ஆய்வு: பதிற்றுப்பத்தில் உவகை

Wednesday, 09 May 2018 18:57 - சி.வித்யா, முனைவர்பட்டஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார்பல்கலைக்கழகம், சேலம்.636 011. - ஆய்வு
Print

- சி.வித்யா, முனைவர்பட்டஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார்பல்கலைக்கழகம், சேலம்.636 011. -இலக்கியம் என்பது கற்பனையால் விளையும் பாடுபொருளை உடையது. இலக்கியம் எனும் சொல் தொகை நூல்களுள் எங்கும் காணப்படவில்லை என்றாலும் பாடல், கவிதை, பாட்டு, செய்யுள்,நூல், பனுவல், ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புறப்பாடல்களில் இருந்து பெறப்படும் பிற பொருள்களாவன போர், வீரம், கொடை, சமுதாய நடை பற்றிய சான்றோர்களின் அறவுரை, அறிவுரை என்பன. இத்தகைய சிறப்புப் பெற்ற நம் இலக்கியத்தில் இலக்கியக் கோட்பாடுகளும் இயைந்துள்ளன. இலக்கியம் அனைத்திற்கும் பொதுவானவை இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு தொல்காப்பியர் தரும் கோட்பாடுகள் பலவாகும். இவையே முன்னம்,மரபு, உவமை, நோக்கு, உள்ளுறை, இறைச்சி, மெய்பாடு, வண்ணம், வனப்பு, யாப்பு, என்ற இப்பத்துக் கோட்பாடுகளில் ஒரு சிலவற்றைத் தனித்தனி இயல்களில் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். இவ்வாறு மெய்பாட்டில் காணலாகும் உவகையினை பதிற்றுப்பத்தில் பொருத்திப்பார்க்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

மெய்பாடு
மானுடக்குலத்திற்கு உரியது மெய்பாடு. அது உலக முழுமைக்கும் பொதுவானது மனித உணர்வைக் கண்ணால் காணுமாறும், செவியால் கேட்குமாறும், மெய்பட மெய்யியல் படக்காட்டுவது மெய்பாடு. எண்வகை மெய்பாடுகளும் இயல்பில் தோன்றும் இடம் அகம். அகத்தில் ஏற்படும் உணர்வினை மெய்காட்டுகின்றது. இவ்வாறு மெய்பாடுகள் அகவாழ்விற்குப் பொருந்தும் மெய்பாடுகளாகவும் என்றும் புறத்திற்குரிய மெய்பாடுகளாகவும் காட்டப்படுகின்றன.

மெய்பாட்டினை தொல்காப்பியர் தனியாக ஒரு இயலில் வகுத்துள்ளார்.

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்பாடென்ப”( தொல்:பொருள்:24)

என்று எண்வகை மெய்பாடுகளை உரைக்கிறார். இதில்

நகை - எள்ளல், இளமை, பேதைமை, மடம்
அழுகை - இழிவு, இழவு, அசைவு, வறுமை
இளிவரல்- மூப்பு, பிணி, வருத்தம், மென்மை,
மருட்கை- புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்
அச்சம் - அணங்கு, தெய்வம், விலங்கு, கள்வர்,
பெருமிதம் -கல்வி, தறுகண்மை, புகழ், கொடை
உவகை - செல்வம்,புலன், புணர்வு, இன்பவிளையாட்டு

அகப்பொருட் பாடல்களில் உவகை, அழுகை, இளிவரல், மருட்கை, நகை, என்ற சுவைகளும் புறப்பாடல்களில் நகை, அழுகை, இளிவரல், வெகுளி, மருட்கை பெருமிதம் என்ற சுவைகளும் உணர்த்தப்படுகின்றன.

மேலைநாட்டு இலக்கியங்களில் படைக்கப்படும் சுவைகள் ஏறக்குறைய இவை போன்றனவே எனலாம். இவற்றை அவர்கள் உணர்ச்சி என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். ஆனால் சுவைகளாகப் பாகுபடுத்தி அவற்றை இலக்கியத்தில் அமைக்கும் முறை இந்திய இலக்கியங்களில் தான் காணப்படுகிறது. இவ்வாறு இலக்கியத்தின் இயல்புக் கேற்ப நம் உள்ளத்தில் உணர்ச்சி உண்டாகின்றது.

