் ஏற்பட்டுள்ளன. அப்போது, தமிழ் இலக்கியங்களில் மொழிக்கலப்பும் பண்பாட்டுக் கலப்பும் இனக்கலப்பும் இறையியல் நோக்கில் மட்டும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. ஆனால், சங்க இலக்கியங்கள் என்று கருதப்படுகின்ற அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை போன்ற நூல்களிலும் காப்பிய இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களிலும் பாரதக்கதைக் குறிப்புகள் நேரடியாகப் பொருள் படும்படியாகக் காணப்படுகின்றனவா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்நூல்களின் பாடலடிகளை முதன்மையாகக் கொண்டு ஆய்வு நிகழ்த்திய சான்றோர் பெருமக்கள் கூறிய கருத்துக்களின் உண்மைத்தன்மையை மேன்மேலும் தக்க சான்றுகள் காட்டி ஆய்வு நிகழ்த்திக் காட்ட வேண்டும். அப்போது அதனுடைய உண்மைத்தன்மையைச் சிறப்பாக அறியமுடியும். சங்க இலக்கியங்களில் பாரதக்கதைக் குறிப்புகள் நேரடியாகப் பொருள்விளங்கும்படி காணப்படுகின்றனவா என்பதையும் அல்லது உவமைகளின் வாயிலாகக் காணக்கிடக்கின்றனவா என்பதையும் அவற்றிற்கு உரையாசிரியர்கள் கூறுகின்ற விளக்கங்களையும் இங்குக் காணலாம்.

சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் சேரமன்னர்களுள் ஒருவன். இவனை உதியன் என்றும் உதியஞ்சேரல் என்றும் உதியஞ்சேரலன் என்றும் மாமூலனாரும் கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமானும் பாடியுள்ளார். பாண்டவரும் துரியோதனனாதியோரும் பொருதகாலத்து இருதிறத்துப் படைகட்கும் பெருஞ்சோறிட்டு இச்சேரமான் நடுநிலைபுரிந்தான் என்பது பற்றி, இவன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் எனப்படுகின்றான் (துரைசாமிப்பிள்ளை, 2002: 4). வானவரம்ப, பெரும, நீ, அசைந்த தலையாட்டமணிந்த குதிரையையுடைய பாண்டவர் ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் (பொன்மணி) தும்பையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் பொருது போர்க்களத்தின் கட்படுந்துணையும் பெருஞ்சோறாகிய மிக்க உணவை இரு படைக்கும் வரையாது வழங்கினோய் என்று புறநானூற்றின் 2 வது பாடல் கூறுவதை,

வான வரம்பனை, நீயோ பெரும!
அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ 
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈர்ஐம் பதின்மரும் பொருது களத்தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
(புறம்.2:12-16)

என்ற பாடலடிகள் காட்டுகின்றன. இப்பாடலுக்கு உரையும் விளக்கமும் கூறிய ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை பாரதப்படைகளுக்குப் (இரு படைக்கும்) பெருஞ்சோறாகிய மிக்க உணவை வரையாது வழங்கினான் என்றும் இமயத்து அடிப்பகுதியில் நடந்த பாரதப்போர் நிகழ்ச்சியில் சேரமான் செய்த நடுநிலை உதவியை இவர் நேரில் கண்டறிந்தவர் எனத் துணிதற்கு இடனாகிறது என்றும் கூறுகிறார் (துரைசாமிப்பிள்ளை,2002:6-7). வானவரம்ப! பெரும! நீ பாண்டவர் ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் போர்க் களத்தின் கண் படுந்துணையும் பெருஞ்சோறாகிய மிக்க உணவை இரு படைக்கும் வரையாது வழங்கினோய் என்று உ.வே. சாமிநாதையர் (1971), ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை (2002), கோ. இளையபெருமாள் (2006), வ.த. இராம சுப்பிரமணியம் (2000), பாலசுப்பிரமணியன் (2004), இன்னும் பிற உரையாசிரியர்களும் மேற்கூறிய கருத்துக்கு ஏற்பவே உரையை எழுதியுள்ளனர். முன்னோர் எழுதிய உரையைப் பின்பற்றியே பின்னாளில் உரை எழுதப்புகுந்தோர் அனைவரும் அவற்றைப் பகுத்துப் பார்க்காமல் உரையை எழுதியுள்ளனர் என்பது கருதத்தக்கது.

அகநானூற்றின் 233-ஆம் பாடலில் உதியன் சேரலாதன் பாரதப்படைகளுக்குப் பெருஞ்சோறு அளித்ததாக வரலாற்றுப்பதிவு காணப்படுகிறது. வீரம் நிறைந்த குதிரைப் படையையும் பகைவரிடம் தோல்வியுறாத வலிமையையும் உடையவனாய் துறக்கம் அடைந்த தன் முன்னோர்க்குத் தென் புலத்தார்க் கடனாக உதியன் சேரல் சோறு அளித்தப்போது அதை உண்ணுதற்குச் சுற்றிலும் இருந்த பேய்க்கூட்டம்போல அவை தோன்றும் எனும் உவமையின் வாயிலாகப் பாரதக்கதை குறிப்புக் காணப்படுவதை,

மறப்படைக் குதிரை மாறா மைந்தின்

துறக்கம் எய்திய தொய்யா நல்இசை
முதியர்ப் பேணிய உதியஞ் சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை 
கூளிச் சுற்றம் குழீஇஇருந் தாங்கு (அகம்.233: 6-10)

என்ற அகநானூற்றுப் பாடலடிகள் காட்டுகின்றன. பதிற்றுப்பத்தின் இரண்டாவது பத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பற்றிக் குமட்டூர்க்கண்ணனார் பாடியது. அதில் 14 வது பகுதியாக இடம்பெற்றுள்ள சான்றோர் மெய்ம்மறை எனும் தலைப்பில் பாரதக்கதைக் குறிப்புக் காணப்படுகிறது. போர் புரிவதில் மேன்மையுற்ற துரியோதனன் முதலிய நூற்றுவர்களோடு அவர்களுக்குத் துணை வலியாக அமைந்தவன் அக்குரன் என்ற வள்ளல். அவனைப் போன்ற வள்ளல் தன்மை உடையாய் என்று அதற்கு விளக்க உரை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஈரைம்பதின்மர் எனும் சொல் துரியோதனன் முதலிய கெளரவர் நூற்றுவரைக் குறிப்பிடுவதாக,

போர்தலை மிகுத்த ஈர்ஐம் பதின்மரொடு
துப்புத்துறை போகிய துணிவுடை ஆண்மை
அக்குரன் அனைய கைவண் மையையே (பதி. பத்து. 5-7)

என்ற பாடலடிகளால் அறியமுடிகிறது. உ.வே.சாமிநாதையர் ஈரைம்பதின்மர் என்பது துரியோதனன் முதலிய கெளரவர் நூற்றுவர் என்று உரை கூறியுள்ளார் (1994:16). ச.வே. சுப்பிரமணியனும் (2009:41) துரியோதனன் முதலிய கெளரவர் நூற்றுவர் என்று விளக்கம் அளித்துள்ளார். இவர்களைப் போன்றே பிற உரையாசிரியர்களும் விளக்க உரை கொடுத்துள்ளனர். இவர்கள் கூறிய உரைகள் எல்லாம் அவர்களுடைய கூற்றுகளாகவே அமைகின்றன. சங்க இலக்கிய மூலப்பாடல்களுக்கும் அவர்கள் கூறிய உரைகளுக்கும் பொருத்தமில்லாமல் இருக்கின்றன என்பது கருதத்தக்கது.

சங்க இலக்கிய நூல்களில் கலித்தொகையும் பரிபாடலும் காலத்தால் பிற்பட்டதாகச் சான்றோர் பெருமக்கள் கருதுகின்றனர். இந்நூல்களில் இடைச்செருகலாகப் பல பாடல்வரிகளைச் சேர்த்திருப்பதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. கலித்தொகை எனும் நூல் பிற்கால நூல் என்று எண்ணும்போது, அதில் இவ்வாறான பாடல்வரிகள் இடம்பெறவும் வாய்ப்புள்ளது. அவர்கள் அதனுடைய மொழியமைப்பு, மொழிநடையமைப்பு, மொழிக்கூறுகள், மொழிச்சொற்கள் (கலைச்சொற்கள்), கதைப் பின்னணி, வடநாட்டு இலக்கியப் பதிவுகள், பதிப்பித்து எழுதும்போது இடைச்செருகல்கள் கையாளப்பட்டமை, மூலநூலில் இடைச்செருகல்களைக் கையாண்டுள்ளமை, பாரதக்குறிப்பு இடம்பெறும்படி இடைச்செருகல்களைச் செய்துள்ளமை, மூலநூல்களுக்குப் பொருள் விளங்காமல் தங்க ளுடைய எண்ணத்திற்கு ஏற்றாற்போல் பொருள் கூறியுள்ளமை போன்ற கூறுகளைக் கொண்டு இடைச்செருகல்களை உறுதிப்படுத்துகின்றனர். கலித்தொகையில் நேரடியாகப் பொருள்படும்படியாகத் துரியோதனன் முதலிய கெளரவர் நூற்றுவர் என்றும் பாண்டவர் ஐவர் என்று வரவில்லை. உரையாசிரியர்கள் இச்செய்யுளுக்குப் பொருள் கூறும்போது பாரதக்கதையைத் தொடர்புபடுத்தி உரை கூறியுள்ளனர். வீரத்தில் சிறந்த நூற்றுவரில் தலைவனாகிய துரியோதனனின் தொடையைப் பிளந்து உயிர் நீக்கிய பீமனைப் போல என்று உரைகூறி விளக்கம் தருவதை,

மறந்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்குஅறுத் திடுவான்போல் கூர்நுதி மடுத்துஅதன்
(கலி.52: 2-3)

