ஆய்வு: யாழ்ப்பாண வட்டாரப் பேச்சுவழக்குகள்

Wednesday, 11 April 2018 18:30 - மு.சித்ரா, முனைவர்பட்ட ஆய்வாளர், புதுவைப்பல்கலைக்கழகம், புதுச்சேரி – 14. - ஆய்வு
Print

ஆய்வு: யாழ்ப்பாண வட்டாரப் பேச்சுவழக்குகள்முன்னுரை

மொழி என்பது பேசுவதற்கானது. கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கானது. ஒரு பொருளை, இடத்தை உச்சரிப்பதற்காக அல்லது புரிந்துகொள்வதற்கானது மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் ஒட்டுமொத்த வாழ்வின் சாரம்சம். ஒருமொழியில் ஒரு படைப்பு உருவாக்கப்படுகிறது என்றால் அதுவொரு தனிமனித வாழ்க்கையை மட்டுமே விவரிப்பதாகக் கொள்ள முடியாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்க்கை முறையை விவரிப்பதாகவே கொள்ளமுடியும். அப்படி விவரிக்கின்ற ஒரு படைப்பைத்தான் சிறந்த இலக்கியப் படைப்பு என்கிறோம். அவ்விலக்கியப் படைப்பின் மூலம் ஒரு சமூகத்தை, அதன் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்கான வாசல்தான் மொழியாகும்.

தமிழ்மொழி பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இருவேறு வடிவங்களைக் கொண்டுள்ளது. எழுத்துத் தமிழ், உலகில் தமிழ் வழங்கும் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே, வேறுபாடுகள் அதிகம் இன்றி இருக்கின்றது, பேச்சுத் தமிழ், இடத்துக்கிடம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் அமைந்துள்ளது. இத்தகைய வேறுபாடுகளுடன் கூடிய மொழி வழக்குகள் வட்டார வழக்குகள் எனப்படுகின்றன.

தமிழ்மொழிப் பேச்சு வழக்கில் இடம் அல்லது சமூகம் அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வழக்குகள் தமிழ் வட்டார வழக்குகள் ஆகும். பெரும்பாலான தமிழ்மொழி வட்டார வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லை என்றாலும், சில சொற்கள் பெரிதும் மாறுபடுகின்றன. தமிழகத்தில் வழங்கப்படும் சில சொற்களின் ஒலிகள் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடுகின்றன. சான்றாக, இங்கே என்ற சொல் தஞ்சாவுரில் “இங்க” என்றும், திருநெல்வேலியில் “இங்கனெ” என்றும், இராமநாதபுரத்தில் “இங்குட்டு” என்றும், கன்னியாகுமரியில் “இஞ்ஞ” என்றும், யாழ்ப்பாணத்தில் “இங்கை” என்றும் வழங்கப்படுகின்றன.

வட்டார நாவலின் தனித்தன்மை

நாவல் வகைகளில் வட்டார நாவல்கள் ஒரு தனித்தன்மையுடன் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றன. மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டு உள்ளதைப் போலவே மொழிபேசும் எல்லைக்குள்ளே ஒரு குறிப்பிட்ட பொருண்மை பொதுவாகக் காணப்படும் பகுதிகளை வட்டாரம் என்பர். அங்குள்ள படைப்பாளிகளாலோ அல்லது அப்பொருண்மை புரிந்த வாசகர்களாலோ அவ்வட்டார மொழியில் படைக்கப்படும் நாவல்களே வட்டார நாவல்கள் ஆகும்.

வட்டார நாவல் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் பேச்சுவழக்கைப் பயன்படுத்தி, கதையைக் கூறுவதாகும். இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் பேச்சுவழக்குகள், கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். ஒரு பகுதியில் வசிக்கும் மக்களின் பிரச்சனைகளை அவர்களின் மாறுபட்ட வாழ்க்கை முறைகளோடும், அவர்கள் வாழும் பகுதிகளின் அழகுகளோடும் யதார்த்தமாக வெளிப்படுத்துவதே வட்டார இலக்கியத்தின் நோக்கமாகும். இதனை,

“இலக்கியத்தை மண்மணத்துடனும், வேரோடும் காட்டும் முயற்சியே இது. இதுவொரு நுணுக்கமான அருங்கலை“

என்பார் இரா. தண்டாயுதம் (சு. சண்முகசுந்தரம், தமிழில் வட்டார நாவல்கள், ப.2). ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தன்மைகளைக் கலைஇலக்கிய வடிவில் வெளிப்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டதினால் வட்டார இலக்கியங்கள் தோற்றம் பெற்றன எனலாம்.