அவ்வுணர்ச்சி கேற்ப நம் முகத்தில் வேறுபாடுகள் தோன்றுகின்றன. கவிச்சுவையும், இலக்கியச்சுவையும் நம் உள்ளத்தில் உணர்ச்சியைத் தோற்றுவிக்கின்றன. இயல், இசை, நாடகம் எனும் மூன்றில் நாடகத்தில் நடிப்போரும் உணர்ச்சிவயப்படுவர். இயல்தமிழ் ஒன்றே தாமாகப்படித்து உணர்ச்சி பெறத்துணையாவது, ஆதலின் மெய்பாட்டராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும். நாடகம் கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாகும் என்பர் தொல்காப்பியர்.

நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, என்ற எட்டு மெய்பாடுகளும் நான்கு நான்கு அடிப்படைகள் உடையன. இவை ஒவ்வொன்றும் தன்கண் தோன்றதலும், பிறன்கண் தோன்றதலும் என்ற கூறுபாட்டை உடையன. எவ்வாறெனில் பிறர்பேதமை காரணமாகவும் நகைத் தோன்றும் தன்பேதமைகாரணமாகவும்நகைத்தோன்றும்.

இவ்வாறு மெய்பபாட்டினை இலக்கியங்களிலும் பொருத்திப்பார்க்கலாம். மெய்பாட்டினை முப்பத்திரண்டாகவும் தொல்காப்பியர் காண்கிறார். சுவைக்கப்படும் பொருள் இதனை நுகர்த்த பொறியுணர்வு, படைக்கபட்ட வழி உள்ளத்து நிகழும் குறிப்பு, குறிப்பு உண்டானவுடன் கண்ணீர் தோன்றல் மெய்யில் சிலிர்த்தல் போன்ற உடம்பின்கண் வேறுபாடு எனநான்கு ஒவ்வொரு சுவைக்கும் முப்பத்திரண்டாகும். உள்ளக் குறிப்பும் உடலில் தோன்றும் வேறுபாடும் கூடிய வழியே மெய்பாட்டினை அறிகின்றோம். இவ்வாறு மேற்காட்டிய மெய்பாடுகளை தவிர உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல்தன்மை, அடக்கம், வரைதல், நாணுதல், துஞ்சல், அரற்று, கனவு, முனிதல், நினைதல், வெரூஉதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியத்தல்,ஐயம், மிகை, நடுக்கம், போன்றவை அகம்புறத்திற்குரிய மெய்பாடுகளாகவும் பேசப்படுகிறது.

தொல்காப்பியர் இதனை,

“உய்த்துணர்வின்றித் தலைவரு பொருண்மையின்
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடாகும்”

என்று கூறுவதன் மூலம் தொல்காப்பியரின் மெய்பாடு வரைவிலக்கணம் என்பது மெய்யியல் அல்லது உடலில் தோன்றும் மாறுபாடுகள் குறிகளே மெய்ப்பாடு அதாவது மெய்ப்பட முடிப்பது மெய்பாடுஆகும்.