என்ற பாடலாடிகளால் அறியமுடிகிறது. கீழ்க்காணும் பாடலடிகளில் துரியோதனன், துச்சாதனன், திரெளபதி, அசுவத்தாமன், சிகண்டி போன்ற பெயர்கள் நேரடியாக இடம்பெறவில்லை. ஒரு காளையின் கூர்மையான பார்வைக்கு அஞ்சாமல் பாய்ந்த ஒருவனை, அவன் சாகுமாறு தனது கொம்பால் குத்திக் குலைக்கும் ஏறு தழுவுதல் காட்சியை உவமையாக அதில் காட்டப்பட்டுள்ளது. திரெளபதியின் கூந்தலைப்பற்றி இழுத்த துச்சாதனனைப் போலப் போர்க்களத்தின் பகைவர் நடுவே நெஞ்சைப் பிளந்து பழி முடித்த வீமனைப் போலத் தோன்றுகிறது என்று உரை எழுதியுள்ளதை,

அம்சீர் அசைஇயல் கூந்தற்கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவண் தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம் (கலி.101: 18 – 20)

என்ற பாடலடிகளால் தெரிவிக்கின்றன. ஒரு காளை தனது கோபத்தைக் கண்டு அஞ்சாமல் பாய்ந்த ஒருவனைத் தன்னுடைய கொம்பின் முனையால் குத்திக் குலைக்கும் காட்சிக்கு உவமையாக அதில் காட்டப்படுகிறது. அது அசுவத்தாமன் தனது தந்தையாகிய துரோணரைக் கொன்ற சிகண்டிகை (திட்டத்துய்மன்) நல் இருளில் சென்று போரிட்டு வென்று தலையைத் திருகிக் கொன்றதைப் போல் உள்ளது என்று உரை கூறுவதை,

ஆரிருள் என்னான் அருங்கங்குல் வந்து தன்
தாளின் கடந்துஅட்டுத் தந்தையைக் கொன்றானைத்
தோளின் திருகுவான் போன்ம் (கலி.101: 30 – 32)

என்ற பாடல் தொடர்கள் புலப்படுத்துகின்றன. அவர்தம் எலும்புகள் முறிந்து தசை கிழிந்து களத்தில் பரவிக்கிடந்தன. காளைகள் இடிஎன முழங்கின; வாத்தியங்கள் இசைத்தன. இவை எல்லாவற்றாலும் அக்களம் கெளரவர் நூற்றுவரும் மடியும் வில் வலிமை வாய்ந்த பாண்டவர் செய்த போர்க்களத்தை ஒக்கும் என்று பாரதக்கதைக்குத் தொடர்புப்படுத்தி உரைகூறியுள்ளதை,

புரிபு மேற்சென்ற நூற்றுவர் மடங்க
வரிபுனை வல்வில் ஐவர் அட்ட
பொருகளம் போலும் தொழூஉ (கலி.104: 57 – 59)

என்ற பாடலடிகள் காட்டுகின்றன. கையில் கம்புகொண்டு ஆநிரை மேய்க்கின்றாய். ஆனால் நீ ஆயனாகத் தோன்றவில்லை. அவரின் வேறாகத் தேவருள் சூரியனின் மகனாகிய கார்ணனோ என்று உரை எழுதியுள்ளதை,

ஆயனை அல்லை பிறவோ அமரருள்
ஞாயிற்றுப் புத்தேள் மகன் (கலி.108: 12 – 13)

என்ற வரிககள் மூலம் அறியலாம். அது பாரதக்கதையில் வருகின்ற கர்ணனைக் குறிப்பதாக எழுதப்பட்டுள்ளது. பன்னிரு கதிரவரில் பகன் என்பவன் ஒருவன். அவனைப் போல் பார்வையற்ற கண்ணுடையவன் திருதராட்டிரன். அவனுடைய முதல் மகன் துரியோதனனின் சூழ்ச்சியால் பாண்டவர் இருந்த அரக்கு மாளிகையைத் தீ வைத்தான். ஐவருள் ஒருவனாகிய வாயு மகன் பீமன் விரைந்து எரியும் தீக்கிடையே வழிகண்டு தன்னுடைய சகோதரர்களைக் காப்பாற்றி அவர்களோடு தப்பிச் சென்றான். அதுபோல ஒரு யானை உயர்ந்த மலையில் தீப்பற்றிய மூங்கில் காட்டிலிருந்து ஏனைய யானைக் கூட்டத்தை அழைத்துக் கொண்டு வெளியேறும் என்று உரைகூறியுள்ளதைக் கீழ்க்காணும் பாடலடிகளால் காணலாம்:

வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
ஐவர் என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தராக்
கைபுனை அரக்குஇல்லைக் கதழ்எரி சூழ்ந்தாங்குக்
களிதிகழ் கடாஅத்த கடுங்களிறு அகத்தவா
முளிகழை உயர்மலை முற்றிய முழங்குஅழல்
ஒள்ளுரு அரக்குஇல்லை வளிமகன் உடைத்துத்தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப்போகும் வான்போல
எழுஉறழ் தடக்கையின் இனம்காக்கும் எழில்வேழம்
(கலி.25: 1 – 9).

சங்க இலக்கிய நூல்களாகிய பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் துரியோதனனாதியர் நூற்றுவர் பாண்டவர் ஐவர் குறிப்புக் காணப்படுவதாக உரையாசிரியர்கள் கருதுகின்றனர். தொண்டைமான் இளந்திரையன் போர்செய்யும் போர்க்களம் பாரதப் போர்க்களம் போன்று இருந்தது. துரியோதனனாதியர் நூற்றுவர் பாண்டவர் ஐவரோடு போர் செய்த களம்போன்று இருந்ததாகப் பெரும்பாணாற்றுப்படை வரிகளுக்கு உரை எழுதியுள்ளதை,

ஈர்ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய
பேர்அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல (பெரும்பாண்.415 – 417)

என்ற பாடலடிகளால் அறியமுடிகின்றது. காண்டக வனத்தை எரித்த பிளந்த அம்பையுடைய அம்பறாத் தூணியையும் பூத்தொழில் விரித்த கச்சையையும் அணிந்த அருச்சுனனது முன்னோனாகிய பீமசேனன் இமயமலை போன்ற பரந்து விரிந்த மார்பையுடையவன். அவன் எழுதிய நுண்மையான சமையல் சாத்திரத்தின் அடிப்படையில் அதனின்று வழுவாமல் செய்த பல்வேறு உணவு வகைகளை ஓய்மானாட்டு நல்லியக்கோடன் உங்களை உண்ணச் செய்வான் என்று உரை கூறப்பட்டுள்ளதைக் கீழ்க்காணும் பாடலடிகள் காட்டுகின்றன:

காஎரி ஊட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் தன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருள்
பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில் 
(சிறுபாண். 238 – 241).

தமிழ்மொழியின் பழம்பெரும் காப்பிய இலக்கிய நூல்களாகிய சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் பாரதக்கதைப் பதிவுகள் காணக்கிடக்கின்றன. இந்நூல்கள் காலத்தால் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்தவைகளாகும். இவைகளில் உள்ள குறிப்புக்கள் உண்மையிலேயே பாரதக்கதை நிகழ்வுகளைத்தான் குறித்துள்ளதா என்பதைச் சான்றோர் பெருமக்கள் வழிநின்று ஆய்வு செய்யப்பட வேண்டும். அவைகளில் உள்ள உண்மைக் கூறுகளை வெளிக்கொணர வேண்டும். அப்போதுதான் அவைகளின் உண்மையான நிகழ்வுகளையும் உண்மையான குறிப்புக்களையும் காலத்தால் ஏற்பட்ட மாற்றங் களையும் காலத்தால் புகுத்தப்பட்ட இடைச்செருகல்களையும் உரை வகுக்கப்பட்ட முறைகளையும் நன்கு உணரமுடியும். ஓர் இலக்கியத்தில் உள்ள உண்மைக்கூறுகளை வெளிக் கொணர்வதே ஒரு சிறந்த ஆய்வாளர்களின் கடமையாகும். சிலப்பதிகாரம் சமண சமயத்தையும் மணிமேகலை பெளத்த சமயத்தையும் சார்ந்த நூல்களாகும். அந்நூல்களில் எப்படி பாரதக்குறிப்புகள் இடம்பெற முடியும்? பாரதக்கதை எச்சமயத்தைச் சார்ந்த நூல்? சிவபெருமான், திருமால் எச்சமயக் கடவுள்கள்? என்பதையெல்லாம் சான்றோர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். சைவம், வைணவம், சமணம், பெளத்தம், ஆசிவகம் இன்னும் பிற மதங்கள் தங்களுடைய மதக்கொள்கைகளைப் பரப்புவதற்கும் வழிபாட்டை நிலைநிறுத்துவதற்கும் பெரிதும் போட்டிபோட்டுக் கொண்டு இருந்த காலத்தில், சமண நூலும் பெளத்த நூலும் பிற சமயக்குறிப்புகளை வெளிக்கொண்டு வருமா என்பதையெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கள் தங்களுடைய சமயக் கருத்துக்களைப் பதிவுசெய்வதே முக்கிய நோக்கமாக எண்ணியிருப்பர். எனவே, உரையாசிரியர்கள் தங்களுடைய எண்ணத்திற்கு ஏற்றாற்போல் உரை வகுத்துள்ளனர் என்பதை இங்கு எண்ண வேண்டும்.

சிலப்பதிகாரத்தில் பஞ்சபாண்டவர்களுக்காகக் கெளரவர்களிடம் கண்ணன் தூது சென்றுள்ளமை, அருச்சுனன் காண்டவ வனத்தை எரித்துள்ளமை, பாரதப்போரில் இருபடைகளுக்கும் பெருஞ்சோறு அளித்துள்ளமை முதலான பாரதக் குறிப்புகள் கீழ்க்காணுமாறு அமைகின்றன:

நடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்து ஆரணம் முழங்கிப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தா நா என்ன நாவே
(சிலம்பு.17: 147 - 148).

உரக்குரங்கு உயர்ந்த ஒண்சிலை உரவோன்
காவெரி யூட்டிய நாள்போல் கலங்க (சிலம்பு.).
ஓர்ஐவர் ஈர்ஐம்பதின்மர் உடன்று எழுந்த
போரில் பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த
சேரன் பொறையன் மலையன் திறம் பாடிக் 
கார்செய் குழல்ஆட ஆடாமோ ஊசல்
கடம்பு எறிந்தவா பாடி ஆடாமோ ஊசல் 
(சிலம்பு.வா.கா. 24).