தமிழில் வட்டார நாவல்கள்

தமிழில் 1942ல் ஆர். சண்முகசுந்தரம் எழுதிய “நாகம்மாள்” நாவலே தமிழின் முதல் வட்டார நாவலாகும். கொங்கு நாட்டுப் பேச்சு வழக்கைப் பயன்படுத்தி, கிராமியச் சூழலை மையப்படுத்தி இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சு. வே. குருசர்மாவின் “பிரேம கலாவத்யம்” (1893), கே.எஸ். வேங்கடரமணியின் “முருகன் ஓர் உழவன்” (1927) ஆகிய நாவல்கள் கிராமங்களை மையப்படுத்தி எழுந்தபோதிலும், முழுக்க முழுக்கக் கிராமியச் சூழலைப்பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மண்வாசனையை வீசும் ஒரு முன்மாதிரியான நாவலாக இருப்பது “நாகம்மாள்” நாவலேயாகும்.

இலங்கையில் தமிழ் வட்டார நாவல்கள்

இலங்கையில் பெரும்பான்மையான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் மொழிக்கலப்பிற்கு ஏற்றபடியும், அங்கு வந்து குடியேறியவர்களின் மொழிக்கேற்பவும், பல்வேறு மொழிவழக்குகள் அங்கு பயன்படுத்தப்படுகின்றன. தொடக்கநிலையில் சி.வை. சின்னப்பிள்ளை ஈழநாட்டவரின் பழக்கவழக்கங்களையும், பேச்சுமரபையும் எடுத்துக்காட்ட விரும்பி, 1905ல் “வீரசிங்கன்” என்ற நாவலை எழுதினார். இதுவே ஈழநாட்டைக் களமாகக் கொண்ட முதல் வட்டார நாவலாகும். பின்னர், 1914ல் மங்களநாயகம் தம்பையர் என்கிற பெண்மணி எழுதிய “நொறுங்குண்ட இதயம்” என்ற நாவலும், 1927ல் திருஞானசம்பந்தப்பிள்ளை எழுதிய “துரைரத்தின நேசமணி” என்ற நாவலும் யாழ்ப்பாண மக்களது வாழ்க்கை முறைகளையும், பேச்சு வழக்குகளையும் பிரதிபலிக்கின்றன. 1948ற்குப் பிறகு ஈழத்து தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துகளில் அந்நாட்டின் தனிப்பட்ட வாழ்க்கை முறை, சூழ்நிலை, பண்பாடு, பழக்கவழக்கம் போன்றவை வெளிப்படலாயின. இவ்வாறு வெளிப்பட்ட நாவல்கள்,

யாழ்ப்பாண வட்டார நாவல்கள்
மட்டக்களப்பு வட்டார நாவல்கள்

என்றழைக்கப்படுகின்றன.

எஸ். பொன்னுத்துரையின் சடங்கு நாவல்

எஸ்.பொஈழத்துப் புனைகதை இலக்கிய வரலாற்றிலே முன்னணியாகத் திகழ்பவர் எஸ்.பொ. என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ். பொன்னுத்துரை ஆவார். இவருடைய எழுத்தில் ஈழத்து மண்வாசனை எப்போதும் கலந்திருக்கும். இவருடைய எழுத்தைப் பற்றிக் கூறுகையில் இரசிகமணி கனக. செந்திநாதன் ”ஈழத்து எழுத்துலகின் சிம்ம சொப்பனமாகவும், பிரச்சனைக்குரிய எழுத்தாளராகவும், விளங்குபவர் எஸ்பொ. நாவலாசிரியர், நாடகாசிரியர், விமர்சகர், நெருப்புகக்கும் கண்டனத்துக்காரர், கட்டுரையாளர் என அவரது எழுத்தாற்றல் பரந்துபட்டது. எஸ்.பொவுக்கு முன்னால் தமிழ்சொற்கள் கைகட்டி சேவகம் செய்கின்றன” என்கிறார். (தொகுப்பு. இந்திரன், எஸ்.பொ ஒரு பன்முகப் பார்வை, பக். 408)

ஈழத்தின் மிகச்சிறந்த படைப்பாளியான எஸ்.பொன்னுத்துரை அவர்கள் தமது தீ, சடங்கு, தேடல், மாயினி போன்ற நாவல்களில் யாழ்ப்பாண வட்டாரத் களமாகக் கொண்டு யாழ்ப்பாண வட்டாரப் பேச்சுவழக்கினைப் பயன்படுத்தியுள்ளார். எஸ்.பொவின் நாவல்கள் அனைத்தும் ஈழத்தின் மண்வாசனையையும், அனுபவங்களையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன. அவருடைய எழுத்துகளில் இருப்பது யாழ்ப்பாணமே. எனவேதான் அவரது நாவல்களிலும் யாழ்ப்பாண வட்டாரக் கலாச்சாரம், பண்பாடு, பேச்சுவழக்கு போன்றவையே காணப்படுகின்றன.