ஒருவருக்கு ஒரு நிகழ்வு நடந்தாலோ( அ ) ஒருவர் ஒன்றைப் பார்த்தாலோ ( அ ) சுவைப் பொருளைச் சுவைத்தாலே உண்டாகும் புறவுடல் குறிகளே மெய்ப்பாடு. மேலும், நிகழ்வு, காட்சி, சுவை, ஆகியவைகளால் தோன்றும் உள்ளத்து உணர்வுகளை அகமெய்பாடு. புறநிலையில் பிறரும் பார்க்ககூடிய, உணரக்கூடிய புறஉடல்குறிகளைப் புறமெய்பாடு ஆகும். அங்கும் அழுகையை ஒரு அகமெய்பாடாக கூறியது பொருந்துமா என கேள்வி எழுகிறது. இளம்பூரணர் அழுகை, அவலத்தால் பிறப்பது என்று கூறும்போது அவலம் அகமெய்ப்பாடு. அழுகை புறமெய்பாடு என்றாகிறது. இதற்கெல்லாம் விரிவான விவாதம் தேவைப்படுகிறது. மேலும், பாடல்களில் உள்ளமெய்பாடு அடையாளம் காண்பதில் கருத்த வேறுபாடுகாணப்படுகிறது. இவ்வாறு, மெய்பாடு பற்றி பல தகவல்கள் பதிவுச் செய்யப்படுகிறது. மெய்பாட்டில் ஒன்றான உவகை அகத்திற்குரியதாக பேசப்படுகிறது. இம்மெய்பாட்டினை புறநூலான பதிற்றுப்பத்தில் பொருத்திப் பார்க்கும் பொழுது புறத்திலும் அகம் இயைந்தோடுகிறது என்பதை உணரமுடிகிறது.

உவகை
“செல்வம் புலனேபுணர்வு விளையாட்டென
அல்லல் நீத்த உவகை நான்கே”( தொல் - பொருள் 255)

என்ற பாடல் வழியே தொல்காப்பியர் உவகைக்கான வரையறையினை தருகிறார். எண்வகை மெய்பாடுகளால் இறுதியாக அமைவது உவகை. இதனைப்பேராசிரியர் ‘இஃதுஈற்றுக் கண்வந்த உவகை உணர்த்துதல் நுதலிற்று’செல்வமென்பது, - நுகர்ச்சி, புலனென்பது கல்விப்பயனாகியது, புணர்வு காமப்புணர்ச்சி, விளையாட்டு என்பது உள்ளம் ஒத்தாரோடு கூடி ஆடும் விளையாட்டு. இவ்வாறு நான்குப்பொருளாக உவகைச் சுவைத் தோன்றும் உவகையினை மகிழ்ச்சி யென்றாலும் ஒக்கும் என்று விளக்கம் தருகிறார்.

“செல்வத்தால் ஏற்படும் நுகர்ச்சியாலும், புலமையால் ஏற்படும் அறிவு முதிர்ச்சியாலும், உள்ள இணைப்பாலும் உள்ளம் ஒத்தாரோடு கூடி ஆடும் விளையாட்டாலும், துன்பம் நீங்கிய மகிழ்ச்சி தோன்றும் என்கிறார்ச.வே.சு”. பதிற்றுப்பத்தில் உவகை மெய்ப்பாடுகளான,செல்வம், புலன்(அறிவுடைமை), புணர்வு, இன்ப விளையாட்டு. இவற்றை பொருத்திப் பார்ப்பது பின்வருமாறு.

செல்வம்
பதிற்றுபத்தின் இரண்டாம்பத்தில் காணப்படும் குமட்டூர் கண்ணனார் பாடலில் செல்வம் குறித்த தகவல்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இமயமலைக்கும் தென்திசையில் விளங்கும் குமரிக்கும் இடைப்பட்ட பகுதிகளில் யாரேனும் எதிர்த்துப் போரிட வந்தால் அவர்கள் அழியுமாறு போர்செய்து வெற்றி காண்பவன் சேரன். இவன் சிறப்புமிக்க யானை மீதேறிவரும் அழகு இன்பம் தரக்கூடியது. மேலும், சேரன் மார்பில் நிறைந்து விளங்கும் பசுமையான மலர்மாலை நீயானையின் நெற்றிவரையில் தொங்குகிறது. வெற்றியால் உயர்ந்த கொடிகளையும் கொண்ட உனது யானையின் மாலையினையும் காணும்போது உனது புகழ்தக்கச் செல்வச் சிறப்பினையும் கண்டோம். யானையின் மீதேறி சேரன் வரும் நிலையினைக் காணும் போதே அவன் அளவற்ற செல்வச்சிறப்பினை உய்த்துணரமுடிகிறது. இதனை பதிற்:11. பாடல் மூலம் பலரும் போற்றும் செல்வத்தினையும் யானை மீதேறி வரும் அழகும் காணமுடிகிறது. மேலும், காப்பியாற்றுக் காப்பியனார் பாடிய நான்காம் பத்தில் சேரலாதன் பலச்சான்றோர்கள் புகழும் அளவிற்கு வாழ்பவன் பகைவருக்கு நிரம்பத் துன்பத்தை அளித்து, மகிழ்ச்சிக்குக் காரணமான பாணர் முதலியோர் பெறும்படி நல்ல ஆபரணங்களை அதிகமாக வழங்கியவன். நற்குணங்கள் கொண்ட பணிவுடையவன் என்று அறிவதன் மூலம் தன்னை நாடி வருபவர் அனைவருக்கும் செல்வம் கொடுக்க கொடுக்க குறையாத வளத்தைக் கொண்டவன்.