பெரும்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை
திரு நிலைபெற்ற பெருநாள் இருக்கை
அறன் அறிசெங்கோல் மறநெறி நெடுவாள்
புறவு நிறை புக்கோன் கறவை முறை செய்தோன்
பூம்புனல் பழனப் புகார் நகர் வேந்தன் 
(சிலம்பு.க.கா.23: 55 – 60).

விராடன் பேர்ஊர் விசயனாம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின் 
(மணி.ம.கா.3: 146 – 147).

சங்க இலக்கியங்கள், அதனைப் பின்தொடர்ந்து எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியங்களைத் தவிர்த்து பிற்கால இலக்கியங்களாகக் குறிக்கப்படுகின்ற பிறகாப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றி லக்கியங்கள், புத்திலக்கியங்கள், உரைநூல்கள் ஆகியவற்றில் பாரதக் குறிப்புக்கள் காணப்படுவது இயல்பேயாகும். ஏனெனில், பக்தி இலக்கியக் காலத்தில் வட நாட்டில் இருக்கின்ற இலக்கியக் குறிப்புகள் பக்தி நோக்கில் தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்று விட்டன. தமிழ் இலக்கியங்களில் இறையியல் கோட்பாட்டு அடிப்படையில் வடநாட்டுக் கடவுள்களையும் தமிழ்நாட்டுக் கடவுள்களையும் சான்றோர் பெருமக்கள் ஒன்று கலந்த நிலையில் பாடத்தொடங்கினர். இதனால் பல தொன்மையான வரலாற்றுக்குறிப்புகள், புராதனக்குறிப்புகள் இலக்கியங்களில் பயின்று வந்துள்ளன. ஐவர், பஞ்சவர், ஈர்ஐம் பதின்மர், நூற்றுவர், பெருஞ்சோறு போன்ற குறிப்புகள் பாரதக்கதையோடு தொடர்பு உடையதாக் கொள்ள வேண்டாம். இக்குறிப்புகள் அனைத்தும் தமிழகத்து மக்களின், மன்னர்களின், வீரர்களின் குறிப்புகள் என்று கொள்ள வேண்டும். இச்செய்யுள் அடிகளுக்கு உரை எழுதியவர்கள் பாரதக்கதையோடு தொடர்பு படுத்தி உரை எழுதியுள்ளனர் என்பது கருதத்தக்கதாகும். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களில் பாண்டவர், கெளரவர் என்று நேரடியாகப் பொருள்படும் படியான சொற்கள் இடம்பெறவில்லை. மயிலை சீனி. வேங்கடசாமி இப்பாடலடிகளை ஆய்வுசெய்து மேற்குறித்தவாறு பல சான்றுகளைக் காட்டி நிறுவியுள்ளார் (2002: 178 – 196).

மண் திணிந்த் நிலனும் என்று தொடங்குகிற புறநானூற்று இரண்டாவது செய்யுள், சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது. உதியன் சேரலாதன் சேனைக்குச் சோறு கொடுத்தது பற்றிப் பெருஞ்சோற்று உதியன் என்ற சிறப்புப் பெயர் பெற்றான். பாண்டவர் கெளரவர் இருவருக்கும் நடந்த பாரதப்போரில் இரு தரத்துச் சேனைகளுக்கும் போர் முடிகிற வரையில் இந்தச் சேரன் சோறு கொடுத்தான் என்று பழைய உரையாசிரியர் இந்தச் செய்யுளுக்கு உரை எழுதியுள்ளார். ஆகவே, உதியன் சேரலாதன் பாரதப்போர் நடந்த காலத்திலே இருந்தவன் என்று பலரும் நம்புகிறார்கள். எனவே, இந்தச் செய்யுள் மிகப் பழைமையானது என்று அவர்கள் கருதுகிறார்கள். பாரதப்போர் கி.மு.1500-இல் இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது என்பது வரலாற்றறிஞர்களின் கருத்து. இதனால், பெருஞ்சோற்று உதியன் சேரலாதனும் அவனைப் பாடிய முடிஞ்சியூர் முடிநாகராயரும் பாரதப்போர் நடந்த காலத்தில் இருந்தவர்கள் என்று கருதப்படுகின்றனர். மண்திணிந்த நிலனும் என்று தொடங்குகிற இந்தச் செய்யுளிலே இவ்வரலாற்றினைக் கூறுகிற பகுதி இது:

வான வரம்பனை, நீயோ பெரும!
அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ 
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈர்ஐம் பதின்மரும் பொருது களத்தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

பழைய உரைகாரர் இதற்கு இவ்வாறு உரை எழுதுகிறார். வானவரம்ப, பெரும, நீ, அசைந்த தலையாட்டமணிந்த குதிரையையுடைய பாண்டவர் ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் (பொன்மணி) தும்பையை யுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் பொருது போர்க்களத்தின் கட்படுந்துணையும் பெருஞ்சோறாகிய மிக்க உணவை இரு படைக்கும் வரையாது வழங்கினோய். இந்தச் செய்யுளில் வரும் ஐவர், ஈரைம்பதின்மர் என்னும் சொற்கள் உரையாசிரியர்களை மயக்கிவிட்டன. ஆகையினால் ஐவர் என்பதற்குப் பாண்டவர் என்றும் ஈரைம்பதின்மர் என்பதற்குக் கெளரவராகிய துரியோதனனாதியர் என்றும் பொருள் எழுதிச் சேரலாதனைப் பாரதப்போருடன் பொருத்திவிட்டார். உரையாசிரியரை மயக்கியது போலவே ஏனையோரையும் மயங்கச்செய்வது இச்செய்யுளில் உள்ள ஐவர், ஈரைம்பதின்மர் என்னும் சொற்கள். இச்சொற்களின் உண்மைப் பொருளை உணர்வோமானால், பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், பாரதப்போர் நடந்த காலத்தில் இருந்தவன் அல்லன் என்பதும் அவன் கடைச்சங்க காலத்தில் கி.பி. முதலாவது அல்லது இரண்டாவது நூற்றாண்டில் இருந்தவன் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனிபோலத் தெரியும். இச்செய்யுளில் ஐவர் என்றது பாண்டவரை அல்ல, பாண்டியரை ஆகும். பாண்டவர் ஐவர் ஆனது போலவே, பாண்டியரும் ஐவர் ஆவர். பாண்டவருக்குப் பஞ்சபாண்டவர் என்னும் பெயர் வழங்குவதுபோல, பாண்டியருக்குப் பஞ்சபாண்டியர் என்னும் பெயர் வழங்கியது. பாண்டவர் வேறு, பாண்டியர் வேறு. அண்ணன் தம்பியர் ஆகிய பாண்டவர் ஐவர் பாரதப்போர்க் காலத்தில் இருந்தனர். பாண்டிய அரசக் குலத்தைச் சேர்ந்த பாண்டியர் ஐவர், பரம்பரை பரம்பரையாகப் பாண்டிய நாட்டை நெடுங்காலம் அரசாண்டனர். பாண்டிநாட்டை ஒரே காலத்தில் ஐந்து பாண்டியர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து அரசாண்டனர். இச்செய்தி பிற்காலத்தில் மறைக்கப்பட்டுவிட்டது. இவ்வைந்து பாண்டியரில் தலைமைப் பாண்டியன் மதுரையில் அரசாண்டான். பாண்டிய இளவரசன் கொற்கையில் இருந்து அரசாண்டான். மற்ற மூன்று பாண்டியரும் அதே சமயத்தில் வெவ்வேறிடங்களிலிருந்து அரசாண்டார்கள். மதுரைப் பாண்டியனையும் கொற்கைப் பாண்டியனையும் நூல்கள் சிறப்பாகக் கூறியது போல மற்ற மூன்று பாண்டியரைச் சிறப்பாகக் கூறவில்லை. ஆனால், பாண்டியர் ஐவர் ஒரே காலத்தில் பாண்டிய நாட்டின் ஐந்து பகுதிகளிலிருந்து அரசாண்டனர் என்பதற்கு இலக்கியச் சான்றுகளும் சாசனச் சான்றுகளும் உள்ளன. பாண்டியர் ஐவர் என்னும் வரலாற்று உண்மை மறைந்துபோன பிற்காலத்திலே பஞ்சவர், பாண்டவர் என்பதற்கு வேறுபாடு தெரியாமல் பாண்டியரையும் பாண்டவரையும் ஒருவராகக் கருதி மயங்கினார்கள். மயங்கியதோடு அல்லாமல் பாண்டியருக்கும் பாண்டவருக்கும் உறவு முறையும் கற்பித்து விட்டார்கள். சேர, சோழ, பாண்டியராகிய முடிமன்னர் மூவரும் மறைந்து தமிழ்நாடு வேற்றார்கள் ஆட்சியிலே சில நூற்றாண்டுகளாக இருந்த காரணத்தினாலே தமிழ்நாட்டு வரலாற்றுச் செய்திகள் பல மறைந்துவிட்டது போலவே, பாண்டியர் ஐவர் என்னும் வரலாற்று உண்மையும் பிற்காலத்தில் மறைக்கப்பட்டது. பாரதம் எல்லாக் காலத்திலும் படிக்கப்பட்டு வந்தபடியினாலே, பாண்டவர் ஐவர் என்கிற செய்தி மட்டும் குக்கிரமத்தவருக்கும் தெரிந்திருந்தது. எனவே, புறநானூற்று உரையாசிரியர் இச்செய்யுளில் பயின்றுள்ள ஐவர் என்னும் சொல்லுக்குப் பாண்டவர் என்று உரை எழுதிவிட்டார். ஐவரொடு சினைஇ என்பதற்குப் பாண்டியர் ஐவருடனும் சினந்து என்று பொருள் கூறவேண்டும். அதாவது, உதியன் சேரலாதன், பாண்டியர் ஐவருடனும் சினங்கொண்டான் என்பது கருத்து. துரியோதனன், பாண்டவர் ஐவருடனும் சினங்கொண்டான் என்பது இச்செய்யுளின் பொருள் அல்ல.