“சடங்கு“ நாவலின் கதைக்கரு

எஸ்பொவின் “சடங்கு” நாவல் 1966ல் வெளியானது. நடுத்தரவர்க்கத்து குடும்பத்தினை மையமாகக் கொண்டு அவர்களின் குடும்பச்சூழல், பொருளாதார நெருக்கடி, இவற்றிற்கு இடையே ஏற்படும் பாலுணர்ச்சி இவருகளுடைய வாழ்வின் இயக்கவிசையாக அமைவதை இந்நாவல் சித்தரிக்கின்றது.

கொழும்பிலிருந்து மனைவியின் உறவினை நாடி யாழ்ப்பாணம் வரும் செந்தில்நாதன் குடும்பச்சூழல், பிள்ளைகள் இவற்றின் காரணமாகத் தனது பாலுணர்வு விருப்பத்தை நிறைவேற்ற இயலாமல் போகிறது. எனவே அவர் தனது ஆறுநாள் விடுமுறையை ஒரு வெற்றுச்சடங்காக கழித்துவிட்டு ஊருக்குத் திரும்புகிறார். இதில் அவர் வீட்டிலிருக்கும் ஆறுநாட்களில் நிகழும் ஒவ்வொரு நாளின் நிகழ்வுகளே கதையாக அமைந்துள்ளது.

யாழ்ப்பாண வட்டாரப் பேச்சுத்தமிழ்

ஒரு வட்டாரத்தின் பேச்சுமொழி என்பது பேச்சுவழக்குச் சொற்கள், அவை வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகள் என்ற நிலையில் வழங்கப்படும். இங்குப் பேச்சுவழக்குச் சொற்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. சிறப்பாகச் சொற்களை உபயோகிப்பதில் மட்டுமின்றி உச்சரிப்பு, ஒலி ஆகியவற்றிலும் ஈழத்துப் பேச்சுத்தமிழ், இந்தியத் தமிழ் வழக்குடன் வேறுபட்டு நிற்கின்றன. இதற்குக் காரணம் அரசியல், சமூக, வரலாற்றுக் காரணிகளேயாகும். இலங்கையின் வடப்பகுதியில் பெரும்பான்மையாகத் தமிழர் வாழும் பகுதியான யாழ்ப்பாணப் பகுதியில் பேசப்படும் தமிழே யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழ் என்றழைக்கப்படுகிறது. இப்பேச்சுவழக்குச் சொற்கள், அவை வெளிப்படும் சூழலுக்கு ஏற்ப கீழ்க்கண்ட வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

மரியாதைக்குரிய பேச்சு வழக்கு

வயதில் சிறியவர் சிலசமயம் பெரியோரிடமும், பெரியோர் சிலசமயம் சிறியோரிடமும், பாசத்திலும், கோபத்திலும் மரியாதையுடன் பேசப்படுவது உண்டு. அவை, வாருங்கள் அல்லது வாருங்கோ என்றும் சொல்லுங்கள் அல்லது சொல்லுங்கோ என்றும் பன்மையில் வரும்.

“கொஞ்சம் நெருங்கி நில்லுங்கோ“ (சடங்கு ப. 63)

“நீங்களும் கோப்பி குடியுங்கோவன்“ (சடங்கு ப. 67)

இதில் வரும் நில்லுங்கோ, குடியுங்கோ போன்ற சொற்கள் மரியாதைக்குரியன.

சாதாரணப் பேச்சு வழக்கு

இப்பேச்சு வழக்கு இயல்பாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படும். வா, சொல், கேள், கதை போன்ற சொற்களாகும்.

இடைநிலைப் பேச்சு வழக்கு
இவ்வகைப் பேச்சு வழக்குகள் யாழ்ப்பாணத்தமிழரிடையே காணப்படும் ஒரு தனிச்சிறப்பாகும். நண்பர்கள், சமவயதினரிடையே இவ்வழக்கு அதிகமாக வெளிப்படும். மேலும் தொழிலில் உயர்நிலையில் இருப்போர் மக்களைப் பேம்போது இவ்வழக்கு வெளிப்படும்.