பரணர் பாடிய ஐந்தாம்பத்திலும் போரில் பகைவரைக் கொல்லும் சேனைகளையும் பொன்னாற் செய்யப்பட்ட மாலையினையும் உடைடயவன் சேரனானவன். பறவையை ஒத்த சிறகுகளைப் போன்ற நரம்புகள் பின்னப்பட்ட யாழினை கொண்டு இசையினை எழுப்பி நல்ல குரலில் பாடுகின்ற விறலியருக்கு வேந்தன் யானைகளைப் பரிசில்களாகவும், பாணர்களுக்கு ஆண் யானைகளைப் பரிசில்களாகவும் வழங்குகின்றான். போர்களத்திலே பாசறையிலே நுண்ணியக் கோலினைக் கொண்டு பாடுகின்ற பாணரின்பாடலுக்கு ஈடாகப் போர்களத்திலே போரிட நிற்கும் குதிரைகளைப் பரிசிலாக அளித்த செய்தியை இப்பாடலான, “ஆடுசிறை அறுத்த நரம்பு சேர்இன் குரற் பாடு விறலியர் பல்பிடி பெறுக”என்பதாகும். செல்வத்தால் ஏற்படும் இன்பம், தாமே அனுபவிப்பதை விட பிறருக்கு கொடுக்கும் வண்மையை மேன்மையடைகிறது.

புலன்
புலனென்பது கல்விப்பயனாகியது என்கிறார் பேராசிரியர். இதனடிப்படையில் பார்க்கும் பொழுது எட்டாம்பத்தில் அரிசில்கிழார் ‘தெய்வமும் யாவதும்தவம் உடையோர்க்கு’ எனப்புலவரால் புகழ்ந்துரைக்கப்படும் இந்தமன்னன் வேள்வி செய்வதிலும் அறவழி நிற்பதிலும் இல்லறம் துறவறம் குறித்த தெளிவினிலும் சிறந்தவன் எனக்காட்டப்படுகிறான். ‘ சால்பும் செம்மையும் உளப்படப்பிறவும் ’எனும் பாடல் அடி வழியே உலக அறிவும், வானவியல் அறிவும் ஆன இரு அறிவும் பெற்றவனாக விளங்கக் கூடியவனாக இருக்கிறான். முதியோரை ஆற்றுப்படுத்தித் துறவறம் கொள்ள வழிப்படுத்துபவனாக விளங்குகிறான். சங்ககாலம் என்பது குடிகளையும் நிலங்களையும் செல்வங்களையும் போர் செய்துதம் வயப்படுத்தும் பதிவுகளாகப் பாடல்களில் நாம் கண்ட போதிலும் வேதங்கள் தத்துவங்கள் வைதீகங்கள் அறச்சிந்தனைகள் என்பன போன்ற வாழ்வியல் நெறிமுறைகளில் சார்ந்ததன்மைகளும் இழையோடிப் பதிவுச் செய்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