இச்செய்யுளில் வருகிற ஈரைம்பதின்மர் என்பதற்குத் துரியோதனன் முதலிய நூற்றுவர் என்று உரையாசிரியர் பொருள் எழுதியுள்ளார். ஐவரைப் பாண்டவராக்கிவிட்ட பிறகு ஈரைம்பதின்மரைத் துரியோதனன் ஆதியர் நூற்றுவர் என்றுதானே கூறவேண்டும்? அதற்கேற்ப உரை எழுதிவிட்டார். இங்கு எனக்கு ஒரு ஐயப்பாடு உண்டு. ஈரைம்பதின்மர் என்று இருப்பது ஈர்ஒன்பதின்மர் (பதினெட்டுப்பேர்) என்று பாடம் இருந்திருக்கக்கூடும் என்பது ஐயம். பதின்எண்மர் என்னும் பொருளுடைய ஈர்ஒன்பதின்மர் என்னும் பாடத்தை உரையாசிரியர் ஈரைம்பதின்மர் என்று திருத்திக்கொண்டாரோ என்று ஐயுறுகிறேன் என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார் (2002:18-181). ஈரைம்பதின்மர் என்றே வைத்துக்கொண்டாலும் அது துரியோதனனாதியர்களைத்தான் சுட்டவேண்டும் என்பது இல்லை. நூறுபேர், அதாவது நூறு சேனைத்தலைவர்கள் என்பது பொருள். ஈர்ஒன்பதின்மர் என்பது பாடமானால் பதினெட்டுச் சேனைத்தலைவர் என்று பொருள் கொள்ளவேண்டும். இந்தச் சேனைத்தலைவர்கள் பாண்டியர்கள் ஐந்துபேருக்கும் உரியவர்கள். எனவே,

அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ 
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈர்ஐம் பதின்மரும் பொருது களத்தொழியப்

என்பதற்குப் பொருள் என்னவென்றால், அசைந்த தலையாட்டமணிந்த குதிரையையுடைய ஐந்து பாண்டியர்களுடனே சினங்கொண்டு, நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந்தும்பையைச் சூடிய (பாண்டியருடைய) நூறு சேனைத் தலைவரும் (ஈர்ஒன்பதின்மர் என்பது பாடமாயின் பதினெட்டுச் சேனைத்தலைவரும் போர்க்களத்திலே படும்படி) என்பது பொருளாகும்.

அடுத்த அடியாகிய பெருஞ்சோறு மிகுபதம் வரையாது கொடுத்தோய் என்பதற்குப் பொருள்: பெருஞ்சோறு என்பதற்குச் சிறப்புப் பொருள் உண்டு. அதனைத் தொல்காப்பியம் புறத்திணையியல் வஞ்சித்திணைப் பகுதியில் காணலாம். வஞ்சித்திணை என்பது ஓர் அரசன்மேல் வேற்று நாட்டரசன் ஒருவன் படையெடுத்து வந்தால் அவன் மேல் போருக்குச் செல்வது. இந்த வஞ்சித்திணையின் துறைகள் பதின்மூன்றில் பெருஞ்சோற்றுநிலை என்பதும் ஒன்று. எதிர்த்து வந்த அரசன்மேல் போருக்குச் செல்லும் அரசன் போருக்குப் புறப்படுவதற்குமுன் சேனைவீரர்களுக்கு விருந்து செய்வான். அந்த விருந்துக்குப் ‘பெருஞ்சோறு அல்லது பெருஞ்சோற்றுநிலை’ என்பது பெயர். இந்த விருந்தின்போது அரசனும் உடனிருந்து உண்பான். பிண்டம்மேய பெருஞ்சோற்றுநிலை என்பது தொல்காப்பிய சூத்திரம். இதற்கு உரை எழுதுகிற நச்சினார்க்கினியர் வேந்தன் போர்த்தலைக்கொண்ட பிற்றை ஞான்று தானே போர் குறித்த படையாளருந் தானும் உடன் உண்பான் போல்வதோர் முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தன் மேயின பெருஞ்சோற்று நிலையும் என்று பொருள் கூறுகிறார். தமிழரசர்கள் போருக்குச் செல்லும்போது தம்முடைய வீரர்களுக்குச் சோறு (பெருஞ்சோறு) அளிப்பது பண்டைக்காலத்து மரபு.

புறப்பொருள் வெண்பாமாலையிலும் வஞ்சிப்படலத்தில் பெருஞ்சோற்றுநிலை கூறப்படுகிறது. எனவே, இப்புறநானூற்றுச் செய்யுளில் வருகிற பெருஞ்சோறு மிகுபதம் வரையாது கொடுத்தோய் என்பதற்குப் பொருள் பெருஞ்சோறாகிய மிக்க உணவை உன் படைவீரர்களுக்கு வரையாது அளித்தோய் என்பதாகும். இவ்வாறு பொருள் கொள்ளாமல் பழைய உரையாசிரியர், தாம் கற்பித்துக்கொண்ட பாண்டவர் கெளரவரின் பாரதப்போருக்கு ஏற்ப, இரு படைக்கும் உதியன் சோறு வழங்கியதாக உரை எழுதினார். இவ்வுரையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், போருக்குச் செல்லுமுன் தன் போர்வீரர்களுக்குப் பெருஞ்சோறு கொடுப்பது தமிழ்நாட்டு மரபு. அந்த மரபுப்படி உதியன்சேரலாதன் தனது போர் வீரர்களுக்குப் பெருஞ்சோறு கொடுத்தான் என்பது பொருந்துமே தவிர, பிற அரசர்களின் சேனைகளுக்குப் பெருஞ்சோறு கொடுத்தான் என்பது பொருந்தாது. அது தவறான கூற்றாகும்.

அப்படியானால், இப்புறநானூற்றுச் செய்யுளின் பொருள் என்ன? இந்தச் செய்யுளிலே வேறு சில குறிப்புகளும் உள்ளன. அந்தக் குறிப்புகளைக்கொண்டு ஆராய்ந்து இதற்குப் பொருள் காணலாம். உதியன்சேரலாதன் மேற்குக்கடற்கரையைச் சார்ந்த சேரநாட்டுக்கு அரசன். அவன் கிழக்குக்கடல் ஓரத்தில் இருந்த சோழநாட்டை வென்று சோழநாடு, சேரநாடு இரண்டையும் அரசாண்டான். இச்செய்தியை இப்பாடலில் வருகிற, ‘நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்து நின் வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும், யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந’என்னும் அடிகளினால் அறியலாம். சேரலாதன் சோழநாட்டை வென்று பேரரசனாக இருப்பது பாண்டியருக்கு ஆபத்தாக இருந்தது. சோழநாட்டைக் கைப்பற்றிக்கொண்டதுபோல, சேரன் பாண்டிய நாட்டையும் கைப்பற்றிக்கொள்வான் அல்லவா? அந்த நிலை ஏற்படாதபடி பாண்டிய அரசர், சேரலாதனை எதிர்த்தார்கள். பாண்டியர் ஐவரும் ஒன்றுசேர்ந்து தமது படைத்தலைவர்களை ஏவி, உதியன் சேரலாதனுடைய நாடுகளைக் கவர்ந்துகொண்டார்கள். பாண்டியரின் ஏவலினால் தனது நாடுகளில் சிலவற்றைப் பிடித்துக்கொண்ட பாண்டியரின் படைத்தலைவர் மீது உதியன் சேரலாதன் படையெடுத்துச் சென்று அவர்களுடன் போர் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆகவே, அவன் போருக்குப் புறப்பட்டான். புறப்படும்முன் தன் வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளித்தான். இதுதான் இச் செய்யுளிலிருந்து தெரிந்துகொள்ளும் வரலாற்றுச் செய்தியாகும். எனவே,

அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ 
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈர்ஐம் பதின்மரும் பொருது களத்தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

என்பதற்கு நேரான பொருள்: அசைந்த தலையாட்டமணிந்த குதிரையையுடைய ஐந்து பாண்டியருடன் சினந்து, நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந்தும்பையையுடைய பாண்டியரின் சேனைத்தலைவர் நூற்றுவரும் (அல்லது பதின் எண்மரும்) பொருதுபோர்க்களத்தின்கட் படுமாறு நினது சேனைக்குப் பெருஞ்சோறாகிய மிக்க உணவை வரையாது வழங்கினாய் என்பதாகும். இவ்வுரையே இச்செய்யுளின் செம்பொருள் எனத் தோன்றுகிறது. இது சங்ககாலத் தமிழரின் போர்முறைக்கும் தமிழ்நாட்டின் வரலாற்றுக்கும் பொருந்துவதாகும். இதனை விட்டுப் பாண்டவர் கெளரவரின், பாரதப்போருடன் இணைப்பது பெருந்தவறாகும். பழைய உரையாசிரியர் செய்த இந்தத் தவறு, பெருஞ்சோற்று உதியன் சேரலாதனும் அவனைப் பாடிய முரஞ்சியூர் முடிநாகராயரும் பாரதப்போர் நிகழ்ந்த காலமாகிய 3500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்கள் என்று கருதும்படி செய்துவிட்டது. உண்மை இதுவன்று. முடிநாகராயரும் உதியன் சேரலாதனும் கடைச் சங்ககாலத்தில் (கி.மு.300க்கும் கி.பி.200க்கும் இடைப்பட்டகாலத்தில்) வாழ்ந்தவர்கள் என்பதே பொருந்துவதாகும். பெருஞ்சோற்று உதியன் சேரலாதனைப் பாடிய புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் என்று கூறப்படுகிறார். இப்பெயரும் தவறு என்று தோன்றுகிறது. ராயர் என்னும் பெயர் மிகமிகப் பிற்காலத்தது. இப்பெயர் கடைச்சங்ககாலத்தில் வழங்கப்பெறவில்லை. இப்பெயரில் ஏதோ பாடப்பேதம் இருக்கவேண்டும். இப்பெயரின் சரியான வாசகம் முரஞ்சியூர் முடிநாகரியார் என்றிருக்கக்கூடும். புறநானூற்றின் 360-ஆம் செய்யுளைப் பாடிய புலவர் பெயர் சங்கவருணர் என்னும் நாகரியர் என்று காணப்படுகிறது. எனவே, முரஞ்சியூர் முடிநாகரியர் என்னும் பெயரை ஏடு எழுதுவோர் கைப்பிழையாக முரஞ்சியூர் முடிநாகராயர் என்று எழுதிவிட்டனர் போலும். இறையனார் அகப்பொருள் உரையிலும் இப்பெயர் முடிநாகராயர் என்று காணப்படுகிறது. இதுவும் முடிநாகரியர் என்றிருக்க வேண்டும். புறநானூற்றுச் செய்யுளிலே பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், வானவரம்பன் என்று கூறப்படுகிறான். சேர அரசர் சிலருக்கு வானவரம்பன் என்னும் சிறப்புப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. வேறுசில சேர அரசர்களுக்கு இமயவரம்பன் என்னும் சிறப்புப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது. வானவரம்பன், இமயவரம்பன் என்னும் பெயரைக்கொண்டு வானத்தை எல்லையாக உடையவன், இமயமலையை எல்லையாக உடையவன் என்று சிலர் பொருள் கூறுகிறார்கள். இதுவும் பொருந்தாது. நில உலகத்துக்கு வானம் எப்படி எல்லையாக அமையும்? இமயமலையை எல்லையாகக் கொண்டு சேரமன்னர் எந்தக் காலத்திலும் அரசாண்டதாகத் தெரியவில்லை. ஆகவே, வானவரம்பன், இமயவரம்பன் என்பதற்கு இவ்வாறு பொருள் கூறுவது பொருந்தாது. ஆனால் இப்பெயர்கள் சேரமன்னர் பலருக்கும் வழங்கியுள்ளன. இப்பெயர்களுக்கு வேறு ஏதோ பொருள் இருக்கவேண்டும். இவற்றின் உண்மைப்பொருள் தெரியவில்லை (வேங்கடசாமி,2002:178-184).