“என்னவும் உமக்கு அவசரமோ“ (சடங்கு ப. 37)

“அருக்காணி காட்டாமல் வாரும்“ (சடங்கு ப. 37)

இதிலுள்ள உமக்கு, வாரும் போன்றவை இடைநிலைப் பேச்சு வழக்குச் சொற்களாகும். சிலசமயங்களில் இருவருக்கும் இடையே ஏற்படும் கருத்து முரண்பாட்டின் போதும், கோபத்தின் வெளிப்பாடாகவும், மரியாதை குறைந்து இரும், வாரும், சொல்லும் போன்ற சொற்கள் வெளிப்படும்.

மரியாதையற்ற பேச்சு வழக்கு

இது நண்பர்கள், இளையசகோதரர்கள், பரியோர்கள் வயதுகுறைந்தவர்களிடம் பயன்படுத்தப்படுவது. “வாடா“, “போடா“ போன்ற சொற்கள் இதில் அடங்கும்.

“டேய் பொடியல் புழுதியைக் கிளப்பாதையுங்கோடா“ (சடங்கு ப. 83)

இதில் வரும் கிளப்பாதையுங்கோடா என்ற சொல் மரியாதையற்ற சொல்லாகக் கருதப்படுகிறது.

பிறமொழி வட்டாரக் கலப்பு வழக்குகள்

ஒரு மொழியானது பிறமொழிக் கலப்புகளினோடும் வருவதற்குக் காரணம் பிறநாடுகளோடு கொண்ட தொடர்பும், பிறநாடுகள் அந்நாட்டை ஆண்டதும் ஆகும். இதன் காரணமாக யாழ்ப்பாணத்திலும், போர்த்துக்கீசியம், டச்சு, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களின் கலப்பு பேச்சுவழக்கில் உள்ளது.

போர்த்துக்கீசிய மொழிக் கலப்பு சொற்கள்
யாழ்ப்பாணத்துடன் தொடர்பு கொண்ட முதல் மேலைநாட்டவர்கள் இவர்கள் என்பதால் போர்த்துக்கீசிய மொழிச் சொற்கள் பல இங்கு அறிமுகமாயின. அவை,

“உப்பிடிச் சாப்பிடாமல் கிடந்தால் பேந்து காங்கேசன்துறை ஆசுபத்திரியிலைதான் போய்க்கிடப்பீர்” – மருத்துவமனை (Hospital) (சடங்கு ப. 86)

“நான் குசினிக்கை இருந்து சாப்பிடறன்” – அடுக்களை (Cozinha) (சடங்கு ப. 76)

“அடுப்படி விறாந்தையோரம் போடப்பட்டிருக்கும் அம்மி” – வராந்தா (Varanda) (சடங்கு ப.116)

”நேரங்காலத்தோடை போனால் பிள்ளையளுக்கு ஏதாவது விசுக்கோத்து கிசுக்கோத்து எண்டாலும் அங்கேயே வாங்கியெடுக்கலாம்” – பிஸ்கட் (Biscoito) (சடங்கு ப. 11)

இவை மட்டுமின்றி துவாய் – Toalha (தூவாலை), கடுதாசி – Carta (கடிதம்), போன்ற பல சொற்கள் கலந்திருக்கின்றன.

டச்சுமொழிக் கலப்பு சொற்கள்

டச்சுமொழிச் சொற்கள் யாழ்ப்பாணத் தமிழில் அதிகம் இல்லையெனினும் சில சொற்கள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. அவை,

“கத்தோர் ஊழியர்கள் அவ்வப்போது நடத்தும் பார்டிகளிலே தாகந்தீரக் குடித்துவிடுவார்” - அலுவலகம் (சடங்கு ப. 56)

”எட, ஒரு ஆத்திகேட்டுக்கு ஒரு மனிசன் தேத்தண்ணி குடிக்கப் போறேல்லியே?” – தேநீர் (சடங்கு ப. 73)

போன்ற சொற்களாகும்.

ஆங்கிலமொழிக் கலப்பு சொற்கள்

ஆங்கிலேயர்கள் அதிக ஆண்டுகள் யாழ்ப்பாணத்தை ஆண்டமையால் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் ஆங்கிலமொழி அதிகம் கலந்துள்ளது. மக்கள் தமிழ்மொழியைப் போலவே ஆங்கிலமொழிச் சொற்களையும் பேச்சுமொழியில் பயன்படுத்துகின்றனர்.