புணர்வு
புணர்வு என்பது காமப்புணர்ச்சி. காதல் இயல்பானது எண்ணுந்தோறும் இனிமை தருவது அதன்சிறப்பு. உண்மையில் பிரிவுதுயர் தருவது ஆனால் பிரிவுத் துயரையும் மகிழ்வாக்கும் ஆற்றல் மிக்கது அன்பு. இத்தகைய புணர்வு மெய்ப்பாடு பதிற்றுப்பத்தில் அறக்கற்பினையும் அடக்கத்தோடு மென்மையான சாயலினையும் நின்னொடு ஊடல் கொள்ளும் காலத்தில் கூடப் புன்கையுடன் கூறும் இனிய மொழியினையும் எயிற்றில் ஊறிய அமிழ்து நிறைந்த சிவந்தவாயினையும், விரும்பிய பார்வையினையும், ஒளி பொருந்திய நெற்றினையும், தளர்ந்த நடையுமுடைய உன் மனைவியாகிய பெருந்தேவி உன் பிரிவை எண்ணி வருந்துதல் கூடும். குறித்தக் காலத்தில் வந்து சேர்வான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறாள் என்று போர் பாசறையில் இருக்கும் மன்னனிடம் தூதுவன் எடுத்துரைப்பது வழியே புணர்ச்சியினை அறியமுடிகிறது. போர் பற்றி பேசும் இந்நூலில் சேரமா தேவியின் காத்திருத்தலை பேசுகிறது. அகமும் புறமும் கலந்தப்பாடலாக பதிற்.19 விளங்குகிறது.

விளையாட்டினை எடுத்துரைக்கும் இடத்தில் பதிற்றுப்பத்தில் இசைக் கருவிகளின் வாசிப்புக்கு ஏற்ப விறலியர் நடனம் ஆடுகிறாள். இதனைக் கண்ட மன்னன் தன் தேவியினை விடுத்து ஆட்டப் பெண்மணியின் ஆட்டத்தை உச்சத்திற்குக் கொண்டுவர எண்ணிகைப் பிடித்து சிறு காலடி வைப்பு முறையை எடுத்து வைத்து அவளுடன் இயைந்து ஆடுகிறான். இதனால் தலைவி ஊடல் கொள்ளுவாளோ என எண்ணிய மன்னன் ஆடிக்கொண்டிருக்கும் விறலியரின் குவளைபூ ஒன்றை எடுத்து தன் தலைவியை அணுகி அன்பின் காணிக்கையாக அக்குவளைப் பூவினைப் பெற்றுக்கொள் என்கிறான். பதிற் 52ம் பாடலில் மன்னன் விறலியருடன் ஆடுவதும் குவளை மலரினைக் கொடுக்கும் நிலையிலும் விளையாட்டினைக் காணமுடிகிறது.

இலக்கியம் மக்களின் எண்ண உணர்வுகளையும் விருப்பு வெறுப்புகளையும், கனவுகளையும், கற்பனையை புலப்படுத்துகிற ஊடகம் ஆகும். இலக்கியம் எந்த அளவிற்கு மனித உணர்வுகளை புலப்படுத்துகிறதோ அந்த அளவிற்கு உண்மையான இலக்கியமாககருதப்படுகிறது.மனிதர்கள்எல்லாம்பசி, வீரம், காதல், அருள், உணர்வு, அவலம் போன்ற உணர்வுகளிடமிருந்து தப்பமுடியாதவர்கள். இதனடிப்படையில் இலக்கியங்களும் விளங்குகிறது. புற இலக்கியமான பதிற்றுப்பத்தில் அக நிலையினைக் காணும் நிலையிலே இதனை உணரமுடிகிறது.

பார்வைநூல்கள்

1. சங்க இலக்கிய ஒப்பீடு ( இலக்கியக்கொள்கைகள் )- தமிழண்ணல், மீனாட்சி புத்தக நிலையம், 2003.
2. இலக்கிய ஒப்பாய்வு சங்கஇலக்கியம் - அ. மணவாளன், நியூ செஞ்சூரி புத்தக நிலையம், 2009.
3. கவிதை கட்டமைப்பு – செ.வை. சண்முகம், மெய்யப்பன் பதிப்பகம், 2003.
4. தொல்காப்பியம் பொருளதிகாரம்- இளம்பூரணார் உரை, சாரதா பதிப்பகம். 2005.   

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

* கட்டுரையாளர்: - சி.வித்யா, முனைவர்பட்டஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார்பல்கலைக்கழகம், சேலம்.636 011. -

Last Updated on Wednesday, 09 May 2018 19:02