புறம்.2-ஆம் செய்யுளில் கூறப்படுகிற ஐவர், ஈரைம்பதின்மர் என்னும் சொற்கள் பாண்டவரையும் கெளரவரையும்தான் சுட்டுகின்றன என்றும் அவ்விருவரும் செய்த பாரதப்போரில் உதியன் சேரலாதன் பெருஞ்சோறு கொடுத்தான் என்றும் இதுவே உண்மைச்செய்தி என்றும் பாவாணர் வற்புறுத்துகிறார். தொல்காப்பியத்தில் வஞ் சித்திணைத் துறையாகக் குறிக்கப்பட்டுள்ள பிண்டமேய பெருஞ்சோற்றுநிலை வழிவழி வந்த மூவேந்தர்க்கும் பொதுநிலையன்றி அவருள் ஒருவனுக்கு மட்டும் சிறப்பாக உரியதன்று. ஓர் அரசனைச் சிறப்பித்துப்பாடும் இயன்மொழி வாழ்த்தில், அவனுக்குச் சிறப்பாக உரிய இயல்புகளையும் செயல்களையும் குறிப்பிடுவதன்றி, எல்லோர்க்கும் பொதுவானவற்றைக் குறிப்பது மரபன்று என்பது தேவநேயப்பாவாணரின் கருத்தாக (2000) எழுதுகிறார். இது தவறான கருத்து என்பதைக் கீழ்வரும் சான்றுகள் தெளி வாக்குகின்றன. பெருஞ்சோறு கொடுப்பது மூவேந்தருக்கும் பொதுவானது என்றாலும், அதுவும் ஓர் அரசனுக்குரிய சிறப்பாகப் புலவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்குச் சான்றுகள் இவைகளாகும்:

பெருஞ்சமம் ததைந்த செருப்புகன் மறவர்
உருமுநிலன் அதிர்க்கும் குரலொடு கொளைபுணர்ந்து
பெருஞ்சோறு உகுத்தற் கெறியும்
கடுஞ்சின வேந்தே நின் தழங்கு குரன் முரசே

என்பது பதிற்றுப்பத்து (3-ஆம்பத்து 30-ஆம் செய்யுள்). பல்யானைச் செல்செழு குட்டுவனைப் பாலை கெளதமனார் பாடியது.

பெருஞ்சோறு பயந்த திருந்து வெற் றடக்கை
திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை
வலவைப் பார்ப்பான் பராசரன் என்போன்
குலவு வேற் சேரன் கொடைத்திறம் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கஎன
காடும் நாடும் ஊரும் போகி
நீடுநிலை மலயம் பிற்படச் சென்று ஆங்கு

என்பது சிலப்பதிகாரம் (கட்டுரை காதை 55-66). மேலும், சேரன் செங்குட்டுவன் பெருஞ்சோறு கொடுத்த செய்தியையும் சிலப்பதிகாரம் பின்வருமாறு கூறுகிறது:

பின்றாச் சிறப்பிற் பெருஞ்சோற்று வஞ்சியும்

என்றும் (சிலம்பு 25 -ஆம் காதை 143 -ஆம் அடி)

வரும்படைத் தானை அமரர் வேட்டுக் கலித்த
பெரும்படை தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து

என்றும் (சிலம்பு கால்கோட்காதை 48 – 49 அடி) வருவன காண்க. மேலும்,

மறப்படைக் குதிரை மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை
முதியர்ப் பேணிய உதியஞ் சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை இரும்பல
கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு

என்பது அகநானூறு 233-ஆம் செய்யுள்; மாமூலனார் பாடியது. எனவே, பெருஞ்சோற்றுநிலை ஓர் அரசனுக்குச் சிறப்பாகக் கூறப்படுவது அன்று என்று கூறுவது தவறாகிறது. மேலும், ஒரு வேந்தன் போருக்குச் செல்லும் தன் படைஞர்க்கு அளிக்கும் விருந்து, வணிக முறையில் கைம்மாறு கருதிச் செய்யும் கடமை யேயன்றி, வள்ளன்மை முறையில் வழங்கும் கொடையாகாது. போர்க்களத்தில் தன் வேந்தன் பொருட்டு உயிரைத் துறக்கத் துணியும் மறவனுக்கும் ஓர் உருண்டை சோறு கொடுத்தல்தானா பெரியது என்று எழுதியிருக்கிறார் தேவநேயப்பாவாணர் (2002). தன் அரசனுடைய வெற்றிக்காகத் தன் உயிரையும் கொடுத்துச் செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கத் துணிந்த போர் வீரனுடைய தியாகத்தின் பெருமையை உணர்ந்த அரசன், வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் தான் வீரனுடைய (சாதாரண வாழ்க்கை) நிலைக்கு இறங்கி வந்து, அவனுடன் சரிசமானமாக ஒருங்கிருந்து தன் கையினால் அவனுக்கு உணவைக் கொடுத்துத் தானும் அமர்ந்துண்ணும் பெருஞ்சோற்று நிலை இருதரப்பிலும் பெருமிதத்துக்குரியது. பெருஞ்சோறு என்றால் வயிறு நிறைய உண்டு பசிபோக்குவது அல்ல. பெறுதற்கரிய பெருமைதருகிற சோறு. அதனால்தான் இது பெருஞ்சோறு என்று பெயர் பெற்றது. ஓர் உருண்டை சோறா அது பண்டைத் தமிழரசரும் போர்வீரரும் பெருமைக்குரியதாகக் கருதிப் போற்றியபடியினாலேதான், பழந்தமிழர் மரபைக் கூறிய தொல்காப்பியர் தமது தொல்காப்பியச் சூத்திரத்தில் பெருஞ்சோற்று நிலையை வியந்தோதினார். வயிற்றுப் பசியைத் தீர்க்கும் ஓர் உருண்டைச் சோறு என்றால் அதனைத் தொல்காப்பியரும் பண்டைத் தமிழரும் போற்றிப் புகழவேண்டியதில்லையே. சாதாரண சோற்று உருண்டையாக இருந்தால், அதனைப் புலவர்கள் சிறப்பித்துப் பாடியிருக்க மாட்டார்கள். மேலே காட்டப்பட்ட மேற்கோள்களில் அரசர்கள் அளித்த பெருஞ்சோற்றைப் புலவர்கள் புகழ்ந்திருப்பதைக் காண்கிறோம். எனவே, பாரதப்போரில் படைஞருக்குக் கொடுத்த சோறுதான் பெருஞ்சோறு என்றும் மற்றப்போர் வீரர்களுக்கு அரசர் கொடுத்த சோறு ஓருண்டைச்சோறு என்றும் கருதுவது சரியல்ல. ராயர், வானவரம்பன், இமயவரம்பன் என்பனபற்றியும் தேவநேயர் (2002) தமது கருத்தைக் கூறியுள்ளார். அவையும் ஏற்கத்தகுந்தனவல்ல. புறநானூற்றின் 2வது செய்யுளிலும் சிலப்பதிகாரத்தின் வாழ்த்துக்காதை ஊசல் வரியில்(24) வந்துள்ள செய்யுள்கள் பாரதப்போரை வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஐவர், ஈர்ஐம்பதின்மர் என்பது செய்தபோர் என்று மட்டும் சொல்கின்றன. ஐவர் என்பது பாண்டவரையும் ஈர்ஐம்பதின்மர் என்பது கெளரவர் நூற்றுவரையும் குறிக்கின்றன என்று பொருள் கொண்டு, இது பாரதப்போரைக் குறிப்பதாகப் பொதுவாகக் கருதுவர். பாண்டவருடன் கெளரவர் செய்த பாரப்போரில் இரு தரத்துப் படையினருக்கு உதியன் சேரலாதன் என்னும் சேரன் பெருஞ்சோறு அளித்தான் என்று இச்செய்யுள்களுக்குப் பழைய உரையாசிரியர் இவ்வாறு தெளிவாக உரை எழுதியுள்ளார். பொதுவாகப் படித்தவரும் படியாதவரும் பாண்டவர் ஐவர், கெளரவர் நூற்றுவர் என்று அறிந்திருப்பதனாலே, இச்செய்யுளில் கூறப்படுகிற ஐவர், ஈரைம்பதின்மர் என்பன பாண்டவர், கெளரவர் என்றும் அவர்கள் செய்த பாரதப்போரில் உதியன் சேரலாதன் போர்வீரர்களுக்குச் சோறு கொடுத்தான் என்றும் கருதுவது இயல்பேயாகும். பாண்டவரைத் தவிர வேறு ஐவர் இலரோ என்றும் கெளரவரைத் தவிர வேறு நூற்றுவர் இலரோ என்றும் சிந்திக்கமாட்டார். மறை (வேதம்) என்பது சில இருந்தாலும் ஆரிய மறையையே பலரும் கருதுவது போல்வதோர் செய்தியாகும் இது. இச்செய்யுளைப் பாடியோர் பாரதப்போர் என்றோ பாண்டவர், கெளரவர் என்றோ ஒரு சொல்லைக் கூறியிருப்பின் ஐயத்திற்கு இடமில்லை. சாதாரணமாக மக்கள் எல்லோரும் இச்செய்யுள்கள் பாரதப்போரைத்தான் குறிக்கின்றன என்று நம்புவார்கள், நம்புகிறார்கள். ஆனால், ஆராய்ச்சியாளர் இக்கருத்தை ஏற்றுக்கொள்வதற்குச் சில தடைகள் உள்ளன. அகநானூற்றில் 233-ஆம் செய்யுளில் மாமூலனார் என்னும் புலவர் உதியன் சேரல் என்னும் சேரன் பெருஞ்சோறு கொடுத்த செய்தியைக் கூறுகிறார். புறநானூற்று இரண்டாம் செய்யுளில் கூறப்படுகிற உதியன்சேரலும் மாமூலனார் கூறுகிற உதியன்சேரலும் ஒரே பெயருடையவர் என்பதை எண்ணவேண்டும். இருவரும் பெருஞ்சோறு கொடுத்தனர் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். மாமூலனார் தமது வேறு செய்யுள்களில் வரலாற்றுச் செய்திகள் பலவற்றைத் தெளிவாகக் கூறுகிறார். ஆனால், இச்செய்யுளில் பாரதப்போரைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. ஐவர், ஈர்ஐம்பதின்மர் என்றுகூடச் சொல்லவில்லை. பெருஞ்சோறு கொடுத்த உதியஞ்சேரல், புகழ்பெற்ற பாரதப்போரில் சோறு கொடுத்தான் என்றால் அந்தச் சிறப்பான செய்தியை வெளிப்படையாகக் கூறியிருப்பார் அல்லவா? அப்படிக் கூறாமையினாலே இவன் கொடுத்த பெருஞ்சோறு வேறு படையினருக்கு என்பது தெரிகிறதல்லவா?