“அவன் கொமிஷனல்லோ அடிக்கிறன்” – கமிஷன் (சடங்கு ப. 35)

“செந்தில்நாதன் இப்படியாக ஹோட்டேலுக்குச் சென்று குடிப்பவரல்லர்” - ஹோட்டல் (சடங்கு ப. 37)

“முடக்கிலே டாக்ஸி சென்று திரும்பியது” -டாக்ஸி (சடங்கு ப. 41)

“போன வருஷம் அனுப்பின மணியோடர் துலைஞ்சு போக” – மணியார்டர் (சடங்கு ப. 41)

“ரெஸ்ட்ரோறண்டுக்குள்ளே போய் ரெண்டு பான் துண்டுகடிப்பம்” - ரெஸ்ட்டாரண்ட் (சடங்கு ப. 44)

“வீக் – என்ட் டிக்கட் எடுக்கிறதா? இல்லை சிங்கிள் டிக்கட் எடுப்பமா?” - டிக்கட் (சடங்கு ப. 37)

“ஒருதடவை கான்மிச்சேல் தீவிற்கு பிக்னிக் சென்றனர்” – பிக்னிக் (சடங்கு ப. 40)

“றெயின்ட் டீச்சரோ?” – டீச்சர் (சடங்கு ப. 50)

பிறமொழிச் சொற்கள் வட்டாரத்தின் பேச்சுமொழிச் சொற்களாகவே மாறிவிட்டமையால், அங்குத் தோன்றும் இலக்கியங்களிலும் அப்பேச்சு வழக்குகள் இடம்பெறலாயின.

யாழ்ப்பாணத்திற்கேயுரிய சிறப்புச் சொற்கள்

பிறமொழிச் சொற்களின் கலப்பு யாழ்ப்பாண வட்டாரவழக்கிலே மிகுதியாக இருப்பினும், அவ்வட்டார மொழிக்கேயுரிய சில சிறப்புச் சொற்களும் அங்குக் காணப்படுகின்றன. அவை,

“அவள் மருமகனுக்குக் கொடுத்த அந்தப் பழைய வீடும் வளவும்” – வீட்டுநிலம் (சடங்குப. 53)

“றோட்டுக்கரையிலே கிடந்த நல்ல காணித்துண்டொன்றை” – நிலம்(சடங்குப.153)

“பேந்து நறையல் தலையன் எண்டு” – பிறகு (சடங்குப. 49)

“பொடிச்சியள் மாட்டன் எண்டு” – சிறுமி (சடங்குப. 49)

“வளர்ந்தபிறகு செந்தில்நாதனே கொடிஏற்றி பறக்கவிட்டு இருக்கிறார்” – பட்டம் (சடங்குப. 69)

போன்றவையாகும். இவைமட்டுமின்றி கதிரை – நாற்காலி, கதை – பேசு, கெதியா – விரைவாக, கமம் – விவசாயம் (அ) வயல், கமக்காரன் – விவசாயி, திகதி – தேதி, சடங்கு – விவாகம் போன்றவை சிறப்பான சொற்களாகும்.

முடிவுரை
“இன்று பொய்யாய் பழங்கதையாய் மறைந்து போய்விட்ட ஈழத்தின் பண்பாட்டை நமக்குப் படம்பிடித்துக் காட்டும் ஒரே இலக்கிய ஆவணம் எஸ். பொன்னுத்துரையின் எழுத்துகளே” என்று ஜெயமோகன் (சு. ஜெயமோகன், ஈழஇலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை, ப.27) கூறுவதைப் போல “சடங்கு” நாவல் யாழ்ப்பாண வட்டாரப் பேச்சுவழக்குகளை அவற்றிற்கேயுரிய சிறப்புடனும், பிறமொழிக்கலப்புச் சொற்கள், சிறப்புச் சொற்கள் போன்றவற்றைக் கொண்டும் யாழ்ப்பாண வட்டார மாந்தரை அவர்களது இயல்பான குணபேதங்களுடன் சித்தரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரைக்குதவிய நூல்கள்
சடங்கு – எஸ். பொன்னுத்துரை, மித்ர வெளியீடு, 1996.
தமிழில் வட்டார நாவல்கள் – சு. சண்முகசுந்தரம், காவ்யா வெளியீடு, 1987.
ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சி – கனக. செந்திநாதன், அரசு வெளியீடு, கொழும்பு, 1964.
ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு – சி. வன்னியகுலம், முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ்ப்பாணம், 1986.
ஈழஇலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – சு. ஜெயமோகன், எனி இந்தியன் பதிப்பகம், சென்னை, 2008.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

**கட்டுரையாளர் - - மு.சித்ரா, முனைவர்பட்ட ஆய்வாளர், புதுவைப்பல்கலைக்கழகம், புதுச்சேரி – 14. -

Last Updated on Monday, 30 April 2018 16:30