சோழநாட்டிலிருந்த பராசரன் என்னும் பார்ப்பான் சேரநாடு சென்று, சேரனிடம் பரிசு பெற்றுப் பாண்டிநாட்டுத் தங்கல் என்னும் ஊருக்கு வந்தான் என்று சிலப்பதிகாரம் பெருஞ்சோறு கொடுத்த கோன் ஒருவனைப் பின்வருமாறு கூறுகிறது:

பெருஞ்சோறு பயந்த திருந்து வெற் றடக்கை
திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை
வலவைப் பார்ப்பான் பராசரன் என்போன்
குலவு வேற் சேரன் கொடைத்திறம் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கஎன
காடும் நாடும் ஊரும் போகி
நீடுநிலை மலயம் பிற்படச் சென்று ஆங்கு 
(சிலம்பு.க. 55 – 66).

இதில் ஒரு சேர அரசன் பெருஞ்சோறு கொடுத்தது கூறப்படுகிறது. இதற்கு உரை எழுதிய அரும்பதவுரையாசிரியர், பெருஞ்சோறு பயந்த …. …. பாண்டவர்கள் படைக்கும் துரியோதனன் படைக்கும் சேரன் சோறிட்டதனை என்று எழுதியுள்ளார். அப்படியானால் இவன் பாரதப்போரில் சோறு கொடுத்த உதியன்சேரல் ஆகவேண்டும். இவனிடம் சென்று பரிசு பெற்றபிறகு பராசரனும் பாரதக்காலத்தில் இருந்தவன் ஆதல் வேண்டும். இவன் பரிசு பெற்றபிறகு சேரர்களை வாயார வாழ்த்துகிறான். அவ்வாறு வாழ்த்தும்போது கடைச் சங்ககாலத்தில் இருந்த சேர அரசர்களைப் பின்வருமாறு வாழ்த்துகிறான்:

விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி
கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி
விடர்ச் சிலை பொறித்த விறலோன் வாழி
பூம்தண் பொருநைப் பொறையன் வாழி
மாந்sரம் சேரல் மன்னவன் வாழ்க என 
(சிலம்பு.க. 80 – 84).

அரும்பத உரையாசிரியர் கூறுவது சரியாயிருக்குமானால், பாரதப்போரில் சோறு கொடுத்த சேரனிடம் பரிசு பெற்ற பராசரன், பாரதக்காலத்துக்குப் பிறகு (1500 ஆண்டுக்குப் பின்னர்) இருந்த சேர அரசர்களை எப்படி வாழ்த்த முடியும்? பராசரன் கடைச்சங்ககாலத்தில் இருந்தான் என்றால், பாண்டவர் படைக்கும் துரியோதனன் படைக்கும் சேரன் சோறிட்டதைக் குறிக்கிறது என்று அரும்பத உரையாசிரியர் கூறியது தவறாகிறது. பெருஞ்சோறு என்றால் பாரதப்போரில் சேரன் கொடுத்த சோறுதான் என்று கருதிக்கொண்டு உரை எழுதினார் அரும்பத உரையாசிரியர். ஆனால், வரலாற்றுடன் பொருத்திப்பார்க்கும் போது முன்னுக்குப்பின் முரண்படுகிறது. அன்றியும் வேறு சில வினாக்கள் எழுகின்றன.

1. இரண்டு அரசர் போர் செய்தால் ஒருவர் பக்கத்தில் சேர்ந்து போர் செய்யவேண்டுவது முறையாகும். அதனை விட்டு இரண்டு தரத்தாருக்கும் சோறு இட்டான் என்பது உலகத்திலே எங்கும் எப்பொழுதும் நிகழாத ஒன்று.

2. ஒரு பக்கத்திலும் சேரமுடியாதபடி நெருங்கிய உறவு முறையுடையவனாக இருந்தபடியால் இரு தரத்திலும் சேராமல் இருவருக்கும் சோறு அளித்தான் என்றால், சேரன் பாண்டவர் கெளரவர்களுக்கு எந்த முறையில் உறவினன்? தாயாதி, பங்காளி உறவா? இதற்குச் சான்று ஏதேனும் உண்டா?

3. பாரதப்போரில் சேரன் சோறு அளித்தது உண்மையானால், இந்தச் சிறப்பான செய்தியைப் பாரதம் ஏன் கூறவில்லை? பாண்டியனுடைய மகள் அல்லி (சித்திராங்கதை)யை அருச்சுனன் மணந்தான் என்னும் கதைகளையெல்லாம் கூறுகிற பாரதம், இரு படைக்கும் பெருஞ்சோறு கொடுத்த செய்தியை ஏன் கூறவில்லை? இது மிக முக்கியமான செய்தியல்லவா?

4. தங்கள் சேனைக்குச் சோறு கொடுக்கக்கூட இயலாத அவ்வளவு வறியவர்களா பாண்டவரும் கெளரவர்களும்?

5. இருதரத்தார் போர் செய்யும்போது இரண்டு படைக்கும் சோறு அளித்த செய்தி உலகத்தில் யாண்டும் கேட்டதும் இல்லை; கண்டதும் இல்லை.

6. வள்ளன்மைக்காக இரு தரத்துப் படையினருக்கும் சோறு வழங்கினான் என்றால், வறியவருக்கு வழங்குவதே வள்ளன்மையாகும். பாண்டவரும் துரியோதனனாதியரும் அரசர்கள்; வறியவர்கள் அல்லர். ஆகவே, வள்ளன்மைப் பொருட்டு இவர்களுக்குச் சோறு வழங்கினான் என்பது பொருந்தாது.

7. கி.மு.1500-இல் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிற பாரதப்போரில் சேரன் சோறு கொடுத்தான் என்னும் செய்தியைக் கூறும் ஒரு பாடல் கிடைத்திருக்கிறது என்றால், அக்காலத்தில் இருந்து கடைச்சங்ககாலம் வரையில் உள்ள வேறு செய்திகளைப் பற்றிய பாடல்கள் எங்கே? இடைப்பட்டகாலத்தில் எத்தனையோ வரலாற்று நிகழ்ச்சிகள் நடந்திருக்கக்கூடும் அல்லவா? அவற்றைப் பற்றிய செய்யுள்களும் இருக்கவேண்டும் அல்லவா? அவையெல்லாம் எங்கே? அவையெல்லாம் கிடைக்காதபோது இந்த ஒரு செய்யுள் மட்டும் 3500 ஆண்டுகளாக அழியாமல் இருக்கிறது என்று எப்படி நம்புவது? இவற்றுக்கெல்லாம் விடை என்ன? இத்தனை முரண்பாடுகள் உள்ள இச்செய்தியை, பெருமைபடத்தக்கது என்னும் காரணம்பற்றி மற்றவர் ஏற்றுக்கொண்டாலும் வரலாற்று ஆராய்ச்சியாளர் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? எனவேதான், இச்செய்யுள்களில் கூறப்படும் ஐவர், ஈர்ஐம்பதின்மர் என்பதற்கு வேறு பொருள் இருக்கவேண்டும் என்றும் அது பாண்டியர் சேரர் போரைப்பற்றியதாக இருக்கக்கூடும். தேவநேயப்பாவாணர் சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப்படைக்கே என்று கூறுவது பொருந்தாச் செய்தியாகும் (வேங்கடசாமி,2002:185-192).

சங்க இலக்கியங்களில் மோரியர், கோசர், நந்தர், யவனர் போன்ற வரலாற்றுக்குறிப்புகள் நேரடியாகப்பொருள் தருகின்ற வகையில் சங்கப்புலவர்களின் பாடல்களில் பரவலாகக் காணக்கிடக்கின்றன. அவ்வரலாற்றுக் குறிப்புகளில் இன்னஅரசர், இன்னநாடு, இன்னமொழி, இன்னஇனம், இன்னசமூகம் எனும் பொருள் புரிந்துகொள்ளும் நோக்குகளில் இடம்பெற்றுள்ளன. ஒரு வரலாற்றுப்புலவர் ஓர் இலக்கியத்தையோ ஒரு பாடலையோ இயற்றும்போது, வரலாற்றுக்குறிப்புகள் இடம்பெறும்படி அமைக்கின்றார். புலவர்கள் தரும் நேரடியான குறிப்புகளால் அனைத்து உண்மைப் பொருளையும் அறிந்துகொள்ளமுடியும். ஆனால், அவர்கள் இயற்றும் செய்யுட்களில் நேரடியாகப் பொருள் கூறாமல், உள்ளுறை உவமையாகப் பொருள் கூறும்போதும் மறைத்துப்பொருள் கூறுபோதும் அவைகளில் பல்வேறு சிக்கல்கள், பல்வேறு குழப்பங்கள், பல்வேறு எண்ணங்கள், பல்வேறு பாடுபொருள்கள் எழுகின்றன. எந்தஒரு வரலாற்றுக் குறிப்பும் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக இருக்கும் குறிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எந்தஒரு வரலாற்றையும் எந்தஒரு வரலாற்று மன்னரையும் கணிக்கமுடியாது. மோரியர், கோசர், நந்தர், யவனர் போன்ற குறிப்புகள் நேரடியாக இருக்கின்ற காரணத்தினால், அவ்வரலாறுகளையும் அவ்வரலாற்று மன்னர்களையும் அறியமுடிகிறது. மோரியர் எனும் சொல் அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் நேரடியாகக் காணக்கிடக்கின்றன (அகம்.69:10, 251:12, 281:8; புறம்.175:6). நந்தர், நந்தன் எனும் சொற்கள் அகநானூற்றுச் செய்யுட்களில் காணக்கிடக்கின்றன (அகம்.265:4, 251:5). யவனர் எனும் சொல் பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் காணப்படுகின்றன (பெரும்பாண்.316; முல்லை.61; நெடு.101, பதிற்று. ப.2 – 8; அகம்.149:9; புறம்.56:18; சிலம்பு.5:10, 14:67, 28:141, 29:26 – 27). கோசர் எனும் சொல் மதுரைக்காஞ்சி, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் அறியப்படுகின்றன (ம.காஞ்சி.509, 773; குறு.15:3, 73:4; அகம்.15:2, 90:12, 113:5, 196:10, 205:9, 216:11, 251:7, 262:6; புறம்.169:9, 283:6, 396:7; சிலம்பு. உரைபெறுகட்டுரை). மேற்குறித்த குறிப்புகளெல்லாம் தமிழ் இலக்கியங்களில் நேரடியாகப் பொருள் தருகின்ற வரலாற்றுக்குறிப்புகளாகும். இக்குறிப்புகள் மூலமாக எந்த அரசன், எந்த நாடு, எந்தக் காலம் என்பனவற்றை ஓர் அளவிற்கு அறியமுடியும்.

தொல்பழங்காலம் தொட்டே தமிழகத்தில் மாரியம்மன் வழிபாடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வழிபாடு தொல்தமிழரின் தொல்பழங்கால வழிபாடாகவும் சடங்காகவும் காணப்படுகிறது. மாரி என்றால் மழை என்பது பொருளாகும். சங்க இலக்கியச் செய்யுட்களில் மழை பற்றிய குறிப்பும் மழையைக் கடவுளாக வழிபட்டமையும் உழவுத்தொழில் செய்ய மழையை வேண்டியுள்ளமையும் காணப்படுகின்றன. மழை மக்களின் அனைத்து விதமான தேவைகளையும் நிறைவு செய்துள்ளன. திருவள்ளுவர் மழையின் முக்கியத்துவம் குறித்து வான் சிறப்பு (குறள்.11-20) என்ற ஓர் அதிகாரத்தையே கடவுள் வாழ்த்துக்கு அடுத்தப்படியாக இரண்டாவதாகப் படைத்துள்ளார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்துப்பாடலில் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று மழையைப்போற்றுகிறார். இவ்வாறாக மழை குறித்த வழிபாடுகள் இலக்கியங்களிலும் மக்களின் வழக்காறுகளில் வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவ்வழிபாடு தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் இது காலத்துக்குக் காலம் பல்வேறு மாற்றங்களையும் ஏற்றங்களையும் கண்டுள்ளது. தமிழகத்தின் அனைத்துப்பகுதி மக்களும் இவ்வழிபாட்டை ஒரேமாதிரியாகக் கடைப் பிடிப்பதில்லை. இவ்வழிபாடு ஊருக்குஊர் மாறுபட்ட நிலையிலும் வேறுபட்டமுறையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்குப் பல்வேறு புராதனக் கதைகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. தொல்பழங்காலம்தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற மாரியம்மன் என்கின்ற மழை வழிபாடு இன்றும் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கி.பி.6-ஆம், 7-ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சிமாற்றம், மொழிக்கலப்பு, சமயக்கலப்பு, புராதனக்கலப்புப் போன்ற காரணங்களால் வழிபாட்டுமுறையும் சமயக்கடவுள்களும் மாற்றமடைந்துள்ளன. வடதமிழகத்தில் அம்மாற்றத்தின் விளைவாகத்தான் மாரியம்மன் என்கின்ற வழிபாடு திரெளபதியம்மன்மேல் அவர்கள் ஏற்றிக்கூறியுள்ளனர். தொண்டைமண்டலத்தின் தலைமையிடமாகிய காஞ்சிமாநகர் பக்தி இயக்கத் தோற்றத்திற்கும் ஆட்சி மாற்றத்திற்கும் முதன்மைக்காரணமாக விளங்கியதால் இம்மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் மாரியம்மன் என்ற பெயரால் திரெளபதியம்மனுக்கு விழா கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. மாரியம்மன் வழிபாட்டோடு திரெளபதியம்மன் வழிபாடு இணைக்கப்பட்டுள்ளது. சங்ககாலத்தில் மாரியம்மன் வழிபாடு தவிர திரெளபதியம்மன் வழிபாடு இருந்ததில்லை என்பதை இங்கு நன்கு உணரவேண்டும்.

பண்டைத்தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இயற்கையான வழிபாடுகள் காணக்கிடக்கின்றன. அவ்வழிபாடுகள் அனைத்தும் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்தவைகளாகும். தொல்காப்பியம் திருமால் உறையும் முல்லைநிலம், முருகன் உறையும் குறிஞ்சிநிலம், இந்திரன் உறையும் மருதநிலம், வருணன் உறையும் நெய்தல்நிலம் என முதற்பொருளாகிய நிலங்கள் முன்னோர் கூறியபடி இவ்வாறு கூறவும் படும் என்று கூறுவதைப் பின்வரும் நூற்பாவின் மூலம் அறியமுடியும்:

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும் 
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே (தொல்.அகம்.5).

இதில் பண்டைத்தமிழரின் இறைவழிபாட்டுக் கடவுள்களைக் காணமுடிகிறது. இந்நூற்பாவில் பாலைத்திணைக்குரிய இறைவன் குறிக்கப்பெறவில்லை. பாலைத்திணைக்குரிய இறைவன் கொற்றவையாகும். பாலைத்திணை என்றாலே அங்கு கொற்றவை வழிபாடு காணமுடியும். கொற்றவை வழிபாடு பாலைத்திணைக்குரிய வாழிபாட்டு முறையாகும். தொல்காப்பியம் புறத்திணையியலில் 4வது நூற்பாவில் (தொல்.1005) கொற்றவை வழிபாடு காணப்படுகிறது. இவ்வழிபாடு போர்க்களத்தில் வீரரின் வீரத்தை மிகுவித்தற்பொருட்டு ஒலிக்கப்பட்ட துடியினது நிலைமையையும் வெற்றி தருபவளாகிய கொற்றவையின் பெருமையையும் கூறுவதும் குறிஞ்சிக்குப் புறனான வெட்சிக்கு உரியனவாகும் என்பதைப் பின்வரும் நூற்பாவினால் அறியலாம்:

மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே
(தொல்.புறம்.4).

சங்ககாலத்தில் போர்கள் மிகுதியாக நடைபெற்றன. அப்போர்க்களத்தில் கொற்றவை வெற்றிதரும் கடவுளாகப் போற்றப்பட்டிருக்கிறாள். இதற்குச் சங்க இலக்கியப்பாடல்களும் தொல்காப்பியமும் சான்றுகளாக அமைகின்றன. இதனுடைய எச்சம் பிற்கால வழிபாட்டில் காணக்கிடக்கிறது. தமிழகத்தில் சங்ககாலம் முதல் தற்காலம் வரையில் பல்வேறு ஆட்சி மாற்றங் களையும் பல்வேறு ஆட்சி உடைமைகளையும் உரிமைகளையும் பண்பாட்டுக் கலப்புகளையும் சமயக் கலப்புகளையும் வழிபாட்டுக் கலப்புகளையும் சடங்குகளையும் பலவகையான மரபுகளும் மாற்றமடைந்துள்ளதைக் காணமுடியும். அதனுடைய தாக்கம் மாரியம்மன் வழிபாடாக இருந்தவழிபாடு புராதனக் கலப்புப் பெற்றுத் திரெளபதியம்மன் வழிபாடாக மாற்றம் கண்டுள்ளது. திரெளபதியம்மன் வழிபாட்டைக் கூர்ந்து நோக்கிப்பார்த்தால், அதிலுள்ள வழிபாட்டுக்கூறுகள் அனைத்தும் மாரியம்மன் வழிபாட்டுக்கூறுகளாகவே இருக்கும்.

தொண்டை மண்டலப்பகுதி மக்கள் மாரியம்மன் வழிபாடு, திரெளபதியம்மன் வழிபாடு எனக் கூர்ந்துபார்க்காமல் பிற்காலப் புராதனக்கலப்பு ஏற்பட்டகாரணத்தினால், அவர்கள் அவ்வழிபாடுகளை ஒன்றாகவே பார்க்கின்றனர். தொண்டை மண்டலப்பகுதியில் திரெளபதியம்மன் வழிபாடு மாரியம்மன் வழிபாடாகவே கொள்ளப்படுகிறது. நம்முடைய பண்டைத் தமிழகமும் பண்டைத்தமிழகமக்களும் புராதன அடிப்படையில் பிறந்தவர்களும் அல்லர்; புராதனத்தை ஏற்றுக்கொண்டவர்களும் அல்லர். அதேபோல் நம்முடைய முதன்மையான இலக்கண நூலான தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் புராதன அடிப்படையில் தோன்றியவைகள் அல்ல; இவ்விலக்கண இலக்கியங்கள் அனைத்தும் மனிதன் மனிதனுக்காகத் (மக்கள் மக்களுக்காகத்) தோற்றுவித்தவைகளாகும். தொண்டை மண்டலத்தில் உள்ள சில குடிமக்கள் புராதனக்கதைகளின் அடிப்படையில் தாங்கள் தீயிலிருந்து வந்தவர்கள்; நெருப்பில் இருந்துவந்தவர்கள்; வன்னிக்குச்சியில் இருந்து வந்தவர்கள் என்று கூறிக்கொள்கின்றனர். அவர்கள் தீயிலிருந்தும் வரவில்லை; நெருப்பிலிருந்தும் வரவில்லை; வன்னிக் குச்சியிலிருந்தும் வரவில்லை; தமிழகத்திற்கென்று ஒரு தனிப்புராதனம் கிடையாது. ஆனால், தமிழகத்திற்கென்று பன்னெடுங்காலமாகவே ஒரு தனி வரலாறு உண்டு என்பதைத் தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன. தொண்டைமண்டலப் பகுதி மக்களிடத்தில் இவ்வாறான புராதனக் கட்டுக்கதைகளை உள்புகுத்தி, தமிழகத்தின் தொல் மாண்புகளைச் சீர்கெடுத்துச் சிலர் வைத்துள்ளனர். இம்மாற்றத்திற்கான காரணங்கள் அனைத்தும் ஆட்சி மாற்றமும் சமயக் கலப்புமே ஆகும். திருமுருகாற்றுப்படை (திருமுருகு.258), பரிபாடல் (பரி.11: 100), சிலப்பதிகாரம் (வேட்டுவ வரி முழு காதையும்) போன்ற நூல்களில் கொற்றவை வழிபாடு குறித்துக் காணக் கிடக்கின்றன. தொல்காப்பியம் சங்க இலக்கியம் போன்ற நூல்களில் வெறியாடல் (தொல்.புறம்.5, தொல்.களவு.20; குறு.53:3, 318:3, 366; அகம்.114:2, 98:19, 182:17, 241:11; பட்.155; சிலம்பு.24:10–14) எனும் தொல் பழமையான வழிபாட்டுமுறை காணப்படுகிறது. இது தொல் தமிழரின் பழமையான வழிபாட்டுமுறையாகும்.

தமிழ் இலக்கியங்களில் பாரதக்கதைகள்
செவ்வியல் காப்பியங்களாக விளங்கிக் கொண்டிருக்கின்ற சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பிய நூல்களுக்குப் பின்னர்த் தமிழில் தோன்றிய பல இலக்கியங்களில் பாரதக்கதைக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. வியாசர் எழுதிய பாரதக்கதையைத் தழுவி தமிழில் பல பாரத இலக்கியங்கள் எழுதப்பட்டும் மொழி பெயர்க்கப்பட்டும் வியாசர் பாரதத்திலிருந்து சில பருவக்கதைகளை நூலாக்கப்பட்டும் இலக்கியம், உரைநடை, புதுக்கவிதை போன்ற நிலைகளில் நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இவைகள் மகாபாரதம், பாரதம், பாரதப்பாட்டு, பாரதவெண்பா, பாரத இலக்கியம், பாரதநூல் என்று வழங்கப்படுகின்றன. இந்த வரிசையில் கீழ்க்கண்ட நூல்கள் அமைகின்றன: 1.பெருந்தேவனார் எழுதியபாரதம் (கி.பி.5) தொண்டைமண்டலம், 2.பெருந்தேவனார் எழுதிய பாரதவெண்பா (கி.பி.9) தொண்டைமண்டலம், 3.மகாவிந்தம், 4.அருணிலை விசாகன் பாரதம் (கி.பி.13) மேற்கூறிய நூல்கள் வில்லிபுத்தூராருக்கு முன் தமிழில் தோன்றிய பாரதநூல்களாகும். வில்லிபுத்தூரார் எழுதிய வில்லிபாரதம், அம்பலத்தாடுமையர் இயற்றிய ஆதி பருவத்தந்தாதி பருவம் (கி.பி.16-17), அரங்கநாதக் கவிராயர் இயற்றிய பாரதம் (கி.பி.18), நல்லாப்பிள்ளை பாரதம் (கி.பி.19) தொண்டைமண்டலம் சோமன் எழுதிய பாரத மாவிந்தம், பாரத அம்மானை (ஆசிரியர் பெயர் தெரியவில்லை), பெருமாள்சுவாமி இயற்றிய பாரதசார வெண்பா (கி.பி.20), கச்சலையர் எழுதிய மகாபாரதச்சுருக்கம் (கி.பி. 19- 20).

உரைநடையில் பாரதக்கதைகள்
த.சண்முகக்கவிராயர் (கி.பி.19) என்பவர் பாரதக்கதை முழுவதும் உரைநடையில் எழுதியுள்ளார். கும்பகோணம் ம.வீ. இராமானுஜாச்சாரியார் (கி.பி.20) பாரதக்கதையைத் தமிழ்ப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டவர் (மொழிபெயர்ப்புநூல்) இராசகோபாலச்சாரியாரின் வியாசர் விருந்து, அ.லெ.நடராசனின் வியாச பாரதம். பிற பாரதக்கதை நூல்கள்: புகழேந்தியின் நளவெண்பா, அதிவீரராம பாண்டியரின் நைடதம், பாரதியின் பாஞ்சாலி சபதம், சோமசுந்தர பாரதியின் மாரிவாயில், கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி ஆகிய நூல்கள் தமிழ்மொழியில் உரைநடையில் காணப்படும் பாரதக்கதை நூல்களாகும்.

துணைநூல் பட்டியல்
சுப்பிரமணியம், வ.த., 2000, புறநானூறு மூலமும் தெளிவுரையும், சென்னை: திருமகள் நிலையம்.
இளையபெருமாள்,கோ., 2006, புறநானூறு பொருளுரை, சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
கருணாநிதி,ந., 2008, தொல்காப்பியம், சென்னை: வசந்தா பதிப்பகம்.
கோதண்டம், கொ.மா., 2010, மணிமேகலை, சென்னை: கங்கை புத்தகநிலையம்.
சாமிநாதையர், உ.வே., 1971, புறநானூறு மூலமும் உரையும், சென்னை: உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்.
சுப்பிரமணியன், ச.வே., 2003, பத்துப்பாட்டு, கோவிலூர்: கோவிலூர் மடாலயம்.
சுப்பிரமணியன், ச.வே., 2004, சிலப்பதிகாரம், சென்னை: கங்கை புத்தகநிலையம்.
சுப்பிரமணியன், ச.வே., 2006, சங்க இலக்கியம் (முழுவதும்), சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
சுப்பிரமணியன், ச.வே., 2009, அகநானூறு, சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
சுப்பிரமணியன், ச.வே., 2009, கலித்தொகை, சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
சுப்பிரமணியன், ச.வே., 2009, பதிற்றுப்பத்து, சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
துரைசாமிப்பிள்ளை, ஒளவை சு., 2002, புறநானூறு பகுதி – 1, சென்னை: திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
துரைசாமிப்பிள்ளை, ஒளவை சு., 2007, புறநானூறு மூலமூம் உரையும் பகுதி – 2, சென்னை: திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
பாலுசாமி, நா., 2009, வாழ்வியற் களஞ்சியம் தொகுதி ஆறு, தஞ்சாவூர்: தமிழ்ப்பல்கலைக்கழகம்.
பாலுசாமி, நா., 2009, வாழ்வியற் களஞ்சியம் தொகுதி இரண்டு, தஞ்சாவூர்: தமிழ்ப்பல்கலைக்கழகம்.
பாலுசாமி, நா., 2009, வாழ்வியற் களஞ்சியம் தொகுதி எட்டு, தஞ்சாவூர்: தமிழ்ப்பல்கலைக்கழகம்.
பாலுசாமி, நா., 2009, வாழ்வியற் களஞ்சியம் தொகுதி ஏழு, தஞ்சாவூர்: தமிழ்ப்பல்கலைக்கழகம்.
பாலுசாமி, நா., 2009, வாழ்வியற் களஞ்சியம் தொகுதி ஐந்து, தஞ்சாவூர்: தமிழ்ப்பல்கலைக்கழகம்.
பாலுசாமி, நா., 2009, வாழ்வியற் களஞ்சியம் தொகுதி ஒன்பது, தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.
பாலுசாமி, நா., 2009, வாழ்வியற் களஞ்சியம் தொகுதி ஒன்று, தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.
பாலுசாமி, நா., 2009, வாழ்வியற் களஞ்சியம் தொகுதி நான்கு, தஞ்சாவூர்: தமிழ்ப்பல்கலைக்கழகம்.
பாலுசாமி, நா., 2009, வாழ்வியற் களஞ்சியம் தொகுதி பத்து, தஞ்சாவூர்: தமிழ்ப்பல்கலைக்கழகம்.
மஞ்சுளா, பி., 2011, திரெளபதி பெண்ணிய நோக்கில்,சென்னை: காவ்யா.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2002, சமயங்கள் வளர்த்த தமிழ், சென்னை: எம். வெற்றியரசி.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2002, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி – 5, சென்னை: மக்கள் வெளியீடு.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர் - - முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -